180 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அன்றைய மதராஸ் மருத்துவக் கல்லூரி, 255 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து, 2722 படுக்கை வசதிகளுடன் ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகச் சிறப்பான வசதிகளுடன் இன்று இராஜீவ் காந்தி மருத்துவமனை என்ற புதுப் பெயருடன் நவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் இயங்குகிறது.

இம்மருத்துவமனையும், கல்லூரியும் சுமார் 47.5 ஏக்கரில் சென்னை பெரு நகரத்தின் மையத்தில் மையத் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் தென்னக இரயில்வே அலுவலகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.  இந்தியாவிலேயே இங்குதான் முதன்முதலில் முதுநிலை மருத்துவப்பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.  தற்பொழுது இக்கல்லூரியில் 5 இளநிலை பட்டப்படிப்பு, டி.எல்.ஓ., டி.எம்.ஆர்.டி. போன்ற 17 உயர்நிலை பட்டச் சான்றிதழ் படிப்பு, எம்.டி. போன்ற 25 உயர்நிலை மருத்துவப் படிப்பு, இதய அறுவை, இரைப்பை, குடல் அறுவைக்கான எம்.சி.ஹெச், டி.எம். போன்ற 14 மிக உயர்ந்த பட்டப்படிப்பு ஆகியவைகள் கற்பிக்கப்படுகின்றன.  இக்கல்லூரியில் ஆங்கிலம் பேசும் நாடுகளில் முதன்முறையாக ஒரு பெண் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு மதராஸ் பல்கலைக்கழகத்துடன் 1857 - அல் இணைந்து 1988 வரை நீடித்து, அதன் பிறகு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மருத்துவத்திற்காக தமிழ்நாட்டில் தொடங்கிய புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

rajivigandhi hosp 600மருத்துவக் கல்லூரியின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் பல நிகழ்ச்சிகள் நம் கவனத்திற்கு வருகின்றன.  இக்கல்லூரியின் அலுவலகக் கட்டிடம் இருபக்கமும் வளைவாக இருப்பதால் “ஜீரோ ஹால்” என்று மாணவர்களால் அழைக்கப்படுகிறது.  இக்கல்லூரி வளாகத்தில் கிழக்கே கால் பந்தாட்ட மைதானத்தை ஒட்டி, இந்திய முகமதிய கட்டிடக் கலை பாணியில் சிகப்பு வண்ணம் பூசப்பட்ட கட்டிடம் செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.  இது, உடல்கூறு பாடம் கற்பிக்கப்படும் கட்டிடமாக 1906லிருந்து திகழ்கிறது.  இதில் உள்ள வகுப்பறைகளில் அமரும் பெஞ்சுகள் கீழிலிருந்து மேலே உயர்ந்து கூரைவரை செல்லக்கூடியதாக உள்ளன. 

இங்குள்ள மர நாற்காலி, மேசை உட்பட அனைத்தும் அக்காலத்திலேயே செய்யப்பட்டவை.  இச்செங்கோட்டைக்குச் சற்று மேற்கே 1940ஆம் ஆண்டுவரை ஒரு கல்லறையும், நினைவுச் சின்னமும் இருந்தன.  இது டாக்டர் எட்வர்ட் பல்க்கி (Dr. Edward Balkley) யுடையதாகும்.  இவர் 1692இல் பொதுமருத்துவமனைக்கு தலைவராய் இருந்து சட்ட மருத்துவத்திற்கான முதல் சவப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.  இத்துடன் இந்தியாவிலேயே முதன்முறையாக 1693 ஆகஸ்ட் 28-ஆம் தேதி நோயுற்ற நிலையில் விடுமுறை அளிக்கும் சான்றிதழ் வழங்கிய பெருமை இவரைச் சாரும்.  (Madras rediscovered - p. 338)

இதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து முதன்முறையாக காயமடைந்ததற்கான சான்றிதழையும் சட்ட மருத்துவத்திற்கு உதவும் விதமாக வழங்கினார்.  இவர் அக்காலத்தில் மதராசின் சிறந்த குடிமகனாகப் போற்றப்பட்டார்.  1714-இல் இறந்தபிறகு இவர் புதைக்கப்பட்ட இடம் இவருடைய சொந்தத் தோட்டம் ஆகும். இவரை அடுத்து அக்கால கட்டத்தில் நினைவுகூரத்தக்கவர்கள் ஜான் வால்டோ மற்றும் ப்சாலியல் சர்மேன் (John Waldo & Bezaliel Sherman). இவர்கள் 1678 - இல் இந்தியாவில் முதன் முறையாகக் காவலில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் சாவேஸ் என்ற மது அருந்திய நபரை அங்கிருந்த காவலர் கழுத்தில் காலால் உதைத்து இறந்ததைக் குறித்துச் சான்றிதழ் வழங்கினார்கள்.

