ந. முத்துசாமியின் நாடகங்கள்/ நாடகச் செயல் பாடுகள் பற்றிய இக்கருத்துகள் 1996-97 ஆண்டுகளில் நான் சேகரித்த தகவல்களைக் கொண்டு 1998-99 வாக்கில் நான் எழுதி, அப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாய் அச்சாகியவை. ஆனால், இன்று வரையும் அந்த எழுத்துகள் எவரிடமும் போய்ச் சேர்ந்ததாக எனக்கு நினைவில்லை. ஆயினும் இப்போது கருணாபிரசாத் வழங்கியிருக்கும் இந்தத் தலைப் பிற்கும் அப்போதைய அந்த எழுத்திற்கும் பூர்த்தி யாகாத ஒரு தொடர்பு, இன்னமும் இருந்து கொண்டிருப்பதாக எனக்குப் படுவதால், அந்த எழுத்தின் பகுதிகள் வெட்டி ஒட்டி, சில பகுதிகள் சேர்த்து இங்குக் கட்டுரையாக்கப்பட்டிருக்கின்றன. 30-05-2015 அன்று சென்னையில் போதிவனம் வெளியிட்ட ‘ந. முத்துசாமி நாடகங்கள்’ நூல் வெளியீட்டின்போது, ந. முத்துசாமி முன்னிலையில், அவையோர்முன் இக்கட்டுரை வாசிக்கப் பட்டது. இக்கட்டுரையின் கருத்துகளோடு ந.முத்துசாமி முழுக்கவும் உடன்பட்டிருந்தார் என்றே நண்பர்கள் அப்பொழுது கருத்துக் கூறினர். தற்பொழுது 2018 அக்டோபர் 24 இல் ந. முத்துசாமி காற்றோடு கரைந்திருக்கிற நிலையிலும் இந்தக் கட்டுரை அவருடைய நாடகப் பங்களிப்பை முழுக்கவும் பேசக்கூடிய தாகவே இருக்கிறது. உங்கள் நூலகம் சார்பில் என்னைத் தொடர்பு கொண்டபோது, அவரைப் பற்றிப் புதிதாகக் கட்டுரை எழுதுகிற தூண்டுதலுக்கு என் உடல்நிலை இப்பொழுது ஒத்துழைக்காத நிலையில், அந்தக் கட்டுரையை அப்படியே, சிற்சில மாற்றங்களுடன் ‘உங்கள் நூலக’த்திற்கு வழங்குகிறேன்.

‘உயிருடன் பார்த்துக் கொண்டிருக்கிறவருக்குப் படைப்புக் கலைஞன் மேடை என்று சொல்லப்படுகிற ஒன்றில் நாடகம் என்று தான் உணர்ந்த ஒன்றை நிகழ்த்தி முற்றிலும் புதிய அனுபவத்தில் அவர்கள் பிரக்ஞையில் இதுவரையில்லாததை ஏற்படுத்தி விடுகிறதாகவே நாடகம் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்... இப்படிப்பட்ட கருத்துள்ளவர் களில் தமிழில் முதலாமவனாக நான் இருப்பதால், என் நாடகங்கள் தமிழில் முதன்மையானவைகளாகி விட்டன’ (முத்துசாமி. ந., ‘சில வார்த்தைகள்’- நாற்காலிக்காரர், 1974; பக்.108) என்று 44 ஆண்டு களுக்கு முன் ந. முத்துசாமியே தன்னைப் பற்றி/ தன் நாடகங்கள் பற்றி இப்படியாகப் பிரகடனப் படுத்தி இருக்கிறார். இவரின் முதல் நாடகம் ‘காலம் காலமாக’, நடை இலக்கிய இதழில் 1968 இல், இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வந்திருந்தது. அதையட்டிய பொழுதில்தான், அதாவது 1970 அல்லது 1971 இல், என் கல்லூரித் தமிழாசிரியர் கார்லோஸ் என்கிற தமிழவன், ‘காலம் காலமாய்’ என்னிடம் இறுகிக் கிடந்த திராவிட வார்ப்பு முறையிலிருந்து என்னை மீட்கும் போராட்டத்தை என்னிடம் நிகழ்த்திக் கொண்டிருந்தார், புதிய இலக்கியப் பத்திரிகைகளை எனக்கு அறிமுகப் படுத்தி! அப்பொழுதுதான் ’நடை’ இதழை நான் கடந்து சென்றதும் நிகழ்ந்தது. புரிந்தோ புரியாமலோ புதிய எழுத்துகளை அப்பொழுதுதான் நான் வாசிக்கத் தொடங்குகிறேன்.

na muthusamy 360இந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர் போராட்டமாய்த் தமிழகத்தை உறையச் செய்த வேளையும், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி வேர் பிடித்திருந்த வேளையும் அது! கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட சமூக விவசாயிகள் 44 பேர் கோரமாய்க் கொல்லப் பட்டு, அதிகார வர்க்க எதார்த்தம் சனநாயகத்தின் யதார்த்தமாய்ப் புரிபடத் தொடங்கியிருந்த நேரம் அது! மேற்கு வங்கத்தின் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த புரட்சிகர எழுச்சி, இந்தியா முழுக்கக் கிளை பரப்பிக் கொண்டிருந்த காலமும் அது! கோவையிலும் கோவில்பட்டியிலுமாக விவசாயிகளின் போராட்டம் வீறு கொண்டு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியிருந்த நேரமும் அது! இந்தியா அவசர நிலைக் காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண் டிருந்த அரசியலின் வேளையும் அதுதான்! ஜெயப் பிரகாஷ் நாராயணன், இளைஞர்களின் இயக்கமாகி யிருந்த காலமும் அதுதான்! அமெரிக்கா, ருஷ்யா எனும் இருபெரும் வல்லரசுகளின் பின்னால் உலகம் வரிசை கட்டிக் கொண்டிருந்த பொழுதும் வரிசையில் விரிசல்கள் விழத் தொடங்கிய பொழுதும் அதுவே தான்!

‘கசடதபற’, ‘அஃக்’, ‘நடை’, ‘ஞானரதம்’, ‘பிரக்ஞை’, ‘ரீங்காரம்’, ‘தேன்மழை’, ‘வானம்பாடி’, ‘சிகரம்’, ‘தாமரை’, ‘விழிகள்’, ‘படிகள்’, ‘பரிமாணம்’, ‘புதிய தலைமுறை’, ‘சதங்கை’, ‘சாதனா’, ‘மனிதன்’, ‘செந்தாரகை’, ‘செம்மலர்’, ‘கொல்லிப்பாவை’, ‘யாத்ரா’, ‘வைகை’, ‘நவயுகக் கலாச்சாரம்’, ‘இவெவ’, ‘கணையாழி’ என்பன போன்ற இன்னும் பல சிறு பத்திரிகைகள், அந்தக் காலத்தில் அல்லது அதைத் தொடர்ந்த அடுத்தடுத்த பத்தாண்டுக் காலங்களில் வீரியமுடன் உருவாகிச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலச் சூழல் அது! ‘படிகள்’, ‘பரிமாணம்’, ‘இலக்கிய வெளிவட்டம்’, ‘விழிகள்’, இன்னும் சில சிறு பத்திரிகை/ இலக்கியக் குழுக்கள் இணைந்து, ‘இலக்கு’ என்கிற அமைப்பை உருவாக்கியிருந்த நேரமும்கூட அது! எழுபதுகளின் இறுதி அல்லது எண்பதுகளின் தொடக்கமாயிருக்கும் அது! அதன் புறநிலை எதார்த்தம், அதற்கு முந்தைய புறநிலை எதார்த்தத்திலிருந்து கொஞ்சம் மாறு பட்டிருந்தது. இது ஒரு காலமாற்றத்தைக் கோடிட்டுக் காட்டுவதாய் இருந்தது. நேற்றைய தலைமுறை யினரிடமிருந்து இந்தப் புதிய தலைமுறையினர் எல்லா நிலைகளிலும் கருத்து நிலையில் முகம் திருப்பி நின்றிருந்தனர். வீட்டிற்குள், வெளியில் என்று, வாழ்க்கையில், இலக்கியத்தில் என்று, தலை முறை இடைவெளி தடம் பதித்திருந்த அந்நேரத்துப் புறநிலைக் காரணிகளாய் இவை உருவாகியிருந்தன. இந்தச் சூழல்களின் ஒட்டுமொத்தக் கருத்துநிலை உருவாக்கத்தில் எதிரும் புதிருமான களங்கள் தமிழ் இலக்கிய உலகில் எதிரொலித்திருந்தன. வெகுஜன ரசனைக்கு எதிரான கலாரீதியான படைப்பு முயற்சி களைத் தாங்கிவரும் சிற்றிதழ்களாக எதிரும் புதிருமாய் அவ்வவற்றின் கருத்துநிலையில் வெளித் தெரிய வந்திருந்தன. இதன் ஒரு பகுதியாக அவற்றில் நாடகங்களும் முகங்காட்டத் தொடங்கின. இவ் விதழ்களின் நவீன வெளிப்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களே- நவ கவிதை, நவ சிறுகதை என்று உருவத்தில்/உள்ளடக்கத்தில் வளைய வந்து கொண்டிருந்த சிறு வட்டத்தினரே- அடுத்த முகடாகக் கருதிக் கால் வைத்தது நாடகத்தில் தான்! இதில் ந. முத்துசாமியின் பங்கு குறிப்பிடத் தகுந்தது. 

