“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்கக் கூடாது” என்று மனு (அ) நீதிச் சட்டத்தில் கூறியிருப்பதை எழுத்திலும் கருத்திலும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உயர்சாதிக் கும்பல் மிக மிக உறுதியாக உள்ளது. சூத்திரர்களுக்குக் கல்வியை அளித்துவிட்டால் அவர்கள்தான் திறமைசாலிகள் என்றும் உயர்சாதிக் கும்பலினர் திறமையற்றவர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் மனுவின் கொள்கைக்கு எந்த ஊறும் விளைந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

ஆனால் பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவு இல்லாமல் இருப்பது, உலக சமுதாயத்தினரிடையே இந்திய ஆளும் வர்க்கத்தைத் தலைகுனிய வைக் கிறது. அந்தத் தலைக்குனிவையும் போக்க வேண்டும்; அதே நேரத்தில் சூத்திரர்கள் கல்வி பெற்றுவிடவும் கூடாது என்ற நோக்கத்திலும், நாங்கள் எவ்வளவோ முயன்று பார்த்தாலும் கல்வியைப் பெற மக்கள் ஒத்துழைப்பதில்லை என்று உலக சமுதாயத்தினரிடம் கூறவேண்டும் என்ற நோக்கத்திலும், கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தான் கடந்த 2010 ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act). 

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள முதல் நடவடிக்கை என்ன தெரியுமா? எந்த ஒரு குழந்தையையும் தேர்வில் தவறியதாகக் கருதக் கூடாது என்று 12.7.2010 அன்று ஒரு அரசாணை யைப் பிறப்பித்துள்ளதுதான். தமிழ்நாட்டில் இப்படி நடந்துள்ளது என்றால் ஆந்திராவில் என்ன நடந் துள்ளது தெரியுமா? நடக்க முடியாத குழந்தை களுக்குக் கல்வி புகட்டுவதற்காக ஆசிரியர்கள் அவர்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று விதிமுறையை உருவாக்கியுள்ளது. இது மிகவும் நல்ல யோசனை தான். ஆனால் கல்வி உரிமை என்பது உடல் ஊனமுற்றோருக்கான ஒரு திட்டம் அல்ல. உடல் ஊனம் இருந்தாலும் உயர்சாதிக் கும்பலினர் கல்வி பெற ஒரு தடையும் இல்லை. சூத்திரர்கள் தான் உடல் ஊனம் இல்லாதிருந்தாலும் கல்வி பெற முடியாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த உடல் ஊனமுற்றோருக்கு கல்வி அளித்துவிட்டு, சட்டத்தை நிறைவேற்றிவிட்டதாகப் பிரகடனப்படுத்த முயல்கி றார்கள். அதாவது மனுவின் கட்டளையைத் தான் நிறைவேற்றத் துடிக்கிறார்களேயொழிய அனைவருக் கும் கல்வி கொடுக்க வேண்டும் என்று நினைப் பதற்குக்கூட ஆதிக்கசாதியினர் அஞ்சுகிறார்கள்.

இச்சட்டத்தைப் பற்றி 5.12.2010 அன்று கருத்துக் கூறிய சென்னையிலுள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பள்ளியை நடத்துவோரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் என்றும், இச்சட்டத்தை செயற்படுத்தினால் பலதரப்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அதனால் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவார்கள் என்றும் கூறியுள்ளார்.

சரி! இச்சிக்கலில் தன்னார்வத் தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்வோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இச்சட்டத்தைப் பற்றி மக்க ளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்களாம். குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வ தற்கு எதிரான அமைப்பு (Compaign against Child Labour) 7.12.2010 மற்றும் 8.12.2010 நாட்களில் இச்சட்டத்தைப் பற்றிப் பரப்புரை செய்ததாகவும் அரசு அமைப்புகள் அவ்வாறு செய்யவில்லை என்றும் மார்தட்டிக் கொண்டு கூறியுள்ளது. இச்சட்டம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்து கொள்வதினால் அனை வரும் கல்வி பெற்றுவிட முடியுமா? சிக்கல் அவ்வளவு சுளுவானதா? 

இச்சட்டத்தைச் செயற்படுத்துவதற்கு, இராஜஸ்தான் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா? இதற்கென அமர்த்தப்பட்ட ஆணையர் மற்றும் திட்ட இயக்குநர் 12.12.2010 அன்று இதைப் பற்றித் தெரிவிக் கையில் இம்மாநிலத்தில் 12 இலட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின்கீழ்ப் பயனடைய வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும், இனிக் குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று விதிமுறைகள் கொண்டுவந்துள்ள தாகவும், 2011 மார்ச்சு மாதத்திற்குள் அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் வசதியும், கழிவகற்றல் வசதியும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட வகுப்புக் குழந்தைகள் கல்வி பயில வரமுடியாத காரணங்கள் என்ன? அவற்றைக் களைவது எப்படி? என்று சிந்தித்த தாகவே தெரியவில்லை. ஏனெனில் உண்மையில் அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. “பார்த்தீர்களா! நாங்கள் இவ்வளவு வசதிகளைச் செய்து கொடுத்தாலும் அவர்கள் தான் படிக்க வரமறுக்கிறார்கள்” என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்கான வசதிகளைத் தான் தேடிவைத்து / உருவாக்கி வைத்துக் கொள் கிறார்கள்.

