‘சோமலெ’ என அறியப்படும் சோம.லெ. இலக்குமணன் (11.02.1921 - 04.11.1986) அவர்களின் நூற்றாண்டு இது. வணிகக் குடும்பத்தில் பிறந்த அவர் உலக நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் ஊடாக எழுத்தாளராக உருவானவர். அவரின் முதல் உலகச் சுற்றுப் பயணத்தின் முடிவில் “வணிகனாகச் சென்றேன், எழுத்தாளனாகத் திரும்பி வந்தேன்” என்று அவரே பதிவு செய்கிறார்.

somale 266‘உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே. செட்டியாரின் பாதிப்பால், தன் தனிப் பயணங்களை தகவல் பயணங்களாக மாற்றிக் கொள்கிறார். உலகின் பல பகுதிகளுக்கும் - வளர்ச்சி அடைந்த அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளுக்கும் வளரும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கும், பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்வதையே தன் வாழ்நாள் இலட்சியமாக்கிக் கொண்டார். அதுவரை ‘பயண இலக்கியம்’ என்பது அயலகப் பயணம் மேற்கொண்டவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதுவதாக அமைய, சோமலெ பயண இலக்கியம் படைப்பதற்காகவே பயணங்களை மேற்கொண்டார் எனலாம்.

நாடுகளை, இடங்களை, மக்களை, நிகழ்வுகளை, பழக்க வழக்கங்களைக் கண்டு கேட்டு உய்த்து எழுதும் பயண இலக்கிய முன்னோடியாக அவர் தன்னை நிறுவிக் கொண்டார்.

கடும் உழைப்பும், தகவல்களைச் சேகரிக்கும் பாங்கும், பயண மனப்பாங்கும் அவரை பயண, வரலாற்று எழுத்தாளராக உருவாக்கின. பயண இலக்கியங்கள் ஒரு வகையில் சமகால வரலாற்றின் ஒரு பகுதியாகவே அமையும். சோமலெயின் தேடல், சேகரித்தல், பதிவு செய்தல், தொகுத்தல், எழுதுதல் ஆகிய பண்புகள் ஓர் ஆய்வாளரின் இயல்புகளாக அமைவதை அவரின் வாழ்வும் படைப்பும் அடையாளப்படுத்தி நிற்கின்றன.

சோமலெயின் வரலாற்றுப் பங்களிப்பு

சோமலெயின் பயண இலக்கியங்களின் தொடர்ச்சியாக அவரின் வரலாறு குறித்த ஆக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரின் வரலாறு குறித்த நூல்களை

1. வாழ்க்கை வரலாறுகள், 2. இலக்கிய வரலாறுகள், 3. தல வரலாறுகள், 4. நிறுவன வரலாறுகள், 5. மாவட்ட வரலாற்று வரிசை என வகைப்படுத்தலாம். அவர் வரலாற்றை எப்படி புரிந்துகொண்டார் என்பதைத் தாண்டி சம கால கலை, இலக்கிய, சமூக வரலாற்றுத் தரவுகளைத் தொகுத்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை வரலாறுகள்

சமூக வளர்ச்சிக்குத் தனி நபர் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அப்படிப்பட்ட ஆளுமைகளின் வாழ்வும் பணியும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் தன்மை கொண்டவை. இவை தனிநபர்களின் புகழ்பாடுகையாக அல்லாமல் சமூகம் சார்ந்து அமையும்போது சிறப்பு பெறுகின்றன. “பெரும்பாலும், வாழ்க்கை வரலாறுகள் அனைத்தும் ஒரே உயர்வு நவிற்சியாக - வெறும் பாராட்டாக அமைந்துள்ளன. எந்தப் பெரியவரைப் பற்றியும், கருத்து வேற்றுமைக்கு இடமுண்டு. ஆகையால் வாழ்க்கை வரலாறுகளை எழுதுபவர்கள் தாம் சிறப்பிக்க எடுத்துக்கொள்ளும் அறிஞரின் குறைபாடுகள் இரண்டொன்றைச் சுட்டிக் காட்டுவது நலம்” (வளரும் தமிழ், ப.306) என வாழ்க்கை வரலாறு பற்றிய தன் கண்ணோட்டத்தைக் குறிப்பிடும் சோமலெ அதே மாதிரி தன் நூல்களை அமைத்துக் கொண்டுள்ளார்.

