இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்

முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?

செப்பம் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?

மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்!

என்று அன்றைய நாளின் மக்கள் தொகை கணக்குக்கு ஏற்பப் பாடி வருந்தினார் பாவேந்தர். கடந்த தைத் திருநாளாம் பொங்கலன்று வானொலி, தொலைக் காட்சிகளில் வந்த செய்திகள், நம் விழாக் கொண்டாட் டங்களை மறந்து மிகவும் வருந்தச் செய்தன. ஆம்! பொங்கலுக்கு முன் நாள், 2011 சனவரி 14 அன்று மாலை, கேரளத்தில் அய்யப்பன் கோயில் மகர விளக்கு வழிபாடு முடித்து மக்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம். பல இலட்சம்பேர் அன்று சபரிமலையில் அடர்ந்து திரண்டிருந்தனர். இவர்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பேர்.

தத்தம் ஊர்களுக்கு விரைந்து திரும்ப வேண்டும் என்று எல்லோருடைய மனங்களிலும் பதற்றம். அந்நிலையில் புல்மேடு என்ற இடத்தில் ஒரே சரக் குந்தில் பல பேர் ஏறியதாலோ அல்லது வல்லுந்துகள் (ஜீப்புகள்) ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தினாலோ கட்டுங்கடங்காத கூட்ட நெரிசலிலோ சிக்கி 102 அப்பாவிப் பொதுமக்கள் ஒரே நேரத்தில் தம் இன்னுயிரை இழந்தார்கள். 16.1.2011 அன்று செய்தித் தாள்கள் வெளியிட்ட சேதியின்படி இறந்தவர்கள் 102 பேர். தமிழ்நாடு 38, ஆந்திரம் 20, கருநாடகம் 33. கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 3 பேர் மட்டுமே.

அய்ப்பனை வழிபடவும், மகர விளக்கைக் காணவும் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்பது கேரள அரசுக்கும், சபரிமலைக் கோயில் பணி களைக் கவனித்து வரும் திருவிதாங்கூர் அறங்காவல் கழகத்துக்கும் (தேவசம் போர்டு) நன்றாகத் தெரியும்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி யிலிருந்து திசம்பர் 26ஆம் தேதிக்குள் மண்டலப் பூசைக்காகவும், சனவரி 14ஆம் தேதி மகரசோதியைக் கண்டு வழிபடவும் தமிழக, ஆந்திர, கருநாடக மாநிலப் பக்தர்கள் கோடிக்கணக்கில் குவிகிறார்கள். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 3 கோடிப் பேர் சபரி மலைக்கு வருகின்றனர். ஓராண்டில் 4 கோடிப் பேர் வருகின்றனர். கேரளத்து நம்பூதிரிகளும், நாயர்களும் அய்யப்பனை அவ்வளவாகச் சீந்துவதில்லை. சபரி மலையின் வருவாயே இந்த மூன்று மாநில ஏமாளி பக்தர்களை நம்பித்தான்.

இவ்வளவு பக்தர்களும் சபரிமலைக்குச் செல்வதற்கு மூன்று வழிகள்தான் உள்ளன. பத்தனாம் திட்டாவில் இருந்து பம்பை வழியாகவும், எரிமேலியில் இருந்து பம்பை வழியாகவும், மூன்றாவதாகக் குமுளியிலி ருந்து வண்டிப் பெரியார் புல்மேடு வழியாகவும் அய்யப்பன் கோயிலுக்கு வரலாம்.

மகரசோதி வழிபாடு முடித்துத் தமிழகக் கோயில்க ளுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் வண்டிப் பெரியார் வழியாகத்தான் திரும்ப வேண்டும். இந்தப் புல்மேடு பாதை கரடுமுரடானது. மிகமிகக் குறுகலானது. இந்தப் பாதையில் அமர்ந்து ஓய்வெடுக்கவோ, ஊர்தி களை நிறுத்தவோ எந்த வசதியும் இல்லை. கடைகள், குளியலறை, கழிப்பிட வசதிகள், உணவுக் கூடங்கள் என்கிற அடிப்படைத் தேவைகள் மருந்துக்கும் இல்லை.

காணிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் வழிப்பறித் திருடனைப் போல் கொள்ளையடிக்கத் தெரிந்த கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் அறங் காவல் குழுவிற்கும் மக்கள் நலனை எண்ணிப் பார்க்க மனமில்லை.

