இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தன்மான இயக்கமும் தனித் தமிழ் இயக்கமும் தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கின. மறைமலையடிகள், திரு.வி.க., பெரியார், பாரதிதாசன், பாவாணர் போன்ற தலைவர் களும் அறிஞர்களும் அவர்தம் தொண்டர்களும் ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுக்கெதிரான வீச்சுமிக்க அதிர் வலைகளைத் தோற்றுவித்தனர். இவர்கள் இணைந்து பணியாற்றிய காலங்களும் உண்டு. முரண்பட்டு மோதிய தடங்கட்கும் குறைவில்லை.

maraimalai periyar1938ஆம் ஆண்டு மூண்ட இந்தி எதிர்ப்பு மொழிப் போர் தமிழகத்தில் தடைகள் பல தகர்த்த தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாய் வெடித்தது. இந்தப் போராட் டத்தில் பெரியாரும், தமிழ்ப் பேரறிஞர்களும், எளிய நிலை உழைப்பாளித் தமிழர்களும் ஓரணியில் நின்று, வஞ்சக இராசாசியின் வடவாரிய இந்தித் திணிப்பை அடலேறுகளாய் எதிர்த்து ஆர்ப்பரித்தனர்.

‘தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகள் பதித்த இந்த மாபெரும் போராட்டம் அன்றைய தமிழறிஞர்களால் மட்டும்தான் முன்னெடுக்கப்பட்டது. பெரியாருக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. இறுதி நேரத்தில் பத்தோடு பதினொன்று போல வந்து ஒட்டிக் கொண்டவர்தான் பெரியார்’ என்று தோழர் பெ. மணியரசன் அவர்களும், அவரைப் போன்றே வேறு சில தமிழ்த் தேசியர்களும் தொடர்ந்து பொய்கூறி வருகின்றனர்.

மறைமலையடிகளின் மகன் பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு என்பவர் ஆவார். அவரும் 1938 இந்தி எதிர்ப்புப் போரில் களத்தில் இருந்தவர். போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றதால் தான் பணியாற்றிய நுங்கம்பாக்கம் நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் பணியை இழந்தவர். இப்போ ராட்டத்தில் இவரோடு இவர் துணைவியார் ஞானாம் மாள் தன் அய்ந்து திங்கள் கைக்குழந்தையோடும், அய்ந்தாண்டுச் சிறுவனோடும் சிறை சென்றார். இவர் அண்ணியும் அவருடைய மூன்றாண்டுச் சிறுவனும் கூடச் சிறையேகினர்.

ஆண்டுக்கணக்கில் ஆயிரமாயிரவர் பங்கேற்ற இந்த மொழிப்போர் இறுதியில் 1940 வாக்கில் முடிவுற்றது. கட்டாய இந்திச் சட்டம் நீக்கப்பட்டது. ‘வெற்றிக்குக் காரணர்களான முதன்மையோர்’ என்ற தலைப்பில் பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு பின் வரும் பெயர்களைக் குறிப்பிடுகிறார் :

மறைமலை அடிகள், ஈ.வே.ரா., நாவலர் பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், சுவாமி அருணகிரி நாதர், சி.டி. நாயகம், பி.ஏ., (அடிகளின் கல்லூரி மாணவர்), பட்டுக்கோட்டை அழகிரி சாமி, திருச்சி ரெ.திருமலைச் சாமி, விடுதலை ஆசிரியர் எஸ். குருசாமி, செங்குந் தமித்திரன் ஆசிரியர் மாணிக்கவாசகம், மயிலை சிவ முத்துக்குமாரசாமி முதலியார், சி.என். அண்ணாதுரை, டாக்டர் தருமாம்பாள், ஈழத்துச் சிவானந்த அடிகள், மீனாம்பாள் சிவராஜ், கும்பகோணம் எஸ்.கே. சாமி, பாவலர் பாலசுந்தரம், கு.மு. அண்ணல்தங்கோ, தெ.பொ. வேதாசலம், பி.ஏ.பி.எல்., சிறை சென்றவர் கள், தொண்டர்கள், பொதுமக்கள், தமிழ்ப் புலவர்கள், நன்கொடை தந்தோர் மற்றும் பலர். (தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு - பேரா. மறை. திருநாவுக்கரசு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62. பக்.539).

