தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதையாக, எழுத்தாளர்களாலும் ஆய்வாளர்களாலும் குறிப்பிடப் படுவது, 1916 அல்லது அதற்குப் பிறகு கம்பநிலையம் வெளியிட்டுள்ள ‘மங்கையர்க்கரசியின் காதல்’

எனும் தலைப்பினைக் கொண்ட கதைத் தொகுப்பினில் உள்ள ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் கதையாகும். இக்கதைத் தொகுப்பினை எழுதியவர்

வ.வே.சு அய்யர் எனப்படுகின்ற வ.வே.சுப்பிரமண்ய அய்யர் ஆவார். இவர் தனது பெயரை வ.வே.ஸ¨ப்ரமண்ய அய்யர் என்றே எழுதிக்கொள்வார் என்கிறார் அசோகமித்திரன், கம்பநிலையம் இவரது சொந்தப் பதிப்பகமாகும்.

1913ஆம் ஆண்டுகளில் எழுதி 1933ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுதந்திரச் சங்கு வார இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள ‘ஆறிலொரு பங்கு’ எனும் கதைதான் தமிழின் முதல் சிறுகதை என சி.சு.செல்லப்பா அடித்துக் கூறுகிறார். இருப்பினும், அய்யரின் கதையை மிகவும் சிறப்பான கதையென்றே அவர் குறிப்பிடுகிறார்.1 சி.சு.செ, குறிப்பிடும் ‘ஆறிலொரு பங்கு’ கதையை எழுதியவர், சுப்பிரமணிய அய்யரின் சமகாலத்தவராகிய சுப்பிரமணிய பாரதியார்.

பாரதியாரின் கதையை முதல் சிறுகதையாகக் குறிப்பிடுகின்ற சி.சு.செ, இடையில் இன்னொரு தகவலையும் கசியவிடுகிறார். “தாகூரின் படி சொல்கிற ஒரு கதைமுறையைப் பின்பற்றி ஒரு அரசமரத்தைப் பேசவைக்கும் உத்தியை கையாண்டிருக்கக் கூடும் அய்யர்.”2

பாரதியாரின் கதைதான் முதல் சிறுகதையென்றாலும் சரி,

அல்லது அய்யரின் கதைதான்

முதல் சிறுகதையென்றாலும் சரி,

இரண்டிற்குமான அளவுகோல் ஆங்கிலேய இலக்கிய உலகு குறிப்பிடப்படுகின்ற சிறுகதைக்கான அளவு கோல்தான். இந்த அளவுகோலானது, உருவத்தினையும் உருவத்திற்கேற்ற உள்ளடக்கத்தினையும் சார்ந்த அளவுகோலாகும்.

1900களில் பரவிய இந்த அளவு கோலின்படியான எழுத்து முறையானது சர்வதேச இலக்கியவாதிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்து கின்றது. வங்காளத்தில் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த தாகூரின் கவனத்திற்கும் இது செல்கிறது. தாகூரும் இப்படிப்பட்ட சிறுகதை எனப்படும் முயற்சியில் இறங்குகிறார்.

தாகூரின் எழுத்துக்கள் வ.வே.சு மற்றும் சி.சு ஆகிய இரண்டு சுப்பிரமணியங்களுக்குமே தூண்டுதலை ஏற்படுத்திய எழுத்துக்களாகும். எனவே, தாகூர் எழுதிய கதையினையும் அய்யர் எழுதியுள்ள கதையினையும் ஒப்பிட்டுப் பார்க்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.

தாகூர் எழுதியுள்ள படித்துறையின் கதை, ‘1910’ஆம் ஆண்டும் அய்யர் எழுதியுள்ள அரசமரத்தின் கதை, ‘1916’ அல்லது அதன் பிறகான ஆண்டிலும் வெளி வந்திருக்கக் கூடும்.

