(ஏப்பிரல் இதழ் தொடர்ச்சி...)

“கிளர்ச்சி நடத்த இருந்த அறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் இந்த சர்க்கார் சிறையில் அடைத்தது.இன்னும் இதுபோல பல ஆயிரக்கணக்கான பேர்கள் சிறையில் கிடக்கிறார்கள். தலைவர்கள் இல்லாதபோது சர்க்கார் பலாத்கார முறையில் போலீஸ் படையின் உதவி கொண்டு சுட்டிருக்கிறது. இதை இன்றைய தினம் விசாரிக்க வேண்டுமென்றால், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்குக் காரணமாயிருந்த அதிகாரிகளைக் கொண்டே விசாரணை நடத்தும் படியாக ஏற்பாடு செய்திருக்கிறார்.

மேலும் கலெக்டர் விசாரிக் கும்போது பின்னால் சாட்சி சொல்லவேண்டிய கீழ் அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள். இதில் ஏதாவது நியாயமுண்டா? நீதி உண்டாகுமா? ஏன் கனம் ராஜா சிதம்பரம் போன்ற தனிப்பட்ட பிரமுகர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்து விசாணை நடத்தக்கூடா தென்று நான் கேட்கிறேன். அரசாங்க உத்தியோகஸ்தர்களைக் கொண்டே விசாரிக்கச் சொல்வதில் நியாயம் கிடைக்காது. கட்சி சார்பற்ற தனிப்பட்ட பிரமுகர்களைக் கொண்டுதான் விசாரிக்கச் செய்யவேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

மேலும் இராசாசி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், போலீஸ்காரர்கள் திறமை யாகச் சுட்டிருக்கிறார்கள் என்று, அவர்கள் செய்கையை இவர்தான் பாராட்டுகிறார். தாலியை இழந்த தாய் மார்களின் கண்ணீர் ஓய்ந்தபாடில்லை. அவர்கள் அலறும் அலறல் ஓய்ந்த பாடில்லை. அதுவெல்லாம் ஆச்சாரியாருக்குத் தெரியவில்லை. டால்மியாபுரத்தில் சுமார் பகல் 2 மணிக்குக் சுட்டிருக்கிறார்கள்.

எனக்கு உடனே மூன்று மணிக்கு ஒரு தந்தி, 3.24 மணிக்கு ஒரு தந்தி, 3.34 மணிக்கு ஒரு தந்தி என்று வரிசையாகத் தந்தி அடித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு தந்தியாவது எனக்கு அன்றே கிடைக்கவில்லை. ஒரு நாள் கழித்து எனக்குக் கிடைக்கும் படியாக இந்த சர்க்கார் செய் திருக்கிறது. இது தான் ஜனநாயகத்தின் போக்கா? இப்படிச் செய்தியை மறைத்து விட்டால் உண்மை வெளிப்படாமலேயே இருந்துவிடுமென்று எண்ணமா? குடையைக் கொண்டு சூரியனை மறைக்க முடியுமா? இதேமாதிரியே தன்மானத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது உரிமைக் கிளர்ச்சியை நன்கு அறிந்து கொள்ளவேண்டும். வட நாட்டவர்கள் நம்மை இழிவுபடுத்திப் பேசுவதை நிறுத்தும்படி செய்யவேண்டும். அதற்குத் தகுந்த நடவடிக்கையை இந்தச் சர்க்கார் எடுக்கவேண்டும்.

மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் நியாயமானதா இல்லையா என்பது பற்றி விசாரிக்க உடனே ஒரு தனிப்பட்ட பிரமுகர்கள் கொண்ட-அதாவது அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அற்ற ஒரு கமிட்டியை நியமித்து விசாரணை நடத்தவேண்டு மென்று கேட்டுக்கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.” (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் பக்கம் 547-850, நாள்.21-7-1953)

