ஈழத்தமிழர்கள் இன்றைக்கு உலகிலே படுகின்ற துயர் ஒட்டு மொத்த தமிழினத்தை அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாழ்கின்ற தமிழர்களை பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழீழம் என்ற நிலையைத் தாண்டி இந்திய வாழ் தமிழர்களின் எதிர்காலத்தைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

Women LTTEதமிழ் மொழி, இனம், வாழ்வியல், உரிமை என்ற எல்லாமே இன்று கேலிக்கும் தாழ்வுக்கும் உள்ளாகியிருக்கின்றன. திட்டமிட்ட தன்னல அரசியல் சதிகளும், கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டமும் தமிழ் மக்களை அப்படியே மாயைக்குள் மூடியிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் மானமும் உணர்வும் மயிரினும் சிறிதென மதிக்கப் படுகின்றன.

தமிழர்களின் மானத்தையும் உணர்வையும் தமிழர்களே முன்னின்று களையும் ஒருஅவல நிலை தமிழகத்தைப் பற்றியிருக்கின்றது.

தமிழீழத்தில் கொட்டுகின்ற ஒவ்வொரு துளிக் குருதியும் தமிழ் நாட்டுத் தமிழனுக்கு ஒவ்வொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. இழந்து போன மதியைக் கூர்ப்பாக்குகிறது.

தமிழ்நாட்டில் விளைந்திருக்கிற கேடுகளைக் களைய நீண்டகாலச் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் விதைத்து "தமிழை" மீள உருவாக்குவதே இன்றைக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாகும். அவசர கோலத்தில் உடனடியாகச் செய்ய நினைக்கும் எதுவும் பயன் தராது.

தமிழ் இனத்தின் உயிர் வாதை என்கின்ற உச்ச கட்ட வாதையின் போது தமிழ் என்ற சொல்லைச் சுற்றி நிற்கின்ற மொழி, அரசியல், சாதி, மதம், கல்வி, பொருளியல் என்ற எந்தக் கூறுகளும் உதவிக் கரங்களை நீட்டவில்லை. தமிழ்நாட்டில் தீயாடிச் செத்து விழுந்த 12 பேர்களின் கையறு தனி மனித நிலையைக் கடந்து நிறுவனப் படுத்தப்பட்ட யாரின் பங்களிப்பும் மனசாட்சியோடும் நேர்மையாகவும் இருக்கவில்லை.

அதேபோல இவர்களெல்லாம் தமிழர்களா? என்றால் - ஆம் என்ற விடையைத் தவிர வேறெதுவும் இல்லை. எந்தச் சாதியையும் குறிப்பிட்டுச் சொல்லி இவர்கள் ஆதரவாக இருந்தார்கள் என்று எப்படிச் சொல்ல முடியவில்லையோ அப்படியே இன்னார் எதிர்த்தார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. எந்த மதத்தையும் குறிப்பிட்டு ஆதரவாக இருந்தார்கள் அல்லது எதிர்த்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஒரு சாதாரண இல்லறச் சண்டையையும் பெரிது படுத்தி எழுதியோ, நீள்தொடர்களாகப் படமெடுத்தும் காசு சம்பாதிக்கும் எழுத்தாளர்களும் மிடையகாரரும் நாணமின்றி ஒரு இனப்படுகொலைக்கு மெளன சாட்சியாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

ஆகவே தமிழ்நாட்டுக் குமுகத்தின் பல கோணங்களும் பரிமாணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டியிருக்கிறது. அதிலே துவக்கமாக ஒரு அடிப்படையான விதயத்தில் தமிழ் மக்களுக்குச் சரியான தெளிவு வரவேண்டும். அணிமைய ஈழத்துயர் நமக்குக் காட்டிய செய்தி என்ன?

"தமிழர்களில் ஒரு பகுதியினர் சொந்த இனம் அழிவதன்பால் வேதனைப்பட்டார்கள்; பிறிதொரு பகுதியினர் கவலை கொள்ளாமலும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள்".

இந்தச் செய்தி உண்மைதானே!

சாட்சிகளை அரசியல் கட்சிகளின் அறிக்கைகளில் காணலாம். வலைப்பதிவுகளில் காணலாம். தமிழினம் செத்து விழுவதை கூட்டமாக மகிழ்ந்து கொண்டாடிய ஒரு மடற்குழுவில் காணலாம்.

