ஒரு பறவை தன் கூட்டை வடிவமைக்கிறபோதே அச்சுறுத்தும் எதிர் பறவைகளையும் கவனத்தில் கொள்கிறது. மனிதனும் சுற்றுச்சூழலும் இரத்தமும் நாளமும் போன்றவை. ஒரு மனிதர் இறக்கிறபோது சகமனிதர்களுடன் எவ்வாறு பழகினார் என்பதைக் கொண்டே நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கிறோம். அவருக்கும் ஏனைய உயிர்களுக்கும் இயற்கைக்குமான நேயப் பிணைப்பு குறித்து பேசப்படுவதே இல்லை. குழந்தைகளுக்கு பெரும்பாலும் நாம் சொல்வது நரியின் தந்திரம். குரங்கு சேட்டை. காகத்தின் திருட்டு. அப்படிப் பார்க்கப்போனால், ஆரம்பத்திலேயே இது ஒட்டுமொத்தப் பறவையின் குணாம்சமாக குழந்தையின் மனதிற்குள் திணிக்கப்படுகிறது. மதச் சடங்குகள், சகுனங்களில் இவைகள் படும்பாடு பரிதாபத்திற்குரியது. குயிலின் முட்டையெனத் தெரிந்தும் அடைகாப்பது, கூடி உண்ணுதல் என்பதைத் தாண்டி நிறம், ஒலி, உணவுமுறை, பசியின் பொருட்டு அதன் நடவடிக்கைகளைக் கொண்டு காகம் என்பது ஆபத்தான அறுவெறுப்பான, புறக்கணிக்கப்பட்ட பறவையாக மனிதர்களால் பார்க்கப்படுகிறது.

poorna bookகாகத்தைக் குறியீடாகக் கொண்டு ‘ஆகாயத் தோட்டிகள்’ என்று இந்த கவிதைத் தொகுப்பிற்கு தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானது. மதம், இனம், சாதி கடந்து மனித மனங்களின், உடல்களின் அழுக்குகளைச் சுத்தப்படுத்துவர்கள் தோட்டிகள். கவிஞர் பூர்ணா மிக நுட்பமான உணர்வுகளை எளிமையான வரிகளாகக் கொடுத்திருக்கிறார். பறவைகளை மட்டுமே மையப்படுத்திய கவிதைகள் என்று சொல்லிவிட முடியாது. இறகுகளின் குவியலாக மென்மையான உளச் சித்திரத்தை உருவாக்கும் சொற்கள் இவை. அதேசமயம், நடுகற்களின் மீதேறி மானுட தரிசனத்தை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் செய்கின்றன.

வாங்கி சிவந்த கையை / கொடுத்து சிவந்ததாகவும் / வயிற்றில் அடித்து வயிறு பெருத்தவர்களை / வஞ்சகமற்றவர் என்றும் / மெய்த்தோல் போர்த்தியிருக்கும் பொய்களை உலவவிட்டும் / வாழச்சொல்கிறார்கள் / பொழுதுகளைப் பிடுங்கிக்கொண்டு எல்லாவற்றிற்கும் சமரசப்பட்டு வாழச்சொல்கிற சமூகத்திற்கான கேள்விகள் இந்தத் தொகுப்பில் நிறைய பார்க்க முடிகின்றன.

தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான முலை வரிச்சட்டம், அதற்கான போராட்டங்களை, நாஞ்செலி என்கிற போராளியை கேரளா மற்றும் தென்தமிழக வரலாறு ஒருபோதும் மறக்காது. இன்றைக்கு சிலிகான் பொருள் கொண்டு பயன்படுத்தும் மருத்துவ வளர்ச்சியால் மார்பக வளர்ச்சி, அழகுக்கான ஒரு விசயமாகக் கருதப்படுகிறது. இப்படியான ஒரு விளம்பர உத்திக்கு, வரி செலுத்திய அந்தக் காலமே பொற்காலமாக கவிஞர் ஆதங்கப்படுகிறார்.

சாதியாலும் செய்யும் தொழிலாலும் இழிவு பேசி ஊருக்குப் புறத்தே வைத்திருக்கும் மக்களின் சொற்கள் எப்படியானது? அவர்களின் வாழ்வியல் சொற்களை ஒருவேளை நீங்கள் உச்சரிக்க நேர்ந்தால், சாக்கடையின் துர்நாற்றத்தையும் மலக்குழியின் வீச்சத்தையும் வல்லுறவு கொண்ட உதிரவாடையையும் அடிமனதில் காயம்பட்டு புண்பட்டு கசியும் சீழ் நெடியையும் உணரக்கூடும் என்பதை வலி மிகுந்த வரிகளாகச் சொல்கிறார்.

