புத்தாயிரத்தின் தமிழ்க் கவிதை நவீன எழுத்தின் பேரெழுச்சியை அடையாளம் சுட்டி நிற்கின்றது. சொல்வதும், சொல்லப்படுவதும் நேற்றிலிருந்து விலகி நாளைக்கான நகர்வாய் மாறியிருக்கிறது. 

சோம்பல் முறிப்புச் சுகங்களைத்தாண்டி, முதல் இரைதேடி அடியெடுத்துவைக்கும் சிட்டுக்குருவிக் குஞ்சாய் நவகவிகளின் தேடல். பூமிக்கு மேலே இறகு கட்டிப் பறந்தாலும் கிளைக்குத் திரும்பி இலை கொத்தி உறவூற்றில் நாநனைத்து கூட்டுக்குள் இரவை இரசிக்கும் குதூகலம்தான் வாழ்க்கை.

விட்டேத்தி என்பது விலக்கு தான். விதிகள் மீறப்படலாம். விலக்குகள் மட்டுமே விதிகளாகாதுதானே?

ஒரு மொழியின் பாய்ச்சல் கவிதைகளிலேயே சாத்தியம்.  ஆதிக்கிழமானத் தமிழை பச்சிளம் பருவத்தில் இருத்தியிருப்பதும் கவிதைதான் எனில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  இன்றைய வாழ்வின் பிழிவை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒரு கலைடாஸ்கோப் போல கவிதைகளில் பந்திவைக்க இளம் கவிஞர்களால் சாத்தியமாகியிருக்கிறது.  விதையும் வேருமற்ற தாவரப் பெருக்கு நிரம்பிய சூழலில் நிலத்தின் நிறமும் நீர்மையுமறிந்து வேர்பதிக்கும் படைப்பு முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன.

‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ கவிதைத் தொகுப்பின் வழி இளைஞர்களுக்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்று, கவனம் பெற்ற கதிர்பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பு -  ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’. கதிர்பாரதி தனக்கெனத் தனித்துவமானதொரு கவிமொழி கைவரப்பெற்றிருக்கிறார். முதல், கரு, உரி என்ற முப்பொருள் ஆட்சியில் முகிழ்க்கும் சங்கக் கவிதைகளின் நீட்சியை இவரிடம் காணமுடிகிறது. 

நிலமும், பொழுதும் மாறி மாறி கவிதைகளில் நிலைகொள்கின்றன.  பூக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், ஏன் கடவுளும் கூட இவர் கவிதைகளை உயிர்ப்பிக்கின்றனர்.  தேவனும் காளியும் தொன்மங்களாகி நிற்கிறார்கள்,  கவித்துவம் நிரம்பி வழியும் வரிகளினூடே மிகத் தெளிவாகச் சமகால அரசியல் இழையோடுகின்றது.  ஒடுக்கத்திற்கும், ஒதுக்கத்திற்கும் எதிரான கவிக்குரல் கம்பீரமாக ஒலிக்கிறது. 

உடலும், மனமும், வெளியும் பாழ்படும் துயரத்தை மிக இலாவகமாக கவிதையாக்கிவிடுகிறார்.  வெளிப்படையாக நேர்படப் பேசும் தொனியைத் தவிர்த்து கவித்துவ ஆழத்தில் சிறு கங்கென தன் பார்வையை வைத்திடும் நேர்த்தி கதிர்பாரதியின் கவிதை இயல்பாக அமைகின்றது. 

மரபுக்கும் நவீனத்துக்கும், கிராமத்துக்கும் நகரத்துக்கும், ஏழ்மைக்கும் செழுமைக்கும் இடையே பயணிக்கும் ‘நடுத்தர’ வாழ்வு இவர் கவிதைகளில் காணக்கிடைக்கின்றது.  திரைச்சீலையில் வண்ணத் தூரிகைகளிலான எழிலோவியம் போல இவரின் கவிச்சொற்கள் காட்சிச் சித்திரங்களாக வாழ்வை வரைந்து செல்கின்றன.

