கல்வியின் நோக்கம், அதன் இலக்கணம் என்பன குறித்து உலக அளவில் பல அறிஞர்கள் பல அரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவரவர் தாம் வாழ்ந்த சமூகச் சூழலையும் உலகச் சூழலையும் கருத்திற் கொண்டு சொல்லியுள்ளனர். ‘வாழ்க்கையையும் உல கையும் பற்றிய பார்வையைத்’ தருவது கல்வி என்கிறார் பெர்ராண்ட் இரசல், ‘மனிதனுக்கான நெறிகளை வரை யறுப்பது’தான் கல்வி என, தாம் ஆசிரியர்களுக்கான உரை நிகழ்த்தும் போதுத இமானுவல் கானட் தெரிவித்தார். கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றார். விவேகானந்தர். இன்னும் பல அறிஞர்களின் கல்வி பற்றிய கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். அடிப்படையில் கல்வி சமூக மேம்பாட்டுக்கானது என்று சொல்ல முடியும். இது தனிமனித மேம்பாட்டையும் அளிக்கவல்லது. ஆனால் பார்ப்பனியம் கல்வியை-அதன் உள்ளடக்கத்தைப் படிப்பு என்ற அளவில் மட்டும் வஞ்சகமாகத் திட்டமிட்டுச் சுருக்கிக் கொண்டு பரப்பி விட்டது. படிப்பு “வளர்ச்சி” என்ற உள்ளடக்கத்தை மட்டும் கொண்டுள்ளது. தனிமனித மேம்பாட்டைக் கூடப் ‘படிப்பு’ இலக்காகக் கொள்ளாது. பின் எப்படிப் படிப்பு சமூக மேம்பாட்டைத் தரும் என்பது அடிப்படை வினா.

school students 334ஆனால் இங்குள்ள அரசுகள் கல்வியின் பொருண்மையைப் புறந்தள்ளிவிட்டுப் பார்ப்பனியத்துக்கு அடி பணிந்து வெறும் படிப்பைத் தருவதோடு நின்றுவிட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. மேலும் அந்தப் படிப்பைக் கூடப் பன்னெடுங்காலம் சமயத்தின் பேரால், கடவுள் பேரால் பார்ப்பனரின் முற்றுரிமையாக வைத்துக் கொண்டு, பெரும் திரளான மக்களுக்கு அது மறுக்கப்பட்டே வரப்பட்டுள்ளது. இதன் விளைவால் நாடு வளர்ந்துள்ளது என்று சொல்லி வருவதைத் தான் ஏற்கலாம். எனவே சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சிறு கூட்டம் மட்டும் வளர்த்துவிட்டது எனலாம். அந்தக் கூட்டம் கூட மேம்பாடடைந்துள்ளது என்று சொல்ல முடியாது. அக்கூட்டம் சமூக மேம்பாடைத் தம் கருத்தில் கொள்ளவே முற்படாது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் இந்தப் பாழான படிப்பு கூட வெகு மக்களுக்கு இக்காலக் கட்டத்திலும் மறுக்கப்பட்டு வருகின்றது.

2020-இல் நம் நாட்டின் படிப்பறிவு எந்த அளவில் உள்ளது என்பதைப் பார்ப்போம். 1947-இல் நாடு விடுதலை பெறும் காலத்தில் சமூகத்தின் பெரும் திரளான மக்கள் படிப்பு மறுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்; 1947இல், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 16% தான். அவர்கள் எல்லோரும் விடுதலை பெற்று 73-ஆம் ஆண்டான 2020இல் ஆண்டில் மறைந்திருக்கக் கூடும். ஆனால் 2011 மக்கள் கணக்கெடுப்பின்படி நாட்டில் எழுத்தறிவற்றோர் 27 விழுக்காடு. இவர்கள் எல்லோரும் விடுதலை பெற்ற நாட்டில் எழுத்தறிவற்றோராக ஆக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற 9-10 ஆண்டுகளில் மக்களுக்கு எழுத்தறிவு அளித்திட இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு, கேரளம், மகாராட்டிரம் போன்ற சில மாநிலங்களில் தவிர, நாட்டின் பிற மாநிலங்களில் மக்களின் படிப்பறிவு அளவை உயர்த்திட பொதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவே இல்லை. எனவே வரும் 2021 - மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் நாட்டின் எழுத்தறிவற்றோர் அளவு பெரிதும் குறைந்திடாது 25 விழுக்காடு வரை இருக்கக் கூடும். எனவே தற்போதைய சூழலில் பள்ளிப் படிப்பை மக்கள் அனைவரும் பெற்று, படிப்பறிவு அற்றவரே இல்லை என்ற இலக்கை நோக்கித்தான் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பயணிக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?