மேற்காணும் பட்டியலில் ஒரு சிலர் மட்டுமே தமிழறிஞர்கள். மற்றையோரெல்லாம் தன்மான இயக் கத் தலைவர்கள். மறைமலை அடிகளுக்கு அடுத்த இரண்டாவது பெயர் ஈ.வெ.ரா.

மறைமலையடிகள் சைவநெறி போற்றிய தமிழர். அன்றாடம் சிவனின் திருவடிகளைத் தொழும் பழுத்த ஆத்திகர் ஆயினும் பெரியாரின் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை அவர் பெரிதும் வரவேற்றார். பெரியாரின் கருத்துப்படி, ஆரிய நாகரிகமாம் வருணாசிரம தருமத் தின் பிடியிலிருந்து - அவ்வாரிய ஆதிக்கப் பிராமணர் களின் பிடியிலிருந்து - தமிழினம் விடுதலை பெற வேண்டும். அதற்குத் தமிழர்கள் தம் தன்மானத்தை உணர்தல் வேண்டும். உணர்ந்து பிராம்மணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். அதற்குக் கிளர்ச்சி செய்து தமிழ்மக்கள் பயன்பெற ஓர் இயக்கம் வேண்டுமென்று கருதினார். கருதியவாறே பெரியார் தன்மான இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதே மறைமலையடிகள் கருத்தாக இருந்தது.

இதுபற்றி மறை. திருநாவுக்கரசு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (அடிகள் கொண்ட மகிழ்ச்சி) என்னும் தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்.

“கடவுள், சமயம், கோயில், வழிபாடு, சமயநூல் களில் ஆழ்ந்த ஆர்வங்கொண்ட சிவத்தொண்டராம் அடிகள் தாம் பரப்ப விரும்பிய தமிழ் இன நாகரிக, மொழிச் சீர்திருத்தக் கருத்துகள் யாவற்றையும் ஈ.வெ.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டார். “யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப் படுத்துங் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புல வர்க்கும், பொதுமக்களிற் சிறந்தார் சிலர்க்குமே பயன் தருகின்றன. ஆனால் ஈ.வெ.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர் - பேரூர்களிலெல்லாம் பரவி பயன் விளைக் கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங் களும் அவராலே எளிதில் எங்கும் முற்றுறுகின்றன. ஆதலால் ஈ.வெ.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க!” என்று தம்மைக் காண வருவாரிடமெல்லாம் அடிகள் ஈ.வெ.ரா.வை வாயார வாழ்த்திக் கொண்டி ருந்தார்” (மேற்படி நூல், பக்.542).

மறைமலையடிகள் பெரியார் மீது கொண்ட மதிப்பைப் போலவே பெரியாரும் மறைமலையடிகள் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். இதுபற்றியும் மறை. திருநாவுக்கரசு இந்நூலின் வேறொரு பகுதியில் பதிவு செய்துள்ளார்.

பெரியார், அடிகள் நூல்கள் பலவற்றை ஆழ்ந்து படிக்கலானார். அடிகள் நூல்களில், ‘பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்’ என்ற நூல் அவர்க்கு வேதமா யிற்று. தாம் பேசுமிடங்களிலெல்லாம் அடிகள் கருத்து களை எடுத்துக் காட்டி, அடிகளை வானளாவப் போற்று வாராயினர். இவ்வாறு அடிகளிடம் பேரன்பும் பெருங் கவர்ச்சியும் கொண்ட ஈ.வெ.ரா. அடிகளை நேரிற் கண்டு பேசவில்லை. அதற்கு முற்படவுமில்லை. நான் ஒருபோது அவர்களை “அய்யா! தாங்கள் ஏன் பல்லா வரம் வரக்கூடாது? தங்களைப் பார்க்க அடிகட்கு மிகுந்த விருப்பம் உண்டே!” என்றேன். “அதற்கவர் என்னசாமி (தம்மால் மதிக்கப்பட்டவர்களைப் பெரும் பாலும் ஈ.வெ.ரா. சாமி என்றே விளித்துப் பேசுவார்) சுவாமிகள் எவ்வளவு பெரியவர்; பெரிய புலவர். அவருடன் நான் பேச என்ன விருக்கிறது?” என்றார் (மேற்படி நூல், பக்.540).