கவலை கொள்ளாமலும் மகிழ்ச்சியாகவும் இருந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தானே! அவர்கள் என்ன ஒரே சாதியைச் சேர்ந்தவர்களா? அல்லது எல்லாமே ஆரியர்களா? அல்லது வேறெப்படி என்று யோசித்தால் நமக்குக் கிடைக்கும் விடை என்ன?

ஈழத்துயரைக் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தவர்களை மட்டும்தானா நாம் கண்டு வருந்துகிறோம்? இல்லை - உன்னிப்பாகப் பார்த்தால் ஈழத்துயரை சுவைத்தவர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கும். அவர்கள் அடாது தொடர்ந்து தமிழ் மொழியைத் தாழ்த்தி வருவார்கள். கோயிலில் தமிழ் நுழைவதைத் தடுப்பவர்களாக இருப்பார்கள். இழந்து போன தமிழ்ச் சொற்களை மீட்பவர்களைக் கூட எள்ளி நகையாடுவார்கள். தமிழ் முன்னோர்களை இழிவாகப் பேசுவார்கள். தமிழ், தமிழ் மக்கள் என்று எந்தக் கூறை எடுத்துக் கொண்டாலும் அதற்கு இடராகப் படர்வார்கள்.

இவர்கள் யார்? தமிழினத்தையும் முகவரியையும் அழிக்கத் துடிக்கும் இவர்கள் யார்? தமிழ் மொழி, பண்பாடு என்று பேச முனையும் அப்பாவித் தமிழ் மக்களையும் மூளைச்சலவை செய்து விடும் இவர்கள் யார்? தமிழ் மக்களைப் பொய்யான பாதைக்குத் திசை திருப்பி விடும் இவர்கள் யார்? தமிழ்நாட்டைத் தவிர, தமிழீழத்தைத் தவிர, தமிழ் மொழியைத் தவிர தமிழ் இனத்தைத் தவிர உலகில் உள்ள எல்லாமே உயர்வாகக் கொள்ளும் இவர்கள் யார்?

தமிழ்நாட்டின் தெருக்களில், நீர்க்குழாயடிகளில் இன்ன பிற இடங்களில் பெண்கள் போடுகின்ற சண்டைகளில் பயன்படுத்துகின்ற சொல்லாயுதங்களில் முக்கியமும் தொன்மையும் ஆனவை மூன்று. தேவடியாள், தட்டுவாணி, இலம்பாடி என்பன அவை. இவற்றிற்கு முன்னொட்டு, பின்னொட்டு, ஓசை, வழக்கு மாற்றங்கள் இடத்திற்கு இடம் வேறுபடும். தேவடியாள் என்ற சொல்லும் தட்டுவாணி என்ற சொல்லும் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்டவை. அதனைப் பற்றித் தனியே பார்ப்போம்.

இந்த இலம்பாடி என்ற சொல் மற்ற இரண்டு சொற்களைப் போல ஒரு கொடுஞ்சொல் என்று மட்டுமே நான் பலநாளும் எண்ணியதுண்டு. பல காலம் கழித்துதான் அது என்ன என்ற விடை கிடைத்தது.

இலம்பாடு என்ற சொல் வினையைக் குறித்தது. இலம்பாடி என்பது ஆளைக் குறித்தது. இலம் + பாடி = இலம்பாடி. இலம் என்றால் இல்லை, இல்லாமை, சிறுமை என்ற பொருள்களைக் கொண்டது.

எதுவுமே இல்லை, எதுவுமே எமதில்லை என்று பாடிப் பிழைப்பதே இலம்பாடித் தொழில்.

இலம்பாடுதல் என்பது இழிவாகக் கருதப்பட்டது தமிழ்க் குமுகத்தில். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியிடம், "வேறு யாரிடமும் போய் பொருள் இலம் பாடினால் அது இழிவுடையுது; எனக்கு அது நாணத்தைத் தரும்" என்று சொல்லவேதான் கண்ணகி தனது சிலம்பொன்றைக் கழட்டித் தருகிறாள். கோவலனின் பல சிறப்புகளில் அவன் தன்மானமும் ஒன்று.