சோமலெ எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் மூன்று 1. பண்டிதமணி (1955), 2. விவசாய முதலமைச்சர் (1979), 3. தமிழ்நாட்டில் ஒரு சர்தார் (2002) ஆகியவை.

இம்மூன்று நூல்களும் தனித்தன்மை வாய்ந்தவை. பண்டிதமணி எனச் சிறப்பிக்கப்பட்ட மு.கதிரேசன் செட்டியார், இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தானே கற்று தமிழ், வடமொழி, ஆங்கிலம் இவற்றில் தேர்ந்து பேராசிரியராக, அறிஞராக உயர்ந்தவர். விவசாய முதமைச்சர் என அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி. இராமசாமிரெட்டியார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் இருந்தவர். தூய்மை, நேர்மை, வாய்மை எனும் அருங்குணம் கொண்ட, வேளாண் மரபில் இருந்து அரசியல் அரங்கில் சுடர்விட்டப் பெரியவர். சர்தார் வேதரத்தினம், சர்தார் பட்டேலுக்கு நிகரானவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தன் சொத்துக்களையெல்லாம் மக்கள் நலனுக்கு அளித்தவர். காந்தியவாதி. இம்மூவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். தத்தம் துறை, தொண்டு, பங்களிப்பு சார்ந்து பிறருக்கு வழிகாட்டும் முன் மாதிரிகள். இவர்களைப் பற்றிய இந்த வாழ்க்கை வரலாறுகள் விரிவாகவும், சுவையாகவும் அமைகின்றன.

“வாழ்க்கை வரலாறு எழுத விரும்புபவர்க்குப் பயன்படும் குறிப்பு ஒன்றையும் ஈண்டுத் தரலாம். இந்நூல்களில் மிகுதியான செய்திகள் இருக்கலாம். அவை சுவைபடக் கூறப்பட வேண்டும். உண்மையான நிகழ்ச்சிகளைக் கூறுவது மட்டும் போதியதாகாது; தாம் எடுத்துக்கொண்ட அறிஞரைப் பற்றி ஆசிரியர் உணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் எழுத வேண்டும். ஏராளமான விவரங்களிலிருந்து, பயன்படும் சில குறிப்புக்களை மட்டும் பொறுக்குவதிலேயே அவர் தம்முடைய திறமையைப் பயன்படுத்த வேண்டும்” (வளரும் தமிழ், ப.307) என வாழ்க்கை வரலாறு எழுதியலுக்கு வரையறை தரும் சோமலெ தான் எழுதிய மூன்று நூல்களிலும் இவற்றைப் பின்பற்றக் காணலாம்.

வாழ்க்கை வரலாற்று நூல்களின் எடுத்துரைப்புக்கு சில சான்றுகள்:

“சிறிது தொலைவிலுள்ள இடங்களுக்கும் பண்டிதமணி அவர்கள் மாட்டு வண்டியிலேயே செல்ல நேர்ந்தது. எனவே அண்ணாமலை நகரிலிருந்தபோது, அவரிடம் ஓர் ஒற்றைமாட்டு வண்டி இருந்தது அதில் அவர் ஏறிக்கொண்டு நாள்தோறும் மாலை நேரத்தில் உலாவிவரச் செல்வார். ஒரு நாள் நண்பர் ஒருவரையும் வண்டியில் உடனழைத்துச் சென்றார். வண்டி போகும்போது, முன்பக்கமாக உட்கார்ந்து கொண்டு, ‘இப்படிப் போ, அப்படிப் போ’ என்று கூறி வண்டிக்காரனுக்கு வழிகாட்டிக் கொண்டே சென்றார். உடன் வந்தவரோடு ஒரு சிறிதும் பேசவில்லை. அதனால் அந்த நண்பரின் மனம் புன்பட்டது. அப்போது பண்டிதமணி, வண்டியில் பூட்டப்பெற்றிருக்கும் மாடு புதிது; வண்டிக்காரனும் புதிய ஆள். அவன் மாட்டை ஓட்டுகிறான்; நான் அவனை ஓட்டுகிறேன். எனவே என் கருத்தனைத்தும் அப்பக்கமே திரும்பிவிட்டது என்றார்.” (பண்டிதமணி, ப.23)

"ஓமந்தூராரின் உறவினர்கள் மணப்புத்தூரிலும் திருவாமூரிலும் இன்னும் வாழ்கின்றனர். இந்த உறவினர் வீடுகளுக்கு இவர் இளமையில் அடிக்கடி சென்று வந்தார்.

