ஆங்கில மருத்துவம், அதாவது அலோபதி என்பது ஹிப்போகிரடிஸ் காலமான கி.மு. 460ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது. ஆனால், தமிழில் இம்மருத்துவம் தமிழர்களுக்குப் புதிது. இது குறித்த நூல்களை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் காண முடிகிறது. ஏனெனில், நம் நாட்டு மருத்துவர்கள் உடற்கூறைச் சரிவரத் தெரிந்து கொள்ளப் பிற நாட்டு மருத்துவ நூல்களை நாடவேண்டிய நிலை ஏற்பட்டதாலும், அலோபதி விரைவு மருத்துவ முறையாகத் திகழ்வதாலும், ஆங்கில மருத்துவ நூல்கள் சுய ஆசிரியர்களைப் கொண்டு மொழி பெயர்க்கப்பட்டன. பிறகு இம்முயற்சிகளில் தனி நபர்களன்றியும் நிறுவனங்களும் ஈடுபட்டு வந்தன. (கிறித்தவ இலக்கியச் சங்கம்; ஓரியண்டல் லாங்மேன் பப்ளிஷிங் ஹவுஸ்). இந்நூல்கள் தமிழகம் நீங்கலாக, தமிழர் குடியேறிய நாடுகளிலிருந்தும் வெளி வந்துள்ளன. (பூரணஜீவியம் - சிங்கை, மானுட மர்ம சாஸ்திரம் - இரங்கோன், அங்காதிபாதம்- இலங்கை)

இலங்கையில் முதல் ஆங்கில மருத்துவ நூலாக்கம் - கடுந்தமிழ் - மொழித்தூய்மை குறைவு வடமொழித் தாக்கம் மிகுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மருத்துவப் பணியைத் தொடங்கிய கிறிஸ்தவப் பாதிரியார் டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் எழுதிய முதல் நூல், ‘அங்காதி பாதம் சுகரணவாத உற்பாலனம்’ (1852) என்பது ஆகும், இதில் வட மொழிச் செல்வாக்கு மிகுதி என்றாலும் அது 19 ஆம் நூற்றாண்டின் மொழிநடையை வெளிக் காட்டி அமைகிறது.

நோய், குணம், பிரயோகம் என்று முறையே நோய் குறித்த குறிப்பு, அறிகுறி மற்றும் மருத்துவம் என்ற தலைப்புகளிலேயே பாடநூல் போலவே எழுதப்பட்டுள்ளது; படங்கள் நிறைந்து காணப் படுகின்றன. இரண வைத்தியம் நூலில் உடற்கூறு. உடலியக்கங்கள் பற்றிய செய்திகள் நூலின் ஆரம்ப நிலையில் விவரிக்கப்பட்டுள்ளன. புரிதிறன் எளிமை யாக அமையவில்லை.

“இப்புத்தகத்திலே புதுச்சொற்கள் கூடியளவு கொஞ்சமாய்க் காணப்படும், அவைகளும் அச் சொற்கள் வழங்கப்பட்ட பொருள்களின் சில குறிகளைப் பற்றிச் சமஸ்கிருத பாஷையிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டன.” இது கிறீனின் கூற்று.

 ஏனெனில், இது 1834 இல்வெளிவந்த வில்சன் என்பவரின் சமஸ்கிருத இங்கிலீஸ் அகராதியும், பிறகு வில்லியம்ஸ் (1857) தயாரித்த ஆங்கில வட மொழி அகராதியும் இவருக்கு நூல் எழுதப் பெரு மளவில் உதவின. ஆகவேதான், நூலின் பெயர்கூட வடமொழியில் உள்ளது.

கிறீனின் உரைநடையில், “துணையாளியாவது வைத்தியனுடைய ஏவலின்படி நோயாளிக்கு உதவு செய்யும் ஆளாம், வைத்தியனுந் சந்திர வைத்தியனும் வியாதிகளைச் சொஸ்தப்படுத்தும்படி அவரெவர்க் குரிய சாத்திரங்களைப் படித்துப் பயில்வது போல...” என்ற விதத்தில் அக்காலப் பயன்பாட்டில் உள்ள மொழிநடையும் அப்பகுதியில் விளங்கிய பேச்சு நடையும் காணப்படுகின்றன. மேலும், மொழிபெயர்ப்பு நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாது, கருத்தை உள்வாங்கி நீண்ட வாக்கியத் தொடராக எழுதப்பட்டுள்ளது. சுருங்கக்கூறி விளங்க வைக்கும் முறை கையாளப்படவில்லை.