இவ்வாறு தமிழ்மொழிக் காப்பு, தமிழின மேம் பாடு போன்றவற்றில் பெரியாருக்கும் மறைமலையடி களுக்கும் சில ஒத்திசைவான போக்குகள் இருந்தா லும்-கடவுள், மதக் கோட்பாடுகளில் இருவரும் கடுமை யாக மோதிக் கொண்டார்கள்.

அடிகள் சைவ நெறி தூய தமிழ் நெறி என்பார். பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய புராணப் பொய்க் கதை களுக்கும் இதற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்பார். இப்போது சில தமிழ்த் தேசியர்களும் இப்படித் தான் கூறுகிறார்கள். சிவனியம், மாலியம் இரண்டும் தூய தமிழர் மதம் என்று பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் கூறும் கருத்துகளும், அடிகளால் சொல்லும் அறநெறிகளும் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. அவிழ்க்கும் பொய் மூட்டைகளோடுதான் போய் ஒன்று கலக்கின்றன. இன்றைய இந்துத்துவ மதவெறியர்கள் உதிர்க்கும் நெருப்புச் சொற்களுக்கும், ‘இந்து என்பதன் பயன்’ என்ற தலைப்பில் மறைமலையடிகள் எழுதும் எழுத்து களுக்கும் உள்ள இடைவெளி குறைவே.

“இந்து சமயம், இந்துக்கள் என்ற எண்ணம், உணர்ச்சி இல்லாவிடில் இந்தியாவையும், சைவம், வைணவம், சைனம், புத்தம் முதலிய சமயங்களை யும், பழக்க வழக்கங்களையும், சிறப்பாகக் கோயில் களையும் தத்துவக் கலை வடிவங்களான திருவுருவங் களையும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே முசுலீம்கள் அழித்தொழித்துத் தரைமட்டமாக்கி இருப்பர். இந்து சமய உணர்வே, இந்துக்கள் என்ற ஒருமையே நம் தமிழ்நாட்டை, பாரதத்தை, சைவத்தை, வைணவத்தை இன்றளவும் காத்து வருகின்றது. இவ்வுண்மை உணர்ந்து இவ்வுணர்ச்சிகளைக் காத்துவரல் வேண்டு மென்று அடிகள் உணர்ச்சியுடன் கூறுவார். தமிழ், சைவம், தமிழ்நாடு என்பனவற்றின் தனி உரிமை களைப் பாதுகாத்துக் கொண்டே இவற்றிற்கு இடையூறு இல்லாமல் இந்து சமயத்தையும், இந்திய நாட்டையம் தளராது பாதுகாக்க வேண்டுமென்றும் அடிகள் ஆர்வம் ததும்பக் கூறுவதுண்டு” (மேற்படி நூல், பக்.547).

‘பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, தமிழக விடுதலை கருத்துகளையெல்லாம் பெரியாருக்கு முன்பே பேசிய புரட்சியாளர் தமிழறிஞர்கள்தாம்’ என இன்று பல தமிழ்த் தேசியவாதிகள் மார்தட்டுகிறார்கள். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.

22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற ஈ.வெ.ரா.வும் அவரியக்க மும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத் தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று இன் றைய இந்து முன்னணி இராமகோபாலன், எச். இராசா, அருச்சுன் சம்பத் பாணியில் பேசியுள்ளார்.

அடிகளார் பேச்சுக்கு எதிர்வினையாகத் ‘திராவிடன்’ ஏட்டில் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதலில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘குடலைப் பிடுங்கி மாலையாகப் போடுவது போலெல்லாம் பேசுவதா?’ எனத் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பன் போன் றோர் மறைமலையடிகள் மீது வழக்குப் போடவும் முனைந்துள்ளனர். ஆனால் இந்நிகழ்வுகளின் போது வெளியூர்ப் பயணங்களில் இருந்த ஈ.வெ.ரா. உடனே இதில் தலையிட்டுத் தம் இயக்கத்தார் செயல்களுக்காக மறைமலையைடிகள் மன்னித்துக் கொள்ள வேண்டு மென்று மடல் எழுதியுள்ளார். இத்தகையதான போர் கள் இருபக்கமும் அடிக்கடி நிகழ்வதுண்டு.

