periyar 350பெரியார் எனில் பிராமண எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்பு என்று கருதுகிறவர்கள், அவரைக் கண்ணை மூடிக் கண்டவர்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது என்றும், இந்தியை எதிர்த்து தமிழ்ப் பண்பாட்டுக்கே ஆபத்து வந்துவிடும் என்று விஞ்ஞானப் பார்வையோடு எதிர்த்தவர் என்றும், ஒருமொழிக்குள் இன்னோர் மொழி வெறும் சொல்லை மட்டும் அழைத்து வருவதில்லை; ஓர் இனத்தில் மரபணுக்களை மாற்றும் கலாச்சாரக் கிருமிகளோடு தான் நுழைகிறது என்பதை ஆய்ந்தறிந்த பண்பாட்டு விஞ்ஞான பெரியார் என்றும் கவிப் பேரரசு வைரமுத்து கூறுவார்.

இத்துடன் நில்லாது சங்க இலக்கியத்தில் பிறமொழிக் கலப்பு இரண்டு விழுக்காடு. தல புராணங்களிலும் திருப்புகழிலும் 60 முதல் 70 விழுக்காடு என்பது தமிழ்ச் சொல்லியல் வரலாறு. பெரியார் கொடுத்த பெருங்குரலுக்குப் பிறகுதான் பிறமொழிகளின் ஊன்றுகோல் இல்லாமல் தன் சொந்தக் கால்களால் நடக்கத் தலைப்பட்டது தமிழ் என்பார் கவிப்பேரரசு.

மேற்கண்ட கருத்துகளுக்குத் தமிழகக் கலைச் சொல்லியல் வரலாறு வலுவூட்டுகிறது. அறிவியல் நூல்கள் தமிழில் எழுதப்பட்டு பள்ளிப் பாடங்களாக வைக்கப்பட்ட நிலையில் 1932இல் சென்னை அரசு ஒரு கலைச்சொல் குழு அமைத்து அதன் சார்பில் கலைச்சொல் பட்டியல் ஒன்றை வெளியிட்டது.

இப்பட்டியலில் விளங்கிக் கொள்ள இயலாத வடமொழிச் சொற்கள் இருந்தன. இக்குறைகளைக் களைந்து சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினரால் தொகுக்கப் பெற்ற சொற்களை நூலாக்கம் செய்து 1938ல் கலைச் சொற்கள் என்ற தலைப்பில் வெளியிட்டனர்.

அன்றைய தினமணி இதழ் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் கலைச்சொற்கள் எல்லாவற்றையும் தனித் தமிழில் ஆக்க வேண்டுமென்று சொல்வது உபயோகமல்லாத வேலை என்றும், இந்தியா பூராவுக்கும் பொதுவான ஒரு பாஷையில் கலைச்சொற்கள் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இவ்விதமாக கலைச்சொல் பற்றித் தமிழக அறிஞர்களிடம் கருத்து மோதல் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அன்றைய சென்னை மாகாண அரசு சீனிவாச சாஸ்திரி தலைமையில் கலைச் சொல்லாக்க இரண்டாவது குழுவை (1940) உருவாக்கியது.இக்குழு தனது அறிக்கையை 24-7-1940இல் அரசுக்கு அளித்தது.

இக்குழு செய்த பரிந்துரைகளில் ஒன்று இந்தியா முழுமைக்கும் பொதுவான கலைச்சொற்களை உருவாக்க முயலவேண்டும் என்பது (தமிழ் பொழில் 1940-41 16: 7.பக். 248) மேலும் திராவிட மொழிகளுக்குச் சமஸ்கிருத வேர்களைக் கொண்டு சொற்களை ஆக்கிக் கொள்ளலாம் என்றும் இக்குழு பரிந்துரைத்தது. இக்குழுவின் பரிந்துரை அன்றைய தமிழர்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

25-12-1940 இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் ஒரு பெரும் மாநாட்டைக் கூட்டியது.தி.மு. நாராயணசாமி பிள்ளை, இராசா சர் முத்தையா செட்டியார் போன்ற பல பெருமக்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும் இக்குழுவைக் கண்டித்து பல கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. எடுத்துக்காட்டாக 1940 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் கண்ணன் டாக்கீசில் கலைச்சொல்லாக்கக் கண்டன மாநாடு நடைபெற்றது.

