கிறித்தவமதம் தோன்றிய அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின்தான் இஸ்லாம் என்னும் புதிய மார்க்கம் தோன்றியது.

கிறித்தவமதம் எல்லோரையும் ஆதாமின் பிள்ளைகள் என்று பகர்வது போலவே இஸ்லாமும் எல்லோரையும் ‘யா பனி ஆதம்’ என்று சொல் கிறது. திருக்குர் ஆன் உலகை நெறிப்படுத்துகிற புனித நூல்களில் ஒன்றாகும்.

pallivasaal 620

மதுரையின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் இரண்டறக் கலந்தது. ஒரு மதத்தின் மக்கள் பிறிதொரு மதத்தவரை மாமன் மச்சான் என்றும் அப்பா, பிள்ளை என்றும் உறவு பாராட்டி மகிழ்கின்றனர் என்றால் அது இந்துமதமும் இஸ்லாமும் காலங்காலமாகப் போற்றிவரும் பண்பாட்டு வெளிப்பாடாகும்.

இஸ்லாம் என்னும் மதம் இந்தியாவில் நுழை வதற்கு முன்பே இஸ்லாமியர்கள் மதுரைக்கு வந்தனர் என்பது தொன்ம நிகழ்வுகள்.

ஆதிகாலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்களும் மக்களின் புதியன வாங்கும் ஆர்வமும் சோனகர் எனப்படும் அரபு வணிகர்கள், பாரசீக வளைகுடா வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்தன. சோனகரை யவனர் என்றும் தமிழ் நூல்கள் சிறப் பிக்கின்றன. யவனர் சந்தை இருந்ததாகவும் கூறு கின்றன.

அரபு வணிகர்களின் துணிகள், மற்றும் வாசனைப் பொருட்கள் மதுரைச் சந்தையை ஈர்த்ததுபோல சோனக மண்ணில் மதுரையின் முத்துக்களும் இடம்பிடித்தன.

நான்கு வர்ண மக்கள் வாழ்ந்த மண்ணில் நுழைந்த இஸ்லாமியர்களை ஐந்தாவது வர்ண மாகப் பார்த்தவர்கள் இவர்களை அஞ்சு வண்ணத் தார் என்றனர். இது ஒரு கருத்தாகும். ஆனால் இலங்கைத் தமிழ் அறிஞர் உனவஸ் இதற்கு வேறொரு பொருள் தருகிறார். பாரசீகத்திலிருந்து வந்த அஞ்சு வண்ணத்தார் பற்றி விளக்கும் போது “ஆசீம் வம்சம் (நபிகள் நாயகம் (ஸல் வம்சம்) பக்கிரி வம்சம் (அபுபக்கர் ரவிவம்சம்) பாரூக்கி வம்சம் (உமர் ரவி வம்சம்) உடையாவம்சம் (உதுமான் ரலி வம்சம்) இராணுவயுக்தர் (குதிரை ராவுத்தர் என்னும் குதிரை வணிகர்கள்) இவர்களே அஞ்சுவண்ணத்தார் என்று கூறுகிறார்.

அஞ்சு வண்ணம் குறித்த தரவுகள் எத்தகைய தாக இருந்த போதிலும் இலங்கை அறிஞரின் கருத்தே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

மதுரைப் பாண்டியன் கூன் பாண்டியன் காஜிமார் தெருப் பள்ளி வாசல், கோரிப்பாளையம் தர்ஹா ஆகியவற்றுக்கு நிலமும் அரபுவணிகர் களுக்குக் குடியிருப்பும் அமைய உதவினான் என்பதிலிருந்தே, இஸ்லாமியர்கள் வரலாற்றுக் காலந்தொட்டே மன்னரோடும் மக்களோடும் இணைந்த வாழ்வையே வாழ்ந்தனர் என்பதை உணரலாம். சோழ மன்னன் ஒருவனும் உறையூரில் பள்ளி வாசல் அமைக்க உதவி இருக்கிறான் என்பதை திருச்சி கோட்டை ரயில் நிலைய முன்புறம் கி.பி.734 (ஹஜ்ரி 116-ல்) உள்ள கல்வெட்டில் காணலாம். கல்லுப் பள்ளி என்ற வழிபாட்டுத்தலம் இங்கே உள்ளது. சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம் ஆற்காடு நவாபால் கொடுக்கப்பட்டது.

வணிகர்கள்

அரபு வணிகர்களின் வாசனைத்திரவியம் போன்ற பொருட்கள் மக்களை ஈர்த்தன. இது தவிர அரபு வணிகர்கள் குதிரை வணிகமும் புரிந்தனர். ஆனால் இறக்குமதியாகும் குதிரைகளை சேணம் போன்ற கருவிகள் இல்லாமலும் பழக்கத் தெரி யாமல் முரட்டுத்தனமாகச் சவாரி செய்ததாலும் குதிரைகள் இறந்தன. இதனால் மன்னர்கள் வணிகர் களான அரபிகளையே நியமித்தனர். இவர்களின் ஆற்றலும் வீரமும் கண்ட மன்னர்கள் குதிரைப் படைத் தலைவர்களாகவும் நியமனம் செய்தனர். மாலிக்காபூர் படை எடுப்பின் போது பாண்டிய மன்னரின் படையில் 3000 முஸ்லீம்கள் இருந்தனர்.

குதிரை வணிகர்களை மதுரை மக்கள் ராவுத்தர் என்று கூப்பிட்டனர்.

