ஆபிரகாம் பண்டிதரின் 101ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவரை நினைவுபடுத்தும் கட்டுரை

இசைஞானி இளையராஜா ஒரு வகையில் ஆபிரகாம் பண்டிதரின் வாரிசு என்று சொல்ல முடியும். பண்டிதரின் மகன் சோதிப்பாண்டியனின் மாணவர் தன்ராஜ் மாஸ்டர். இவரிடம் இசை படித்தவர் இளையராஜா. ஆக இப்படி ஒரு பரம்பரையில் வந்தவன் நான் என்று இளையராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

abraham panditharபொதுவாக தமிழ் இலக்கிய வரலாறு, பண்பாட்டு வரலாறு போன்றவற்றில் அதிகம் பேசாதது தமிழிசை வரலாறு. அதோடு தமிழிசைக்கு என்று அர்ப்பணித்தவர்களின் வரலாறும் பேசப்படுவதில்லை. ஆபிரகாம் பண்டிதரும் விதிவிலக்கில்லை.

பண்டிதரைப் பற்றிய ஒரு கட்டுரையில் சாமர்செட் பிளேன் என்பவர் “இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்களுக்கு உரிய சிறப்பு செய்யாது சிறுமைப்படுத்தி உள்ளனர்” என்று கூறுகிறார். இதைப் பொதுவான - கருத்தாகக் கொள்ள முடியாவிட்டாலும் இது பண்டிதருக்குப் பொருந்தும்; வேறு சிலருக்கும் பொருந்தும்.

தமிழிசை குறித்து எழுதியவர்களில் விபுலானந்தர் (யாழ்நூல்) எஸ்.ராமநாதன் (சிலப்பதிகார இசைநுணுக்க விளக்கம்) சாம்பமூர்த்தி அய்யர் (தென்னிந்திய இசை) வீ.ப.கா.சுந்தரம் (தமிழிசை வளம், தமிழிசை இயல், தமிழிசைக் களஞ்சியம்) என்ற வரிசையில் ஆபிரகாம் பண்டிதர் முக்கியமானவர். இவர் ஆரம்ப காலத்திலேயே தமிழிசை பற்றி - யோசித்தவர்; எழுதியவர்.

பண்டிதரின் மகன் தனபாண்டியன் எழுதிய ஆபிரகாம் பண்டிதரின் வரவலாற்றை ஒட்டியே மற்றவர்கள் எழுதியுள்ளனர். பண்டிதர் இந்துச் சார்பாளர் எனக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ சமயத்தினர் என இந்துக்களும் நினைத்ததால் ஆரம்பகாலத்தில் இவர் அடையாளம் காணப்படாமல் இருந்தார். உ.வே.சா. பழைய தமிழ் நூற்களைத் தேடி அலைந்தது போலவே இசை பற்றிய நுட்பங்களைத் தொகுப்பதில் வாழ்வின் பெரும் நேரத்தை இவர் செலவழித்திருக்கிறார். தமிழ்இசை, மருத்துவம் இரண்டிற்கும் இவரது நன்கொடை அதிகம்.

ஆபிரகாம் பண்டிதர் என்ற பெயரில் உள்ள பண்டிதர் என்ற பின் ஒட்டு தஞ்சாவூரில் இருந்தபோது சேர்த்துக் கொண்டது. திண்டுக்கல்லில் இருந்தபோது பண்டுவர் என்றுதான் அறியப்பட்டிருக்கிறார். இது வைத்தியரைக் குறிப்பது. பண்டுவர் பின்னர் பண்டிதர் ஆகிவிட்டது.

தென்காசி மாவட்டத்தில் சாம்பவர் வடகரை என்ற செழிப்பான கிராமம் உள்ளது. இது பரம்பரையாக வேளாண் தொழில் செய்கின்ற மக்கள் வாழ்கின்ற ஊர். இங்கே முத்துசாமி நாடார் அன்னம்மா தம்பதியினர் இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11 பேர் இறந்து விட்டனர். பிழைத்த இருவரில் பண்டிதரும் ஒருவர். இவர் 1859 ஆகஸ்ட் 2ஆம் நாள் பிறந்தார்.