"இலம்பாடு நாணுத் தரும் எனக்கு" என்ன-
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
'சிலம்பு உள; கொண்ம்' என-'சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்,
- சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை

மேலோட்டமாகப் பார்த்தால் இஃது இல்லாத நிலையில் பொருள் தேடும் செயலாகத் தோன்றி - இலம்பாடினால் என்ன என்று தோன்றும். இரப்பதுதானே என்று தோன்றும். ஆனால் இரத்தல் வேறு. இலம்பாடுதல் வேறு. இரத்தல் என்பது ஒன்றும் இல்லாத நிலையில் ஒரு வேளை சோற்றுக்குப் பிச்சை எடுப்பது. இலம்பாடுதல் என்பது எந்த உழைப்பும் செய்யாமல், இலம்பாடுதலையே தொழிலாகக் கொள்வது.

"இல்லை எம்மிடம்,
உம்மதே உயர்ந்தது" (- இலம்பாடிகானம்-1)

என்று பிறரை நயந்து, பல்லைக் காண்பித்து நத்தி வாழ்வது. தமது பிழைப்பிற்காக தேவடியாள்த்தனம் என்றல்ல தட்டுவாணித்தனம் என்றல்ல; எதை வேண்டுமானாலும் செய்து பிழைப்பதுதான் இலம்பாடித்தனம்.

பொருள் இருந்தாலும் பொருள் இல்லையாயாயினும்

"இல்லோம் இல்லோம்
உம்போல் இல்லோம்
எம்மோடு நில்லோம்" (- இலம்பாடிகானம்-2) என்று சொல்லி எல்லாருக்கும் நல்லவர் போல் நடித்து யாருடனும் எதற்கும் கூட்டு வைத்து எல்லாரையும் ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பே இலம்பாடிப் பிழைப்பு. தமிழைப் பழித்துப் பிறவற்றை உயர்த்தி வாழ்வது போல.

தேவடியாள் என்பவள் இறைவன் பெயரால் ஏமாற்றிய ஆதிக்க சக்திகளுக்கு மட்டும் உடல் தந்து பிழைப்பு நடத்துபவள். தட்டுவாணி (விலைமகள்) என்பவள் யார் காசு கொடுத்தாலும் அவருக்கு உடல் தருபவள்.

தேவடியாளுக்கு நிறுவனப்படுத்தப்பட்ட உறுதியான சந்தை உண்டு. தட்டுவாணிக்குத் தன் தொழிலைச் சந்தைப் படுத்த வேண்டிய அவசியமும் உண்டு. இருவருமே பெண்கள்தான். ஆனால் இலம்பாடிக்குப் பால் இல்லை. ஆணாக, பெண்ணாக, குழுவாகப் பரந்து கிடப்பார்கள். இவர்களின் புழுங்கிய பிழைப்புக்கு எல்லா மொழியும் எல்லா இனமும் சந்தையாகும். எங்கெல்லாம் எப்படியெல்லாம் "இலம்" பாடிப் பிழைக்க முடியுமோ அப்படிப் பிழைப்பார்கள். கூடவே எதாவது ஒரு சாமியைக் கும்பிட்டுக் கொள்வார்கள். தேவைப்படும்போது எல்லாச் சாமியையும் கும்பிட்டுக் கொள்வார்கள். தன்மானத்துடன் வாழ்பவர்கள் இவர்களுக்குப் பகைவர்கள்.

பண்பாடும் தொன்மையும் இவர்களுக்கு நஞ்சு. தளராதவரைத் தளரவைப்பதும், தளர்ந்தவுடன் தள்ளிப் போவதும், தாழ்ந்தாரைத் தாழ்த்தாலும், உயர்பவர்களையும் உயர்ந்தவைகளையும் ஒட்டிக் கொள்வதும் இவர்களது வாழ்க்கை முறை.

தமிழர்கள் என்று சொல்வார்கள் - ஆனால்
"இல்லோம் இல்லோம்
இந்தி மொழி இல்லோம்
தள்ளோம் தள்ளோம்
இந்தி மொழி தள்ளோம்" (-இலம்பாடி கானம்-3)
என்பது இவர்களின் புகழ் பெற்ற பாட்டு.

