(Which is the Basic Structure of Indian Constitution?)

1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த போது, இந்தியா சனநாயக மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1976இல் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற பிரிவும் அடிப்படைக் கடமைகளும் இணைக்கப்பட்டன.

இதுவரை இந்திய அரசமைப்புச் சட்டம் 102 முறை திருத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி இயலை அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொண்ட போதிலும் மக்களாட்சி நெறி களைப் போற்றுகிற உண்மையான கூட்டரசு ஆட்சியை இதுவரை இந்தியா கண்டதில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கூட்டாட்சி முறைதான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவமமைப்பாகப் (Basic Structure) போற்றப்படுகிறது. இந்த வடிவமைப்பை மேற்கூறிய  கூட்டாட்சி இயலைப் பின்பற்றுகிற  நாடுகள் இதுவரை திருத்தியதே இல்லை. எனவேதான் மேற்கூறிய நாடு களில் மக்களாட்சி முறையும் கூட்டாட்சி இயலும் கை கோர்த்து நடைபோடுகின்றன. மக்கள் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் ஆதிக்க சமூகத் தினரால் மிக சிறுபான்மையான ஆதிக்கச் சாதிகளுக் காகவே உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாக உணர்ந்து குறிப்பிட்டவர் தந்தை பெரியார் ஒருவரே.

இதன் காரணமாகவே 1957 நவம்பர் 26இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்கவும் செய்தார். பெரியார் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி எழுப்பிய வினாவிற்கு இன்று வரை யாரும் விடை காணவில்லை. அதாவது இந்திய அரசமைப்புச் சட்டக்குழு உறுப்பினர்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி. கிருஷ்ணமாச்சாரி என்.கோபாலசாமி அய்யங்கார், கே.எம்.முன்ஷி, டாக்டர் அம்பேத்கர், முகமது சாதுல்லா ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் (Drafting Committee) தலைவராக இருந்தார்.  மேற்குறிப்பிட்ட 6 உறுப்பினர் களில் நான்கு பேர் பார்ப்பனர்களாக இருந்தார்கள். அம்பேத்கரும் முகமது சாதுல்லாவும் பெரிய அளவில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்க முடிய வில்லை. சான்றாக 1949இல் இந்துச்சட்டத்தை (HInduLaw) அம்பேத்கர் கொண்டு வர முயற்சித்த போது தில்லியில் பூரி சங்கராச்சாரியார் மற்றும் இந்து மத அமைப்புக்கள் அம்பேத்கரின் படத்தை எரித்தனர். அவர் சூத்திரனுக்குக் கீழ் உள்ள பஞ்சமர் என்று வாய்க் கொழுப்போடு குறிப்பிட்டு-இந்துச் சட்டத்தைக் கொண்டு வருவதற்குத் தகுதி இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தனர்.

ambedkhaar 600“சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன். சிறை சென்றேன். சர்க்கார் கண் விழிக்கவில்லை. ஆகவே சாதிக்கு ஆதாரமான சட்டத் தைக் கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் மனதை மாற்றலாமா என்று கருதி அதைச் செய்தேன்... இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா? இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால் இதை நான் மகிழ்வோடு வரவேற்க வேண்டாமா? சாதியை ஒழிப்ப தற்காக மூன்றாண்டு சிறைவாசம் செய்தான் என்பதை விடப் பெரும் பேறு முக்கியக் கடமை என்ன வொன்று இருக்கிறது-இந்த விதமாக  நீங்கள் ஒவ்வொரு வரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று 9.11.1957 இல் என்று பெரியார் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