1934இல் கட்டப்பட்ட அறுவை சிகிச்சைப் பகுதிக் கட்டிடத்திற்கு 1924இல் அறுவை சிகிச்சைப் பேராசிரியர் மற்றும் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய எர்னெஸ்ட் பிராட்ஃபீல்டு (Ernest Bradfield) என்பவரின் பெயர் சூட்டப்பட்டது.

கலா அசார் நோய்க்குக் காரணம் என்ன?

இவைகளைவிட மிக முக்கியமானது கலாஅசார் நோய்.  1824இல் இறப்பை ஏற்படுத்தும் நோய் என அறிந்த பின்னர், மூன்று ஆண்டுகளில் 7,50,000 நபர்கள் இறந்தனர்.  இதுவே பிறகு ஒரு தொடர்கதையாகி 20-ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.  கர்னல் சார்லஸ் அடானோவான் 1903 - இல் இந்நோய்க்கான தொற்றுண்ணியைக் கண்டுபிடித்தமைக்கான பாராட்டும் நினைவுக்கல் முக்கிய வளாகக் கட்டிடத்தில் மெயின் பிளாக்கில் இருந்தது.  இப்போது அது காணப்படவில்லை.  டோனோவான் இந்தியாவில் 1863 - இல் பிறந்து டப்லின் டிரினிடி கல்லூரியில் படித்தபின் இக்கண்டுபிடிப்பின்போது இவர் உடல் இயங்கியல் பேராசிரியராக மதராஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவதற்கு முன் இரண்டாவது மருத்துவராக ஹொவ்லாக் வார்டில் பணியாற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். 

இக்கண்டுபிடிப்பு லண்டனுக்கு மூன்று மாதங்கள் கழித்தே சென்றடைந்தது.  அச்சமயத்தில் அங்கு லீஸ்மேன், (Leishman) என்பவரும் இதே தொற்றுண்ணியைக் கண்டுபிடித்து அறிவித்துவிட்டார்.  ஆகவே, அத்தொற்றுண்ணிக்கு லீஸ்மேன் டோனோவான் என இரண்டு பெயர்களையும் இணைத்து பெயரிடப்பட்டன என்பது ஒரு சோகக் கதை.  பிறகு டோனோவான் மதராஸ் மருத்துமனையின் அங்கமான இராயப்பேட்டை மருத்துவமனைக்கு 1912இல் கண்காணிப்பாளரானார்.  இம்மருத்துவமனையில் இவரால் கரும்பலகையில் வரையப்பட்ட கலா அசார் தொற்றுண்ணியின் படம் கண்ணாடிப் பெட்டகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு பெயர் பொறித்த நினைவுக்கல் டாக்டர் முகமுது அப்துல்லா உறைவிட மருத்துவ அலுவலகப் பணியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது சமையற்காரரால் சமையல் பொருட்கள் கணக்கில் குறைவாக உள்ளதைக் கண்டுபிடித்ததால் 1947 - இல் கொலை செய்யப்பட்டதன் நினைவாக உள்ளது.  இக்கொலைக்குக் காரணமாக இன்னொரு கருத்து பாலில் கலப்படம் செய்ததைக் கண்டுபிடித்தமைக்காகக் கூரையின் ஓட்டைப்பிரித்து கீழே குதித்து கொலை செய்யப்பட்டார் என்பதாகும்.  (Madras rediscovered - p. 339)

பறக்கும் டாக்டர்

கல்லூரியின் வாசலருகில் டாக்டர் எஸ். ரங்காச்சாரியின் முழு உருவச் சிலை நின்றுகொண்டிருக்கிறது. அவர் ரோல்ஸ்ராய் என்ற விலை உயர்ந்த காரை அக்காலத்திலேயே வைத்திருந்தார் என்பது அக்காலத்து சென்னைவாசிகளுக்கான அதிசயம்.

