கடந்த முப்பது ஆண்டுகளாகக் காஷ்மீர் கலவர பூமியாக இருந்து வருகிறது. பாக்கித்தான் ஊடுருவல் காரர்களுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டைகள், உரிமைகோரும் காஷ்மீர் மக்களுக்கும் இந்திய ஆயுதப் படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல்கள் என்று காஷ்மீரில் குருதி சிந்திக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் 14.2.2019 அன்று ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 22 அகவையினரான அபுல் அகமது என்பவர் 350 கிலோ வெடி மருந்து களுடன் ஓட்டி வந்த மகிழுந்தை. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி 2500 மத்திய ரிசர்வ் படை வீரர்களுடன் 78 பேருந்துகள் புல்வாமா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பக்கவாட்டு இணைப்புச் சாலை வழியாக வந்து, வரிசையில் அய்ந்தாவது பேருந்து மீது மோதியதில் இரண்டு பேருந்துகள் பெரும் சேதத்திற்கு உள்ளானதில், அவற்றில் இருந்த 44 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்,

pulwama attack 600இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்தன. உயிரிழந்த படை வீரர்களுக்கு மக்கள் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட நாற்பது பேரில் தமிழ்நாடு, கேரளம், உத்தரப்பிரதேசம், மகாராட்டிரம், பஞ்சாப், பீகார் எனப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 அகவையினரான சிவச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த 28 அகவையினரான சுப்பிரமணியன் ஆகியோர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளனர், அரசுகள் நிதி உதவியை அறிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய அளவில் உணர்வுபூர்வமான தாக்கத்தை இத்தாக்குதல் ஏற்படுத்தி உள்ளது.

2016 சூலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்கான் வாகினி ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டது முதல் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. இந்தப் பின்னணியில் ஒரே சமயத்தில் 78 பேருந்துகளில் 2500 படை வீரர்கள் சென்றது சரியா என்கிற கேள்வி எழுகிறது. மேலும் இத்துணைப் பேர் செல்லும் போது உளவுத் துறையும், கண்காணிப்புப் பிரிவும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்தியப் படையினர் மீது இதுவரையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாக்கித்தானிலிருந்து ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவையாகும். ஆனால் 14.2.19 அன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய அபுல் அகமது காஷ்மீரின் புல்வாமா மாவட் டத்தைச் சேர்ந்தவர், இது கவலைக்குரிய செய்தியாகும். காஷ்மீரின் இளைஞர்களைக் கொண்டே எதிர்காலத்தில் இதுபோன்ற தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்படுமோ என்று எண்ண வேண்டியுள்ளது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் காஷ்மீர் மக்கள் மீது ஏகாதிபத்திய மனப்போக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அதிகமானதால், இந்திய அரசுக்கு எதிரான மனநிலை காஷ்மீரில் மேலோங்கி வருகிறது. எனவே 2013இல் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த காஷ்மீர் இளைஞர் எண்ணிக்கை மூன்றாக இருந்தது என்பது 2018இல் 200ஆக உயர்ந்திருக்கிறது.

பிப்பிரவரி 14 அன்று தாக்குதல் நடத்திய காஷ்மீரி இளைஞர் அபுல் அகமது ஓராண்டுக்கு முன்புதான் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் சேர்ந்துள்ளார், இத் தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் அறிவித்ததுடன், தற்கொலைப் படைத் தாக்குதலை மேற்கொள்வதற்குமுன் அபுல் அகமது பேசிய காணொலியையும் வெளியிட்டது.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பாக்கித்தானிலிருந்து கொண்டு காஷ்மீர் மீது தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாக்கித்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பகவல் பூரைச் சேர்ந்தவர். மசூத் அசார் 1994ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்க ப்பட்டார்.

மசூத் அசாரின் தம்பியும் அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து 1999இல் 155 பயணிகளுடனான இந்திய வானூர்தியைக் கடத்தி ஆப்கானில் கந்தகார் வானூர்தி நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அப்பயணிகளை மீட்பதற்காக இந்திய அரசு மசூத் அசாரை விடுதலை செய்து, கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்தது. அங்கிருந்து மசூத் அசார் பாக்கித்தான் சென்றார். 2000ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கி காஷ்மீரில் தாக்குதல்களை நடத்தி வருகிறார்.

