மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்படும் இரோம் ஷர்மிளா, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி 16 ஆண்டுகளாக நடத்திய உண்ணாநோன்புப் போராட்டத்தை 2016 ஆகத்து 9 அன்று முடித்துக் கொள்ளப் போவதாக 26.7.2016 அன்று அறிவித்தார். நீதிமன்றத் திலிருந்து வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் இம்முடிவை அறிவித்தார்.

1950களில் நாகாலாந்து விடுதலைப் போராட்டம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. அதனால் 1958ஆம் ஆண்டு நடுவண் அரசு, மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுப்பதற்காக எனக்கூறி ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பிறப்பித்து நடைமுறைப்படுத் தியது.

1980ஆம் ஆண்டு மணிப்பூர் கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. காலம் செல்லச்செல்ல வடகிழக்கு மாநில மக்களைக் கொடுமைப்படுத்துவும் கொல்லவும் ஆயுதப்படையினரால் இச்சட்டம் தவறாகப் பயன்படுத் தப்பட்டது. தவறு செய்யும் ஆயுதப்படையினர்மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் புறநகர்ப் பகுதியான மலோம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகப் பொதுமக்கள் காத்திருந்த போது, அசாம் ஆயுதப்படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில் பத்துப் பேர் மாண்டனர். ஆனால் இது தொடர் பாகப் பாதுகாப்புப் படையினர் முறையாக எந்த விளக்கமும் தரவில்லை.

மலோம் படுகொலையை நேரில் பார்த்துக் கொதித் தெழுந்த 27 அகவை இளம் பெண்ணாக இருந்த இரோம் ஷர்மிளா ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூர் மாநிலத்திலிருந்து திரும்பப் பெறக்கோரி, 4.11.2000 அன்றுமுதல் தண்ணீரும், உணவும் அருந்தாமல் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துப் போராட்டத் தைத் தொடங்கினார்.

மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரைக் காவல்துறையினர் கைது செய்து, தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர். அவர் மூக்கின் வழியாகக் குழாய் மூலம் நீர்ம உணவை வலுக்கட் டாயமாகச் செலுத்தினர்.

ஆயினும் எதற்கும் அஞ்சாமல், இரோம் ஷர்மிளா தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார். தற்கொலை வழக்கில் கைது செய்யப்படும் ஒரு வரை ஓர் ஆண்டு வரையில் மட்டுமே சிறையில் அடைக்க முடியும். அந்த வகையில் இரோம் ஷர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு, பின்னர் உண்ணாவிரதம் இருந்ததற்காக மீண்டும் கைது செய்யப்படுவார், கடந்த 16 ஆண்டுகளாக இவ்வாறு விடுதலையாவதும் மீண்டும் கைதாவதும் நடந்து வந்தது.

இந்நிலையிலும் மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரிப் பொது மக்களுடன் இணைந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் அவர் ஈடுபட்டார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சவகர்லால் நேரு மருத்துவமனையில் ஒரு பகுதியை அவருக்கென்று ஒதுக்கி அதுவே அவரது சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இப்போது இரோம் ஷர்மிளா 44 அகவையினர்.

அமைதி வழியில் அரசை எதிர்த்து ஆண்டுக்கணக் கில் போராடிய இரோம் ஷர்மிளா மாபெரும் போராளி யாக உலக அளவில் அறியப்பட்டார். பாராட்டுகளும், விருதுகளும் குவிந்தன. பல ஆண்டுகளாகக் கட்டாயப் படுத்தப்பட்ட நீர்ம உணவு மட்டுமே உட்கொண்டதால் இரோம் ஷர்மிளாவின் உடலின் உள் உறுப்புகள் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கெனவே பல தடவைகள் செய்திகள் வெளிவந்தன. மூக்கில் குழாய்ப் பொருத்தப்பட்டுள்ள நிலையில் உள்ள இராம் ஷர்மிளா வின் தோற்றம் போராட்டத்தின் குறியீடாகியது.