திருவிளையாடற் புராணம் 59’வது படலத்தில் குதிரைகளை ஓட்டிவந்த குதிரை வணிகர் தலைவர் ராவுத்தர்களைப் போல வெள்ளை ஆடையும் தலைப்பாகையும் தாடியும் கொண்டு வேடமிட்டு வந்ததைக் கூறுகிறது தமிழ்நாட்டின் ஆதிக்கோயில்கள், பலவற்றில் குதிரை ராவுத்தரின் சிலைகள் உள்ளன. திருப்பெருந் துறைக் கோவில் மண்டபக் குதிரைச் சிலையுடன் கூடிய மண்டபம் குதிரைராவுத்தர் மண்டபம் என்றும், கள்ளக் குறிச்சியில் திரௌபதி யம்மன் கோவில் வாசலிலும் தலைப் பாகை- தாடி யுடன் கூடிய சிலை முத்தியாலுராவுத்தர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

அருணகிரிநாதர் தனது கந்தரலங்காரம். கந்தர் கலிவெண்பா நூற்களில் முருகக் கடவுளை

“சூர்க் கொன்ற ராவுத்தனே!
மாமயிலேறும் ராவுத்தனே”

என்று வர்ணிக்கின்றார். இராவுத்தர் என்பது மேதகு என்னும் சொல்லைக் குறிக்கும்.

தொடக்கத்தில் யவனர் என்றும் பின்னர் இப்பெயர் மாறி முஸ்லீம்கள் என்றும் சோனகர் என்று பின்னாளிலும் அழைக்கப்பட்டனர்.

உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் துருக்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் ‘துருக்கர்’ என்று அழைக்கப்பட்டு, பின் மருவி துலுக்கர் என்று பேசப்பட்டனர்.

மரக்கலம் என்பது கப்பல்களையும் படகு களையும் குறிக்கும். மரக்கலத் தலைவர்கள் மரக்கல ராயர் என்றும் மரைக்காயர் என்றும் அழைக்கப் பட்டனர். மார்க்கப் என்பது மரக்கலத்திற்கான அரபு வேர்ச்சொல் ஆகும்.

இஸ்லாமிய வணிகர்கள் “லப்பைக்” என்று அடிக்கடி கூறிக் கொள்வார்கள். இதுவே ‘லெப்பை’கள் என்று மருவியது.

இஸ்லாமின் உயர்ந்த பண்பாட்டு நெறிகளில் நேசித்துப் பற்றுக்கொண்டவர்கள் பின்னர் இஸ்லாமிய மார்க்கத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டனர்.
பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இராம தேவர் இஸ்லாத்தை ஏற்று மெக்கா சென்று வந்தார். தனது பெயரையும் யாஃகூபு என்றும் யாக்கோபு என்றும் மாற்றிக் கொண்டார்.

63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனார் விண்ணுலகம் சென்று தான் வழிபடும் கடவுளரான சிவன் பார்வதியை சேவித்து வந்தார் என்ற பெயர் பெற்றவர்.

பாஸ்கர ரவிவர்மன் என்ற பெயரில் கி.பி. 780 முதல் கி.பி. 834 வரை கோர மண்டலம் என்னும் சேர மண்டலத்தை ஆண்டவராவார். யானை ஏறா மாடக் கோவில்கள் அமைத்தவர் என்று இவரைப் பக்தி உலகம் பாராட்டும்.

இவர் இஸ்லாமியப் பெருமகனாரான நபிகள் நாயகம் அவர்களின் ஆற்றலைக் கேள்விப்பட்டு அரபு தேசம் சென்று இஸ்லாமியராக மாறியதாகத் தொன்மத் தகவல் ஒன்று உள்ளது.

இஸ்லாமியராக மாறிய சேர மன்னர் தனது பெயரை அப்துல் ரகுமான் சாமிரி என்று மாற்றிக் கொண்டாராம். அவருக்கு அரபு நாட்டின் ஸஃபர் ((ZAFAR)) என்னுமிடத்தில் “கபர்” இருப்பதாகவும் கல்வெட்டு ஒன்று சொல்கிறது.

அப்துல் ரகுமான் சாமுரி ஹஜ்ரி 212-ல் (கி.பி. 830) அங்கு வந்ததாகவும் ஹஜ்ரி 216-ல் (கி.பி. 834) இறையடி சேர்ந்ததாகவும் அதில் செய்தி உள்ளது.

ம ‘அபர்’ என்று அழைக்கப்படும் மாபார் என்ற சொல் மதுரையைக் குறிப்பதாகும். கொல்லத்தி லிருந்து நெல்லூர் வரை உள்ள கோர மண்டலப் பிரதேசத்தை ம’ அபர் என்று கூறுபவர்களும் உண்டு. இப்பகுதிகளின் வழியாகத்தான் பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து வணிகர்கள் இந்தியா வந்தனர் இதுவே இந்தியாவிற்கான திறவுகோல் என்று யாத்ரீகர் வஸ்ஸாப் தனது நூலில் கூறு கிறார்.

மாலிக் இப்னுதீனார் தலைமையில் இஸ்லாமிய மதப் பரப்புக்குழு பாண்டிய நாட்டுக்கு வந்த போது கொடுங்களூர் பள்ளி இருந்தது. இது அப்துல் ரகுமான் சாமிரி என்ற பரஸ்கர ரவி வர்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

இந்து தேசத்தின் முதல் பள்ளிவாசலாக கொடுங்காளூர் பள்ளிவாசல் பேசப்படுகிற பெருமை கொண்டது.

இதே போல் உலகின் முதல் பள்ளிவாசல் மதீனாவில் தோற்றுவிக்கப்பட்டது. அஸ்கர் அலி எஞ்ஜினியர் என்ற இஸ்லாமிய வரலாற்று அறிஞர் இப்பள்ளிவாசலின் தோற்றம் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தீர்க்கதரிசி (முகமது நபி) பாதுகாப்புக் காரணங்கருதி நஜ்ஜர் குலக்குழு மக்களுக்கான இடத்தில் தங்கி இருந்தார்.