தாகூரின் கதையில் படித்துறை பேசுகிறது. அய்யரின் கதையில் அரசமரம் பேசுகிறது. படித்துறை யானது, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. அரசமரமானது, குளத்தங்கரையில் அமைந்துள்ளது. ஆக, இரண்டு கதைகளிலுமே கதைசொல்லியானது, நீர் ஆதாரங்களின் அருகில் அமைந்துள்ளன.

இரண்டு கதைகளின் தொடக்கத்திலும் கதை சொல்லிகள் தாங்கள் பேசுவதை அறிவிக்கின்றன. படித்துறையானது, “என்னுடைய கதைகள் உங்களுக்கு எடுத்துக்கூறும்” என்கிறது. அரசமரமானது, “என் மனசிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால்...” என்கிறது.

இரண்டு கதைகளிலுமே கதைசொல்லிகள் முன்பொரு காலத்தில் நடந்த ஒரு பழைய கதையைச் சொல்லவிருப்பதுபோலவே பேசத் தொடங்குகின்றன. படித்துறையானது, “பழைய வரலாற்றை அறிய விழைவீர்கள்...” என்கிறது. அரசமரமோ, “நான் பழைய நாளத்து மரம். இப்போ தொன்னூறு, நூறு வருஷ மிருக்கும்.” என்கிறது. இருப்பினும் அரசமரமானது தான் பழைய காலத்துக் கதையினைச் சொல்லப் போவதில்லை எனக் கூறிவிடுகிறது.

இரண்டு கதைகளிலும் முதல் வர்ணனை அமைந் துள்ள விதம் வருமாறு: படித்துறையானது, முதலில் நதிக்கரையை வர்ணித்துவிட்டு பிறகு நதிக்கு வரும் பெண்களைப் பற்றி வர்ணிக்கிறது. அரசமரம், ஆற்றுக்கு வரும் பெண்களையும் குழந்தைகளையும் வர்ணிக்கிறது.

இரண்டு கதைகளிலுமே கதை சொல்லிகள் தங்களுக்குப் பாட்டிகளைத் தெரியுமென்று கூறுகின்றன. படித்துறையானது, “இவருடைய அம்மாவைப் பெற்ற தாயார் ‘இவ்வளவூண்டு’ பெண்ணாயிருக்கும்போதே எனக்குத் தெரியும்.” என்கிறது. அரசமரமோ, “உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன்.” என்கிறது.

இரண்டு கதைகளுமே சிறுமிகளையே மையம் கொண்டுள்ளன. படித்துறை கூறும் கதை, குஸ¨மா எனும் செல்லப்பெயர் கொண்ட எட்டு வயதுச் சிறுமியைப் பற்றியது. அரசமரம் கூறும் கதை, ருக்மிணி எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியைப் பற்றியது.

இரண்டு கதைகளிலுமே குழந்தைத் திருமணம் நடக்கிறது.

இரண்டு சிறுமிகளுக்கும் திருமணமாகிறது. இரண்டு சிறுமிகளுக்குமே திருமணத்தினால் பிரச்சினை வருகிறது. குஸ¨மாவின் கணவர் இரண்டே நாளில் இறந்து போவதால், விதவையாகி வீடு திரும்புகிறாள். ருக்மிணியின் அப்பா காமேசுவரையர் டெபாசிட் பணம் போட்டிருந்த வெளிநாட்டுக் கம்பெனி திவாலாகி, திடீரெனப் பரம ஏழையாவதால் ருக்மிணி, கணவன் வீட்டிற்குச் செல்ல முடியாமலேயே இருக்கிறாள்.