A. Govindasami Nayagar:- “Sir, on a point of Order - கனம் அங்கத்தினர் ஸ்ரீ சுயம்பிரகாசம் அவர்கள் ஆரம்பக் கல்விக்காக இரயில் நிறுத்தம் செய்யப் பட்டதாகச் சொல்லுகிறார். ஆரம்பக் கல்வித் திட்டத்திற்கும், இரயில் நிறுத்தத்திற்கும், எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. தமிழர்களை அவமதிக்கும் முறையில் இந்தியப் பிரதமர் பேசிக்கொண்டே வருவதைக் கண்டிக்கத்தான் இரயில் நிறுத்தம் செய்யப்பட்டது என்பதை அவருக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். கல்யாணசுந்தரம் தன்னுடைய கண்டன உரையில் கூறியதாவது:-

Sri. M. Kalyanasundaram:- “கனம் சபாநாயகர் அவர்களே, இந்த  விவாதத்தில் கலந்துகொள்ளும் எனக்கு உணர்ச்சி வேகம் ஏற்படுகிறது. ஒரு புறத்தில் துக்கம்,  இன்னொரு புறத்தில் கோபம் - ஆகவே வார்த்தைகள் வருவதுகூட கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் 10, 12 உயிர்களை மாய்க்கவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? துப்பாக்கிப் பிரயோகத்தைத் தவிர வேறு வழியே அவர்களுக்குத் தெரியவில்லையா என்று நான் கேட்கவிரும்புகிறேன்”.

கூhந ழடிn. ளுசi சுயதயபடியீயடயஉhயசi :- “பத்து பன்னிரண்டு பேர்கள் இறக்கவில்லை. டால்மியாபுரத்தில் நால்வரும், தூத்துக்குடியில் இருவரும் ஆக ஆறு பேர்கள் தான் இறந்திருக்கிறார்கள்.”

The Hon. Sri Rajagopalachari :-  “கனம் முதல் மந்திரி அவர்கள் சொல்லுகிறார், “ஆறு உயிர்கள்தான் இறந்தனவென்று, அப்படியே இருக்கட்டும். அதை நான் மறுக்கவோ, திருத்தவோ விரும்பவில்லை. இந்த ஆறு பேர்களைத் தவிர இன்னும் பல ஆயிரக்கணக்கான பேர்கள் கையும், காலும், மண்டையும் உடைபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்கள். இது நியாயமா, நீதியா, தப்பு யாருடையது என்று விவாதத்திற்கு வரும்முன் நான் முதலில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் இறந்த வர்களுடைய குடும்பத்திற்கு மனப்பூர்வமான அனு தாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

“இம்மாதிரி துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தக் காரணம் என்ன? கனம் ராசாசி அவர்கள் இந்த இயக்கத் தலைவர்களை சிறையில் அடைத்தபோதே தலைவர்கள் வெளியில் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை உணரவில்லையா? நேரில் காணும் பிரச்சினைகளை ஒப்புக்கொள்ள மறுத்து விஷயங்களை மழுப்பக் கூடாது. நம் எதிரேயுள்ள உண்மை விஷயத்தை அப்படியே எடுத்துப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினைப்பற்றி, வடநாட்டான் தென்னாட்டை ஆதிக்கம் செலுத்துவதை ஒரு கட்சி விரும்பாமல் இருக்கலாம். அது அந்தக் கட்சியின் அபிப்பிராயம். ஆனால் ஒரு பொறுப்புள்ள அந்தஸ்த்தில் இருக்கக்கூடிய இந்தியப் பிரதம மந்திரி அவர்கள், இவைகளையெல்லாம் சில்லியென்றும், நான்சென்ஸ் என்றும் இழிவுப்படுத்திப் பேசுவது ரொம்பவும் கண்டித்தக்கதாகும்.

தமிழ் மக்களின் எழுச்சியை இழிவுப்படுத்துவது தமிழ்நாட்டையே இழிவுபடுத்துவது போலாகும். தமிழ் நாட்டி லுள்ளவர்கள் கௌரவமாக வாழவேண்டும். மானத் தோடு வாழவேண்டும். வடநாட்டானுக்கு அடிமைப்பட்டுத் தன்மானத்தை இழக்கக்கூடாது. வடநாட்டான்தமிழனை இழிவுப்படுத்திப் பேசுவதைப் பார்த்துக் கொண்டி ருக்கக்கூடாது.