அது ஒரு தரிசு நிலம். ஒரு வேளை ஒரு பகுதியில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டிருக் கலாம். சில மரக்கூட்டங்களும் பேரீச்சை மரங் களும் அகற்றப்பட்டு கட்டட வேலை தொடங் கியது. தீர்க்கதரிசியின் (முகமது நபி)யும் இக் கட்டட வேலைகளைச் செய்தார்.

இக்கட்டடம் தான் முதல் மசூதி என்று முஸ்லீம் மரபில் கருதப்படுகிறது. இதைக் குறிக்கும் சொல் நபாட்டியன் மற்றும் ஸிரியன் வடிவில் மஸ்ஜித என்று வழங்கப்படுகிறது. இதற்கு மக்கள் கீழே விழுந்து வணங்குகிற இடம் அதாவது வழிபாடு செய்யும் இடம் என்று பொருள்.

இக்கட்டடத்தில் நீண்ட சதுர வடிவில் பெரிய முற்றம் ஒன்று இருந்தது. தீர்க்கதரிசியின் இரண்டு மனைவியருக்குமாக எல்லா நடவடிக்கைகளுக்கும் மையமாயிற்று. முஹம்மத் (நபி) தனது சமுதாய விவகாரங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்திய இந்த இடம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஏழைத் தோழர்கள் இரவில் படுத்து உறங்கினர்.

இஸ்லாமிய காலண்டர் ஆண்டு மெக்காவி லிருந்து தோழர் அபூபக்கருடன் மதீனாவிற்கு (குபா குடியிருப்புக்கு) சென்று சேர்ந்த நாளி லிருந்து தொடங்குகிறது.

அரேபியர்கள் அதுவரை தங்களுக்கென ஒரு ஆண்டுக்கணக்கினைக் கொண்டிருக்கவில்லை. தபரி ஜாஹிலிய்யா என்ற வரலாற்றறிஞர் இது குறித்து விளக்கும் போது,

“ஒரு பொதுவான தேதிக் கணக்கு முறை இல்லை எனில் மக்காவின் வர்த்தக நடைமுறை களில் குழப்பம்தான் ஏற்படும். தேவை என்று கருதிய போது கி.பி.622 ஜூலை 16-ஆம் தேதியை ஆண்டுத் தொடக்கமாக வைத்துக் கொண்டனர். அந்த நாளில் தான் முஸ்லீம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங் கினார்கள். இந்த ஆண்டுமுறையில் தேதிகள் சந்திரமாத அடிப்படையில் கண்கிடப்பட்டு ஹஜ்ரி ஆக விளங்குகிறது.

மாலிக் இப்னு தீனாரைத் தொடர்ந்து காலந் தோறும் இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்கள் பாண்டிய நாடு வந்த வண்ணமிருந்தனர்.

காஜிதாஜுதீன் தலைமையிலான ஒரு குழு மதுரை வந்தது. இதன் மூலகாரணமாகக் கூறப் படும். ஜமாலுதீன் முப்தி அல் மாவ்ரி இவர் தான் மாபார் பகுதியின் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவர் தனது இரு மகன்களில் ஒருவரான ‘காஜி தாஜுதீனை’ மதுரைக்கு அனுப்பிவைத்தார்.

காஜி தாஜுதீன் கிருதமால் நதிவனமாக இருந்த மன்னரின் பொழுது போக்கு மண்டபத்தில் தங்கி இருந்தபோது மன்னரின் வீரர்கள் அவரை விசாரித்தனர். விவரம் கூறிய அவர் மன்னரின் வயிற்றுநோவைத்தான் குணப்படுத்துவதாகக் கூறினார். மன்னர் நேரடியாக வந்தபோது அவரை தாஜீதீன் குணப்படுத்தினார்.

இதனால் மகிழ்வுற்ற மன்னர் சுந்தரபாண்டியர் அவருக்கு அங்கேயே தங்கவும் மண்டபத்தை உரிமையாக்கிச் செப்புப் பட்டயம் வழங்கிய தாகவும் கூறுகின்றனர்.

இங்கு ஒரு தொழுகைத் தலம் கட்ட வேண்டும் என்பதை ஏற்று விரகனூர் கிராம வருவாயை இதற்காக மன்னர் ஒதுக்கீடு செய்து ஆணை யிட்டார். என்று பாண்டி நாட்டு வரலாறு நூலில் டாக்டர் எஸ்.ஏ.க்யூ ஹுசைனி கூறுகிறார்.

காஜி மஹல்லா என்று அழைக்கப்படும் காஜிமார் தெருவில் உள்ள இப்பள்ளி வாசல் மதுரையின் முதல் பள்ளி வாசல் என்னும் பெருமை கொண்டது. பாண்டிய மன்னனால் வழங்கப்பட்டு பின்னாட்களில் பள்ளிவாசலாக மாறிய இந்த மண்டபத்தின் தூண்களில் குலை தள்ளிய வாழை, தாமரை இதழ்கள், மீன் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.

இங்கு காஜிக்கள் தங்களை முகமது நபியின் நேரடி வாரிசுகள் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொண்டவர்கள் நபிகளின் வம்சத்தினரான ஆசிம்வம்சத்தினர் இந்தக் காஜிக்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

மதுரையின் முக்கியமான காஜிமார் தெருவில் காஜிக்களுக்கு முன்பே ‘கூடுவாலா’ என அழைக்கப் பட்டவெல்லம் காய்ச்சுவோர் இருந்திருக்கின்றனர். மதத்தை வேரூன்றச் செய்ய வந்த காஜிக்களின் வருகை இவர்களை இடம்பெயரச் செய்து விட்டது. ஜரிகை வேலைப்பாட்டுத் தொழில் செய்யும் முஸ்லீம்கள் உள்ள தெரு ஜரிகைக்காரத் தெரு வாகும். இப்பகுதி இங்குதான் உள்ளது.