1941இல் தஞ்சையிலும், 1942இல் திருநெல்வேலியிலும், 1941இல் மதுரையிலும், 1945இல் சென்னையிலும், 1946இல் மீண்டும் திருநெல்வேலியிலும் கண்டன மாநாடுகள் நடைபெற்றன.சாஸ்திரி குழுவிற்கு எதிரான கண்டன அறிக்கையைத் “தமிழறிஞர்க் கழகம்” என்ற அமைப்பு அச்சிட்டு, தமிழகம் முழுவதும் வெளியிட்டது.

இதற்காகச் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் (31-8-1941) சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமி, டி.எல். நடராசபிள்ளை, ரெவரண்ட் அருள்தங்கையா, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சி.என். அண்ணாதுரை, மு. இராசகண்ணு, கே.எம். பாலசுப்பிரமணியம், டி. சண்முகம் பிள்ளை ஆகியோர் பேசுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இதில் கே. சுவாமிநாத ஐயர், டாக்டர் சி.ஆர். ரெட்டி, எல்.எம். ஸ்பிதம், வித்வான் ஜிபி. சோமையாஜி, பி.டி. சீனிவாச ஐயங்கார், டி. இராம்பிஷரோதி, எஸ். வெங்கட்டராமையர் போன்றோர் இடம் பெற்றனர். இக்கலைச்சொல்லாக்கக் குழுவில் தமிழறிஞர் யாரும் இடம் பெறாதது கண்டிக்கத் தக்கது என்றும், கலைச்சொல் பட்டியலில் பெரும்பான்மைச் சொற்கள் தமிழாகவே இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது.

இதன் விளைவாக, சீனிவாச சாஸ்திரி குழுவில் இரா.பி. சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிரமணியம், அ. முத்தையா போன்ற தமிழன்பர்கள் பின்னர் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும், இக்குழுவின் அழைப்பின் பேரில் சச்சிதாநந்தம் பிள்ளை, ஜெ.பி. மாணிக்கம், பெ.நா. அப்புசாமி ஆகியோரும் கலந்து கொண்டு ஆலோசனை கூறினர்.

அக்கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சா.முகம்மது உஸ்மான் பேசியதாவது.

"ஆங்கிலம், லத்தின் முதலிய மொழிகளின் கலைச்சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களை ஆக்க வேண்டுமென்பதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். தமிழில் கலைச் சொற்களை ஆக்குவதெல்லாம் பொது மக்களுக்கு எளிதில் பொருள் விளங்கும்படி செய்வதற்கேயாம். எனவே, தமிழ் மொழியின் பண்பிற்கேற்றவாறு அறிவியல் சொற்களை அமைக்க வேண்டும் அவை மாணவர்களாலும் பொது மக்களாலும் எளிதில் உணர்ந்து கொள்ளப்படத்தக்கனவாக இருத்தல் வேண்டும்.

அத்தகைய சொற்களை அமைக்கும் வண்ணம் ஆங்கிலத்திற்குப் பதில் வேறு பிறமொழிச் சொற்களை (வடசொற்களை) அமைப்பதனால் நிறைவேறாது. தமிழ்க் கலைச்சொல் ஆக்குவதில் என்ன வருத்தம் நேரிட்டாலும் தமிழை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க் கலைச்சொற்களையே கண்டுபிடித்து வழங்கவேண்டும். இந்தியா முழுவதுக்கும் பொதுவான அறிவியல் கலைச்சொல் அமைப்பது எளிதல்ல" (செந்தமிழ்ச் செல்வி 1941 பக் 251 - 254)