வடநாட்டானின் ஆதிக்கச் சின்னமான வடநாட்டுப் பெயர்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு கட்சி சாத்வீக முறையில், முன்னறிவிப்புச் செய்துவிட்டு, டால்மியாபுரம் என்ற பெயரைக் கல்லக்குடி என்று திருத்தி எழுதுவதற்கு முயற்சி செய்தபோது கூட்டத்தின்மீது 64 ரவுண்டுகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம், கனம் இராசாசி அவர்களின் அதிகார ஆதிக்க வெறியைக் காட்டாது வேறு எதைக் காட்டுகிறதென்றுதான் நான் கேட்கவிரும்புகிறேன். சபையிலே பேசும்போது கடந்த ஒரு மாதமாக திராவிடப் பத்திரிகைகளான “விடுதலை”, “நம்நாடு” போன்ற தினத்தாள்களைப் பார்த்தாலேயே உங்களுக்குத் தெரியும்.

இதுமாதிரியான ஒரு நிலையை உண்டு பண்ணவே அவர்கள் ரொம்பவும் தூபம் போட்டு வந்தார்கள். ஆகவே இதுமாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பற்றி  நான் ஆச்சரியப்பட வேயில்லை’, என்று இராசாசி சொன்னாரே, முன்பே என்ன நடக்கும் என்று எதிர்ப்பார்த்த ஸ்ரீ இராசாசி துப்பாக்கிப் பிரயோகம் செய்யச் சொல்லித்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரா? குறிப்பாக சபையிலுள்ளவர்கள் இராசாசி பதவிக்கு வந்தபின், அதாவது அதிகாரம் அவர்கள் கைக்கு வந்தபின் எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்.

“பலமான எதிர்ப்புகளிடையே கனம் இராஜகோ பாலாச் சாரியார் மந்திரி சபையை அமைக்க ஒப்புக் கொண்டதும், தீரமாக மந்திரி சபையை அமைத்ததும் - கொல்லைப்புர வழியாக வந்தாலும் அதன் பின் தனது சாகஸங்களை உபயோகித்துத் தனது சாணக்கிய-சட்ட நுணுக்கத்திறமை களைக் காட்டி மந்திரி சபையை நிலைக்க வைத்துக் கொண்டதையும் எல்லோரும் பாராட்டலாம். அது தனிப்பட்ட விஷயம். ஆனால் நாட்டின் நிலைமை கொஞ்சமாவது முன்னேற்றம் அடைந்திருக் கிறதா? பொதுநலனைப் பாதுகாக்க எப்படிப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் ஒன்றுபட்டு அதை முறியடிக்கப் போராடு வோம் என்பதை மக்கள் பல சந்தர்ப்பங்களில் இந்தச் சர்க்காருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

கனம் இராஜகோபாலாச்சாரியார் மந்திரிசபைக்கு எதிராக உணவுப்பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், பசிப்பட்டினிச் சாவுகள் போன்ற பல பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆகவே இதுமாதிரியாக மக்கள் ஒன்று சேர்ந்து போராட இப்பொழுது சந்தர்ப்பம் அளித்தால் இந்த எதிர்ப்புச் சக்திகள் எல்லாம் நிச்சயமாக ஒரு காலத்தில் ஒன்று திரண்டு இந்தச் சர்க்காரையே கவிழ்த்துவிடும் என்ற அச்சத்தாலேயேதான் மக்கள் உள்ளத்தில் பயத்தை உண்டுபண்ண, அவசியமானால் துப்பாக்கிப் பிரயோகத் தையும் கூடச் செய்து இந்த இயக்கத்தை நசுக்க வேண்டுமென்று இராசாசி உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லுகிறேன்.

