இந்தியாவிலுள்ள அனைத்திந்தியக் கட்சிகள் இந்திய தேசியக் காங்கிரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு), பாரதிய சனதாக் கட்சி முதலானவை.

காங்கிரசுக்குக் குறிக்கோள் காந்தி ராஜ்யம் - இராமராஜ்யம் அமைப்பது. அதற்கான அடிப்படை யை 1948இல் பண்டித வல்லப பந்த் அமைத் தார்; அதை இராஜீவ் காந்தி 1984-89இல் கெட்டிப் படுத்தினார்; 1991-1995இல் பி.வி. நரசிம்மராவ் மேலும் கெட்டிப்படுத்தினார். ஆனால் காங்கிரசு, இராமராஜ்யம் அமைப்பதில் தோற்றுவிட்டது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாரதிய சனதாக் கட்சி இராமராஜ்யம் அமைக்கும் பணியை நிறைவேற்றிட அல்லும் பகலும் பாடுபடுகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னா 8 கோடி இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தானை 1947 ஆகத்தில் பெற்றார், அது “இஸ்லாமிய அரசாக” பாக்கித்தானில் அமைந்துவிட்டது.

26.12.1925இல் நிறுவப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா முதலான மாநிலங்களில் மாநில அரசுகளை மட்டுமே அமைத்தன. இந்திய அரசை ஒருபோதும் கைப்பற்றவில்லை.

1916இல் சென்னையில் அமைக்கப்பட்ட “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” - சென்னை மாகாணக் கட்சியாக மட்டுமே இயங்கியது. மாகாண அரசை 17 ஆண்டுகள் ஆண்டது. பார்ப்பனரல்லாதார் நலன் கருதி எண்ணற்ற சட்ட திட்டங்களை அது மேற்கொண்டது. ஊழலற்ற நல்லாட்சியைத் தந்தது. இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை எப்போதும் அது மேற்கொள்ளவில்லை.

பெரியார் ஈ.வெ.ரா.வின் முயற்சியால், 26.12.1926இல் தோற்றுவிக்கப்பட்ட “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்”, 1927 முதல் சமதர்மம் பற்றிப் பேசியது. அதற்கு முன் தேவை வருண சாதி ஒழிப்பு - பழக்கவழக்கச் சட்ட ஒழிப்பு என்பதைத் துலாம்பரமாக அறிவித்தது.

1916இல் தோற்றுவிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் கட்சியின் தலைவராக, 29.12.1938இல் ஈ.வெ.ரா. தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தலைவராக அமர்ந்த ஓராண்டில் - 17.12.1939இல் “திராவிட நாடு திராவிடருக்கே!” என்ற அரசியல் குறிக்கோளை அறிவித்தார்.

அந்தக் கோரிக்கை “முழுமையான - தனிச் சுதந்தர நாடு தான்” என்பதை 30.9.1945 திருச்சி திராவிடர் கழக மாநாட்டில் முதன்முதலாக உறுதி செய்தார். அதற்கான இணக்கமான நடவடிக்கைகளை சென்னை மாகாணம் முழுவதிலுமோ, அனைத்திந்திய அள விலோ அவர் எப்போதும் மேற்கொள்ளவில்லை.

நாட்டுப் பிரிவினை என்பது, இந்திய ஆட்சிக்கு எதிரான - இந்திய முப்படைகளுக்ககு எதிரான நேரடியான போர் என்பது - பல இலக்கம் பேரைச் சாகக் கொடுக்கும் போர் என்பது மக்களுக்குப் புரிய வைக்கப்படவில்லை. வாயாலே பேசிப் பேசி, கையாலே எழுதி எழுதி, சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் மட்டும் செயல்பட்டு, “திராவிட நாட்டை அடைய முடியாது” என்பதும் புரிய வைக்கப்படவில்லை.

1.11.1956-க்குப் பிறகு, “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” வேண்டும் - அதுபோதும் என்று பெரியார் எடுத்த முடிவு மிகச் சரியானது. அதன் பிறகும் மேலேகண்ட தன்மையிலான விடுதலைப் போருக்கு எந்த ஆயத்த மும் செய்யப்படவில்லை.

இந்தச் சூழலில் 17.9.1949இல் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 1957இல் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் ஈடுபட்ட பின்னர், பதவிக்குப் போக, திராவிட நாடு கோரிக்கை ஒரு தடை என்று புரிந்தவுடன், மெத்தப் படித்த அறிஞர் சி.என். அண்ணா துரை, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டோம்” என, 1962இல் அறிவித்தார்.

3.3.1967இல் தமிழ்நாட்டில், 138 சட்டமன்ற உறுப் பினர்களுடன் ஆட்சி அமைத்த தி.மு.க. (1) சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டத்தை 1968இல் இயற்றியது. (2) ‘சென்னை மாநிலம்’ என்ற பெயரைத் “தமிழ்நாடு” என மாற்றியது.

1972இல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 25% என்பதிலிருந்து 31% ஆக உயர்த்தியது; பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 16ரூ-லிருந்து 18% ஆக உயர்த்தியது; 1989இல் பழங்குடியினருக்கு முதன்முதலாக 1% தனி இடஒதுக்கீடு வழங்கியது; பெண்களுக்குச் சம சொத்துரிமையை வழங்கியது.

ஆனால், தமிழகத்தில் 1972 முதல் ஊழலுக்கு வித்திட்டது தி.மு.க.

மதுக்குடிக்கு வழிவகுத்தது தி.மு.க. இவை உண்மை.

