வழக்கமான விழாவாக இல்லாமல், இந்தத் தேர்தல் எந்தவிதமான ஆரவாரமும்... ஆடம்பரமும் இன்றி... பல கோடி பணப்புழக்காட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் எளிமையாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியே.!.

ஒரு ரூபாய்க்கான அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு இணைப்பு என்ற பல சலுகைகளுக்குப் பின்னாலும்... மக்கள் தங்கள் வாக்குகளை ஜெயலலிதாவுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் இது ஜெயலலிதாவுக்காக விழுந்த வாக்குகள் என்று ஜெ நினைத்து செயல்பட்டாரென்றால் அது உண்மையா.? இல்லை.. ஜெயலலிதாவிற்கு விழுந்த வாக்குகள் எல்லாம் திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபமே..

கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின் முடிவில் "இனி ஒரு முறை ஜெ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது" என்று மக்களின் மனதில் பட்டதை ரஜினி வாய்திறந்து சொல்லி அது ஒரு பெரிய பிரச்சாரமாக மாறி அந்தத் தேர்தலில் ஜெவுக்கு மாற்றாக திமுக தேர்வு செய்யப்பட்டதையும் ஒரு பெரிய தோல்வியை ஜெ தழுவினார் என்பதெல்லாம் வ‌ர‌லாறு அல்ல‌ க‌ண்முன் ந‌ட‌ந்த‌ காட்சிக‌ள்.

அது போல‌த்தான் இன்று திமுக‌ த‌லைமை ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ள் குடும்ப‌ம் சார்ந்தோரின் ஆக்டோப‌ஸ் ஆக்கிர‌மிப்பில் திணறிப்போன‌ த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் மூன்றாவ‌தாக‌ யாருக்குப் போடுவ‌து என்ற‌ நிலையில்லாம‌ல்.. ஜெ வை தேர்ந்தெடுத்து உள்ளார்க‌ள்.

இந்த‌வ‌கையில் ம‌ட்டும் இந்த‌ வெற்றி ஜெய‌ல‌லிதாவைச் சாரும், ம‌ற்ற‌ப‌டி ஜெய‌ல‌லிதாவும் ஈழ‌த்த‌மிழ‌ருக்காக‌வோ.. த‌மிழக‌ மீன‌வர்களுக்காகவோ.. முல்லைப் பெரியாற்றுப் பிர‌ச்ச‌னைக்காக‌வோ, காவிரிப்பிர‌ச்சினைக்காக‌வோ, பாலாற்றுப் பிர‌ச்ச‌னைக்காக‌வோ, விலை நில‌ங்க‌ளாகிவ‌ரும் விளை நில‌ங்க‌ள் ம‌ற்றும் விவ‌சாயிக‌ளின் பிர‌ச்ச‌னைக‌ளுக்காக‌வோ.. அந்நிய முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகள் உள்நாட்டு முதலாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றோ.. நோக்கியா தொழிற்சாலை போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்களில் தமிழக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைக்கோ.. பாட‌ மொழியாக‌ த‌மிழ் க‌ட்டாய‌ம் ப‌ள்ளிக‌ளில் இருக்க‌வேண்டும் என்கிற‌ மொழி ஆர்வ‌லராக‌வோ அவ‌ர் ஆழ்ந்து ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாக‌வோ இருந்து போராடிய‌து இல்லை.

திரும்பச்சொன்னால் அவருக்கு இதிலெலாம் அவருக்கு ஆர்வமோ பங்கோ இருப்பதாக காட்டிக்கொள்ளக்கூட நேரமில்லை...

தேர்தல் தேதி நெருங்க நெருங்க அறிக்கைகள் விடுவதும்.. எஜமானத் தோரணையில் வீட்டில் இருந்து போராட்டங்களை அறிவிப்புச் செய்வதும், அந்தந்த மாவட்டச்செயலாளர்கள் அந்த ஆணைப்படி தொண்டர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதும்தான் அவரது அரசியல் செயல்பாடுகளாக இருந்துவந்துள்ளது. பெரும்பாலான நேரம் அவர்மீதான ஊழல் வழக்குகளை இழுத்தடிப்பது, நீர்த்துப்போக வழிவகை தேடுவது என்றுதான் இருந்துள்ளது.

இவரைத்தான் மக்கள் மீண்டும் 2011 தேர்தலில் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்றால் அந்த அளவுக்கு திமுக வின் போக்கு மக்களை முதலாளிகள் தொழிலாளிகள் என்ற பேதம் இல்லாமல் பாதித்துள்ளதுதான்.

மூன்றாவது அணியை உருவாக்கி அதை மக்கள் முன் கொண்டுவந்து, மக்களுக்கான ஆட்சி உருவாகும் என்கிற மக்களின் நம்பிக்கையின்மையின் பேரில் "எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி சிறந்த கொள்ளி" என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் ஜெயலலிதா வெற்றிபெற்றுள்ளார்.

இந்த வாய்ப்பை அவர் "நான் பாப்பாத்தி" என்ற தோரணையில் தமிழனுக்கு எதிராக பயன்படுத்துவாரா? உள்நாட்டுப் போர் என்றால் அதில் சிலர் சாவது இயல்புதான் என்று பேசி ராஜபக்சேவின் நல்ல சகோதரியாக மாறப்போகிறாரா? உள்நாட்டில் மக்களின் தேவையை உதாசீனப்படுத்திவிட்டு அந்நிய முதலாளிகளின் நலன் மட்டுமே தன்நலம் என்று உலக பொருளாதாரத்தில் ஊறப்போகிறாரா? க‌ச்ச‌த்தீவின் மீட்பு ப‌ற்றி இனி பேசாம‌ல்.. த‌மிழ் மீன‌வ‌ர்க‌ளின் கொலை தொட‌ர‌ வேடிக்கை பார்க்க‌ப் போகிறாரா?

இந்திய‌ இறையான்மையில் ஊறிப்போய் த‌மிழ்நாட்டின் த‌ண்ணீர்த் தேவையை விட்டுக்கொடுக்க‌ப் போகிறாரா? என‌க்கு குடும்ப‌மா? பிள்ளையா? குட்டியா? என்று பேசிக்கொண்டு ச‌சிக‌லா போன்றோரின் குடும்ப‌ ஆளுமையை மீண்டும் கொண்டுவ‌ருவாரா?
த‌மிழ்நாட்டுப் ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் க‌ட்டாய‌ம் வேண்டும் என்று மொழி வ‌ள‌ம் காப்பாரா? இன்னும் ப‌ல‌ கேள்விக‌ள் உண்டு.. அது அவ‌ரின் செய‌ல்பாடுக‌ளைப் பொறுத்த‌து..

இப்போதைக்கு ஒரு கும்ப‌லின் ஆதிக்க‌த்திலிருந்து த‌மிழ‌க‌ம் த‌ற்காலிக‌மாக‌ மீட்க‌ப்ப‌ட்டுள்ள‌து... இத‌ற்கான‌ விடுத‌லை நிரந்தரமாக கிடைக்குமா?

மீண்டும் ஒரு மாறுத‌லுக்காக‌ ம‌ன‌ம் ஏங்கும் நிலை மீண்டும் வ‌ருமா?  காத்திருப்போம்
Pin It