1

கா. சிவத்தம்பியின் ‘தமிழில் இலக்கிய வரலாறு - வரலாறெழுதியல் ஆய்வு’ தமிழியல் ஆய்வு வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் ‘Some Milestones in the History of Tamil Literature தமிழ் இலக்கியங்களுக்கான காலத்தைக் கணிப்பதற்கு அடிப்படையை இட்டது. ச.வையாபுரிப்பிள்ளையின் பணிகள் தமிழ் இலக்கியங்களின் காலவரிசையை (ஒவ்வோர் இலக்கிய நூலுக்கும் அவர் குறிப்பிட்ட காலம் பிழையுடையதென்றாலும், எது முந்தியது எது பிந்தியது என்ற வரிசையை) ஒழுங்கமைத்தன. இப்பணிகளைப் போன்றே தமிழ் இலக்கியங்களைத் தமிழ்ச் சமூக உருவாக்கங்களின் அங்கமாக (தமிழ்ச் சமூக உருவாக்கங்களின் விளைவாக, பிரதிபலிப்பாகப் பார்க்காமல்) பயின்று கொள்வதற்கான இலக்கிய வழி வரலாற்றை உருவாக்கிக் கொள்வதற்கு அடிப்படைகளை இந்நூல் அளிக்கின்றது.

படிப்போருக்கு அறிவுக்கிளர்ச்சி ஊட்டக்கூடிய இந்நூல் தமிழியல் புலத்தில் மிகச்சிலரால் கவனத்தில் கொள்ளப்பட்டது. மிகப் பலருக்கு இலக்கியவழி வரலாறு (Literacy History) என்னும் பயில்துறை இருப்பதே தெரிவதில்லை. அதுபோலவே இந்நூலையும் அவர்கள் அறியவில்லை. இந்நூலைக் கவனத்தில் கொண்டோரும் தமிழ் இலக்கிய வழி வரலாற்றினை உருவாக்கிக் கொள்வதற்குச் செய்த பணிகள் பாலை நிலத்தில் விழுந்த மழைத்துளிகள் போல உள்ளன. இந்நிலையில் இவ்வாசகரால் இந்நூலில் பேசப்பட்ட இலக்கிய வரலாறு (டுவைநசயசல ழளைவடிசல) பற்றி அறிமுகமாக எழுதப்படும் சிறுகுறிப்பு தமிழியல் மாணவர், தமிழ்ச்சமூக வரலாற்றினைக் கற்கும் ஆர்வலர் ஆகியோர் இலக்கிய வரலாறு (டுவைநசயசல ழளைவடிசல) என்னும் துறையின் புலமைப்பரப்பை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதாக அமைகிறது.

2

கா. சிவத்தம்பியின் ‘தமிழில் இலக்கிய வரலாறு’ தமிழ் இலக்கிய வரலாற்றினை எந்தக் கருத்துநிலை நின்று நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதைக் கண்டடை வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இதுவரை கைக் கொள்ளப்பட்ட கருத்துநிலைகளின் அறிவுப்புலப் போதாமை பற்றி விவரித்து வரலாற்றுப் பொருள்முதல் வாதம்தான் தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆக்கிக் கொள்வதற்காகக் கைக்கொள்ளப்பட வேண்டிய கருத்து நிலை என்று நிறுவுகிறது.

இந்நூலில் சிவத்தம்பியால் எடுத்துக்கூறப்படும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எதுவென்றால் மாஸ்கோ, பெய்ஜிங் அந்நிய மொழி வெளியீடுகளின் வழி தமிழில் விளங்கிக்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பொருள் முதல்வாதம் அன்று; ஐரோப்பாவில் அறிவுப்புலச் சவால் களுக்குச் சளைக்காது முகங்கொடுத்து உயிர்ப்பித்துக் கொண்ட வரலாற்றுப் பொருள்முதல்வாதம். இதைப் பற்றி தமிழ் வெளியீடுகள் எதுவுமில்லை. அதனால்தானோ என்னவோ ‘இலக்கிய வரலாறு எனும் பயில்துறை அதன் புலமைப் பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம்’ என்ற தலைப்பில் சிவத்தம்பி எடுத்துக்கூறுவதை விளங்கிக் கொள்ள முடியாமல் திக்குமுக்காடிப் போகின்றோம்.