முத்துசாமி நாடார் சுரண்டை என்ற ஊரில் மறுமலர்ச்சி கிறிஸ்தவப் பணியாளரான ஆங்கிலேயர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்தார். இதனால் ஆபிரகாம் படிப்பதற்குரிய சூழ்நிலை இருந்தது. சுரண்டையில் ஆரம்பக் கல்வி, பள்ளிகுளத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு, திண்டுக்கல் நர்மன் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சிக்ஷிணிஷி படிப்பு என முடிந்ததும் (1874) வேலைக்குப் போனார்.

திண்டுக்கல் ஆனைமலைப்பட்டி மாதிரிப் பள்ளியில் நாலைந்து வருஷங்கள் பணி. இக்காலத்தில் தமிழ் இலக்கியம், சோதிடம், மருத்துவம் படித்தார். இந்தப் பள்ளி மூடப்பட்டதால் தஞ்சாவூருக்குச் சென்றார். இங்கே பூக்கடைப் பள்ளி என அழைக்கப்பட்ட நேப்பியர் பெண்கள் பள்ளியில் 1882இல் சேர்ந்தார். 8 வருஷங்கள்; 1890இல் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.

பண்டிதர் தஞ்சையில் வேலைக்குச் சேர்ந்த வருஷத்தில் ஞானவடிவு பொன்னம்மா என்ற பெண்ணை மணந்தார். இப்பெண் 1911இல் இறந்தார். பின்னர் பண்டிதர் கோவில் பாக்கியம் என்னும் பெண்ணை மணந்தார். இவர் கும்பகோணம் ஊரினர். மரபுவழி இசைக் குடும்பத்தினர். வீணை, பியானோ அறிந்தவர். பண்டிதர் இவரை இந்து முறைப்படி மணம் செய்து கொண்டதை சபை கண்டித்தது; விலக்கியது.

இன்று ஆபிரகாம் தமிழிசைக் கலைஞராக அறியப்பட்டாலும் இவர் வாழ்ந்த காலத்தில் பிரபலமான வைத்தியராக அறியப்பட்டார். பேரும் புகழும் பணமும் சாதித்தது வைத்தியத் தொழிலில்தான். இவர் வைத்தியம் படித்தது பற்றிய செய்தி தொன்மமாகவே கூறப்படுகிறது. பழனி என்னும் நாடோடி வைத்தியரை தற்செயலாகச் சந்தித்தபோது கேட்ட விஷயங்களே பிற்காலத்தில் இவரைப் பெரிய வைத்தியனாக்கியது என்பது ஒரு செய்தி.

வைத்தியர் பொன்னம்பல நாடார் என்பவரின் உதவியுடன் திண்டுக்கல் சுருளிமலையில் ககுணானந்த சுவாமியைச் சந்தித்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சுவாமியிடம் பெற்ற ஆசி இவரை வளப்படுத்தியது. இது 1877இல் நடந்தது என்கின்றனர். பண்டிதர் குருவைச் சந்திக்க சுருளிமலைக்குப் பலமுறை சென்றிருக்கிறார். நுட்பமான அறிவும் கிரகிக்கும் சக்தியும் உடையவர் ஆதலால் பல விஷயங்களை விரைவில் சேகரித்துக் கொண்டார்.

பண்டிதர் பள்ளியில் பணிபுரிந்தபோது (1877) தன் குருவான கருணானந்தர் பேரிலேயே வைத்தியசாலையை ஆரம்பித்தார். இவர் தயாரித்த மருந்துகளுக்குக் கூட கருணானந்த சஞ்சீவி எனப் பெயரிட்டார். இந்தக் காலத்தில்தான் பண்டுவர் (மருத்துவர்) என்னும் பெயர் இவரது இயற்பெயருடன் ஒட்டிக்கொண்டது.

