வாழ்க்கை ஒரு போராட்டம்தான் என்று பேராசான் கார்ல்மார்க்ஸ் கூறினார். பகவத் கீதையும் அப்படியே கூறுகிறது. போராட்டத்தை ஒப்புக் கொள்வதினாலேயே இரண்டும் ஒன்றாகி விடாது. முன்னையது சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்று திரட்டும் போராட்டம். பின்னையது உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கு உழைக்கும் மக்களையே ஈடுபடுத்த விழையும் உத்தி. இவர்களுடைய போராட்ட அறைகூவலே, மக்கள் சரியான திசையில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே அமைதி நிலவினால் ஒரு வேளை மக்கள் சிந்தனை செய்து சரியான தீர்வைத் தெரிந்துகொண்டு விடுவார்களோ என்ற அச்சத்தினாலேயே வேறு திசைகளில் போராட்டத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பசி பட்டினியில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இவ்விரங்களைப்பற்றி புதுதில்லியில் 15.10.2010 அன்று பேசிய ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பொது இயக்குநர் ஜக்யூஸ் டியோஃப் உலகின் நாகரிகமடைந்த மக்கள் தப்பித் தவறிக்கூட ஒப்புக்கொள்ளக்கூடாது என்ற அளவிற்குப் பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்றும் 1996இல் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் மக்கள் பட்டினி கிடப்பதை இன்னும் பத்து ஆண்டுகளில் (அதாவது 2006க்குள்) முழுமையாக ஒழித்துவிடுவோம் என்று சூளுரைத்தபொழுது இருந்த பட்டினி கிடந்த மக்களின் எண்ணிக்கையைவிட இப்பொழுது பல மடங்கு அதிகமாகியுள்ளது என்றும் கூறினார்.

பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை நூறு கோடி என்றால் உணவு கிடைத்தாலும் அது சத்துணவாக இல்லாத காரணத்தால், பல மக்கள் நோய் நொடிக்கு ஆளாவதாகவும் அத்தகைய மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிவரம் தற்பொழுது தன் கையில் இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால் சத்துணவு இல்லாமல் அவதிப்படுபவர்களைப்பற்றி மும்பையில் 15.10.2010 அன்றே நடந்த ஒரு கருத்தரங்கில் மகாராட்டிர மாநிலத்தில் மேல்காட் பகுதியில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 98 குழந்தை இறந்து உள்ளதாகவும் 4500 குழந்தைகள் மரணத்தின் விளிம்பில் உள்ளதாகவும் மேல்காட் பகுதியின் சுகாதார அலுவலர் எஸ்.கே. யெலூர்கர் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியில் இந்த நிலை என்றால் மாநிலத்தின் முழுவதும் நிலை, நாடு முழுவதின் நிலை, உலகம் முழுவதன் நிலை என்ன என்பதை உணர்ந்து பாருங்கள்.

இந்நிலைமைபற்றி மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்? புராட்டஸ்டண்ட் கிறித்தவ மதத்தின் தலைவரான காண்டெர்பரி பாதிரியார் ரோவன் வில்லியம்ஸ் தனது 16 நாள் சுற்றுப்பயணத்தின்போது 17.10.2010 அன்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பேசும்பொழுது மக்கள் பட்டினி கிடக்கும் பிரச்சினை உலகம் முழுவதும் பரவி உள்ளது என்றும் உலகின் தீவவ்வேறு பகுதிகளில் இப்பிரச்சினையின் வடிவம் வெவ்வேறு விதமாக உள்ளது என்றும் ஆனால், பணக்காரர்கள் பட்டினி கிடப்பவர்களுக்கு உணவு அளிப்பது என்று முடிவெடுப்பதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் (ஐக்கிய நாட்டு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர்கள்) பிரச்சினைகளை விளக்கிக்கூறி விட்டார்கள். தேவையான அளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்றும் கூறி விட்டார்கள். ஆனால், உற்பத்தியை அதிகப்படுத்துவதைத் தடுக்கும் பொருளாதாரக் காரணங்களைப்பற்றி அவர்களால் ஒன்றும் பேசமுடியவில்லை. மேலும் ஏற்கெனவே உற்பத்தியாகிக்கிடக்கும் உணவு தானியங்களைப் பட்டினிகிடக்கும் மக்களிடம் சேர்க்க விடாமல் தடுக்கும் பொருளாதாரக் காரணங்களைப்பற்றியும் அவர்களால் ஒன்றும் பேசமுடியவில்லை. மதத் தலைவர்களுக்கு என்ன வந்தது? பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று கூறிவிட்டால் அவர்களுடைய பிரச்சினை முடிந்தது. சமுதாயத்தில் சமமின்மை நிலைபெற்றால்தானே மதங்கள் செழித்து வளரமுடியும்?

அப்படியானால் இப்பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டிய அரசியல் தலைவர்களும் மக்களும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? 20.9.2010 அன்று நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்றும் வேளாண்மைக்குத் தொடர்பில்லாத பங்கு வர்த்தகத்தைப்பற்றி மிக விரிவாகவும் பேசினார். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் தொழிலும் வர்த்தகமும் சீராக நடந்துவிட்டால் போதும், உலக மக்களின் பசி பட்டினிபற்றிக் கவலை இல்லை. 