தமிழ் எங்கள் தாய்மொழி என்பார்கள் - ஆனால்
"இல்லோம் இல்லோம்
தமிழில் இறைவன் இல்லோம் -
கல்லோம் கல்லோம்
பள்ளியில் தமிழ் கல்லோம்" (-இலம்பாடி கானம்-4)
என்பது இவர்களின் தொன்மையான பாட்டு.

தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்பார்கள் – ஆனால் முடை நாறும் மொழிக் கலப்பே உயர்வு என்று பேசுவார்கள். தமிழ் எமக்கு அமுது என்பார்கள் - ஆனால் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளோடு முதிர்ச்சியற்ற ஒப்பீடு செய்து தமிழை எவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவையும் செய்வார்கள்.

தமிழர்கள் உலகம் முழுதும் இருப்பது பெருமை என்பார்கள்; போகின்ற இடத்திலே பிறநாட்டுத் தாய்மொழி உணர்வைப் பாராட்டுவார்கள் – ஆனால் தமிழரின் தாய்மொழி உணர்வைக் கேலி செய்வார்கள்.

செருமனி போனேன் கொரியா போனேன் என்பார்கள்; செருமனியரும் கொரியரும் தாய்மொழி பேசினால் கண்ணை விரித்து வியந்து மகிழ்வார்கள். ஆனால் தமிழர்கள் தாய்மொழியில் பேசினால் மொழிவெறி என்பார்கள். தமிழ்த் தூய்மை என்று பேசிவிட்டாலோ காதைப் பொத்திக் கொள்வார்கள்.

ஈழத்தமிழர் கண்டு வியந்து நிற்கிறேன்; எனக்கு எத்தனையோ ஈழத்தமிழர் நண்பர்கள் உண்டு. அவர்கள் வெல்ல வேண்டும் என்பார்கள்; ஆனால் அதே ஆள் இந்தப் பக்கம் திரும்பி... "தூ.. இவர்கள் எவ்வளவு முட்டாள்கள், இப்படிக் காசு செலவு பண்ணி போராடுகிறார்களே; அதற்குப் பதில் கடலைத் தூர்த்துத் தமக்கென்று ஒரு நாடு கட்டிக் கொண்டால் என்ன? தமிழன் எப்பொழுதுமே முட்டாள்கள்" என்று தனது அடிநத்திகளோடு பிரச்சாரம் செய்வார்கள். ஈழத்தமிழர்களுக்கு இதெல்லாம் புரியவும் புரியாது; அவர்களையே நல்லவர்களாக எண்ணிப் பட்டமும் கொடுப்பார்கள்.

ஒரு பக்கம் ஈழத்தமிழர் வாழ்க என்பார்கள்! இன்னொரு பக்கம் "கலிங்கத்துப் பரணியிலே எவ்வளவு பிணங்களைப் பார்த்தீர்கள்? இப்பொழுது தமிழ்ப் பிணங்களைப் பாருங்கள்!" என்று நையாண்டி செய்த சூழல் இணையத்தில் பலருக்கும் மனதை விட்டு மாறவில்லை.

(அரசியல் வரலாறு இலக்கியம் அறிந்தோர் இதனை ஓர்ந்து
பார்த்துக் கொண்டு மேலும் புரிந்து கொள்ளுங்கள். இது எவ்வளவு
நாசகார மனம் என்பது உங்களுக்குப் புரியும்.
தமிழினத்தைச் சுற்றி இருக்கிற சதியின் வலியும் புரியும்).

தனி இலம்பாடிகள் இப்படியென்றால், இலம்பாடிக் கூட்டம் எப்படி உருவாகிறது என்றும் அறிய வேண்டும். ஒரு எடுத்துக்காட்டைக் கூறுவேன்:

ஒரு பாடிப் பிழைக்கும் இலம்பாடி ஒரு நாட்டுக்குப் போகிறது. அதற்கு அங்கே ஞானம் பொத்துக் கொள்ள, "தமிழ் மொழியை சனநாயகப் படுத்த வேண்டும்" என்று சொல்கிறது. அதே நாட்டில் பிழைத்துக் கொழுத்த இலம்பாடி ஒன்று அந்தச் சொற்களைக் குதியாட்டம் போட்டு இழுத்து வந்து இன்னொரு இலம்பாடியிடம் கொட்டுகிறது இணையத்தில். இந்த இலம்பாடிகளோடு மேலும் சில இலம்பாடிகள் சேர்ந்து கொண்டு