ஏறத்தாழ இதே இடத்தில் பன்னிரண்டு ஆண்டு களுக்கு முன் 1999 சனவரி 14 அன்று இதுபோன்ற தோர் மக்கள் நெரிசலில் சிக்கி 53 பேர் மாண்டு போயுள்ளனர். வழக்கம்போல் அப்போதும் விசாரணைக் குழு வைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரைகள் ஒரு நீண்ட பட்டியலாக அரசிடம் கொடுக்கப்பட்டும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஒப்பீட்டளவில் நோக்கும் போது ஆந்திர அரசும் திருப்பதிக் கோயில் நிர்வாகமும் திருமலைக்கு வரும் பக்தர்களுக்குப் போதிய வசதிகளைச் செய்து தருகிறது. ஆனால் கேரளத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில் பணத்தைக் கொள்ளையடிப்பது என்பதுதான் கொள்கை. குறிப்பாகத் தென்னாட்டின் மற்ற மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள்தான் கண்மூடித்தனமாகத் தங்கள் காசைக் கரியாக்கிவிட்டுத் திரிகிறார்கள்.

குறிப்பாக இன்றுள்ள கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அரம்பத்தனமான ஓர் அழுகுணிப் பேர்வழி. முல்லைப் பெரியார் அணைச் செய்தியில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்துவரும் இரண்டகர். வெள்ளைக்காரக் குன்னிபெய்க் கோடிக்கணக்கான தனது சொந்தப் பணத்தைக் கொட்டிக் கட்டிய அணையின் நீரைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தர முன்வராத ஒரு தரங்கெட்ட அரசியல்வாதி.

இதில் இன்னொரு வெட்கக்கேடு, கேரளத்தை ஆளும் இடதுசாரி முன்னணியில் இவர் இந்திய மார்க்சிஸ்டு பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர். சபரிமலையில் நிகழ்ந்த விபத்துத் தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து விளக்கங்கேட்டு மாநிலக் காவல்துறை, வனத்துறை, திருவிதாங்கூர் கோயில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு அறிவிக்கை அனுப்பிய நீதிமன்றம் ஓர் அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளது.

பொதுவாக நம் நாட்டு நீதிபதிகளும்கூட மதவெறி யை எடுத்து மண்டையில் நிரப்பிக் கொண்ட இந்துச் சனாதனவாதிகள்தான் என்பதை அண்மையில் அளிக் கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பைக் கொண்டே அறியலாம். ஆனாலும் கேரள நீதிபதிகள் இராதாகிருட்டினன், கோபிநாத்து ஆகிய இருவரும் திருவிதாங்கூர்க் கோயில் நிருவாக வழக்கறிஞர் பரனேசுவரிடம் நீதிமன்ற ஆணையாக அல்ல, வெறும் வாய்மொழியாக ஒரு வினாவைப் போடுகின்றனர் :

“மகரசோதியை மனிதர்கள் யாராவது ஏற்றுகிறார் களா? இதுதொடர்பாக என்ன நடக்கிது என்பதை மக்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இதற்குத் திருவிதாங்கூர் கோயில் நிருவாகம் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

இதற்கு விடையளித்த வழக்கறிஞர் பரனேசுவரர் “வானத்தில் தோன்றும் புனிதமான தெய்விக நட்சத் திரங்களில் ஒன்றாக ‘மகரசோதி’ கருதப்படுகிறது. அதற்காக எவ்வகையான விளம்பரத்தையும் கோயில் நிர்வாகம் தருவதில்லை” என்று கூறினார்.

இந்த நீதிமன்ற விவாதங்களைக் கேட்ட ஓர் இடது சாரி முதலமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்? ‘அடடா! மக்கள் மன்றத்தின்முன் கடவுள் மடமையும், மதம் தொடர்பான அடிமுட்டாள்தனங்களையும் தோலுரித்துக் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு அமைந்ததே” எனத் துள்ளிக் குதித்திருக்க வேண்டும். ஆனால் நம்ம ஊர்ப் பொதுவுடைமைத் தலைவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா? தம்மை முதலில் சாதியால் பார்ப்பனர்கள் என்றும், அடுத்துதான் தத்துவத்தால் பொதுவுடைமையர் (கம்யூனிஸ்ட்டுகள்) என்றும் கூறிப் பெருமைப்படும் சனாதனப் பேர்வழிகள் அல்லவா அவர்கள்? அச்சுதானந்தனும் அந்த அழுக்குக் குட்டையில் அகமகிழ்ந்து நீச்சல் அடிப்பவர் தானே?

