ஆன்மிக வட்டத்தை விட்டு வெளியில் எட்டிப்பார்க்கவே அஞ்சும் / கூச்சப்படும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சௌராஷ்டிர சமூகத்தில், தந்தை பெரியாரின் கெள்கையில் பற்றுறுதி கொண்ட மனிதராக எ ஸ்.ஆர்.இராதா இருப்பது சிறப்பினும் சிறப்பு ஆகும். அவர் தன் பதின் மூன்றாவது வயதி லேயே பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டார். தி.மு.க. தெடங்கப்பட்ட போது அக்கட்சியில் இணைந்தார். தி.மு.க.வினர் யாருமே பெரியாரைப் பொதுக் கூட்டத்தில் பேச அழைக்காத போது, இவர் தன் சொந்த ஊரான கும்பகோணத்தில் பெரியாரை அழைத்துப் பேசவைக்கும் அளவிற்கு அரசியல் தெளிவும், கருத்தியல் தெளிவும் பெற்று இருந்தார்.

book release 600தி.மு.க., அதன்பின் அ.இ.அ.தி.மு.க. என அரசியல் வாழ்க் கையில் பயணித்த அவர் தொழிற் சங்கத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், வாரியத்தலைவர், அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எனப்பல பெறுப்புகளில் மிகவும் திறமையாகவும், ஊழலின் நிழலே படாமலும் செயலாற்றி உள்ளார். இவரால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பல நன்மைகளை அடைந்து உள்ளனர். அவ்விதத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரான சௌராஷ்டிர மக்களும் பயன் அடைந்து உள்ளனர்.

அளவிலும் குணத்திலும் இவருடைய மகத்தான தொண்டு, ஆன்மிக வட்டத்தை விட்டு வெளியே எட்டிப்பார்க்கவே அஞ்சும் / கூச்சப்படும் சௌராஷ்டிர மக்களையே அவ்வட்டத்தில் இருந்து வெளியே வந்து அவருக்குப் பாராட்டுவிழா எடுக்கவேண்டும் என்று தோன்ற வைத்து இருக்கிறது.  அதன் பயனாக வெளி வந்ததுதான் இராமியா எழுதிய "பகுத்தறிவுச் சுடர் எ ஸ்.ஆர். இராதா (முன்னாள் அமைச்சர் எ ஸ்.ஆர்.இராதாவின் வாழ்க்கை வரலாறு)" எனும் நூல்.

இந்நூலை சௌராஷ்டிர கல்சுரல் அகாடெமியினர் பதிப்பித்து உள்ளனர்; 10.6.2018 அன்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.வி ஸ்வாதன் வெளியிட, பெருநகரச் சென்னையின் முன்னாள் மேயர் சைதை. துரைசாமி முதல்படியைப் பெற்றுக் கொண்டார்.

வரவேற்புரை ஆற்றிய நீதிபதி சத்தியமூர்த்தி இந்நூலின் நாயகன் எ ஸ்.ஆர்.இராதாவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். மேலும் இந்நூலைச் சுவைபடப் படைத்த நூலாசிரியரையும் அவருக்கு உற்ற துணையாகவும் உந்து விசையாகவும் செயல்பட்ட நூலாசிரியரின் துணைவியார் இராமியா சுமதி யையும் பாராட்டினார்.

நூலை வெளியிட்டுப் பேசிய வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.வி ஸ்வநாதன், இந்நூல் இராதாவின் அரசியல் வாழ்க் கையை மிகத் தெளிவாக விளக்குகிறது என்றும், எ ஸ்ஆர். இராதா அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் வழிகாட்டி என்றும், இந்நூல் காலத்தின் தேவை என்றும் கூறினார்.

நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்ட முன்னாள் மேயர் சைதை. துரைசாமி, திராவிட இயக்கத்தின் பல வரலாற்று நிகழ்வுகள் இந்நூலில் இடம்பெற்று உள்ளதாகவும், அவையும் மிகச்சுவைபட விளக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும், இதுகாலத்தின் தேவை என்று கூறிய அவர் இந்நூலை அனை வருக்கும் அளிக்கும்படியும், அதற்கான தொகையைத் தன் மனித நேய அறக்கட்டளையின் மூலம் கொடுப்பதாகவும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி பேசுகையில் எ ஸ்.ஆர்.இராதா தமது சமூக மக்களுக்கு நன்மை செய்யும் போது, அதுபிற சமூக மக்களைப் பாதித்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் என்று குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் பேசுகையில் இந்நூலைப் படிக்கத் தொடங்கினால், படித்து முடிக்கும் வரையில் கீழே வைக்கத் தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் உள்ளது என்று கூறினார்.

மருத்துவர் ஆர்.எம்.ஆர். சாந்திலால் பேசுகையில், நூலில் இடம் பெற்றுள்ள பல நிகழ்வுகளைத் தொட்டுக்காட்டி, அவற்றை எல்லாம் நூலாசிரியர் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் எழுதி யுள்ளார் என்று கூறி நூலைத் தவறாமல் படிக்கும்படி கேட்டுக் கொண்டார். திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசுகையில் இந்நூல் காலத்தின் தேவை என்றும், இதை நூலாசிரியர் மிகச்சிறப்பாகப் படைத்து இருக்கிறார் என்றும் கூறினார்.

இறுதியில் எ ஸ்.ஆர்.இராதா ஏற்புரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியைப் பட்டிமன்ற நாயகன் தா.கு.சுப்பிரமணியன் தொகுத்து அளித்தார்.