மன்னனால் நியமிக்கப்பட்ட காஜி தாஜுதீன் காலந்தொட்டு இன்று வரை மதுரை இஸ்லாமிய வரலாற்றில் காஜிமார் தெரு மிகவும் புகழ்பெற்றது.

பெரிய ஹஜரத் சின்ன ஹஜரத் என்பவர்கள் போதிப்பவராக இருந்து இஸ்லாமிய மார்க்கக் கல்வியை முறைப்படி கற்றுத் தந்து வருகின்றனர். மதுரை காஜிக்களிடம் படித்தவர்கள் வேலூர் பாக்கியாத் மதரஸாவைத் தொடங்கினார்கள்.

ஏனைய பகுதிகளில் ஜமாத் என்ற அமைப்பு இருந்து வருகிறது. ஜமாத்தார்கள் அப்பகுதியில் முஸ்லீம்களுக்கு இடையே நல்லது கெட்டது களுக்குப் பொறுப்பானவர்கள். ஆனால் காஜி மார் தெருவில் காஜியே நீதிபதியாக இருப்பதால் அதுவும் மன்னரே நியமித்ததால் ஜமா அத் என்று தனியாக இல்லை. நான்கு பேரைக் கொண்ட டிரஸ்ட் அமைப்பே கவனித்து வருகிறது.

காஜிக்களுக்கு அரசு மரியாதையும் உண்டு. தலைமைக் காஜியும் டவுன்காஜியும் காஜிமார் தெருவிலிருந்தே நியமிக்கப்படுகிறார்கள். மதுரையின் முக்கிய பள்ளி வாசல்களின் இமாம்கள் இக் காஜிமார் தெரு மார்க்கக் கல்வி படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்காவர் என்னும் திருமணத்தை நடத்தி வைக்கும் உரிமை காஜிக்களுக்கே உண்டு. ஆங்கில அரசால் ‘காஜி சட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது அமுலில் உள்ளது.

காஜிமார் தெருவிலேயே காஜிக்கள் காதிரியா, ஷாஜுலியா என்ற பெயரில் இரண்டு அமைப்புக் களால் 4 நபர்கள் இப்பள்ளி வாசலை நிர்வகித்து வருகின்றனர்.

பொதுத் தேர்தல்களில் மதுரை மத்தியத் தொகுதியின் வெற்றியை இப்பகுதிதான் தீர்மானிக் கிறது என்னுமளவு வலிமையான வாக்கு வங்கி கொண்டது.
பாண்டிய மன்னன் மண்டபம் தொழுகைப் பள்ளிவாசலாக மாறிய பின் இந்த எட்டு நூற்றாண்டு களில் இதன் வடிவம் பொலிவடைந்து கொண்டே வருகிறது. வானுயர உயர்ந்த மினாராக்கள். தொழு மிடத்திற்கு முன்புறம் மேற்கில் இருந்து ஒலு செய் வதற்கான ஹவுஜ், இந்துக் கலாச்சாரப்படி இருந்தது. இஸ்லாமியக் கட்டடக்கலையின் அமைப்பில் பள்ளி வாசலின் நுழைவில் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஹவுஜும் கட்டப்பட்டுள்ளது.

காஜிதாஜுதீனின் கபர் எனப்படும் கல்லறை பள்ளி வாசலின் தொழுகைத் தளத்தை ஒட்டியே உள்ளது.

இஸ்லாமிய மதத்தின் முக்கிய அடையாள மாக காஜிக்கள் இருப்பதால் சமய நல்லிணக்க, சமாதான விழாக்களுக்கு அரசு அழைப்புகள் வழங்கப்படுகிறது. காஜிக்களின் சகிப்புத் தன்மைக்கு அடையாளமாக சோனையா கோவில், சாமியார் சந்து ஆகியவைகளும் உள்ளன. ரம்ஜான், மிலாது நேரங்களில் இப்பகுதி களைகட்டிக் கொண்டாட்டத் தோடு திகழும்.

கோரிப்பாளையம்

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சூபி ஞானிகள் மதுரை பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் வெக்கை நோயைத் தீர்த்து நின்ற சீர் நெடுமாறனின் பேரன்பைப் பெற்றனர்.

சையத் சுல்தான், அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான், சும்சுதீன் அவுலியா ஆகியோர் மன்னனின் துயரை மட்டுமல்ல மக்களின் நோய் களையும் தங்கள் ஆற்றலால் குணப்படுத்தினர். இவர்களின் பணிகளாலும் சேவைத் திறன்களாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் தாமாகவே இஸ்லாத்தின் இனிய நெறி முறைகளை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினர். மதுரையின் மக்களான இவர்களின் தாய்மொழி தமிழாகவே இருந்தது.

இஸ்லாமியரின் கோட்பாடுகளையும் வாழ்வின் நெறி முறைகளையும் கண்டு வியப்புற்ற மன்னர்கள் இந்தச் சூபி ஞானிகளுக்குப் பள்ளி வாசல்களையும் தர்ஹாக்களையும் கட்டிக் கொள்ள நிவந்தங்களும் இறையிலி நிலங்களும் கொடுத்து அவர்களைப் போற்றினர்.

கூன் பாண்டியனின் படையின் தளபதியே முஸ்லீம்வீரர் தான் என்னுமளவு கௌரவப் படுத்தினர்.

சூபி ஞானிகளான இவர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிவரும் செயல்களில் விருப்புற்ற மன்னன் கூன் பாண்டியன் வைகை நதி வடகரையில் தாஹா ஒன்றைக்கட்டிக்கொள்ள நிலமளித்துப் பட்டய சாசனமும் வழங்கினான்.