மணப்புத்தூர் என்பது மணம் தவிர்த்த புத்தூர் என்ற சொற்றொடரின் சிதைவு. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இவ்வூரில் திருமணம் நிகழ்வதாக இருந்தது. ஆனால் அந்தத் திருமணம் நடைபெறவிடாமல் இறைவன் தவிர்த்து விட்டார்.

இத்தேவார நாயன்மார் தொடர்புள்ள இவ்வூரிலிருக்கும் தன் உறவினர் வீடுகளுக்கு அடிக்கடி சென்றதால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் அவரிடம் ஈடுபாடு காட்டவும் ஓமந்தூராருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் சுந்தரர் தேவாரத்தை நெஞ்சுருகப் பாடினார். தன் மகனுக்கு சுந்தரம் என்று பெயரிட்டார்”. (விவசாய முதலமைச்சர்)

நிகழ்வுகளைச் சுவை படச் சொல்வதுடன் நூலைப் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி அறிவூட்டும் வகையிலும் எழுதுவது அவர் வழக்கம்.

பொது வாழ்வில் ஈடுபடுவோர் மூவகையினர். சுயநலமி, அரசியல்வாதி, நாட்டை உருவாக்கும் சான்றோர்.

சுயநலமி, தன் குடும்பத்திற்குப் பணம் சேர்ப்பதிலும், தன் உறவினர்களுக்கு வேலை கொடுப்பதிலும், தன் புகழைப் பரப்புவதிலும், தனக்குச் சிலைகள் முதலியன வைத்துக் கொள்வதிலும், தனக்குப் பிறகு தன் உறவினர்களை அரியாசனத்தில் அமர்த்துவதிலும் கவனம் செலுத்துவான்.

அரசியல்வாதி, அடுத்த தேர்தலில் தானும் தன் கட்சியும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நிறைவேற்ற எதையும் துணிந்து செய்வான்.

நாட்டை உருவாக்கும் சான்றோர்கள் (Statesmen) அடுத்த தலைமுறையினரைப் பற்றியும் நாட்டு நலனைப் பற்றியும் மட்டுமே சிந்திப்பார்கள்.

ஓமந்தூரார் மூன்றாவது வகையினர் (விவசாய முதலமைச்சர், பக்.2-3)

இம்மூன்று வாழ்க்கை வரலாறுகளும் விரிவானவை; ஆழமானவை; இந்த வகைமைக்கு இலக்கணமாகக் கருதத்தக்கவை.

இலக்கிய வரலாறுகள்

சோமலெ இலக்கிய வரலாறு என்ற பெயரில் நூல் எதுவும் எழுதவில்லை. ஆனால் இலக்கிய வரலாறாக அமையும் இரு முக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1. வளரும் தமிழ், 2. தமிழ் இதழ்கள். இவை இரு நூல்களும் முறையே உரைநடை வளர்ச்சி வரலாற்றையும், இதழியல் வளர்ச்சி வரலாற்றையும் சுட்டி நிற்பவை.

வளரும் தமிழ்

இந்நூல் எழுத 1950ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் அறிவிக்கப்பட்ட ஒரு கட்டுரைப் போட்டி பின்புலமாக அமைகின்றது. அதனைத் தொடர்ந்து சாகித்திய அகாதெமிக்காக இருபதாம் நூற்றாண்டு இலக்கிய நூல்களின் பட்டியல் தயாரிப்புப் பணியில் உதவிய அனுபவமும் சேர்ந்து பல்லாண்டு உழைப்பில் இந்நூல் உருவானதாக சோமலெ குறிப்பிடுகிறார். 

