*     முதலாளியச் சமூக முறையை நிலைநாட்டுதல்.

*     நால்வருண அடிப்படையிலான சாதியச் சமூக அமைப்பு முறையைக் கட்டிப் பாதுகாக்கத் திட்ட மிடுதல்.

*     போலி மக்கள்நாயகத்தில் புதுமுறைச் சத்திரிய வகுப்புகளை உருவாக்கிப் பாதுகாத்தல்.

*     பிராமணத் தலைமையில் பிராமண (அ) தர்மத் தை நிலைநிறுத்துதல்.

*     சமற்கிருதத்தையும், அதில் கூறப்பட்டுள்ள சனாதன தர்மத்தையும் பாதுகாத்தல்.

*     இந்து எனப்படும் வேத மதத்தை இந்தியாவின் அதிகார அரச மதமாக்குதல்.

*     சூத்திரராகிய உடல் உழைப்பாளரை நிமிரவிடாமல் கண்காணித்தல்.

*     உலகளாவிய முதலாளிய அமைப்பைப் பாதுகாத்து, அதற்கு இணக்கமாயிருந்து தனது நலனைப் பேணிக் கொள்ளுதல்.

*     சமற்கிருதத் தலைமையின்கீழ் மக்கள் மொழிகளை அடக்கி வைத்தல்.

*     சமற்கிருதச் சார்பு மொழியான இந்தியை ஆளு மைக்குக் கொண்டு வருதல்.

- இந்தியாவின் வலச்சார்புத் தீவிர வெறியர் களாகிய இந்துத்துவக் கொடியர்களின் கொள்கை முழக்கங்களும், இலக்குகளும் இவையே.

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், பி.ஜே.பி., சிவசேனை, இந்து முன்னணி முதலான காவி இயக்கங்கள் எல்லாம் மேற்குறித்த இலக்குகளை அடைவதற்காகக் குருதி வெறிகொண்டு அலையும் ஓநாய்களாகும்.

காந்தியடிகள் முதலான எண்ணற்ற நல்லோர்களின் உயிர்களைக் குடித்த இந்த ஓநாய்களின் குருதி வெறி இன்றும் அடங்குவதாய் இல்லை.

இந்திய ஒன்றியத்தின் ஆட்சியை மிகப் பெரும் பான்மை வலுவுடன் இவர்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, தங்கள் இலக்குகளை அடைவதற்காக, வலுவான வெறியுடன் இவர்கள் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

சமற்கிருதத்தைப் பரப்புதல், இந்தியைப் பரப்புதல், அரசு திட்டங்களுக்கெல்லாம் இந்தியில் பெயரிடல், உழவர்களின் நிலங்களைப் பிடுங்கிப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளித்தல், வேளாண் தொழிலை நசியச் செய்தல், மதவெறியை வளர்த்தல், இசுலாமியர்க்கும் கிறித்துவர்க்கும் எதிரான கருத்துகளைப் பரப்புதல், முற்போக்கு, சமநெறி இயக்கங்களையும் இடது சாரி இயக்கங்களையும் இழிவுபடுத்தவும் சீர்குலைக்கவும் திட்டமிடுதல், சாதி, மத மோதல்களை உருவாக்கி ஆதாயம் தேடுதல், வழக்கமான கோயில் திருவிழாக் களைத் தங்களின் கொள்கை விழாக்களாக மடை மாற்றம் செய்தல், மொழிவழித் தேசியச் சிந்தனை களை-இயக்கங்களை இழிவுபடுத்தவும் வஞ்சனையால் சீர்குலைக்கவும் திட்டமிட்டு வேலை செய்தல், பகுத்தறிவாளர்களை, ஆரிய சனாதன மறுப்பாளர்களை, இடதுசாரிச் சிந்தனையாளர்களைப் படுகொலையின் மூலம் ஒழித்துக் கட்டுதல் என இப்படி நீண்டு கொண்டிருக்கின்றன இவர்களின் செயல்பாடுகள்.