இப்பொழுது 83 வயதை நெருங்குகிற ந. முத்துசாமியின் முதல் நாடகம் அவரின் 33 ஆவது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து இதுவரையும், அவர் நவீனத் தமிழ் நாடக உலகில் கவனத்திற்குரிய நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார். ந. முத்துசாமி என்கிற ஆளுமையை எந்தவகையிலும் கடக்காமல் எவரொருவரும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றிப் பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ‘காலம் காலமாக’, அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’ ஆகிய மூன்று நாடகங்களுமாக ‘நாற்காலிக்காரர்’ எனும் தொகுப்பு ‘க்ரியா’ மூலம் 1974 இல் வெளிவந்திருந்தது. பாரதியின் நவகவிதைபோல், இந் நாடகங்கள் தமிழ்ச் சூழலில் புதிய சொல்லாய்ப் புதிய சுவையை உணர வைத்திருந்தன. ‘காலம் காலமாக’, காலம் காலமாகத் தொடரும் தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிற நாடகம்! ந. முத்துசாமியின் ‘காலம் காலமாக’ நாடகம் பேசுகிற நேற்றைக்கும் இன்றைக்குமாய்த் தொடரும் வாழ்வுநிலை மற்றும் படைப்புநிலையில் எதிர்கொள்ளும் தலைமுறை இடைவெளியின் தாத்பரியங்கள், அன்றைக்கு ந. முத்துசாமியின் வயதொத்தவர்களால் -நவீன இலக்கியவாதிகளால்- பேசப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியேகூட என் தெருவரையுமேகூட வந்து செல்லாத நேரம்! வகுப்பறைத் தமிழாசிரியர்களும் திராவிட இயக்கச் சிந்தனைகளை மார்புடைக்கச் சொல்லிச் சென்றார் களேயழிய, இலக்கிய வகைமைகளின் அன்றைய வளர்ச்சிநிலை பற்றிய தனித்த கருத்துகள் எதுவும் அவர்களுக்கு அப்பொழுது இருந்திருந்ததாகத் தெரிய வில்லை. அன்றைய சனாதனத்திற்கு எதிரான குரல் வனப்பில் உருவாகியிருந்தது அது! ஆறாம் வகுப்பில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த முத்து வாத்தியாரின் உயரத்தையும் கட்டபொம்மன் மீசையையும் ஒட்டிக் கிடக்கும் ஜிப்பாவையும் மீறிப் புடைத்து நிற்கும் மார்பையும், அதையும் மீறிச் சிந்திச் சிதறும் அவரின் திராவிட இயக்கச் சிந்தனைகளையும் இன்னும் மறக்க முடியாதிருக்கிறது.

எம்ஜிஆர் என்கிற மேக மூட்டம், பிரபஞ்ச வெளியின் எல்லாவற்றையும் எனக்கு அப்பொழுது மறைத்திருந்தது. அது, முது கலைக்கு முகங்காட்டுகிற வரையும் நீண்டிருந்தது. ந. முத்துசாமியின் ‘காலம் காலமாக’ நாடகம் வெளிவந்தபோது, உலகத்தை அதுவரையும் நான் பார்த்திருந்த ஒருபக்கப் பார்வை, புதிய உலையில் உருமாறத் தொடங்கியிருந்த நேரம்! ஆனால் திராவிடச் சேனம் பூட்டிய என் புறச்சூழலர்களின் ஒருசாலைப் பயணத்தில் நவீன எழுத்து அவர் களுக்கு அத்துபடியாயிருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே, நான் என் இளஅறிவியல் முடிக்கும்வரையும், முதுகலையில் கால்பதிக்கும் வரையும் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில், எனக்கு முன்னே ‘பதினாறு’ கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிற, திராவிட இயக்கச் சார்பாளராய் அரும்பி வளர்ந்தபோதும், திராவிட இயக்கச் சாயல் துறந்த படைப்பாற்றல் கைவரப் பெற்றிருக்கிற, தலைமுறை இடைவெளி களைந்த மனிதரான ந. முத்துசாமி பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறதுபோலவே என்னத்தைப் பெரிதாய் எழுதிவிடப் போகிறேன் என்கிற போதாமையும் எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது.

1977 இலிலிருந்து ‘கூத்துப் பட்டறை’ என்கிற அமைப்பை நிறுவி, அதை இன்றுவரையும் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிறவர் ந. முத்துசாமி! கூத்துப் பட்டறையின் தோற்றத்திற்குக் காரணமான ‘கூத்தின் வீர்யத்தை’ திரு முத்துசாமிக்கு உணர்த்தி யவர் வெங்கட் சாமிநாதன். அதைப்பற்றி, எனக்குப் பதினாறு வயது மூத்தவரான ந. முத்துசாமி. கூறுகையில், ’தெருக்கூத்தை ஒரு கலை வடிவாக அடையாளம் கண்டுகொண்டு இ. கிருஷ்ணய்யரே எவ்வளவு தூரம் அதைப் புராதனமான தியேட்டராக அடையாளங் கண்டு கொண்டிருந்தார் என்பது, இன்றைய என் அறிவிற்கு எட்டவில்லை. சியாமளா பாலகிருஷ்ணனிடம் மட்டும் அது சிப்பியுள் உறுத்தலாக இருந்துகொண்டிருக்கிறது, பின் அதை முத்தாக எடுத்துப் பத்மா சுப்பிரமணியத்திடம் பரிசாகக் கொடுப்பதற்கு, இது சாமிநாதன் எனக்குக் கூத்தைக் கொடுத்ததுபோல்’ என்று ந. முத்துசாமியே கூறுவதினின்று, கூத்துப்பட்டறை உருவாவதற்குரியதன் முதல் கருத்துப் பரிமாற்றத் தொடர்ச்சியை உணர முடியும்.