26.7.2016 அன்று, இம்பாலில் செய்தியாளர்களிடம் தன் போராட்டத்தை 9.8.2016 அன்று முடித்துக் கொள் வதாக அறிவித்த போது, “16 ஆண்டுகள் போராடியும் ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டம் திரும்பப் பெறப்பட வில்லை. எனவே அரசியல் ரீதியாகப் போராடப் போகிறேன். அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் கட்சிச் சார்பில்லாமல் போட்டியிடப் போகிறேன். சிறையிலிருந்து வெளிவந்த பின் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னார்.

சில ஆண்டுகளுக்கு முன்பே போராட்டத்தை முடித்துக் கொண்டு, தன் காதலனைத் திருமணம் செய்து கொள்ள இரோம் ஷர்மிளா முடிவு செய்ததாகவும், மணிப்பூர் போராட்ட இயக்கத்தினர் அதைத் தடுத்தாகவும் செய்திகள் வந்தன. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்காமல், தலை சீவாமல், தன் அம்மாவைப் பார்க்காமல், தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இரோம் ஷர்மிளா வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறார் என்பதில் எவரும் அய்யம் கொள்ள முடியாது. மனிதநேயத்தையும் உயிர்வாழும் உரிமையையும் நேசிக்கும் எவரும் இரோம் ஷர்மிளாவின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

அரசை எதிர்த்துக் கொண்டு, கடுமையான துன்பங்களை ஏற்றுப் பல ஆண்டுகள் கொள்கை உறுதியுடன் போராடிய அவருடைய போர்க்குணம் வருங்கால இளைய தலைமுறையி னருக்கு வழிகாட்டியாக விளங்கும்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் இன்றைய நிலை

மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடிய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மனித உரிமைகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து 2013ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். நடுவண் அரசின் பாதுகாப்புப் படையினராலும் மணிப்பூர் மாநிலத்தின் காவல்துறையாலும் “போலி மோதல்களில்” (Fake Encounters) 1,528 பேர் கொல்லப்பட்டுள்ளது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதே அவர்களின் இன்றைய கோரிக்கையாகும்.

ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டம் சிற்சில மாற்றங் களுடன் 1990 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் உரிமை களைத் தன் ‘பூட்ஸ் காலால்’ நசுக்கும் இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பலதரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

1997இல் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பல வழக்குகளை யும் இணைத்து ஒரே வழக்காக ஆக்கி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது இச்சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆயினும் என்ன செய்ய வேண்டும் - என்ன செய்யக்கூடாது என்று இராணுவ உயர் அதிகாரிகள் வகுத்துள்ள விதிகளுக் குட்பட்டே ஆயுதப்படையினர் செயல்பட வேண்டும் என்று கண்துடைப்பான ஒரு கருத்தைக் கூறியது.

2005இல் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான ஆய்வுக்குழு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆயி னும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை 2004ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துடன் இணைக்கலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால் ஜீவன் ரெட்டி குழுவின் அறிக்கையை அரசு முறைப்படி வெளியிடவில்லை. வேறு வழிகளில் அது வெளியானது.

2013ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடுத்த வழக்கில், 1,528 பேர் காணவில்லை என்கிற பட்டியலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆறு பேரின் பெயரைத் தெரிவு செய்து, அந்த ஆறு பேர் தொடர்பாக நடந்தவற்றை விசாரிப்பதற்காக உச்சநீதி மன்றம் சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான குழுவை அமைத்தது.

சந்தோஷ் ஹெக்டே குழு ஆய்வு செய்த பின் அளித்த அறிக்கையில், “அந்த ஆறு பேரும் போலி மோதல் களில் (Fake Encounters) கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொலைகளை அசாம் ஆயுதப்படையினரும் மணிப்பூர் சிறப்பு அதிரடிப்படையினரும் செய்திருக்கிறார்கள். மேலும் மணிப்பூர் காவல்துறையினர் அதன் பங்கிற்கு - கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் வாய் திறக்காமல் இருப்பதற்காக - அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்து மிரட்டி வைத்துள் ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

சந்தோஷ் ஹெக்டே ஆய்வு செய்த பட்டியலில், 7ஆம் வகுப்பு மாணவன் ஆசாத்கான் கொல்லப்பட்ட விவரம் இடம்பெற்றுள்ளது. 2009 மார்ச்சு 4ஆம் நாள் பக்கத்து வீட்டின் முற்றத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டே, பள்ளிக்குச் செல்வதற்காகத் தன் நண்பனின் வருகைக்காகக் காத்திருந்தான். அப்போது அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் அம்மாணவனின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டைச் சோதனை யிட்டனர்.