இவர்களின் சிந்தனைக்கும் செயலுக்குமான தடம் இன்று நேற்று அமைக்கப்பட்டதல்ல. அது மனுநீதி உருவாக்கப்பட்ட காலத்திலேயே, அர்த்தசாத்திரம் வரையப்பட்ட காலத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டது.

இவர்களின் பயணம் திசைமாறாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை, காந்தி படுகொலையிலிருந்து கல்புர்க்கி படுகொலை வரை தெளிவாகக் காணலாம்.

“ஆதிசங்கரரின் மக்கள் விரோதத் தத்துவம்” என்னும் நூலை எழுதிய தோழர் கே.எஸ். பகவானை இவர்கள் அடுத்த இலக்காக வைத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்திலும், கரு நாடகத்திலும், தமிழகத்திலும் இவர்களின் இலக்கு களும் வேலைத் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அறநோக்கு உடையவர்கள் அமைதி வழியில் செயல்பட்டு வருவதால், அறம்பிறழ்ந்த நெஞ்சி னர் அடிதடிப் போக்கிலும் அழித்தொழிப்பு வேலை யிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆழ்ந்து கற்ற சான்றோர்கள், உண்மைகளை மாசு அகற்றி உலகிற்குக் காட்டுவோர், பொய்களையும் மூடநம்பிக்கைகளையும், தம் எழுத்துகளால் பொசுக்கு வோர், மனித சமத்துவத்தை நிலைநாட்டும் படைப் பாளர்கள், மனிதநேயர்கள், மெய்வரலாற்றறிஞர்கள், சாதி, மத மூடநம்பிக்கைகளின் எதிர்ப்பாளர்கள், மக்கள் கலைஞர்கள், கவிஞர்கள், ஒவ்வொரு நாளும் கொன் றொழிக்கப்படுவது நீதியும் நேர்மையும் கொண்ட சமூக வாழ்க்கையின் மீது விடுக்கப்படும் அறைகூவலாகும்.

பொறுத்தார்க்கு உரியதன்று புகழ். இவர்களை ஒறுப்பார்க்கே உரியது என்றும் புகழும் அறமும்.

எம்.எம். கல்புர்க்கி!

குருதி வெள்ளத்தில்  வீழ்ந்த போதும், தன் புகழால் எழுந்து உயிர்பெற்று உலவும் முற்போக்குச் சிந்தனை யாளர்! முற்போக்கு இலக்கியப் படைப்பாளர்! பகுத் தறிவு எழுத்தாளர்! அநீதிகளின் எதிர்ப்பாளர்! பிறவிக் கலகக்காரர்! அச்சம் என்பதை அறியாதவர்! கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக்கழகத் தின் முன்னாள் துணைவேந்தர்! கன்னட இலக்கியத் திற்குப் பகுத்தறிவு ஒளியேற்றியவர்!

எழுத்துலகில் இவர் எப்படிப்பட்டவராக வாழ்ந்தார் என்பதை சர்ஜூகட்கர் என்னும் இதழாளர் இந்தியன் எக்சுபிரஸ் இதழில் இப்படிக் குறிப்பிடுகிறார் : “மதத் தைப் பற்றிய இவருடைய அணுகுமுறையும், பகுத்தறி வுச் சிந்தனைகளும், படைப்புகளும் பேச்சுகளும் பழமை யாளர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்தன. கல்வி, கலை, இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் இவர் பலரோடும் முரண்பட்டு நின்றார்.”

கருநாடகத்தில் வாழ்ந்த சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளரான பசவண்ணரின் மருமகன் சன்னபசவண் ணர். இவரைப் பற்றி 1984இல் கல்புர்க்கி எழுதிய ஒரு கட்டுரை பெருங்கொந்தளிப்பை உருவாக்கியது. லிங்காயத்துகள் கல்புர்க்கியின் வீட்டின்முன் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். வீரசைவம் பற்றி யும் லிங்காயத்துகள் பற்றியும் இவர் கூறிய கருத்துகள் சச்சரவை உருவாக்கின. கல்புர்க்கி குடும்பத்தையே வீரசைவத் தலைவர்கள் சமூகத்திலிருந்து தள்ளி வைத்தனர்.