மேலும் இந்தப் பள்ளிப் படிப்பைக் கல்வியாக உயர்த்துவதற்கு அனைத்துப் பள்ளிப் படிப்பும் தாய்மொழி வழியில் மாற்றப்பட வேண்டும். கல்வி-தான் அனைத்து சமூகத்துக்குமான மேம்பாட்டை உறுதி செய்யும் என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. இன்னும் இந்தப் பள்ளிக் கல்வி அனைத்தும் இலவயமாகக் கொடுக்கப் பட வேண்டும். தனியாரால் தரப்படும் தாய்மொழிக் கல்வியும் அனைத்துத் தளமக்களையும் மேம்பாட்டுத் தளத்திற்கு உயர்த்தாது. ஏனெனில் தனியார் எங்கும் எவ்வழியேனும் ஈட்டும் இலாபம் பெருமளவுக்கு இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையவராகத்தான் இருக்க முடியும். எனவே இலவயப் பள்ளிக் கல்வி அரசால் மட்டுமே தரப்பட முடியும். அத்துடன் பள்ளிக் கல்வியை மாநிலப் பாடத் திட்டம், ஒன்றிய அரசுப் பாடத் திட்டம் என்பன போன்ற பலவகையான பாடத் திட்டங்களில் அளிக்க முற்படுவது ஏற்றத்தாழ்வான கல்வி முறையை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். எனவே ஒரு மாநிலத்தின் பள்ளிக் கல்வி தாய்மொழி வழியில், இலவயமாக ஒரே ஒரு வகையான பள்ளிப் பாடத் திடடத்தின் படி வழங்கப்பட வேண்டும். இதைச் சனநாயக இந்திய ஒன்றிய அரசு சனநாயகப் பொறுப்பின்படி மேற்சொன்ன முறையில் பள்ளிக் கல்வியை அளித்திட முன்வர வேண்டும்.

ஆனால் இந்த அடிப்படை நியதிகளையெல்லாம் முற்றும் புறக்கணித்துவிட்டுப் பொதுவாகக் கல்வி முழுமையையும் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டு, கல்வித் துறை முழுமையையும் ஒரு ஒட்டுமொத்தமாக கொள்ளைக் காடாக மாற்றிவிட்டு, வெகுமக்களான ஒடுக்கப்பட்ட மக்களை கல்வியின் பெயரால் ஒரு கொடுஞ் சுரண்டலுக்கு ஆளாக்கி அல்லலுறச் செய்து விட்டு, ஒன்றிய மாநில அரசுகள் மக்களனை வருக்கும் கல்வி அளிக்க வேண்டிய கடமையை முற்றும் பொறுப்பற்ற வகையில் உதறித் தள்ளிவிட்டு, சமூக மேம்பாட்டுக்கான கல்வியை ஒரு வணிகச் சரக்காக மாற்றி சமூகக் கேட்டைப் பரவலாக்கி விடப் பட்டுள்ளது பெரும் அவலம். இந்தப் பின்னணியில் இதனினும் கொடுமையாக மக்கள் அனைவருக்கும் கல்வியை, வேண்டாம், படிப்பைக் கூட அளித்திடக் கூடாது எனக் கங்கணங் கட்டிக் கொண்டு நாடு முழுமைக்குமாக ஒரு தேசியக் கல்விக் கொள்கை என்ற புதிய திட்டத்தை வகுத்து வைத்துக் கொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மக்கள் சனநாயக அடிப்படைக் கல்வி உரிமையைக் கூடப் பறித்திட இந்திய ஒன்றிய பா.ச.க. அரசு ஆயத்தமாக உள்ளது.

இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை தரமான படிப்பை உறுதிசெய்வதற்கான வரைவுத் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. படிப்பின் தரத்தை உயர்த்துவதற்கு வரைவுக் கல்வித் திட்டம் எதிர்மறையான நிலைப்பாட்டினை மேற்கொண் டுள்ளதாக உள்ளது. மேலும் படிப்பு தொடர்பான பணிகள் யாவற்றையும் தனியாரிடம் அளித்திட ஒன்றிய அரசு முனைகிறது. இதிலிருந்து இதன் உள்நோக்கம் வெகுமக்கள் படிப்புப் பெறுவதி லிருந்து அகற்றுவதாக உள்ளது.

படிப்புத் தரம் உயருவதற்கு மாணவர்களைப் பல நிலைகளில் 3ஆம், 5ஆம், 8ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதிட வைப்பது என்று திட்டமிட்டுள்ளது. இது அடிப்படைத் தரம் உயர்த்தும் நோக்கிற்கு முற்றிலும் முரணானது என்பதுடன், எதிர்மறையாக தரத்தைத் தாழ்த்துவதாகத்தான் அமையும். கல்வி முறையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே எதிரானது, இந்தப் பல கட்டத் தேர்வு முறை. மாறாக இதன் உள்நோக்கம் அடித்தட்டுச் சமூகத்திலிருந்து படிப்புக்கு நுழைபவர்களைத் தேர்வு என்று சொல்லி அச்சுறுத்திப் பள்ளிகளுக்குள் நுழையவிடாமல் தடுப்பது, தடைசெய்வதாகும்.