அரசு மருத்துவமனை எதிரில் செல்லூர் சாலை வடபுறம் பெரும்பான்மையான மக்கள் வாழும் பகுதிதான் கோரிப்பாளையம் பகுதியாகும். அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி என்று பரபரப்பாகத்திகழும் கோரிப் பாளையம் தர்ஹா பள்ளிவாசல் மதுரை பற்றிய சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இஸ்லாமியரின் புனித சுற்றுலாத் திட்டத்தில் இக்கோரிப் பாளையமும் இடம் பெற்றுள்ளது.

பெரியதொரு மதில் சூழ்ந்த இத்தர்ஹா இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்துக் கோவில்களின் வேலைப்பாடுகள் இதன் உள்ளும்புறமும் காணப்படுகின்றது. 70 அடி விட்டங்கொண்ட அரைக்கோள வடிவத்தில் மேற் புறமும் 20 அடி உயரம் கொண்ட உட்பகுதியும் உடையது.

கோரி எனப்படும் கூம்புவடிவமான பச்சை நிறத்தில் அமைந்த இத்தர்ஹாவின் விதானம் அழகும் நேர்த்தியும் உடையது. பச்சை நிறப் பள்ளிவாசல் என்பார்கள்.

இத்தர்ஹாவின் உட்புறம் சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா. சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. கல்லறைகளின் மேல் பச்சைத் துணியாலான போர்வை சாத்தப்பட்டு சந்தனமும் மல்லிகையும் இதன் மேல் அலங்காரமாகத் தூவப்பட்டிருக்கும்.

இதன் அருகே பாண்டியர் கல்வெட்டு ஒன்று சாசனமாக உள்ளது. இதன் வெளிப்புறத்தில் சிறு சிறு கல்லறைகள்போல மேடான பகுதிகள் உள்ளன.

மனநலம் குன்றியவர்கள் மதபேதமின்றி இங்கே வந்து சிகிச்சை பெற்றுக் குணமடைகின்றனர் என்பது நம்பிக்கையாகவே இருந்துவருகின்றது. மருத்துவர்களால் சாதிக்கமுடியாத, தீர்க்க வியலாது என்று கூறப்பட்டவர்கள்கூட இங்கே வந்து குணம் பெறுகின்றனர் என்று சொல்கின்றனர்.

கோரிப்பாளையம் தர்ஹா பள்ளிவாசலுக்கு கூன் பாண்டிய மன்னன் நிலம் கொடுத்தான் என்பது மதுரை வரலாற்றில் குறிப்பிடத்தக்க தகவலாகும்.

கிபி ஏழாம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு ஒன்று பல நூற்றாண்டுகள் கழித்து மதுரை நாயக்கர் மன்னர் வீரப்ப நாயக் கரின் அரசவையில் கோரிப் பாளையம் மூஸ்லீம் களால் தாக்கல் செய்யப்பட்டது.

“மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய நிலத்தை நாயக்கர்கள் உரிமை கொண்டாடுவதாலும். இதனால் யாத்திரீகர்கள் தர்ஹா வழிபாட்டுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி” அரசனிடம் நீதி கேட்டனர்.

கி.பி. 1572 முதல் - 1595 முடிய 23 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த வீரப்ப நாயக்கர் களவிசாரணை, ஆவணப் பரிசோதனைகள் மூலமாக இவ்வழக்கினை ஆராய்ந்து கோரிப் பாளையம் தர்ஹாவுக்குக் கூன் பாண்டியனால் விடப்பட்ட நிலம் முஸ்லீம்களுக்கே சொந்தமாகும் எனத் தீர்ப்புச் செய்து தானும் ஒரு ஆணையினைப் புதுப்பித்து வழங்கியதாகக் கோரிப் பாளையம் தர்ஹாவில் இன்றும் பராமரிக்கப்படும் கல்வெட்டுச் சாசனம் தெரிவிக்கிறது.

கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம். இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும் வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன. தீண்டாமை ஒழிப்பில் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் இஸ்லாம் தனது பங்களிப்பைச் செய்து வருகிறது. இஸ்லாம் மூலம் சமுகப் பாதுகாப்பு கிடைப்பதாக மதம் மாறியவர் சொல்கின்றனர்.

இஸ்லாத்தில் மட்டும்தான் சாதி வித்தியாசமோ தீண்டாமை உணர்வோ கிடையாது என்பதை பிறமதத்தவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். உயர் சாதியினரால் துன்புறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வர்கள் இஸ்லாமில்தான் இணைகின்றனர்.

இஸ்லாமிய தர்ஹாக்கள் யாவும் உடல் பிணி, மனப்பிறழ்வு என்னும் மன நோய்களைத் தீர்க்கின்ற பள்ளிகளாக இருப்பது வியப்பிற்குரியது.

கி.பி. 1207-இல் மதினா நகரில் யர்புத் என்ற பகுதியிலிருந்து வந்த செய்யது இபுராஹும் என் பவர் இராமநாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். யர்புத் என்பதே ஏர்வாடி என்று மருவிவிட்டது. இதேபோல மதுரை திரு வேடகம் அருகே உள்ள ஒரு தர்ஹாவும் மன நோயாளி களைச் சாந்தப்படுத்தி வருகிறது.

அன்னியப் படை எடுப்பில் குறிப்பிடத்தக்கது விஜய நகரப் பேரரசின் படைத்தலைவர் குமார கம்பணன் என்பவரின் படை எடுப்பாகும். மதுரையி லிருந்து சுல்தான்களைவென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விஜய நகர மன்னரின் படைத் தளபதிக்கும் மதுரையின் சுல்தானாக இருந்த சிக்கந்தர் பாதுஷாவிற்கும் கடும்போர் மூண்டது.