‘பெரியார் இராமாயணத்தையும், பெரிய புராணத் தையும் தீயிட்டு எரிக்கச் சொன்னார். இது சரியா?’ என்று தோழர் மணியரசன் போன்றவர்கள் சினத்து டன் வினவுகிறார்கள். பெரியார் கம்பராமாயணத்தை எரிக்கச் சொன்னபோது, அதற்குச் சரிசரி என்பதுபோல் தலையாட்டியுள்ளார் மறைமலையடிகள். காரணம் கம்பனின் காவியம் இராமனைப் போற்றும் வைணவ நூல். அதனால் கம்பராமாயண எரிப்பில் மறைமலை யடிகளுக்கு உடன்பாடான கருத்து இருந்துள்ளது என்பது மறை. திருநாவுக்கரசு எழுத்துகளில் இருந்தே வெளிப்படுகிறது. ‘கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு அவர் எழுதுவன பின்வருமாறு :

நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால் - ஆரவாரமான - ஏராளமான பொருளற்ற கற்பனை களால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்...

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமய - இன உணர்வுக்கு மாறான - கம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெ டுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவு களிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார். (மேற்படி நூல், பக்.568).

ஆக, தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதை யால் கம்பர் கெடுத்துவிட்டார்; அதனால் கம்பராமாய ணத்தைப் பயிலுதலும் ஓதிப்பரப்புதலும் தவறென்று தமிழ்க்கடலாம் மறைமலையடிகள் சொன்னார். ‘தேவையற்ற அந்நூல் ஏன்? எரித்துவிடுங்கள்!’ என்று பெரியார் சொன்னார். மணியரசன் போன்றவர்கள் பெரியார் மேல் மட்டும் எரிந்து விழுகிறார்கள்.

உண்மையில் மறைமலையடிகளின் கம்பராமா யண எதிர்ப்பு பகுத்தறிவு நெறியின்பாற் பட்டதன்று. அவர் நெஞ்சுக்குள் புகுந்த சைவநெறிப் பூதம் அவரை அப்படியெல்லாம் எழுத வைத்தது. “கடவுளின் பத்து அவதாரங்கள் வடநாட்டில்தான் நிகழ வேண்டுமா? ஆரிய நாகரிகங்களையே பெரும்பாலும் தழுவி இருக்க வேண்டுமா? கொலை, புலை வேள்விகளை வளர்க்க வேண்டுமா? என்றெல்லாம் அடுக்கடுக்காய் வினாக்கள் எழுப்பும் அடிகளார் கடவுள் தன்மைக்கே ஒரு புது விளக்கம் தருகிறார்.” ‘கடவுள் தாய் வயிற்றில் தங்கி ஊனுடல் கொண்டார் என்றால், கடவுளிலக் கணத்திற்கே முற்றிலும் மாறானது. அதுவும் தம் சிவநெறிக்குக் கடவுள் அவதாரம் நினைக்கும் ஒண் ணாப் பழி நிகழ்ச்சியாகும்’ என்று ஒரு பெரிய குண் டைத் தூக்கிப் போடுகிறார்.

“முருகப் பெருமானும், கணபதியும் சிவ வடிவங்கள்; அவதாரங்கள் அல்ல. அவர் தாய் வயிற்றில் தங்கிப் பிறந்தவர் அல்லர். சிவநெறியின் அடிப்படைக் கருத் துக்கு முரணில்லாமல் கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாரியார் சிவபிரான்றன் நெற்றிக் கண்ணின் ஒளியினின்றும் முருகன் பிறக்கவில்லை. ஒளிப்பொறி யாகத் தோன்றினான் என்றுரைத்தனர். சிவபெருமான் ஒளிப்பிழம்பினன். அவ்வொளியின்றும் ஒளியாய்த் தோன்றிப்பின் அவ்வொளிப் பொறிகளாலேயே முருகன் தோன்றினான் என்றால், இறைவன் தன்னிலிருந்தே தானே முருகனாக முகிழ்த்தான் என்பதல்லவோ கருத்து. கணபதி சிவபெருமானின் ஒலிவடிவமேயாம்” (மேற்படி நூல், பக்கங்கள் 576, 577).

