கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 1936 நவம்பர் 18இல் காலமானார். செயற்கரிய செய்த அப்பெருந்தலைவர் மறைந்தபோது தமிழகப் பத்திரிகைகளில் ஒன்றுகூட அனுதாபத் தலையங்கம் எழுதவில்லை. தமிழ்நாடு காங்கிரசின் பேரால் ராஜ்யத்தின் தலைநகரிலே ஓர் அனுதாபக்கூட்டம் கூட நடத்தப்படவில்லை. இந்த நிலை எனக்கு மன வேதனை தந்தது. தமிழன் என்னும் இன உணர்ச்சி இல்லாமற் போயினும், தேசபக்தி காரணமாக வேனும் சிதம்பரனாருக்குத் தக்க முறையில் அஞ்சலி செலுத்தத் தமிழ்நாடு காங்கிரசார் கடமைப்பட்டிருக் கிறார்கள். ஏன்? அகில இந்திய காங்கிரசுக்கே இந்தக் கடமையுண்டு. ஆயினும் மாபெரும் தியாகியான வ.உ.சிதம்பரனாருக்கு அந்தப் பேறு கிட்டவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நான், சிதம்பரனாரின் தியாக வரலாற்றை நூலாக்கவும், அவருடைய உருவச் சிலை ஒன்றை சென்னை நகரில் நிறுவவும் ஆண்டு தோறும் அவரது நினைவுநாளைக் கொண்டாடவும் முடிவு செய்தேன். இந்தத் திட்டத்தின் முதல் நடவடிக்கையாக சென்னையில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாளிகை முன்பு வ.உ.சியின் முழு உருவச் சிலையை நிறுத்த முயற்சி எடுத்தேன்.

v o chidhambaramசென்னை ராயப்பேட்டை காங்கிரஸ் மாளிகை முன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் முழு உருவச் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி எடுத்தபோது கடுமையான ஒரு போராட்டத்தை நான் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இதை நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எனது பொதுவாழ்க்கையில், முதல்முதலாக நான் வகுப்புவாதியாக வருணிக்கப் பட்டதும் இந்த நேரத்தில்தான். வ.உ.சி தம் வாழ்நாளின் கடைசிக்காலத்தில் கடைப்பிடித்த போக்கும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் வ.உ.சிக்கு நம்பிக்கை ஏற்படாததால் 1920இல் அவர் காங்கிரசிலிருந்து விலகிக்கொண்டார். ஆம், அவர் கருத்து வேற்றுமை கொண்டது காங்கிரஸ் மேலிடத் தோடுதான். தமிழ்நாட்டுக் காங்கிரசிடம் அல்ல. அப்படியிருந்தும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர் களிலே முன்னணியிலிருந்த பெருந்தலைவர்களில் சிலர் வ.உ.சியை வெறுத்தனர்.

அந்நாளில் தமிழ்நாட்டு அரசியலில் முன்னணியி லிருந்த பிரச்சினை பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசலாகும். அது புயற்காற்று வேகத்தில் வளர்ச்சி பெற்று வந்தது. பிராமணரல்லா தாரின் ஒரே அரசியல் அமைப்பெனத் தன்னை வருணித்துக்கொண்ட நீதிக்கட்சியிலே சேர்ந்து கொள்ளுமாறு அதன் தலைவர்கள் வ.உ.சிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தேசபக்தி மிக்க தியாகசீலரான வ.உ.சிதம்பரனார் பிரிட்டிஷ் ஆட்சி யுடன் ஒத்துழைத்துக்கொண்டிருந்த நீதிக்கட்சியில் சேர மறுத்துவிட்டார். விடுதலைப்புரட்சிக்கு எதிராகச் செயல்பட்ட அந்தக் கட்சியை சிதம்பரனார் மனதார வெறுத்தார். ஆயினும், நீதிக்கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அவர் ஆதரித்தார். பிராமணர்களுக்கு அவர்களுடைய ஜனத்தொகையின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக அரசாங்க உத்தியோகங் களில் இடமளிக்கக் கூடாதென்பது நீதிக்கட்சியின் கொள்கை. மக்கள்தொகையில் பிராமணரல்லா

தாரின் சதவிகிதத்திற்கேற்ப அவர்களுக்கு உத்தி யோகங்கள் தரவேண்டுமென்பது அந்தக் கட்சியின் கோரிக்கை. இந்தக் கொள்கைக்கும் கோரிக்கைக்கும் வ.உ.சிதம்பரனார் ஆதரவு காட்டினார். அதற்குக் காரணம், நாட்டின் அரசியலை - குறிப்பாக விடுதலைப் போராட்டப் பாசறையை வகுப்புவாதப் பூசலிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று அவர் கருதியதுதான்.