சிக்கந்தர் பாதுஷா (கிபி 1195 - 1207) திருப் பரங்குன்றம் மலையில் தங்கி இருந்தபோது மரணமடைந்தார். அவர் மரணமடைந்த மலையி லேயே அவருக்குத் தர்ஹாவும் சமாதியும் கட்டப் பட்டுள்ளது.

இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற் பட்டோர் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து தங்கிக் குணம் பெற்று வருகின்றனர். மதுரையைச் சுற்றி யுள்ள இஸ்லாமியரும், அல்லாத மக்களும் இங்கே வந்து செல்கின்றனர். அண்மைக்காலமாக கேரளத்தி லிருந்து அதிகமானவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இந்தத் தர்ஹாவில் வழிபடவும் தொழுகை செய்யவும் வந்து தங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் தகவல். இங்கு நடக்கும் தீமிதி திருவிழாவிலும் அவர்கள் பங்கேற்கின்றனராம்.

தெற்குவாசல் மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் தர்ஹாவும் பள்ளிவாசலும் மிகவும் புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும்.
மாலை நேரங்களில் மந்திரிக்கவும், தாயத்துக் கட்டவும் நூறு பேர்கள் வரை குறிப்பாக இந்துக்கள் வரிசை கட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். குழந்தைகளுக்கு சீர், கண்ணேறு ஆகியவைகள் குணப்படுத்தப்படுகின்றன.

இப்பள்ளிவாசலின் சந்தனக்கூடு திருவிழா அன்று அலங்கரிக்கப்பட்ட கப்பல் போன்ற அலங் காரத்தைக் காண மதுரை நகரில் அனைத்து மத மக்களும் நள்ளிரவிலும் கூடக் கூடி நின்று பார்ப்பது அதிசயமான ஒன்று ஆகும்.

ரஹ்மத் கூட்டுறவுப் பண்டக சாலை என்ற பெயரில் இப்பகுதி இஸ்லாமியர்கள் கூட்டுறவு சிறப்பங்காடிகளை நடத்தி வருகின்றனர். பள்ளி வாசலின் தென்புறம் ஒரு வாசகசாலையும் உள்ளது.

தகரப் பெட்டிகள், உண்டியல்கள், வாளிகள் என்று தகரம் சம்பந்தப்பட்ட தொழில்கள் இப் பள்ளி வாசலை ஒட்டி நடப்பதன்மூலம் இப்பகுதி முஸ்லீம்கள் இத்தொழிலைச் செய்து வருவது புலப்படுகிறது.

மாலிக் கபூரின் வெற்றியைத் தொடர்ந்து மதுரை பல்வேறு முஸ்லீம் மன்னர்களின் குடையின் கீழ் ஆளப்பட்டது. நகரமும் பல்வேறு மாற்றங் களைப் பெற்றுவர ஆரம்பித்தது.

பாவங்கள் எதுவும் இல்லாத அக்கால கட்டத்தில் மதுரைக்கு வர வைகை நதியைக் கடந்து வருவது ஒன்று தான் வழியாக இருந்தது. நகருக்குள் வருபவர்களிடம் நுழைவுவரி, சுங்க வரி வசூல் செய்யப்பட்டது.

தற்போதுள்ள சுங்கம் பள்ளிவாசலும் அதனை ஒட்டிய கட்டடங்களும் சுங்கச் சாவடியாக விளங்கியது. இன்றும் சுங்கம் பள்ளி வாசல் கட்டடம் பழமை வாய்ந்த நிலையில் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

சுங்கம் பள்ளிவாசல் தெருவில் இரும்பைத் தகடாகவும், பொருள்களாகவும் செய்யும் தொழிலே பெரும்பான்மையாக உள்ளது. மதரஸா, அன்ன தானம் என்று “அல்லாவின்” பணியில் சுங்கம் பள்ளிவாசல் மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது.

இதன் அருகே மாநகராட்சியின் உமறுப் புலவர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 6000 இஸ்லாமியக் குடும்பங்களைக் கொண்ட ஜமாத் ஒன்று இப்பள்ளிவாசலை இயக்கி வருகிறது. வக்புவாரியக் கல்லூரியின் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் பசீர் அகமது இப்பள்ளி வாசல் நிர்வாகிகளில் ஒருவர்.

தெட்சிண மாற நாடார் இந்து தர்மபரிபாலன சபை நடத்தும் நெல்பேட்டை, அரசு அங்கீகாரம் பெற்ற ஆடுவதைத் தொட்டில் உள்ள ஆட்டு மந்தைப் பொட்டல், வெற்றிலைப் பேட்டை, பாண்டிய மன்னர்களுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்த கொல்லம்பட்டறை சந்து ஆகியவை இப்பகுதியில் உள்ளன.

வைகைக் கரையோரம் உள்ள இச்சுங்கம் பள்ளி வாசல் பகுதியைச் சுற்றிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கைமாராவுத்தர் தோப்பு உள்ளது.

மதுரை மேல மாசி வீதி நிலமதிப்பு அதிக முடைய பகுதியாகும். எலக்ட்ரானிக் பொருட்கள், மின்சாரக் கருவிகள். நைலான்பைப்புகள். நகைக் கடை என்று பரபரப்பான மேல மாசி வீதி செல்வச் செழிப்புமிக்க ஒரு வீதியாகும்.

நிறைய நிலபுலன்கள் உள்ள இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கான விழாக்கள். மீனாட்சி சுந்தர ரேசுவரர் தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடை பெற ஒத்துழைப்பு தரும் விதத்தில் பரிவர்த்தனை முறையில் சற்றுத்தள்ளி தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர்.

மேலவாசல் பள்ளிவாசல் இப்பரிவர்த்தனை மூலம் கிடைத்ததுதான். இந்துக்களின் மடங் களைப் போன்ற அமைப்பில் உள்ள இப்பள்ளி வாசலை ஒட்டி முஸ்லீம் குடும்பங்கள் உள்ளனர்.

