கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் 22ஆவது மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கும் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் முத்து அவர்களே! முன்னிலை வகித்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருமகனார் மன்னர் மன்னன் அவர்களே! சிற்றிதழ்கள் சங்கப் பொதுச் செயலாளர் இரவீந்திரன் அவர்களே! மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள், இதழியலாளர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர்களே! வணக்கம்.

எனக்கு முன்னர் பேசிய குறிஞ்சிவேலன் அவர்கள் தமிழ்ச்சிற்றிதழ்களின் தோற்றம் வளர்ச்சி அதன் வரலாற்றை முழுமையாகப் பேசினார்கள். இப்போது நண்பகல் இரண்டுமணி, ஆதலின் சுருக்கமாக நானே ஒரு தலைப்பை வரையறை செய்துகொண்டு சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தத் தலைப்பு திராவிட இலக்கியச் சிற்றிதழ்கள் என்பதாகும்.

இங்கே பேசியவர்கள் சிற்றிதழ் நடத்துவோர் மிகுந்த போராட்டத்திற்கிடையே நடத்துவதாகக் குறிப்பிட்டார்கள். சிற்றிதழ்களால் சமுதாயத்தில் என்ன பயனை ஏற்படுத்த இயலும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்கள். சிற்றிதழ்கள் எண்ணிக்கையில், வடிவத்தில், அளவில் சிறியவையாயினும் அவை சமூக மாற்றத்தை விளைவிப்பதில் சிற்றுளிகள் போன்றவை. சமூகத்தடைகளாகிய கருங்கற் பாறைகளை உடைப்பதிலும், அவற்றைச் சமுதாயத்திற்குப் பயன்படும் படிக்கற்களாகவும், சிற்பங்களாகவும் வடிவமைப்பதற்கும் சிற்றிதழ்கள் எனும் சிற்றுளிகள் பயன்படுகின்றன. அதே வேளையில் சிற்றிதழ்களுக்கு அதன் படைப்பாளிகளுக்கு – ஒரு கொள்கை இருக்க வேண்டும். பாவேந்தர் கூறியவாறு :

பொதுமக்கள் நலம் நாடிப் புதுக்கருத்தைச் சொல்க

புன்கருத்தைச் சொல்வதில் ஆயிரம் வந்தாலும்

அதற்கொப்பவேண்டாமே! அந்தமிழர்மேன்மை

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்

எதிர்பார்ப்பதன்றோ தமிழர்களின் எழுது கோல் வேலை?

என்ற நெறிமுறைகளோடு நடத்த வேண்டும். இந்த நெறிமுறையைப் பாவேந்தர் பெரியாரிடமிருந்து பெற்றார். சமுதாயத்தில் வெறும் மூன்று விழுக்காடு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் 97 விழுக்காடு சூத்திர சாதியினர் அடிமைப்பட்டுக் கிடந்தனர். அரசின் 99 விழுக்காடு உயர் பணிகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். மக்களை அடிமைப்படுத்த கடவுளர்களையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தினர். சீர்திருத்த இயக்கங்களாகிய சமண, பவுத்த சமயங்களைச் சூழ்ச்சி செய்து வீழ்த்தினர். ஆங்கிலேயர் வருகையால் சூத்திர சாதியினருக்குக் கல்வியும், விழிப்புணர்வும் கிடைத்தன. இதனைக்கண்ட பார்ப்பனர்கள் தங்கள் வருணப்பாகுபாட்டை நிலைநிறுத்திக் கொள்ள விடுதலைப்போராட்டத்தைத் தொடங்கி மக்களை அதற்குப் பலியிட்டனர். அகில இந்திய காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேயே இயங்கியது. சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்க இடஒதுக்கீடு தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சியில் பெரியார் வலியுறுத்தி வந்தார். காங்கிரசில் தீர்மானம் இயற்ற மறுத்ததால் அங்கிருந்து பெரியார் வெளியேறிச் சுயமரியாதை இயக்கம் கண்டார்.