மீன் முள்ளுக்காகவும் / கோழியின் எலும்புக்காகவும் / சிறகில் வியர்வை ஒழுக/ பறந்து வந்திருக்கிறது காக்கை.

சிதறிக்கிடந்தவற்றை கொத்தாமல்/ அவர்கள் வீசியெறிந்த / பறையன் காக்கா என்ற சொல்லில்/ அடிபட்டு நொண்டத் தொடங்கியது.

காக்கை, குருவிகள் எங்கள் சாதி என்ற வரியில்/ காக்கை என்ற சொல் பறந்து போய்க்கொண்டிருந்தது.

இறகு மற்றும் சருகு வீழ்வதை வைத்து வாழ்க்கையின் நிதர்சனத்தை உணரவைக்கிற கவிதைகள் சட்டென்று மனதிற்கு நெருக்கமாகின்றன. உதிர்ந்த பறவையின் இறகு ஒன்று / தரை இறங்கியது / புறப்பட்ட இடத்துக்கும்/ அடைந்த இடத்துக்குமான/ கால இடைவெளியில்/ பறந்து தன்னை மெய்ப்பித்திருந்தது.

மழைத்துளி வெட்டப்படுவதைப்/ பொறுக்க முடியாமல்/ பெருங்காற்று ஒன்றில் தொடங்கியது /சருகுகள் ஊர்வலம்.

பாலையாகிப்போன மருதத்தின் அவலம், வார்த்தைகளாலும் செயலாலும் மற்றவர்களின் சுயமரியாதையை குத்திக் கிழிக்கிற மூர்க்கம், தலைவரை நம்பி ஏமாறும் தொண்டர், வனாந்திரத்தின் ஒளிக்கீற்று, அன்றாடம் பேருந்தில் ஏறி, இறங்கக்கூடிய மனிதர்களின் வாழ்க்கைச் சூழல், விளிம்புநிலை மக்களின் மனநிலை, கருப்பு மை தோய்ந்த நிற அரசியலுக்கான சொற்கள், குழந்தை மொழி, வானம், மரம், இரவு, பகல், மழை, நெருப்பாகப் பஞ்ச பூதத்தின் நிழலும் நீட்சியுமாக பல்வேறு கவிதைகள் ஆகாயத் தோட்டிகளாக உருமாறி இருக்கின்றன. இரண்டு வரிகளில் உலகத்தை அடக்கும் அற்புதத்தை கவிஞர் பூர்ணாவிடம் பார்க்க முடிகிறது.

“வேர் ஒன்று நீர் தேடி/ஆழ்துளை பைப்பில் மோதி/விபத்துக்குள்ளானது”

“விருந்தாளி வருவதை / அலைபேசி கத்திச் சொல்ல/ அன்னியமாகிப்போனது/ காக்கைக்கும் மனிதனுக்குமான உறவு.”

“கரிக்கொட்டை ஒவ்வொன்றிற்குள்ளும் /உறைந்திருக்கிறது நெருப்பு”.

“பறக்கத் துணைபுரியாத எந்த இறகும்/ இறகில்லை.”

“காக்கை பழத்தை விழுங்குகையில்/ ஒரு மரம் விழுங்கப்படுகிறது” போன்ற வரிகள் ஆழப் பதிந்துவிடுகின்றன.

சமூகத்தில் எது நடந்தாலும் நமக்கென்ன என்று அலட்சியமாகப் போகிறவர்களை நினைத்து வருந்தவும் செய்கிறார்.

காவிரிநாடன் அவர்களின் செறிவான அணிந்துரை, ஆகாயத்தோட்டியின் சரித்திர இறகாக வெளியெங்கும் பறக்கிறது. எண்பதுகளில் அதிகம் பேசப்பட்ட கையடக்கமான இந்த பாக்கெட் வடிவப் புத்தகத்தை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. முளைகட்டிய சொற்கள், இரவென்னும் நல்லாள் போன்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை முன்னமே தந்தவர் பூர்ணா. ஆகாயத் தோட்டிகள் மூன்றாவது தொகுப்பு. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் வெளியீடு.

சமூகத்தின் மீதான கோபம் மற்றும் அயற்சியின் வெளிப்பாடாக புரையோடிக் கிடக்கும் சாதியத்திற்கு எதிராகக் காகங்கள் போராட வேண்டும் என்கிறார் கவிஞர் பூர்ணா. பகிர்ந்துண்ணும் காகங்கள் நிச்சயம் தங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் படைப்பாகட்டும். கவிஞர் பூர்ணா அவர்களுக்கு வாழ்த்துகள்..

ஆகாயத் தோட்டிகள் (கவிதை)
பூர்ணா,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை - ரூ.50.00

- அகிலா கிருஷ்ணமூர்த்தி