3

1980 - களின் முற்பகுதியில் ஐரோப்பாவில் நடைபெற்ற வாத - விவாதங்களுக்கு இணையான சிந்திப்பின் வழி சிவத்தம்பி நமக்கு ‘இலக்கிய வரலாறு எனும் பயில்துறையை அறிமுகம் செய்துவைக்கிறார். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான மார்க்சிய ஆய்வுகளில் அல்தூஸரும், கிராம்ஸ்சியும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அல்தூஸர் அமைப் பியலின் வழி வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில், ‘சமூக உருவாக்கம்’ பற்றிய முனைப்பை ஏற்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எழுகின்ற ஒன்றுக்கொன்று அவசியமான அரசியல் பொருளாதார, சமூக, பண்பாட்டு உறவுகளின் இயைபான மொத்த இயங்குநிலையை, தோற்றம், வளர்ச்சி , வீழ்ச்சியைப் பற்றி அறிந்து கொள்வதை முனைப்புறுத்துகிறார். இதற்கு முன்னர் மார்க்சியத்தில் ‘சமூக அமைப்பு’ பற்றிய அறிதல் முக்கியப் படுத்தப்பட்டது. இப்பொழுது ‘சமூக உருவாக்கம்’ பற்றிய அறிதல் முனைப்புறுத்தப்பட்டது.

சமூக உருவாக்கத்தில் ‘கருத்துநிலை’யின் பங்கை கிராம்ஸ்சி யின் எழுத்துக்கள் நன்கு வலியுறுத்திக்காட்டின. அதற்குரிய மரபிலிருந்தும் பொருளாதார ஒழுங்கு நிலையிலிருந்தும் எழுகின்ற கருத்துநிலைகளில், ஒன்று அப்பொருளாதார ஒழுங்கைக் கட்டிக் காக்கும் பணியையும், மற்றொன்று சிதைக்கும் பணியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்கின்றன. மார்க்சிய அறிதலுக்கு, செயற் பாட்டிற்கு எந்தக் கருத்துநிலை கட்டிக் காக்கின்றது, எந்தக் கருத்துநிலை சிதைக்கின்றது என்பது முக்கியமாகின்றது. இதனால் வெவ்வேறான தேசியப் பண்பாட்டு நிலைகளில் மார்க்சியவாதி படைப்பாக்கத்துடன் மார்க்சியத்தைக் கையாள வேண்டியவராகின்றார். அவ்வாறான அறிதலுடன் செயற்படவில்லையென்றால் தோற்கவும் செய்கிறார்.

சமூக உருவாக்கத்தில் கருத்துநிலையின் பங்கினை முனைப்புறுத்திக் கொள்ளும் பொழுதும்தான் கருத்து நிலையின் உருவாக்கத்தில், சிதைப்பில் இலக்கியத்தின் செய்பணியை அறிந்துகொள்ள வேண்டியவர்களாகிறோம். இவ்வாறான புரிதலுக்கு வால்ட்டர் பெஞ்சமின், டெரி ஈக்கிள்டன் முதலான மார்க்சிய விமர்சகர்களுக்குக் கடன்படுகின்றோம்.