“மார்கஸ்” என்று அழைக்கப்படும் இப்பள்ளி வாசல்தான் உலகம் முழுவதிலிருந்து மதுரைக்கு வரும் “தப்லிக்குகளை வரவேற்கவும் நகர் குறித்த விவரங்களைத் தரவும் நகரத்தில் உள்ள பள்ளி வாசல்களைப் பற்றிய விவரமும் எந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற வழிகாட்டு தலையும் மேல மாசி வீதிப் பள்ளி வாசலே வழங்கு கிறது.

மதுரையை ஆண்டவர்களில் முஸ்லீம்களில் முதன்மையமாகக் கருதப்படுபவர் கான்சாகிப் என்ற மருதநாயகத்திற்கு முதலிடம் உண்டு.

கி.பி. 1759- 1764 ஆண்டுகளில் அவரால் உரு வாக்கப்பட்டது தான் கான் (சாகிப்) பாளையம், கான் சா(கிப்) மேட்டுத் தெரு, கோரிப்பாளையம் பின்புறமுள்ள கான் சா(கிப்) புரம், முதலிய தெருக்கள்.

மதுரை அவரது ஆளுகையின் கீழ் இருந்த போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பல தானங்களைச் செய்து சிறப்பித்துள்ளார். தற் போது யானை, ஒட்டகம் கட்டும் லாயம், அதன் மேற்கூரை இஸ்லாமியக் கட்டடக் கலையாக இன்னும் இருக்கிறது. இவரால் தரப்பட்டது.

இந்துக்களோடு இணக்கமாகவே இருந்த கான் சாகிப் கல்லறை இருக்கும் தர்ஹாவும் பள்ளி வாசலும் மதுரை காளவாசல் பகுதி பின்புறம் சம்மட்டிபுரம் என்ற இடத்தில் உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள தாசில்தார் பள்ளிவாசல் கி.பி. 1811-இல் கட்டப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகி யாகவும் தாசில்தாராகவும் இருந்த சையத் இஸ்மாயில் என்பவர் முயற்சியால் எழுப்பப்பட்ட பள்ளி வாசலுக்கு அவரைச் சிறப்புச் செய்யும் விதத்தில் தாசில்தார் பள்ளிவாசல் என்றே அழைத்தனர்.

மதுரையின் பல பகுதிகளில் தற்போது தொழுகைப் பள்ளி வாசல்கள் அதிகமாக உரு வாக்கப்பட்டுள்ளன.

கட்றா பாளையம், மகபூப் பாளையத்தில் உள்ள சுன்னத் வல்ஜமா அத் பள்ளிவாசல். ஓலைப் பட்டினம் காதர் கான் பட்லர் பள்ளிவாசல், இஸ்மாயில்புரம் நூர்தீன் பள்ளிவாசல், எஸ்.எஸ். காலனி மஸ்ஜித் அல் பிலால் (நலி).

எல்லீஸ் நகரில் உள்ள ஹஜ்ரத் நாயகி செய்யது அலி பாத்திமா புராதன தர்ஹா மிகவும் சிறப்புப் பெற்ற பள்ளி வாசல்களில் ஒன்றாகும். இதேபோல மேலக்கால் கணவாய் தர்ஹாவும் புகழ்பெற்றது.

பாண்டிய மன்னனின் ஆதரவோடு மதம் பரப்பி வந்த காஜிதாஜுதீனின் அரசவைக் கவிஞராக இருந்த பிராமணர் ஒருவர் நூர்தீன் எனப் பெயரை மாற்றிக் கொண்டார். இவருடைய சகோதரி மீனா காஜுதாஜீதீன் மீது மோகங் கொண்டு மதம் மாற்றிக் கொண்டு அவரை நிக்காஹ் செய்து கொண்டு விட்டதாகக் கூறுகின்றனர்.

இதனால் பிராமணர் குலத்தைச் சேர்ந்த சகோதரன் சகோதரியின் பெயரால் மீனா- நூர்தீன் என்ற பள்ளிவாசலை தெற்கு வெளி வீதியில் உருவாக்கப்பட்டது. என்றும் மீனா என்று அழைக்கப்பட்ட அப்பெண் பாண்டிய மன்னனின் மகள்தான் என்றும் கூறுகின்றனர்.

இப்போதுள்ள சப்பாணி கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள மினா நூர்தீன் பள்ளி வாசலுக்கு சிவகங்கை அரசர்களான மருது பாண்டியர்கள் மானியங்கள் கொடுத்திருப்பதாக மருதுபாண்டியர் வரலாற்று நூல் ஒன்று கூறு கிறது. பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இஸ்லாமியப் பள்ளிவாசல் உருவாக்கப்பட்டது என்பதைக் காணும்போது சமய நல்லிணக்கம் நிலவிய உண்மையைப் புரிந்துகொள்ளலாம். நூர்தீன் நபிகளின் மீது பொன்னரிய மாலை என்ற நூல் பாடியுள்ளார்.

ஏறத்தாழ பல நூற்றாண்டுகள்வரை மார்க்கக் கல்வியில் மட்டுமே ஈடுபட்டவர்கள் மெல்ல மெல்ல பொதுக் கல்விக்கு மாறி வருகின்றனர். பெண் கல்வி வளர்ச்சி என்பது இஸ்லாமியர் களிடையே பெரும் வளர்ச்சிபெற்று வருகிறது.

குழந்தை பிறப்பு, பூப்புனித நீராட்டுச் சடங்குகள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் விசேஷமான நாட்களாகப் பெருமளவில் கடைப் பிடிக்கப்படுகின்றன.

குழந்தை பிறப்பையடுத்து 11வது நாளில் ‘ச்ஷில்லா என்னும் சடங்கும் 40’வது நாளில் ‘ச் ஷெட்டி’ என்னும் சடங்கும் நடத்தப்பட்டது.