டெல்லியிலிருந்து வெங்கட் சாமிநாதன் சொன்னதன் பேரிலேயே சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கிராமியக் கலைவிழாவில் (16-20 நவம்பர் 1975) முதன்முதலாக நடேசத் தம்பிரானின் கர்ண மோட்சம் கூத்தைப் பார்க்கிறார் ந. முத்துசாமி! 1977 மே மாதத்தில் கூத்துப்பட்டறை (Theatre Workshop என்பதுதான் அப்பொழுது அதன் ஆங்கிலச் சொல்லாகத் தரப்பட்டிருந்தது) அமைப்பின் சார்பில் அதன் செயற்பொறுப்பாளர் (Executive Secretary) வீராச்சாமி பெயரில், ‘தெருக்கூத்தின் இன்றைய வடிவில் உன்னதமான கூத்துருவம் இருந்து கொண்டிருப்பதை நாங்கள் காண்கிறோம். அந்த உருவத்தைப் பிரதானம் பெற வைத்து, கூத்தைச் சிறந்த மரபுத் தியேட்டராகக் காட்சியாக்குவதே கூத்துப்பட்டறையின் நோக்கம். இதன் வெற்றியில் நவீனத் தியேட்டரின் வெற்றியும் உள்ளடங்கி யிருக்கிறது. தெருக்கூத்து அதன் சிறப்பம்சங்களோடு முழு ஆச்சர்யமாகக் காட்சிக்கு வரும்போது நவீனத் தியேட்டரைப் பாதித்து முன்னே உந்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தெருக்கூத்தின் நுட்பமான கலை வடிவை வலுப்படுத்தி உயிர்ப்பிப்பதன் மூலம், அதன் சிறப்பம்சங்களை இழக்காமல் தனித் தன்மைத்தான குணங்களோடே மேனிலைக்குக் கொண்டுவரும் முயற்சியில் கூத்துப்பட்டறை மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது’ என்பதான ஓர் அறிக்கையுடன் நன்கொடை கேட்டு ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது.

1977 இல் புரிசையில் 15 நாட்கள் தங்கியிருந்து கூத்தைப் பற்றி அறிந்து சென்றவர் வீராச்சாமி என்று காலஞ்சென்ற கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான், நான் 1981 மே-ஜூனில் புரிசையில் தங்கியிருந்து கூத்து பயின்று கொண்டிருந்தபோது கூறியிருக்கிறார். ஆனால் என்ன காரணத்தினாலோ-ஓராண்டிற்குள்ளாக -1978 இன் தொடக்கத்திலேயே கூத்துப்பட்டறையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறார் வீராச்சாமி. 1977 ஐத் தொடர்ந்தே ‘ஒருதரத்தில் இருக்கும் நடேசத் தம்பிரான் குழுவினர் போன்றோரின் கூத்தை நாம் விரும்பும் தரத்துக்கு உயர்த்தி, நம்மைப் போன்றவர் களின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது (இங்குத் தோன்றும் பிரச்சனைகளைத் தனியே அலசிப் பார்க்கவேண்டும்) நான் நினைக்கும் உயர்ச்சியில் இவை மிக நவீனமாக வேறு எந்தத் தேசத்திலும் இருக்கும் தியேட்டர்களுக்கு ஒப்பானதாக இருக்கும்’ என்பதாகக் ‘கூத்தை அதன் குணங்கள் குறையாமல் சாஸ்திரிய தரத்திற்கு உயர்த்துவதற்கான’ கட்டுரைகளை வைகை இதழில் ந. முத்துசாமி எழுத ஆரம்பிக்கிறார். ‘பாரம்பரியத்தைக் காத்துவரும் மிகச் சிறந்த குழு’ என்று, அன்றைய சென்னை சங்கீத நாடக அகாதெமியின் தலைவர் இ. கிருஷ்ணய்யரின் கீழ், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கூத்து

பற்றிய பரப்பாய்வை மேற்கொண்டிருந்த, பரதநடன சூடாமணி பத்மா சுப்பிரமணியத்தின் அண்ணியான சியாமளா பாலகிருஷ்ணனால் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருந்த நடேசத் தம்பிரன் குழுவை ‘ஒரு தரத்தில் இருக்கும்’ என்கிறார். இந்த ‘ஒருதரம்’ என்பது என்ன என்று அவரால் விளக்கப்படாமலே போயிற்று. நடேசத் தம்பிரான் என்பவர், ’சதிர் அறிந்து கந்தசாமி கோயிலில் தேவதாசிகளுக்கு ‘நட்டுவாங்கம்’ செய்து வந்தவரான வீராச்சாமி தம்பிரான்’ வழிவந்தவர் என்று ந. முத்துசாமி, ‘அன்று பூட்டிய வண்டி’யில் பக்.43 இல் கூறியிருப் பதைக் கவனத்தில் கொண்டால், சதிருக்கு ‘நட்டு வாங்கம்’ செய்து கொண்டிருந்தவரின் வழியில் வந்த கூத்துக் குழு இது என்பதால், இதை ‘ஒரு தரத்தில் இருக்கும்’ என்கிறாரா என்கிற கேள்வி ஒன்று இங்கு எழுகிறது. கூடவும் ‘நாம் விரும்பும் தரத்திற்கு உயர்த்தி’ என்பதில் ‘நாம் உயர்த்தும் தரம்’ எது என்பதையும் ‘உயர்த்த’ என்பது எப்படி என்பதையும் அவர் விளக்க முயற்சிக்கவில்லை. ஒருவேளை இதுவும், ‘சியாமளா பாலகிருஷ்ண’னின் கூத்துப் பரப்பாய்வில் ‘சாஸ்திரியத்தைப் பின்பற்றும் தரமான குழு’ என்று அவரால் அடையாளங் காணப்பெற்று, ‘சிப்பியுள் உறுத்தலாக இருந்த’ நடேசத் தம்பிரான் கூத்துக் குழுவை, முத்தாக எடுத்து, ‘நாம்(?) விரும்பும் தரத்திற்கு உயர்த்தி’, பத்மா சுப்பிரமணியத்திடம் அதைப் பரிசாகக் கொடுக்கிற பணியாயிருக்குமோ என்பதையும் கொண்டுகூட்டியே புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

இன்னொன்று, ‘கூத்து, முழு ஆச்சரியமாகக் காட்சிக்கு வரும்போது நவீனத் தியேட்டரைப் பாதித்து முன்னே உந்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் (1977 இல் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்) என்பது கூத்துப்பட்டறையின் தொடக்கக் கருத்துருவாய் இருந்ததால், 1977 செப்.-அக். வைகை-2 இதழில் ‘தெருக்கூத்துக்கு உதவி தேவை’ என்று கேட்டுக் கட்டுரை ஒன்றை எழுதுகிறார் ந. முத்துசாமி! அதைத் தொடர்ந்து கூத்து தொடர்பான பல்வேறு கட்டுரைகள் சிறு பத்திரிகைகளில் அவரால் எழுதப்படுகின்றன. 1978 பிப்ரவரியில், ‘கொல்லிப்பாவையில், ‘உண்மையில் இதுதான் தமிழ் அரங்கக்கலையாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இதற்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டு போவது என்னுடைய உடனடி வேலையில்லை. என்னுடைய முழு அக்கறையும் கூத்தின் வடிவம் சம்பந்தப்பட்டது’ என்று எழுதுவதன் மூலம், ‘புராதனத் தமிழ் தியேட்டர்’ என்கிற முடிவுக்குக் கூத்தைக் கொண்டு வந்திருப்பதும் கூத்தின் வடிவம் சம்பந்தமானது மட்டுமே தன் பிரச்சினை என்பதும் சொல்லப்படுகிறது. இந்த இடங்கள்தாம், முத்துசாமி யிடமிருந்து வீராச்சாமி முகம் திருப்பிக் கொள்ளக் காரணமாக இருந்திருக்குமோ என்றும் அய்யப்பட வேண்டியதிருக்கிறது. அழகின் உபாசகனாக அவர் இருந்து எடுத்திருக்கிற முடிவு இது என்பது தெரிகிறது. ஆனால், தமிழ் தியேட்டராகக் கூத்தை நிறுவுகிற எந்த வேலைத் திட்டமும் அப்பொழுது அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் அது எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அதற்குரிய சாட்சியங்களைத் தேடிக் கொண்டுபோகும் வேலைத் திட்டமானது, ந. முத்துசாமி மூலம் தமிழ்ச் சூழலில் பிறரிடம் உருவாகியிருந்தது என்பது இதன் புறநடையாயிருக்கிறது!

