singaravelarசிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் நினைவகத்தை நூல் நிலையத்தோடு இணைத்து அமைப் பதாக மாண்புமிகு, தமிழக முதல்வர் 12.9.2011- அன்று சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பை பொதுவுடைமை இயக்கத்தினரும், முற் போக்குச் சிந்தனையாளர்களும் மீனவப் பெருங்குடி மக்களும் நெஞ்சம் மகிழ்ந்து வரவேற்றுப் பாராட்டினர்.

மீனவர் தலைவர் என். ஜீவரத் திற்கும், பொதுவுடைமை இயக்க முன்னோடி சிங்காரவேலர்க்கும் நினைவகங்களை இணைத்தே அமைக்க இருப்பதாக மாண்புமிகு முதல்வர் அறிவித்தவுடனே முற்போக்குச் சிந்தனையாளர்கள் சிங்காரவேலரின் நினைவகத்தை மட்டும் அவர் வாழ்ந்த இடமான (உரிமையானதும்கூட) வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில் அமைத்தால் நன்றாக இருக்குமென கடிதங்களை அவருக்குத் தொடர்ந்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் தமிழக அரசோ முதலில் பட்டினப்பாக்கத்தில் நினைவகங்களை அமைப் பதாகக் கூறி, பின்னர் இருவருக்கும் இராயபுரத்தில் அமைக்க இருப்பதாக வேலையைத் தொடங்கிக் கொண்டிருந்தது. இதனை அறிந்ததும் அன்பர்கள் பலர் மீண்டும் சிங்காரவேலரின் நினைவகத்தை மட்டும் வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில் அமைப்பதே சிறந்ததெனக் கடிதங்களை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த வேளையில் சிங்காரவேலரின் குடும்பச் சொத்து குறித்துப் பல ஆண்டுகளாக வழக்கு நடத்தியவரும், சிங்காரவேலரை நன்கு அறிந்த வருமான வழக்குரைஞர் கௌதமன், சிங்கார வேலரின் நினைவகத்தை வெலிங்டன் சீமாட்டி கல்லூரியிலேயே அமைக்க வேண்டுமென்றும், அவரின் மூதாதையரின் சமாதிகளைப் புதுப்பிக்க வேண்டுமென்றும், வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியையும், மகளிர் கல்விக் கல்லூரியையும் சிங்காரவேலரின் பெயரில் மாற்ற வேண்டு மென்றும், நினைவகத்தோடு சிலையையும், நூலகத்தையும் அமைக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார்; இந்த வழக்கை, மதி நுட்பமுடைய அறிஞரும், மூத்த வழக்குரைஞருமான அ.இ.செல்லையா அவர்களை நடத்துமாறு ஏற்பாடு செய்தார்.

திரு.அ.இ.செல்லையா அவர்கள் சிங்காரவேலரை நன்கு அறிந்தவர். அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்; சிங்காரவேலர் அறக்கட்டளைக ளோடு இணைந்து சில ஆண்டுகளாக சிங்கார வேலரின் சிந்தனைகளைக் குறித்து மேடைகளில் உரையாற்றி வருபவர். ஆதலின் இவ்வழக்கை ஆழ்ந்த அக்கறையோடும் ஈடுபாட்டோடும் நடத் தினார். சிங்காரவேலரைப் பற்றிய அவரது அறிவும் அவரது சட்ட நுணுக்கமும், வாதத்திறனும் இவ் வழக்கில் அவரை வெற்றியடைய வைத்துள்ளன. இவ்வழக்கு நடந்த சில நாள்களில் இக்கட்டுரை யாளரும் வழக்கைச் செவிமடுத்துள்ளார். அ.இ.செல்லையாவின் வாதங்கள் நுட்பமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன; நீதிபதிகள் மாண்பமை ஆர்.கே. அகர்வாலும், சத்தியநாராயணன் அவர் களும் அவரது வாதத்தை ஏற்பவராகவே காட்சி யளித்தனர். அது, செல்லையாவின் சட்ட அறிவுக் கும், வாதத்திறமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

