சாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு இந்த மூன்று தீமைகளையும் உள்ளடக்கிய இந்துமத எதிர்ப்பு ஆகியவற்றில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருந்த ஒத்த எண்ணங்கள் ஏராள மாக உள்ளன. அக்கருத்தை எல்லாம் இணைத்து ஒரு கட்டுரையில் சுருக்கிவிட முடியாது. பெரியாரும் அம்பேத்கரும் சாதி ஒழிப்பில் காந்தியாரை நேருக்கு நேர் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியவர்கள். 1927ஆம் ஆண்டு பெங்களுரில் காந்தியாரைப் பெரியார் சந்தித்தபோது இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை; ஒருவன் பிராமணன்; ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன் என்கிற இந்த பேத பிரிவுத் தன்மையல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள். பொது ஆதாரங்கள் இருக்கின்றன? அதுவும் பிராமணன் உயர்ந்தவன்-சூத்திரன் பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது? இந்து மத்தில் மாத்திரம்தான் பார்ப்பனர்களே யாவரும் இன்டலிஜன்சியாவாக படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அநேகமாக 100க்கு 90க்கு மேற்பட்ட மக்கள் படியாத வர்களாக ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே இன்டலிஜன்சியாவாக ஆதிக்கக்காரர்களாக இருக்க முடியும் என்றால் அந்த மதம். அந்தச் சாதி தவிர்த்து மற்ற சாதியருக்குக் கேடானதல்லவா? என்று தெளிவாகச் சுட்டினார். இன்று முதலாளித்துவ சாமியார்கள் வணிகம் வழியாக இந்து மதப் பிரச்சாரம், யோகா கல்வி என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் மடங்கள் அமைத்து, இளைஞர்களையும் இளம் பெண்களையும் மயக்கிப் போதைப் பொருள்களை அளித்துப் பாலியல் கொடுமைகள் செய்வதைப் பற்றி இந்தியா முழுவதும் அன்றாடம் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.

ambedkar periyarஆனால் இந்துமத சாமியார்களைத் தொடர்ந்து, சங் பரிவாரங்கள்-ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் ஆதரித்து வரு கிறார்கள். மதவெறிப் போக்கினைக் கண்டித்து பகுத்தறிவுக் கருத்துகளைத் துணிச்சலோடு எடுத்துக் கூறிய சிந்தனை யாளர்கள் கோவிந்து பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ சமு தாயத்தின் அடிப்படைக் கூறுகளை முதலா ளித்துவ சமுதாயம் அமைந்தவுடன் அழித்துவிடும் என்ற இடதுசாரிக் கோட்பாட்டையும் புறந்தள்ளி, இந்துமத வெறியர்கள், சாமியார்கள், சங்காரச்சாரியர்கள், முத லாளிகள், வணிகர்கள் கூட்டணி அமைத்து முற்போக்கான சமூக வளர்ச்சிக்குத் தடையாக உள்ளார்கள். இந்து மகாசபை, ஜனசங்கம் போன்ற பழமைவாதக் கூறுகளுக்கு உயிரூட்டி, பாரதிய ஜனதா என்கிற புதிய அரசியல் வடிவத்தை உருவாக்கி விட்டார்கள். “நல்லாட்சி தருவோம்-கருப்புப் பணத்தை ஒழிப்போம்” என்று கூறி ஏமாற்றி, நடுவண் அரசில் தனிப் பெரும் பான்மையோடு பாஜக அரசை அமைத்து விட்டார்கள். பாஜகவை எதிர்க்கும் காங்கிரசுக் கட்சியிலும் சனாதனிகளின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. சான்றாக, இக்கட்டு-ரையாளருக்குத் தெரிந்த ஓர் உண்மை மேற்கூறிய கருத்தை உறுதி செய்கிறது.