இனி, தமிழ்நாட்டிற்கு வருவோம், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்று 2010 டிசம்பர் 25, 26, 27 நாட்களில் சென்னையில் நடந்தது. இக்கருத்தரங்கில் 11 மாநிலங்களிலிருந்து 125 குழந்தைத் தொழிலா ளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கருத்தரங்கில் பேசியவர்கள் குழந்தைகளுக்கு அவர்களுடைய உரிமை களைப் பற்றி உணர வைக்க வேண்டும் என்று வீராவேசத்துடன் பேசினார்கள். 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது என்றும், ஆனால் இந்தியாவில் இதுபோன்ற கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் பேசினார்கள். இறுதியாக இக்கருத்தரங்கில் குழந்தைத் தொழிலாளர்கள் நாட்டுப்புற நடனங்கள் உட்படப் பல கலைநிகழ்ச்சிகளை அளித்தனர். இக்கருத்தரங்கில் அரசியல்வாதிகளும், ஐ.நா. அவையைச் சேர்ந்தவர்களும், அமெரிக்க நாட்டுத் தூதரும் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட செய்திகளையெல்லாம் படித்துப்பார்த்தால் உயர்சாதிக் கும்பலினரின் சதித்திட்டம் தெளிவாகத் தெரியும். சூத்திரர்கள் கல்வியைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.

உண்மையில் அனைவரும் கல்வியைப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? பெருந்தலைவர் காமராசர் வழிகாட்டியது போல, இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும். கல்வி என்பது இலவசமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; இலவசமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் சரி, இதையே நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த் தியா சென்னும் குறிப்பிட்டு இருக்கிறார். இலவசக் கல்வி என்பதைத் தவிர வேறு எந்த வழி முறையும் பித்தலாட்டம் தான் என்று அவர் அழுத்தந் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

இலவசக் கல்வி என்பது பொருளாதார நடைமுறையில் முடியாத ஒன்றா? அப்படி ஒன்றுமில்லை. மிக எளிதாக முடியும் என்று பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆகவே பொருளாதார அடிப்படையில் இலவசக் கல்வி முடியாது என்று கூறுவது ஏமாற்று வித்தைதான்.

இலவசக் கல்வியில் தரம் இருக்காது என்று சிலர் கூறுகிறார்கள். அது மிக மிக.... மிக அயோக்கியத்தன மான வாதம். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாத் துரை போன்ற இன்றைய அறிவியல் மேதைகள் அன்று இலவசக் கல்வியைக் கற்றவர்கள். மேலும் பெருந்தலைவரின் காலத்தில் இலவசக் கல்வியைக் கற்ற பலர், பல உயர் பதவிகளில் சிறப்பாகப் பணி புரிந்திருக்கின்றனர் / பணிபுரிந்து கொண்டும் இருக் கின்றனர். ஆகவே இலவசக் கல்வியில் தரம் இருக்காது என்பது அயோக்கியத்தனமான வாதமே.

பின் நம்முடைய அரசு ஏன் அதை நடைமுறைப்படுத்தத் தயங்குகிறது? இவ்விடத்தில் மாமேதை அம்பேத்கர் கூறியதை நினைவு கொள்வது சாலப் பொருந்தும். “சட்டம் நன்றாயிருப்பது முக்கியமல்ல; அதை நடைமுறைப்படுத்துபவர்கள் நன்றாக இருக்க வேண்டும். நல்ல சட்டத்தை மோசமானவர்கள் கையாளும் பொழுது தீமையே ஏற்படும். சட்டம் மோசமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் நன்மை ஏற்படும்” என்று அரசியல் நிர்ணயச் சட்ட அவையில் அம்பேத்கர் கூறினார்.

கல்வி உரிமைச் சட்டம் என்று ஒரு சட்டம் இல்லாத காலத்திலேயே வெகுமக்கள் கல்வி பெற வழி செய்தார் பெருந்தலைவர் காமராசர். ஆனால் கல்வி உரிமைச் சட்டம் இருந்தும் வெகு மக்கள் கல்வி பெற முடியாத வழிகளை எல்லாம் வகுத்துக் கொண்டு இருக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்போ தைய அரசியல்வாதிகளையே தொடர்ந்து ஆளு வதற்கு அனுமதிக்கப் போகிறோமா? அல்லது கல்வி இலவசமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அரசியல்வாதிகளை அரசியல் களத்தில் கொண்டுவரப் போகிறோமா?