வ.உ.சி. நிலை

பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வகுப்பு வாதப் பூசல் விடுதலைப் பாசறையையே பிளவு படுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சியைப் போன்ற பிராமணரல்லாத தேசபக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக்கட்சி கோரிய வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி அதனை ஆதரித்தார். இதனாற்றான், அன்று வ.உ.சியை வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத்துரோகி என்று கூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர். இதனை, வ.உ.சியின் வாக்கைக் கொண்டே அறிய முயல்வோம்.

“தேச அரசாட்சியை மீட்பதற்காகத் தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானமில்லாது புறங் காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும், ‘ராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்று தேசத்துரோகம் செய்து கொண் டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை‘ என்று பொருள் படும்படி எழுதிய ஒரு பத்திரிகாசிரியர் புன்மொழியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபி மான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அழிவதும் இல்லை.

“விளக்குப் புகவிருள்சென்றாங்கு ஒருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம்’

என்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோக இருள் நில்லாது, இவ்வுண்மையினை அவர் அறிவாராக.’

(வ.உ.சியின் ‘எனது அரசியல் பெருஞ்சொல்' என்ற நூலிலிருந்து)

வ.உ.சிதம்பரனார், காங்கிரசிலிருந்து விலகிய பின்னரும் காந்தியடிகளிடம் மாறாத மதிப்பு வைத்திருந்தார். தமது சுயசரிதையில், “உலகெலாம் புகழும் நலனெலாம் அமைந்த காந்திமா முனிவன்’ என்று வருணித்தெழுதி காந்தியடிகளை வழிபடு கின்றார். காங்கிரசுக்கு வெளியேயிருந்த நிலையிலும், வேலூர் அ.குப்புசாமி முதலியார், சென்னை எம்.எஸ்.சுப்பிரமணி அய்யர், சிதம்பரம் என்.தண்டபாணி பிள்ளை ஆகிய தேசபக்தர்கள்மீது அரசு தொடுத்த அரசு நிந்தனை வழக்கில் ஆஜராகி, அந்தத் தேச பக்தர்களுக்கு விடுதலை தேடிக் கொடுத்தார். ஆம், பிரதிபலனை எதிர்பாராமல்.

இவ்வளவிருந்தும், வ.உ.சிதம்பரனாரின் தேச பக்தியைச் சந்தேகித்தனர் அந்நாளைய காங்கிரஸ் காரர்கள். 1939ஆம் ஆண்டில் வ.உ.சி சிலை நிறுவு வதற்கு நான் செயலாளராக இருந்த சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைக் கோரினேன். நான் முன்மொழிந்த வ.உ.சி சிலை நிறுவ ஆதரவு தரும் தீர்மானம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டு விட்டதென்றாலும் அக்கமிட்டியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் அப்படி மறுத்தது முறையல்ல வென்றாலும், அவரோடு போர் நடத்தி வகுப்புவாதப் பூசலை வளர்த்துவிட நான் விரும்பவில்லை. அதனால் பொதுமக்களிடம் பொருளுதவி பெறுவ தென்ற முடிவுக்கு வந்தேன்.