இலக்கியம் எதனொன்றாலும் இட்டுநிரப்பப்பட முடியாதவாறு வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிய அறிக்கையை வாசகருக்கு அளிக்கின்றது. இலக்கியத்தில் பருநிலை சமூக உறவுகளும், கருத்துநிலை சமூக உறவுகளும் மோதுகைக்கு உள்ளாகின்றன. ஒரு குறிப்பிட்ட கால , பிரதேச நிலையின் சிக்கல்களால் தாக்குண்ட இலக்கிய ஆசிரியரின் சமூக உறவுநிலைகளால் கட்டுப்படுத்தப்படும் தொடர்பு முறையின் வழி தனக்குக் கையளிக்கப்பட்ட இலக்கிய வடிவங்களின் வழி தன் புதுவகையான படைப்பைக் கையளிக்கிறார். இவ்விலக்கியப் படைப்பு சமூகத்தில் விநியோகிக்கப்பட்டு, வாசிக்கப்படும்போது வாசகர்களின் கருத்துநிலையை உருப்படுத்துகிறது; அல்லது சிதைக்கிறது. இலக்கியம் வாசகரின் கருத்துநிலையை உருப்படுத்தி விட்டால், அக்கருத்துநிலை சமூக மாற்றப் பருவிசையாக எழுகிறது. இவ்விடத்தில்தான் சிவத்தம்பியின் ‘இலக்கியம் என்பது காலத்தின் உற்பத்தி; அது காலத்தையும் உற்பவிக்கின்றது’ எனும் கருதுகோள் முக்கியத்துவமடை கின்றது.

மேற்கூறப்பட்ட விதத்தில் கருத்துநிலை உருவாக்கத்தில் இலக்கியம் பங்குபணியாற்றுகிறது. கருத்துநிலையின்றி எந்தவொரு சமூக உருவாக்கமும் நடைபெறுவதில்லை. இதனாலேயே இலக்கியமின்றியும் எந்தச் சமூகமும் இருப்பதில்லை. ஆகவே ஒரு சமூகத்தின் வரலாற்றை, அச்சமூகத்தில் உருப்பெற்ற சமூக உருவாக்கங்களை அறிந்துகொள்வதற்கு இலக்கியத்தின் வழியாக அறியப் படும் வரலாறு இன்றியமையாதது ஆகின்றது. மேலே எடுத்துக்கூறப்பட்டவைதான் 1970 - 1980 களில் ‘ இலக்கிய வழி வரலாறு’ என்னும் பயில்துறையின் புலமைப்பரப்பாக ஐரோப்பாவில் பேசப்பட்டது; அல்தூஸர், கிராம்ஸ்சி, வால்ட்டர் பெஞ்சமின், டெரி ஈகிள்டன் முதலான மார்க்சியர்களின் எழுத்துகளின் மூலம் இலக்கிய வழி வரலாறு எழுதியல் புத்தூக்கம் பெற்றது.

4

வி.கனகசபை, பி.டி.சீனிவாச ஐயங்கார், என்.சுப்பிர மணியன் முதலானோர் தமிழில் பண்டைய தமிழ்ச் சமூக வரலாற்றினை அறிவதற்கு இலக்கியத்தை ஓர் அத்தியா வசியமான சான்றாகக் கொண்டார்கள். எனினும் அவர்கள் சமூக உருவாக்கத்தில் இலக்கியத்தின் பங்குபணியைப் பற்றி விளக்கினார்கள் என்று கூற முடியாது. வையாபுரிப் பிள்ளையும் ‘தமிழ்ச் சுடர் மணிகள்’ முன்னுரையில் இலக்கிய வரலாறு பற்றி எடுத்துக்கூறுகிறார். அவரின் இலக்கிய ஆராய்ச்சி பற்றிய அட்டவணை முற்றிலும் இலக்கியத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்துறைச் சான்றுகளின்வழி நாட்டு வரலாற்றை எடுத்துக் கூறுவதற்கான வழிமுறையை முன்மொழிகிறது. ஆனால் இவ்வெடுத்துக்கூறல் சிவத்தம்பி கூறும் கருத்துநிலை அடிப்படையிலானது இல்லை.