சங்கப்பாடலுக்கு நிகராக காதலை, பிரிவை, ஏக்கத்தை கதிர்பாரதி போகிற போக்கில் எழுதிச் செல்கிறார்: என் கரம்பை நிலத்தில் / உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக் / கடித்துச் சதிராடுகின்றன ஜோடி அணில்கள். / கலந்து சிலிர்க்கும் மணிப்புறாக்கள் எழுப்பும் கூடலொலி / கோயில் மடங்களில் பட்டு எதிரொலிக்கிறது. / உளுந்தங்காய்கள் மீதமர்ந்து / வெயில் அருந்தும் தட்டான்கள் / வால்களைப் பிணைந்துகொண்டு பறக்கின்றன. / இலந்தங்கனிகளை மடிநிரம்ப / வேடுகட்டி எடுத்துப்போகும் / பருவத்துக்கு வரவிருக்கும் பாவாடைச் சிறுமிகள் / என் அந்தியில் எதிர்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அடைக் கலாங்குருவிகள் கொறித்து உமிழ்ந்த / நெல் உமிகளை / காற்று தன்போக்கில் அடித்துக் கொண்டுபோவதென / வார்த்தைகள் என்னைவிட்டுப் போய்விட்டன. / முந்தானையில் சும்மாடு செய்து / அடுக்கிய மண் கலயங்களில் / ஊற்றுநீர் சுமந்து போகிறாள் குடியான மங்கையருத்தி / அதை ஒரேமடக்கில் குடித்துவிடும் அளவு தாகத்தை / உன் வரவுக்காக நீடிக்கவிடுகிறது / கரம்பையின் கோடை. / உலர்ந்த உள்ளாடையை / துணிகளுக்குள் பொதிந்து எடுத்துப்போகும் / எதிர்வீட்டுப் பருவப்பெண்ணால் நினைவூட்டப்படும் நீ / இன்னும் வரவேஇல்லை. / இந்தக் கோடையும் கைவிட்டுப்போய்விட்டது. / இனி கண்கள் உடைந்து / கொட்டப்போகும் பருவமழைக்குத் தப்பி / எங்கு ஓடி ஒளியும் என்னுயிர்.

மிக அழகிய ஓவியமெனக் கவிதை மனதை நிரப்புகிறது.  எளிய, விளக்கங்கள் தேவையில்லாத கவிதை தான்.  ஆனால் தஞ்சை வட்டார வேளாண் வாழ்வும், வழக்கும் புரியாமல் கவிதையை உள்வாங்க இயலாது.  கரம்பை நிலம், வேடுகட்டி, சும்மாடு, ஒரேமடக்கில், கரம்பையின் கோடை... போன்ற சொற்கள் நிலம் சார்ந்தவை.  கதிர்பாரதியின் பெரும்பாலான கவிதைகளில் திணைசார் வாழ்வின் கடந்து போன தருணங்களும், கலைந்து போன கனவுகளும் பதிவாகின்றன. 

‘கேரட்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதையில் சேனம் கட்டிய குதிரை முன் தொங்கும் கேரட்டை நோக்கியபடியே ஓடுகிறது. சேனமும் கேரட்டும் எஜமானன் உருவாக்கியவை. 

குதிரையின் கனவை அதன் மேலமர்ந்து செல்லும் எஜமானன் எப்படி நிறைவேற்றுவான்?

இங்கு கேரட்டும், குதிரையும் குறியீடுகள்தாம்.  காலம் காலமாக எட்டாத, ஒரு போதும் சுவைக்கமுடியாத கேரட்களைக் காட்டிக்காட்டி உழைப்பை உறிஞ்சும் நம் எஜமானர்களிடம் எத்தனைக் காலம் சேனம் பூட்டிய குதிரைகளாக அடங்கிக் கிடப்பது? அற்புதமான கவிதை.

இன்னொரு கவிதையில் சமர்த்தாகக் குட்டிக் கரணம் போடுதலை குரங்குகள் வழி கதிர்பாரதி பதிவு செய்கிறார். வித்தை நிகழ்த்துகையில் குட்டிக்கரணம் போடுதல், பார்வையாளரின் கைத்தட்டலுக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் போடுதல், சுணக்கம் இல்லா மலிருத்தல், இறுதியில் தட்டேந்தி காசு பெறுதல், திரைப்படத்தில் கதாநாயகியின் கற்பைக்காத்தல், வில்லனைச் சுட்டு வீழ்த்துதல், பழங்களை துப்பிவிட்டு பீட்சா பழகுதல் எனப் பலவற்றையும் சொல்கிறார். 