கூத்துப்பட்டறையின் முதல் நாடக நிகழ்த்தல் என்பது, 1977 இல் காந்திகிராமத்தில் ஜூன் 20-26 வரை ஒரு வாரம் நிகழ்ந்த முதல் நவீன நாடகப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றிருந்த ஓவியர் கிருஷ்ண மூர்த்தியின் நெறியாளுகையில் 10-04-1980 இல் சென்னை லலித் கலா அகாடெமியின் திறந்த வெளியில் நிகழ்ந்த ‘சுவரொட்டிகள்’ நாடகம் ஆகும். கூத்துக் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணப்ப. சம்பந்தன் அதில் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். அந் நாடகத்திற்கு வழங்கிய துண்டுப் பிரசுரத்திலும் ‘எளிமையும் எழிலும் கொண்ட தெருக்கூத்தைத் தமிழர்களின் தியேட்டராகக் கருதி, அதைப் பற்றிய பரவலான பிரக்ஞையை உருவாக்குவதும், கூத்தின் அம்சங்களைக் கொண்டு நவீன நாடகங்களை உருவாக்குவதும் கூத்துப்பட்டறையின் பல நோக்கங் களில் முக்கியமானவை’ என்று குறிப்பிட்டிருந்தது. ‘கூத்தின் அம்சங்களைக் கொண்டு நவீன நாடக’ உருவாக்கத்தில் கூத்துப்பட்டறை ஈடுபட்டிருந்தது என்றுதான் இதுவரையும் என்னால் புரிந்து கொள்ளப் பட்டிருந்தது.

ஆயின் ந. முத்துசாமியின் இந்தக் குரல் (தமிழ்த் தியேட்டரான கூத்தின் அம்சங்களைக் கொண்டு நவீன நாடக உருவாக்கம்),1993 இல் ‘இந்தியன் தியேட்டர்’ எனும் கருத்துருவை நோக்கி விரிவடைவது ஒரு புதுமை! ‘கூத்து, மற்ற படைப்புத் துறைகளுக்குத் தந்திருக்கும் உத்வேகம் இது. முத்துசாமியின் ‘சுவரொட்டிகள்’ இந்த உத்வேகத்தின் மற்றொரு வெளிப்பாடு. கூத்தின் அமைப்பும், அம்சங்களும் இந்நாடகத்தை உருவாக்கப் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. உண்மையில் இந்நாடகம் மேடையில் நடைபெறவில்லை. சமூகத்தில்தான் நடைபெறுகிறது. இதையே குறிப்பாக, ஆரம்பத்தில் ‘தெருக்கூத்து’ என்று முத்துசாமி சுட்டிக் காட்டுகிறார்’ என்று 1980 இல் அந்நாடகத் துண்டுப் பிரசுரத்தில் குறித்திருக்கும் ந. முத்துசாமி, 1993 இல், ‘கூத்தாலே பாதிக்கப்பட்டு நான் ‘சுவரொட்டிகள்’ நாடகத்தை எழுதவில்லை. இந்தியன் தியேட்டரால் பாதிக்கப் பட்டுத் தான் சுவரொட்டிகளை எழுதினேன். இந்த வடிவத்திற்கு நான் வருவதற்குப் புதுக்கவிதையும் மாடர்ன் டான்ஸ§ம்தான் பாதிப்பு... கூத்தை இதில் நான் அறிமுகப்படுத்தவில்லை. சூத்திரதாரியைத் தான் ஒரு கான்செப்ட் லெவலில் அறிமுகப்படுத்தினேன்’ என்று வெளி-17 இல் கூறுவது கவனிக்கத்தக்கது. ‘தெருக்கூத்தின் கட்டியக்காரன் சமஸ்கிருத நாடகத்தின் சூத்திரதாரியிலிருந்து வேறுபட்டவன்... இவன் விதூஷகனும் சூத்திரதாரியும் இணைந்து உண்டாக்கப்பட்டவன்... நாடகத்தின் உள்ளும் இருக்கிறான். புறமும் இருக்கிறான். இரு காலங் களிலும் இருக்கிறான்Õ என்று 1978 இல் கூறிய

ந.முத்துசாமி, அதைப் பற்றி விஸ்தாரமாகத் ‘திரையும் கட்டியக்காரனும்’ என்று 1979 பிப்ரவரியில் வைகை-16 இல் எழுதியிருந்த ந. முத்துசாமி, 1979 இல் கட்டியக்காரன் என்பதாகவே நாடகம் எழுதியிருக்கிற ந. முத்துசாமி, 1993 இல் கட்டியக்காரன் என்ற சொல்லையே தவிர்த்திருப்பது கவனத்தில் கொள்ளத் தகும் மாற்றமாகும். இதற்குக் காரணம், 1984க்குப் பிறகு, மைய சங்கீத நாடக அகாதெமியின் உதவியில் இந்தியாவின் பல்வேறு கலைகளைப் பார்த்து விவாதிக்கும் வாய்ப்பு ந. முத்துசாமிக்குக் கிடைத்த தனால் இருக்கலாம். அல்லது சொல்லை மீறி உடல் மொழியில் உருவான ‘சுவரொட்டிகள்’ நாடகத்தின் பாதிப்பாயிருக்கலாம். அல்லது இவை மீறிய இன்னொரு காரணமாகக்கூட இருக்கலாம்.