நீதிமன்றத்தில் மேற்குறித்த வழக்கு குறித்து ஒருமுறை அ.இ.செல்லையா 2 1/2 மணிநேரம் தொடர்ந்து வாதாடினர்; அந்த முழு நேரத்தில் இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றையும், போராட்டத் தலைவர்களையும் விளக்கி இறுதியில் சிங்காரவேலரின் மாண்பையும் பெருமையும் தெளிவுறுத்தினார். அவருடைய தெளிவுறுத்த லினால்தான் இரு நீதிபதிகளும் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். சரியான தீர்ப்பை மட்டுமன்றி சிங்காரவேலரைப் பற்றி நல்ல மதிப்பீட்டையும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் வடித்திருப்பதுதான் சிறப்பானது. தீர்ப்பின் இறுதியில் அவர்கள், ““The important role played by the great soul in freedom and labour movements”என்று குறித்துள்ளனர்.

அதாவது சுதந்திரப் போராட்டத்திலும், தொழிலாளர் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றிய உயர்ந்த மனிதர் சிங்காரவேலர் என்று இத்துணை ரத்தினச் சுருக்கமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனில் அதற்கு செல்லையாவின் அருமையான வாதமே காரணமாகும். வாதத் திறமையின் திருவுருவே செல்லையா எனில் மிகையன்று. அத்தகு சொல்லாற்றல் வாய்ந்தவர் அவர்.

வழக்கு நிகழ்ந்த நான்கு மாத காலமாக அவர் பெரிதும் சிங்காரவேலரைப் பற்றிப் புதிது புதிதாக படிப்பதும், சிந்திப்பதுமாகவுமே இருந்தார். பல வழக்குகள் இருந்தாலும் அவற்றினூடே இவ்வழக் கில்தான் முழுக் கவனம் செலுத்தினார். சிங்கார வேலரை அவர் உணர்ந்து படித்ததால், அவருள் ளத்தில் சிங்காரவேலர் ஆட்சி கொண்டதால் அவரின் நேயராகவே மாறிவிட்டார்; இரவும் பகலும் வழக்கைப் பற்றிச் சிந்திப்பதும், செயல் படுவதுமாகவே இருந்தார். வழக்கு நிகழும் காலத்தில் அவரோடு இக்கட்டுரையாளர் இருந்த தால் இவற்றையெல்லாம் உணர முடிந்தது.

சிங்காரவேலரைப் பற்றி எத்தனை தரவுகளைச் சேகரிக்க முடியுமோ அவற்றையெல்லாம் ஒரு தேனீ போல சுற்றித் திரிந்து திரட்டியுள்ளார். சிங்காரவேலர் குடும்பத்தின் சொத்துகளையும், அந்த அறக்கட்டளையையும் அறிவது முதல், சிங்கார வேலரைப் பற்றி தலைவர்கள் கூறிய கூற்றுகள், அண்மையில் வெளிவந்த நூல்கள், சிங்காரவேலர் அஞ்சல்தலை வரை அனைத்தும் ஈட்டி ஆதாரங் களை சிந்தாமல் சிதறாமல் சேகரித்துள்ளார்.

தமிழ் அக இலக்கணத்தில் “நோக்குவது எல்லாம் அவையே போறபின்” எனக் குறித்திருப்பது போன்று அவர் எப்போதும் சிங்காரவேலரையே நினைந்து நினைந்து எண்ணிக் கொண்டிருந்தார்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்”  - 666