உரைநடையில் வடமொழிக் கலப்பு அதிகம் (சத்திர வைத்தியன், வியாதி, சொஸ்தம்). மேலும், ஆங்கிலச் சொல் பயன்பாடும் மிகுதி (டிம்பெணம்). உரைநடை சொல்லாட்சியின்போதும், மிச்சமான என்ற பேச்சுத் தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டு உள்ளன. கிரந்த எழுத்துக்கள் பெருமளவில் காணக் கிடக்கின்றன (அங்க சாஸ்திரம், விஷேசஷித்து, அஸ்தி). ஒரு கலைச்சொல்லுக்கு பல நிகரன்கள் தரப்படுகின்றன. (Abortion - கருவழிதல், அசனுகம், மிஸ்காறிச்சு, அபார்சன்). இதில் ஆங்கிலச் சொற்கள் பல எழுத்துப் பெயர்ப்புப் பெறுகின்றன.

சில இடங்களில் எழுத்து வடிவம் மாறிக் காணப் படுகின்றது. (சர்க்கரை - சருக்கரை என மாறி யுள்ளது). உரைநடையின் இடையில் எண்கள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. இவருடைய ஆரம்பகால நூல்களில் கலைச்சொற்கள் நூலின் கடைசியில் பின்னிணைப்பாக உள்ளன. கலைச் சொல்லாக விதிகளையும் கொடுத்துள்ளார். மேலும், ஓர் அகராதியையும் இவர் பதிப்பித் திருப்பது ஆரம்ப காலத்தில் தமிழ் வளர்ச்சியில் இவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது எனலாம்.

தமிழ்நாட்டில் முதல் மருத்துவ நூல்

டாக்டர் கிறீனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன்முதலில் மருத்துவ நூல்களை எழுதியவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் டிரசராக வேலை பார்த்த ம. ஜகந்நாத நாயுடு. கிறீன் நூல்களைப் போலவே இவருடைய நூல்களின் பெயர்கள் வட மொழியிலே உள்ளன. (பைஷஜகல்பம்). உரை நடை வாக்கியங்கள் நெடிதாக வடமொழிக் கலைச் சொல்லை மிகுதியாகக் கொண்டு உள்ளன, நூலில் மொழிபெயர்ப்பு (சாரிர வினாவிடை - 1866) இரண்டுஆங்கில நூலையொட்டி இருப்பினும், ஆங்கில மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவமும் இணைந்து வினாவிடை என்ற யுத்தியுடன் நூல் எழுதப்பட்டுள்ளது.

உரைநடையில் சில கடின மான சொற்களுடன் சாதாரண சொற்களும் காணப்படுகின்றன. “தேஹ போஷணைக்காகப் புசிக்கப்பட்ட பதார்த்தங்களைப் பக்குவப் படுத்தி, அதிலிருக்கிற ரஸம், ரத்தத்திற் போய்ச் சேரும்படி செய்கிற தொழிலுக்கு ஜீரணம் என்று பேர்”. நோய்களுக்கு வடமொழித் தலைப்பு கொடுக்கப் பட்டுப் பிறகு அதற்குச் சிறு தலைப்புகளில் ரோகலக்ஷணம், சிகீச்சை கிரமம் எனப் பத்தி பிரிக்கப்பட்டுச் செய்திகள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன.

கிறீனைப் போலவே நோய்க்கான தலைப்பு களில் வடசொற்களே 4-5 இருப்பினும் அத்துடன் ஓரிரு நல்ல தமிழ்க் கலைச்சொற்களும் உள்ளன. (Stomch - தீனிப்பை, குக்ஷி, இரைப்பை, ஜடரம், உதரம், அன்னாஸயம், பக்குவாஸயம், சூமாஸயம்). ஆனாலும், பெரும்பாலான இடங்களில் இந்தத் தமிழ்க் கலைச் சொற்கள் உரைநடையில் பயன் படுத்தப்படவில்லை. கிரந்த எழுத்துக்களும், ஆங்கில எழுத்துப் பெயர்ப்புச் சொற்களும் தங்குதடையின்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. (ஆயில் ஆவ் ஸின்மென்).

மேலும், ஒரு சொல்லைக் கூறும்போது இங்கிலீஸில் இப்படிக் கூறப்பட்டுள்ளது என்று தமிழில் எழுத்துப் பெயர்த்தும், பிறகு ஆங்கில எழுத்திலும் கொடுத்து விடுகிறார். (இங்கிலீஸில் ஸெப்டம் - Septum) ஆக ஆங்கிலம் தெரியாதவர் கூட இந்நூலைப் படிக்க வாய்ப்பாக அமைகிறது. அக்காலத்தில் வழக்கிலிருந்த சொற்களும் அடைப்புக் குறிக்குள் உள்ளன. (நஞ்சு Placenta - மாயை), பேச்சுச் சொற்களும் ஆங்காங்கே (கிட்டவே) காணப்படுகின்றன. மருத்துவம் கூறும்போது சில கட்டங்களில் ஆங்கில மருந்துகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பிறகு அது மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. நூலில் படங்கள் இல்லை. அட்டவணை என்ற இடத்தில் கலைச்சொற்கள் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் பொதுவாக, எளிமை கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், இந்நூலாசிரியர் இந்தியா முழுமையும் சுற்றி அலைந்து ஆயுர்வேத மருத்துவச் செய்திகளைத் திரட்டிய பின், நாட்டு வழக்கு சம்பிரதாயங்களும் சேர்த்தே மருத்துவர்களுக்காக எழுதியுள்ளார்.