2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடுவண் அரசில் அமைந்தது. வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போதே ஒப்புதல் அளிக்கப்பட்ட சேது கால்வாய்த் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்லாயிரம் கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது இராமன் பாலம் குறுக்கே உள்ளது என்றும், இத்திட்டம் வழியாக இராமன் பாலம் இடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்கள். இந்தக் கோப்பின் உள் இரகசியங்களை பாஜக விற்கு அளித்ததே காங்கிரசுக் கட்சியின் மத்திய அமைச்சராக இருந்த ஒரு பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1952ஆம் ஆண்டு தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆச்சார்யா நரேந்திர தேவ் அயோத்தி தொகுதியில் நாடாளுமன்றத்திற்குப் போட்டி யிட்ட போது. காங்கிரசு சார்பில் போட்டியிட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஒரு துண்டறிக்கையை வெளியிட்டார். அத்துண் டறிக்கையில் ஆச்சார்யா நரேந்திர தேவ் நாத்திகர் என்றும், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இராமன் கோயிலைக் கட்டுவதற்குத் தடையாக இருப் பார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதுதில்லியில் ஒரு ஆய்விற்காகச் சென்றபோது இக்கட்டுரையாளர் அந்தத் துண்டறிக்கையைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.

இவ்வாறாக, மதவாத சக்திகள் தேசியக் கட்சிகள் என்ற போர்வையில் இந்துத்துவப் பண்பாட்டுத் தேசியத் தை வலியுறுத்துவதில் தங்கள் வடிவங்களை-எண் ணங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை. வட மாநிலங் களில் இராமனை வெறியோடு வழிபடும் நிலையை உருவாக்கிவிட்டனர். இதன் காரணமாகத்தான், பெரியார் மதம் அடிப்படையிலான அனைத்துக் கூறுகளையும் அகற்ற வேண்டும்-இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் வலியுறுத்தி வந்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது பெரியார் மிகக்கடுமையான முறையில் இந்து, இது தர்மச் சட்டம் என்றும் - சாதியை நிலை நிறுத்தும் ஏற்பாடு என்றும் திறனாய்வு செய்தார். சான்றாக 1947இல் இந்தச் சட்டத்தில் (Hindu Code Bill) பெண்களுக்குச் சொத்துரிமை, வாரிசுரிமை, மணவிலக்கு உரிமை போன்ற முற்போக்கான சட்டவரைவுகளை அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்தபோது, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் 70 முறைகள் புதுதில்லியில் கூட்டங்கள் நடத்தி நேரு-அம்பேத்கர் உருவ பொம்மைகளை எரித்தனர். பஞ்சமனுக்கு இந்து மதத்தில் இடமில்லை. எனவே அம்பேத்கருக்கு இச் சட்டத்தை முன்மொழியத் தகுதியே இல்லை என்று பூரி சங்கராச்சாரியர் உட்படப் பலர் எதிர்த்தனர். அம்பேத் கரை இழிவுபடுத்தினர். நேரு அழைப்பின் பேரில் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பு, ஏற்றார். ஆனால் 1951ஆம் ஆண்டில், அம்பேத்கர் 1947இல் முன் மொழிந்த இந்து சட்டத்தை காங்கிரசுக் கட்சியிலிருந்த மதவாதத் தலைவர்கள் எதிர்த்தனர். நேரு அமைச்சரவையில் இடம் பெற்ற துணைப் பிரதமர் படேல், தொழில் அமைச்சர் சியாமா பிராசாத் முகர்ஜி காங்கிரசுக் கட்சியின் தலைவர் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோர் இந்துச் சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துவிட்டு நாடாளுமன்றத்தில் எதிர்த்தனர். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு கலங்கிய பிரதமர் நேரு பின்வாங்கினார். எனவே அண்ணல் அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து 1961இல் விலகினார். 1955-56 ஆண்டுகளில்தான் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. அப்போது இந்து ஒடுக்குமுறை சமூகத்திற்கு எதிராகப் புரட்சி செய்த அம்பேத்கர் என்று நேரு புகழஞ்சலி செலுத்தினார்.

இந்து மதத்தில் உள்ள சனாதன தர்மம் சாதியத்தை உறுதி படுத்தி வருகிறது. அதற்குப் பாதுகாவலர்களாகப் பார்ப்பனர்கள் இருந்து வருகின்றனர். மூடநம்பிக்கைகளையும் மத நம்பிக் கைகளையும் புராண இதிகாசங்களையும் போற்றுபவர் களாகவும் உள்ளனர் என்றார் பெரியார்.