இவர் தயாரித்த மருந்துகள் இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கும் சென்றன. இந்தக் காலகட்டத்தில் தஞ்சையில் ஆசிரியப் பணிக்குச் சென்றார். ஆனால் 8 ஆண்டுகளில் பிரபலமான வைத்தியர் ஆனார். கட்டாய ஓய்வு பெற்ற மூன்று வருடங்களில் தஞ்சையில் நூறு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். இதற்குக் கருணானந்தபுரம் பண்ணை என்ற பெயர் வைத்தார். இங்கு பயன் தரும் பழமரங்கள் மட்டுமல்ல மூலிகைச் செடிகளையும் பயிரிட்டார்.

இவர் இந்தப் பண்ணையில் ராஜா கரும்பு என்னும் புதிய வகைக் கரும்பைப் பயிரிட்டார். இது 15 அடி உயரமுடையது. இது இவர் உருவாக்கியது. இங்கு பட்டுப்பூச்சி வளர்த்திருக்கிறார். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இங்கிலாந்திலிருந்து காற்றாடி இயந்திரத்தை வரவழைத்திருக்கிறார்.

காலரா, பிளேக் போன்ற நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடித்து அந்த மூலிகைகளை தன் பண்ணையில் பயிரிட்டிருக்கிறார். பண்ணை வேலைகளையும் மருந்து தயாரிப்பு வேலைகளையும் செய்ய ஏழை உறவினர்களை வரவழைத்திருக்கிறார். 1899இல் கொங்கு நாட்டுப் பகுதியில் பரவிய ஒருவகைக் காய்ச்சலுக்கு பண்டிதரின் மருந்து பலனளித்தது. அதனால் அன்றைய கவர்னர் பண்டிதரைப் பாராட்டினார்.

இவரது பண்ணையில் மாடுகள், கோழிகள் வளர்த்தார். இந்தக் காலத்தில் இவரது பண்ணை சுற்றுலாத்தலம் போல் ஆனது. 1908 பிப்ரவரி 22இல் அன்றைய கவர்னர் ஷிவீக்ஷீ கிஸீtலீஷீஸீஹ் லிணீஷ்றீமீs இவரது பண்ணையைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது லாலி சமூகக்கூடம் ஒன்று கட்டினார்.

இவரது வைத்திய முறை சில சைவ மடத் தலைவர்களைக் கவர்ந்திருக்கிறது. தஞ்சாவூர் திருப்பாதிரிப்புலியூர் ஆதீனத் தலைவர் சிவசண்முக மெய்ஞான சிவாச்சாரிய ஞானிகள் இவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்; உதவியும் செய்திருக்கிறார்.

பண்டிதர் பல்துறை அறிவுடையவர். அச்சுத்தொழில், புகைப்படத் தொழில் இவற்றிலும் இவருக்கு பரிச்சயம் உண்டு. கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம் அச்சடிக்கும் தொழிலைக் கற்றிருக்கிறார். 1911இல் லாலி மின்விசை அச்சகம் ஒன்றை நிறுவினார். புத்தகக் கட்டமைப்பு பற்றியும் சோதனை செய்தார். புகைப்படக் கலையை ஆங்கிலேயர் ஒருவரிடம் கற்றார். அரசு புகைப்படத் தொழில்நுட்ப சங்கத்தில் உறுப்பினராய் இருந்தார். இவர் ஜோதிடமும் அறிந்தவர்.

ஆபிரகாம் பண்டிதர் வைத்தியத் தொழிலில் பெரும் பணம் சம்பாதித்தாலும் இசைக்காகத் தன் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டிருக்கிறார். இது இவரது உண்மையான பக்கம். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கர்நாடக சங்கீதத்தை விட தமிழிசை ஆழமுடையது என்று யோசிக்க வைத்தவர்; தமிழின் பழைய நாட்டைப் பண் பற்றி பேசியவர்.

