உள்நாட்டு - அயல்நாட்டுப் பயன்பாட்டுக்கான பளிங்குக்கல் பகற்கொள்ளை

சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக - உரிமம் பெற்றதற்கு மாறாக அரசுப் புறம் போக்கிலும் ஓடைப்புறம் போக்கிலும், தனியார் நிலத்திலும் பளிங்குக் கற்களைத் தோண்டியெடுத்துத் தனியார் கொள்ளை யடித்ததனால் ஏற்பட்ட இழப்பைக் கண்டுபிடிக்க திரு. உ. சகாயம் ஒரு நபர் ஆணையராக அமர்த்தப்பட்டார்.

தமிழ்நாட்டு அரசுக்கு வரவேண்டிய 1.10 இலக்கம் கோடி ரூபா வருமானம் இல்லாமல் போய்விட்டதாக, ஒரு நபர் ஆணையராக அமர்த்தப்பட்ட திரு. உ.சகாயம் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் ஆய்வு அறிக்கையை, 2015ஆம் ஆண்டு நவம்பரில், சென்னை உயர்நீதிமன்றத்தாரிடம் ஒப்படை செய்தார்.

அந்த அறிக்கையிலுள்ள விவரங்கள் எல்லோரை யும் திடுக்கிட வைப்பவை.

பளிங்குக் கல் வெட்டியெடுக்கும் நிலத்துக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் போதே கையூட்டு தரப்படுகிறது; அரசு அதிகாரிகள், நிலங்களின் பயன்பாட்டு வகை விவரங்களை (land use) வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். அதனால் கல்வெட்டியெடுப்பதை எல்லா வகை நிலங்களிலும் குத்தகைக்காரர்கள் மேற்கொண்டனர்.

தாம் ஆய்வு செய்த 175 திட்டங்களிலும் - அரசு அதிகாரிகளால், உண்மையை மறைத்துவிட்டே திட்டம் தயார் செய்யப் பட்டதைக் காணமுடிந்தது.

அதாவது, கல்வெட்டியெடுக்க ஏலம் தரப்படும் பகுதிகளிலுள்ள சில சிற்றூர்களையே (hamlets) திட்டத்தில் காட்ட வில்லை; நீர்ப்பிடிப்புப் பகுதிகள் (Water Bodies) இருப்பதைக் காட்டவில்லை; தொல்லியல் துறைப் பாதுகாப்பிலுள்ள இடங் களை அடையாளம் காட்டவில்லை. இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே உரிமங்கள் (Licences) குத்த கைக்கு வழங்கப்பட்டுள்ளனன. அதனால் குத்தகைக்கு உரிமம் பெற்றவர்கள், தாங்கள் வெட்டக்கூடாத இடங்களில் எல்லாம் கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு களைப் பொதுப் பணித்துறை அதிகாரிகளோ, ஊர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளோ ஏரெடுத்தும் பார்க்கவில்லை.

“தமிழ்நாடு கனிம வளர்ச்சித் துறை” (TAMIN) அய்யத் துக்கு இடமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது; சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை அது அனுமதித் துள்ளது. மேலும் PRP என்னும் குழுமம் மதுரை, தேனி மாவட்டங்களில் - 1961ஆம் ஆண்டைய நில உச்சவரம்புச் சட்டத்தை மீறி, 20,000 ஏக்கர் நிலங்களைச் சொந்தமாகக் கிரயத்துக்கு வாங்கியுள்ளனர்.

இவ்வளவும் - தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. என்கிற இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான் நடந்தன.

தமிழ்நாட்டின் கனிமவளம் பகற்கொள்ளை போகிறது.