நாடகம் என்பது வாழ்வியல் முரணைப் படிமப் படுத்தும் மொழியின் மௌன விரிவிற்குள்தான் புதைந்து கிடக்கிறது. ந. முத்துசாமியின் மொழி, மௌனக் காட்சிப் படிமமாய் விரிவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பது! ‘ஜெயச்சந்திரன் என்கிற பரதநாட்டியம், கதகளி அறிந்த ஒருவரையும் நாடகத்தை அறிந்த சம்பந்தன் என்பாரையும் கொண்டு, வார்த்தைகள் இல்லாமல் முப்பது நிமிடங் களுக்கு ராஜேந்திரன் தயாரித்திருந்த சுவரொட்டிகள் என்ற படைப்பை இங்குக் குறிப்பிட வேண்டும்’ என்கிற ந. முத்துசாமியின் கருத்தையும் (வெளி13, செப்-அக்.1992; பக்.39-40), ‘சுவரொட்டிகள் நாடகத்தை இரண்டு தயாரிப்புகள் நான் பார்த்தேன்- ஒன்றை ஆறுமுகம் இயக்கியிருந்தார்- இன்னொன்றை ராஜேந்திரன் தயாரித்திருந்தார். ராஜேந்திரனுடையதில் வார்த்தைகளே இல்லை. வசனங்கள் தவிர்க்கப் பட்டிருந்தன. அந்தத் தயாரிப்பு சக்தி வாய்ந்ததா யிருந்தது. ஆனால் முத்துசாமியின் ஒரு சொல்லைக் கூட அதில் கேட்க முடியவில்லை. வார்த்தைகள் இல்லாமலிருந்தாலும் முத்துசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு செய்த முயற்சியாக இருந்தது’ (சாமிநாதன். வெ., வெளி 17, மே-ஜூன் 1993; பக். 14) என்ற வெங்கட் சாமிநாதனின் கருத்தையும் கவனத்தில் கொண்டால், மௌன விரிவிற்கான நாடகச் சாத்தியங்களை அவரின் மொழி கொண்டிருக்கிறது என்கிற கருத்து முக்கியமாகிற அதேவேளை, நாடக ஆசிரியரின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்குகிற ஒன்றாகவும் அது விளங்குகிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய திருக்கிறது. இதன் காரணமாகவோ அல்லது வேறு எதன் காரணமாகவோ, 01-11-1978 முதல் 10-01-1979 வரை 70 நாட்கள் நடத்திய இரண்டாவது நாடகப் பயிற்சிப் பட்டறையின் வெளிப்பாடான ‘பிணம் தின்னும் சாத்திரங்கள்’ நாடகத்தைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை வெங்கட்சாமிநாதன் மே 1979 ‘யாத்ரா’ இதழில் கூறும்போது, ‘குதிரை லாயத்தைச் சுத்தம் செய்யக் கிளம்பியவர்களின் கூத்துப் பட்டறையைவிட இது முக்கியத்துவம் மிகுந்த முயற்சி. குதிரை லாயம் சுத்தம் செய்யப் போகிறோம் என்று அகம்பாவப் பிரகடனம் விட்டவர்கள், குதிரை லாய லத்தியில் தடுக்கி விழுந்து அதிலேயே புதைந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதன் பிறகு ஏதும் சத்தம் எழக் காணோம்’ என்று கூறியிருப்பதன் எதிர் வைராக்கிய நிரூபணமாகத்தான், 1980 இல் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் நெறியாளுகையில் கூத்துப் பட்டறை ‘சுவரொட்டிகள்’ நாடகத்தை உருவாக்கி யிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆயின் ந. முத்துசாமியிடமிருந்துதான் தமிழின் முதல் நாடகம் உருவாகியிருக்கிறது என்கிற அதீதச் சொற்பிரயோகங்களும் நவீனத் தமிழ்ச் சூழலில் வந்து போயிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. ‘இன்றைய நமது லஷிய எல்லைகள் ந. முத்துசாமியின் நாடகங்கள்தாம். ஆனால் சாத்திய முதல் காலடி வைப்பு என ராஜ சேகரன், இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் எனக் கொள்ள வேண்டும்... பார்த்தசாரதியின் மழை போன்ற சம்பிரதாய ரூபங்கொண்ட (ஆனால் தமிழ் நாடக உலகிற்குப் புதிதான) நாடகங்கள் நிறைய எழுதப்பட வேண்டும்; வெளிவர வேண்டும்’ (வெங்கட் சாமிநாதன், ‘வயிறு’-முன்னுரை, 1980; பக்.11,5) என்று 38 ஆண்டுகளுக்கு முன் எழுதுகிற வெங்கட் சாமிநாதனே, 25 ஆண்டுகளுக்கு முன் ‘முத்துசாமியின் நாடகங்கள் வெறும் கூடுகளே... முத்துசாமியின் நாடகங்களில் முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை’ என்று 1993 இல் வெளியாகி, (17 ஆவது இதழில் பக். 15 இல்) விசனப்படுகிறார். சற்றேறக்குறைய 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் சார்பில் நடை பெற்ற, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒரு மாதகால நாடகப் பயிற்சிப் பட்டறையின்போது, நாடக ஆய்வு/செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த மூத்த அறிஞர் கள் பலர்- பேராசிரியர் சே. இராமானுஜம், கலைஞர் எஸ். பி. ஸ்ரீநிவாசன், முனைவர் செ. இரவீந்திரன், முனைவர் ஏ. என். பெருமாள், ஓவியர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் முனைவர்கள் இராஜூ, ஆறுமுகம் போன்றோர்- கலந்து கொள்ள, ஒரு விவாத அரங்கம் நிகழ்ந்தது. அதன் மையப் பொருளாகத் தமிழில் நாடகம் உண்டா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. ந. முத்துசாமிக்குப் பிறகுதான் தமிழில் நாடகமே தோன்றியது எனும் கருத்தை ஒரு சாரார் முன் வைத்தனர். மொத்த அரங்கமும் இரண்டு குழுக் களாக வரிந்து கட்டிக் கொண்டு பிரிந்து நின்றது.

இறுதியில் இரண்டு குழுக்களும் ஒருமித்த கருத்திற்கு வந்ததாக நினைவில்லை. விவாதங்கள் திசைமாறி, கருத்தின் மீது ஆதாரங்களை நிறுவுவதன் தேவையை மறுத்து, வெற்றுச் சொற்பிரயோகங்களில் தஞ்சம் அடைந்து கொண்டதே அதற்குக் காரணம். ‘தமிழில் கலைநோக்கம் கொண்ட ஒரு படைப்புக் கலைஞரால் நாடகம் கையாளப்படுவது முத்துசாமியிடம் இருந்து தான் தொடங்குகிறது’ (ரெங்கராஜன், வெளி-3, ஜன-பிப்.1991; பக். 6) என்பதாய் வெளி ரெங்கராஜனால் 27 ஆண்டுகளுக்கு முன், 1991 இல் ந. முத்துசாமி விதந்தோதப்படுகிறார். ஆனால் இதற்கெல்லாம் முன்பே, 02-09-1961 இல் ஏறக்குறைய 57 ஆண்டு களுக்கு முன்பே ‘தமிழில் வரவேண்டிய நூறு நல்ல நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என் ‘ஊதாரி’ என்பதில் எனக்குச் சந்தேகம் சிறிதுமில்லை’ என்று கலைநோக்கம் கொண்ட ஒரு படைப்புக் கலைஞரான க.நா. சுப்பிரமணியம் தன் ஊதாரி நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆயினும் நவீன நாடகக்காரர்கள் யாராவது இதைப் பற்றி எங்காவது பேசியிருப் பார்களா என்பது ஐயமே! நாடக ஆசிரியர்கள் தங்கள் நாடக இருத்தல் பற்றி அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதற்கான அத்தாட்சிகளே இவை! ஆயினும் காலக் கரைசலில் புதியதாய் ஒவ்வொன்றும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே யிருக்கின்றன. அவற்றில், புறச் சூழல்களுக்கும் அகச் சூழல்களுக்கும் பெரிய பங்கிருக்கிறது. எதுவொன்றும் தனித்த நிகழ்வுகளில்லை; எதுவும் தொடக்கமு மில்லை; எதுவும் முடிவுமில்லை; எல்லாமே ஒவ்வொன்றின் தொடர்ச்சிதான்! ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் கால நீட்சி என்பதாய் உணரப்பட வேண்டும். அதுதான் இயங்கியல்! காலத்தின் கருத்தை, நேற்றின் தோள்களில் நிமிர்ந்து நின்று, தனக்குக் கைவந்த படைப்பு முயற்சியாக, சமூகத்திற்கு வெளிப்படுத்தும் கருவிகளாகவே படைப்பாளிகள் தொடர்ந்து விளங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் நாடகம் உண்டா என்கிற கேள்வியும், ந. முத்துசாமியிடமிருந்துதான் தமிழ் நாடகம் தொடங்குகிறது என்கிற பதிலும் அபத்தம் நிறைந்தவை.

na muthusamy 340எந்தவொரு வளர்ச்சியடைந்த மொழியையும் போல், தமிழும் தனக்கான நாடகங்களைக் கொண் டிருந்தது. இயல், இசை போல நாடகத்தையும் தமிழுடன் இணைத்து முத்தமிழாக்கிப் பரவசப் பட்டது நம் மரபு! கூத்தர், பொருநர், பாணர், விறலி, கோடியர், வயிரியர், கண்ணுளர் எனும் கலைச் சமூகத்தவர்கள் சங்கம் தொடங்கி வாழ்ந்திருந்து, இன்று காணாமலே போயிருக்கிற பூமி இது! செயிற்றியம், குணநூல், சயந்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், சுத்தானந்தப் பிரகாசம் போன்ற நாடகத் தமிழ் இலக்கண நூல்கள் வெறும் பெயராலும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்படும் சில மேற் கோள் நூற்பாக்களாலும் மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டு அவற்றின் இருத்தல் பற்றி எந்தத் தரவுகளும் இல்லாதிருக்கிற தமிழ் நிலம் இது! நிகழ்த்தலுக்கான பெருமரபு நூல்களும் கோட்பாட்டு உருவாக்க நூல்களும் இருந்ததற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கையில், இதற்குத் துணைசெய்யும் நாடகப் பிரதிகளும் செழுமையுடன் இருந்திருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு நாமாக வந்து சேர வேண்டியதிருக்கிறது. இந்த வழியில் வந்தால், தமிழில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு மக்களால் பேணப்பட்டு மிருந்திருக்கின்றன என்கிற உண்மையையே அடைய முடியும்.

