அன்புள்ள தோழர்களே!

எட்டாண்டு காலமாக எனது இரண்டு கண்களிலும் அரைகுறைப் பார்வைதான். அதைக்கொண்டே தொடர்ந்து எழுதவும், படிக்கவும் ஓரிரு சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சி யில் கலந்துகொள்ளவும் தோழர்களின் ஊக்குவிப்புடன் நவீன தொழில்நுட்ப சாதனங்களும் உதவின. சென்ற ஆண்டு எனது உடல்நிலையில் பெரும் சரிவு ஏற்பட்டு, சில மாதங்கள் படுத்தப் படுக் கையாகவே இருந்ததோடு, எனது இடது கண் பார் வையையும் முற்றிலுமாக இழந்தேன்.

இந்தச் சூழலில் தான் எனது வாழ்நாளில் எனக்கு அறிவொளியூட்டிய - அது கடுகளவானதாகவோ, மலையளவானதாகவோ இருக்கலாம்-கிட்டத்தட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து எனது கட்டுரை களிலும் நூல்களிலும் அவர் களது பெயர்களைப் பதிவுசெய்யத் தொடங்கினேன். விட்டுப்போன பெயர்கள் விரைவில் வெளிவரும் மூன்று நூல்களில் இடம்பெறும்.

என்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் காட்டுகிற, எனது நீண்டகால நண்பர்களும் தோழர்களும் என்னைப் பற்றிய ஓர் ஆவணப் படத்தைத் தயாரிக்கும் முயற்சி யில் இறங்கிய போது, எனக்கு அது மகிழ்ச்சியை அல்ல; வெட்க உணர்வையே தந்தது. இந்த ஆவணப்படத்தில் இறுதி செய்யப்படாத வடிவம் எனக்குப் பல மாதங்களுக்கு முன்பே அனுப்பப்பட்டிருந்தது என் றாலும் அதை நான் இதுவரை பார்க்கவில்லை; என் குடும்பத்தினருக்கும்கூட அதைக் காட்டவில்லை.

எனது சொந்த வாழ்க்கைக் குறிப்புகளை அனுப்புமாறு எனது அருமைத்  தோழர் குறிஞ்சி எண்ணற்ற முறை என்னிடம் தொலைப்பேசி வழியாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் விடுத்து வந்த வேண்டு கோளுக்கு ஏதேதோ சாக்குப் போக்குகள் கூறி, உடனடியாக செவிமடுக்காவண்ணம் எனது வெட்க உணர்வு தடுத்து வந்தது. ஓர் ஆவணப்படத்தின் நாயகனாக இருக்கும் தகுதி எனக்கு உள்ளதா?

எனது அரசியல் வாழ்க்கை 13ஆம் வயதிலேயே தொடங்கியது-தி.மு.க. ஆதரவாளனாக, உறுப்பினனாக 21ஆம் வயதில்தான் மார்க்சியம் என்னை ஈர்க்கத் தொடங்கியது. பொதுவுடைமை இயக்க அரசி யல் வாழ்க்கையைத் தொடங்க மேலும் நான்காண்டுகள் தேவைப்பட்டன.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் அந்த இயக்கத்தில் கட்சி உறுப்பின னாகவோ, சக பயணியாகவோ, ஆதுரவாளனாகவோ, ஏன், அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஓரிரு குழுவினரின் கருத்துப்படி ‘கம்யூனிஸ்ட் விரோதி’யாகவும், ‘ஏகாதிபத்திய அடி வருடியாகவும்’ கூட இருந்திருக்கிறேன். என்னைப் பற்றிய இத்தகைய சித்தரிப்புகளை வலதுசாரி இந்துத்துவச் சக்திகளும் பரப்பி வரு வதைப் பார்த்திருக்கிறேன். சிலவேளை என் மனம் புண்படுவ துண்டு.