பெரியாரின் இயக்கம் திராவிடர் கழகமாக உருவாக்கப் பெற்று அதன் கொள்கைகள் மக்களிடம் சென்றடைய பல இதழ்களைப் பெரியார் வெளியிட்டார். பெரியாரின் போர்ப்படைத் தளபதிகளாக அன்றிருந்தவர்களும் பல சிற்றிதழ்களை வெளிக் கொண்டு வந்தனர். அவை சுமார் 150க்கும் மேல் இருந்தன. இந்து, எக்ஸ்பிரஸ், சுதேசமித்திரன் முதலிய பார்ப்பன நாளேடுகளின் முன்னே இவற்றின் போராட்டம் எப்படி இருந்திருக்கும்? என்றாலும் இந்தச் சிற்றிதழ்கள் தமிழர்களின் கரங்களில் தவழ்ந்து மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

பெரியாரின் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, ஜஸ்டிஸ் முதலிய இதழ்களும், பேரறிஞர் அண்ணாவின் நம்நாடு, திராவிட நாடு, காஞ்சி, ஹோம் ரூல், நவயுகம் முதலிய இதழ்களும் கலைஞரின் முரசொலி, முத்தாரம், மறவன் மடல் முதலிய ஏடுகளும் இலக்குவனனின் பெரியாரிசம், பெரியாரியம் முதலிய இதழ்களும் குத்தூசி குருசாமியின் குத்தூசி, அறிவுப்பாதை, திராவிடன், திராவிடன் குரல் முதலிய ஏடுகளும் கண்ணதாசனின் கடிதம், தென்றல் முதலிய இதழ்களும் நாவலர் நெடுஞ்செழியனின் மன்றமும் மற்றும் தன்னாட்சி, தனி அரசு, தனி நாடு, தாயகம், நாத்திகம், மாலைமணி, எரிஈட்டி, சுயமரியாதை, உழைப்பாளி, உரிமை வேட்கை என அவற்றின் எண்ணிக்கை 150க்கும் மேற்பட்டவை. இவைகள் அனைத்தும் சிற்றிதழ்களே. இவற்றால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றம் மிகப் பெரியது.

இவற்றின் மூலம் பகுத்தறிவு, மத மறுப்பு, சாதி ஒழிப்பு, கல்வி, பெண் விடுதலை ஆகியவை மக்களிடம் பரப்பப்பட்டன. இவற்றில் சங்க இலக்கிய புறநானூற்று வீரமும், அகப்பாடல்களின் காதலும் அழகுற எடுத்துக்காட்டப் பெற்றன. திருக்குறள் கருத்துக்கள் எழுத்தாளப் பெற்றன. தமிழில் பெயர் சூட்டுதல் வலியுறுத்தப்பட்டது. நாடெங்கும் திராவிட இன உணர்வும், தமிழ் எழுச்சியும் காணப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா எங்கும் கொண்டாடப்பட்டது.

இன்று எத்தனை திராவிட இயக்க ஏடுகள்? அவையும் தள்ளாடுகின்றன. உணர்வும் மங்கி வருகிறது. சினிமாக்காரர் பின்னே இளைஞர்கள். தமிழ் உணர்வு பெரிதும் அருகிவிட்டது. பார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்த் தலைவர்கள் பார்ப்பன சக்திகளுக்குப் பல்லாக்குத் தூக்குகின்றனர். தமிழர்களிடம் விழிப்புணர்வு இல்லை. திராவிட இயக்க வரலாறு மறந்துபோய் விட்டது. இன உணர்வை வென்றெடுக்க இதழ்கள் தொடங்குவோம். பார்ப்பானைப் பார்த்துப் பகை மறந்து ஒன்றுபடப் பாடம் கற்போம். நன்றி! வணக்கம்.

– புதுவையில் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 22 ஆவது மாநாட்டில் ஆற்றிய உரை