சென்னை டிராம்வே தொழிலாளர் சங்கம், என் தலைமையில் இயங்கிவந்த முதல் சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி, இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிற் சங்கம் ஆகியவற்றிடமிருந்தும், இன்னும் பல நிறுவனங்களிடமிருந்தும் பொருளுதவி பெற்றேன். சென்னை ஆமில்டன் வாராவதி அருகிலுள்ள விறகு தொட்டிக் கடைக்காரர்களிடமும் பொருள் திரட்டினேன். என்ன திரட்டினாலும், வ.உ.சியின் முழு உருவச்சிலை செய்வதற்குத் தேவைப்படும் அளவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. அதனால், முக உருவச்சிலை மட்டும் நிறுத்துவதென்ற முடிவுக்கு வந்தேன். சென்னை பக்கிங்காம் - கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் தலைவரும் காங்கிரஸ்காரருமான பெரம்பூர் திரு.எஸ்.பக்கிரிசாமிப் பிள்ளை, குறைந்த விலைக்கு வ.உ.சியின் முக உருவச் சிலையைத் தயாரித்துத் தர முன்வந்தார்.

சிலையைக் காங்கிரஸ் மாளிகையின் முன்புள்ள கொடிமரத்துக்கு அருகே வைக்கவேண்டுமென்பது என் விருப்பம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு அனுமதி தரவில்லை. சிலை வைப்பதற்கு வேறு இடத்தையேனும் தேர்ந்தெடுத்துக் கூறுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு எழுதினேன். அதற்குப் பதிலே கிடைக்கவில்லை. சிலைத்திறப்பு விழாவுக்குத் தேதியை நிச்சயித்துவிட்டேன். காங்கிரஸ் மகா சபையின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சேலம் திரு.சி.விஜயராகவாச்சாரியாரை நேரில் சந்தித்து சிலையைத் திறந்துவைக்க அவரது இசைவைப் பெற்றுவிட்டேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரசின் அனுமதி கிடைக்காததால், குறித்த தேதியில் சிலைத்திறப்பு விழா நடத்துவது சாத்திய மில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு காங்கிரசின் மீது சினங் கொண்டவனாகி, அதன் அனுமதிக்காகக் காத்திராமல், சிலைத் திறப்பு விழாவை நடத்தத் துணிந்தேன்.

அய்யரின் ஆத்திரம்

திரு.எஸ்.சத்தியமூர்த்தி அய்யரவர்கள், சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தா ராதலால், விழாவுக்கு அவரே தலைமை வகிக்க வேண்டுமென்று நான் விரும்பி, நண்பர் த.செங்கல்வ ராயன் அவர்களுடன் சென்று நேரில் அவருக்கு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர் என்மீது காட்டிய ஆத்திரத்தையோ, என் மீது பொழிந்த பழிச் சொற்களையோ நான் இங்கு விளக்க விரும்ப வில்லை. என்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரனாகவே முடிவு செய்துகொண்டு, வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்குக் காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று பழி சுமத்தினார். நல்லவேளையாக நண்பர் த.செங்கல்வராயன் அய்யரை சமாதானப்படுத்தினார். என்னைப் பற்றி அவர் கொண்ட தவறான கருத்தைப் போக்க முயன்றார். அதன்பின், வ.உ.சி சிலைத் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்க அய்யர் இணங்கினார். “சிலையைத் திறந்துவைக்க சேலத்திலிருந்து திரு.விஜயராகவாச்சாரிதான் வரவேண்டுமா’ என்று கேட்டார். நான், அந்தப் பெரியவரை நேரில் சென்று அழைத்து அவரும் இணங்கிவிட்டதால், அதிலே மாறுதல் கோரவேண்டாமென்று அய்யரை வேண்டிக் கொண்டேன். எனது வேண்டுகோள் பலிக்காமற் போனதால் சிலையைத் திறக்க திருச்சி திரு.டி.எஸ்.எஸ் இராசனை அழைப்பதென்று முடிவானது.