ஐக்கிய நாடுகள் அவையின் அடுத்த நாள் கூட்டத்தில் அதாவது 21-9-2010 அன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உலகின் வறுமை ஒழிப்பிற்காக 130 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருப்பதாகவும் இது ஐந்து ஆண்டுகள் செலவழிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், இப்பணிக்கு குறைந்தபட்சம் 12000 கோடி அமெரிக்க டாலர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

சரி ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரிகள் கூறுவதுபோல் 12000 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவழித்து விட்டால் உலகின் வறுமை ஒழிந்து விடுமா? உலக மக்களின் பசி பட்டினி தீர்ந்துவிடுமா? இப்படி ஒதுக்கப்படும் 12000 கோடி அமெரிக்க டாலர்கள் உணவு தானிய உற்பத்திக்காகச் செலவிடப்படமுடியுமா? ஏற்கெனவே உற்பத்தியாகிக்கிடக்கும் தானியங்களையே பசி பட்டினியில் கிடக்கும் மக்களுக்கு அளிப்பதற்கு (சந்தைப் பொருளாதார அமைப்பில்) முடியாது என்று இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் கூறியுள்ளாரே! அவை மக்கிப் போவதைப்பற்றியும் கவலையில்லை. எலிகள் அவற்றை வேட்டையாடுவதைப்பற்றியும் கவலையில்லை. பட்டினி கிடக்கும் மக்களுக்குக் கொடுக்க முடியாது என்று தெளிவாகத் தெரிவிக்கும் பின்னணி என்ன? ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களையே வழங்க முடியாதவர்கள் மேலும் உணவு தானியங்களை உற்பத்தி செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

என்ன அது? உணவு தானிய உற்பத்தியை அதிகப்படுத்த முடியாதா? அப்படியென்றால் வறுமையையும் பசிப்பிணியையும் ஒழிப்பது எப்படி? என்று நினைக்கிறீர்களா? உண்மை என்னவென்றால் புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ கூறுவதைப்போல மக்கள் இன்னும் அரசியலைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெறவில்லை. பசிப்பிணியைப் போக்குவதற்காக 130 கோடி அமெரிக்க டாலர்களைத் தருகிறோம் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறியவுடன் உண்மையிலேயே ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று நம்பும் மக்களும் இருக்கிறார்கள். முடியாது என்ற விவரம் புரியும் மக்களும் தங்களுடைய பிரச்சினை அல்ல என்று ஒதுங்கிப் போய்விடுகி

றார்கள். உண்மையில் பாதிக்கப்படும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறார்கள். ஆனால் பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினைகள் மட்டும் என்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்துகொண்டே இருக்கிறது. இதற்குத் தீர்வுதான் என்ன?

சந்தைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகம் இயங்கும் வரையிலும் மக்கள் பசி பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் சுதந்தரமின்னைம முதலிய பிரச்சினைகளிலிருந்து மீளமுடியாது. ஏனெனில் இம்முறையில் இலாபம் கிடைக்கக்கூடிய பொருட்கள்தான் உற்பத்தி செய்யப்படும். மேலும் இம்முறையில் உற்பத்தியாகும் செல்வங்கள் சீராக விநியோகிக்கப்படாமல் முதலீட்டாளர்களுக்கு அதிகமாகவும் உழைப்பாளர்களுக்குக் குறைவாகவும் வழங்கப்படுவதால் பொருளாதார நெருக்கடி தவிர்க்கமுடியாமல் போகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உற்பத்தியான பொருள்கள் போரினாலேயோ, வேறு விதங்களிலோ அழிக்கப்பட வேண்டியுள்ளது. அப்படியிருக்கையில் மக்களுக்குத் தேவைப்படும் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை சற்றும் ஏற்புடையதல்ல.

இம்முறையைத் தலைமுழுகிவிட்டு சமதருமப் (சோசலிசம்) பொருளாதார முறையைக் கைக்கொண்டல் அனைவருக்கும் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்பில் பங்குகொள்ளாமலேயே பெரும்பகுதி செல்வங்களை முதலாளிகள் உடைமையாகக் கொள்வதன் விளைவாக ஏற்படும் பொருளாதார நெருக்கடி சமதருமப் பொருளாதாரத்தில் ஏற்படாது. மக்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதே நோக்கமாக இருக்கும் என்பதால் மக்கள் தேவைகளின் முதல் முன்னுரிமையான உணவு உற்பத்திக்கு முதலிடம் கொடுக்கப்படும். ஆகவே, பசி, பட்டினி என்ற பேச்சுக்கே இடமிராது.

ஆனால் இங்கு யாரும் உலக சமுதாயத்தைச் சமதருமப் பொருளாதார முறையில்தான் நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பவே காணோம், அதை விடுத்து வேறு அனைத்தையும் பேசுகிறார்கள்.உலக நாடுகளின் அரசுகளும் சமதருமப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமைத் தத்துவம் மட்டும் மக்களிடையே விவாதப் பொருளாக ஆகிவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருக்கின்றன. வேறுவிதப் போராட்டங்கள் அனைத்தையும் கருத்து சுதந்தரம், பேச்சு சுதந்தரம், இன்னும் அநேக சுதந்தரங்கள் என்ற பெயரில் அனுமதிக்கின்றன. ஆனால் உமையிலேயே மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் பொதுவுடைமைத் தத்துவத்தை மட்டும் விவாதப் பொருளாகக்கூட அனுமதிக்க மறுக்கின்றன.

மக்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?