1. உரைநடையின் தோற்றம், 2. கல்வெட்டுக்கள், 3. ஐரோப்பியர் காலத்தின் உரைநடை, 4. செந்தமிழ் நடை, 5. தனித்தமிழ், 6. மறுமலர்ச்சி நடை, 7. சொற்பொழிவு, 8. நாடகம், 9. திரைப்படங்கள், 10. செய்தித்தாள்கள், 11.வானொலி, 12. விளம்பரம், 13. சமயமும் தமிழும், 14. உரைநடை நூல்கள், 15. விஞ்ஞான நூல்களும் கலைச் சொற்களும், 16. மொழிபெயர்ப்பு, 17. ஆராய்ச்சி நூல்கள், 18. அகராதி, 19. கடிதங்கள், 20. பேச்சுவழக்கில் தமிழ், 21. கவிதை, 22. வெளிநாடுகளில் தமிழ், 23. பல்கலைக்கழகங்கள், 24. அரசினரும் தமிழும், 25. தமிழ் வளர்ச்சிக்கழகம் என இருபத்தைந்து உட்கூறுகளில் 462 பக்கங்களில் அமைந்த நூல் இது. நூலின் இறுதியில் பெயர்க் குறிப்பு அகராதியும் இடம் பெறுகின்றது. இந்தத் தலைப்புகளே இந்நூலின் நுட்பத்தை, முழுமையை உணர்த்த வல்லவை. கல்விப் புலத்தினரே அஞ்சும் இப்பணியை தனியொரு மனிதராக இவர் சாதித்துள்ளார் என்றே கூற வேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழ் உரைநடை குறித்த இந்த அறிமுக நூல் ஏன் தமிழ் இலக்கிய வரலாற்றில் கவனப்படவில்லை என்பது கவலையே.

தமிழ் இதழ்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பெற்ற கல்கி அறக்கட்டளைச் சொற்பொழிவுகளின் (1973-74) தொகுப்பு ‘தமிழ் இதழ்கள்’ எனும் நூல். “தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், அப்பத்திரிகைகள் எந்த அளவிற்குத் தமிழ் நடையை உருவாக்கியுள்ளன, காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ற அளவில் தமிழ் நடையில் எத்தகைய மாற்றங்களை அவை மேற்கொண்டுள்ளன என்பன போன்றவற்றை விரிவுரையாளர் அவர்கள் வகைப்படுத்திச் சுவையுடன் பேசியுள்ளார்கள். குறிப்பாக, கட்டுரை, கவிதை ஆகிய பல்வேறு துறைகளிலும் பலரை எழுதத் தூண்டிப் பல இலக்கிய கர்த்தாக்கள் தோன்றுவதற்கு எந்த அளவிற்குப் பத்திரிகைகள் உதவியிருக்கின்றன என்பதையும், பொதுமக்களிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அரசியல் பொருளாதார நுணுக்கங்களை அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் பத்திரிகைகள் ஆற்றிய தொண்டு எவ்வளவு அருமையானது என்பதையும் இவ்வுரைகளில் விளக்கியிருப்பதைக் காண்கிறோம்” என முன்னுரையில் நெ.து.சுந்தரவடிவேலு கூறுவது சரியான மதிப்பீடு.

  1. முக்கிய நிகழ்வுகள்
  2. பத்திரிகை இயக்கத்தின் தலைவர்கள்
  3. பத்திரிகையின் தரம்
  4. பத்திரிகைகளின் நடை
  5. அந்த நடை காலத்துக்கு காலம் மாறுவது எவ்வாறு? ஏன்?
  6. தமிழாசிரியர்கள் அந்த நடையை எவ்வாறு மாற்றியிருக்கிறார்கள்?
  7. பத்திரிகைகளின் நடை எந்த அளவில் தமிழாசிரியர்களுடைய நடையை மாற்றியுள்ளது? அதாவது, தமிழ் இதழ்களால் உருவாக்கப்பட்டுள்ள நடையைத் தமிழாசிரியர்கள் எந்த அளவு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?
  8. தமிழ் இதழ்களால் மக்களுடைய பொது அறிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி எத்தகையது?
  9. புது எழுத்தாளர்கள் எந்த அளவு உருவாக்கப்பெற்றிருக்கிறார்கள்?
  10. எழுத்தாளருக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவ்வளவு?
  11. பல துறைகளில் நூல்கள் வெளிவர, தமிழ்ப் பத்திரிகைகள் எந்த அளவில் உதவியுள்ளன?
  12. தமிழ் நூல்கள் வெளியீட்டிலும், விற்பனையிலும் காணப்படும் தேக்கத்திற்கு, தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எந்த அளவு பொறுப்பு உண்டு?
  13. தமிழ் இதழ்களில் நூல் மதிப்புரைப் பகுதியின் நிலை என்ன?
  14. சில குறிப்பிட்ட இதழ்களைப் பற்றிய சில விவரங்கள்
  15. இலக்கியத் திரட்டு
  16. மொழிபெயர்ப்புப் பிரச்சினை.