இலங்கைத் தமிழரின் நூல் - மொழித் தூய்மைக்கு முதலிடம், கருத்துத் தெளிவு இல்லை

டாக்டர் சின்னத்தம்பி இலங்கை பல்கலைக் கழகப் பெண் நோய் மருத்துவப் பேராசிரியர் 1947 தொடங்கி 1980 வரை ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்.

நூலின் உரைநடை பெரும்பாலான இடங்களில் நீண்ட, நெடிய தொடர் வாக்கியங்களாகவும், சில சிறுசிறு வாக்கியங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. இதில் சொற்கள் தமிழகத்தில் வழங்காத, ஆனால் இலங்கையில் நடைமுறையிலுள்ள பல சொற்கள் (சிறுநீர்- ஊறுதிரி, கொசு-நுழம்பு) காணப்படுகின்றன. உரைநடையில் தூய சொற்களை மிகை யாகக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே வட சொல்லும் காணப்படுகின்றது. (சொஸ்தம் - வியாதி). மொழிநடை பெரும்பாலும் கடினமான உரை நடையில் உள்ளது. “வசீன் உப்பதித்தல் தொற்றைக் குறைத்தபோதும் ஒரு நிலைப் பேறாக ஏமமளிப்பைச் செய்வதில்லை... ஏமமளிப்புற்றவர்கள் நோய்ப் படின் அவ்வளவு வருந்துவதில்லையாம்.” வழக்குச் சொற்கள் தலையிடி, ஓங்காளம். பீச்சல் கழிவு எனக் காணப்படுகிறது. இருப்பினும் மொழிநடை எளிதில் புரிந்து கொள்ளும்படியும். விளங்கக் கூடியதாகவும் இல்லை. மேலும், நோய்களின் பெயர்களில் தமிழகத்தில் வழக்கில் இல்லாத (விசர்நோய் - வெறிநாய்க்கடி; குட்டை நோய் - தொழுநோய்) சொற்களும் உள்ளன.

Typhoid - தைபொயிட்டு, Tetanus - தற்றெனசு. Tetracyclin - தெத்ராசைக்கிளின், Cholera - கொலாறா என்று எழுத்துப் பெயர்ப்புச் செய்யப் பட்டுள்ளன. இவரின் உரைநடையில் கிரந்த எழுத்துகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன என்றாலும் கருத்துத் தெளிவில்லை. இவர் உரை நடையில் விரையழற்சி - விதையழற்சி ஆகவும், நோயாளி - நோயாளர் ஆகவும் மாறி உள்ளன. இதுபோல Scolin இசுகோலின் என இலக்கண விதிப்படி எழுதப்பட்டுள்ளது, பிராண்டுதல் விறாண்டுதல் என்றும் சாவு சா என்றும், நோய் நோ என்றுமே பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன, மேலும் சில இயல்பு வழக்குச் சொற்களும் உரைநடையில் உள்ளன (முலை, தலைமயிர், யோனி) புரிதிறனும் எளிமையாக அமையவில்லை.

உள்ளடக்கமாக இலங்கையில் குறிப்பிட்ட நோய் எவ்விடங்களில் காணப்படுகிறது, எக்காலங்களில் பரவும் மற்றும் இதுவே உலக நாடுகளில் எங்கெங்கெல்லாம் அதிகம் உள்ளது என்பதுடன், அறிகுறி, மருத்துவம், பிண ஆய்வு முதலியன குறித்தும் எழுதப்பட்டுள்ளன. முந்தைய நூல்களைப் போல் அல்லாது மற்ற மருத்துவ முறைகளோ உள்நாட்டு நடப்பு மருந்து களோ இடம்பெறவில்லை, இது முழுமையான ஆங்கில மருத்துவர்களுக்கான மருத்துவ நூலாக உள்ளது.