‘தமிழ் இலக்கியத்தின் வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை. எழுதப்பட வேண்டும் என்ற வேணவா கூட தமிழ்ப்புலத்தாரிடம் காணமுடியவில்லை. எமது புலமையாளர்கள் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குப் பாடநூல் எழுதுவதையே பெரும்பணியெனக் கருதுகிறார்கள். மு.அருணாசலம் தமிழ்ப் புலமையாளர்கள் வேட்கைக் குறைவைத் தம் பெரும் பணியான நூற்றாண்டு வாரியான இலக்கிய வரலாறு எழுதத் தொடங்கிய காலத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். அந் நிலைமை இன்றுவரை நீடிக்கின்றது. இல்புனைவுசார் பல்துறை எழுத்துக்கள் இலக்கியத்தின் வரலாற்றில் எடுத்துக் கூறப்பட வேண்டும் என்பது கொள்கையளவில் கூட வற்புறுத்தப்படுவது இல்லை. இந்நிலைமை இலக்கியத்தின் வரலாற்றையே இலக்கிய வரலாறாக மயங்கிக்கொள்ளும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. இலக்கிய வரலாறு ஒன்றை நாங்கள் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றால் சமாந்தரமாகச் சமகாலத்தின் தேவைகளுக்கேற்ப இலக்கியத்தின் வரலாறும் சமூக வரலாறும் எழுதப் பட்டிருக்க வேண்டும்.

இந்த இலக்கியத்தின் வரலாற்றையுமே சமூக வரலாற்றின் பின்புலத்தில் எடுத்துக்கூறுவதற்கு முதலில் தேவையான வகையில் சமூக வரலாறு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். சமகாலத்திற்குத் தேவையான தமிழ்ச் சமூக வரலாறு முழுமையாக இன்னும் எழுதப்படவில்லை. இந்நிலைமை தமிழியல் மாணவர்களைத் திக்குத்தெரியாக் காட்டில் விட்டது போன்றுள்ளது. இந்நிலைமை அவர்கள் எந்நிலையிலிருந்து தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்வது என்ற கேள்வியைக் கிளப்புகிறது. இப்பொழுதுதான் ‘இலக்கிய வரலாறு’ என்னும் புலமைத்துறையின் தேவையினை அளவுக்கதிகமாக வற்புறுத்தும் நிலைக்கு வந்துவிடுகிறோம். இலக்கிய வரலாறு ஒரே நேரத்தில் பிரயோக வரலாற்றாய்வாகவும், பிரயோக விமர்சனமாகவும் விளங்குகின்றது.

பிரயோக வரலாற்றாய்வு என்பது சமூகவியல், மானிடவியல் புலங்கள் வழங்கியுள்ள அறிவைக் கொண்டு சமூக வளர்ச்சிக் கட்டங்களைக் கண்டு கொள்வது ஆகும். இவ்வகையில் நடந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற் றாய்வுகள் தமிழ்ச்சமூக வரலாற்றை எழுதிக் கொள்வதற்கு ஊட்டமளிப்பவையாக அமைகின்றன. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் இலக்கிய வரலாற்றாய்வுகள் தமிழ்ச்சமூக வரலாற்றைக் கற்றுக் கொள்பவர்கள் கவனம் செலுத்தும் படைப்புகளாக விளங்குகின்றன என்பது இவ்வுண்மையை வலியுறுத்தும். தமிழில் பழைய இலக்கியங்களையும், புதிய இலக்கியங்களையும் ஒரே இலக்கியத் தொகுதியாகக் கொள்ளும் விமர்சன முறை வளர்த்தெடுக்கப்படவில்லை. பழைய, புதிய இலக்கியங்களை ஒரே இலக்கியத் தொகுதியாகப் பார்க்கும் விமர்சன முறை ஒன்று வளர்த் தெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் இலக்கிய வரலாறு பிரயோக விமர்சனமாக விளங்க முடியும்.

பிரயோக விமர்சனத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் இரண்டு. ஒன்று, இலக்கியப் பாடத்திற்கான அர்த்தம் கொள்வது எவ்வாறு என்பது; மற்றொன்று, இலக்கியத்தின் கடந்த கால முக்கியத்துவம், நிகழ்கால அர்த்தப்பாடு பற்றிய பிரச்சினை. இவ்விரண்டு கேள்விகளும் நாம் முன்பு இலக்கியம் பற்றி விவாதித்த விசயங்களுக்கு மீண்டும் கொண்டு சேர்க்கிறது.