பஞ்ச பீடாதிபதிகளும் இவரைக் கடுமை யாகக் கண்டித்தனர். கல்புர்க்கி, மடங்களையெல்லாம் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இரண் டாண்டுக்கு ஒருமுறை மடாதிபதிகளை வேறு மடங் களுக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்றார். கடவுள் சிலைகளின்மேல் சிறுநீர் பெய்யலாம் என்று யு.ஆர். ஆனந்தமூர்த்தி கூறியதை இவர் வரவேற்ற போது, இந்துமத வெறியர்கள் “இவனைத் தீர்த்துக் கட்டுங் கள்” என்று கூச்சலிட்டார்கள்.

சாதிகளில்லாத, மதங்களின் கொடுங்கோன்மை இல்லாத, அன்பு நிறைந்த சமத்துவ சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்காகத் தம் எழுதுகோலைப் பயன்படுத்தினார். மூடர்களையும், சாதி, மத வெறியர்களையும், மக்களி டையே பகைமையையும் ஏற்றத்தாழ்வையும் விதைப் போரையும் ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போரிட்டார். சங் பரிவாரங்கள் பற்றித் துணிவுடன் எதிர்த்து எழுதி வந்தார்.

கல்புர்க்கிக்குக் கொலை அச்சுறுத்தல் வந்து கொண்டே இருந்தது. எனவே மாநிலக் காவல்துறை இவருக்குத் துமுக்கிப் படைப் பாதுகாப்பை அளித்திருந்தது. ஆனால் கல்புர்க்கி அண்மையில் அதனைத் திருப்பி அனுப்பிவிட் டார். “என் சிந்தனையில் நான் தெளிவாக இருக்கிறேன்; யாருக்கும் அஞ்சப் போவதில்லை” என்று அறிவித்தார்.

கன்னட மக்களின் பண்பாட்டுத் தலைநகர் என்று கருதப்படும் வட கர்நாடகத்தின் தார்வாட் நகரில் உள்ள நமது சௌஜன்யா இல்லத்தில், 30-8-2015 ஞாயிற்றுக் கிழமை காலை நண்பர்களோடு தொலைபேசியில் உரையாடிவிட்டு 8.40 மணிக்கு செய்தித்தாள்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது வாயிற்கதவின் அழைப்புமணி ஒலித்தது.

பேராசிரியரின் துணைவியார் உமாதேவி எழுந்து சென்று கதவைத் திறந்தார். இளைஞர்கள் இருவர் நின்று கொண்டு வணக்கம் கூறினர். ஒருவர் கருநிறச் சட்டையும், கருப்புக் கால்சட்டையும் அணிந்திருந்தார். மற்றொருவர் நீலநிற உடுப்பில் காணப்பட்டார். “நாங் கள் பேராசிரியரின் மாணவர்கள், சாரைப் பார்க்க வந்துள்ளோம்” என்றார்கள். மூன்றாவதாக ஒருவன் சாலையில் இருசக்கர ஊர்தி அருகே நின்றுகொண்டி ருந்தான்.

இளைஞர்கள் கூறியது காதில் விழுந்ததும் பேரா சிரியர் முனைவர் கல்புர்க்கி எழுந்து இளைஞர்களை நோக்கி வந்தார். மெல்லிய புன்னகையை உதடுகளில் தவழவிட்டு, சமூகநலத்தையே சிந்தித்த சிந்தனையா ளரை எளிதில் ஏமாற்றிய கொடியவர்கள், திடீரென்று துமுக்கியை எடுத்து அவரை நெற்றியிலும் தலையி லும் மார்பிலும் சுட்டார்கள். பேராசிரியர் குருதி வெள் ளத்தில் சரிந்தார். கொடியவர்கள் ஒரு நொடியில் இரு சக்கர ஊர்திகளில் ஏறி ஓடி மறைந்தார்கள்.