இந்த ஊழலையும், மதுக்குடியையும் தொடர்ந்து 1987 முடிய வளர்த்தெடுத்தது எம்.ஜி.ஆர். தலைமை யிலான அ.இ.அ.தி.மு.க. அதனை 1991க்கும் 2016 க்கும் இடையில், இமயமலை உச்சி அளவுக்கு வளர்த் தெடுத்தது செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.

ஊழல், தனி உடைமை உரிமை உள்ள வரை யில் ஒழியாது.

முதலாளித்துவப் பொருளாதாரம், ஆட்சியின் கொள்கையாக இருக்கும் வரை, ஊழலின் ஊற்றுக் கண் அடைபடாது.

இந்த உண்மையை, இன்று இந்தியாவிலுள்ள 126 கோடி மக்களில் எத்தனைக் கோடிப் பேருக்கு, யார் புரிய வைத்தார்கள்?

தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி மக்களுள் எத்தனை இலக்கம் பேருக்கு, எவர்கள் புரிய வைத் தார்கள்?

இவற்றைப் புரிய வைக்காமல் 2011 வரையில் தி.மு.க., அ.தி.மு.க. இவற்றின் நிழலில் பதவி, பணம், சுகங்களைத் துய்த்தவர்கள், இன்று புதிய அறிவு தோன்றிய புத்தர்கள் போல் மாறி, ஊழல் ஒழிப்பு - மது ஒழிப்பு என்று கூரை மேல் நின்று கூவியது எப்படிச் சரியாகும்? அதற்கு என்ன பயன் கிடைக்கும்? எந்தக் குறிக்கோளும் இல்லாத - இந்தக் கட்சிகளின் நிழலில் நின்ற மதவாதக் கட்சிகளும், சாதிவாதக் கட்சி களும், ஈழ விடுதலை பேசும் கட்சிகளும், தமிழுக்கு உயிரைவிடுவோம் என்னும் கட்சிகளும்-இந்த இரண்டு ஊழல் திராவிடக் கட்சிகளையும் எப்படி ஒழிக்க முடியும்?

“முண்டனுக்கு இரண்டு ஆள்” என்பது பழ மொழி; முதுமொழி.

இரண்டு முண்டர்களுக்கும் ஈடுகொடுக்க நான்கு முரட்டு ஆள்கள் இருந்தார்கள். ஆனால் நான்கு பேர்களும் - நான்கு மூலைகளில் தனித்தனியாக நின்றார்கள். ஏன்? ஏன்?

ஊழலின் உச்சத்தில் நிறை முண்டன் கட்சி, இன்று வெற்றி குவித்துவிட்டது. ஊழலைத் தொடக்கி வைத்த கட்சி இன்று தோற்றுவிட்டது.

தமிழகக் “குடிமகன்களுக்கு”, இனி நல்ல கொண் டாட்டம்!

தாலியை அறுக்கப் போகும் தமிழ்த் தாய்மார் களுக்கு, இனி துன்பந்தரும் திண்டாட்டம்!

தமிழ்நாட்டு 2016 சட்டமன்றத் தேர்தல் தரும் பாடம் இது.

“பணம் பத்தும் செய்யும்” என்பது ஒரு கண்டு பிடிப்பு அல்ல. ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்து, அவருடைய தேர்தல் செலவுக்கும் பெட்டி நிறை யப் பணம் தரும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க. மட்டுமே. அடிமைகளாக இருக்கும் ஆளும் வகுப்பு நிருவாகிகள், காவல்துறையினர்; மற் றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகி யோரின் துணையுடன் ஒரு வாக்குக்கு 250, 500, 1000, 2000 ரூபா என எல்லோருக்கும் பணம் தந்தது ஜெயலலிதா மட்டுமே.

இவை நிற்க.

தமிழக மண் என்றும் அப்படியே இருக்கும்.

தமிழ் மக்களுக்குச் சோறு போட, 60 விழுக்காடு மக்கள் வேளாண்மை செய்வார்கள். வேளாண்மைக்கு வேண்டிய முதலாவது தேவை தண்ணீர்; இரண்டாவது தேவை கால்நடைகள் வளர்ப்பு; மூன்றாவது தேவை மின்வசதி; நான்காவது தேவை குறித்த நேரத்தில் அரசு தரும் வட்டியில்லாக் கடன்; அய்ந்தாவது தேவை வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலை.

எவர் ஆட்சியிலிருந்தாலும் - தமிழ்நாட்டு வேளாண் மக்கள் 6 கோடிப் பேருக்கு இவை தேவை. வேளாண் மக்களின் இத்தேவைகளை நிறைவு செய்யப் பாடு படுவதும் - போராடுவதும் நம் எல்லோரின் முன்னும் இருக்கும் தலையாய பணி.

தாய்த்தமிழ் இன்றும் நாளையும் இனி எப்போதும் இருக்கும்.

ஆனால் தமிழன் ஒவ்வொருவனின் - ஒவ்வொ ருத்தியின் எல்லாத் துறைப் பயன்பாட்டிலும் தமிழ் முற்றாக இருக்க வேண்டும். இன்று இது இல்லை.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் - எங்கும் எதிலும் எல்லாமும் தமிழ்வழி யில் இருக்க வேண்டும்.

இதற்கு இளைஞர்களும், மாணவச் செல்வங் களும், எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஓரணி யில் நின்று உயிரைப் பணையம் வைத்துப் போராட வேண்டும்.

வேளாண்மையைக் காத்திட, தமிழ்வழியில் கல்வி வர வழிவகுத்துப் போராடுவோம், வாருங்கள் என, எல்லாத் தமிழரையும் கைகூப்பி அழைக் கிறோம்.

- வே.ஆனைமுத்து