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை சுட்டும் ‘ஆயர்பாடியில் எருமன்றத்து மாய வனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல்நெடுங்கண் பிஞ்சையோடாடிய குரவை யாடுதும் யாமென்றாள்’ எனும் பகுதியில் சுட்டப் படும் ‘வால சரிதை நாடகம்’ ஒரு முக்கியப் பதிவு! அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இந்தப் பிள்ளைச் சரித நாடகம், மாயவன் தொழுனையாற்றிற் பிள்ளைப் பருவத்துப் பலதேவரோடும் பின்னை யோடு மாடின குரவைக் கூத்தாகும். இது, கிருஷ்ணனை மையப் பாத்திரமாகக் கொண்டு பாஸ மகாகவி படைத்த பாலசரிதை நாடகத்தின் தமிழாகவும் இருக்கக்கூடும். அல்லது இங்குக் குரவையாய் ஆயர் மக்களிடம் வழக்கிலிருந்த வாலசரிதை நாடகங்கள் எனும் ‘கண்ணன் எனும் கிருஷ்ணனின்’ பிள்ளைப் பருவத்து யமுனையாற்று லீலைகள் தொடர்பானதும் இந்தியப் பொதுமரபாய் வலம்வரும் கதையாடலானது மான ஒன்றைப் பாஸமகாகவி ‘பாலசரிதை’ நாடக மாக ஆக்கியிருக்கவும்கூடும். நாட்டியசாஸ்திரத்திற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராய்க் கொண்டாடப் படும் பாஸமகாகவியின் நாடகங்கள், திருவனந்த புரத்தைச் சேர்ந்த டி. கணபதி சாஸ்திரியின் 1910-1912 காலத்திய கண்டுபிடிப்பு என்பதையும் நாம் மனங் கொள்ள வேண்டும்.

நாடகப் படைப்பு முயற்சியில் தங்கள் அடை யாளங்களைப் பதித்திராவிட்டாலும் நாடகப் பிரதி உருவாக்க முயற்சியில் தங்களை ஈடுபடுத்தியிருந்த தமிழின் கீர்த்திமிக்க கவிஞர்கள் மகாகவி பாரதி (ஜகத்சித்திரம்,விடுதலை-இவை நாடகங்களாக எழுதப்பட்டிருக்குமா என்பதே ஐயம்), புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குமரகுருபரர், வீரத்தாய், இரணியன் அல்லது இணையற்ற வீரன், நல்லமுத்து), சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள்/படைப்புக் கலைஞர்கள் புதுமைப்பித்தன் (சார் நிச்சயமா நாளைக்கு, வாக்கும் வக்கும், பக்த குசேலா), பி.எஸ். ராமையா (பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம், தேரோட்டி மகன், பாஞ்சாலி சபதம்), கு.ப.ரா. (ஆத்ம சிந்தனை), கு. அழகிரிசாமி (வஞ்சமகள்), சி.சு. செல்லப்பா (முறைப்பெண்), க.நா.சு. (ஊதாரி), அ. ஸ்ரீநிவாச ராகவன் (நிலவு), தி. ஜானகிராமன் (வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம்) போன்றோரைத் தவிர்த்துவிட்டு எப்படி இந்தத் தரையில் நாடக முழத்தை நீட்டிப் போடுவது? இவற்றில், 84 ஆண்டு களுக்கு முன், வெள்ளையர் ஆட்சியில் 09-09-1934 இல் சென்னை வி.பி.ஹாலில்/ 20-03-1935 இல் சென்னை ராயல் தியேட்டரில்/ 04-07-1936 இல் வாணியம்பாடிக்கு அருகிலுள்ள அம்பலூரில் என்று நிகழ்த்தப்பட்ட ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம், வெள்ளையரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற ‘சுதந்திர’ இந்தியாவில் 1876 ஆம் ஆண்டு ‘நாடகத் தடைச் சட்ட’த்தின்படி, 1948 இல் தடை செய்யப்படுகிறது. அதை மீறி நாடகம் நடத்தி, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை பெற்று மீண்ட தோழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன், 22-12-1948 இல் வேலூரிலும் 23-12-1948 இல் திருவத்தி புரத்திலும் பெரியார் முன்னிலையிலும் 25-12-1948 இல் காஞ்சிபுரத்தில் அண்ணா முன்னிலையிலும் வரவேற்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காகச் செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு 200 க்கும் மேற்பட்ட திராவிட இயக்கத் தோழர்கள், இயக்கக் கொடி பிடித்து நடைப்பயணம் மேற்கொண்டிருந்தது என்பது புனைவே இல்லாத உண்மை! நாடக எழுத்தை அரசு எப்படிப் பார்த்தது, அதைத் திராவிட இயக்கம் எப்படி அரசியலாக்கியது என்பதன் பதிவு இது! அந்தச் சமூகத்தின் உயிரோட்டமாய் நாடகமும் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இவை! இவை, தமிழ் நாடகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தமுள்ள திசை நோக்கித் திருப்பிவிட மேற் கொள்ளப் பெற்ற முயற்சிகள்!

1957 இலேயே நாடகக் கல்வி நிலையம் தொடங்கி, அதன்வழி நாடகம் எழுத, தயாரிக்க, காட்சி அமைக்க எனும் நான்கு பிரிவுகளில் பயிற்சி யளித்து, 1959 இல் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’, ‘குயில்பாட்’டை நாடகமாக நிகழ்த்திய பாரதிக் கலைஞர் சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகப் பிரதிகளின் பங்கை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வரலாற்றை மறந்துவிட்டு, எதுவொன்றையும் நமக்குத் தெரிந்த புதிதாக மட்டுமே பார்த்துவிட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. நேற்றின் தொடர்ச்சியே இன்று! பட்டியலிட்டால் இவையும் பெருகும். இந்த வழியில்தான் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரின் பிரதிகளையும் இன்னும் பலரையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நாடகப் பிரதிகள், நிகழ்வுகளின் வெளிச்சத்தில் நேற்றைய நாடகப் பிரதிகள், நிகழ்வுகள் சக்தி இழந்தவையாகத் தோன்றக்கூடும். ஆயின் என் அப்பாவையும் அம்மா வையும் தாத்தாவையும் பாட்டியையும் மகிழச் செய்தவை, அவர்களின் மனத்திற்கு வலிமை யூட்டியவை அந்த நாடகங்கள் எனும்போது, அவற்றின் கால நியாயத்துடன் அவற்றின் இருத்தலை நேர்மையுடன் ஒப்புக் கொள்வதும், ஒப்புக் கொண்டு அவற்றை மறுதலிப்பதும்தான் முறையாயிருக்கும்.

