நூல் அறிமுகம்

மணலி சி.கந்தசாமி - வாழ்வும் போரட்டமும்

வெளியீடு: கு.வெ. பழனித்துரை | நூல் பெற: பாரதி புத்தகாலயம்

பக்: 304 | ரூ. 200

விடுதலைப் போராட்டத்தில், அதன் வெற்றியில் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக, மேம்பாட்டுக்காகக் கம்யூனிஸ்டுகள், ஆற்றிவரும் பணியும் ஒப்பில்லாதது. இவ்வகையில் தோழர் மணலி கந்தசாமி (1911 - 1977)யின் வாழ்வும் பணி குறிப்பிடத்தக்கது. ஆழமான ஆய்வுக்கு உரியது. அதனை கு.வெ. பழனித்துரையின் இந்த நூல் தொடங்கி வைக்கிறது.

1958-62 ஆண்டுகளிலும் பின்னர் அவருடைய இறுதிக்காலத்திலும் மணலியுடன் பழகும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முறையில் இந்த நூலை ஆர்வத்துடன் படித்தேன்; நூலின் முற்பகுதி அவருடைய வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்கிறது. இரண்டாவது பகுதி, தமிழகச் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய சில உரைகளின் தொகுப்பு.

பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் மணலி. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த போது விடுதலை இயக்கத்தில் படிப்பை உதறித்தள்ளுமளவுக்கு அவரது ஈடுபாடு, தீவிரத்தன்மை பெற்றது. விரைவில் திருத்துறைப்பூண்டி தாலுகா காங்கிரஸ் கமிட்டியிலும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும் முக்கியப் பொறுப்புகளை அவர் ஏற்றார். அந்த நாட்களிலேயே சமதர்மக் கொள்கைகளால் கவரப்பட்டார். 1936-ம் ஆண்டு அவர் ஜீவாவைச் சந்தித்தபோது அவருடைய சமதர்ம ஆர்வம் கூர்மை பெற்றது. சுயமரியாதை சமதர்மக்கட்சியின் முதல் மாநாட்டில் (1936-நவம்பர்) டாங்கே, ஜீவா போன்றோருடன் பழகினார், பேசினார், ஒரு சோஷலிஸ்ட் ஆக உருவானார். காங்கிரஸ் சோஷலிஸ்ட்கட்சி தோன்றிய போது ஏ.கே. கோபாலன், ஜீவா, பி. ராமமூர்த்தி, சுப்பிரமணியசர்மா (சாமாஜி) ஆகியோரின் வழிகாட்டுதலில் தீவிர இடதுசாரி-சோஷலிசக் கொள்கைகளை வெகு மக்களிடையே பரப்புவதில் மணலி முன்னின்றார்; ‘எஞ்சிய காங்கிரஸ்காரர்’களின் கோபத்திற்கு ஆளானார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி வெகு மக்களின் பேராதரவைப் பெற்றது; அதன் தலைவர்களாக இருந்த ஜீவா, ராமமூர்த்தி, சி.எஸ்.வி. காட்டே வழிகாட்டுதலில் தமிழகத்தில் பெருஞ்சக்தியாக உருப்பெற்றனர். தஞ்சை மாவட்டத்தில் விடுதலைப் போர் தீவிரமடைந்தது. அதே வேளையில் அந்த மாவட்டத்தையே தன்பிடியில் வைத்திருந்த பெருநிலமுதலாளிகளின் கொடுமைகளுக் கெதிரான வாழ்வுரிமைப் போராட்டமும் வலுப்பெற்றது. அது ஒரு வகையில் ஆதிக்க சக்திகளுக்கெதிரான போர். விடுதலைப்போர் எந்த வழியில் செல்லும், செல்லவேண்டும் என்பதற்குத் தஞ்சை மாவட்ட நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகள் ஆயின.

