அன்பின் வடிவாய் பொன்நிகர் மனமாய் -
தண்தமிழ் உயிராய் பண்பே வாழ்வாய்
புதுமையே வழியாய்ச் சதுரப் பாடும்
விச்சையும் வல்ல பச்சை யப்பன்
புலமைக் கொருவன்! புதுநெறி களுக்கே
தலைமை ஏற்கும் தறுக ணாளன்!
நமது மொழியை நமது வழியை
நமது நாட்டை நமதுபண் பாட்டை
எதிர்க்கும் பகையை எரிக்கும் கதிர்இவன்!
கல்வியை மாணவர் வெல்லமாய்க் கொள்ள
ஆசுகள் நீக்கி அளித்தஆசிரியன்!
சொற்பெருக் காற்றலில் முற்பட நிற்பவன்!
அன்பு வெள்ளத் தெம்மை ஆழ்த்திய
நண்பன்! நிகரில் ஒண்மை யாளன்!
பண்டு முதலிவன் தொண்டே வாழ்வாய்
நிற்பது கண்டோம்! விற்பன னாமிவன்
வல்லாளன்எனப் பல்லாண் டிருந்து
தமிழ்நலம் காத்தே அமுத வாழ்வில்
“இன்றென இருத்தி” என்றே வாழ்த்தினம்!
வாழ்கபல் லாண்டு! வாழ்க!
சூழ்புவி எங்கும் தூய தமிழே!