அதை அவர்கள் மறுக்க முடியுமாவென்று கேட்கிறேன்? முன்பு நடந்த ஹிந்தி ஒழிப்பு இயக்கத்தின்போது போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உத்தரவிட்டார்கள். அவர்கள் சாத்வீக முறையில் அழிக்கும் போது பேசாமல் இருங்கள். நிலைமை மோசமாகிவிடாமல் மாத்திரம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதோடு கடைசி பாராவில் இதில் கம்யூனிஸ்ட்டுகள் பங்குக் கொள்ளுகிறார்களா என்று பார்க்கவும் எனக் கண்டிருந்தது.

முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார்: “அப்படி எந்த உத்தரவும் போடவில்லை.”

Sri. M. Kalyanasundaram:- “உங்களால் உத்திரவும் போட முடியும்.  உத்திரவு போடவில்லையென்று மறுக்கவும் முடியும். ஆனால் எங்களால் அந்த இரகசிய உத்தரவைக் கொண்டுவந்து காட்ட முடியாதல்லவா? நீங்கள் உத்திரவு போடவில்லையென்றால், போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உத்தரவு கொடுத்தீர்கள்? என்ன உத்தரவு கொடுத்தீர்களோ அதன் நகல் ஒன்றை சபையின் முன்பு உங்களால் வைக்கமுடியுமா?”

முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார்: “இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது போட்ட உத்தரவையா?”

Sri. M. Kalyanasundaram:- “அந்த  உத்தரவையும் தான், இப்பொழுது போட்ட உத்தரவையும்தான், தமிழ்நாட்டில் இரயில் நிறுத்த மறியல் பல இடங்களில் நடந்தபோதிலும்கூட, துப்பாக்கிப் பிரயோகம் எந்த இடங்களில் நடந்திருக்கிறதென்று பாருங்கள். ஒன்று டால்மியாபுரத்தில், மற்றொன்று தூத்துக்குடியில். டால்மியாபுரத்தில்தான் சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது. தொழிலாளர்களின் நலனை நசுக்க எல்லாவித வழியையும் கையாளும் அந்த வட நாட்டு முதலாளி, மற்றவர்களுக் கெல்லாம் கிடைக்காத இந்திய சர்க்காரின் சலுகையைப் பெற்றுத் தொழிலாளிகளின் உயிரை உறிஞ்சி வருகிறான். தூத்துக்குடிதான் ஆர்.வி. மில்லின் கோட்டை.

அங்கே வேலை செய்யக் கூடிய தொழிலாளிகள் பட்டினி  கிடந்து செத்தாலும்கூட தன்னு டைய நாலு பங்கு லாபத்தில் ஒரு பங்கு லாபம் குறைந்தாலும் கூட அவன் அலறுவான். அவர்களின் நஷ்டத்தைக் கோடிக்கணக்கில் கொடுத்து ஈடு செய்யவும் சர்க்கார் முன்வரும். இந்த இரு இடங்களில்தான் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், உணவு கிடைக்காத திண்டாட்டம் போன்ற பல பெரிய பெரிய பிரச்சினைகள் நாட்டில் கிளம்பிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுதிலிருந்தே எதிர்ப்புச் சக்திகள் ஒன்று சேர இடம் கொடுக்கக்கூடாது என்ற கருத்தோடுதான் கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இதுவே தமிழ் நாட்டிலுள்ள மக்களின் அபிப்ராயம். சர்க்காரிடம் அவர்கள் ஆத்திரப்படு கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள்மேல் பழியைச் சுமத்தி விட்டு, சந்தர்ப்பங்களை தனது சமயோசித புத்தியால் எப்பொழுதும் தனக்குச் சாதகமாகவே வைத்துக்கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. சர்க்கார் தரப்பிலிருந்து பேசியவரால் கூட, துப்பாக்கிப் பிரயோகம்  சரி என்று சொல்வதற்கு நாக்கு வரமாட்டேன் என்று விட்டது. அவர் மனம் அதற்குத் துணியவில்லை. ஆகவே கனம் ராஜகோபாலாச் சாரியாருக்கு நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பிரச்சினையை நேருக்கு நேராகப் பார்க்கவேண்டும்.