தஞ்சைமாவட்டத்தில் பெருநில முதலாளிகள் என்போர் சைவ மடங்களின் அதிபதிகள், கோவில்களின் தர்மகர்த்தாக்கள், குன்னியூர் சாம்பசிவ அய்யர், நெடும்பலம் சாமியப்பா, வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார், கபிஸ்தலம் மூப்பனார் போன்றோர். ஆட்சி அதிகாரம் அவர்கள் பிடியில்தான் இருந்தது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் தரும் பிச்சையை ஏற்றுப் பிழைத்துப் போக வேண்டும் ‘கூலிகள்’. அவர்களுடைய அக்கிரமங்களை எதிர்த்து முணுமுணுத் தால் கூடச் சாட்டைஅடி, சாணிப்பால் புகட்டல்! அன்று விவசாயத் தொழிலாளரும் அவர்கள் வீட்டுப் பெண் மக்களும் பட்டபாடு சொல்லில் அடங்காதது. அப்போது தான் ‘நீயும் அடி, திருப்பி அடி’ எனும் இடி முழக்கம் எழுந்தது. சீனிவாசராவ், மணலி போன்றோர் அந்த ‘அடி’மக்கள் பக்கம் நின்றனர். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தஞ்சை மாவட்ட விவசாயிகள் போராட்டம் தெளிவான உருவினைப் பெற்றது. களப்பால் குப்பு, சுப்பையா போன்றோர் மக்கள் நெஞ்சில் நிலைத்தனர். தென்பரை, பைங்காட்டூர் போன்ற சிற்றூர்கள் உலகின் கவனத்தைப் பெற்றன. தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வீரமரணப் போராட்டம், அதன் விளைவாக மணலிக்குப் போடப்பட்ட ‘வாய்ப்பூட்டு’ பிரிட்டிஷ் பார்லிமெண்டில் எதிரலைகளை எழுப்பியது. இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் விவசாயிகளைச் சார்ந்து கட்டப்படும் விடுதலை இயக்கமே நிலைத்த பயன்களை வெகுமக்களுக்குப் பெற்றுத் தரும் என்பதைத் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் உணர்த்தினர். இதிலிருந்து பெறப்பட்ட படிப்பினை இன்றைய மேற்கு வங்கத்தில் விவசாயத்தொழிலாளர்கள் தலைநிமிர்ந்து வாழத் துணை செய்கிறது என்பது ஆய்வறிஞர் கருத்து.

சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில் செங்கொடியின் கீழ், தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களைப் போராளிகளாகவும் தியாக சீலர்களாவும் உருவாக்கியதில் மணலிக்குச் சிறப்பான இடம் உண்டு. அவர் இறுதிவரை விவசாயத் தொழிலாளர்கள் பற்றியே சிந்தித்தார். அவர்களுடைய மேம்பாட்டுக்காகக் கடுமையான அடக்கு முறைகளைப் பெரும் இழப்புகளை எதிர்கொண்டார். அவருடைய தலைக்கு விலை வைத்தது, (விடுதலை பெற்ற இந்தியாவில்) காங்கிரஸ் ஆட்சி! அவர் தலைமையை ஏற்றுப் போராடிய மக்களை ‘அவர்கள்’ படுத்தியபாடு.... வாழ்வுரிமைக்காகப் போராடும் தொழிலாளர்-விவசாயிகளை இன்றைய ஆளும் சக்திகள் எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை நாடு ஒரளவு அறியும். ஆனால் அன்று ‘அவர்கள்’ எவ்வாறெல்லாம் வெறியாட்டம் போட்டனர் என்பதை...

தலைமறைவு வாழ்க்கையை மணலி இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டார். பல சோதனைகள், பல வேடங்கள், லால்குடிவாழ்க்கை... அவருடைய தந்தையார் இறந்த போது இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளவும் இயலாத நிலையில் அவருடைய அம்மாவுக்கு எழுதிய கடிதம் இலக்கிய நயம் மிக்கது. அக்கடிதத்தில் கூட அவர் மாவீரன் சிவராமனை நினைவுக்கூர்கிறார். சாவுச் சடங்கு பற்றிப் பேசுகிறரர்: விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952-ஆம் ஆண்டு நடைபெற்றது. தலைமறைவாக வாழ்ந்த மணலியின் தலைமையில் தஞ்சை மாவட்டத் திலிருந்து ஐந்து கம்யூனிஸ்டுகள் சென்னை சட்டமன்றத் துக்குத் தேர்தெடுக்கப்பட்டனர்! மணலி என்றும் பெரிய தம்பி என்றும் அறியப்பட்ட தோழர் மணலி கந்தசாமியைப் பற்றி எண்ணுங்கால் ஜீவா, சீனிவாசராவ், ஜாம்பவானோடை சிவரானம், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் கோட்டூர் ராஜு, போன்றோரையும் நினைவு கூர்தல் நன்று.

1962-தேர்தலும் அதன் பின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்களும் இன்று வரலாற்று நிகழ்வுகள் (1962 - ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் இந்த நாளையும் கீழ்வெண்மணியையும் யார்தான் மறக்க இயலும்? மணலி 1971 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது முறையாகத் தமிழகச் சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க., இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஒரணியில்! தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு, விளைவாக அந்தக் கட்சியில் எழுந்த வேறுபாடுகள், மணலியின் சர்ச்சைக்குரிய நிலைப்பாடு உடல்நலக்குறைவான நிலையில் அவர் உருவாக்கிய தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, அதன் மறைவு இறுதியாக சாதி அரசியல் என அவர் வாழ்க்கை.

