parentingகுழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி தாங்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு நல்ல குடிமகனாகக் கொடுப்பது பெற்றோர்களின் தலையாயக் கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகப் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சியும் வளர்க்கும் முறைகளும் அவர்களின் நாடு, இனம், மொழி, பொருளாதார நிலைமை, கல்வி, குடும்ப அமைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வேறுபடுகின்றன. குழந்தைகளும் பெற்றோர்களும் கூடிய குடும்ப அமைப்பில் குடும்ப உறுப்பினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நடக்கும் பாசப்பிணைப்பு பெற்றோர்கள் காட்டும் அக்கறை, உணர்வுப் பரிமாற்றம் ஆகியவைகளால் ஏற்படுகின்ற சூழலைப் (EMOTIONAL CLIMATE) பொறுத்துதான் பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்து எவ்வாறு பரிணமிக்கப் போகிறார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றி ஆராயும் மனவியலாளர்கள் அவர்களின் சமூக, மனவியல் வளர்ச்சிக்கு இந்த ஆரம்ப கால உணர்வுச் சூழல் மிக முக்கியம் என்கிறார்கள்.

முந்தைய தலைமுறைக் குழந்தைகள் அதாவது தற்போதைய பெரியவர்கள் முதியவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஆதிக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே சுதந்திரம் அதிகம் இருந்ததால் நடக்க ஆரம்பித்து வெளி உலகுக்கு வந்து பள்ளி கல்லூரி என்று விரியும் போது பெற்றவர்களின் மேற்பார்வைதான் குறைந்ததே ஒழிய அவர்கள் குழந்தைகளின் மீது வைத்திருந்த நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அதைவிடவும் சுற்றியுள்ள சமூகமும் அவர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் அளிப்பதாகவே இருந்தது. பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்குப் போய்ப் படிப்பது, சைக்கிள் ஓட்டுவது, மரம் ஏறுவது, ஊரில் உள்ள ஏரியில் குளிப்பது என்று இவர்கள் முழுவதும் தன்னிச்சையாக செயல்பட இளம் வயதிலேயே ஆரம்பித்து விட்டார்கள். கீழே விழுந்து அடிபட்டாலும், சிறு சிறு காயங்கள் ஏற்பட்டாலும் கூட பல நேரங்களில் பெற்றவர்களின் பார்வைக்குப் போகாது.

ஆனால் தற்காலப் பெற்றோர்கள் அப்படியில்லை. குழந்தைகள் மேல் பெற்றோர்களின் அக்கறை மிக மிக அதிகம். தாங்கள் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தைத் தங்கள் குழந்தைகள் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையால் அவர்களின் மேல் மிகுந்த ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். வசதி வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரம் இதற்குத் தடையில்லாமல் இருக்கும் போது தாங்கள் நினைத்தபடி குழந்தைகளை வளைத்து, வளர்த்து விட முயல்கிறார்கள். பல நாடுகளில் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே போதும் என்ற முடிவுக்கு வந்து விட்ட பிறகு பெற்றோர்களின் பார்வை குழந்தைகள் மீது மேலும் அதிகமாகப் படிய ஆரம்பித்து விடுகிறது. மேலும் பல்வேறு காரணிகளால் குழந்தைப் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதால் பொதுவாகவே பெற்றோர்களின் ஆதிக்கம் குழந்தைகள் மேல் ஆக்டோபஸ்ஸின் கரங்கள் போல் பல திசைகளில் இருந்தும் நீள ஆரம்பித்து விட்டது.

குழந்தைகள் வளரும் விதம் பற்றி ஆராயும் மனவியலாளர்கள் குழந்தைகள் வளர்ப்பு முறையை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். 1. சர்வாதிகாரப் பெற்றோர்கள். 2. அக்கறையும் அதிகாரமும் உள்ள பெற்றோர்கள். 3 புறக்கணிப்பு பெற்றோர்கள். 4. தாராள அனுமதி கொடுக்கும் பெற்றோர்கள். ஆனால் இதில் எந்த எந்த முறையிலும் சேராமல் ஐந்தாவதாக உள்ளவர்கள்தான் இந்த ஹெலிகாப்டர் பெற்றோர்கள்.