உரைநடையில் தமிழ்ச்சொற்கள் கூடி

வடசொல் குறையத் தொடங்கிய காலம்

1932 க்குப் பின் வடசொற்களும் ஆங்கிலச் சொற்களும் மிகுந்திருந்தாலும் பிறகு அரசியல் மாற்றம் காரணமாகத் தமிழ்ச் சொற்கள் மிகுந்து உரைநடையில் ஒரு பெருத்த மாற்றம் காணப் படுகிறது, இதனடிப்படையில் அக்காலக் கட்டத்தில் வெளிவந்த (உங்கள் குழந்தை, உடலுறுதி) நூல்களில் உரைநடை எளிமையாக, நல்ல தமிழ்க் கலைச்சொற்களுடன் உள்ளது.

“தாயின் உடலுக்குள் கையும் காலும் அடக்க மாகக் கிடந்த குழந்தை பிறந்த நேரத்திலிருந்து சூழ்நிலைகளிலிருந்து எழுகிற அருட்டிகளுக்கு ஆளாகிறது.” (உங்கள் குழந்தை, 1947).

உடலுறுதி (1938) நூலில் உடற்கூறு பற்றிய படங்களும், நோய்த் தடுப்பு முறையுடன் யோகா சனமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன, ஆங்கில எழுத்துப் பெயர்ப்புகளும், கிரந்த எழுத்துக்களும் குறைவாகவும் தமிழ்ச் சொற்கள் மிகுந்தும் காணப் படுகின்றன.

மருத்துவத் தமிழின் பொற்காலம் - இலக்கண நெகிழ்வுடன் கருத்துத் தெளிவிற்கு முதலிடம்

1960க்குப்பின் பாடநூல் வரிசையில் அரசு நிறுவனங்களான தமிழ்ப் பாடநூல் நிறுவனமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இளநிலை பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தின் கீழ் பாட நூல் களை வெளியிட்டுள்ளன.

பாடநூல்

இதன் உரைநடை (பொது அறுவை மருத்துவம்) தனி வாக்கிய அமைப்புடன் வழக்கிலுள்ள சொற் களை மிகுதியாகப் பயன்படுத்தி நேரடி மொழி பெயர்ப்பின்றி, நம் நாட்டில் கூடுதலாகக் காணும் நோய்களுக்கு (தொழுநோய், அமீபா) முக்கியத் துவம் அளித்து வண்ணப்படங்களுடன் படிப்ப வருக்குத் தடங்கல் ஏற்படாதவாறு கருத்துக்கு முதலிடம் கொடுத்து, தேவையான இடங்களில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி (ஆண்டி ஹிஸ்டமின்) இலக்கண நெகிழ்வுடன் (லேசர், குளோரோபாம்) தெளிவாக எளிமையாக எழுதப் பட்டுள்ளது. கலைச்சொல் பட்டியல் நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கமும், பெரிய. சிறிய தலைப்புகளில் மாணவர் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இவை தமிழறிஞர்களால் நுண்ணாய்வு செய்யப்பட்டுச் செம்மையான வடிவில் வெளிவந்துள்ளமைதான்.

இந்திய மொழிகளில்

முதன்முதலாக களஞ்சியங்கள்

இதுபோலவே, யாவருக்கும் புரியும் வகையில் எளிதில் உருவாகியுள்ள நோக்கீட்டு நூல்களான களஞ்சியங்களைக் குறிப்பிட வேண்டும். எல்லாம் இதன்பால் உள எனச் சிறப்பித்துக்கூறும் வகையில் தகவல்களைச் சுருக்கமாகவும் தெளி வாகவும் அளிக்கும் சிறப்பினை உடைய இவை மேன் மேலும் படிக்கவும், ஆராயவும் தூண்டும் விதமாக படைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் களஞ்சியத்திலும் மருத்துவக் களஞ்சியத்திலும் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) மற்றைய அறிவியல் களஞ்சியங்களிலும் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) மிகவும் கடினமாகக் கருதப்பட்ட மருத்துவத்துறை தொடர்பான கட்டுரைகள் நூற்றுக் கணக்கில் இடம் பெற்றுள்ளமையும், அவற்றுள் இயன்றவரை கலைச்சொல் தமிழாக்க முயற்சி களும் இடம்பெற்றுள்ளமையும், தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தோரை எளிதில் கவரும் வண்ணம் உள்ளன.

ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் வழங்கப்பட்டிருக்கும் தமிழ் ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ்க் கலைச்சொற்பட்டியல் மருத்துவத் தமிழாக்க முயற்சியில் முனையும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