தமிழ் இதழ்களும் தமிழும் என்பதை மையமாகக் கொண்ட இவ்வுரைகளில் இடம் பெறும் பகுதிகள் இவை (தமிழ் இதழ்கள், ப.5). பிற்சேர்க்கை பகுதியில் தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பல இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. சோமலெ இதழியல் கற்றவர். இதழியல் நோக்கில் தம் நூல்களை எழுதியவர். அவ்வகையில் தமிழில் இதழியல் கலை குறித்த முன்னோடி நூல்களுள் ஒன்றாக இது திகழும். தமிழ் இதழியல் வரலாறு, இலக்கிய வரலாறு ஆகிய இரு தளங்களிலும் கவனம் பெற வேண்டிய நூல் இது.

தல வரலாறுகள்

சோமலெ அவர்களுக்குப் பதிப்புலகில் ‘மலர்மன்னர்’ என்ற அடைமொழி உண்டு. அந்த அளவுக்கு பலவித மலர்களை அவர் உருவாக்கி அளித்துள்ளார். கோயில் குடநீராட்டு மலர்கள், நூற்றாண்டு மலர்கள், சிறப்பு மலர்கள், விழா மலர்கள் என்ற வகைமைகளில் அவை அடங்குவன.

இவற்றில் தல வரலாறுகள், தனிநபர் வரலாறுகள், நிறுவன வரலாறுகள் பல குறிப்புகளாக அமைகின்றன. சோமலெ தொகுத்துப் பதிப்பித்த மலர்களின் விவரம்:

  1. நெற்குப்பை வைகாசி விசாப் பொன்விழா மலர் (7.6.1971)
  2. காசி விசாலாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு மலர் (1.11.1971)
  3. நாசிக் - பஞ்சவடி கார்த்திக் சுவாமி கோயில் குடமுழுக்கு மலர் (28.1.1972)
  4. இராமநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக மலர் (1975)
  5. அருள்மிக அண்ணாமலையார் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் (1976)
  6. காஞ்சிபுரம் மலர் (மார்ச்சு, 1979)
  7. கோவிலூர் திருக்குட நீராட்டு மலர் (ஜுன், 1978)
  8. நெற்குப்பை நகரத்தார் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா மலர் (14.9.1978)
  9. பெங்களூர் கெஞ்சனஹவள்ளி அருள்மிகு அன்னை இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில் திருக்குட நீராட்டு விழாச் சிறப்பு மலர் (6.7.1979)
  10. கோட்டையூர் அருள்மிகு மீனாட்சி அம்மை உடனாய அருள்மிகு சோமசுந்தரரேசுவரர் திருக்கோவில் திருக்குட நீராட்டு மலர் (17.1.1980)
  11. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு (1863-1963) விழா மலர் (14.09.1963)
  12. சென்னை நகரத்தார் மாணவர் சங்கம் சிறப்பு மலர் (12.7.1964)
  13. அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழா மலர் (1955)
  14. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழா மலர் (டிசம்பர், 6.1979)
  15. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்ச்சி மலர் (1979)