ஆனால், துவண்டு போய் முற்றிலும் செயலற்றவனாக ஆகிவிடாமல் தடுத்தவை, மானுட குலத்தின் விடுதலைக்கான தத்துவங்களையும் செயல்பாட்டு முறைகளையும் நமக்கு வழங்கிச் சென்றுள்ள மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்க்கையும் அவர்களது பணி களும்தான்.

எனது எழுத்து வாழ்க்கைக்கும் இப்போது வயது 50. எனது ஆக்கங்கள் நமது சமுதாயத்தின்மீது எத்தகைய தாக் கத்தை ஏற்படுத்தின? எனது வாசகர்கள் யார்? நமது இலட்சியங்கள் அடுத்தடுத்துத் தோல்வி களை மட்டுமே தழுவிக் கொண்டிருக்கையில், தொடர்ந்து எழுதுவதில் என்ன பயன்? என்ற கேள்விகள் என் மனதைக் குடைந்து கொண்டிருக் கின்றன.

சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பல்வேறு நாடு களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்துக்கும் ஏற்பட்டுள்ள தோல்விகள், பொதுவுடைமை இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகள், இந்தியப் பொதுவுடைமை இயக்க வாழ்வில் எனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்கள், மனித உரிமை இயக்கத்தில் இயன்ற அளவு செயலாற்றுவதற்கான வாய்ப்புகள், அம்பேத்கரும் பெரியாரும் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஆகியவை என்னிடம் சகிப்புணர்வை வளர்த்தன.

தனிப்பட்ட முறையிலோ, அரசியல் வகையிலோ வன்மமும் வெறுப்புணர்வும் என் உள்ளத்தில் வளர்வதைத் தடுத்தன.

ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தின், குறிக்கோளின் அடிப்படை யில் பல்வேறு கருத்து நிலைகளைக் கொண்டிருப்பவர் களுடன் இணைந்து செயலாற்றுவதால் சமுதாயத்திற்கு ஏற்படும் நற்பயன்களை என்னால் உணர முடிந்திருக்கிறது. இந்த அணுகு முறைக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக இருந்தவர் பெருஞ்சித்திரனார். இது எனக்கு நிறமாலை போன்ற நட்பு வட்டத்தை உருவாக்கியிருக்கின்றது.

மிகுந்த மனசோர்வு ஏற்படும்போது இலக்கியத்திலும் இசையிலும் புகலிடம் தேடுவேன். நல்ல படைப்பிலக்கிய வாதியாகவோ, இலக்கியத் திறனாய் வாளனாகவோ வளர வேண்டும் என்பதே எனது இளமைக்காலக் கனவாக இருந்தது.

ஆனால், எனது இரத்தத் திலேயே கலந்திருந்த அரசியல் என்னை வேறு பாதையில் செலுத்தியது. முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என என்னால் விரும்பப்பட்ட பல செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆனால், இதில் எனக்குக் கடுகள வேனும் வருத்தம் இல்லை. இது தான் வாழ்க்கை.

எனினும், தற்போதைய இந்திய, தமிழகச் சூழல் என் உள்ளத்தில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. முதலாளியச் சமுதாயத்தில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் உரிமைக் குரலை மிகவும் வரம்புக்குட்பட்ட வகையில் மட்டுமே எதிரொலிப்பதற்கான அரங்குகளில், அரசியல் களங்களில் ஒன்று என்பதற்கு மேல் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத் துக்கும் நான் எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை.

எனினும், அண்மைய தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராகத் தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்னும் உணர்வை எனக்கு ஏற்படுத்துகின்றன.

தமிழக மக்களின் உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய உணர்வை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது? இந்திய அளவில் பா.ச.க., காங்கிரஸ்; தமிழக அளவில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தால் போதும் என்று கார்ப்பரேட், வணிக, ரியல் எஸ்டேட், சாராயச் சக்திகள் விரும்புகின்றன.