பொதுமக்களுக்கான நூல்கள்

பொதுமக்களுக்கென்று தற்காப்பை முதன் மையாகக்கொண்டு பலநூறு நூல்கள் பல பல்கலைக் கழகங்கள் மூலமும் (தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்), தனிநபர் நிறுவனங் களின் மூலமும் அயல்நாட்டுப் பதிப்பகங்கள் மூலமும் (மீர் முற்போக்குப் பதிப்பகம் - சோவியத் யூனியன்; ஊற்று - இலங்கை), உள்நாட்டுப் பதிப்பகங்கள் மூலமும் வெளிவந்து கொண்டிருக் கின்றன. இந்நூல்கள் தடுப்பு முறைகளைக் கூறித் தட்டிக்கொடுத்து வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் விதமாகச் சிறுசிறு வாக்கியங்களில் குறைந்த கலைச் சொற்களுடன் அல்லது அதன் விளக்கத்துடன் தனி வாக்கிய அமைப்புகளுடன் சீரான போக்குடன் கடுமையான மொழிநடையின்றிக் கருத்துக்களை எளிமையாகச் சொல்லும் விதத்தில் பெரும்பாலும் வந்து கொண்டிருக்கின்றன. படிப்பவருக்கு எந்த இடத்திலும் தடங்கல் ஏற்படாதவாறு மொழி நடை அமைக்கப்பட்டு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“பைரட்டல் செல் ஒரு அமிலத்தை நமது வயிற்றுக்குள்ளே உற்பத்தி செய்கிறது. அந்த அமிலம் தான் நாம் அறிந்த ஹைடிரோகுளோரிக் அமிலம்” (வயிற்று நோய்களும் அதன் மருத்துவமும் - 1992) இந்நூல்களில் வரைபடங்களும் புகைப்படங்களும் கேலிச் சித்திரங்களும் படிப்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. மருந்துகளைப் பற்றிய விவரம் அதிகம் இல்லாது மருத்துவம் பொதுவாகவே கூறப்படுகிறது. உணவு வகைகளைக் கூறும்போது உள்ளூர் வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. (தீட்டப்பட்ட அரிசி உண்பவர்களுக்கு குடல்புண் வரலாம்)

மற்றைய பொது நூல்கள்

பிறமொழிச் சொற்கள் சில நூல்களில் அங்கு மிங்கும் காணப்படுகின்றன. தலைப்புகள் சில சொற்களில் கவர்ச்சியுடன் உள்ளன. (எது வேண்டும் சொல் மனமே, தேடிப் பெறும் தீமை) சில நூல்கள் கேள்வி பதில் என்ற முறையில் எழுதப்பட்டுள்ளன. (மருத்துவரின் - தாய்க்கு ஒரு சொல்) கலைச் சொல்லை அறிமுகப்படுத்தும் விதம் பலவிதம். அறிமுகமான உரிய தமிழ்ச் சொல் (கணையம் - Pancreas) கையாளப்பட்டுள்ளது. இது தவிர கலைச் சொல் விளக்கமுறவும் சொல்லப்பட்டுள்ளது.

(Hypoglycemia தாழ்ந்த சர்க்கரை நிலை). முன் ஒட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. (Hypertension - மிகை இரத்த அழுத்தம்) வழக்கிலுள்ள சொற்களுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. (Anemia - சோகை), தேவையான இடத்தில் எழுத்துப் பெயர்ப்பும் உள்ளது. (Albumin - அல்புமின்) மொழிபெயர்ப்பும் காணப்படுகிறது. (Hernia - குடல் பிதுக்கம்). பெரும்பாலும் கலைச்சொல் விளக்க முறையிலே உவமைகளுடன் கூறப்பட்டுள்ளது. (விரோதியைக் கட்டிப் பிடித்ததும் வீறிட்டு எழுகின்றனர் - இது தூண்டுதல் என்பார்கள்.)

சிறுவர்களுக்கான நூல்கள்

சிறுவர்களுக்கான மருத்துவ நூல்களில் உரைநடை சிறுசிறு சொற்களாகவும் சிறுசிறு வாக்கியமாகவும் உள்ளன. கடின சொற்கள் இல்லை. எழுத்துக்கள் பெரிய அளவிலும் குறைந்த வரி களைக் கொண்டும் உள்ளன. உரைநடை எளிமை யாகப் பிரித்துப் பிரித்து எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இவ் வைந்து என்பது இந்த ஐந்து என்றும் சுற்றியுள்ள வற்றை என்பது சுற்றி உள்ளவற்றை என்றும் அமைந்துள்ளன.

அறிவியல், அதிலும் மருத்துவம் என்பது கடினமானது எனும் எண்ணத்தை உடைக்கும் வண்ணம் சொற்கள் எளிமையாக உள்ளன. (ஆரோக்கியத்துடன் - நலமுடன், பரிசோதனை - ஆய்வு) பொருள் புலப்பாட்டில் சிக்கல் இல்லாமல் உள்ளது. பல வண்ணப் படங்கள், புகைப்படங் களுடன் உரிய வண்ணத்துடன் காணப் பெறு கின்றன. மேலும் சிறுசிறு தலைப்புகள், கலைச் சொற்கள் மிக அரிதாகக் காணப்படுகின்றன.