வெடிஓசை கேட்டதும் மனைவி உமாதேவியும், மகள் ரூபதர்சியும் அவரது மகனும் ஓடிவந்தார்கள். பேராசிரியரை மருத்துவமனைக்குக் கொண்டு சென் றார்கள். ஆனால் வழியிலேயே அவர் உயிர்ப்பு ஒடுங்கிவிட்டது.

காட்டுத் தீயாக இச் செய்தி பரவியது. மக்கள் திரண் டார்கள்; துடித்தார்கள். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள் கூடினார்கள்; ஆறாத் துயர மடைந்தார்கள். கொலையாளிகளைக் கண்டித்துக் குரல் எழுப்பினார்கள். காவல்துறை உசாவலுக்கு ஆணை யிட்டது. கன்னட இலக்கிய உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பகுத்தறிவுப் பேராசிரியரின் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார். முன்னாள் தலைமை அமைச்சர் தேவெகவுடாவும், அரசியல் தலைவர்களும் மாணவர்களும், பேராசிரி யர்களும் பொதுமக்களும் இறுதி வணக்கம் செலுத்தி னர். 31-8-2015 திங்கட்கிழமை முழு அரசு மரியாதை யுடன் கல்புர்க்கியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பேராசிரியர் கல்புர்க்கியின் படுகொலை இலக்கியப் படைப்பாளர்களை அதிரச் செய்துள்ளது. கன்னட இலக்கிய உலகம் உண்மையைத் தேடும் படைப்பாளி ஒருவரை இழந்துவிட்டோம் என எண்ணுகிறது.

“கல்புர்க்கி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு என்பது, அறிவாளர்கள், உண்மையை ஆராய்வோர் உள்ளங்களில் நடுக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்து வதற்கான ஒரு முயற்சியே” என்று மைசூர்ப் பல் கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஜாவரெ கவுடா கூறியுள்ளார்.

“இந்தக் கொலையானது, கருத்தை வெளியிடும் உரிமையின்மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல். எனவே, எனக்கு வழங்கப்பட்ட பம்பா விருதினையும் அத்தோடு வழங்கிய ரூபாய் 3 இலட்சத்தையும் முதலமைச் சரிடமே திருப்பித் தரப்போகிறேன்” என்று அறிவிக் கிறார், புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் “சாம்பா” என்கிற சந்திரசேகர பாட்டீல். பம்பா விருது கருநாடகத் தின் தலையாய இலக்கிய விருதாகும்.

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான தேவனூர் மகாதேவா “குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தொய்வோ தோல்வியோ ஏற்படுமானால், அது குற்றச் செயல்புரி வோரை ஊக்குவிக்கும் தவறான ஒரு செய்தி அறிவிப்பாக முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மதவெறிப் பிற்போக்குக் கொடியவர்களுக்குக் கொலைச் செயல் என்பது புதியதல்ல. அறிவாளரின் குரலை அடக்குவதற்கு அவர்கள் கொலைச் செயலை எளிதாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ‘அக்னி அங்கூர்’ என்னும் கிழமை இதழின் ஆசிரியரான லிங்கண்ணா சத்யம் பிடே, “சுவாமிஜிகள்” பலரைப் பற்றி இதழில் வெளுத்து வாங்கியவர். ஆனால் 2012 சூலை 25 அன்று பசுவேசுவர மடம் ஒன்றின் எதிரே சாக்கடைக் குழியில் அவர் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

ஆர்.எஸ்.எஸ். முதலான மதவெறிக் கும்பலுக்கு எதிராகவும், அவர்கள் பரப்பும் பொய்களுக்கு எதிராக வும் தம் எழுதுகோலைப் படைக்கலமாக ஏந்தி இயங்கி வந்த மராட்டியப் பகுத்தறிவு எழுத்தாளர்களான முனைவர் நரேந்திர தபோல்கர் அவர்களும், கோவிந்தராவ் பன்சாரே அவர்களும் கல்புர்க்கி கொல்லப்பட்ட அதே பாணியில் கொலை செய்யப்பட்டவர்கள்.

