இந்திய அரசு வெளியிட்டுள்ள நாணயத்தில் ஒரு ரூபாய் வரை எந்தப் பொருளும் (கடலை மிட்டாய் உள்பட) வாங்கமுடியாது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் பைசா பைசாவாக (7, 8, 9, 11, 13, 16...) பைசாவாக) உயர்த்தி நுகர்வோரிடம் வசூல் செய்கின்றனர். மதிப்பற்ற பைசாவிற்கு மத்திய அரசு மதிப்பு கொடுத்து விலை உயர்த்தியுள்ளது. “நாங்கள் (பா.ச.க.) ரூபாய் கணக்கில் விலையை உயர்த்தவில்லை. பைசா பைசாவாகத்தான் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளோம்” என்று தம்பட்டம் அடிக்கும் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 100 சதம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வால் விலைவாசி அதிக அளவில் உயர்ந்துள்ளது. அனைத்து விலை உயர்வும் பாதிப்பும் நுகர்வோர் தலையில் இடியாய் விழுகிறது. கையூட்டு வாங்கும் கயவர்கள்கூட விலைவாசி உயர்வைக் காரணம் கூறி, கூடுதல் கையூட்டுக் கேட்கின்றனர். கல்விக் கூடங்கள் கூட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு சேர்க் கைக் கட்டணத்தை விலை உயர்வைக் காரணம் காட்டி அளவில்லாமல் வசூல் செய்கின்றனர்.

நடுத்தர மற்றும் கீழ்நிலையில் வாழும் அனைவரும் தாங்கள் விரும்பிய எதையும் வாங்க முடியவில்லை. இவர்கள் உழைக்கும் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் பல வழிகளில் வரியாகவும், கட்டணமாகவும், மது விற்பனை மூலமும் சுரண்டிவிடுகின்றன. இவர்கள் எப்பொழுதும் உயர்வடையக் கூடாது என்பதில் குறியாக உள்ளன மத்திய-மாநில அரசுகள். இச்சுரண்டலில் பெரும் பகுதியை மேல்பட்ட அரசியல்வாதிகள் பலவழிகளில் தமதாக்கிக் கொள்கின்றனர்.

இந்த ஆட்சிமுறை முதலாளிகளும், பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மக்களைச் சுரண்டுவதற்கான தானவே இருக்கிறது என்கிற உண்மையை மக்களிடம் எடுத்துரைத்து உண்மையான மக்களாட்சி முறையை நிலைநாட்டுவோம்.