விதவை குஸ¨மா, கைவிடப்பட்ட ருக்மிணி. இந்த இரு இளம்பெண்களின் நிலை குறித்தும் இரு கதைகளிலும் கதை சொல்லிகள் மிகவும் வருத்தப் படுகின்றன. “எட்டு வயதான அச்சிறு பெண்மலர் நெற்றித்திலகத்தை அழித்துவிட்டு, மாங்கல்யம் இழந்தவளாய்த் தன் பிறந்தகத்திற்கே - இவ்வாற்றங் கரைக்கே - வந்துவிட்டாள். ஐயோ!” என்கிறது படித்துறை. “அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியா யிருக்கும். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோ என்று வாழ்ந்துவிட்டு, இந்தக் கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது.” என்கிறது அரசமரம்.

இரண்டு கதைகளிலுமே நாயகிகள் கதை முடிவினில் தற்கொலை செய்துகொள்கின்றனர். குஸ¨மா கங்கை நதிக்குள் இறங்கி மூழ்கி இறக்கிறாள். அதை படித்துறை நேரில் பார்க்கிறது. ருக்மிணி குளத்தில் விழுந்து இறக்கிறாள். ஆனால், அதை அரசமரம் பார்க்கவில்லை.

இரண்டு கதைகளிலும் சாமியார்கள் வருகிறார்கள். தாகூரின் கதையில் தற்கொலை செய்துகொள்ளு மளவிற்கு குஸ¨மா சலனமடைவதன் காரணமாக இருப்பது ஒரு இளம் சாமியார். அய்யரின் கதையில் நாயகன் நாகராஜ் இறுதியில் சாமியாராகிறான்.

இரண்டு கதைகளிலுமே நடைபெறுகின்ற பெண் களின் தற்கொலைகளுக்கு ஆண்களே காரணமாக உள்ளனர். தாகூரின் கதையில், குஸ¨மாவின் எண்ணம் தவறானது, அதை மறந்துவிடு, என சாமியார் கண்டிப்பதால் குற்ற உணர்விற்காளாகும் குஸ¨மா தற்கொலை செய்துகொள்கிறாள். அய்யரின் கதையில் தான் மறுமணம் செய்யப் போவதில்லை என்பதை நாகராஜ் சொல்லாமல் விளையாட்டுத்தனமாக மறைத்து விடுவதால் மனம் நொந்த ருக்மிணி தற்கொலை செய்துகொள்கிறாள்.

இரண்டு கதைகளுமே பால்ய விவாக முறையைக் கண்டிக்கவில்லை.

இப்படியான சில ஒப்பீடுகள் இரண்டு கதைகளிற் காணக்கிடைக்கிறது. தாகூர் கட்டிய படித்துறையில் கால் வைத்துப் புறப்பட்டதால்தான் அய்யர் குளத்தங் கரை அரசமரத்தின் கீழ் வந்து நிற்கிறார் என்பது,

இரண்டு கதைகளையும் அடுத்தடுத்துப் படிக்கும்போது எளிமையாக விளங்கி விடுகிறது.

இதில் கவனிக்கத்தக்க விசயம் இதுதான்.

குஸ¨மா கங்கை நதியில் இறங்கித் தற்கொலை செய்வதை தாகூரின் படித்துறை நேரில் பார்க்கிறது. பாவம் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது. ஆனால், ருக்மிணி குளத்தில் விழுந்து தற்கொலை செய்வதை அய்யரின் அரசமரமானது பாராமல் இருக்கிறது. ஒருவேளை ருக்மிணி பின்னிரவில் வந்து விழுவதால் மரத்தால் பார்க்கமுடியாது போய்விட்டது போலிருக்கிறது. இல்லையெனில், ஒருவேளை மரம் தூங்கியிருக்கலாம். சற்றுநேரத்திற்கு முன்பு வரை நாகராஜும் ருக்மிணியும் பேசிக்கொண்டிருந்ததை மரம் பார்த்துக்கொண்டு தானிருந்தது. எனவே தூங்கியிருக்கவும் வாய்ப்பில்லை. ஏன், மரம் தூங்கியிருக்காது? மனிதனைப்போல் பேசலாம் என்றால் மனிதனைப்போல் தூங்க மட்டும் கூடாதா என்ன?.