2001 அக்டோபர் முதல் நாள் காஷ்மீர் சட்டமன்றத் தின் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். 2014 திசம்பர் 5 அன்று எல்லைக்கோட்டுக்கு அருகில் யுரியில் இந்தியப் படை முகாம் மீது நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 2016 சூன் 2 அன்று பதான்கோட் விமான தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் மூன்று படை வீரர்கள் கொல்லப் பட்டனர். 2016 நவம்பர் 29 அன்று நக்ரோட்டா படை முகாம் மீது நடத்திய தாக்குதலில் 10 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். 2018 பிப்ரவரி 10 அன்று ஜம்முவில் சுன்ஜுவான் படை முகாம் மீது நடத்திய தாக்குதலில் 11 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் இத்தாக்குதல்களை பாக்கித்தான் அரசின் உளவுத் துறை மற்றும் இராணு வத்தின் துணையுடன் செய்து வருகிறது. இந்திய அரசின் முயற்சியால், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை ஐ.நா.வின் பாதுகாப்பு அவை தடை செய்யப்பட்ட இயக்கமாகப் பட்டியலிட்டுள்ளது. எனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று ஐ.நா. பாதுகாப்பு அவை அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் போன்று பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் ஊடுருவித் தாக்கு தல்களை நடத்தி வருகின்றன. இத்தீவிரவாத அமைப்பு களுக்குப் பாக்கித்தான் அரசும், படையும் பலவகை யிலும் துணையாக இருந்து வருகின்றன. இவற்றின் நோக்கம் காஷ்மீரில் அமைதியற்ற - பதற்றமான சூழ் நிலையை நீடிக்கச் செய்வதன் மூலம் இந்திய அரசை அச்சுறுத்துவதே ஆகும். பாக்கித்தானில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகள் ஆட்சியில் இருந்தாலும் உண் மையான அதிகாரம் பாக்கித்தான் இராணுவத் தலைமை யிடம்தான் இருக்கிறது. உலக வரைபடத்தில் பாக்கித்தான் அமைந்துள்ள நிலப்பகுதி நிலவியல்சார் அரசியல் (Geo-Political) முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் பல ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியா வையும் சீனாவையும் கட்டுப்படுத்துவதற்குப் பாக்கித் தானைப் பயன்படுத்தி வருகிறது. சீனாவும் இந்தியாவை மிரட்ட பாக்கித்தானைப் பயன்படுத்தி வருகிறது.

2019 பிப்பிரவரி 14 அன்று நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாக்கித்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று உணர்ச்சிவயப்பட்ட நிலை யில் பல தரப்பினரும் கூறி வருகின்றனர். குறிப்பாக சங் பரிவாரங்கள் இதை அழுத்தமாக வலியுறுத்தின. இந்திய அரசு பாக்கித்தான் நாட்டுத் தூதுவரை அழைத்துக் கண்டித்துள்ளது. “வேண்டப்பட்ட நாடு” என்கிற பட்டிய லிலிருந்து பாக்கித்தானை நீக்கியுள்ளது. பாக்கித்தானி லிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 200 விழுக்காடு வரி வதித்துள்ளது. காஷ்மீரில் பிரிவினை வாதத் தலைவர்கள் ஆறு பேருக்கு அரசு அளித்துவந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் மீது எங்கு, எப்போது, எப்படிப்பட்ட தாக்குதலை நடத்து வது என்று முடிவு செய்யும் அதிகாரம் இந்திய இராணுவத் தலைமைக்கு அளிக்கப்ட்டிருப்பதாகப் பிரதமர் மோடி கூறுகிறார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப், புல்வாமா தாக்குதலைக் கண்டித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கை களுக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை ஒடுக்குமாறு பாக்கித்தானுக்கு டிரம்பால் நெருக்கடி தரமுடியாது. ஏனெனில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை களை திரும்பப் பெறுவது தொடர்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பாக்கித்தானின் உதவியை நாடியுள்ளது. சீனாவும் புல்வாமா தாக்கு தலைக் கண்டித்துள்ள போதிலும், மசூத் அசார் விட யத்தில் தங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகளின் அரசுகளும் புல்வாமா தாக்குதலைiக் கண்டித்திருப்பது அரசு முறையிலான வெறும் சடங்கு மட்டுமே ஆகும். இந் நாடுகளை நம்பி இந்திய அரசு பாக்கித்தான்மீது தாக்குதல் தொடுக்க முடியாது.

நிலவியல்சார் அரசியல் சூழலில் பாக்கித்தானைத் தனிமைப்படுத்துவது எளிதானதல்ல. ஆயினும் இந்திய அரசு, எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் கடந்த முப்பது ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பாக்கித்தான் அரசும், இராணு வமும் துணைபுரிவதற்கான சான்றுகளை உலக நாடு களிடம் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக, பாக்கித் தானுக்கு அரணாக உள்ள அமெரிக்காவிடமும் சீனா விடமும் தேர்ந்த அயலுறவு மதிநுட்பத்தைப் பயன்படுத்தி, காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரண மாக உள்ள தீவிரவாத இயக்கங்களைப் பாக்கித்தான் அரசு முடக்குமாறு செய்ய முடியும்.