இலக்கியம் கருத்துநிலையை உருப்படுத்துகிறது அல்லது சிதைக்கிறது என்கிறபோது இலக்கியம் வாசகனின் சிந்திப்புக்கான கருவி ஆகிறது. வாசகனுக்கு ஓர் இலக்கியப் பிரதி எல்லாக் காலத்திலும் ஒரே சிந்திப்பை மட்டும் வழங்குவதில்லை. தன் காலச்சுழல் கிளப்பிய வினாக்களுக்கு ஏற்ப ஒரே இலக்கியப் பிரதியிலிருந்து புதியபுதிய சிந்திப்புகளை வாசகன் பெற்றுக் கொள்கிறான். இலக்கிய வரலாறு இவ்வகையில் இலக்கியத்திற்கும், வாசகனுக்கும் உள்ள உறவின் வரலாறாகிறது. இவ்வாறு நோக்கும்போது பிரயோக விமர்சனத்தின் இரண்டாவது பிரச்சினை முன்னுக்கு வந்து விடுகிறது. ஓர் இலக்கியம் அதன் பழமைக்காக மட்டும் போற்றப் பெறுவதில்லை. அது நிகழ்காலத்தில் கொடுக்கும் அர்த்தப்பாட்டிற்காகத் தான் போற்றப் பெறுகின்றது. இதுவரை கொள்ளப்பட்ட அர்த்தங்களின் ஊடாட்டங்களின் வழியே புதிய அர்த்தங்கள் கிளப்பப்படுகின்றன.  ஆகவே வாசகன் இலக்கியப் பிரதியை அர்த்தப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே அவ்விலக்கியப்பிரதி எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ளப்பட்டது என்று நோக்க வேண்டியதாகிறது. இவ்வாறு நாம் பிரயோக விமர்சனத்தை விளங்கிக் கொள்ளும்போது அது முழுக்கவும் வரலாற்று முறையிலானதாக மாறிவிடுகிறது. இத்தகைய ஒரு விமர்சனமுறை பற்றிய சிந்திப்பும் 1970 - 1980 களில்தான் முன்னுக்கு வருகின்றது.

5

சிவத்தம்பி ‘தமிழில் இலக்கிய வரலாறு’ நூலின் இரண்டாவது இயலில் ‘ தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி’ எடுத்துக்கூறுகிறார். அவர் தொடர்பியலை அடிப்படையாகக் கொண்டு அச்சுக்காலத்திற்கு முன், பின் என இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியை எடுத்துக் கூறுகிறார். அச்சுக்காலத்திற்கு முன் இலக்கியத்தைத் தொகைப் படுத்தும் முயற்சிகள் இலக்கிய வரலாற்று உணர்வின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படவேண்டும் என்று சிவத்தம்பி வலியுறுத்துகிறார். சங்க இலக்கியத் தொகைப் படுத்தல், பக்தி இலக்கிய முறைப்படுத்தல், சைவ சித்தாந்தச் சாத்திரங்களின் தொகைப்படுத்தல் ஆகியவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று உணர்வு வெளிப்படும் வேளைகளாக இனம் காட்டுகிறார். இம் முயற்சிகளுக்கு எதிர்நிலைகளாகப் பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள் தொகைப்படுத்தும் முயற்சிகளைக் காணுகின்றார்.