"தாய்மொழி தமிழை
சனநாயகப் படுத்துவோம் - முதலில்
கிரந்தப் படுத்துவோம்; அப்படியே
ஆங்கிலப் படுத்துவோம் - மொத்தத்தில்
தமிழை நாசப் படுத்துவோம்!" (-இலம்பாடி கானம்-5)

என்று போட்ட ஆட்டம் காணக் கண் கொள்ளாத ஒன்று. ஆக, இலம்பாடிக் கூட்டம், எங்கெல்லாம் எதெற்கெல்லாம் தமிழ் பழிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் கூடி விடும். அவர்களுக்கு ஆன போது கூடிக் கொள்வதும் ஆகாத போது கழட்டிக் கொள்வதும் இலம்பாடிக் கூட்டத்தின் தனித்தன்மை என்று அறிவதோடு தமிழுக்கும் தமிழினத்திற்கும் இழுக்கு சேர்க்கும் எல்லா இடத்திலும் இந்த இலம்பாடிகள் நீக்கமற நிறைந்திருப்பார்கள் என்று அறிய வேண்டும்.

இலம்பாடிகளுக்குச் சாதி, மத, பொருளாதார, கல்வி, வேறுபாடு என்றெல்லாம் கிடையாது என்பதனை ஏற்கனவே சொல்லப் பட்டிருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொள்தல் அவசியம்.

சனநாயகம் என்றால் என்ன? தாய்மொழியை எப்படி சனநாயகப் படுத்துவது? என்பதெல்லாம் படுவாய்க் கேள்விகள்; (படுவாய் > படவா ~ அதிகப்பிரசங்கி) அவற்றை அவர்களிடம் கேட்க முடியாது. கேட்டால் உடனே எல்லா இலம்பாடிகளும் பிறாண்டி விடும். கேட்க வேண்டும் என்று எண்ணியவர்களும் இலம்பாடிகளுக்குப் பயந்து போய் "தங்கள் தாய்மொழியை சனநாயகப் படுத்த முனையும் இவர்கள் தங்கள் தாயையும் சனநாயகப் படுத்துவோம்" என்றளவிற்குப் போய் விட்டால் என்ன செய்வது? என்று வாயை மூடிக் கொண்டு விட்டார்கள்.

தமிழருக்குள் ஊடறுத்து நிற்கும் இத்தன்மையரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் இலம் என்று பாடும் தமிழ் இலம்பாடிகளைச் சரியாக அறிந்து கொள்வதொடு, பாடிகள் ஒரே தன்மையர் என்றும் தமிழினத்தில் அவர்களுக்கு நாடு, மொழி, சாதி, மதம், பொருளாதாரம், கல்வி என்ற எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும் தெளிவாக அறிதல் வேண்டும்.

தொகுப்பாக தமிழ் இலம்பாடிகள் என்பர்:

- தமிழை எப்பொழுதும் தாழ்த்திப் பேசுவர்.
- தமிழைத் தவிர உலகில் உள்ள எல்லா மொழிகளையும் உயர்த்திப் பேசுவர்
- தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்றே தெரியாது - ஆனால் அதே கேள்வியை எல்லோரையும் கேட்டு மிரட்டுவர்
- தமிழ் இலக்கண வாடையே இருக்காது; ஆனால் தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் இழிவாகப் பேசுவர்.
- மணிப்பிரவாள எழுத்துக்களையே போற்றிப் புகழுவர்
- தில்லை முதல் எல்லாக் கோயில்களிலும் வடமொழி மட்டுமே இருக்க வாது செய்வர்.
- தூய தமிழ் என்ற பேச்சைக் கேட்டால் கூட்டமாகக் கூடி நின்று ஏசுவர்
- தன்னலத்திற்காக தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுப்பர்
- தமிழ்ச் சொற்கள் யாரேனும் அறிமுகப் படுத்தினால் கோபப் படுவர் அதில் பிழையான தமிழில் பொருந்தாத சொல்லானால் மகிழ்ச்சியடைவர்
- ஈழத்தமிழினம் எப்பொழுது அழியும் என்று காத்துக் கிடப்பர்
- ஆனால் புன்னைகை தவழ பொய் முகம் காட்டுவர்
- தமிழ் மொழிச் சொல்லை வடமொழிச் சொல் என்றால் உச்சி குளிர்ந்து போவர். ஆனால் தமிழ் மொழிச் சொல்லை தமிழ் மொழிச் சொல் என்றால் இவர்கள் "ஆதாரம் ஆயிரம் கேட்பர்".
- நல்ல தமிழ் இலக்கியங்களை யாவையுமே இவர்கள் நஞ்சு என்பர்.
- பழைய அறிஞர்கள் என்றால் சீரங்கத்துச் செருப்பும், மயிலாப்பூர் மந்தியும், கும்பகோணத்துக் குரங்கும்தான் அறிஞர்கள்; திருவாரூர் துரோகியையும் சேர்த்துக் கொள்வர்.
புதிய அறிஞர்கள் என்றால் "இலம்பாடிகள் மட்டுமே அறிஞர்கள்"