சென்ற ஒரு மாதகாலமாகவே சர்க்காரின் ஆரம்பக் கல்வித் திட்டத்தையும், மற்ற விஷயங்களையும் கண்டிக்கும் முறையில் அவர்கள் மகாநாடுகள் கூட்டினார்களே.  பலப்பல இடங்களில் கூட்டங்கள் போட்டுத் தீர்மானங்கள் அனுப்பினார்களே. அவர்களது தினத்தாள்களில் ரொம்பவும் எதிர்த்து எழுதி வந்திருப்பதாக கனம் ராஜகோபாலாச்சாரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறாரே. அப்படியிருக்க ஜனநாயகத்தில் ரொம்பவும் நம்பிக்கையுள்ள கனம் இராசாசி  அவர்கள் அந்தக் கட்சித் தலைவர்களைக் கூப்பிட்டு வைத்து, அவர்கள் எதிர்க்கவேண்டியதன் அவசியத்தைக் கேட்டாரா? அப்படி எதுவும் சமரச முறையில் நடந்ததாகத் தெரியவில்லை.

விபரீதமான செய்கை ஏற்படலாம் என்று உணரும் போதாவது கண்ணீர்ப் புகை எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி வழி செய்தாரா? போதுமான முன்னறிவிப்பு இன்றி, சாத்வீகமான முறையில் கூட்டத்தைக் கலைக்க வழியிருந்தும், அவைகள் ஒன்றையும் கைப்பற்றாமல் சுடுவதற்கு உத்தரவு எப்படிக் கொடுத்தார் என்று கேட்கிறேன்? கனம் இராசாசியின் உத்திரவு இல்லாவிட்டால் அவர்கள் அப்படித் துணிந்து செய்திருப்பார்களா? கூட்டத்தினரின் தொகை அதிகமாக இருந்தது என்று வைத்துக்கொண்டாலும், இவர்களைக் கலைப்பதற்கு வேறு வழி ஒன்றுமேயில்லை யென்று வைத்துக்கொண்டாலும் முப்பது வயதுகூட நிரம்பப் பெறாத ஒரு அதிகாரி, ஒரு ரவுண்டா இல்லை.... 64 ரவுண்டுகள் சுடு, சுடு என்று சொல்ல வேண்டுமானால் அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலா தைரியமாக அப்படி மக்களின் உயிர்களைத் திரணமாக மதித்து உத்தரவு இட்டிருப்பார்? நான் கேட்கிறேன்? யாரோ தெரியாமல் செய்துவிட்டதாக, ஸ்தல அதிகாரிகளின்மீது பழியைப் போட்டுவிட்டு கனம் ராஜகோபாலாச்சாரியார் தப்பித்துக்கொள்ள முடியாதென்று நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

“ஆகவே ஒரு பாரபட்சமற்ற கமிட்டியை நியமித்து இதைப்பற்றி விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்குக் காரணமாயிருந்த அதிகாரிகளைவிட்டே இதை விசாரிக்கச் சொல்வது ரொம்பவும் தப்பாகும். அதில் நியாயம் கிடைக்காது. நீதி இருக்காது.

ஆகவே ஜனநாயகத்தை காலில் போட்டுத் துவைக்காமல், இரத்தத்தைச் சிந்தி இந்த நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு நிலைமை ஏற்படாமல் செய்ய வேண்டுமென்றால், உடனே தனிப்பட்ட அங்கத்தினர் களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்து இதுபற்றிப் பாரபட்சமற்ற விசாரணiயை நடத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லது ஜனங்கள் இரத்தத்தைச் சிந்தியாவது ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்த எதேச்சதிகார ஆட்சியை ஒழித்துக் கட்டுவார்கள் என்று சொல்லிக்கொண்டு என்பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.” (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் பக்கம் 855-858, நாள்.21-7-1953)

அண்ணா, “திராவிட நாடு” இதழில் தம் கண்டனத் தைப் பதிவு செய்துள்ளார்.