அச்சுக்காலத்தில் இலக்கிய வரலாற்று எழுத்துகளின் கருத்துநிலைகளாகத் திராவிடக் கருத்துநிலை, இந்தியத் தேசிய கருத்துநிலை ஆகியவற்றைச் சுட்டுகிறார். இவற்றின் தோற்றம், வளர்ச்சி, ஊடாட்டம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்கூறுகிறார். இக்கருத்து நிலைகளின் வழி வெளிப்படும் வரலாற்றுப் பார்வை, வளர்ச்சி பற்றிய இயங்கியலை மறுப்பதாக, பழம் பெருமையை மீள் கண்டுபிடிப்பு செய்வதாக அமைகின்றது .இந்த இயலைப் பின்னை காலனித்துவ நோக்கு அடிப்படையிலும் கட்டவிழ்ப்புவாத நோக்கு அடிப் படையிலும் மீள்நோக்க வேண்டியதன் அவசியத்தை இரண்டாம் பதிப்பிலேயே சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார் என்பதைத் தமிழியல் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘தமிழில் இலக்கிய வரலாறு’ நூலின் இறுதி இரண்டு இயல்களும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆக்கிக் கொள் வதில் உள்ள பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறுகின்றன; கவனம் குவிக்க வேண்டி ஆய்வுக் களங்களை எடுத்துரைக்கின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றின் பருவட்டத்தைக் கால வகுப்புப் பிரச்சினையை எடுத்துக் கூறும்போது சிவத்தம்பி விளக்குகிறார்.

6

‘இலக்கிய வரலாறு’ என்னும் துறையின் புலமைப் பரப்பு பற்றிய இச்சிறு அறிமுகத்தில் தமிழில் இலக்கிய வரலாறு முதல் இயல் கூறும் விசயம் பற்றி மட்டும் விரிவாக எடுத்துக்கூறினோம். ஏனென்றால் அது ஒரு புலமைப் பரப்பை நமக்கு வரன்முறையோடு அறிமுகம் செய்கிறது. இப்புலமைத்துறை தமிழியலில் முக்கியத்துவம் பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே தமிழியல் புத்தூக்கம் பெற முடியும் இச்சிறு அறிமுகத்தை முடிக்கும் முன் இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘ உலகத் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நான்கு நூற்றொகுதிகள் பற்றியது. மற்றொன்று, அருணனின் ‘தமிழ் இலக்கிய வழி வரலாறு’ என்னும் நூல் பற்றியது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘உலகத் தமிழ் இலக்கிய வரலாறு’ திட்டக் குழுவில் சிவத்தம்பியும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூற்றொகுதிகள் இளநிலை வாசகர்களுக்கு அறிமுகமாக உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றை எடுத்துக்கூற வெளிக்கொணரப்பட்டுள்ளன. சிவத்தம்பி பணியாற்றியும் கூட புலமைநிலை ஏற்புடையதாக இந்நூற்றொகுதிகள் அமையவில்லை. தமிழியல் புலமையாளர்கள் எந்த அளவு இலக்கிய வரலாறு என்னும் துறையில் புலமைப் பரிச்சயம் அற்றவர்களாக உள்ளனர் என்பதையும், குருட்டுத்தனமான பழம் பெருமை போற்றுதல், ‘இனத்தூய்மை வாதம்’ ஆகிய வற்றில் கட்டுண்டுள்ளனர் என்பதையும் இந்நூற்றொகுதிகள் காட்டுகின்றன.

அருணனின் ‘ தமிழ் இலக்கியவழி வரலாறு’ இப்போது இரண்டாம் பதிப்பாகக் கிடைக்கிறது. தீக்கதிர் நாளிதழில் தமிழ் இலக்கியம் பற்றி எழுதிய சிறுசிறு அறிமுகக் கட்டுரைகளை அருணன் இலக்கியவழி வரலாறு என்று தொகுத்து வெளியிட்டுள்ளார். அருணன் போன்ற கவனமுடைய மார்க்சியப் புலமையாளர்கள் கூட ‘இலக்கிய வரலாறு’ என்னும் துறையின் புலமைப்பரப்பை விளங்கிக் கொள்ளாமல் இருப்பது தமிழியலின் கெடுவாய்ப்பு என்றுதான் கூற வேண்டும். இவ்விரண்டு விசயங்களும் தமிழியல் மாணவர்கள் ‘இலக்கிய வரலாறு’ என்னும் துறையை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.