இவர்களை எப்படி அடையாளம் காணுவது?

இம்மாதிரியான பெற்றோர்கள் 24/7 குழந்தையைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவர்களின் உலகமே குழந்தைதான். குழந்தை மீது உள்ள அதிகப்படியான பாசத்தினால் எல்லாமே இவர்களுக்கு அதிகம்தான். குழந்தை பிறந்ததிலிருந்து, நடக்க ஆரம்பித்து, பள்ளி, கல்லூரி என்று சென்றாலும் இவர்கள் குழந்தையைப் பின் தொடர்வதை விட மாட்டார்கள். சமூகத்தையும் வெளி உலகத்தையும் தங்கள் குழந்தையின் எதிரிகளாகப் பார்ப்பார்கள். தங்கள் குழந்தைக்குத் தாங்கள் மட்டும்தான் பாதுகாப்பு என்று எண்ணிக்கொள்வார்கள். எப்போதும் குழந்தை அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். மனதளவில் குழந்தைக்கு நேர் மேலே இவர்கள் ஹெலிகாப்டரில் உட்கார்ந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களை புல்டோசர் பெற்றோர்கள் அல்லது லிகிகீழி விளிக்ஷிணிஸி பெற்றோர்கள் என்று கூட அழைக்கிறார்கள். காரணம் தங்கள் குழந்தைக்கு எந்தத் தடை வந்தாலும் இவர்களே உடைத்து சுக்கு நூறாக்கி விடுவார்கள். இவர்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் குழந்தைக்குத்தான். அதுபோல பிரதிபலனாகக் குழந்தைகளிடம் இருந்தும் நூறு சதம் எதிர்பார்ப்பார்கள். கொஞ்சம் கூடக் குறையக் கூடாது. எல்லாமே அதிகம்தான்.

ஒரு ஐந்து வயது வரையிலும் உள்ள குழந்தைகளை மிக எளிதில் தங்கள் வளையத்தில் வைத்துக் கொள்வார்கள். குழந்தையை நிழல் போல தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். குழந்தையின் நார்மல் வளர்ச்சிப் படிகளைக் கூட அந்த குழந்தை அனுபவிக்க விட மாட்டார்கள், நடக்க விட மாட்டார்கள். குழந்தையை மடியில் வைத்துத் தூக்கிக் கொண்டே தங்கள் வேலையை செய்வார்கள். குழந்தையைத் தனியாகவோ அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தையோடவோ விளையாட விட மாட்டார்கள். அதற்குப் பதில் அவர்களே எப்போதும் குழந்தையோடு விளையாடிக்கொண்டும், அந்த பிஞ்சுக்கு எல்லா நேரமும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டும், அதன் பழக்கத்தையே மாற்றி தங்களுக்குத் தகுந்த மாதிரி ஆக்கவும் விடா முயற்சி செய்வார்கள். குழந்தை தவழ்ந்து, தத்தித் தடுமாறி எழுந்து, கீழே விழுந்து மீண்டும் எழுந்து யாருடைய உதவியும் இன்றி சரியாக நடக்கக் கற்க வேண்டும். கீழே விழுந்தால் தானே எழுந்து நடக்கத் தெரியும். சிறு சிறு சிராய்ப்புகளும் காயங்களும் இல்லாமல் எப்படிக் கற்பது? தோற்றால் தானே வெற்றியின் சுவை தெரியும். குழந்தைப் பருவமே அந்தக் குழந்தைக்கு கூட்டுப்பறவை வாழ்க்கையாகி விடும். எந்த வாழ்க்கைத் திறனையும் எளிதில் கற்றுக் கொள்ள விட மாட்டார்கள்.

