கட்டுரைத் தொடர்-9

பெரியார் என்றாலே தமிழ்மொழிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரோதமானவர் என்ற தன்மையில் தமிழ்த் தேசியம்  பேசுவோரில் பலர் பேசுவதையும், எழுதுவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்கள் கூற்றில் ஒரு சிறிதும் உண்மை இல்லை.

பெரியார் தமிழ்ப் புலவர்களை இரண்டு வகையாகப் பிரித்தார். முதல் வகை, ஆரியப் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள். இரண்டாவது வகை ஆரியப் பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள். முதல் வகைப் புலவர்களைப் பெரியார் எப்போதுமே எதிர்த்து வந்ததில்லை. உதாரணமாகப் பெரியாருக்குக் கிடைத்த முதல் புலவர் சாமி சிதம்பரனார் - மனைவியை இழந்த அவருக்கு இரண்டாவது திருமணத்தைப் பெரியார் தன் சொந்தச் செலவிலேயே 5.5.1930இல் சிவகாமி - சிதம்பரனார் இணையரின் விதவைத் திருமணத்தை ஈரோட்டில் தன் வீட்டிலேயே நடத்தினார்.

பெரியார் வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் சாமி சிதம்பரனாருக்குத் தந்தி கொடுத்துவிடுவார். ஈரோடு வந்து குடிஅரசு இதழைப் பார்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வார். சாமி சிதம்பரனார் நாகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்தார். தஞ்சை மாவட்டத் தலைவராக சர். ஏ.டி. பன்னீர்செல்வம் இருந்ததால் சாமி சிதம்பரனாருக்குத் தேவைப்பட்ட அளவிற்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவருக்கு இதழ் நடத்தும் ஆசை ஏற்பட்டுப் பிற்காலத்தில் அறிவுக்கொடி என்ற இதழை நடத்தினார். தன்னுடைய மனைவி சிவகாமி, பெரியாரின் மனைவி நாகம்மையாருடன் பழகியதை வைத்தே பெரியாரின் இளமைக் கால நிகழ்வுகளைக் குத்தூசி குருசாமியின் வேண்டுகோளின்படி, தாம் எழுதிய ‘தமிழர் தலைவர்’ என்ற வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.

அதேபோல மறைமலையடிகள், கா.நமச்சிவாய முதலியார், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கலியாணசுந்தரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியப் பிள்ளை, கரந்தை தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த உமாமகேசுவரம்பிள்ளை, தமிழறிஞரும் பொறியாளருமான பா.வெ.மாணிக்கநாயக்கர், சந்திரசேகரப் பாவலர் என்ற பெயரில் இராமாயண ஆராய்ச்சி, மாகாபாரத ஆராய்ச்சி என்ற தொடர் கட்டுரைகளை குடிஅரசு ஏட்டில் எழுதிய புலவர் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, புலவர் குழந்தை, பாரதிதாசன், சி. இலக்குவனார், வை. பொன்னம்பலனார், டாக்டர் பொற்கோ, சாலை இளந்திரையன், பெருஞ்சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்றவர்களைப் பெரியார் ஒருபோதும் கண்டித்ததில்லை.

மறைமலையடிகள் கூட்டத்தில், சுயமரியாதை இயக்கத்தினர் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டு, அவரைத் திக்கு முக்காட வைத்தனர். பெரியார் வெளியூரில் இருந்து வந்த பிறகு, செய்தி அறிந்து குடிஅரசு இதழில் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டார்.

பெரியாருக்குத் திருக்குறளின் மீது பற்று ஏற்படக் காரணமாக இருந்தவர் பொறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர். பெரியார் திருக்குறளில் இப்படியெல்லாம் இருக்கிறதே என்று கேட்டபோது “அது உரை ஆசிரியர்களின் கருத்தே அன்றி திருவள்ளுவரின் கருத்து அன்று” என்று கூறிய பெருமாகனார் ஆவர். அவர் மறைந்த போது பெரியார் எழுதிய இரங்கலுரையில்,

“பெருந் தமிழறிஞரும் ரிட்டயரான சூப்பிரண்டென்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாரருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ் மொழியில் சிறந்த ஆராய்ச்சியுள்ளவராகவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்கமுடையவராகவும் இருந்தார். இவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டாயிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெரும் நஷ்டமே யாகும்.

இவரை இழந்து வருத்தமடையும் அவர் மனைவிமார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் (குடிஅரசு 3.1.1932).

பா.வெ.மாணிக்கநாயக்கர் அவர்கள் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணத்தில் மாத்திரை அளவுகளைச் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதை அறிவியல் தன்மையில் மெய்ப்பிக்க பலூன்களை எடுத்துக் கொண்டு எழுத்துக்களை உச்சரித்துக் கொண்டே அதை ஊதுவார். பின்னர் அந்த பலூனில் எவ்வளவு காற்று அடைப்பட்டு இருக்கிறது என்பதை எடைபோட்டுப் பார்த்துக் குறித்து வைப்பார். இதுபோல பல ஆய்வுகளைச் செய்து, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனருக்குத் தெரிவித்து எழுதிய மடல்கள் பல மறைமலையடிகள் நூல் நிலையத்தில் உள்ளன. அப்படிப்பட்ட தமிழறிஞரைப் பெரியார் போற்றினார். இன்றைய தமிழுலகம் அவரை மறந்துவிட்டது.