‘முந்தைய நாடகப் பிரதிகளில் கடவுளர்கள் கதாநாயகர்களாகயிருந்தனர். அரசர்கள் கதாபாத்திரங் களாயிருந்தனர். மனிதர்களோ தாங்கள் புறநிலையில் பார்த்த எலும்பும் சதையுமான மனிதர்களாக மட்டுமே இருந்தனர். இதற்கு எதிராக, கடவுளர்கள் மீதும், சகமனிதர்கள் மீதும், தன்னின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கின்ற சமூகத்தில் தனக்கான முகங்களை இழந்து தனக்கான குறியீட்டு அடை யாளத்தைத் தேடும் முயற்சியில் தோய்ந்து போயிருக்கிற- அகமன உளைச்சல்களில் சிதைந்து, அனைத்தையும் சிதைத்துச் சிதைத்தே பார்த்துப் பழகியிருக்கிற- தங்கள் படைப்புகளின் மூலம் தங்கள் இருப்புகளை நியாயப்படுத்துகிற எழுத்துகள் நவீன மனநிலையின் வெளிப்பாடாய் எழுந்த நவீன எழுத்தாகும். இது முதலாளித்துவத்தின் உச்சம் தந்திருக்கும் பரிசு. அதனாலேயே புற உலகமும், வாழ்க்கையும், உணர்வுபூர்வமான அறிவும் நம்பத்தக்கவையாக இல்லாது மாறிய நிலையில், கலைஞன் தன் மனக் குகைக்குள்ளேயே அதிகம் பயணம் செய்கின்றான். ... இதற்கான வெளிப்பாடுகளாகப் படிமங்களும் குறியீடுகளும் அமைகின்றன. புறவுலகம் சார்பான வடிவங்களையே கண்டு கண்டு அனுபவித்தவர் களுக்கு இவ்வடிவங்கள் தம் உண்மையை வெளிப் படுத்துவது இல்லை.’ இவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், இவை கலைகளே அல்ல என்று பழிதூற்றவே செய்வர்’ (ஞானி, மார்க்ஸியமும் தமிழ் இலக்கியமும், 1988; பக்.247) என்கிற ஞானியின் கருத்தைப் போலவே, பழையவற்றையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், அவையும் கலைகளே அல்ல என்று பழிதூற்றவும் செய்வது இங்கு நடக்கிறது.

கால மாற்றத்திற்கேற்ப நாடகப் பிரதிகளின் அமைப்புகளில், நாடக நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கதைக்குள் முரணை மையப்படுத்தி உருவான நாடகப் பிரதிகள், மன முரண்களை மையப்படுத்தி உருவாவது நடக்கிறது. இது கால மாற்றம். இதற்காக முந்தியவற்றை முற்றிலுமாக நிராகரித்து விடுவது தேவையற்றது. நேற்றைய நாடகப் பிரதிகளைக் குறுக்கியும் விரித்தும் இன்றைய நாடக நிகழ்வின் அறிவார்ந்த வெளிச்சத்தில் புதிய நிகழ்வாக இன்றைய நெறியாளுநன் செய்து விடவும் வாய்ப்புண்டு. ஆனாலும், இன்றைய வாழ் வியலின் வேகத்திற்கு ஒத்துவராத நாடகப் பிரதிகள், பேசாமல் மௌனம் சாதிக்கத் தொடங்கிவிடும். வீர்யம் உள்ள நாடகப் பிரதிகள் மட்டுமே- இன்றைய வாழ்வியலுக்கு வியாக்யானிக்கும் தகுதி கொண்டவை மட்டுமே- இன்றும் நிகழ்த்தத் தகுதி கொண்டவையா யிருக்கும். பழைய நாடகங்கள் பல, இன்றைய நவீன நாடக நெறியாளுநர்கள் கையில் புதுப் பொலிவுடன் மிளிரும் சக்தியுள்ளவையாக, நிகழ்த்தும் காலத்திற்கான கருத்தாகி வெளிப்படுகிறதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

என்னுடைய வயதில் கால் நூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகுதான், 41 ஆண்டுகளுக்கு முன், 1977 இல் காந்தி கிராம நாடகப் பயிலரங்கில் ந. முத்துசாமியின் நாடகமான ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தில் நான் நடிக்கயிருந்த சிறுவாய்ப்பும் திசை தவறி, வெளியே யிருந்து நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளன் வாய்ப்பு மட்டுமே எனக்கு வாய்த்தது. ஆயின் ஜி. சங்கரபிள்ளையின் ‘கங்கையின் மைந்தனி’ல் திருதராஷ்ட்ரனாக நடிக்கும் வாய்ப்பு, திசை மாறி என்னிடம் வந்து சேர்ந்திருந்தது. ஓவியர் கிருஷ்ண மூர்த்தி, நடிப்புப் பதற்றத்திற்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த காரணத்தால், கர்ணனாக நடிக்க வேண்டிய அவருக்குப் பதில், இறுதி நேரத்தில் பேரா. சே. இராமானுஜம் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டியதிருந்ததால், அது ‘நாடக வாசிப்பு’ என்பதாகவே நிகழ்த்தப்பட்டது. அதில் எனக்கு நல்ல பெயரும்கூட! இருந்தும் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தின் நையாண்டி எனக்குள் இளந்தென்றலாய்ப் பரவசம் தந்திருந்தது. இப்பொழுதும் பார்ப்பவருக்கு இளைப்பாறுதல் தரக்கூடியதாயிருக்கும் ‘நாற்காலிக்காரர்’ நாடகம்! 1978 பிப்ரவரி 9 இல் நிஜநாடக இயக்க முகத்துடன் நாடகத்தில் நான் ‘அ’, ‘ஆ’... போடத் தொடங்கிய பொழுது, நான் எழுதியிருந்த ‘யான’ நாடகம் ‘விழிகள்’ இதழில் வெளியான பிறகு, அது பரவலான ஒரு அங்கீகாரத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்தபோது, ‘நாடகக்காரன்’ என்கிற முக விலாசத்துடன் சென்னை வருகிற போதெல்லாம் ஏதாவதொரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு, முத்துசாமியை அவ்வப் போது வாலாஜா சாலையில் அப்போதிருந்த பாரகன் தியேட்டருக்குப் பக்கத்தில் பழைமையும் பங்களா மிடுக்கும் கொண்டிருந்த ஒரு வீட்டின் மூன்றாம் மாடியில் அவர் குடியிருந்தபோது, அங்கு வைத்துச் சந்தித்திருக்கிறேன். அந்த நேரத்தில்தான், 1980 இல் ‘பரிவர்த்தனா’ என்கிற இலக்கிய அமைப்பு நடத்திய நாடகக் கருத்தரங்கில் அவருடன் நானும் ‘வீதி நாடக அனுபவங்கள்’ பற்றிக் கட்டுரை வாசித்திருந்தேன்.

கூத்தைப் பற்றி அரங்கில் அவர் நிதானமாகவும் அழுத்தமாகவும் உரை நிகழ்த்தியதை நேரில் அப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அக்கறையும் பொறுப்பும் கோபமும் அவர் பேச்சில் கனிந்திருந்தன. மகஇக தோழரான வீராச்சாமி கூத்தின் - நாடகத்தின் அரசியல் பற்றி அங்குக் கட்டுரை வாசித்தார். அரசியலற்ற எதுவும் கதைக்குத வாது என்பது அவர் கட்டுரையின் கருத்து. அக்கட்டுரை அப்பொழுது பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருந்தது. விவாதத்தின் முடிவில் ‘என் கருத்து தப்புன்னு தெரிஞ்சா சைக்கிளில் திரும்பிப் போகும்போதே இந்தக் கட்டுரையைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்’ என்று சொன்ன ந. முத்துசாமியின் கோபம் எனக்குப் பிடித்திருந்தது. வீராச்சாமியின் பல கருத்துகளுடன் பொருந்திப் போகிறவன் நான் என்று தெரிந்த பிறகும் அவரும் அவர் வீட்டிலிருந்த அத்தனைப் பேரும் எந்தப் பேதமுமின்றி என்னுடன் அன்போடே இருந்தனர். ஸ்கிரீன் அச்சு மூலம் சுவரொட்டிகள் தயாரிக்கிற சூட்சுமங்களைத் தெரிந்து கொள்ள நடேஷைப் பலமுறை அந்த வீட்டில் வைத்துச் சந்தித்திருந்ததும் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. ஆனால் என் வாய்ப்புக் குறுக்கத்தால் அது அரை குறையாகவே எனக்குள் பதிந்து போனது. அதே போல் ந. முத்துசாமி கேட்டு நான் செய்ய முடியாமல் போனதும் ஒன்றுண்டு. கூத்துப்பட்டறைக்கு வீதி நாடக பாணியில் ஒரு நாடகத்தைப் பண்ணித்தரச் சொல்லி அவர் என்னைக் கேட்டும் என்னால் அதற்கு நேரம் ஒதுக்க முடியாது போயிற்று. இப்பொழுது யோசித்துப் பார்க்கையில், நான் நேரம் ஒதுக்க முடியாமல் விலகியே போனதற்குக் காரணம், கூத்துப்பட்டறை அப்பொழுது அமெரிக்காவின் ஃபோர்டு ஃபௌண்டேஷன் நிதி உதவியில் இயங்கிக் கொண்டிருந்ததுகூட காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இருக்கட்டும்!