இது போல இன்னும் எவ்வளவோ சான்றுகள் உள்ளன. இவை யாவும் ஒவ்வொரு தமிழனும் அன்றாட வாழ்வில் துய்த்தவையே. துய்த்தபோதும் இலம்பாடி மாயையில் அலைக்கழிக்கப் பட்டு இலம்பாடிவயப் பட்டுப் போகிறார்கள். அதற்கு இலம்பாடிகளின் ஆயுதங்களே காரணம்.

தமிழ் இலம்பாடிகளின் ஆயுதங்கள்:

- "நடுவு நிலைமையில் எல்லோரும் எழுதவேண்டும்" என்று தாம் சார்ந்த நிலையில் எழுதும் திறன். படிப்பவரை இந்தச் சொற்கள் குழப்பி விடும். தன் மனதில் தோன்றுவது சார்பு நிலையோ என்று எண்ணி அப்படியே தொய்ந்து போய்விடுவர். நாளடைவில் இலம்பாடிமாயை பற்றிவிடும்.

- "கருத்துச் சுதந்திரம்" - இலக்கண இலக்கியத்தையே படிக்காமல் எந்தப் பொய்யையும் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்வார்கள். அது தவறு என்று ஆதாரத்தோடு சொல்ல முற்பட்டால் இந்த ஆயுதத்தை எடுத்துக் கொள்வார்கள். இது அப்பாவிகளையும் ஆர்வலர்களையும் திசை திருப்பி விட்டு விடுகிறது. மெல்ல அவர்களும் இலம்பாடி மாயையில் வீழ்ந்து விடுவர்.

- "தமிழ்ப் பற்று வேண்டும் ஆனால் வெறி கூடாது": இது ஒரு பயங்கரமான ஆயுதம் மட்டுமல்ல தந்திரம். "Happy Tamil New year" என்று புத்தாண்டின் காலையில் கூவுவார்கள். ஏங்க புத்தாண்டு வாழ்த்து என்று சொல்லக் கூடாதா என்று பேசினால் நேரடியாக இந்த ஆயுதத்தை எடுத்து விடுவார்கள். தமிழ் விழா ஒன்றில் "Let us sing thamizth thaay vaazhthu" என்று அழைக்கிறார்கள்.

கேட்டால் பாடச் சொல்வது பற்று. அதைத் தமிழில் சொல்லச் சொல்வது வெறி என்று விளக்கம் கொடுக்கிறார்கள். இப்படி எளிமையான விதயமும் இவர்களுக்கு தமிழ் வெறியென்று பட்டு ஆயுதத்தை எடுக்கிறார்கள். அவர்களின் அடாவடிக்கு சப்பாணித் தமிழ் அரசுகளும் அரசியலும் ஆதரவாக இருக்கின்றன.

- "தமிழீழ மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் - ஆனால் அவர்கள் ஆயுதம் கொண்டு உயிர் கொல்தல் பாவம் அல்லவா" - என்று புனிதப் பசு போலப் பேசுவார்கள். தமிழீழ வரலாறு அறியாதவர்கள் இந்த ஞானஒளியிலேயே இலம்பாடியாகி விடுவார்கள்.