இதன் தொடர்ச்சியாக, சாஸ்திரி குழுவிற்கு எதிரான கருத்துக்களை, “குதிரைக்கு முன் வண்டி” என்ற விடுதலை இதழின் தலையங்கம் வாயிலாக, பெரியார் (6.07.1946) கண்டனம் செய்தார். மீண்டும் “கலைச் சொற்கள் பெயரால் தமிழ்க் கொலை” என்று தலைப்பிட்டு (11.10.1946) இக்குழுவைத் தன் தலையங்கத்தின் மூலம் பெரியார் வன்மையாகக் கண்டித்தார்.

“பழைய கலைச் சொற்கள் பட்டியல் ஒன்றிருக்கும் போதே இப்போது மற்றொரு பட்டியலை ஏற்பாடு செய்வதன் உட்கருத்து என்னவென்பது விளங்கவில்லை. ஒருக்கால் பழைய பட்டியலைக் காட்டினாலும் அதிகமான வடமொழிச் சொற்களை இந்தப் பட்டியலில் நுழைப்பதற்காக இந்த ஏற்பாடா? அப்படியானால் தமிழ் மந்திரியான தோழர் அவினாசிலிங்கம் அதற்கு இணங்கியது எப்படி?

இப்போதே ஆரியத்தில் தொடர்பினாலும் செய்தித் தாள்கள் ஆரியர் ஆதிக்கத்திலிருந்து வருவதாலும், நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் அவைகளின் இடங்களை வடமொழிச் சொற்களும், இங்கிலீஷ் சொற்களும் இடம் பிடித்துவிட்டன.

தமிழில் பிறமொழிச் சொற்களே கலக்கக்கூடாது என்ற முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நான் கூறவில்லை. எளிய பழக்கமான ‘தண்ணீர்' இருக்கும் போது ‘ஜலம்' வேண்டியதில்லை என்கிறோம். ‘தூக்கம்' இருக்கும் போது நித்திரை வேண்டாம் என்கிறோம்.

எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச் சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்களே இனி இயற்றப்படுதல் வேண்டும். “வழக்கத்திலிருந்து வந்தது” என்ற காரணத்திற்காக, கரடுமுரடான வடமொழிச் சொற்களைத் தமிழில் திணித்து விட வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

இப்போதே அதாவது தொடக்கத்திலேயே கலைச்சொற்களைத் தூய தமிழ்ச் சொற்களாக அமைத்து விட்டால் பிறகு போகப் போக அவைகளே பழக்கத்தில் வந்து விடும்.

சென்னை அரசாங்கத்தார் தொகுத்து வரும் கலைச்சொற் பட்டியலை, எல்லாத் தமிழ்ப்புலவர்களுக்கும் தமிழாசிரியர்களுக்கும், தமிழ்ப் பத்திரிகாசிரியர்களுக்கும் அனுப்பி அவர்களது திருத்தங்களையும் போட்ட பிறகு தான், சர்க்கார் அந்தப் பட்டியலை ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஏதேச்சதிகார முறையில் நடந்து கொண்டால் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. கல்வி மந்திரியின் குறிக்கோளும் கை கூடாது” என்று தன் கருத்தை எதிர்கால தமிழ் வளர்ச்சி குறித்து எழுதியது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் குறிப்பிட்ட கருத்துக்களை விட மேலும் மிகையாக தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர் பெரியார் என்று அறியமுடிகிறது. இக்கருத்தை அவர் மொழியில் பார்ப்போம். “நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன்” என்பதே பெரியாரின் வாக்குமூலம்.