மணலி என்னும் போராளி தியாகங்களுக்குத் தயாராக இருந்தவர். தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் மாண்புகளைக் கற்று அறிந்து அவற்றைப் பெருமிதத்துடன் போற்றியவர். தமிழ்நாட்டுக்கே உரிய வீரவிளையாட்டுகள், அறிவியல் (மருத்துவம், இசை, நாட்டியம், சிற்பம், கட்டடக்கலை) ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். சீனமொழி-இலக்கியம்-பண்பாடு பற்றிக் கற்றறிய நான் முதலில் விசுவபாரதி, பின்னர் பெய்ஜிங் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதை அறிந்த அவர் சீன-திபெத்திய மருத்துவம் பற்றித் தகவல்கள் தருமாறும் அதுபற்றிக் கிடைத்த நூல்களின் சுருக்கத்தைத் தமிழில் தருமாறும் கேட்டார். அவ்வாறே பல நூல்களையும் அவற்றின் சுருக்கக் குறிப்புக¬யும் தந்துவந்தேன். சீனர்களுக்கு அவர்கள் மண்ணில் செழித்த மருத்துவ இயலின் மீது உள்ள நம்பிக்கை, ஏற்கனவே சித்த மருத்துவத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டைச் செழுமைப்படுத்தியது. நாளடைவில் அவர் சித்தமருத்துவத்தில் சிறந்த புலமை பெற்றார்; நோய்வாய்ப்பட்டபோது அதில் நம்பிக்கை வைத்து அந்த வழி மருத்துவத்தையே ஏற்றார்.

வீரவாழ்க்கை வாழ்ந்த ஒருவர் இறுதி நாட்களில் ஏன் பல தடுமாற்றங்களுக்கு ஆளாக வேண்டும்? அதிலும் கடைசிக்காலத்தில் தேவர் சாதியினர் அவரைச் சூழ்ந்தனர்; அவர்கள் உறவில் அவர் மகிழ்ச்சியும் ஆறுதலும் பெற்றார் என உணர்ந்தேன். அவருடைய உறவினர்கள் கூட அந்தப் போக்கினை விரும்பவில்லை என்பதையும் குறிப்பாக, அவரைக் கண் எனப் போற்றிப் பாதுகாத்த ஒரு மகன் இந்தச் சாதிய உணர்வு அவரை ஆட்கொண்டதைக் கண்டு மனம் புழுங்கியதையும் கண்டேன்.

சட்டமன்ற உறுப்பினராகத் தமது கடமைகளை அவர் நன்கு நிறைவேற்றினார். இந்திரா காந்தியின் அரசியலை அவர் விமர்சித்தார். மக்களாட்சிமுறைக்கு எதிராக நடந்து வருவதைச் சட்டசபையில் விண்டுரைத்தார். இருபது அம்சத் திட்டம் பற்றியும், ஏகாதிபத்தியங்கள்- இந்திய முதலாளிகளின் கூட்டுச்சுரண்டல் பற்றியும் அவர் தெளிவுபடப்பேசினார். சுரண்டிக் கொடுக்கும் அன்னிய நிறுவனங்களை அன்னிய மூலதனச் சுரண்டலை அம்பலப்படுத்திய அவர். அவற்றைத் தேசவுடைமை ஆக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் எனச் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

சுதந்திரபூமி எனப் பறைசாற்றப்படும் அமெரிக்காவில் டல்லஸ் போன்றவர்கள் கம்யூனிச எதிர்ப்பு என்ற பேரால் ஆடிய வெறியாட்டங்களையும் வரலாற்றில் அவர்கள் குப்பைக் கூலிகளாக மாறிப்போனைதையும் கூட அவர் சுட்டத் தவறவில்லை.

மக்கள் நலனைப் பற்றி அக்கறை உள்ளவர்களும் தமிழக வரலாற்றை ‘மக்கள் வரலாற்றுப் பார்வை’யுடன் கற்றுணர விரும்புகிறவர்களும் இந்த நூலை வரவேற்பர். இடைவிடாது உறுதியுடன் போராடித்தான் வெகுமக்களின் முழுமையான விடுதலையை உறுதிசெய்ய முடியும் என்பதை மணலியின் இந்தச் சுருக்க வரலாறு தெளிவாக்குகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலை ஆரவார, வெற்று முழக்கங்களால் சாத்தியமாகாது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் எண்ணற்ற மேன்மக்களால் அவர்களுடைய அளப்பரிய தியாகத்தால் கட்டப்பட்டவை. நூலாசிரியர் பழனித்துரை நல்வாழ்த்துக்குரியவர்.

 

Pin It