முந்தைய காலங்களில் நாட்டைப் பண்ணை நைவளம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், சிறுபாணாற்றுப்படை போன்ற பழம் இலக்கியங்களில் இந்தப் பண் பற்றிய குறிப்புகள் உள்ளன என்றார். இறைவன் திருவுலா வரும்போது நைவளமான நாட்டுப் பண் பாடுவது வழக்கம். சங்கப் பாடல்களில் வரும் அரும்பாலை என்பது இன்றைய சங்கராபரணம் என்ற ராகமே என்கிறார் பண்டிதர். பழமையை மீட்டெடுத்த பண்டிதரின் முயற்சி கருணானந்தரிடம் ஆரம்பித்தது என்று கூறலாம்.

பண்டிதரின் இரண்டாம் மனைவி இசைக் கலைஞர் ஆதலால் இவரது இசையறிவு மேலும் மெருகேறக் காரணமாயிருந்தது. தஞ்சை ராமசாமி கோவில் நாகஸ்வர வித்துவானிடம் உரையாடியே தன்னை வளப்படுத்தி இருக்கிறார். பண்டிதர் பரதரின் நாட்டிய சாஸ்திரம், சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம் என்ற நூற்களைப் படித்து கலைஞர்களிடம் விவாதித்திருக்கிறார். தஞ்சை பிச்சைமுத்து என்பவரிடம் மேல்நாட்டு சங்கீதம் படித்திருக்கிறார்.

பண்டிதர் 1910க்கும் 1916க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 6க்கும் மேற்பட்ட இசை மாநாடுகளை தம் சொந்தச் செலவில் நடத்தியிருக்கிறார். இந்த மாநாடுகளுக்கு வைத்தியநாத அய்யர், பரோடா திவான்., நடுக்காவிரி சொக்கலிங்க நாடார், சோழவந்தான் அரசன் சண்முகனார் எனக் குறிப்பிடும் படியான அறிஞர்கள் வந்திருக்கின்றனர்.

இவர் 1912இல் நடத்திய மாநாட்டில் 55 பேராளர்கள், 428 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பரோடாவில் 1916இல் நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் கலந்துகொள்ள 26 உறுப்பினர்களை தன் சொந்தச் செலவில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பண்டிதர் சங்கீத வித்யா மகா ஜனசங்கம் என்னும் அமைப்பை தஞ்சாவூரில் ஆரம்பித்தபோது (1912) பஞ்சாபகேச பாகவதர், சுப்பிரமணிய சாஸ்திரி, வீணை வெங்கடேச அய்யர், இராதாகிருஷ்ணன் பாகவதர் எனச் சிலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் இவரது சொந்தச் செலவில் நடந்தது.

பண்டிதர் கிறிஸ்தவ இந்து சமய ஒற்றுமையை இசைவழி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கிறிஸ்தவ சங்கீதத்தைத் தமிழிற்கும் தமிழ் சங்கீதத்தைக் கிறிஸ்தவத்திற்கும் கொண்டு சென்றவர் இவர்.

வேல்வாயில் மாண்டுயிர்த்த மெய் கண்டபாலா

ஆலமுண்டு அமுதளித்த ஆபிரகாம் தேவா

என்பது ஒரு கீர்த்தனை. லாலி பாடும் முறையைத் தமிழகத்தில் கொண்டு வந்தவர் இவர்.

ஆடிப்பாடி ஆபிரகாம் ஆரம் போடுவான்

தேடிவந்த கோலம் சொல்லி லாலி பாடுவான்

என்பது இவரது வரிகள்

சச்சு சித்தானந்தமாய் காவி பரிபூர்ணமாய்

சுத்த பரிசுத்தேறுமாய் தோன்றும் ஆதி                                                                      காரணமாய்

சித்தம் கணிக்க அன்பர் சிந்தை குடி                                                     கொண்டதேவா

நத்தவரும் மைந்தனுக்கு முத்திதரும்                                                       தந்தையாய்

என்பது இவரது ஒரு இசைப்பாடல்.

