மேடைகளில்
கனன்ற சொற்பொறிகள்
நேரே உங்கள் இதயத்துள் பாய்ந்தன
இரத்தம் கண்ணீராய் திரிந்தது.

நம்பித்தானிருந்தோம்!

பேசிய நாக்குகளைக் கைதுசெய்தார்கள்
விரல்களையும்.
சிறையிருளைக் கிழித்திறங்கும்
ஒற்றைச் சூரியவிரல்
இரத்தக்கறை படிந்த சுவர்களில் எழுதுகிறது
உங்களில் இரக்கமுள்ளோரின் பெயர்களை.

ஊர்வலங்களில் சீரான காலசைவில்
எழுச்சியுற்று நடந்தீர்கள்
பட்டொளிப் பதாகைகள்
காக்கிகளால் சுருட்டப்பட்டன
அதிகார நகங்களில்
உங்களது சதைத்துணுக்குகள்.
நீதியின் உதடுகள்
லத்திகளால் அடித்துச் சாத்தப்பட்டன.

முத்துக்குமாரிலிருந்து
தீப்பந்தமாகிய உடல்களால்
சற்றைக்குப் பாதை ஒளிரும்
பிறகு கும்மிருள்.

எனினும்
நம்பித்தானிருந்தோம்!

நாங்களும் நீங்களும்
செவிட்டு மலைகளிடம்
வியர்த்த வார்த்தைகளால்
உரையாடினோம்.
அதிகாரத்தின் பள்ளத்தாக்குகளில்
எங்களால் இசைக்கப்பட்ட துயரத்தின் பாடல்கள்
கையேந்தித் திரிகின்றன.

வரும் எல்லாச் செய்திகளிலும் குருதி
எல்லா மனிதரிலும் கண்ணீர்
நாங்கள் இரண்டு வேளை பல்துலக்குகிறோம்
மூன்று வேளை அழுகிறோம்.
கேவலத்தில் கேவலமாய்
இன்னமும் வயிறு பசிக்கிறது.
ஒருபக்கக் கன்னம் கருகி
வலியில் துடித்த குழந்தையை
பலவந்தமாய் மறந்து எப்போதாவது
சிரிக்கவும் சிரிக்கிறோம்.

நாடற்று அலைபவர்கள்
ஒவ்வொருவருள்ளும் எரிமலை புகைகிறது
புயல் சீறுகிறது
பூகம்பம் குமுறுகிறது.

ஒரு குருவி சிறகசைக்கும் ஓசைக்கும்
பதறியழும் பைத்தியங்களாய்
எங்கள் மனிதர்களைச் சிதைத்தாயிற்று.

இந்தக் களரியின் பின்
குழந்தைமையற்ற குழந்தைகள்
எவரேனும் எஞ்சக்கூடுமெனில்
செடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்தே
பாய்ந்தோடி பதுங்குகுழியில் இறங்குவர்.

இறந்தவர்களின் நினைவுகளோடு எனினும்
ஊர் திரும்பும் கனவை
இடிபாடுகளுள்ளிருந்து
இனி மீட்டெடுக்கவே முடியாது.

ஒருவழியாய் நண்பர்களே!
உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள்!

Pin It