நிறுவன வரலாறுகள்

சோமலெ வரலாற்று எழுதியலின் பல்வேறு வகைமைகளிலும் முயற்சி செய்து பார்த்துள்ளார். தனது மகன் லெ.சோமசுந்தரத்தோடு அவர் சேர்ந்து எழுதிய நூல் ‘வேளாண்மைப் பல்கலைக்கழகம்‘ (1985). அதே போல நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள ‘நெய்வேலி’ (1960) ஆகிய இரு நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

somale booksசோமலெ தனது மகன் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற வேளாண் அறி­வியலாளர் லெ.சோமசுந்தரம் அவர்களுடன் இணைந்து சுமார் 250 பக்கங்களில் எழுதிய நூல் வேளாண்மைப் பல்கலைக்கழகம். ஒரு நிறுவனத்தைப் பற்றி இந்த அளவு விரிவாகவும், முழுமையாகவும் எழுத முடியுமா என்பது அய்யமே. அன்றைய வேளாண் அமைச்சர் கா.காளிமுத்து “எப்பொருளையும் அடி முதல் நுனி வரை ஆய்தறிந்து தெளிவாகவும் விளக்கமாகவும், தென்றல் நடையிலும் வரைந்து தரும் ஆற்றலாளர் அவர் (சோமலெ). தமிழகத்தின் வேளாண்மைப் பல்கலைக்கழகம் பற்றி - துல்லியமாகவும் எல்லாத் தகவல்களும் உள்ளடங்கும் வகையிலும் அவரும் அந்தப் பல்கலைக்கழக மாணவ நன்மணியாம் அவர்தம் புதல்வரும் இந்நூலை நல்கியுள்ளனர்”. எனப் பாராட்டுவது பொருத்தமானது.

‘நெய்வேலி’ நூல் பழுப்பு நிலக்கரிச் சுரங்கமும், அனல்மின் நிலையமும் அமைந்திருக்கும் நெய்வேலி நகரியத்தைப் பற்றிய முதல் நூலாக அமைகிறது. நெய்வேலியின் அமைப்பு, பழுப்பு நிலக்கரியின் வரலாறு, அதன் பயன்கள், மின்சார உற்பத்தி, கரிக்கட்டி மூலம் அச்சு தயாரிப்பு, யூரியா உற்பத்தி, எஃகு ஆலை, நிலக்கரித் தோண்டும் போது கிடைக்கும் களிமண்ணின் பயன்பாடு, பொருள்கள், இச்சுரங்கம் சார்ந்த துணைத் தொழில்கள் ஆகியவை பற்றி பதினாறு இயல்களில் விளக்குகிறார்.

“நெய்வேலி இருக்கும்போது வருங்காலத்தைப் பற்றி நினைக்கிறோம். கி.பி.2000 இல் தமிழ்நாடு தொழில் துறையில் அடையக்கூடிய முன்னேற்றத்தை எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுகிறோம். பழமையைப் பாராட்டும் தமிழர்களுக்கு வருங்காலத்தை நினைவூட்டுகிறது நெய்வேலி. இது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பம், நல்ல திருப்பம், வரவேற்கத்தக்கத் திருப்பம்...” (ப.137) என்ற அவரின் வாக்கு இந்த அறுபது ஆண்டுகளில் மெய்யாகி இருப்பதே அவரது எழுத்தின் வெற்றி எனலாம்.

இன்று புழங்கு பொருள் பண்பாடு, உள்ளூர் வரலாறுகள் பற்றிய அக்கறை மிகுந்துள்ளது. இந்த வகைமைகளில் அடங்கும் சோமலெயின் ஆக்கங்கள் காலம் அறிந்து கூவிய சேவல் என்றால் அது மிகை­யில்லை.