“யார் வேண்டுமானாலும் பூசை பண்ணலாம். ஆனால் முறைப்படிச் செய்யனும் என்று யாவருக்குமே அனுமதி கொடுத் தார் நம்முடைய கலைஞர். பார்ப்பான் கோர்ட் - சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பெயர், சிரிக்காதீர்கள் அதிலே தமிழனுக்கு இடமே இல்லை. (அப்படி) போனாலும் அவனுடைய அடிமைதான் போவான். அவன் சாஸ்திரத்தைப் “பார்த்துத்தான் தீர்ப்புப் பண்ணுவான் ” என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப் பிட்டார் பெரியார்.

பெரியார் மரண சாசனம் என்று அழைக்கப்படுகிற தியாகராய நகர் இறுதிச் சொற்பொழிவில் (கலைஞர் ஆட்சிக் காலத்தில் 1971-76) கொண்டுவரப்பட்ட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் 2006-11இல் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இன்றும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சட்ட வல்லுநர்களே குழப்பம் அடையும் வண்ணம் 2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதைத் தமது பட்டறிவால் முற்றிலும் உணர்ந்த தந்தை பெரியார், தனது 70 ஆண்டுகாலப் பொது வாழ்வில் கூறிய கருத்துகள் எவ்வளவு துல்லியமானவை என்பது விளங்கும். இறுதிச் சொற்பொழிவினைப் பெரியார் 1973ஆம் ஆண்டு தியாகராயர் நகரில் ஆற்றினார். அவ்வுரையில்

“ஆகமம் ஒர் அக்கிரமம். ஓர் அயோக்கியத்தனம் இதற்கு மேலே உண்டா?... ஆகமத்தை எழுதியவன் எவனடா என்றால் அவன் சொல்லுவான் வசிஷ்டன் எழுதினான், நாரதன் எழுதினான் மனு எழுதினான் வெங்காயம் எழுதினான் என்று இந்தப் பயல்களுக்கு வயது என்ன?” (பெரியார் இறுதி சொற்பொழிவு-பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்- வே.ஆனை முத்து தொகுதி 6 பக்கம் 3231-3252)

இன்றும் சனாதனம் நீதிமன்ற ஒத்துழைப்போடு கொட்டம் அடிக்கிறது. சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாக மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரமணியசாமி தீட்சிதர்களுக்காக வாதடினார். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை மீண்டும் தீட்சதர்களின் பொறுப்பில் விட்டுவிட்டது. தமிழில் அர்ச்சனை கூடாது என்பதுதானே தீட்சிதர் களின் வாதம். சிதம்பரத்தில் இன்று உயர் வகுப்பினர் தானே வெற்றி பெற்றுள்ளனர்.

பெரியார் கருத்துகளும் அம்பேத்கர் கருத்துகளும் வெற்றிபெற்று வருகின்றன. ஆனால் முழுமையான வெற்றிப் பயணத்தை சாதியும் மதமும் ஒன்றோடொன்று இணைந்து காலந்தோறும் இடையுறுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் போக்கினை மாற்றுவதற்கு இளைஞர்கள் பொருளாதார சமுதாய பண்பாட்டுத் துறைகளில் தொடர்ந்து முற்போக்குக் கருத்து களைச் சுட்ட வேண்டும். களமும் அமைக்க வேண்டும்.

அம்பேத்கர் மறைவை ஒட்டி பெரியார் கூறிய கருத்துகள் இந்த இரு பெரும் மானுடப் போராளிகள் மானுட விடுதலைப் பயணத்தை எப்படி வடிவமைத்துள்ளனர் என்பதைத் தெளிவாகக் சுட்டுகின்றன.

“மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்துமதம், இந்து சாத்திரங்கள், இந்து கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய-இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்” (பெரியார் இறுதிச் சொற்பொழிவு- பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்- வே.ஆனைமுத்து தொகுதி 6 பக். 3040).

தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள் வெல்க!

(மென்பொருள் பொறியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிப் பாசறையில் ஆற்றிய உரையின் சுருக்கம்)