பொம்மைக் கலியாணம்

21-12-39 அன்று ராயப்பேட்டை காங்கிரஸ் மாளி கையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் சிலைத்திறப்பு விழா பொம்மைக் கலியாணம் போன்று நடத்தப் பெற்றது. ஒரு மணி நேரத்தில் விழா முடிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தலைவர் களெல்லாம் கட்சி வேறுபாடின்றி அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன். தமிழ்ப் பெரியார் திரு.வி.கலியாணசுந்தரனார், அப்போது இந்து மகாசபையின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவிருந்த டாக்டர் பி.வரதராஜலு நாயுடு, கம்யூனிஸ்டான தோழர் சிங்காரவேலு செட்டியார், தொழிற்சங்கத் தலைவர் திரு.வி.சக்கரைச் செட்டியார் ஆகிய முதுபெருந் தலைவர்கள் நால் வரையும் நேரில் சந்தித்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். என் அழைப்புக்கிணங்கி அவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால், விழாத் தலைவர் அந்தப் பெருந்தலைவர்களுக்கு வ.உ.சியை வாயார வாழ்த்திப்பேச வாய்ப்பளிக்க வில்லை. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்ததென்றாலும், அன்றைய சூழ்நிலையில் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர எதிர்த்துப் போராட வழி யில்லாமலிருந்தது. சேலம் சி.விஜயராகவாச் சாரியார், வ.உ.சியின் சிறப்பியல்புகளைப் பாராட்டியும், விழாவை வாழ்த்தியும் செய்தி அனுப்பியிருந்தார்.

நாமக்கல் கவிஞர், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் இந்த சிலைத் திறப்பு விழாவுக்கென்றே அனுப்பியிருந்த கவிதைகளை என் அருமை நண்பர் ஆரியகான கே.எஸ்.அனந்தநாராயண அய்யர் மிகுந்த உணர்ச்சியோடு பாடினார். பத்திரிக்கைகள் எல்லாம் விழா நிகழ்ச்சியை சிறப்பாகப் பிரசுரித்திருந்தன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கை துணைத் தலையங்கம் எழுதி வ.உ.சிக்கு அஞ்சலி செலுத்தியது.

வ.உ.சி சிலை திறந்த மறுநாள் இராயப் பேட்டை காங்கிரஸ் திடலிலே கதர் சுதேசிப் பொருட்காட்சி ஆரம்பமானது. நான் ஏற்கெனவே கூறியதுபோன்று அந்தப் பொருட்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்காட்சிச் சாலையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீ விபத்திலே தப்பிய பொருட்களில் வ.உ.சி சிலையும் ஒன்றாகும். துரதிர்ஷ்டமென்னவென்றால், தீயாலும் தீண்டப்படாத வ.உ.சி சிலையை அந்தத் தீவிபத்துக்குப் பின்னர் யாரோ ஒரு தீயவன் சேதப் படுத்திவிட்டான். அதனால் சிலையைப் பழுது பார்க்க அது இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.

எங்கெங்கும் வ.உ.சி

வ.உ.சியின் சிலையை நிறுவ நான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மிகவும் சுருக்கமாகத்தான் கூறியிருக்கிறேன். ஆனால் என் ஆற்றலையும் மீறிய ஒரு கடுமையான போராட்டத்தை நான் சமாளிக்கவேண்டி இருந்தது. அதனால் முழு உருவச்சிலை எடுப்பதென்ற முயற்சி முக உருவச் சிலையாக மாறியது. சிலைத் திறப்புவிழாவை நான் நினைத்தபடி பெரிய அளவில் நடத்த முடியாமற் போய்விட்டது. சிலையைத் திறந்தபின்னரும் என் மனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அது சேதப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று நாடெங்கும் வ.உ.சிக்கு எண்ணற்ற நினைவுச்சின்னங்கள் எழுப்பப் பட்டிருக்கக் காண்கிறோம். எண்ணற்ற பூங்காக் களுக்கும், வீதிகளுக்கும், குடியிருப்புகளுக்கும், பெரிய கட்டடங்களுக்கும் வ.உ.சியின் பெயர் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தூத்துக்குடி துறைமுக வாயிலிலும் வ.உ.சியின் முழுஉருவச் சிலைகள் கம்பீரமாகக் காட்சியளிக்கக் காண்கிறோம். இதற்கெல்லாம் காரணம் 1939இல் சென்னை காங்கிரஸ் மாளிகை முன்பு வ.உ.சியின் முக உருவச்சிலையை நிறுத்திய பின்னர் அவரது புகழ் பரப்ப நான் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியாகும்.

(ம.பொ.சி.யின் 'எனது போராட்டம்' நூலிலிருந்து)