புல்வாமா தாக்குதலுக்குப்பின் இந்தியப் படைகள் பாக்கித்தான் எல்லைக்கோட்டுக்கு அருகில் இராணுவ ஒத்திகைகளை நடத்தின. வரும் நாடாளுமன்றத் தேர் தலுக்கு முன்னர் நரேந்திர மோடி புல்வாமா தாக்கு தலுக்குப் பழிதீர்க்கும் வகையில் பாக்கித்தான் மீது தாக்குதல் நடத்தி, அதன்மூலம் தன் தேசபக்தியைக் காட்டி, தேர்தலில் வாக்குகளைப் பெற முயல்வார் என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது. இந்திய அரசு இதற்குமுன் பாக்கித்தான் மீது நடத்திய தாக்குதல்களால் என்ன பயன் விளைந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2016 செப்டம்பரில் காஷ்மீரில் யுரியில் இராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்கியதில் 19 படை வீரர்கள் மாண்டனர். இதற்கு எதிர்வினையாக, துல்லியத் தாக்குதல் என்ற பெயரில், பாக்கித்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்தியப் படைகள் அழித்தன. மீண்டும் அதுபோன்ற துல்லிய தாக்குதல் நடத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். 2016இல் இந்தியப் படைகள் துல்லிய தாக்குதல் நடத்திய போது பாக்கித்தான் எதிர்த் தாக்குதல் நடத்தாமல் இருந்தது போல், இம்முறையும் இருக்கும் என்று கூறமுடியாது. அணு ஆயுதங்களை இந்தியாவும் பாக்கித்தானும் வைத்துள்ள நிலையில் முழு வீச்சிலான போர் மூளாமல் தவிர்ப்பதே இரண்டு நாடுகளுக்கும் நல்லதாகும். பயங்கரவாதிகள் நடத்திய இத்தாக்குதலுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தன்மையில் எதிர்வினை ஆற்றக்கூடாது.

பாக்கித்தான் பிரதமர் இம்ரான்கான் புல்வாமா தாக்குதலுக்கும் பாக்கித்தானுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தைக் கேட்டிருக்கிறார். 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பாக்கித்தானிடம் உரிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. 2016 சனவரியில் பதான்கோட் வானூர்தி தளத்தின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக பாக்கித்தான் குழு நேரில் பார்வையிட அனுமதிக்கப்பட்டு, ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. இவற்றின் மீது பாக்கித்தான் அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இம்ரான்கான் இராணுவத்தின் குரலை எதிரொலிக்கிறார்.

0PS pulwava attack 600காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் உள்ள ஒரே வழி காஷ்மீரிகளிடமிருந்து இந்திய அரசு பறித்த உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கு வதே ஆகும். புல்வாமா தாக்குதல் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் செய்தி ஏடுகளும், மணிக்கணக் கில் விவாதங்கள் நடத்தும் காட்சி ஊடகங்களும் காஷ்மீரிகளின் பறிக்கப்பட்ட உரிமைகள் குறித்து எதுவும் கூறாமல் உண்மை நிலையை மறைக்கப் பார்க்கின்றன.

2016 ஆகத்து 9 அன்று மத்தியப்பிரதேசத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் நரேந்திர மோடி, “தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் சிலர் போராட்டம் நடத்துகின்றனர்; ஒவ்வொரு இந்தியனுக் கும் இருக்கும் சுதந்தரம் காஷ்மீரிக்கும் இருக்கிறது” என்று கூறினார். வரலாற்று உண்மையை மூடி மறைக்கும் பேச்சு இது! இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிற தனித்துவமான தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டப்படி பெற்றிருந்தனர். இந்த உரிமைகள் பறிக்கப்பட்டதால்தான் காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர். இவர்களை இந்தியத் தேசிய நீரோட்டத்தில் முற்றிலுமாகக் கரைத்து விடவேண்டு மென்பதற்காக ஆறு காஷ்மீரிகளுக்கு ஒரு இந்திய இராணுவ வீரர் துப்பாக்கியுடன் அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறார்.

1947 அக்டோபர் 27 அன்று காஷ்மீர் மன்னர் அரிசிங் இந்தியாவுடன் இணைவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பம்  இட்டார். அதன்படி, பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், தொலைத் தொடர்பு தவிர்த்த மற்ற விடயங்கள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் காஷ்மீருக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 370இல் இந்தப் பாதுகாப்பு 1949 அக்டோபரில் உறுதி செய்யப் பட்டது.