காடுகளில் உலாவுவதும் கிளைகளில் தொங்குவதும் இழிவாகிறது.  இறுதியில் இப்படிச் சொல்கிறார்:

“சரியான நேரத்துக்கு கூண்டுக்குள் அடைவதிலும்          / கூண்டையே உலகமெனக் கொண்டாடுவதிலும் இருக்கிறது / குரங்காய்ப் பிறந்ததன் பயன்.”

ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனைக் குரங்குகள்? ஒவ்வொருவரும் எத்தனைக் குரங்குகள்? எல்லாமே குரங்காட்டியின் குரங்குகள்தாமே? குரங்குகளை எண்ணிப் பரிதாபப்படுவதா? குரங்காட்டிகளை நினைத்து கோபப்படுவதா?

குரங்கும் குரங்காட்டியும் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையறிந்து விசனப்படுவதா? எல்லா வாசிப்புக்கும் இடம் தருகிறது கவிதை.

சூஃபிக்களும், ஜென்களும் அஃறிணை உயிர்களைக் கொண்டே வாழ்க்கையை அலசுவார்கள். இவ்வகைக் குட்டிக் கதைகள் ஏராளம்.  இயேசுவின், நபிகளின் போதனைகளிலும் உயிர்களுக்கு நிரம்ப இடமுண்டு.   கதிர்பாரதி தன் கவிதைகளில் வாழ்வின் உயர் அடையாளங்களை உயிரின் வழியே உலவவிடுகிறார். போலி மனிதர்கள் மத்தியில் முயல்குட்டிகள் அபூர்வப் பிறவியாகின்றன.  கள்ளங்கபடமற்ற முயல்குட்டிகளால் வாழ்வு அர்த்தப்படுகிறது. முயல்குட்டிகளால் பொறுக்குத் தட்டிய வாழ்வு வளமையாகின்றது.

ஒரு கட்டத்தில் வாழ்வே முயல் குட்டியாகிவிடுகின்றது.

‘இவ்வாழ்வு முயல்குட்டிகளால் ஆனது’ என்கிறார் கவிஞர்.  இன்னொரு கவிதையில் மனிதரையும் வாழ்வையும் அணில்குஞ்சாகப் பார்க்கிறார். வெளியில் தாவிக்குதித்து, விளையாடி, இரையுண்டு வாழ்ந்து திளைக்கும் - அங்கிங்கெனாதபடி ஓடும் அணில் கடைசியில் நம்முள் கலந்துவிடுகிறது கவிதையில்.

வாழ்க்கை அக்கறை மட்டுமல்ல.  வாழ்வு குறித்த ஏக்கங்களும் கவிஞர்களுக்குண்டு.

எல்லோரின் இறுதி வேட்கையும் விடுதலைதான். 

விட்டு விடுதலையாதல்

வாழ்வில் சாத்தியமில்லை. 

ஏதோ ஒன்றில் அடிமைப்பட்டுப் கிடக்கிறது மனம்.  தன்னால், தன்னில் காண முடியாததை

பிற உயிராய் உணர்தலில் வசப்படுகிறது வாழ்வு. 

முயல், அணில்... எல்லாம் வன்மை நிறைந்த வாழ்வின் வலிகளுக்கு மென்மை நிறைந்த ஆறுதலின்றி வேறென்ன? 

இது தப்பித்தல் அல்ல.

மனிதனின் ‘வளர்ச்சி’  உண்மையில் வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ற ஆதங்கத்தின் தேடல். ஆனந்தத்தின் ருசிகாண் முயற்சி.

குழந்தைகளின் பிரபஞ்சம் அலாதியானது.  பிற உயிர்கள் போல இயல்பான குட்டி உலகை குழந்தைகள் படைக்கிறார்கள். பெரியவர்களின் உலகம் போட்டி களும் பொறாமைகளும் அதிகாரத் திமிர்த்தனங்களும் பேராசைகளும் நிறைந்தது.  குழந்தைகள் கீழிருந்து உலகைப்பார்க்கிறார்கள்.  பாசாங்கற்றப் பிரியங்களால் ஆனது அவர்களின் உலகம்.