உண்மையில் கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டு மெனில், கற்பித்தல் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை. அதாவது கற்பித்தல் திறன் உயர கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கும் இக் கொள்கை வரைவு ஆசிரியர்களுக்கும் பல நிலைகளில் தேர்வு நடத்தி அதன்வழி அவர்கள் தரம் மேம்படுத்த முனைந்துள்ளது. இதுவும் ஆசிரியர்களிடம் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தும். அதாவது தரம் உயர்த்தல் என்ற பெயரில் மாணவர்களை, ஆசிரியர்களைக் களையெடுத்தல் என்பதுதான் உள்நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகின்றது. மாறாகக் கற்பித்தல் திறன் உயர்த்தப்பட முதலில் கல்விக் கூடங்களில் ஆசிரியர் களுக்குப் போதுமான பயிற்சிகளை ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஆண்டுக்கு அல்லது அரையாண்டுக்கு என ஒருமுறையாவது அளித்து அவர்களின் புரிதலைப் பெருக்கிடத்தான் வழிகாண வேண்டும்.

மேலும் ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் திறனைப் பெருக்குவதுடன் அவர்களின் சமூகப் பொறுப்பு மிகவும் உயர் மதிப்புடையது என்று உணர்த்திட ஆவனவெல் லாம் செய்திடத் திட்டமிட வேண்டும். இதற்குக் கால அளவு என்பதை வரையறுக்க முடியாது. இது ஒரு தொடர்ச்சியான நெடும் காலத்திற்கானது. ஆசிரியருக் கான இந்த உள்ளீடு மிக மிக முதன்மையானது. இந்த வகையில் அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு மிகவும் வல்லமை படைத்த சமூகப் பொறுப்பை உணர்த்த செயல்பாட்டாளர்களாக விளங்கும், சமூகவியலாளர் களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இன்னும் குறிப்பாகச் செய்முறைப் பயிற்சியாக ஆசிரியர் கள் ஒரு கால அளவில் கள ஆய்வில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களிடையே இந்தக் களத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையே முன்காட்டாகக் கொண்டு பிறகும் தங்களை உயர்த்திக் கொள்ள ஏதுவாக இவர்களுக்கிடையில் சீரான, செறிவான கலந்துரையாடல்களுக்கான வாய்ப்புகள் திட்டமிட்டு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

பயிற்சி, களஆய்வுகள் எல்லாம் இயலக் கூடியதா என்று எண்ணலாம். ஆனால் அது நமது போதாமை யைக் காட்டுவதாகத்தான் அமையும். காட்டாக, சப்பான், அய்ரோப்பிய நாடுகளில் ஆசிரியர்களுக்குத் தொடர் நெடும் பயிற்சிகளும் தரப்படுகின்றன. அவர்கள் தத்தம் நாடுகளில் மட்டுமின்றிப் பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் கற்பிக்கும் திறனை மேம்படுத்த எடுக்கப்படும் செயல் திட்டங்களையும் அறிந்து வருவதற்குக் கள ஆய்வுக்கு அரசால் அரசின் செலவில் அனுப்பப் படுகிறார்கள். அவர்களை ஆய்வு விவரங்க ளையும் ஆய்வு முடிவுகளையும், தத்தம் நாட்டுக்கு ஏற்ற வகையில் பின்பற்றத்தக்க பரிந்துரைகளையும் அந்தந்த நாட்டு அரசுகள் ஆய்வுக்குட்படுத்தி, தேவையானவற்றை செயல்படுத்திப் பொதுவாகக் கல்வியின் தரத்தினை உயர்த்திட ஆவனவெல்லாம் செய்து வருகின்றனர். எனவே ஆசிரியர்கள் நலந்தான் நாட்டின் நலன். ஆசிரியர்களின் பங்குதான் நாட்டின் மேன்மைக் கும் மேம்பாட்டுக்கும் உரியது என்ற கண்ணோட்டம் அரசின் அடிப்படையாக இருக்க வேண்டும். எனவே ஆசிரியர்கள் நன்மதிப்புக்குடையவர்கள் என்ற உளவியல் உருவாக்கப்பட வேண்டுமேயன்றி அடிமைத்தளை பூட்டும் குருபக்தி, குரு வழிபாடு என்ற சனாதன மன நிலையை உடைத்து நொறுக்கப்பட வேண்டும். மாணவர் ஆசிரியரிடையே நன்மதிப்புறவு வேண்டும்.

எனவே கல்வியின் தரம் உயர்த்தல் என்ற பெயரில் - கல்வியை வெகுமக்களுக்கு மறுத்திடும் நோக்கத்தைக் கொண்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மேலும் கல்வியாளர்களைக் கொண்ட குழுவால் உரு வாக்கப்படாத இவ்வரைவு அடிப்படையிலேயே பிழையானது. இதனைக் கல்வியாளர்களையும், ஒட்டுமொத்த சமூகப் பற்றுடைய சமூகவியலாளர்கள், மானுடவிய லாளர்கள், உளவியலாளர்கள், மெய்யியலாளர்கள் எனப் பலரையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைத்து அவர்களின் மேலான ஆய்வுக்குத் தேசியக் கல்விக் கொள்கை உட்படுத்தப்பட வேண்டும். அவர்களின் ஒருமித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட வேண்டும்.