மேலும் இவர் தனக்காக ஒரு விமானம் வைத்திருந்ததும், அக்காலத்திய பெரிய செய்தியாகும்.  இது குறித்து மக்கள் இவரைப் ‘பறக்கும் டாக்டர்’ என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.  ரோல்ஸ்ராய் காரை இவர் வைத்திருப்பதைக் குறித்து கேட்கும்பொழுது, “நாள்முழுதும் நான் நோயாளிகளைப் பார்ப்பதற்குச் செல்ல எல்லா வசதிகளையும் கொண்ட காரை வைத்துள்ளேன்.  இந்நிலையில் எனக்கு எதற்குப் பெரிய அளவில் வீடு” என்று கூறுவாராம்.

இதுபோல மற்றொரு சிலை மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புறமாக மருத்துவமனை வளாகத்தில் முதல் இந்திய மருத்துவப் பேராசிரியராக 30 ஆண்டுகள் பணிபுரிந்த ஏழைப் பங்காளரான சித்த மருத்துவ முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்ட டாக்டர் எம்.ஆர்.குருசாமி முதலியாரின் சிலை உள்ளது.

இவரே “மெட்டீரியா மெடிகா” என்னும் மருந்துகளின் பயன்பாடு குறித்த நூலை எழுதி வெளியிட்டவர்.  இது அக்காலத்தில் ஆங்கிலம் பேசும் அத்தனை நாடுகளிலும் மருத்துவ மாணவர்களால் படிக்கப்பட்டன.  இவர் தன்னுடைய மருத்துவ ஆலோசனையை காலை 6.30 மணிக்குத் தொடங்கி, தன் வீட்டின் ஜன்னல் அருகில் அமர்ந்து நோயாளியிடம் ஆலோசனைக்கான பணத்தைக் கேட்டுப் பெறாமல் அவர்களையே பணத்தை எதிரில் உள்ள உண்டியலில் போட்டுவிடக் கூறுவாராம்.  இவருடைய நன்கொடையினால் ஒரு உயர்நிலைப் பள்ளி சென்னையில் 28 ஏக்கரில் நடைபெற்று வருகிறது.

கல்லூரியின் மற்றைய பெருமைகள்

இம்மருத்துவமனையில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சைப் பகுதி 1934 மார்ச் 26 மதராஸ் கவர்னர் சர் ஜார்ஜ் ஸ்டான்லியால் திறக்கப்பட்டது.  பிறகு மூளை, நரம்பு அறுவை, இதய நுரையீரல் அறுவை, இரைப்பை, குடல் நோய், சிறுநீரக அறுவை, எலும்பு முறிவுத்துறை என தற்பொழுது பிரிந்து தனித்தனியாக இயங்கி வருகின்றன.

மூளை நரம்பியல் துறை

1968இல் இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டியவர் அன்றைய முதல்வர் திரு சி.என்.அண்ணாதுரை.  பிறகு 1972 பிப்ரவரி 9இல் இந்திய ஜனாதிபதி டாக்டர் வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டது.  இக்கட்டிடம் கட்ட முழுமூச்சாகப் பாடுபட்டவர் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பேராசிரியர் டாக்டர் பி.ராமமூர்த்தி அவர்கள்.

இதய நுரையீரல் துறை

1966 எப்ரல் 13-ஆம் தேதி அன்றைய முதல்வர் திரு எம்.பக்தவத்சலத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடத்திற்கான மூலைக்கல், குழந்தைகளுக்கான இதய மருத்துவத்துறையை நிறுவியவரும் இதய பிறவிக் குறைபாட்டிற்கான புதிய அறுவை சிகிச்சையைக் கண்டுபிடித்தவருமான ஜான் ஹாப்கின் பல்கலைக் கழகச் சிறப்பு நிலைப் பேராசிரியர் ஹெலன் பி.டசிக் எம்.டி.யால் வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் ஏ.எல்.முதலியார்.  பின்னர் 1972 ஏப்ரல் 7 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. (IJS Vol.69, 2007. p. 167)