திலீபன், கவிஞரின் மகன்தான்.  அடர்வனமொன்றை உருவாக்குகிறான். தாகமறிந்து தண்ணீர்தரும் ஆயாவை நீரோடையாகவும், பார்த்ததும் புன்னகைக்கும் தோழியைத் தேவதையாகவும், கூர்பென்சில் காட்டி பயமுறுத்தும் பையனை வவ்வாலாகவும், பணிவாகப் பணிவிடை செய்யும் ப்யூனை சிங்கராஜாவாகவும், அடிக்காத விஷ்ணுப்பிரியா மிஸ்ஸை தோகை விரித்தாடும் மயிலாகவும், சோகமாக வெள்ளைப் புடவையில் வரும் கோமதி மிஸ்ஸை உற்சாக முயல் குட்டியாகவும், தன் தோழர்களை சிட்டுகளாகவும், அவர்களுக்கு தேன்நிறைந்த மலர்களையும், கனிகள் நிறைந்த மரங்களையும் பரிசளிக்கிறான்.  எப்போதும் கைப்பிரம்போடு நிற்கும் ஹெட்மிஸஸ் மரத்துக்கு மரம் தாவும் குரங்காகப் படைக்கப்படுகிறாள்.

இதற்கு ‘காரணம் நிச்சயம்

திலீபன் இல்லை’ எனக்

கவிதை முடிகின்றது. 

வாசக மனத்தில் குழந்தைகள், கல்விமுறை, தேர்வுகள், ஆசிரியர்கள் ஆகியவை

குறித்த உரையாடல்கள் விரிகிறது. 

கவிஞர் இளமுருகு (பெருமாள் முருகன்) பல்லாண்டுகளுக்கு

முன் ‘சிருஷ்டி’ என்றொரு

கவிதை எழுதியிருந்தார். 

அதில் ஒரு குழந்தை தன் பென்சில் கொண்டு ஒரு மாநகரைச் சிருஷ்டிக்கும். மாநகரில்

எல்லாம் இருக்கும்.

பள்ளிக்கூடத்தைத் தவிர.  குழந்தைகளின் இயல்பூக்கங்கள், விருப்பங்கள் குறித்து பெரியவர்களுக்கு உணர்த்த

இது போன்ற கவிதைகள்

நிறையத் தேவை.

இன்னொரு குழந்தையின் நிலையைப் பாருங்கள்:

மாநகர வாழ்வின் / கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன் / சிறகு முளைத்த பந்தை / யாருமற்ற தன்வீட்டின் அறைசுவரில் அடித்து அடித்து விளையாடுகிறான் / அந்தப் பந்து / அவனுக்கும் தனிமைக்குமாகப் போய்த் திரும்பி / திரும்பிப் போய் / ஓய்கிற வேளையில் / வந்தே விட்டது / மற்றும் ஓர் இரவு.

இன்றைய குழந்தை வளர்ப்பை இதைவிட எப்படி உணர்த்தமுடியும்? பொருள் தேடும், நுகர்வியம் பெருகி விட்ட, இருவரும் பணிக்குச் செல்லும் சூழல் பரவலாகி விட்ட சமூகத்தில், இந்தக் குழந்தையும், பந்தும் ஒன்றுதானே?

வாழ்வு மீதான, குடும்பம் மீதான கரிசனத்தைக் கவிதைகளாக்கியுள்ள கதிர்பாரதி இந்த நிலமும், உரிமையும் பறிபோவதை ஆதங்கத்தோடு பல கவிதைகளில் பதிவு செய்கிறார்.  நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி மலடாக்கி, வீரியவிதைகள் என்ற பெயரில் மரபார்ந்த விதைகளை அழித்து, விதையில்லா கனிகள், முட்டை யிடாக் கோழிகள் என இயற்கையை வீழ்த்தி செயற்கையில் வதைபடும் வாழ்வை கருநிற கோலாக்களின் ‘ச்சியர்ஸ்’ கவிதையில் எடுத்துக்கூறுகிறார்.