மாவட்ட வரலாறுகள் வரிசை

சோமலெயின் தனித்துவமானப் பங்களிப்பு என்பது அவரின் மாவட்ட வரலாறுகள் நூல் வரிசை. ஆங்கில அரசின் நிதி, நிர்வாக நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அந்தந்தப் பகுதிகள் குறித்த தரவுகள் சேகரித்து ஆவணப்படுத்தப்பட்டன. நிலவியல் சார்ந்தும் மக்கள் வாழ்வியல் சார்ந்தும் பருவநிலை, தொழில்கள், இயற்கை நிலைகள், சாதி, சமயம், வழிபாடு உள்ளிட்ட வழக்காறுகள் சார்ந்தும் அவை அமைந்தன. ‘மானுவல்’ ‘கெசட்டியர்’ எனும் நிலைகளில் மாவட்ட நிர்வாகிகளுக்குப் பயன்பட்டன. இவை ஆங்கில மொழியில் இருந்தன. உலக நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாடுகளையும், மக்களையும் பற்றி எழுதிய சோமலெ நம் செந்தமிழ்நாட்டைப் பற்றி எழுத முனைந்ததன் விளைவே இந்த மாவட்ட வரலாறுகள் நூல்வரிசை. ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளைப் பற்றியும் (அப்பொழுது 10 மாவட்டங்கள்) அவர் எழுதினார். சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், வடஆற்காடு (1961), தென்ஆற்காடு, செங்கல்பட்டு (1963) திருநெல்வேலி (1965), இராமநாதபுரம் (1972), மதுரை (1980).

“ஏறத்தாழ ஐம்பதாண்டுக்காலம் நான் கண்டும் கேட்டும் படித்தும் திரட்டிய குறிப்புகளின் தொகுப்பே இது” எனத் தான் கடைசியாக எழுதிய மதுரை மாவட்ட வரலாற்றில் குறிப்பிடுவார்.

“மாவட்டங்களின் பல பகுதிகளுக்குச் சென்றேன். அறிஞர் பலருடன் உரையாடினேன். எண்ணற்ற நூல் நிலையங்களுக்கும் சென்றேன், பழைய புத்தகக் கடைகளையும், பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாநாடுகளின் அறிக்கைகளையும் சங்கங்களின் வெளியீடுகளையும் கல்லூரிகளின் இதழ்களையும் 1925 இல் வெளியிடப்பெற்ற

இரயில்வே அட்டவணையையும் கூடப் புரட்டினேன். ஏறத்தாழ ஓராயிரம் பேருக்குக் கடிதங்கள் எழுதினேன். நகராண்மைக் கழகங்களின் ஆணையர்கள், சட்டசபை உறுப்பினர்கள், நெடுங்காலமாக ஓர் ஊரிலேயே இருந்துவரும் தலைமையாசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் துணையையெல்லாம் நாடினேன்” என தன் முதல் மாவட்ட வரலாறு, சேலம் மாவட்டம் நூலில் குறிப்பிடுகிறார்.

கள ஆய்வு, தகவல்கள் திரட்டு, பகுத்து தொகுத்து எழுதுதல் என்ற நிலையில் அவரின் பணி பிரமிப்புத் தருவது. இன்று போல கணினி, இணையம், கூகுள் சேவை (?) எதுவும் இல்லாமல் சொந்தக் காலில் (கையில்) அவர் நின்று சாதித்தது வியப்பைத் தருகிறது. இந்த மாவட்ட வரலாறுகளை ஒரு பத்திரிகையாளரின் தொடர் போல தகவல்களை அள்ளித் தந்துப் படைத்துள்ளார். வரலாறு, வாழும் மக்கள், நிலவளம், நீர்வளம், நாட்டு வளம், கனிவளம், காட்டுவளம், புவியியல் வளம், மலை வளம் போன்ற பல்வேறு வளங்களை வரிசைப்படுத்துவார். பருவநிலை, பாசன வசதி, வேளாண்மை, வணிகம், தொழில்கள், ஆட்சிமுறை, அரசியல் நிலை, போக்குவரத்து, வணிகம், மருத்துவம், கல்வி, கலை வளர்ச்சி, தமிழ்ப்பணி, சமய நிறுவனங்கள், இதழ்கள், திரைப்படங்கள், நாட்டுப் பாடல்கள், விடுதலைப் போரில் பங்கு, காண வேண்டிய இடங்கள், குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், மக்கள் பழக்க வழக்கங்கள், வழிபாடு, பேச்சு வழக்கு ஆகிய எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறார். இவை ஒரு கலைக்களஞ்சியம் போல அமைந்துவிடுகிறது.

இவரின் எழுதும் பாங்கும் எடுத்துரைப்பும் கலைத்தன்மையுடன் காட்சிப்படுத்தலாக அமைகின்றது. எனவே வரலாறு, புவியியல் போன்ற தகவல் திரட்டை அவரால் வாசகரைக் கவரும் விதத்தில் எழுத முடிந்துள்ளது.