குழந்தையைப் பள்ளியில் சேர்த்தாகி விட்டால் போதும். குழந்தையைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்று இவர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். காலையில் குழந்தையைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி, குழந்தையின் பற்களை இவர்களே தேய்த்து விடுவார்கள், எவ்வளவு பெரிய குழந்தையாக இருந்தாலும் இவர்கள்தான் சாப்பாடு ஊட்டி விடுவார்கள். (கவனிக்கவும். பல் விளக்கச் சொல்லித்தரவோ அல்லது சரியான முறையில் சாப்பிடும் பழக்கத்தைச் சொல்லித்தரவோ முயற்சிக்க மாட்டார்கள்). குழந்தையின் வகுப்பில் மனதளவில் இவர்களும் மாணவர்களாகச் சேர்ந்து விடுவார்கள். குழந்தையின் வீட்டுப் பாடம் எல்லாம் இவர்களே போட்டு விடுவார்கள். தப்பித் தவறி வகுப்பு ஆசிரியர் இரண்டு மார்க் குறைவாகப் போட்டு விட்டால் போதும். மிகவும் டென்ஷன் ஆகி விடுவார்கள். அடுத்த நாளே பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியரை சண்டைக்கு இழுப்பார்கள். எப்படிக் குழந்தையின் விடைத்தாளைத் திருத்துவது என்று ஆசிரியருக்கே பாடம் எடுத்து விட்டு வருவார்கள். தங்கள் குழந்தைக்கு யார் யார் தகுதியான நண்பர்கள் என்று இவர்கள்தான் தேர்வு செய்து கொடுப்பார்கள். அம்மாதிரியான குழந்தைகளின் பெற்றோர்களை இவர்களே வலியனாகச் சென்று நண்பர்கள் ஆக்கிக் கொள்வார்கள். இம்மாதிரியெல்லாம் இவர்கள் எப்போதும் குழந்தையைத் தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தக் குழந்தையும் தன்னம்பிக்கை இல்லாமல், சுய கவுரவம் இல்லாமல், திறன்கள் எதுவும் கற்றுக் கொள்ளாமல், அதிக மன அழுத்தத்திலேயே வளர வேண்டிய கட்டாயம். சில நேரங்களில் குழந்தையே பெற்றோர்களிடம் தயவு செய்து பள்ளிக்கு வராதீர்கள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்து விடும். ஆனாலும் இவர்கள் கேட்டால்தானே!

இம்மாதிரியான பெற்றோர்களுக்கு இப்போது செல்ஃபோன் ஒரு வரப்பிரசாதமாகி விட்டது. செல்ஃபோனை உபயோகப்படுத்தி குழந்தையை எப்படி எல்லாம் எளிதாக வளர்த்து விடலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பார்கள். சிறு குழந்தையின் அழுகையை நிறுத்த அந்தக் காலத்தில் தாலாட்டு: இந்தக் காலத்தில் செல்ஃபோனில் பாட்டு. குழந்தையை சாப்பிட வைக்க செல்ஃபோனைக் கொடுத்துக் கவனத்தைத் திசை திருப்பி எளிதில் சாப்பாடு ஊட்டி விடுவார்கள். அடம் பிடிக்காமல் சமத்தாக வளர்க்க, என பல உபயோகங்கள் அந்த செல்ஃபோனுக்கு. பள்ளி கல்லூரி செல்லும் குழந்தையின் கையில் ஒரு செல்ஃபோனைக் கொடுத்து விட்டு, குழந்தையைக் கண்காணிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால்தானோ என்னவோ அமெரிக்காவில் ஜியார்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ரிச்சர்ட் முல்டென்டோர் -ஸிமிசிபிகிஸிஞி விஹிலி­ஜிணிழிஞிளிஸிணி - என்பவர் , செல்ஃபோனை உலகத்திலேயே மிக நீளமான தொப்புள்கொடி என்றார்.

இம்மாதிரி குழந்தை மேல் அதிக அக்கறையோடு வளர்க்கும் முறை காலம் காலமாக நம் இந்தியா உள்பட எல்லா கிழக்காசிய நாடுகளில் உள்ளவர்களாலும் நடைமுறைப் படுத்தப்படும் வழிதான் என்றாலும் நம் முன்னோர்கள் ஒரு கட்டத்துக்குமேல் குழந்தைகளைத் தொந்தரவு செய்ய மட்டார்கள். பெரும்பாலும் விடலைப் பருவத்துக்கு மேல் அதிகம் குழந்தைகள் வாழ்வில் குறுக்கிட மாட்டார்கள். ஆனால் இந்த நவீன யுகப் பெற்றோர்கள் எப்போது குழந்தையைத் தன்னிச்சையாக விட வேண்டும் என்று தெரியாமல் முழிக்கிறார்கள். எந்தப் புள்ளியில் குழந்தையை விட்டு விட வேண்டும் என்று தெரிந்தால் இருவருக்கும் நல்லது. தங்கள் வாழ்வின் அந்திம காலங்களில் குழந்தைகளிடம் இருந்து பாதுகாப்பு உள்பட அனைத்தையும் எதிர்பார்ப்பதால் சிறு பிராயத்தில் இருந்தே குழந்தைகள் மீது நிறைய அக்கறை எடுத்து வளர்த்து ஆளாக்கிவிட முயல்கிறார்கள். ஆனாலும் என்னவோ பெற்றோர்கள் போட்ட சாலை மீது குழந்தைகள் நடக்கவே தடுமாறுகிறார்கள். அதை விடவும் குழந்தைகளை எந்த சாலைமீதும் நடக்கும் திறமை உள்ளவர்களாக வளர்க்கலாமே!