நிலம் வெறும் மண் அல்ல. 

அது இரத்த பந்தம். உணர்வுப் பெருக்கு. பண்பாட்டின் தொடர்கண்ணி. அதை கூறுபோட யத்தனிக்கும் ஏகபோகங்களை நோக்கி- பன்னாட்டு பகாசுரர்களை நோக்கி நீள்கிறது கவிதைத் தடி.

அது (நிலம்) நித்தமும் நாங்களிட்டு உண்ணும் எம் அன்னத்து உப்பு. / இளம்விதவை ஈன்றெடுத்த முதற்மகவு. / பொட்டல்வெளி காளி வெளித்தள்ளிய நாவு. / எந்தையும் தாயும் உருவி உருவி முத்தமிட்ட எம் ஆணுறுப்பு. / எம் காதற்பெண்டிரின் பெண்ணந்தரங்க உறுப்பின்சுவை. / தாவுக்காலிட்டு உச்சங் கிளையில் தீவனம் கடிக்கையில் / காற்றிலாடும் மறியின் பால் செறிந்த மார்பு. / சேறுகுடித்து ஊறிக்கிடக்கும் கருவேலமுள்ளின் முனை. / தன்மூத்திரம் குழைத்த மண்ணெடுத்து / இரையின் முகத்தில் விசிறி / குரல்வளை கடித்திழுக்கும் குள்ளநரி./ இப்போது எம் நிலம் / தன் மூத்திரம் குழைத்தெடுத்துக் காத்திருக்கிறது. / வாரீர் / வாரீர்.

வெளியிலிருந்து பார்த்தால் இது வெற்று ஆவேசமாகக்கூடப் படும்.  ஆனால் நிலமே வாழ்வாக, நிலத்தையே உயிராக, உறவாக வரித்து வாழும் வேளாண் மக்களின் இந்த அறச்சீற்றம் மிகமிக நியாயமானது.  உயிர்வதைக்கு எதிராக

முனங்க முடியாது. 

கத்திதான் தீரவேண்டும்.  பொதுவாக குள்ளநரி இழி உவமையாகவே வரும்.

இங்கே எதிர்ப்பின் குறியீடாகிறது.  கலக அழகியல் இப்படித்தானே அமைய முடியும்? வழமைகளைத் தலைகீழாக்கித் தருவதுதானே மாற்றின் மகத்துவம்?

‘எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன’ - இந்த மண்ணின் வரலாற்றைச் சொல்லும் இனிய கவிதை.  தாத்தாவிடம் இருந்த விவசாயப்பாடல், ஜோடி மாடுகள், இறாபுட்டி, கதை, கனவு, உறக்கம்   எல்லாம் பறிபோய் கண்ணீரும் தாகமும் பெருகி மண்ணில் விழுகிறார். டமக்கரான் (பூச்சிக்கொல்லி மருந்து) போத்தலில் தண்ணீர் வருகிறது. ‘அவரைப் புதைத்த போது அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்’

என முடிகிறது கவிதை.

பூச்சி மருந்துக்கும், தூக்குக் கயிற்றுக்கும் பலியாகும் விவசாய வாழ்வை சித்திரிக்கும் நல்ல கவிதை.  பல்லாயிரம் கோடிகள் மோசடி செய்த ஆகாய விமானங்களை அயல்தேசங்களுக்கு நாடு கடக்கவிடும் அரசாங்கம், விதை நெல்லுக்காய் வாங்கின கடனுக்காய் கோவணத்தை உருவும் அவலத்தை என்ன சொல்வது?

எதை உண்ண வேண்டும்?

எதை உடுக்க வேண்டும்?

எதைப் பேச வேண்டும்?

எதை எழுத வேண்டும்? எனத் தீர்மானிக்கின்றன செங்கோல்கள்.  மனிதனுக்கு மனிதன் மேல் ஙீ கீழ் வர்ணக் கோடிழுத்த மனுஅதர்மத்தின் வெளிப்பாடுதான் இது. 

என் சமையலறைக்குள் பூட்ஸ்கால்கள் வரும்

தேசத்தில் வாழ்வது அவலமல்லவா? தாத்தனும் பாட்டனும் தின்றதைத் தின்பது தவறா?  செத்த மாட்டின் இறைச்சிக்காய் உயிர் மனிதனைக் கொல்வது நீதியா?