ஆங்கிலச் சொற்களே முழுமையாக இல்லை. எழுதப்பட்ட விதத்தில் கேள்வி பதில், குறும்படம் காண்பித்து விளக்குதல் (தொற்றுநோய்களும் தடுப்பு, முறைகளும் - 1986), நாடக முறை (மூன்று உண்மைகள் - 1990) எனப் பல உத்திகள் கையாளப் பட்டுள்ளன.

மருத்துவ இதழ் & தின இதழ்

19ஆம் நூற்றாண்டில் எப்படி நூல்களின் பெயர்களும் இதழ்களின் பெயர்களும் வட மொழியில் (ஆரோக்கியபோதினி, வைத்திய போதினி) இருந்ததோ அதே போல் இன்றைய நிலையில் ஆங்கிலத்தில் (ஹெல்த் & பியூட்டி, குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்) உள்ளன. மருத்துவ இதழ்கள் அலோபதி மட்டுமின்றி, சித்தா, ஆயுர் வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகியவை குறித்தும் இதழ்களாக வெளிவருகின்றன.

20-ஆம் நூற்றாண்டின்

மருத்துவ இதழ்களின் உரைநடை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வெளிவந்த தமிழ் மருத்துவ இதழ்கள் ஆயுள் வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவத் தகவல்களை அளிக்கின்றன. என்றாலும், இம்மருத்துவ நூல்கள் அடிப்படையில் எம்மொழி யிலிருந்து வந்தனவோ, அம்மொழியின் தாக்கத் திற்கு உட்பட்டு தமிழிலும் அம்மொழியின் கலைச் சொற்களையே பயன்படுத்தியுள்ளன.

1. வைத்திய கலாநிதி

(1921 ஆசிரியல் பண்டிட் எம்.துரைசாமி அய்யங்கார்)

ஆயுஷ்ய ரஸாயநம் - இது வெகு சிலாக்யமான விருத்தி மருந்து, ப்ருங்காமலக தைலம் - முதல் தரமான ஸ்நான தைலம், சிரஸ்களையும் கண் களையும் பொதுவாக தேஹத்தையும் குளிரச் செய்வது. இந்த இரண்டு முக்கியமான ஒளஷதங் களைப் பற்றி.

2. கல்பதரு ஆரிய வித்யா விமர்சனை

(1922 ஆசிரியர் எம்.வி.கிருஷ்ணசாமி அய்யர்)

“திருவியா பேiக்ஷயின்றி லோகோபகாரமாய் பிரசுரிக்கும் இப்பத்திரிக்கையால் ஜனங்களுக்கு விசேஷ நன்மை உண்டாகுமென்பதற்கு யாதொரு சந்தேகமில்லை. இதில் பல அருமையான வியாசங்கள் அடங்கி இருக்கின்றன.”

சித்த மருத்துவ இதழ்கள்

இதே காலத்தில் வெளிவந்த சித்த மருத்துவ இதழின் உரைநடை.

1. மருந்துவன் (1928 ஆசிரியர் பண்டித எஸ்.எஸ்.ஆனந்தம்)

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கையும் அடைவதறகு நிலவுலகில் மக்கள் நோயின்றி நெடுநாள் உடல் வன்மையோடு வாழ வேண்டுவது இன்றியமையாத தாகும். நோயின்றி வாழ்வதற்குரிய விதி விலக்கு களையும் மருந்துகளையும் கூறுவது மருத்துவ நூலாகும். தவத்தில் சிறந்த சித்தர்கள் இயற்றிய நூல்களே, மருத்துவ நூல்களெனப் பெயர் பெறும்.

அலோபதி மருத்துவ இதழ்

ஆயுள்வேத, சித்த மருத்துவ இதழைப் போலவே இங்கு அலோபதி இதழின் உரைநடைப் பகுதி: “ஆரோக்கியமும், சிசுவின் சுகவாழ்வும்” (1923, ஆசிரியர் டாக்டர் அன்னாதாமஸ்)

“தண்ணீரும் தேக ஆரோக்கியமும்” எனும் கட்டுரையில் “அளவுக்கு மிஞ்சியும் பசியில்லாத போதும் சாப்பிடலாகாது. ஏதாவதொரு ஆகாரத்தை ஆரோக்கியத்திற்குத் தகுந்த, ஆகாரம் என்று சொல்லப்பட்டிருக்கிறதனால் அதை கட்டாயப் படுத்தி சாப்பிடாதேயுங்கள். சாப்பாட்டில் மிதமாய் இருக்க வேண்டும்.”