ஆனால், தமிழகச் சூழலில் ஒரு நவீன நாடகக் குழு, சகோதர நாடகக் குழுக்களைத் தன் பத்தாவது, பன்னிரண்டாவது, பதினான்காவது ஆண்டு நிறைவு களில் நடத்திய நவீன நாடகக் கலைவிழாக்களுக்கு அழைத்து, அவ்விழாக்களைக் குதூகலமாக்கியது என்பது நிஜநாடக இயக்கத்தின் பங்களிப்பில் மிக முக்கியமானது. 1988 (மார்ச் 11-13), 1990 (மார்ச் 9-11), 1992 (மே 22-24) ஆகிய ஆண்டுகளில் நவீன நாடகக் குழுக்களை மதுரைக்கு வருவித்து, அவர்களைக் கொண்டு மூன்று நாட்கள் நவீன நாடக விழாக்கள் நடத்தியது என்பது, முதன்முறையாக மதுரை நிஜநாடக இயக்கத்தின் முயற்சியில், அப்போதைய வருமான வரித்துறை உதவி ஆணையர் திரு செல்வராஜ் அவர்களின் உதவியினால்தான்! 1988 இல் மார்ச் 12 இல் மாலை 6 மணிக்கு மதுரை சீத்தாராம் குப்தா அரங்கில் கூத்துப்பட்டறையின் நாடகம், மகேந்திர விக்கிரமவர்ம பல்லவனின் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்பது ந. முத்துசாமியின் தமிழாக்கத்தில் ‘முற்றுகை’ எனும் பெயரில் வ. ஆறுமுகம் நெறியாளுகையில் நிகழ்ந்தது. ஜெ. மணி, பிரசாத், வ. ஆறுமுகம், கலைராணி, ப்ரீதம், அர்ச்சனா, வேதாசலம் நாயுடு, திருமதி பாசு, கண்ணப்ப. காசி, பன்னீர் செல்வம், பசுபதி, ஜெயகுமார் ஆகியோர் அதில் நடித்திருந்தனர். இதன் ஒளியமைப்பு, வி. பாஸ்கரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர். 1990 மார்ச் 10 இல், மாலை 6 மணிக்கு சீத்தாராம் குப்தா அரங்கில் கூத்துப்பட்டறையின் ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’ (தமிழில் ஜி.கிருஷ்ண மூர்த்தி) நாடகம், இங்ஙபோர்க்மய்யர் & தனுஷ்கோடி ஆகியோரின் நெறியாளுகையில் நிகழ்ந்தது. ஜெ. ஜெயகுமார், எம். பசுபதி, எம்.ஜார்ஜ், பி.ஜோஷ¨வா, ஏ. லாரன்ஸ், வி. பாஸ்கர், எம். கார்த்திகேயன், சி. அண்ணாமலை, எஸ்.எஸ். கலைராணி, எஸ்.எஸ். கலைச் செல்வன், கே.எஸ்.கே. பிரசாத், எஸ். ஜெயராவ், பி. குமரன் ஆகியோர் அதில் நடித்திருந்தனர். இதன் ஒளியமைப்பு, சி. இரவீந்திரன் மற்றும் போஸ் மருதநாயகம் ஆகியோர்.

1992 மே 22 இல், மாலை 5 மணிக்கு மகாத்மா பள்ளியில் கூத்துப்பட்டறையின் நாடகம் ‘சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு-ஓர் உலகப் பிரச்சனை’ என்பது ந. முத்துசாமியின் வடிவமைப்பு நெறியாளு கையில் நிகழ்ந்தது. அதில் பசுபதி, ஜெய்குமார், ஜெயராவ், ஜார்ஜ், ராஜ்குமார், ரவிவர்மா, கலைச் செல்வன், கலைராணி, பாஸ்கர், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். ஒளியமைப்பு, நடேஷ், போஸ் மருதநாயகம், ஜார்ஜ், பாஸ்கர், பசுபதி ஆகியோர். இவர்கள் யாருமே இப்பொழுது கூத்துப்பட்டறை எனும் முத்திரைப் பதாகையின் கீழ் செயல்பட்டு வருவதாகத் தெரியவில்லை. அதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். அவர்கள் வேறுவேறு திக்குகளில் வெவ்வேறு பாய்மரங்களில் நாடகக் கொடி பிடித்துப் பயணப்பட்டுக் கொண் டிருக்கலாம். அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் நாடகக் கொடி நூலாக ந. முத்துசாமி இருந்து கொண் டிருக்கிறார் என்பதே உண்மை! அதனாலேயே, ந. முத்துசாமியின் மேலான அவர்களின் ஈடுபாட்டிற்கு அவர்கள் சூட்டிக் கொள்ளும் மகுடமாகத்தான், இந்த விழாவில் அவர்களின் பங்களிப்புப் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. இது, தமிழ்ச் சூழலில் மிகவும் ஆரோக்கியமானது. இதற்காகவும் ந. முத்துசாமி என்கிற நாடக ஆளுமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நிஜ நாடக இயக்கம், மதுரையில் நடத்திய அந்த மூன்று நாடக விழாக்களிலும் தொடர்ச்சியாக ந. முத்துசாமியும் கூத்துப்பட்டறை னரும் கலந்து கொண்டு, நாடக விழாவின் சமூகத் தேவையை, வரலாற்றுக் கடமையாய்ப் புரிந்து, தன் சிரமங்களை எந்தச் சூழலிலும் பொருட்படுத்தாது, நாடகப் பங்களிப்பை மட்டுமே பொறுப்பாகச் செய்து, தன் கம்பீரக் குரலில் தைரியம் சொல்லி, மதுரையில் நிஜநாடக இயக்கம் நடத்திய நவீன நாடகக் கலைவிழாக்களை வெற்றிகரமாக்கியதற்கு அவருக்கு என்றும் நான் நன்றிசொல்ல வேண்டும். 2000ஆவது ஆண்டில், நண்பர்களின் உதவியுடன், நிஜநாடக இயக்கத்தின் சார்பில் முதன்முறையாக நாடக நாட்காட்டி ஒன்றை உருவாக்கியபோது, அதற்கும் தன் பங்களிப்பை மகிழ்வுடன் செய்து உதவியவர் அவர்! அதேபோல் 1995 இல் மைய சங்கீத நாடக அகாதெமிக்காக ‘முனி’ நாடகத்தை நான் நெறியாளுகை செய்து கொண்டிருக்கும்போது, அந்த முயற்சியைச் சிலர் தரைமட்டமாக்க முயன்று கொண்டிருந்தபோது, நாடக நிகழ்வு முடிந்த இரவு, ந. முத்துசாமியும் பிரசன்னா ராமசாமியும் நாடகத்தைப் பாராட்டி மனந்திறந்து பேசியது எனக்குள் கூடுதல் ‘நாடக நம்பிக்கை’யை விதைத்தது. இதுபோன்ற நம்பிக்கைகளே, நம்மைக் கூடுதல் வீரியத்துடன் நாடகத்தில் செயல்படுத்தும் உந்துசக்திகளாகின்றன. இதுபோன்ற நம்பிக்கைக் குரல்கள் நம்மைச் செழுமைப்படுத்த அப்போதைக்கப்போது நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த சக்தியாகவும் அவர் இருந்தார் என்பது என்னைப் பொருத்தவரையில் முக்கியமானது. அதற்காகவும், இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றிசொல்ல வேண்டும்.