இந்திய அரசமைப்புச் சட்டம் கட்டளை விதிகளைக் கொண்டது;

இந்திய அரசுச் சட்டம்  (ACT) என்பது கட்டளை விதிகளைக் கொண்டதல்ல;

இந்திய அரசு ஆணை (ORDER) என்பது கட்டளை அதிகாரத்தைக் கொண்டதல்ல.

parliament 600இந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950-இல் நடப்புக்கு வந்தது.

அதில் 17ஆவது பகுதியில் இந்திய அரசு அலுவல் மொழி என்கிற தலைப்பில் “The Official Language of the Union shall be Hindi in Devanagiri Script” என்று மட்டும் உள்ளது. இதன் பொருள் இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள :

1.அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, வருமான வரித்துறை, தொலைப்பேசித் துறை, வங்கித்துறை, படைத் துறை, வெளியுறவுத் துறை முதலான எல்லா மத்திய அரசின் நிர்வாகத் துறைகளிலும் “அலுவல் செய்யும் மொழியாகத் தேவநாகரி வடி விலான இந்தி மொழி அலுவல் மொழியாக இருக்கும்” என்று மட்டும் உள்ளது.

இதன் பொருள், “மேலே கண்ட எல்லாத் துறைகளிலும் எல்லா மாநிலங்களிலும் அன்றாட அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும்.”

இதற்கு Official Languages Act of 1963 என்பது போன்ற இந்திய அரசுச் சட்டம் கைகொடுக்காது; அதேபோல் இந்திய அரசு வெளியிடும் எந்த நிர்வாக ஆணையும் பயன்படாது.

இந்த நிலையில், “மராட்டிய அரசு போல், தமிழகத்திலும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்... அதைப் போல் மற்ற 21 மொழிகளுக்கும் ஒரு தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதி அளித்திருக் கிறது என்றும் 3.7.2019-இல் தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.”

அதேபோன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் “தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் கிராமிய வங்கிப் பணியாளர்கள் தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது என்றும் இது தவிர்த்து தமிழ், மலையாளம், மராட்டி, கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் இனி தேர்வுகள் நடத்தப்படும்” என்று 5.7.2019-இல் மக்கள் அவையில் அறிவித்துள்ளார்.

“அஞ்சல் துறை ஊழியர்கள் நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் அஞ்சல் காரர் உள்பட நான்கு வகையான பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 14ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் எழுத முடியும் என்று கடந்த 11ஆம் நாள் மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதற்குத் தமிழ்நாட்டினர் கடும் எதிர்ப் புத் தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக நாடாளுமன்றத்தின் தமிழக மக்கள் அவை உறுப்பினர்கள், 17.7.2019ஆம் நாள் கோரிக்கை எழுப்பி 11 மணிக்குப் பேசினர். தமிழ் உட்பட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப் படும் என்று மத்திய அரசு இம்மாதம் 17ஆம் நாள் அறிவித்துள்ளது.”

மேலே சொல்லப்பட்டவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள்.

மேலே தொடக்கத்தில் நாம் சொன்னபடி, அரச மைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் உள்ள விதி 343, பின்கண்டவாறு திருத்தப்பட்டால் ஒழிய, எந்தச் சட்டம் (Any Act) என்பதும், மத்திய அரசு ஆணை என்பதும் அல்லது உறுதிமொழி என்பதும் கொஞ்சமும் பயன்படாது என்பதைத் தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி உணர வேண்டும் என வேண்டுகிறேன்.

The Official Languages தொடர்பாக முன் மொழியும் திருத்தம் பின்வருமாறு :

“The Official Languages shall be all the 22 languages or any number of languages still to be included in the list of languages under VIII Schedule giving freedom to every Indian language in the VIII Schedule.”

Under the VIII Schedule of the Constitution, now the following languages are only listed :

மேலே கண்ட மொழிகளின் பட்டியல் கீழே உள்ளது.

1) Assamese  அசாமி

2) Bengali வங்காளம்

3) Bodo போடோ

4) Dogri டோக்ரி

5) Gujarati குசராத்தி

6) Hindi இந்தி

7) Kannada  கன்னடம்

8) Kashmir  காஷ்மீரி

9)  Konkani கொங்கனி

10) Maithili மைத்திலி

11) Malayalam மலையாளம்

12) Manipuri  மணிப்புரி

13) Marathi மராத்தி

14) Nepali நேபாளி

15) Odia  ஒடியா

16) Punjabi பஞ்சாபி

17)  Sanskrit சமஸ்கிருதம்

18) Santhali  சந்தாலி

19) Sindhi சிந்தி

20) Tamil தமிழ்

21) Telugu தெலுங்கு

22)  Urudu  உருது

விடுதலை பெற்ற ஒரு நாட்டில், தந்தை பெரியார் அவர்கள் கூறிய படி, எல்லா மொழித் தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை அளிக்கப் பட்டு, கூட்டாட்சி முறையில் எல்லா மாநிலங்களி லும் அவரவர் மொழியே மாநில அரசு மற்றும் மத்திய அரசின் எல்லா அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழியாகப் பயன்பட கூட்டாட்சி, அரசியல் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு, இந்தியைத் திணிக்கும் தோறும் தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எதிர்ப் பதும், அதற்குத் தீர்வு சொல்வதாக அவ்வப்போது மத்திய அரசு பயன்படாத உறுதிமொழிகளைக் கொடுப்பதும் தீர்வாகாது.