நரேந்திர தபோல்கர் புனேயில் இரண்டு ஆண்டு களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். கோவிந்தராவ் பன்சாரே சென்ற ஆண்டு கோல்காப்பூரில் கொலை செய்யப்பட்டார்.

“நம்பிக்கையின் அடிப்படையிலான கொடிய பழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதற் கான சட்டம்” மராட்டிய மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு இடைவிடாமல், பின்வாங்காமல் போராடியவர் நரேந்திர தபோல்கர். இதனால் காவிக்கூட்டம் இவரை “ஒழித்துக்கட்ட வேண்டிய முதல் எதிரி”யாகப் பட்டிய லிட்டது. மக்கள் நாயகத்திற்காகவும், மதச்சார்பற்ற அரசியல் வலுப்பெறுவதற்காகவும், சமூகத்தில் இடது சாரிச் சிந்தனைகளை ஊட்டி வளர்ப்பதற்காகவும், சாகும் வரை களத்தில் நின்ற போர் வீரர் இவர். “மூட நம்பிக்கை ஒழிப்புக் கழகம்” என்ற ஒன்றை நிறுவி, சாமியார்கள், சாதி, மத வெறியர்கள் ஆகியோருக்கு எதிராக வலிவான இயக்கத்தை நடத்தியவர்.

தோழர் கோவிந்தராவ் பன்சாரே தனியார்மய தாராளமயப் பொருளியல் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். மதவெறிக்கும் மத அடிப் படைப் பார்வைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், வலதுசார் அரசியலுக்கும் எதிராக மக்களிடையே இடைவிடாமல் கருத்துப் பரப்பல் செய்து வந்தவர்.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்க இந்துத்துவ வெறியர்கள் முயன்றனர். கோட்சே உண்மைத் தேசப்பற்றாளன் என்று கூக்குர லிட்டனர். கோட்சேயின் சிந்தனைகள் எத்தகையவை என்பதைக் கோவிந்தராவ் பன்சாரே மக்களுக்கு விளக்கிச் சொன்னார். அக்கொடியவனுக்குச் சிலை வைக்க அனுமதியோம் என்று நேருக்கு நேராகப் பேசினார்.

இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றியவர். தொழிலாளரின் உரிமைகள் யாவை, உழைப்பாளிகள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற பொருளியல் கொள்கை எது, புதிய பொருளியல் கொள்கையால் உண்டாகும் கொடிய விளைவுகள் என்னென்ன என்பதையெல் லாம் எளிமையாக விளக்கி ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தவர்.

சாதியத்தை எதிர்த்துப் போராடிய மகாத்மா சோதிராவ் புலே, சாகுமகாராசா, அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளை வீறுடன் உள்வாங்கி மக்களிடையே பரப்பிய பொதுவுடைமைத் தலைவர் இவர். போராட்டங்களால் அநீதிகளை ஒழிக்க முடியும் என்பதை மக்கள் மனங்களில் பதியச் செய்தவர் இவர். அனைத்து ஒடுக்குமுறைகளை யும் எதிர்த்து இயங்கிய சிந்தனையாளர்; களப் போராளி. வீரன் சிவாஜியின் உண்மை வரலாற்றை உலகுக்குக் காட்டியவர்.

இவர் எழுதிய “யார் அந்த சிவாஜி?” மராத்தியி லும் ஆங்கிலத்திலும் இரண்டு இலக்கம் படிகள் விற்றுத் தீர்ந்தன. அண்மையில் “மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன்” என்னும் தலைப்பில் அந்நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது (75982 63236 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு இந்த நூலைப் பெறலாம்). அந்த நூல் காவிக் கூட்டம் வரைந்து வைத்த பொய் ஓவியங்களைக் கிழித்து வீசி, உலகிற்கு உண்மையைத் தெளிவாகக் காட்டியது.

சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும், உண்மைக் காகவும் இடைவிடாது போராடிய போராளியாக வாழ்ந்த கோவிந்தராவ் பன்சாரே அவர்களைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட காவிக்கும்பல், 2015 பிப்ரவரி 16ஆம் நாள் காலையில் நடைப்பயிற்சியை முடித்து அவர் வீட்டுக் குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொன்றது. கல்புர்க்கி கொல்லப்பட்ட அதே பான்மையில் முன்பின் அறியப்படாத ஆட்கள் இக்கொடுஞ் செயலைச் செய்து முடித்தனர்.

ஆதிசங்கரனின் உண்மை உருவத்தைத் தோலுரித்த பேராசிரியர் கே.எஸ். பகவான் அவர்களை இந்தக் கும்பல் அடுத்த இலக்காகக் கொண்டிருக்கிறது. இவர் எழுதிய, “சங்கராச்சார்ய மத்து பிரதிகாமித்தன” என்னும் கன்னடக் குறு நூல் காவி உலகில் புயலைக் கிளப்பியது. (இதன் ஆங்கில வடிவத்தைத் தோழர் வீ.செ. வேலி றையன் தமிழில் மொழிபெயர்த்தார். கரூர் வழக் கறிஞர் பூ.அர. குப்புசாமி அவர்கள் 30 ஆண்டு களுக்குமுன் “ஆதிசங்கரரின் மக்கள் விரோதத் தத்துவம்” என்ற தலைப்பில் இதனை வெளியிட்டார்.)

உலகக் கொள்ளைக் கும்பலுடனும், உள்நாட்டுக் கொள்ளைக் கும்பலுடனும் கைகோத்துக் கொண்டு, சாதி மதவெறிக் கூட்டம் அலைந்து கொண்டி ருக்கிறது. கருத்தைக் கருத்தால் எதிர்க்கும் வல் லமை அதற்கில்லை. சமத்துவத்தையும் மக்களுக் கான நீதியையும் எவர் பேசினாலும் அவரை அழித்தொழிப்பது அதன் இலக்கு ஆகும்.

தோழர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்தராவ் பன்சாரே, எம்.எம். கல்புர்க்கி ஆகியோர் சிந்திய குருதி யிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிர்த் தெழுகிறார்கள். அவர்களின் புரட்சிச் சிந்தனைகள் புதிய ஆற்றலையும் எழுச்சியையும் ஏந்தியுள்ளன. இவர்கள் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள் என்பதை ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டமும் உற்று நோக்கத் தொடங்கியுள்ளது.

கருஞ்சட்டைத் தலைமகனின் நெருப்புச் சிந்தனை களால் சூடேற்றப்பட்ட இத்தமிழ் மண்ணில் கால்பதிக் கத் துடித்துக் கொண்டிருக்கிறது மதவெறிக் கும்பல்.

பகுத்தறிவாளர்களை, இடதுசார் சிந்தனையாளர்களை, சமநெறியும் நேச வாழ்வும் துளிர்ப்பதற்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களை, மனிதநேயர்களை இந்தப் படுகொலைகள் தட்டி எழுப்பியிருக்கின்றன.

சாதி, மத வெறியையும் சனாதன வர்ண அதர்மத் தையும் வேரறுப்பதே புரட்சியாளர்களின் முதற்கடமை.

உயிரைப் பொருட்டாக மதியாமல், இடைவிடாது, பகுத்தறிவு செழிக்கவும் சமநெறி ஓங்கவும் எண்ணியும் எழுதியும் போராடியும் வந்த மாமனிதர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்தராவ் பன்சாரே, எம்.எம். கல்புர்க்கி முதலியோர்க்குத் தமிழகத்து முற்போக்கு இயக்கங்கள் அனைத்தின் வீரவணக்கம் உரியது.

தேசிய இன உரிமைக்காகப் போராடுவோர் ஒவ்வொருவரும், அனைத்துத் தேசிய இனங்களின் பொது எதிரியாகிய ஆரிய சனாதன வர்ண சாதி அதர்மத்தை வேரறுத்திடப் போராட முன்வர வேண்டும். பொறுத்திருந்தால் வாராது புகழ்!