பெரியாரின் கலைச்சொல்லாக்கக் கருத்துக்கள் காலனி ஆட்சி காலத்தில் கூறப்பட்டவையாகும். இக்காலகட்டத்தில் இந்தியா பூராவும் பொதுவான பாஷையில் கலைச்சொற்கள் இருக்க வேண்டும் என்பதை, பெரியார் வழக்கத்தில் உள்ளது என்று வடமொழிச் சொற்களைத் தமிழில் திணித்து விட வேண்டாம் என்று எச்சரிக்கை விட்டதோடு, எதேச்சதிகார முறையில் நடந்து கொண்டால் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்றும் கனல் கக்கும் வார்த்தைகளை எழுதினார்.

இது ஏன் என அறிவியல் ரீதியாக ஆராய்ந்தோமாயின் மொழி வளர்ச்சிக்கு அடிப்படை மொழி தக்கவைப்பு (Language Maintenance) பெரும்பான்மை எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட மொழிகளுக்கு மொழி தக்க வைப்பு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், சிறுபான்மையினர் பேசும் மொழிகளுக்கு இது பிரச்சினையாகக் கூடும். ஒரு மொழியைப் பேசும் மக்கள் எப்பொழுது குடும்பச் சூழலிலும், உறவினர் சூழலிலும், நண்பர்கள் சூழலிலும், நூல்களிலும் வேறொரு மொழியைப் பயன்படுத்துகிறார்களோ அப்பொழுதே அவர்கள் மொழி இழப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையை எதிர் நோக்குகிறது என்பது பொருள் என்பதனாலேயே பெரியார் தன் கருத்தை எச்சரிக்கை செய்து வலியுறுத்தி இருக்க வேண்டும்.

மேலும் மொழி ஈடுபாட்டை அடித்தளமாகக் கொண்டு அறிவு வழியில் தமிழை நோக்கும் நோக்கே மொழி வளர்ச்சி வித்தாக அமையும் என்றும் பெரியார் எண்ணியிருக்கக் கூடும்.

பெரியாரின் கருத்துக்கு ஒத்தவாறு 74 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது தாய்மொழியிலேயே கலைச் சொற்களை உருவாக்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் போன்ற வளர்ந்த மொழியின்றி மங்கோலியன், சோமாலியன், லித்வியன் போன்ற மொழிகளும் தம் மொழி கலைச் சொற்களுக்குத் தலைமை இடம் தரக் காண்கிறோம்.

வடமொழிச் செல்வாக்கிற்கு கண்டனம் எழவே 1959இல் கல்லூரித் தமிழ்க் குழு அமைக்கப்பட்டது; இக்குழு கீழ் காணும் நெறிகளைப் பின்பற்றியது.

  1. இயன்றவரை உலகளாவிய கலைச்சொற்களைப் பயன்படுத்துதல், தேவையான அளவுக்கு இவற்றைத் தமிழாக்குதல்.
  2. நன்கு அறியப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல்
  3. அவ்வாறு தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தருதல்.

தமிழ்வழிக் கல்வி கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில் தோன்றிய கல்லூரித் தமிழ்க் குழு உடனடிப் பணியாக உலகளாவிய ஆங்கிலச் சொற்களை எடுத்தாள வேண்டிய நிலைக்கு ஆளானது.காலப்போக்கில் அக்கலைச் சொற்களில் பல தமிழாக்கப்பட்டன என்பது வரலாறு.

தமிழ்நாட்டிலும், கலைச் சொல்லாக்கத்திற்குத் தமிழுக்கு முதலிடம் என்ற கொள்கை 1946க்குப் பிறகும் நீடிப்பதால் கலைச் சொல்லாக்க முயற்சியின் விளைவாக நல்ல தமிழில் ஒன்றரை லட்சம் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு, அவை கலைச்சொல் பட்டியல்கள், அகராதிகள் என்ற வடிவில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சொல்லாக்கத்துறையில் மேலும் ஒரு தூண்டு கோலாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக அன்றைய சென்னை அரசு 27-12-1956இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றியது.

- டாக்டர் சு.நரேந்திரன்