இம்மூன்று வகையான இதழ்களின் தமிழ் உரைநடைப் போக்கைக் காணும் பொழுது, ஆயுள்வேத மருத்துவம் பற்றிக் கூறும் கட்டுரை களில் 40 விழுக்காடு சமஸ்கிருதச் சொற்களும் கிரந்த எழுத்துக்களும் கலந்துள்ளன. ஏனெனில், ஆயுள்வேத மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தி லேயே எழுதப்பட்டுள்ளன. எனவே, மொழி மாற்றம் செய்யும் பொழுது ஆயுள்வேத மருத்துவர்களால் மூலமொழியின் தாக்கத்தினை விட முடியவில்லை.

அலோபதி மருத்துவக் கட்டுரையில் வட சொல் மிகுதியாக இல்லை.

மேற்கண்ட இதழ் வெளிவந்த பிறகு 20 ஆண்டுகள் கழித்து, இவ்வித வேறு மருத்துவ இதழ்களின் உரைநடைப் போக்குகளை காணும் பொழுதும் அதே போக்கு நீடிப்பது தெரிய வருகிறது.

ஆயுள்வேத மருத்துவ இதழ் nக்ஷமநிதி

(1941, பிப். ஆசிரியர் டாக்டர் வெங்கடேசம்,

டாக்டர் வைத்தியநாத சாஸ்திரி)

சிரமமாய் ஆசாரியனிடத்தில் வைத்திய சாஸ் திரத்தை அப்பியாசித்தவனும் அமிருத ஹஸ்தனும், சிகிச்சை செய்வதில் நுட்பமான புத்தியுடையவனும், பேராசையற்றவனும், தேஹ தத்துவ சாஸ்திரம், பதார்த்த சாஸ்திரம், யோக சாஸ்திரம், ரோகி யினது சரீர தத்துவங்களை அறிந்து சிகிச்சை பண்ணுகிறவன்தான் மஹா வைத்தியன், அவன் தான் ஈஸ்வரனுக்குச் சமம்.

சித்த மருத்துவ இதழ்

இதே காலத்தில் வந்த சித்த மருத்துவ ஏடான “தமிழ் மருத்துவப் பொழியில்” (1941) ஆசிரியர் வடிவேலு முதலியாரின் உரைநடைப் போக்கு,

“எலும்பொட்டி என்றொரு பச்சிலையுண்டு. அடிப்பட்டு முறிந்த எலும்புகளை தூளாகப் போயிருந்தாலும், ஒன்றாகப் பொருத்தி ஆற்றி விடுகிறது.”

இப்படி உரைநடை மூன்று விதமாக உள்ளதற்கு காரணங்கள் என்ன என ஆராயும் பொழுது, ஆயுள்வேத மருத்துவத்தை கற்க வடமொழி இன்றியமையாததையும் மேலும் இம்மருத்துவத் துறையை மேல்குடி மக்களே தொடர்ந்து படித்து மருத்துவம் செய்து வருவதும் அறியப்படுகிறது. பாடப் புத்தகங்களும் வடமொழியிலேயே உள்ளன, அதன் மொழிபெயர்ப்பு அல்லது கட்டுரைகளில் வடமொழி சுலோகங்கள் அப்படியே வடமொழியில் அச்சடிக்கப்பட்டு பிறகு கட்டுரை தமிழில் தொடர்கிறது, ஆரோக்கியம் இதழ் ருக்வேதம், தைத்தரி யாரண்யம் போன்றவற்றிலிருந்து எடுத்துரைக்கப் பட்ட வடமொழி வழிபாட்டு சுலோகங்களுடனே தான் இதழின் முதல் பக்கம் ஆரம்பமாகிறது, ஆகவே ஆயுள்வேத மருத்துவக் கல்லூரிகளில் படித்துத் தேற வடமொழி அவசியமாகிறது, இதைத் தொடர்ந்து அம்மருத்துவ இதழ்களைப் படிக்கவும் அம்மொழியின் துணையின்றி முடியாது என்பது வைத்திய சந்திரிகை, nக்ஷமநிதி மற்றும் கல்பதரு ஆரிய வித்யா விமர்சனம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, மொத்தத்தில் வடமொழியை ஆயுள் வேத இதழ்கள் எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காது தங்களை அடையாளம் காட்டிக் கொள்கின்றன.

இதைத் தாண்டி சித்த மருத்துவ நூல்கள் தமிழிலேயே செய்யுள் வடிவிலே உள்ளதாலும் இம்மருத்துவத்தையே தமிழ் மருத்துவம் என்று கூறுவதாலும் அதை எழுதும் மருத்துவர்களிடம் வடமொழிக் கலப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

இவ்விரண்டு மருத்துவ முறைகளுக்கு மாறாக அலோபதி மருத்துவம் ஆங்கிலத்தில் படிக்கப் பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பலராலும் எழுதப்படுவதால் ஆயுள்வேத மருத்துவ உரை நடையைப்போல் இல்லாது ஓரளவு வடமொழி கலந்த உரைநடையாகவே உள்ளது.