வசதி படைத்த பெற்றோர்களால் இம்மாதிரி, குழந்தைகளைக் கண்காணித்து, அவர்களுக்காக எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து மிக எளிதில் செய்துவிட முடியும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்களின் குழந்தை வளர்ப்பு முறை ஒரு முன்னுதாரணமாகத் தெரியும். ஆனலும் வீட்டுக்குள்ளே பெற்றோர் - பிள்ளை உறவு அவ்வளவாக நன்றாக இருக்காது. இம்மாதிரி எப்போதும் குழந்தைகள் மீது ஒரு கண்வைத்துக்கொண்டு, அவர்களை எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே ஒருவித மனச் சுமையோடு குழந்தை வளர்ப்பது நல்லதா?

இதனால் பெற்றோர்களுக்கு என்ன லாபம்?

  1. தங்கள் குழந்தையை மிகவும் பாதுகாப்பாக வளர்ப்பதாக நினைக்கிறார்கள்.
  2. வெளியில் மற்றவர்களுடன் பழகி ஊர் வம்பை, சண்டையை வாங்கி வந்து விடுவார்களோ என்ற பயம் இல்லை என்கிறார்கள்.
  3. தாங்கள் கிழித்த கோட்டைத் தாண்டாத பிள்ளை, சொன்ன சொல்லைத் தட்டாத பிள்ளை என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

குழந்தைகள் இம்மாதிரியான சூழலை அறவே விரும்புவதில்லை. இருந்தாலும் இளம் பருவத்தில் இருந்தே வேறு மாற்று தெரியாமல் வளர்ந்ததால், விடலைப் பருவத்திற்குப் பிறகுதான் இவர்கள் தடுமாறுகிறார்கள். இந்த பருவத்தில் பெற்றோர்களின் பிடிமானமும் தளர்ந்து விடுகிறது. வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் முடிவு எடுக்கும் திறன் இன்றித் தவிக்கிறார்கள். முக்கியமாக இவர்களுக்குத் தங்களின் மீதும், தங்களின் திறமைகள் மீதும் நம்பிக்கை வருவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்வில் பிரச்சினையை எதிர்நோக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தயக்கம்தான். தடுமாற்றம்தான்.

வாழ்க்கையில் உயருவதற்கு முடிவு எடுக்கும் திறமை மிகவும் அவசியம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கலாமே ஒழிய முடிவு நாம்தான் எடுக்க வேண்டும். முடிவு எடுத்தல் என்ற திறமையை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையிலும் அதன் சாதக பாதகங்களைப் பகுத்தறிந்து சிந்தித்து முடிவு எடுக்கத் தெரிய வேண்டும். முக்கியமாகத் தாங்கள் எடுத்த முடிவுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்ல வேண்டும். எடுத்த முடிவு தவறாகித் தோல்வி வரும் போது, துவண்டு விடாமல் அதை வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றத் தெரிய வேண்டும். தோல்வியின் காரணம் அறியும் போது நிச்சயமாக அந்தக் குழந்தை அடுத்த முறை நல்ல முடிவை எடுக்கக் கற்றுக் கொள்ளும். அது குழந்தைக்கு தன்னம்பிக்கையையும், சுய கவுரவத்தையும், ஆளுமைத் திறமையையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும்.

- மருத்துவர் ப.வைத்திலிங்கம்