நன்றிகெட்ட ம.பொ.சி. ஒரு வரிகூட தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றிஎழுதவில்லை. ஏனென்றால் சுட்டுக் கொல்லக் காரணமாக இருந்தவர் அவருடைய குருநாதர் இராசாசி ஆவார். வடக்கெல்லைப் போராட்டத்தில் இருவர் இறந்ததைப் பற்றி எழுதியுள்ள ம.பொ.சி., வடக்கெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவாக இரயில் மறியல் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட 10 தமிழர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை.

1967 தேர்தலில், தி.மு.க. இராசாசியின் சுதரந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் அவர்களும் இந்த வரலாற்றை மறைத்துவிட்டனர் என்பது ஒரு சோக வரலாறு.

பட்டம் தாணுப்பிள்ளை திருவிதாங்கூரில் 11 தமிழர்களைச் சுட்டுக்கொன்றதைக் கண்டிக்கும் தமிழ்த் தேசியவாதிகள். வடக்கெல்லைப் போருக்கு ஆதரவாகப் போராடி இரயில் மறியல் செய்தபோது 15.07.1953 அன்று இராசாசியின் அடக்குமுறை ஆட்சியால் 10 தமிழர்கள் சுட்டுக் கொன்றதைப் பற்றி வாய் திறப்ப தில்லையே ஏன்? இவர்கள் தமிழர்கள் இல்லையா?

கோல்டன் ந. சுப்ரமணியமும் தன்னுடைய நூலில் இதைப் பற்றி வெளியிடவில்லையே ஏன்?

தகராறுக்கிடமான பிரதேசம் என்றறிவிக்குமாறு பிரதமர் நேருவிடம் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துமாறு மீண்டும் ஒரு முறை அவரை வற் புறுத்திக் கேட்க விரும்பினேன். அதன்படி 26.06.1953-இல் முதல்வர் இராசாசியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்... ஆந்திரர் நிலைக்கு எதிராகத் தமிழர் மட்டுமே நடத்தும் கிளர்ச்சிக்கு ஆதரவாக முதல்வர் என்ற முறையில் தாம் எதையும் செய்யா மலிருப்பதை எனக்கு உணர்த்தினார்.

அன்று சங்கடமான நிலையை உணர்ந்தேன். ஆயினும் அன்றைய நிலையில் அவரிடம் எனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திப் பிரதமர் நேருவிடம் தொலைபேசியில் பேசி எல்லைக் கமிஷன் அனுப்பவுதாக உறுதிமொழி வாங்கித் தருமாறு அவரைக் கட்டாயப் படுத்தினேன். அவர் அதற்கு இணங்கவில்லை என்றா லும் மாற்று யோசனை ஒன்றை எனக்குத் தெரிவித்தார்.

விரைவில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் ஆந்திரப் பிரிவினை மசோதா விவாவதத்திற்கு வரவிருப்பதால் அந்த மசோதாவிலேயே சித்தூர் மாவட்டத்தைத் தகராறுக்குரிய பிரதேசமாகக் கருதி ஆந்திரம் பிரிந்து ஓராண்டுக்குள் எல்லைக் கமிஷன் அனுப்படவேண்டும் என்ற விதியைச் சேர்த்துவிடலாம் என்பது இராசாசி கூறிய மாற்று யோசனை. இதற்கு அமைச்சரவையிலும் சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியிலும், உள்ள ஆந்திரர்களுடைய ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்று இராசாசி நம்பினார்.

எனக்கு அந்த நம்பிக்கை இல்லை என்பதோடு, அப்படியே சென்னை மாநில சட்டமன்றம் இசைந்தாலும்  மத்திய அரசு அதனை ஏற்குமென்று எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை-கோல்டன் நா. சுப்பிரமணியம் (மேற் கண்ட நூல் பக்.98-93) ம.பொ.சி.யின் எனது போராட்டம் நூலிலிருந்ததை, கோல்டன் சுப்பிரமணியம் மேற் கோளாகக் காட்டியுள்ளார்.