- "வெளிநாட்டு வாழ்வு நிலை" - இது மிகவும் விவகாரமான உண்மை. பல தமிழ் நாட்டுக்காரர்கள் வெளிநாட்டையே பார்த்ததில்லை. ஆர்வத்தில் இவர்கள் இணையத்தில் உள்ள பல இலம்பாடிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். வெளிநாட்டில் தமிழராக இருப்போரும் உண்டு. தமிழ் இலம்பாடியாக இருப்போரும் உண்டு. வெளிநாட்டில் நல்ல நிலையில் உள்ளோரும் உண்டு. நக்கித் திரிவோரும் உண்டு. அந்தச் செண்டு புட்டி மயக்கம் பெருமளவு போய்விட்ட போதிலும், திண்ணையில் உட்கார்ந்து கொண்டு "எனக்கு இலண்டனில் நண்பர் இருக்காக, ஆசுத்திரேலியாவில் இருக்காக, அங்க இருக்காக, இங்க இருக்காக" என்று பேசுவதற்காகவோ, அல்லது ஏதேனும் தொடர்பு வழிப் பயன் கிடைக்கலாம் என்பதற்காகவோ வெற்று இலம்பாடிகளைத் தூக்கிச் சுமக்கிறார்கள்.

இதற்குப் பெருமளவும் வெள்ளை உள்ளமும், ஆர்வமும் உணர்ச்சியுமேதான் காரணம். அவை இலம்பாடிகளால் திறமாகக் களவாடப் படுகிறது. அ-னா ஆ-வன்னா மட்டும் தெரிந்திருந்தாலே இன்றைக்கெல்லாம் அறிஞர் பட்டம் கிடைத்து விடுகிறது. ஒரு சில்லரைக் கவிதை எழுதிவிட்டால் அவர் சான்றோராகவே கருதப் படுகிறார். இதில் ஒரு வேடிக்கையும் உண்டு. ஒரு வெளிநாட்டுத் தமிழ் இலம்பாடியும் தமிழ் நாட்டுத் தமிழ் இலம்பாடியும் ஒன்று சேர்ந்து விட்டால் நல்ல கலக்கலாக இருக்கும். இவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொண்டாலும் மிகச் சுவையாக இருக்கும்.

வெளிநாட்டு இலம்பாடி "இவரைப் பிடித்து வைத்தால், சின்னச் சின்ன சில்லரை வேலைகளுக்கு உதவுவார்" என்று நினைக்கும். தமிழ்நாட்டு இலம்பாடிக்கு சமயத்தில் இறக்கை முளைப்பது போலக் கனவு வரும்.

- "இறைவனுக்கு மொழியில்லை" - இந்த ஆயுதம் மிகவும் நுணுக்கமாக, தந்திரிகளால் மட்டும் கையாளப்படும். எனக்கு எல்லா சாமியும் ஒன்னு; எல்லா மதமும் ஒன்னு என்று தொடங்கி பக்திப் பரவசத்தில் மூழ்கவைத்து மெல்ல அப்படியே சமசுகிருதத்துக்குள் கொண்டு போய் மாட்டி விட்டு விடுவார்கள். மாட்டிக் கொண்டவர்கள் ஏற்கனவே பக்திப் பரவசத்தில் பேசிய எழுதிய பேச்செல்லாம் நினைத்துப் பார்த்து அப்படியே இலம்பாடிக் கூட்டத்தின் தாளம், சுரம், சதி என்று ஆய்விடுவர்.

- "தீக்கா தீம்கா" – இருப்பவற்றிலேயே மட்டமான ஆயுதம் இது. மிக மலிவான இந்த ஆயுதத்தைத் தூக்க முடியாமல் தூக்கி வீசுவார்கள் இலம்பாடிகள். யாராவது தப்பித் தவறி நல்ல தமிழில் எழுதிவிட்டால், மொழிக் கலப்பின்றி எழுதி விட்டால் அவர்கள் மேல் வீசுகின்ற முதல் ஆயுதம் இதுதான்.

நல்ல தமிழ் எழுத நினைப்பவர்களை முதல் சுற்றிலேயே வீழ்த்திவிடக் கூடிய ஆயுதம் இது.