1952இல் ஜம்மு-காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா வுக்கும் இந்தியப் பிரதமர் நேருவுக்கும் இடையில் தில்லியில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஜம்மு-காஷ்மீருக்குத் தனிக்கொடி உண்டு; ஆளுநர் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படு வார்; எஞ்சிய அதிகாரங்கள் ஜம்மு-காஷ்மீருக்கே உரியது; உச்சநீதிமன்றம் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல் கள் தவிர, பிறவற்றில் தலையிட முடியாது; தன்னாட்சி கொண்ட தேர்தல் ஆணையம் முதலான அதிகாரங்கள் தில்லி ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டன. தில்லி ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1954இல் நாடாளு மன்றத்தில் விதி 35-ஏ இயற்றப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் நிரந்தரக் குடிமக்களுக்கான சிறப்பு உரிமைகள், சலுகைகள் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் உண்டு.  1951இல் ஜம்மு-காஷ்மீரில் நடந்த தேர்தல் மூலம் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனியாக ஒரு அரசியல் சட்டம் 1956 நவம்பரில் இயற்றப்பட்டு, 1957 சனவரி 26இல் நடப்புக்கு வந்தது. அதில் மேற்குறித் துள்ள உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. இந்த விதி 35-ஏ, விதி 370 ஆகியவற்றை நீக்க வேண்டுமென்று சங்பரிவாரங்கள் நீண்டகாலமாகக் கோரி வரு கின்றன.

நேருவின் மறைவுக்குப்பின் 1964 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சட்டப்படி வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரங்கள் இந்திய அரசால் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. குறிப்பாக, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காஷ்மீர் அரசியலில் போட்டி அதிகார மய்யங்களை உருவாக்கி, அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, பற்பல ஆட்சிக்கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் செய்து, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி உரிமைகளை முடமாக்கினார். 1954 முதல் 1994 வரையிலான காலத்தில் இந்திய அரசின் ஏகாதிபத்திய மனப்போக்கின் காரணமாக, குடியரசுத் தலைவர் பிறப்பித்த 47 ஆணைகள் மூலம் காஷ்மீரின் தன்னாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன.

தில்லி ஆட்சியாளர்களால் ஜம்மு-காஷ்மீரின் அரசியல் வாதிகள் பகடைக் காய்களாகத் தொடர்ந்து பயன்படுத்தப் படுவதை எதிர்த்தே காஷ்மீர் இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்பதை அமைத்து தில்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத் தைத் தொடங்கினார்கள். காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என்ற பிரிவினை கோரும் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இதைச் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாகக் கருதி, படை வலிமையைக் கொண்டு அடக்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. காஷ்மீரின் கொந்தளிப் பான சூழ்நிலையைப் பாக்கித்தான் பயன்படுத்தி, தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து, தாக்குதல்களை நடத்தி வருகிறது.

எனவே ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி முன்பு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி உரிமைகளை மீண்டும் அளிப்பதே ஆகும். 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஜம்மு-காஷ்மீரில் பெரும் கலவரம் நடந்தது. 130 பேர் கொல்லப்பட்டனர். அப்போது இது குறித்து ஆராய நடுவண் அரசு ஒரு தூதுக் குழுவை அமைத்தது. 2011இல் அக்குழு அளித்த அறிக் கையில், 1952க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நடுவண் அரசின் சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தில் விதி 370 தற்காலிக மானது என்று இருப்பதைச் சிறப்பு ஏற்பாடு என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டிருந்தது.

எனவே இந்திய அரசு காஷ்மீரின் பிரிவினை கோரும் தலைவர்கள் உட்பட அனைத்துத் தரப்புத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பறிக்கப் பட்ட தன்னாட்சி உரிமைகளை மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அளிப்பதே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்.

மொழிவழித் தேசிய இனங்களின் அடிப்படையில் அமைந்துள்ள எல்லா மாநிலங்களுக்கும் இத்தகைய தன்னாட்சி உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். மய்யப் படுத்தப்பட்ட ஒற்றை அதிகார நடுவண் ஆட்சி எல்லா வகையிலும் மக்களுக்கு எதிரான ஆட்சியாகவே இருந்து வருகிறது. உண்மையான சனநாயகம் தன்னாட்சி பெற்ற மாநிலங்கள் மூலமே இந்தியாவில் மலரும்.

குறிப்பு : பிப்ரவரி 26 அன்று பாக்கித்தானில் பாலக்கோட்டில் ஜெய்சிஸ்-இ-முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வான்படை தாக்குதல் நடத்தி யற்கு முன்பு எழுத்தப்பட்ட கட்டுரை.