அப்போது ஆயுதப் படையினருள் சிலர் ஆசாத்கானை அடித்தனர். தவளைபோல் தத்தித்தி வருமாறு செய்து அருகில் இருந்த வயல்வெளிக்கு அழைத் துச் சென்றனர். ஆசாத்தின் பெற்றோரும்  மற்றவர் களும் அச்சிறுவனை விட்டுவிடுமாறு மன்றாடினர். ஆயுதப் படையை சேர்ந்த ஒரு ஆள் பெற்றோரின் கண்ணெதிரிலேயே அப்பையனைத் துப்பாக்கியால் சுட்டான்.

அதன்பின் ஆயுதப்படையினர் காவல்துறைக்கு அளித்த அறிக்கையில், முசுலீம் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தபோது ஆசாத்கான் குறுக்கே வரநேரிட்டதால் (Cross Fire) குண்டடிப்பட்டு இறக்க நேரிட்டது என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு, 2004 சூலை 11 அன்று தங்கஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அசாம் ஆயுதப் படையினர் கைது செய்தனர். இரவு முழுவதும் அப்பெண்ணைக் கொடிய முறையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியபின் சுட்டுக் கொன்றுவிட்டனர். அடுத்த நாள் குண்டடிப்பட்டு இறந்த நிலையில் மனோ ரமாவின் உடல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஆயுதப் படையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கஜம் மனோரமா படையினரால் எச்சரிக்கை செய்த பிறகும் தொடர்ந்து தப்பி ஓடியதால் சுடப்பட்டார் என்று கூறப்பட்டது. அவருடைய உயிர்நிலை உறுப்பில் பல குண்டுகள் பாய்ந்திருந்தன. எனவே தப்பி ஓடிய நிலை யில் அவர் சுடப்படவில்லை என்பது அப்பட்டமான பொய்.

தங்கஜம் மனோரமாவின் கொடிய படுகொலையைக் கண்டித்து, மணிப்பூரின் நடுத்தர அகவையினரான 12 பெண்கள் அசாம் ஆயுதப் படையின் தலைமை அலு வலகத்தின் முன் “இந்திய இராணுவமே - எங்களைக் கற்பழி” என்கிற பதாகையின் பின் நின்று முற்றாகத் தங்கள் ஆடைகளைக் களைந்த நிலையில் போராட்டம் நடத்தினர். இது இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கியது.

2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பி. லேக்கூர், நீதிபதி யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு 9.7.2016 அன்று 85 பக்கங்கள் கொண்ட இடைக் காலத் தீர்ப்பை வழங்கியது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டப்படி, இராணுவ நீதிமன்றம் தவிர வேறு எங்கும் ஆயுதப்படையினரின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்க முடியாது என்றிருந்த நிலையை இத்தீர்ப்புத் தகர்த்துள்ளது.

கலவரப் பகுதியில் (disturbed area) ஆயுதப்படை யால் கொல்லப்பட்ட ஒருவர் பயங்கரமான குற்றச் செயல்கள் புரிபவராகவோ, ஒரு தீவிரவாதியாகவோ, அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரிடுபவராகவோ இருந்தாலும் அந்த இறப்பு குறித்துத் தீவிரமாக விசாரிக் கப்பட வேண்டும். அந்நிகழ்வில் ஆயுதப்படைக்கு அளிக் கப்பட்ட அதிகாரத்தைவிட அதிகமான தன்மையில் வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது கண்டறியப் பட வேண்டும்.