‘மகரசோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?’ என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் வினாவுக்கு விடையளிக்க வந்த முதல்வர் அச்சுதானந்தன், ‘இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வது தொடர்பாகச் சோதிடர் களிடமோ, அல்லது வானியல் ஆராய்ச்சி அறிஞர்களிட மோ அரசு ஆலோசனை நடத்தாது. சபரிமலையின் கிழக்கே உள்ள பொன்னம்பல மேடு பகுதி முழுவதும் வானில் தெரியும் ‘மகரசோதியைப் புனித ஒளியாக இலட்சக்கணக்கான மக்கள் கருதுகிறார்கள்’ என நெற்றியடியாகச் சொல்லிவிட்டார்.

‘காலங்காலமாய் இந்நாட்டில் கழிப்பிணித் தனமாய்ப் பின்பற்றப்பட்டு வரும் பிற்போக்கு மூடத்தனங்களுக்கு ஆராய்ச்சி அறிவு எதுவும் தேவை இல்லை. மக்கள் நம்பிக்கைகளின் மீது வினா எழுப்புவது, மத உணர்வு களில் தலையிடும் அத்துமீறிய செயலாகும்’ என்று பழைமைவாதிகள் பாடும் அதே பல்லவியைத்தான் முற்போக்குப் பேசும் ஒரு கட்சியின் முதல்வரும் பாடுகிறார் என்றால் இந்த அடிமுட்டாள்தனத்தை என்னென்பது?

‘இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இராமர்தான் கடலுக்குக் கீழே பாலங்கட்டினார். அதை இடிக்காதே!’ என்றும், ‘இராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கேதான் பாபர் மசூதி கட்டினார். ஆகவே அந்த இடந்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடம்!’ என்றும் மதவெறியார்கள் தொடர்ந்து கூச்சலிடுகின்றனர். இக்கூச்சலுக்கு எல்லா வாக்கு வேட்டை அரசியல் கட்சிகளும் அடிபணிவது வியப்பல்ல. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளே வேலிக்கு ஓணான் சாட்சி யாகத் தலையாட்டுவதுதான் கொடுமை! இந்தக் கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையின் மீது வினா எழுப்புவதைத் தடைசெய்தும், அவர்களின் அந்த மதநம்பிக்கைக்கு இசைவளிப்பதுமான இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவின் கீழ் உள்ள பாதுகாப்பே ஆகும். இந்தச் சட்டப் பிரிவு வழங்கியுள்ள இந்தக் கேடான உரிமை இங்குள்ள இசுலாமிய, கிருத்துவக் கடவுள்களுக்கோ அல்லது மற்ற பிரிவு கடவுள்களுக்கோ இல்லை என்பதுடன் உலகின் வேறெந்த நாட்டிலும் இதுபோன்றதொரு காட்டுவிலங்காண்டிச் சட்டம் நடப்பில் இல்லை என்பதையும் மனங்கொள்ள வேண்டும். இங்கேதான் பார்ப்பனியத்தின் வெற்றி அடங்கியுள்ளது. ‘மகரசோதி’ மாண்பு, திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்கு ஒளி, தைப்பூச அருட்சோதிக்காட்சி, வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு போன்ற எல்லாவகை மடமைக்கும் வடிகட்டிய முட்டாள்தனங்களுக்கும் இந்நாட்டு அரசியல் சட்டமே பாதுகாப்பு வழங்குகிறது.

இதே அரசியல் சட்டம் ஆய்வுநோக்கிலான அறிவியல் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும் என்றும் பம்மாத்துப் பேசுகிறது.