இம்மருத்துவமனையில் 1900இல் ரான்சன் எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே முதன்முறையாக எக்ஸ்ரே நிறுவப்பட்டது.  இது பேட்டரியில் இயங்கியது.  எக்ஸ்ரே பகுதி கேப்டன் டி.டபிள்யு. பெர்னான்ட்டின் பெயரிடப்பட்டு ஒரு தனி இயக்கமாக 1934 மார்ச்  26இல் திறக்கப்பட்டது.,

ஆனால், இதற்கு முன்பே மருத்துவமனையில் தற்காலிகமாக இவ்வியக்கம் லார்ட் லேடி வெலிங்டனால் 1922 மார்ச் 17 அன்று திறக்கப்பட்டது.

தற்பொழுது தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக அரசுக் கல்லூரியில் எம்.ஆர்.ஐ கருவி இங்கு நிறுவப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் 165 மாணவர்கள் தற்பொழுது இளநிலைப் படிப்பிற்கு மருத்துவக் கல்வி இயக்குநரால் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.  இதில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர் பங்கீட்டுக்காக ஒதுக்கப்படுகிறது.  மற்றவைகள் தமிழக அரசு விதிகளின்படி 69 சதவீத ஒதுக்கீட்டு முறையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  இவ்விதியில் சில மாற்றங்களுடன் ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முக்கியமான நிகழ்வுகள்

இம்மருத்துவக் கல்லூரியில் 1852 இல் முதல் தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்றனர்.  சென்னையின் முதல் மாணவியாக முத்துலட்சமி ரெட்டி 1912 இல் பட்டம் பெற்றார்.  உலகில் 4 பெண்மணிகள் முதன்முதலாக இக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் ஒருவர் மேரிசெர்லிப்.

பேராசிரியர் சாம் ஜி.பி.மோசஸ் நீரிழிவு நோய்க்கான பிரிவை இந்தியாவில் முதன்முறையாக 1953 - இல் இக்கல்லூரியில் ஆரம்பித்து, “நீரிழிவு நோயின் தந்தை” எனப் புகழ்பெற்றார்.  1957 இல் மிகக் குறைந்த வயதில் பேராசிரியராகப் பதவியேற்றார்.  இதுபோல் டாக்டர் ஏ.எல்.முதலியாரின் மகனாக பேராசிரியர் ஏ.வேணுகோபால் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளைச் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே படித்து, சிறுநீரக அறுவைப் பிரிவைத் தொடங்கினார்.  இவர் அடிப்படை மருத்துவ விஞ்ஞான மேல்நிலை இயக்கத்திற்குக் கௌரவ இயக்குநராகப் பணிபுரிந்ததுடன், மருத்துவ மன்றச் செயல் கமிட்டியின் (MCI) உறுப்பினராக செயல்பட்டார். 

(1975 - 83) ஆசியாவிலேயே முதல் பெண் அறுவை நரம்பியல் மருத்துவரான டாக்டர் எஸ்.கனகா பேராசிரியராகப் பணிபுரிந்து மூளை அறுவை சிகிச்சையில் பல நவீன சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்தார்.  இதில் மிக முக்கியமானது ஸ்டிரியேடாக்டிக் என்ற மூளையின் ஆழமான பகுதியை மின்தூண்டுதல் செய்து நோய்களுக்கு மருத்துவம் அளிப்பது ஆகும். (Indian J.Sur. 2007. p. 163)

இம்மருத்துவக் கல்லூரியின் மற்றொரு சிறப்பு இந்தியாவில் எய்ட்ஸ் நோய் டாக்டர் சுனிதா சாலமனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.  டாக்டர் கே.சதாசிவம்தான் முதன்முதலில் இதய நெஞ்சக அறுவை சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்தார்.  இதேபோல டாக்டர் பி.ராமமூர்த்தி நரம்பியல் இயக்ககத்தைத் தொடங்கி இந்தியாவில் முதல் தலைக் காயத்திற்கான பகுதியைத் தொடங்கினார்.  பேரா.என்.ரங்கபாஷ்யம் இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சைக்கான உயர்மட்ட பட்டமான எம்.சி.எச் (M.ch) பட்டப்படிப்பைத் தொடங்கினார்.  (The National Medicine Journal of India, p. 118-119)