கா. நமச்சிவாய முதலியார்தான் அக்காலத்தில் அதிகம் படித்த தமிழ்ப் பேராசிரியர். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே கல்லூரியில் பணியாற்றிய சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு ரூ.150 மாத ஊதியமும் தமிழ்ப் பேராசிரியர் கா.நமச்சிவாயருக்கு ரூ.90 ஊதியமும் கொடுக்கப்பட்டதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது நீதிக்கட்சி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த பொப்பிலி அரசரிடம் பெரியார் எடுத்துரைத்து, 1932இல் இந்த ஊதிய முரண்பாட்டைப் போக்கித் தமிழ்ப்  பேராசிரியரின் - ஏன் தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலை முறிடியத்தார். தமிழில் மிகச் சிறந்த பாடநூல்களை எழுதிய நமச்சிவாயர் பார்ப்பன எதிர்ப்பாளராகவும், நீதிக்கட்சி ஆதரவாளராகவும் விளங்கியவர்.

அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவைப் திராவிடன் இதழ் முழுமையாக வெளியிட்டது. அதைத் தந்தை பெரியார் அவர்கள் ‘அகத்தியர் ஆராய்ச்சி’ என்ற நூலாக்கி அச்சிட்டு குடிஅரசு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு விற்பனை செய்து வந்தார். அகத்தியர் ஒரு கற்பனைப் பாத்திரம். ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறியதையும், தமிழை தாங்கள் தான் (அகத்தியர்) உருவாக்கியதாகக் கூறி வந்ததையும் வேதகாலம் முதல் ஆய்வு செய்து அக்கருத்துகளைத் தவிடுபொடியாக்கினார் நமச்சிவாயர்.

அதனால்தான் பெரியார் அவர்கள் கா.நமச்சிவாயர் மறைந்தபோது,

“பண்டிதர் தோழர் கா. நமச்சிவாய முதலியார் பிரிவினால் தமிழகத்தாருக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தில் நாமும் மனமாரப் பங்கு கொள்கிறோம்; பிறந்தாரெல்லாம் இறப்பது இயற்கை யாயினும் நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் செய்வோர் பிரிவு நாட்டு மக்கள் உள்ளத்தைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்தச் செய்யும்.

தற்காலத்துத் தமிழர் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் மிகச் சிலரே. எனவே, கண் மூடும் வரை தமிழர் நலத்துக்காக அல்லும் பகலும் உழைத்துள்ள ஒரு பெரியார் பிரிவை யார்தான் தாங்கவல்லார்? தமிழ்மொழிக்குத் தோழர் முதலியார் செய்த தொண்டு மலையினும் பெரியது. கடலினும் அகன்றது.தமிழ் உரைநடைக்கு முதன்முதல் அடிகோலிய ஆறுமுகநாவலருக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான வசன நூல்கள் இயற்றி தமிழ் செம்மையுறச் செய்த பெருமை காலஞ்சென்ற முதலியாருக்கே சொந்தம். வடமொழிச் சொற்களை அறவே வெறுக்கும் தமிழபிமானியல்ல அவர்.

இன்றியமையாவிடத்து வடமொழிகளை ஆளுவதே அவரது போக்காயிருந்தது. அவரது நடை எளிதாயும் இனிதாயும் தெளிவாயும் விளங்குகிறது. அவர் எழுதிய நூல்கள் தமிழிலக்கியத்துக்கு அழகு செய்யும் அணிகலன் என்பதற்கும் சந்தேகமே இல்லை. தமிழ்மொழிக்கு இவ்வண்ணம் அரிய சேவை செய்த தோழர் முதலியார் பெயர் அழியாதிருக்கும்படி ஏதேனும் ஒரு ஞாபகச் சின்னம் நிறுவ தமிழகத்தார் முன்வர வேண்டுவது தமிழ் வளர்ச்சிக்கு ஞாபகக் குறிப்பிடுவதாகும். முதலியார் பிரிவால் வாடும் மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபம் உரியதாகும் (குடிஅரசு 22.3.1936).

காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் திரு.வி.க. பெரியாருக்கு எதிராக நடந்து கொண்டபோதிலும், அதனால் பெரியார் காங்கிரசை விட்டே வெளியேறிவிட்ட போதிலும், திரு.வி.க.வின் மீதும் திரு.வி.க.வின் தமிழ் மீதும் பெரியாருக்கு உள்ளூர நல்லெண்ணம் என்றும் இருந்துவந்தது. 1948இல் காந்தி மறைவிற்குப் பிறகு திரு.வி.க. காங்கிரசை விட்டு வெளியேறிப் பெரியாரிடம் வந்தார். 1948 ஈரோடு மாநாட்டில் திரு.வி.க. திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

1953இல் திரு.வி.க. மறைந்தபோது இடுகாடு வரை சென்று அழுது புலம்பிய ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. அவருடைய நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு பெரியார் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தகைய பெரியாரைப் பார்த்து, தமிழ்ப் புலவர்களுக்கு எதிரி என்பதா? பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியதே திராவிடர் இயக்கந்தான்.

தொடரும்...