இராமாயணத்திற்கு எதிராகத் தன்மான இயக்கம் போர் முரசு கொட்டிய போது, பூரித்து மகிழ்ந்த அடிக ளார், அவ்வியக்கம் பெரிய புராணத்தின் மீது கை வைத்த போது, அலறியடித்துக் கொண்டு ஓடினார்.

பெரியார் இயக்கம் இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்கச் சொன்னது ஆரியப் பண் பாட்டிற்கெதிரான, சாதி மத மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஓர் அறைகூவல். அறிவியக்கப் போர்ப் பறைப் பிளிறல். இந்தச் சொற்போர்களின் விளைவாக, இவ்விரு நூல்களும் முற்றிலுமாய் எரிந்தா போயின? பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட்டம் நடத்தியபின் அவை மொத்தமாய்க் காணா மற் போய் கடலிலா விழுந்தன? ‘மதம் மக்களுக்கு அபின்’ என்றார் மார்க்சு. மக்களின் மதமயக்கங் களைத் தெளிவிக்க மக்களுடன் இணைந்தே மக்களுக் கான போராட்டங்கள் நடத்திய மக்கள் தலைவர் பெரியார்.

ஆனால் இன்றுள்ள தமிழ்த் தேசியர்கள் பெரியார் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடுகளே செய்தார் என்று வஞ்சகச் சொற்களால் தொடர்ந்து வசைபாடி வருகின்ற னர். பெரியாரின் தொண்டுக்கெல்லாம் உள்நோக்கம் கற்பித்துப் பழிதூற்றுகின்றனர்.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2015, மார்ச்சு 1-15 இதழில் ‘மறைமலை அடிகளாரின் சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் 1931 பிப்ரவரி 2, 3, 4, 5 ஆகிய நான்கு நாட்கள் சென்னைப் பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் தலைமையில் இயங்கிய பொதுநிலைக் கழகத்தின் இருபதாமாண்டு நிறைவு விழாவின் தீர்மானங்கள் பற்றி மூன்று பக்க அளவில் விரிவான கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது (பக்.32-34). அக்கட்டுரையில் மடம், கோயில், குலம், தமிழ் என்ற தலைப்புகளில் பல முற்போக்கான தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ்க் குடிமக்கள் எல்லோரையும் உயர்வு தாழ்வு பாராது, தூய்மை யாகத் திருக்கோயில் சென்று இடையூறின்றி வழிபாடு நடத்த வழிசெய்ய வேண்டும். கோயில்களில் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும். சாரதா சட்டத்தை ஒழிக்க வேண்டும். தலைவர்களும் பொது மக்களும் ஒத்துழைத்துக் கைம்பெண் மணத்திற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். சாதிக் கலப்பு மணம் மிகவும் ஏற்கத்தக்கது என்பன போன்ற சிறந்த தீர் மானங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

ஆனால் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18, 19 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநில மாநாட்டில் இவற்றினும் முற் போக்கான, சாதி ஒழிப்புக்கு முதன்மையான, பெண் கள் முன்னேற்றத்திற்கு மிகமிகத் தேவையான பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதிப் பட்டத்தையும் மதக்குறிகளையும் துறக்க வேண்டும், திருமணங்கள் மிக எளிய முறையில் நடத்தப்பட வேண்டும். கோயில் மொழியாக வடமொழி இருக்கக் கூடாது. கோயில், மடம், சத்திரம், வேதபாடசாலை போன்றவை, கல்வி, ஆராய்ச்சி, வணிகம், கைத் தொழில் சாலைகளாக மாற்றப்பட வேண்டும். பொது இடங்களில் சாதி, மதம், வகுப்பு, நிறம் போன்றவற்றில் மனிதரிடை வேற்றுமைப் பாராட்டுதல் குற்றமாக்கப் படல் வேண்டுமென்றெல்லாம் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன (குடி அரசு 24.2.1929).