பெண் பருவமடைதலின் போது உறவினர் களை அழைத்து தண்ணீர் ஊற்றும் வைபவம் நடக்கிறது. ஆடம்பரம் தற்போது அதிக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் தாய் மாமன் தந்தைக்கு சமமானவராகக் கருதப் படுவதால் மாமன் சீர்வழக்கம் முன்னாளில் இருந்ததாகத் தெரியவில்லை.

இஸ்லாமில் மணம் என்னும் நிக்காஹ் கொண்டாட்டம் ஒரு வாரம் வரை நீடிக்கும். மஞ்சள் தோள், ஹல்தி, கங்கன், நிக்காஹ், சுக்ரானா, வலிமா என்று சடங்குகள் நீளும், பிரியாணி, விருந்து தடபுடலாக நடக்கும்.

குர்பானி கொடுப்பதென்பது மார்க்க விதி முறைகளில் ஒன்றாகும். ஆடுகள் குர்பானியாகக் கொடுக்கப்பட்ட நிலை மாறி இப்போது ஒட்டகங்கள் கொடுக்கப்படுகின்றன. ரம்ஜான் என்னும் ஈகைத் திருநாளில் இந்துக்களை அழைத்து விருந்து வைக் கின்றனர்.

ரம்ஜான், பக்ரீத், போன்ற பெருநாள் விழாக்கள் நடக்கும் போது தொழுகையைத் தலைமை காஜி யாரே ஈத்கா மைதானத்தில் முன் நின்று நடத்து வார். குத்பா தொழுகை முடிந்து மஹல்லாவிற்கு காஜியார் ஊர்வலமாக அழைத்து வருவது கொண்டாட்டமாக இருக்கும்.

மதுரையில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பெருவாரியாக இந்துக்களை அழைப்பதும் இந்துக்கள் திருமணங்களில் முஸ்லீம் இளைஞர்கள் மாப்பிள்ளைத் தோழராக இருப் பதுவும் ஆரோக்கியமான விஷயமாகும்.

அரசு அலுவலகங்கள் காவல்துறை போன்ற வற்றில் இஸ்லாமியரின் எண்ணிக்கை காத்திரமாக இல்லை. இஸ்லாமியரின் தொழில்கள் என்பது ஊதுபத்தி செய்தல், பாய் முடைதல், இரும்பு, எவர் சில்வர் பட்டறைகளில் கூலிவேலை, தகரத்தொழில், கட்டடத் தொழிலாளிகள், சவரத் தொழில், சலவைத் தொழில்கள் போன்றவைகளாக சமூக விஞ்ஞானிகள் ஆய்வாகக் கருத்துரைக்கிறார்கள்.

இஸ்லாம் மதம் ஞானிகளாலும் அறிஞர் களாலும் உருவாக்கப்பட்ட மதம்- அரசர்கள் எவரும் மதப் பரப்புரையோ, மதமாற்றங்களில் ஈடுபட்டதாகவோ வரலாறு அறவே கிடையாது. ஞானப் பாவியங்களும், சீறாப்புராணமும், சூபித்தத் துவங்களும் உலகிற்கு வழங்கிய ஞானவான்களின் மார்க்கம் என்று பிற மதப் பேராசிரியர்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

மகத்துவமான எழுத்தாளர் ஜுயாவுதீன், வாழும் படைப்பாளி எஸ்.அர்ஷியா, ஜே.ஷாஜகான். சிந்தனைச்சரம் முகமது பாகவி போன்றோரும் காந்தி மியூசியக் கவிதாயினி முனைவர் சபுரா பீவி அல் அமீன் ஆகியோர் பெயர் பெற்ற மதுரைச் சிந்தனையாளர்கள்.

கல்வி நலன் பேணுவதில் மதுரை வக்பு வாரியக் கல்லூரி, புதூர் அல் அமீன் மேல் நிலைப் பள்ளி, மதுரை இஸ்லாமியர் நடத்தும் கல்விச் சாலைகள் ஆகும். ஆங்காங்கே மதரஸா கல்வியும் கற்றுத்தரப்படுகின்றன.

பரபரப்பான அரசியலுக்குப்பெயர் பெற்ற மதுரை அரசியலில் இஸ்லாமியர் பங்களிப்பு அதிகம். மதுரை மத்திய தொகுதியில் உள்ள காஜிமார் தெரு, நெல்பேட்டை, முனிச் சாலை, மதுரை மேற்குத் தொகுதி கோரிப் பாளையம். மகபூப் பாளையம், பீபிகுளம் ஆகிய பகுதிகளின் வெற்றி தோல்விகளை இஸ்லாமியரே தீர்மானிக் கின்றனர் என்று தேர்தல் நேரக் கணிப்புகள் கூறுகின்றன.

மதுரை மக்களுக்கும் முஸ்லீம்களுக்குமான பண்பாட்டு உறவை இப்படிக் குறிப்பிட்டு விளக்கலாம்.

“பாபர் மசூதி, கோவை பெரிய மேடு குண்டு வெடிப்பு, குஜராத் பாதிப்பு என்று தேசத்தின் எல்லாத்திசைகளிலும் இரு மதங்களிடையே வெட்டுக்குத்துக்கள் நடந்தபோது “மதுரையில் மட்டும் மதங்களைவிட மண்ணும், மனிதநேயமும் பெரிது என்று இந்து முஸ்லீம்கள் அமைதியாக இருந்தனர். சமய நல்லிணக்க நகரல்லவா? அதனால்தான் இந்த சமத்துவநேச வெளிப்பாடு.”

தகவல் உதவியவர்கள்

பேரா-பசீர் அகமது, சுங்கம் பள்ளிவாசல், மதுரை. எழுத்தாளர் எஸ். அர்ஷியா.