கதிர்பாரதியின் ‘கருவாட்டு ரத்தமூறிய இட்லி’ இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை. எளியவர்களுக்கு இட்லியே ஆகப்பெரிய பலகாரம்.  (ஆனந்தாயி நாவலில் சிவகாமி ஏழைகளின் இட்லியின் மகத்துவத்தை அழகாகச் சொல்வார்). இட்லிக்கு தொட்டுக்க கருவாட்டு ரத்தம். அந்த உணவு மட்டுமல்ல. ‘அடடா இந்தக் காலைதான் எவ்வளவு ருசிமிக்கது. 

இந்த ருசிக்குப் பிறந்த இந்த நாள்தான் எவ்வளவு தித்திக்கிறது’, வாசம் வயிற்றையும் நெஞ்சையும் நிறைக்கும்.  அன்றைய நாளே ருசியாகித் தித்திக்கிறது.  சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, பஞ்சாமிர்தம், பருப்புக்கடைசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல கருவாட்டுக்குழம்பு இட்லி.  இதுதான் மாற்றின் மாற்று.  ஏழை எளியவர்களுக்கு உணவுதானே துய்ப்பு? உணவுப் பண்பாட்டை உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது இக்கவிதை.

கதிர்பாரதியின் எல்லாக் கவிதைகளையும் சமூக, அரசியல், பண்பாட்டுப் பின்புலங்களில் வைத்து விரித்துரைக்கலாம்.  களமும், கருத்தும் எவ்விடத்திலும் துருத்திவிடாமல் மிகக்கவனமாக கவிதையைக் கலையாக்கி வெற்றிபெறுகிறார். 

இவர் கவிதைகளில் கையாளும் தலைப்புகள், தொடர்கள் வித்தியாசமாய் அமைந்து வியப்பைத் தருகின்றன.

‘பின்னிரவு முத்தமொன்று கூரிய பனிவாளாக’ / ‘எனக்கான முதிரிளம் பருவத்துமுலையே’ (நிலம்) / ‘நானொரு கள்ளத்தராசு’ / ‘புன்செய் வெயிலாகும் முத்தம்’ / ‘ ஒரு குளத்துக் குரவையாக துள்ளுகிறது என் சொற்களின் கனவு’ / ‘பகலென விரலைப்பற்றினேன்’ / ‘வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்’ / ‘கற்றாழைப்பழம் சுவைத்தேன்’ இப்படி நிறைய்ய. 

ஆல் தி பெஸ்ட், ச்ச்சியர்ஸ், ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட், கண்டிஷன்ஸ் அப்ளை... போன்ற இக்காலப் புகழ்பெற்ற நிலைமொழிகளைத் தலைப்பாகக்கொண்ட கவிதைகள், இச்சொற்களின் அபத்தங்களைப் பேசுவதுடன் ‘இன்றையத் தன்மையை’  இக்கவிதைகளுக்கு வழங்குகின்றன.

‘அரசியல் அற்ற’ இலக்கியங்கள் பெருகிவரும் தமிழ்ச் சூழலில் மாற்று அரசியலை முன்மொழியும், பண்பாட்டு அரசியலை பிரகடனப்படுத்தும் கதிர்பாரதி பாராட்டத்தக்கவர்.

“இந்தச் சொல் எங்கிருந்து வந்ததோ / அங்கிருந்தே வந்தேன் நான் / இந்த வலி எங்கிருந்து வந்ததோ  / அங்கிருந்தே வந்தது அந்தச் சொல்” என்ற ஒற்றைப் பிரகடனம் இவரின் கவிதைகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

“மீண்டும் போகிறேன் / மரணத்தின்போது துளிர்த்திருந்த / அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர்களைப் / பார்க்க வேண்டும் எனக்கு”

இது இவரின் நம்பிக்கைக்கான நற்சான்று. கதிர்பாரதியை இன்றைய நவீனத் தமிழ்க்கவிதையின் ‘நம்பிக்கையாக’ வரவு வைக்கலாம்.