இத்தகைய கொலை நிகழ்வுகள் விசார ணைக்குரியவை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் உளவுத் துறையால் தீர விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தம்மை எவரும் தட்டிக்கேட்க முடியாது என்றிருந்த ஆயுதப்படைகளின் ஆணவப் போக்கிற்கு இது ஒரு சம்மட்டி அடியாகும்.

ஆயுதப்படையினர் மீதான விசாரணைக்கு வழி வகுப்பது, கடமையைச் செய்வதற்கான அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் என்று நடுவண் அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது. அப்போது நீதிபதிகள், “அரசு இதன் இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும்; சனநாயக நாட்டில் ஒரு குடிமகன் துப்பாக்கியின் முனைக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற காட்சியைக் காண வேண்டும்” என்று அரசுக்கு அறிவுறுத்தினர். ஒரு ஈயை அடிப்பதற்காக ஒரு பெரிய சம்மட்டியைப் பயன் படுத்துவது போன்ற தன்மையில் ஆயுதப்படையினர் நடந்து கொள்ளக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில் கூறப் பட்டுள்ள சில பகுதிகள் :

“மணிப்பூரில் இயல்பு நிலையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்ற பெயரில், ஆயுதப்படையினரைச் சிறப்பு அதிகாரங்களுடன் நிலையாக அங்கே வைத் திருப்பது சனநாயகத்தின் செயல்பாட்டைக் கேலிக் கூத்தாக்குவதாகும்.”

“கலவரப் பகுதி என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒருவர் கையில் ஆயுதத்தை வைத்துக் கொண்டிருப்பதாலேயே அவரைப் ‘பகைவன்’ என்று கருதக்கூடாது; அதன் காரணமாக அவரைத் தீவிரவாதி என்று முத்திரைக் குத்தக்கூடாது.”

“மணிப்பூரிலும் அதையொட்டியுள்ள மாநிலங்களி லும் பதட்டமான சூழ்நிலை இருப்பதை இந்த நீதி மன்றம் அறிந்திருக்கிறது. ஆயினும் ஆயுதப்படையி னரின் எத்தகைய நடவடிக்கை பற்றியும் விசாரிப்ப தற்கே இடமில்லாத நிலைமை இருப்பதுதான் எங் களைக் கவலையடையச் செய்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப் படவில்லை. மாறாக சில நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட வர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.”

சட்டவிரோதமான முறையில் ஆயுதப்படையின ரால் தான்தோன்றித் தனமாகக் கொல்லப்பட்ட 1528 பேரின் சாவு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கையாகும். சட்ட விரோதமாகவும், போலி மோதல் என்ற பெயரிலும் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இருப் பதாக உச்சநீதிமன்றத்தால் கருதப்படும் 62 பேரின் இறப்பு விவரத்தை முறையாகப் பட்டியலிட்டுத் தரு மாறு, இவ்வழக்கைத் தொடுத்த மனித உரிமை விழிப் புணர்வு இயக்கத்தின் இயக்குநர் மெய்ஹங்பாம் ராகேஷை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

ராகேஷ் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் செய்தி யாளரிடம் பேசிய போது, “இந்தப் படுகொலைகள் குறித்து வழக்கமான முறையில் விசாரித்தால் நீதி கிடைக்காது. சிறப்பு விரைவு விசாரணை மூலமே நீதி கிடைக்க வாய்ப்புண்டு” என்று கருத்துரைத்துள்ளார்.

ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்ப் பவர்கள், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ஆனால் உச்சநீதிமன்றத்தின் ஆணைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது நடுவண் அரசும் இராணுவமும் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.

அதற்காகக் காத்திருக்காமல் மணிப்பூரிலும் ஜம்மு-காஷ்மீரிலும், சத்தீஷ்கரின் சில பகுதிகளிலும் நடப்பில் உள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும் என்றும் மனித உரிமைப் பாதுகாப்பிலும் சனநாயகத்திலும் அக்கறை கொண்டுள்ள அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். போராட்டங்கள் மூலமே உரிமை களை வென்றெடுக்க முடியும் என்பது வரலாறு புகட்டும் பாடமாகும்.