- காண்க : எஸ்.வி. இராஜதுரை - கீதா நூல் பெரியார் சுயமரியாதை - சமதருமம், பக்.747-752.

இறந்துபோன காஞ்சி சங்கராச்சாரி ஆகட்டும், இப்போதுள்ள மற்ற இரு சங்கராச்சாரிகளாகட்டும் இந்துக் கோயில்களில் தீண்டத்தகாதோர் என்பவர் களை அனுமதிக்கும் எண்ணத்திற்கு எதிரானவர்களே. காரணம் கேட்டால் அவர்களிடம் தூய்மை இருப்ப தில்லை. அன்றாடம் குளிப்பதில்லை என்று ஆணவத் தோடு விடை கூறுவார்கள். மறைமலையடிகள் கருத் தும் இவர்கள் கருத்தோடுதான் சற்றொப்ப ஒத்திருந்தது.

“இக்காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் சிலர் கோயில்களுக்குப் போக இடம்பெறுகின்றார்கள் இல்லை. இதற்குக் காரணம், அவ்வகுப்பாரிடத்தில் துப்புரவான நடை, உடை, ஒழுக்கங்கள் இல்லாமையேயாம். ஒரு வகுப்பார் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமா னால், அவர்களே அதற்காக மிகவும் முயல வேண்டும். பிறர் எவ்வளவுதான் உயர்த்தினாலும், தாமே உயரமாட்டாதவர்கள் உயர்ச்சியடைவது இயலாது. ஆதலால், தாழ்ந்த வகுப்பார், கொலையால் வரும் புலால் உண்ணுதலையும், கட்குடியையும், நீக்கித் துப்புரவான நடை, உடை வாய்ந்தவர்களாதலுடன், தாழ்ந்த ஒழுக்கத்தில் தாம் நின்ற காலத்துத் தமக்கு வழங்கிய சாதிப் பெயர்களையும் விட்டுத் தாம் உயர்ந்த ஒழுக்கத்திற்கு உரியவராகக் கருதப்படும் பார்ப்பனர், வேளாளர் முதலிய பேர்களால் தம்மை வழங்கிக் கொள்ளுதலும் வேண்டுமெனவும், இவ் வாறு தாழ்ந்த வகுப்பினர் உயர்ந்து விடுவார்க ளாயின், அவர்களைக் கோயில்களினுட் செல்ல வேண்டாமென்று தடைசெய்வார் யாரும் இலராவர்” - மறைமலையடிகள் (மேற்கோள் : பேராசிரியர் சுபவீ : பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம், பக்.152).

ஆரியச் சடங்குகள், பார்ப்பன மேலாதிக்கம் மிகுந்த மூடத் திருமண முறைக்கு மாற்றாகத் தமிழகமெங்கும் தன்மதிப்புத் திருமணங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் பெரியார் இயக்கம். சுயமரியாதைத் திருமண முறையில் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கும் அபத்தங்கள் இல்லை. ஆபாசத் திணிப்பான வடமொழி மந்திரங்கள் இல்லை. ஆனால் அறிவுக்குப் பொருத்த மான இத்தகு தன்மானத் திருமணங்களுக்கு முன் னோடியாகப் பரவலாகத் தமிழ்த் திருமணங்கள் நடத்தித் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியவர்கள் தமிழ் அறிஞர்களும் தமிழ்ப் புலவர்களும்தான் என்பதும் தமிழ்த் தேசியர்களின் முழக்கங்களில் ஒன்று.

ஆனால் மறைமலை அடிகள் காலத்தில் ஆகட்டும், இப்போது தேவாரம், திருவாசகம் போன்றவற்றை மறைகளாக ஓதி நடத்தப் பெறும் தமிழ்முறைத் திரு மணங்களாகட்டும் பார்ப்பன விலக்கம் என்ற ஒன் றைத் தவிர மற்றபடி ஆரியத் திருமணங்களின் அடி யொற்றிய எல்லாப் பழமைவாத மூடத்தனங்களையும் முன்னெடுப்பவையாகவே உள்ளன.