இராசாசி அரசு தயாரித்த ஆந்திரபிரிவினை சட்டமசோதாவில் எல்லை நிர்ணயம் அமைக்க வேண்டும் என்ற விதி இல்லை. திருத்தணி விநாயகம், கோசல ராமன், ப. ஜீவானந்தம் ஆகியோர் சட்டமன்றத்தில் வற்புறுத்திய பிறகு அவ்விதியைச் சேர்த்தார் என்பதே உண்மை.

வடக்கெல்லைப் பிரச்சனையில் ஒரு எல்லை வரையறை ஆணையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏற்காது என்று கூறுகின்ற ம.பொ.சி., சென்னை தலைநகர் மீட்பதில் தான் நகர மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தினால் நேரு மனமாற்றம் அடைந்து சென்னையைத் தமிழகத்திற்குக் கொடுத்துவிட்டார் என்று எழுதுவதில் என்ன நியாயம் இருக்கிறது? சட்டமன்றம் பெரியதா? மாநகராட்சி மன்றம் பெரியதா? என்பதை ம.பொ.சி. அன்பர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

வடக்கெல்லைப் பிரச்சிணையில் ம.பொ.சிக்கு இராசாசி எந்தவிதமான ஆதரவையும் வழங்கவில்லை என்பதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக நமக்கு அளித்துள்ளார். பின்பு எதற்காக அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

வேறுவழியின்றி ம.பொ.சி. திருத்தணி மார்கெட் பகுதியிலுள்ள காந்தி சிலையின் முன் 03.07.1953 அன்று சத்தியாகிரகம் இருக்கப்போவதாக அறிவித்தார்...

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவதற்கு முந்தைய நாள் இராசாசி எனக்குத் தந்திக் கொடுத்திருந்தார். அதில் “தாங்கள் தடையை மீறிச் சிறைப்புகுவதற்கு முடிவு செய்துவிட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அந்த முயற்சியைக் கைவிட்டு உடனே சென்னைக்கு வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்”...... “இராசாசியின் அன்புக் கட்டளையைப் புறக்கணிப்பது என் மனதுக்குத் துன்பம் தருவதுதான்”

....சென்னை மாநில காங்கிரசிடமோ, அதன் முதல்வராகிய தங்களிடமோ எனக்கு எந்தவிதமான மனத்தாங்கலும் இல்லை. மத்திய அரசின் நீதியற்ற போக்குத்தான் என்னைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி யுள்ளது. இப்போதுங்கூட சித்தூர் மாவட்டம் தகராறுக் குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக எல்லைக்கமிஷன் அனுப்ப மத்தியஅரசு உறுதி கூறுமானால், நான் போராட்டத்தை அடியோடு கைவிட்டு விடுவேன். தாங்கள் என் தலைவர். அந்த வகையில் தங்கள் ஆணைக்குக் கட்டுப்பட நான் கடமைப்பட்ட வன்”..... (மேற்கண்ட நூல் பக். 100-101)

இந்தக் கடிதத்தை ம.பொ.சி. ஒரு ஆள்மூலம் முதல்வர் கைக்குக் கிடைக்கும்படி அன்று இரவே அனுப்பிவிட்டார்.

03.07.1953 காலை 9 மணிக்குத் திருத்தணி காந்தி சிலைமுன் போடப்பட்டிருந்த மேசையின் மீதேறி வடக்கெல்லைப் பகுதிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசத் தொடங்கினேன். இரண்டு மணித்துளி ஆவதற்குள் கைது செய்யப்பட்டேன்.....

“ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 1952இல் நடந்தப் பொதுத் தேர்தலிலே எந்தக் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் சரியான ஊண், உறக்கம் இல்லாமல் நாடு சுற்றிப் பிரச்சாரம் செய் தேனோ அந்தக் கட்சியின் ஆட்சி என்னைச் சிறையில் அடைத்தது”. (மேற்கண்ட நூல் பக். 102)

பா. குப்பனின் தலைவர் தேர்தலில் காங்கிரசுக்கு உழைத்ததை அவரே எழுதியுள்ளார். இதுதான் தமிழ்த் தேசியம் அமைக்க அவர் தீவிரமாகப் போராடியதா....?

- தொடரும்.