பண்டிதர் நாகஸ்வரம், தவல் பற்றிய செய்திகளைச் சேகரித்திருக்கிறார். தவல் என்பது சரி; தவுல் அல்ல என்கிறார். இவரது கருத்துப்படி தமிழரின் உலக நன்கொடை நாகஸ்வரமும் தவலும்தான். இவரது கருணானந்த சாகரம் நாகஸ்வரம் பற்றிய குறிப்புகளைத் தருகிறது. தியாகராஜரின் கீர்த்தனைகளைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறியவர் இவர்.

ஆபிரகாம் பண்டிதரின் கருணானந்த சாகரம் என்ற நூல் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. இதன் முதல் பகுதி 1917இல் வந்தது. இரண்டாம் பகுதி வரும்முன் இவர் இறந்துவிட்டார். ஆனால் இவரது கையெழுத்துப் பிரதியை அப்படியே வெளியிட்டார் இவரது மூத்த மகன் (1944).

இந்த நூல் நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் மூன்று தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டம் கடல்கோள் பற்றிய செய்திகள் வருகின்றன. அக்காலத்தில் இவர் நடத்திய இசை மாநாடுகள், இசைப் புலவர்கள், தென்னிந்திய இசைக்கலைஞர்களின் பூர்வீகம் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன.

இரண்டாம் பகுதியில் இசை சுருதி பற்றிய விவாதம் வருகிறது. மூன்றாம் பகுதி தமிழிசை பற்றியது. சுரங்கள், பண்கள், ராகங்கள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன. நான்காம் பகுதியில் சிலப்பதிகாரத்தின் இசைச் செய்திகள் விளக்கப்படுகின்றன. வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை பற்றிய செய்திகள் வருகின்றன. இதில் யாழ் மனித உடல் போன்றது என்கிறார் பண்டிதர். பழம் இலக்கியங்களில் வரும் யாழ் பற்றிய செய்திகளை ஆய்வு செய்கிறார். கருணானந்த சாகரம் அன்றில் பதிப்பகம் வழி மறுபதிப்பாக வந்திருக்கிறது (1994).

1907இல் வெளிவந்த கருணாகர சாகரத் திரட்டு 96 கீர்த்தனைப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. இதில் கீதம் சுரஜதி, வர்ணம், லாலி, நலுங்குவகைகள் உள்ளன. பண்டிதரின் மூன்றாம் மகன் வரகுண பாண்டியன் எழுதிய (1946) பாணர்கைவழி என்ற யாழ்நூல் - பண்டைய இலக்கியங்களில் வரும் யாழ் பற்றிய குறிப்பைத் தருகிறது. பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ் என்பன பற்றிய விளக்கம் இதில் உண்டு. இந்த நூல் பண்டிதரின் - செல்வாக்குடையது.

கிறிஸ்தவ மதபோதனை நான்மறை காட்டும் நன்னெறி என்ற முடிவடையாத இவரது நூல் ஒன்று உண்டு. தத்துவம், ஒழுக்கம் பற்றிய கரிசனை பண்டிதருக்கு உண்டு. இவர் எழுதிய பாடல்களின் தொகுப்பு வரவில்லை.

ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்த காலத்தில் பெரிய அளவில் பாராட்டுப் பெறவில்லை. அதன் பிறகும் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்களால் இவர் மேற்கோள் காட்டப்படவில்லை. அன்றைய பிரிட்டிஷ் அரசு ராவ் சாகிப் பட்டம் கொடுத்தது (1907). சென்னை கவர்னர் தனிப்பட்ட முறையில் இவரைப் பாராட்டியுள்ளார்.

பண்டிதரின் இறுதிக்காலம் நிம்மதியாய் கழியவில்லை என்கின்றனர். 40 வயதில் இவரது கண்பார்வை மங்க ஆரம்பித்தது. இவருக்க 4 ஆண், 6 பெண் மக்கள். இறுதிக் காலத்தில் பண்ணைத் தோட்டத்திலேயே வாழ்ந்தார். 1919 ஆகஸ்ட் 31இல் இவர் பண்ணை வீட்டில் இறந்தார். இங்கேயே இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. நினைவு மண்டபம் உண்டு.