1973ஆம் ஆண்டில் எம்.ஆர்.எஸ். நாதன் என்பவர் தலைமையிலான ஒரு பகுத்தறிவாளர் குழு பொன்னம்பலமேடு மலைமுகட்டுப் பகுதியில் ஏறி ‘மகரவிளக்கு’ பற்றிய மருமங்களை ஆய்வு செய்தது. இதுபற்றிக் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சனல் இடமருகு, ‘திருவிதாங்கூர் கோயில் நிர்வா கமும், கேரள மாநில மின்சார வாரியமும் இணைந்து ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து மலைமுகட்டுக்கு நடுவே ஏற்றும் செயற்கையான விளக்குதான் மகர சோதியே தவிர, அஃது இயற்கையாகத் தோன்றும் இறைவனின் அருட்சுடர் அல்ல’ என்ற இக்குழுவின் கண்டுபிடிப்பை எடுத்துவைத்தார்.

1983ஆம் ஆண்டும் இக்குழுவினர் இந்த ஏமாற்றுத் தனமான தில்லுமுல்லுகளை ஒளிப்படங்களாக எடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தாங்கள் அக்காட்சி களை மறைவாக ஒளிந்திருந்து படமெடுத்த போது கேரளக் காவல்துறையினர் தம்மைச் சுற்றிவளைத்துக் கடுமையாகத் தாக்கியதாக அப்போது அச்செயலில் ஈடுபட்ட பிரசன்னதாசன் என்பவர் நினைவுகூர்கிறார் (டெக்கான் கிரானிகல், 18.01.2011, சென்னை பதிப்பு, பக்கம் 2).

1990ஆம் ஆண்டு சனல் இடமருகு மீண்டும் இந்த மகரசோதிப் புரட்டை அம்பலப்படுத்த முன்வந்த போது மறுபடியும் காவல்துறையும், அற்பக் காரணங் களைக் கூறி நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டன என்று கூறுகிறார். இது மக்களின் மூடநம்பிக்கை மட்டுமல்ல. கேரள மாநில அரசு இந்த மோசடித்தனத்தை முன்நின்று நடத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

கேரள எழுத்தாளரும், சபரிமலை அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி தந்திரி கண்டராரு மகேசுவரரு என்பவரின் பேரனும் ஆகிய இராகுல் ஈஸ்வர் அவர்கள் ‘மகர விளக்கு’ மற்றும் ‘மகர சோதி’ என்கிற இரண்டுக்கும் இடையிலாக மக்கள் மனங்களில் உள்ள தவறான புரிந்துணர்வைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மகரசோதி என்பது இயற்கையாய் வானில் தோன்றும் ஒரு விண்மீன்; மகரவிளக்கு செயற்கையாய் ஏற்றப்படும் ஒரு விளக்கு என்பதுதான் தலைமைப்பூசாரி தந்தரியின் கருத்தாகும்.

அறிவுப் பாதையில் மக்களை வழிநடத்த வேண்டிய அரசும்; அரசு சார்ந்த ஊடகங்களுமே பொய்யையும் புனைசுருட்டையும் முதல் போட்டு விற்பனை செய்யும் போது அப்பாவி மக்கள் எப்படி உண்மையை அறி வார்கள்.

சபரிமலை நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழ கத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கடந்த 27 ஆண்டுகளாக அய்யப்பன் மலைக்குப் போய் வந்து கொண்டிருந்த குருசாமி ஆவார். இதே ஆண்டில் இரண்டாவது முறையாகத் தன் மகன் லோகேசையும் உடன் அழைத்துச் சென்ற போதுதான் பரிதாபமாகச் செத்துப் போனார். ஆனால் கேசவனின் உறவினர்கள் என்ன சொல்கிறார்கள்?

“இது கடவுளின் குற்றமல்ல. கட்டுங்கடங்காத பெருங்கூட்டத்தை அனுமதித்துவிட்டு, போதுமான சாலையோ, பாதுகாப்பு வசதியோ, மின்சார வசதியோ செய்துதராத கேரள அரசின் குற்றம்” என்று மிக இயல்பாகச் சொல்கிறார்கள். படிக்காதவர்கள் மட்டுமல்ல படித்த முட்டாள்களும் இதற்குப் பகவானைக் குற்றம் சொல்லக்கூடாது என்றுதான் கூறுகிறார்கள்.

மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி

பீடத்திலே சாய்ந்தீரே!

மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்

மூலப் படுத்தக் கை ஓங்குவீர் - பலி

பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ

நாடு நமக்கென்று வாங்குவீர்!

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் அடிகளைத்தான் உரக்கப் பாட வேண்டியுள்ளது.