இந்தியாவில் அரசியல் மேலாண்மையைப் பெற்றுள்ள பாசிச சக்திகளைப் பற்றிப் பேசுகின்றோம். பண்பாட்டுத்தளத்தில் அவை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிற்போக் குத்தனமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே நாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. இந்திய பாசிசம், அமெரிக்காவின் தலைமையிலுள்ள உலக ஏகாதிபத்தியத்தின் கைகளை வலுப்படுத்துவதில், மன்மோகன் வகுத்த பாதைக்குக் காங்கிரீட் போட்டு வருகின்றது.

மன்மோகன்சிங் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட அணுஉலை ஒப்பந்தத்தை வலுப்படுத்து வதில் தொடங்கி, உலக அளவிலான ஏகாதிபத்திய இராணுவத் தொலைநோக்குத் திட்டத்தில் இந்தியா முக்கியப் பாத்திரம் வகிக்கும் வகையில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இருதரப்பு, முத்தரப்பு இராணுவ ஒப்பந்தங்களைச் செய்து கொள் வதிலும், அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுடன் மிக நவீன, வலுவான ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதிலும் இன்றைய பாசிச அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

சீனாவைத் தனிமைப்படுத்தி, அதன் கடல் மார்க்கங்களை அடைத்து, கடல், வான், தரை வழியாக அதன் மீதான ஆக்கிரமிப்பை நடத்துவதற்கும், தேவைப்பட்டால் அதன்மீது அணு ஆயுதங்களை ஏவவும் அமெரிக்கா உருவாக்கியுள்ள திட்டத்தில் இந்திய பாசிச அரசாங்கம் மிகுந்த விருப்பத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறது.

சீனா மீதான போர் வெடிக்குமானால், அந்த நாட்டில் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் ஏற்படும் கொடூரமான பின்விளைவுகளை, அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாரதூரமான பாதிப்புகளை எண்ணிப் பாருங்கள்.

எனவேதான், தமிழகத்திலும் இந்திய அளவிலும் பரந்து பட்ட பாசிச-ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியைக் கட்ட வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது.

இந்த இரண்டு சக்திகளையும் எதிர்ப்பவர்கள் யாரோ அவர்க ளுடன் மட்டுமே நாம் அரசியல், சமூக, பண்பாட்டுக் கூட்டணிகள் அமைக்க வேண்டும். இது தேர்தல் கூட்டணி அல்ல; அரசியல் கூட்டணி.

தோழர்களே, இடதுசாரிக் கண்ணோட்டமும், பாசிச எதிர்ப்புணர்வும் கொண்டிருந்த காலஞ்சென்ற பிரெஞ்சுத் திரையுலக மேதை ழான் ரெனுவா (Jean Renior), மிகுந்த தயக்கத்துடனேயே தன் - வரலாற்றை எழுதினார்.

அதில் அவர் ‘நான் யார்?’ என்ற கேள்விக்குப் பதில் தருகிறார்; “நாம் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தத் தனி நபருக்குள் இருப்பவர்கள் மழலையர் பள்ளியில் படிக்கும் போது அவனுக்குக் கிடைத்த நண்பர்கள்; அவன் வாசித்த முதல் கதையின் நாயகன்; ஏன், அவனது ஒன்றுவிட்ட சகோதரன் யூஜி யின் நாயும்தான்.

நாம் நம் ஊடாக மட்டுமே வாழ்வதில்லை; நமது சூழல் நம்மை வடிவமைக்கிறது. நான் இப்போது யாராக இருக்கின்றேனோ, அவனை உருவாக்கு வதில் ஒரு பாத்திரம் வகித்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவுகூர முயன்றுள்ளேன்.”

நினைவுகூரும் செயலை, எனக்குப் பதிலாக, இந்த ஆவணப்படம் மேற்கொண்டுள்ளதாகக் கருதி, உங்கள் அனைவரையும் தலைசாய்த்து வணங்குகிறேன்.