இந்த மாவட்ட வரலாறுகளை எழுதும் முயற்சி தமிழில் புதிது. இன்று வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளூர் வரலாறுகளை எழுதுதல் என்பது அமைகின்றது. அதே போல வாய்மொழி வரலாறுகளும் கவனப்படுத்தப் படுகின்றன.

உள்ளூர் வரலாறுகள் பண்பாட்டோடு தொடர்புடையவை என்பதை வ.கீதா, “மக்கள் வாழ்வையும் ஊர் வரலாற்றையும் அறிந்துகொள்ள பண்பாடு பற்றிய புரிதல் நமக்குத் தேவை. பொதுவாக, பண்பாடு என்பதை குறிப்பிட்ட சமுதாயத்தில் வழங்கும் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் முதலியவற்றுடன் தொடர்புடையதாக நாம் புரிந்துகொள்வது வழக்கம்” (உள்ளூர் வரலாறுகள், ப.15) என குறிப்பிடுவர்.

இந்த அடிப்படையில் சோமலெயின் வரலாறு குறித்த ஆக்கங்களில் பண்பாடு என்பது தவிர்க்க இயலாதக் கூறாக அமைந்துள்ளது.

“இந்திய வரலாற்று வரைவுகள் அனைத்திலும் காணப்படும் பொதுப்பண்பு அதன் மேட்டிமை (Elitism) சார்புதான். ஒடுக்கப்பட்டோர் மற்றும் விளிம்புநிலையினர் இவ்வரலாற்று வரைவிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களது குரல் அதில் இடம்பெறாது போய்விட்டது. பணிக்கர் கூறியது போல் ‘அதிகாரத்திற்கான போராட்டத்தைப் பிரதிபலிக்கும் தன்மையினால்’ சமூக வாழ்வில் அதிகாரமற்றவர்களுக்கு, வரலாற்று வரைவிலும் இடம் மறுக்கப்பட்டு விட்டது” (வரலாறும் வழக்காறும், ப.22 ) என்ற ஆ. சிவசுப்பிரமணியனின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டால் எளிய மக்களுக்கான வரலாற்று வரைவுகளின் அவசியத்தை விளங்கிக்கொள்ள இயலும். அடித்தளம், விளிம்பு, மாற்று... பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே சோமலெ மக்களிடமிருந்து ஒரு வரலாற்றைக் கட்டமைக்க முயல்கிறார்.

சோமலெ படைத்தளித்த வாழ்க்கை வரலாறுகளும், தல வரலாறுகளும், இலக்கிய வரலாறுகள், நிறுவன வரலாறுகள், மாவட்ட வரலாறுகள் ஆகிய யாவும் தமிழ்ச்சமூக வரலாற்று எழுதியலுக்கு அவரின் ஆகச் சிறந்தப் பங்களிப்புகளாக அமைகின்றன. அவரின் கடைசி நூலான ‘செட்டிநாடும் செந்தமிழும்’ கூட இவ்வகையில் கருதத்தக்கதே. இந்நூல்களில் அவர் தரும் வழக்காறுகள் குறித்து தனியே எழுதலாம்.

வரலாறு குறித்தும், வரலாறு எழுதுதல், வரலாற்றுப் பார்வை குறித்தும் சோமலெக்கு எந்த அளவு புரிதல் இருந்தது என்பது விவாதத்துக்கு உரியதே. ஆங்கில அறிவும், பரந்த வாசிப்பும், உலகின் பிற பகுதிகளில் நடந்துள்ள இப்பணிகள் பற்றிய அறிமுகமும், இதழியல் கல்வியும் இவரை இத்திசை வழியில் செலுத்தியிருக்கலாம். தமிழ் மக்கள், தமிழ்நிலம், தமிழர் வாழ்க்கை குறித்த அவரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இந்த வரலாற்று முயற்சிகளை மதிப்பிட வேண்டும். சோமலெ - உள்ளூர் வரலாற்று எழுதுகையின் முன்னோடி என்பது அவரைச் சிறப்பாக்கும்.