தந்தை பெரியார் எழுப்பிய இப்பிரச்சினை தற்போது மேலும் சிக்கலடைந்துள்ளது. ஆதிக்கச் சாதிகளின்-உயர் வர்க்கத்தினரின் நலன்களுக்காகவே  அரசமைப்புச் சட்டத்தின் உதவியோடு ஒன்றிய அரசு ஆட்சியை நடத்தி வருகிறது. 1951இல் கல்வியில் இடஒதுக்கீட்டுக் கொள் கையை உறுதி செய்வதற்காகச் செய்யப்பட்ட திருத்தத் தைத் தவிர, பெரும்பான்மையான சட்டத் திருத்தங்கள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகவும் ஆதிக்க சமூகத்தின் நலன்களைப் போற்றுவதற்காகவுமே கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 368ஆவது பிரிவு தான் ஒன்றிய அரசிற்கு நாடாளுமன்றம் வழியாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிகாரம் அளிக்கிறது. சில வழக்குகளில் உச்சநீதி மன்றம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவமைப்பை மாற்றக்கூடாது என்று கூறிய போதும், தொடர்ந்து அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கும் மக்களுக்கும் எதிராகச் சிதைக்கப்பட்டு வருகிறது. ஆனால்  இதைக் கருத்தில் கொள்ளாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவ மைப்பை நீதிமன்றங்கள் காப்பாற்றி வருகின்றன என்பதை அடிக்கடி சில ஆதிக்கச்சாதி  மேதாவிகள் ஊடகத்தில் கட்டுரைகள் வாயிலாகவும் விவாதங்களின் வழியாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் மக்களின் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கண்ணோட் டத்திலும் இவர்கள் வெற்றி பெற்றே வருகின்றனர்.

சாதிவாரியான இடஒதுக்கீடும் மானுட மேம்பாடும் (Caste based reservation and human developmentin India, K.S.Chalam, p.26) என்ற நூலில் ஆய்வாளர் சலம் தந்தை பெரியார் 1957இல் எந்தக் காரணத்திற்காகச் சட்டத்தை எரித்தாரோ அதே காரணம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தனது நூலில் உயர்ந்த சாதியினர் அல்லது திவிஜா கூட்டணிதான் அமைச்சர வையில் பெருமளவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தான் கோடிக்கணக்கான தொகை உடைய ஒப்பந்தங் களைப் பெற்று வருகின்றனர். சிலர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய சனநாயகக் கூட்டணிக்கும் பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை என்று கூறுகிறார்கள். ஆகவே இந்த உயர் சாதியினர்தான் தாராளமயமாக்கல் கொள்கை என்ற பெயரில் பலன் களைப் பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்திய மக்கள் தொகையில் 3 விழுக்காடே உள்ள  இச்சமுதாயத்தினர்தான், உச்சநீதி-உயர்நீதி மன்றங்களில் 80 விழுக்காட்டுக்கு மேல் நீதிபதிகளாகப் பணியாற்றுகின்றனர். தில்லியின் அதிகார மையத்திலும் இவர்கள்தான் கோலோச்சுகின்றனர். ஏழை பணக்காரர் களுக்கிடையே உள்ள சமூக, பொருளாதார, ஏற்றத் தாழ்வுகள் குறைவதற்குப் பதிலாக அச்சம் கொள்ளும் வகையில் பெருகி வருகின்றன. எனவே இந்த அரச மைப்புச் சட்டம் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள உயர் சாதியினரின் நலன்களுக்காகவே இன்றும் இயங்கி வருகிறது என்பதைத் தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை அன்றே  உறுதி செய்துள்ளது.

அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி, நிர்வாக முடிவுகள் என்ற பெயரில் ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலை மையில் மூன்று உயர்நிலை ஆணையங்களை ஒன்றிய அரசு அமைத்தது. 1988இல் நீதிபதி சர்க்காரியா குழுவின் அறிக்கையும், 2003இல்  நீதிபதி வெங்கடச்செல்லையா அறிக்கையும் 2007இல் நீதிபதி, புஞ்சி ஆணையத்தின் அறிக்கையும் அளிக்கப்பட்டன. இந்த மூன்று குழுக்களின் அறிக்கைகளிலும் மாநிலங்களின் உரிமைகள் மிக மோசமான முறையில் பறிக்கப்படுவதும், ஒன்றிய அரசில்  அதிகாரங்கள் அளவிற்கு அதிகமாகக் குவிக்கப்படுவ தையும் சுட்டிக்காட்டி அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன.