என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதற்கேற்ப,

தம் எண்ணத்தில் திண்ணமாக இருந்ததால்தான் அவர் இவ்வழக்கில் வெற்றி வாகை சூடியுள்ளார் எனலாம். இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பைச் சுருங்க நோக்குவது முக்கியமானது. முதலாவது சிங்காரவேலரின் மூதாதையரின் கல்லறை சிதைந்து இருப்பதால் (அக்கல்லறை வெலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ளது) அதனை ஆறு மாதத்திற்குள் புதுப்பித்து அதனை நன்முறையில் பராமரிக்க வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மூதாதையரான கந்தப்ப செட்டியாரும், அருணா சல செட்டியாரும் திருப்போரூர், திரு மயிலை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய இடங்களி லுள்ள கோயில்களில் அறக்கட்டளை நிறுவி சத்திரங்கள் அமைத்து ஏழைகளுக்குத் தங்கும் இடவசதி அளித்து, உணவு வழங்கியவர் கள்; மக்கள் நலம் கருதி நற்றொண்டு புரிந்த அப் பெருமக்களின் கல்லறைகளைப் புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும் சிங்காரவேலரின் குடும்ப அறக்கட்டளையை தமிழக அரசு உடனே நிர்ப்பந்தித்து ஆவன செய்யவேண்டுமென்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்து, சிங்காரவேலரின் குடும்பத்திற்கு உரிமையானதும், அக்குடும்பத்தினர் வாழ்ந்தது மான இடமாகவுள்ள நிலத்தில் வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், வெலிங் டன் சீமாட்டி மகளிர் கல்விக் கல்லூரியும் உள்ளன; சிங்காரவேலரிடமிருந்து நியாயத்திற்கும் சட்டத் திற்கும் மாறாக அந்நில வளாகத்தைப் பறித்துக் கொண்டவர் அந்நாளைய கவர்னரான வெலிங்டன் பிரபு ஆவார். சுதந்திரப் போராட்டக் காலத்திலும், பி அண்டு சி மில் போராட்டக் காலத்திலும், நீல் சிலை அகற்றும் போராட்டக் காலத்திலும் வெலிங்டன் நடத்திய துப்பாக்கிச் சூடும், தடியடியும், வன்முறையும் ஏராளம்; ஏராளம். அவை வரலாற்றின் கருப்புப் பக்கங்கள். வெலிங்டன் இல்லாதிருந்தால் இந்தியச் சுதந்திரம் இன்னும் விரைவாகக் கிடைத்திருக்கக் கூடுமென வரலாற்றாய்வாளர்களில் சிலர் கூறுவதும் நம் சிந்தனைக்குரியது. கொள்ளை அரசான வெள்ளை அரசின் கொடூரத் தளபதிகளில் ஒருவன் வெலிங் டன். சுருங்கக் கூறின், அவன் “இரக்கம் ஒன்றில்லா அரக்கன்” ஆவான்.

நாடு சுதந்திரம் அடைந்தற்குப் பின், ஆங்கிலேயர் களின் சிலைகளை அகற்றியும், ஆங்கிலேயரின் பெயர்களில் அமைந்த தெருக்களின் பெயரை நீக்கியும் வந்த நம் அரசு வெலிங்டன் பெயரை, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலிருந்தும் மகளிர் கல்விக் கல்லூரியிலிருந்து எப்போதோ நீக்கியிருக்க வேண்டும். ஆனால், எப்படியோ நீக்காமல் வரலாற்றுக் குற்றம் செய்து விட்டது. அந்த வரலாற்றுக் குற்றத்தை மேலும் நீட்டிக்காமல் இருப்பதற்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நம் அரசு முயல வேண்டும்.

அப்படி முயல்வதே அறிவுடைமை; காங்கிரசுக் கட்சியின் அரசு செய்யத் தவறியதை இனியும் தாமதிக்காமல் இப்போதைய மாண்பு மிகு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் வெலிங்டன் வளாகத்திலுள்ள இரு கல்வி நிறுவனங் களுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று உடனே சிங்காரவேலரின் பெயரைச் சூட்டுவதே ஏற்றது; சிறந்தது; அதுவே, சுதந்திரப் போராட்ட வீரர்க்கு, தொழிலாளர் தலைவர்க்கு ஆற்றும் நன்றிக் கடனாகும். இந்த நன்றிக் கடனைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி அவர்கள், சிங்காரவேலரின் நினைவகத்தையும் அதனையொட்டி நூலகத்தை யும் அமைக்க அரசு ஏற்கனவே தீர்மானித்து, முன்னேற்பாட்டு வேலைகளை தண்டையார் பேட்டையில் செய்துவருவதாக அறிவித்துள்ளார். அரசு அதிகாரிகள், நினைவகத்தையும், நூலகத்தையும் அமைக்க இதுகாறும் நிலத்தை அளவீடு செய்துள்ளார்களே தவிர, கட்டிடத்திற்குக் கடைக்கால் போடும் வேலைகளில் ஈடுபடவில்லை; வெலிங்டன் வளாகத்தில் பெரும் நிலப்பரப்பு இருப்பதால் அங்கே அமைப்பதுதான் சிறந்தது. தமிழக அரசு, சிங்காரவேலர் நினைவகம் மற்றும் நூலகம் குறித்து முன்னேற்பாட்டு வேலையில் இறங்கியிருப்பதால், நீதிமன்றம், அந்த இரண்டையும் வெலிங்டன் வளாகத்திலேயே அமைக்க அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளுக்குச் சில வரலாற்றுக் காரணங்கள் உண்டு.