தன்மானத் திருமணங்களில் மிக முதன்மையாக வலியுறுத்தப்பட்ட கருத்து, ஆணுக்குப் பெண் அடிமை இல்லை. எல்லா நிலையிலும் ஆணுக்கு இணையான உரிமைகள் உடையவள் என்கிற தத்தவமாகும். ஆனால் சடங்கு முறைகளின்படி நடத்தப்படும் தமிழ்த் திருமணங்களில் பெண் ஆணின் உடைமைப் பொரு ளாகவே பேணப்படுகிறாள். இதனைப் பின்காணும் மறைமலையடிகளாரின் கருத்தும் உறுதிப்படுத்துகிறது.

“இனி மாதர்கள் தமது அமைதிக் குணத்திற்குப் பொருத்தமாகத் தமது உடம்பின் செயல்களை அமைதிப் படுத்தி, நாணமும் அடக்கமும் உடையவர்களாக ஒழுகுதல் வேண்டும். தமது வருவாய்க்குத் தக்கபடி தூயராக நடத்தல் அவர் தமக்கு முதன்மையான கடமையாகும். இவற்றோடு கடவுளைத் தொழுதலும் அடியாரை ஏற்று அவர்க்குத் தொண்டு செய்தலும், நாடோறும் வழுவாமற் கடைப்பிடியாகக் செய்துவரல் வேண்டும் என்று இவ்வளவும் எல்லாப் பெண் மக் களுக்கும் உரிய கடமைகளில் முதன்மையானவாம் என்க.” - நூல் : அறிவுக்கொத்து : மலைமலையடிகள், பக்.193.

‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று பாடினார் பாரதி. ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற் கொம்பே’ என்றார், பாவேந்தர்.

பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு தம் தந்தை யார் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் மறை மலையடிகளாரின் அரிய பண்புகளாகச் சிலவற்றைச் சுட்டுகிறார். 1. ஆரியரது வருணாசிரமக் கொள்கையை விளக்கிக் காட்டியது. 2. தமிழர்களைச் சூத்திரர் எனலாகாது எனக் கூறியது. 3. சாதியொழிப்பு, தீண் டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைப் போற்றி யது. 4. பிராணமர்களே பிறப்பால் உயர்ந்தவர்; ஏனையோரெல்லாரும் தாழ்ந்தவர் என்ற கருத்தை எதிர்த்தது எனக் குறிப்பிடுகிறார் (பக்கங்கள் 735-736).

ஆனால் அவரே வேறோர் இடத்தில் “அடிகள் வடமொழியை வெறுப்பவர் அதனாற்றான் தனித் தமிழ்க் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார்” என்ற எண் ணத்தை வடமொழிப் பித்தர்கள் எங்கும் பரப்பினர். அது முற்றிலும் தவறான கருத்து என்பதை அடிகளின் நூல்களைப் பயின்றார் நன்குணர்வர் (பக்.305),

முடிவாக, மறைமலையடிகளார் வாழ்வின் முதற் பெருங் கடனாக எதைத்தான் கொண்டார்? அதற்கும் அவருடைய மகனார் மறை. திருநாவுக்கரசுவே விடை சொல்கிறார் :

“அடிகளாரின் வாழ்க்கையின் குறிக்கோளைச் சுருக்கினால் அது தமிழ்; சிவம் என்று பெயர் பெறும். அவ்விரண்டிலும் சிவமாம் கடவுட்பற்றே அடிகளின் உயிராம் : ஆம், இறுதியாக மனிதனுடைய குறிக் கோள் கடவுளே” (பக்.550).

மறைமலையடிகளின் பெருவாழ்வை, மாண்புறு சிறப்புகளைப் பல மடங்கு போற்றி வாழ்ந்த பெரியார், அவருடைய சைவம், தமிழைவிட உயர்ந்து நின்ற நிலையை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்மொழி மீது அவர் கொண்ட ஆற்றாமைக் கருத்துக்கும் இதுவே அடிப்படை.

உன் சாமி காட்டுமிராண்டி சாமி

உன் மதம் காட்டுமிராண்டி மதம்

உன் மொழி காட்டுமிராண்டி மொழி

உன் இலக்கியங்கள் காட்டுமிராண்டி இலக்கியங்கள்

- விடுதலை 14.04.1967