மேலும் ஒன்றிய அரசின் ஏதேச்சதிகார நிர்வாக முடிவு களால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் செயலிழந்து வருகின்றன. சான்றாக ஒன்றிய அரசின்  பட்டியலில்-

பிரிவு 27இல்    பெரிய துறைமுகங்கள் அமைப்பது

பிரிவு 28இல்    வான்வழி போக்குவரத்தை மேலாண்மை செய்வது

பிரிவு 31இல்    அஞ்சல் தந்தி, தொலைபேசி, கம்பியில்லா ஒளிபரப்பு இதர ஒளி, ஒலிபரப்புகள்

பிரிவு 45இல்    வங்கி

பிரிவு 47இல்    காப்பீடு

பிரிவு 48இல்    பங்குச் சந்தை, எதிர்காலச் சந்தைகள்

பிரிவு 49இல்    காப்புரிமை தொடர்பான இனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த அதிகாரங்கள் தற்போது தனியார் துறைகளுக் குத் தாரளமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. எந்த அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின் வழியாக இவைகள் எல்லாம் செய்யப்பட்டன என்பதை ஏன் இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை? பெரிய துறைமுகங்களை  அம்பானிக்கும், அதானிக்கும் மோடி அரசு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. வான் வழிப் போக்குவரத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முற்றுரிமைக்கு  வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது. அலைக்கற்றை வழங்குவதில் முன்னுரிமை அம்பானிக்கும், டாடாவிற்கும்தான் வழங்கப்பட்டுள்ளது. அம்பானி நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றதற்கான  முழுவிளக்கம் இது வரை ஒன்றிய அரசிடமிருந்து பெற முடியவில்லை. பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் பெருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் சீரழிக்கப் படுகின்றன. அவற்றின் பங்குகள் ஆண்டு தோறும் தனியார்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 45இல்  வங்கிகளை மேலாண்மை செய்யும் அதிகாரம் இன்று என்னவாயிற்று? 8 இலட்சம் கோடி பணத்தைப் பெரு முதலாளிகள் கடனாகப் பெற்று, திரும்பச் செலுத்தாமல் பொதுத் துறை வங்கிகளைச் சூறையாடிவிட்டு, வெளி நாடுகளில் மகிழ் வோடு வலம் வருகிறார்கள். மேலும் ஒன்றிய அரசு இந்திய மைய வங்கியையும் இவ்வகையில் விட்டுவைக்க வில்லை. தகுதி மிக்க மைய வங்கியின் ஆளுநர்கள் விரட்டப்படுகின்றனர். தகுதியில்லாத ஒன்றிய அரசிற்குத் தாளம் போட்டவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்தின் வழியாக மைய வங்கியின் வைப்பு நிதியில் கை வைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தது போன்று இந்திய  வங்கிகள் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு இந்த வைப்பு நிதிதான் உதவியாக உள்ளது. மேற்கூறிய நடவடிக்கைகள் தாராளமயமாக்கல் என்ற போர்வையில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் போக்கைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு அரணாகவும்  இந்திய அரசமைப்புச் சட்டம் இன்றளவும் உள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி உயர் வர்க்கத்தினர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று வெற்றுக் கூச்சலிட்டு வருகின்றனர். மேலும் நிர்வாக நடவடிக்கைகள் என்ற பெயரில் ஒன்றிய அரசு இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் விளைவால் இந்திய  மாநிலங்களின் ஒட்டு மொத்தப் பொருளாதாரமே நொறுக்கப்பட்டது. அடுத்ததாக சரக்கு-சேவை வரியை அறிமுகம் செய்தது, இந்தியக் கூட்டாட்சி இயலின் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது துல்லியத் தாக்குதல் ஆகும்.