ஆக, ருக்மிணியைக் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் அய்யரின் அரசமரத்திற்கு இல்லை. ஆனால், அய்யருக்கு இருந்தது. ருக்மிணி சாவதை அய்யரின் அரசமரம் பார்க்கவில்லை. ஆனால், அய்யர் பார்க்கிறார். ஆனால், அவர் பார்த்தது ருக்மிணியை அல்ல, தாகூரின் குஸ¨மாவை.

ஆனால், அய்யர் பார்த்தது அரசமரம் நின்ற குளத்திலல்ல. தாகூரின் படித்துறை இருந்த நதியிலு மல்ல. அது வேறொரு நதி. அது கங்கையல்ல. அய்யர் வாழ்ந்துவந்த திருநெல்வேலி, பாபநாசம் பகுதியில் ஓடிக் கொண்டிருந்த அம்பாசமுத்திரம் நதி. அய்யர் பார்த்த பெண்ணின் பெயர் குஸ¨மாவல்ல, சுபத்ரை. சுபத்ரை வேறுயாருமல்ல, அய்யரின் மகள்.

குஸ¨மாவைக் காப்பாற்ற தாகூரின் படித்துறை யாலும் முடியாது. ருக்மிணியைக் காப்பாற்ற அய்யரின் அரச மரத்தாலும் முடியாது. ஆனால், சுபத்ரையைக் காப்பாற்ற அய்யரால் முடியும். அவர் அவ்வாறு காப்பாற்ற முயன்றபோது, குஸ¨மாவை நினைத்திருக்கலாம். இல்லா விடினும், ருக்மிணியையாவது நினைத்திருக்கலாம். நினைத்திருப்பார். ருக்மிணியின் நினைவோடுதான் நதிக்குள் அவர் பாய்ந்திருப்பார். ‘இக்கதையைப் படிப்போர் ருக்மிணியை மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று பூரணமாய் நம்புகிறேன்’3 என முன்னுரையில் அய்யர் குறிப்பிட்டிருக்கிறார். வாசகர் மறவாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தானே தாகூரால் குஸ¨மாவும், அய்யரால் ருக்மிணியும் கொல்லப்பட்டார்கள்.

குஸ¨மாவைக் காப்பாற்ற தாகூராலும் ருக்மிணியைக் காப்பாற்ற அய்யராலும் முடிந்திருக்கும். ஆனால், குஸ¨மாவைக் காப்பாற்றத் தாகூரும் விரும்பவில்லை. ருக்மிணியைக் காப்பாற்ற அய்யரும் விரும்பவில்லை. அதனால்தான், தன் கண் முன்னே நதியில் அடித்துச் செல்லப்படும் தன் மகள் சுபத்ரையையாவது காப்பாற்ற வேண்டும் என அவர் பாய்ந்து குதித்திருக்கிறார்.

ஆன போதும், அய்யரால் சுபத்ரையையும் காப்பாற்ற முடியவில்லை. கதையிலும் முடியவில்லை. நிஜத்திலும் முடிய வில்லை. மாறாக, கதைகளில் குஸ¨மாவும் ருக்மிணியும் போன இடத்திற்கே நிஜத்தில் அய்யரும் போய்ச் சேர்ந்தார்.

அய்யரின் மரணத்திற்குக் காரணம் எது? ருக்மிணியைக் காப்பாற்றாமல் விட்டதால் வந்த பாவமா? அல்லது ருக்மிணியைக் காப்பாற்றத் தவறியதால் அவர்மீது அரசமரம் இட்ட சாபமா?. 

குறிப்புகள்:

1. தமிழ் சிறுகதை பிறக்கிறது, சி.சு.செல்லப்பா. ப.23.

2. மேலது, ப.58.

3. மங்கையர்க்கரசியின் காதல், வ.வே.சு.அய்யர். ப.4.