அந்நாளைய சிங்காரவேலரின் வாழ்விடம் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்நாளில் அதன் முகவரி 22, சௌத் பீச் ரோடு, மைலாப்பூர் (இப்போதைய சீமாட்டி வெலிங்டன் கல்விக் கல்லூரி). என்பதாகும். 1918-ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் சென்னையில் பிளேக் (PLAGUE) காய்ச்சல் தொற்று நோயாகப் பரவியது. அப்போது இரண்டாம் உலகப்போர் இறுதிக் கட்டத்தை எய்திய காலம். போருக்கும், தொற்று நோய்க்கும் அஞ்சி மக்கள் சென்னையை விட்டு வெளியேறி சிற்றூர்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். பிளேக் காய்ச்சலுக்கு ஆட்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதிய மருத்துவர்களும் இல்லாத நிலையில் சிங்காரவேலர் தம் இல்லத்தில் நோயாளிகளை அனுமதித்து மருத்துவர் களைக் கொண்டு சிகிச்சை அளித்துள்ளார்.

பிளேக் காய்ச்சல் குறித்து 20-12-1918-இல் இந்து ஆங்கில நாளிதழில் அவர் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றும் 26.2.28 அன்று சைமன் கமிஷன் திருவல்லிக் கேணிக் கடற்கரை வழியாகக் காரில் வந்தபோது இந்த இல்லத்திலிருந்துதான் சிங்காரவேலர் சைமனுக்குக் கருப்புக்கொடி காண்பித்துள்ளார். மற்றும் இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்பூரி சக்லத்வாலா 28.2.1927 அன்று சென்னைக்கு வர இருப்பதால் அவரோடு தொடர்பு கொண்டு உரையாட இருப்பவர் சிங்காரவேலரிடம் முன் கூட்டித் தெரிவிக்க இந்து நாளிதழில் 4.2.1927 அன்று அறிக்கை வந்திருந்தது. அந்த அறிக்கையில் 22, சௌத் பீச்ரோடு முகவரியே குறிப்பிடப்பட்டுள்ளது.

1927-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் சென்னை எழும்பூரில் காங்கிரசு கட்சியின் அகில இந்திய மாநாடு நடப்பதை முன்னிட்டு, அம் மாநாட்டில் பூரண சுதந்திரம் குறித்து மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்ற சிங்காரவேலரின் அதே வீட்டில்தான் எஸ்.ஏ,டாங்கே, ஆர்.எஸ். நிம்புகார் எஸ்.வி. காட்டே, எஸ்.எஸ். மிராக்கர் போன்றோர் கலந்து ஆலோசித்துள்ளனர். மேலும் மே தினத்தை 1.5.1923-அன்று இந்தியாவில் முதன்முதலாக அவர் கொண்டாடியபோது, அந்த இல்லத்தில் தான் மே தினக் கொடியை ஏற்றியுள்ளார். இத்தனை வரலாற்றுச் சிறப்புகள் நிகழ்ந்த அந்த இல்லத்தில் அவரது நினைவகத்தை அமைப்பதுதானே சாலச் சிறந்தது; அதுதானே நியாயமானது; நீதியானது.

இந்த வரலாற்றுச் சிறப்பை மனங்கொள்ளாமல் வேறு இடத்தில் நினைவகம் அமைக்க முயல்வது முறையாகாது; சரியாகாது. ஆகவே, உயர்நீதி மன்றத்தின் வேண்டுகோளாக மட்டும் கருதாமல், தமிழக மக்களின் வேண்டுகோளாகவும், இந்திய நாட்டின் முற்போக்கு எண்ணங் கொண்டோரின் வேண்டுகோளாகவும், மற்றும் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் முறையிலும் சிங்காரவேலரின் பெருமைமிகு நினைவகத்தையும், நூலகத்தையும் சிங்காரவேலர் வாழ்ந்த அதே வளாகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அமைத்திட மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம்.