கூட்டாட்சி இயலைப் பின்பற்றும் பல நாடுகளில் கூட்டரசு நிதி (Federal Finance) பற்றிய அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டங்களில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரிவுகள்தான் கூட்டாட்சியைப் பின்பற்றும் நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவ மைப்பாகக் (Basic Structure)  கருதப்படுகின்றன. ஆனால்  மதிப்புக் கூட்டு வரியின் வழியாகவும் சரக்கு-சேவை வரியின் வழியாகவும் ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்து வரி இனங்கள் ஒன்றிய அரசால் முழுமையாகப் பறிக்கப் பட்டுள்ளன. இதன் விளைவு குழப்பமும் பொருளாதார சரிவும் தான் என்பது தற்போது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாடாளுமன்றம் சட்டமன்றங் களில் ஆண்டுக்கு ஒரு முறை நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்படுகின்றன. வரவும்-செலவும் நிதிநிலை அறிக்கையின் இரண்டு கண்களாகும். மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட வரிவருவாய் இனங்களின் வழியாகத்தான் மாநில அரசுகள் தங்களது நிதிநிலைமையைக் கணக்கிட  முடியும். இதனடிப்படையில் தான் பொதுச் செலவின் வழியாக மக்கள் நலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன; நிறைவேற்றப்படுகின்றன. தற்போது இந்தியாவில் மாநிலங்களின் நிதிவருவாய் என்ற கண் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள-குறிப்பாக மாநிலச் சட்டமன்றங்களின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு சரக்கு-சேவை வரிக் குழு (GST - Council) என்ற பெயரால் ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை மேலும் குவித்து வருகிறது. இதன் விளைவாகத் தென் மாநிலங்கள் மக்கள் நலத் திட்டங்களுக்காகப் பேரிடர் துயர் துடைப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்றிய அரசிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய இழிநிலை தொடர்கிறது. மேலும் தென் மாநிலங்களின் வரிவருவாயை வட மாநிலங் களுக்கு எடுத்துச் செல்லும் போக்கும் பெருகி வருகிறது. வடக்கு தெற்கை வஞ்சிக்கிறது.

அண்மையில் நடைபெற்ற வட மாநிலத் தேர்தல் களை ஒட்டியும் ஆளும் பாசகவிற்கான வாக்கு வாங்கி யைப் பெருக்குவதற்காகவும் இந்தச் சரக்கு-சேவை வரிக்குழுவைக் கூட்டி வரி அடுக்கு முறையை மாற்றி, வட இந்திய மாநில நலன்கள் போற்றப்பட்டன. இதனால் அதிக வரி வருவாயை இந்தியாவிற்கு அளிக்கின்ற தென் மாநிலங்கள் மேலும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட் டுள்ளன. இவையெல்லாம் அரசமைப்புச் சட்டப்படிதான் நடைபெறுகின்றனவா? என்பதைப் பற்றி எவ்விதக் கேள்விகளையும் எந்த நீதிமன்றமும் இதுவரை எழுப்ப வில்லை.

மேலும் இந்தியாவினுடைய பன்முகத்தன்மை முழுமையாகச் சிதைக்கப்பட்டு மக்களின் அடிப்படை உரிமையான உணவு உண்ணும் உரிமையை சனாதன இந்துத்துவ சங்க பரிவாரங்கள் நாள்தோறும் பறிக்கின்றன. பசுக்காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் தலித்  மக்களை வெட்டுவதையும் கொலை செய்வதையும் இந்த பாசக ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்கும் அழகா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சுட்டப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள்-உரிமைகள் ஆகியன தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே தொலையியக்கி (Remote control) வழியாக மேலாண்மை செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்ற சக நீதிபதிகளே குற்றம் சாட்டியது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் சாய்ந்தும் சரிந்தும் வருவதையே சுட்டுகின்றன.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே மதம் என்ற முழுக்கங்கள் வானொலியிலேயே ஒலிபரப்பப்படுவது சரியா? ஏற்கெனவே அரசமைப்புச் சட்டம் சிதைக்கப்பட்டு வருகின்ற நிலையில், மேலும் இது போன்ற  அராஜகச் செயல்களை ஒன்றிய அரசின் ஆளும் கட்சியே ஊக்குவிப்பது தான் மக்களாட்சி கூட்டாட்சி முறையா? நெறியா?

ஒன்றிய அரசின் அனைத்துப் புலனாய்வுத் துறைகள், வருமானவரித் துறை அமலாக்கப் பிரிவு போன்ற துறைகள், தனி மனிதர் பயன்படுத்தும் கணினிகளை அவர்களுக்குத் தெரியாமல் உளவு பார்ப்பதும் தகவல்களை எடுப்பதும்தான் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையா? மாநில உரிமைகளை இந்திய அரமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவ மைப்புப் பிரிவாக இணைத்து, உரிய சட்டத்திருத் தங்களை மேற்கொண்டால்தான் இந்தியா தனது பன்முகத் தன்மைகளையும் மக்களின் மொழி, இன, பண்பாட்டு, உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இல்லையென்றால் இந்தியாவின் ஒற்றுமை மிகப் பெரிய கேள்விக் குறியாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.