முடிவாக இம்மூன்று மருத்துவ இதழ்களின் வாயிலாக நாம் அறிவது ஆயுள்வேத மருத்துவ உரைநடையில் மிகுந்த அளவு கிரந்த எழுத்துக்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன, சித்த மருத்து வத்தில் மருந்துக்கே இவ்வெழுத்துக்கள் உள்ளன. அலோபதி மருத்துவ உரைநடையில் குறைந் தளவே கிரந்த எழுத்துக்கள் உள்ளன என்பது தான், தவிர வடமொழிச் சொற்கலப்பு ஆயுள்வேத மருத்துவத்தில் மிகுந்து காணப்படுவதும் கண்கூடு.

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் வடமொழி கலந்து எழுதப்பட்ட உரைநடை, தனித்தமிழ் இயக்கத்தினாலும் திராவிட இயக்க பேச்சு. எழுத்து வன்மையாலும் மாறியது. தற்பொழுது நல்ல தமிழ் எழுதுவது, பேசுவது என்பதை மறந்து, ஆங்கிலமும் தமிழும் கலந்த நடையை எழுதுவது, பேசுவது என்பது ஒரு மரபாகவே பேணப்பட்டு வருகிறது, இந்த ‘தமிங்கலீஸ்’ தாக்கம் மருத்துவ இதழ்களிலும் சில தின ஏடுகளிலும் மிகவும் போற்றப்படுகிறது, இவைகளைப் பற்றி உலக மயமாதல் என்னும் இன்றைய நிலையில் மொழிப் பயன்பாடு குறித்த போக்கும். செயலும் பலருக்கு கவலையளிப்பதாகவோ அல்லது தவறு என்று ஏற்றுக்கொள்வதிலோ உடன்பாடு அற்றவர் களாகவே உள்ளனர்.

முடிவுரை

தொடக்கக் காலத்தில் மேலைநாட்டுக் கல்வியைத் தமிழர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு நூல்களும் கலைச் சொற்களும் படைக்கப்பட்டன. அறிவுப் பரப்பல் முதல் நிலையிலும் மொழி உணர்வு இரண்டாம் நிலையிலும் இருந்தன. எனவே, அறிவுப் பரப்பில் ஈடுபட்டோரின் மொழிப் பயன்பாட்டுக்கேற்ப ஆங்கிலமும் வடமொழியும் கூடுதலாகப் பயன் படுத்தப்பட்டன. இதில் உள்ள உரைநடைப் போக்கும் காலத்திற்குத் தகுந்தபடி நாட்டுக்கேற்றாற் போல் மாறி காணப்படுகின்றது.

1932-இல் வெளிவந்த கலைச்சொல் பட்டியலுக்கு எதிராகச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட முயற்சி மொழி உணர்வுக்கு முதன்மை தருவதாயிற்று. 1940இல் அமைக்கப்பட்ட சாஸ்திரி யார் குழுவுக்கு எதிரான கண்டனமும் இதன் அடிப்படையில் எழுந்ததேயாகும். இந்தக் கால கட்டத்தில்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் தலை எடுத்தது. எனவே, இது கலைச்சொற்களைத் தமிழ் மயமாக்கி அறிவு பரப்பும் பணி தொடங்கியது எனலாம். இதன் காரணமாகத் தொடக்கத்தில் வடமொழிச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் நூல்களில் மிகுதியாக இருந்தாலும் 1936க்குப் பின் தமிழ்ச் சொற்கள் உரைநடையில் அதிகமாயின.

1960-க்குப் பின் பல அறிவுத்துறைகளின் வளர்ச்சி, மருத்துவம் உள்பட, உலகத் தொடர்பு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு, எளிமையான உரைநடை, இலக்கண நெகிழ்வு, அதற்கேற்பக் கலைச் சொல்லாக்கத்தில் ஆங்கிலம், வடமொழி நீக்கப்படுதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. இங்குக் கருத்துத் தெளிவுதான் முதன்மை பெறுகிறது. இயன்ற அளவு தமிழ் மொழி வழக்கு உரை நடையில் பேணப்படுகிறது.

ஆக, இன்றைய நிலையில் களஞ்சியம், பாட நூல், பொது மக்களுக்கான மருத்துவ நூல்கள், சிறுவர் நூல்கள், இதழ்கள் நல்ல தமிழில் எழுத முடியும் என்ற நிலைப்பாடு மகிழ்ச்சி தரக்கூடிய தாக உள்ளது. ஆங்கிலக் கலப்புத் தமிழைச் சில இதழ்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதினாலும் அவை சரியான திட்டங்களினாலோ சட்டங் களினாலோ களையக்கூடியதே ஆகும்.