- "இந்திய இறையாண்மை" - இது மிகக் கனமான ஆயுதம். பல சிக்கலான ஆழமான அல்லது உணர்வுப் பூர்வமான தமிழ் மொழி அல்லது தமிழ் நாடு அல்லது தமிழின விதயம் என்றால் உடனே இலம்பாடிக் கூட்டம் இந்த ஆயுதத்தை எடுத்து வீசி விடும். என்னடா இது - "சிங்களன் தமிழனைக் கொல்றானே" என்று அழுதால் - "ஏய் தமிழன் சாவுறான் என்று அழுவாதே! அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது; அதைவிட முக்கியம் இலங்கை இறையாண்மை"; பேசாமே காசாவுக்கு அழுவு இல்லாட்டி ஈராக்குக்கு அழுவு இல்லாட்டி எங்கேயாவது பூகம்பம் வந்தால் அந்தப் பக்கந் திரும்பி அழுவு என்பார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிந்து வீழ்ந்த போது அழுதுத் துடித்த இலம்பாடிகளுக்கு ஈழப்படுகொலைகள் அழுகையைத் தரவில்லை.

முதன் முதலா இந்த இலம்பாடிக் கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கு இது தலையைச் சுற்றுகின்ற விதயம். இலம்பாடிமாயையில் வீழ்ந்துவிட்டவர்களுக்கு ஒன்றும் சலனமிருக்காது. ஆனால் இந்த இலம்பாடிக் கூட்டத்தைப் பலநாளும் பார்த்து வருபவர்களுக்கு நன்கு இது புரியும்.

இப்படி இன்னும் நிறைய ஆயுதங்களை இலம்பாடிகளிடம் காணலாம். அவற்றைப் பயன்படுத்தி நல்ல தமிழ் மக்களைக் குழப்பிவிட்டு அவர்களையும் இலம்பாட வைத்து விடுகிறார்கள் என்று சொல்லி நிறைவாக:

"தமிழினத்தில் இரண்டே இரண்டுதான் சாதிகள்
ஒன்று தமிழ்ச்சாதி; பிறிது தமிழ் இலம்பாடிச் சாதி"

"இலம்பாடிச் சாதியிடம் ஒருமித்த இராகம் இருக்கிறது;
தமிழ்ச் சாதி ஒன்றுக் கொன்று முரண்படுகிறது"

தமிழ் தமிழினம் என்று வரும்போது "இது எனக்கு ஏற்பு - அது பரவாயில்லை - அது பற்றிக் கவலையில்லை" என்ற அணுகுமுறையை தமிழ்ச் சாதி கைவிட்டு தமிழ் இலம்பாடிகளிடம் இருந்து தமிழையும், இலம்பாடி மாயையில் வீழ்ந்திருக்கிற தமிழர்களையும் மீட்கவேண்டிய "முழு" பொறுப்பினை உணரவேண்டும்.

இலம்பாடித்தனம் என்பது பார்ப்பனீயம்தானே என்று கருதிவிடக் கூடாது. பார்ப்பனீயம் என்பது இலம்பாடியத்தின் ஒரு உள் பகுதி அவ்வளவுதான். பார்ப்பனீயத்தைக் கடந்தது இலம்பாடியம். பார்ப்பனீயத்தின் எல்லைகளைவிட இலம்பாடியத்தின் எல்லைகள் மிகப் பெரிது. அணிமைய ஈழத் துயருக்குக் காரணம் பார்ப்பனீயம் மட்டும் அல்ல; இலம்பாடியம்தான் முக்கிய காரணம்!

பார்ப்பனீயம் என்று பேசுவீர்களாயின், அது ஒரு சாதிக்கு சொந்தமல்ல என்றாலும் சாதிக்குள் நுழைய விட்டு விடுகிறது. அதிலே தமிழ் மக்களும் ஆர்வலர்களும் அதைத் தாண்டி நடைபெறுகின்ற இலம்பாடியத்தைக் காணாமல் விட்டு விடுகிறார்கள்.

பார்ப்பனீயம் என்று பேசினால் பெரியார் திடலைக் காட்டி இலம்பாடிகள் குழப்பி விடுகிறார்கள். இந்த இலம்பாடியத்தை விளங்கிக் கொண்டால்தான் எந்த மாற்றும் சரியாகக் கொணரப்பட முடியும்.

இலம்பாடிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இலம்பாடியத்தை உணர்ந்து பரப்புதல் வேண்டும். இதுவே மாற்றம் வேண்டிகளின் துவக்கம். போக வேண்டிய தூரம் நிறைய.

Pin It