அளவுக்கு அதிகமாக கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி மே மாதம் ஏழாம் தேதி அன்று ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும் என்றும், தனியார் பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தனியார் பள்ளி கல்விக் கட்டணம் குறித்த முழு விவரங்கள் அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் பல தனியார் பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி பெற்றோர்கள் ஆங்காங்கே முற்றுகை போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். தனியார் பள்ளி நிர்வாகங்கள் இணைந்து கோவிந்தராஜன் கமிட்டியின் முடிவை வலுவாக எதிர்க்கத் துவங்கின. இதற்கிடையே, நீதிபதி கோவிந்தராஜன் தனது பொறுப்பை திடீரென ராஜினாமா செய்தார்.  தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டு கடிதத்தை அரசுக்கு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து, ப‌ள்‌‌ளி‌க் க‌ட்டண ‌நி‌ர்ண‌யக் குழு‌த் தலைவராக ‌‌நீதிபதி ர‌விராஜ பாண்டிய‌ன் ‌நியமன‌ம் செய்யப்பட்டார். க‌ல்‌வி‌க் க‌ட்டண‌ம் தொட‌ர்பாக ஆறாயிரத்து நானூறு த‌னியா‌ர் பள்‌ளிக‌ளி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டை புதிய தலைவ‌ர் ‌விசா‌ரி‌ப்பா‌ர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

பணம் புரளும் சந்தைகளில் ஒன்றாகத் தனியார் பள்ளிகள் மாறிவிட்ட நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த நடக்கும் அரசின் முயற்சி எதிர்பாராத வகையில் சிக்கலாகி உள்ளது. அதிகார மையங்களிலும்,  அரசு வட்டங்களிலும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கு சாதகமான நிலை உருவாக கடும் முயற்சிகள் எடுத்து வருவதை அறிய முடிகிறது.

"அரசு பள்ளிகள் தரமாக இருந்தால், தனியார் பள்ளிகளைத் தேடி பெற்றோர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளையும் தரமானவையாக மாற்ற வேண்டுமே தவிர, அரசுப் பள்ளிகளைப் போல் தனியார் பள்ளிகளை கட்டணம் வசூலிக்க  நிர்பந்திப்பது எப்படி சரியாக இருக்கும்" என பள்ளி நிர்வாகங்களை ஆதரிப்பவர்கள் குரலெழுப்புகிறார்கள்.

அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பெற்றோர்கள் தரும் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளை ஆய்வு செய்யும்போது பெற்றோர்களையும் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பெற்றோர் மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்துகிறார்.

மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக நான்கு மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். மிகக் குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விஷயத்தில் தமிழக அரசு என்னதான் நினைக்கிறது என்பதே நடுத்தர வர்க்கத்து பெற்றோர்களுக்கு இப்போது உருவாகியிருக்கும் குழப்பம்.

மிகுந்த கவனத்துடன் இந்த சிக்கலைத் தீர்த்து, கல்வித் துறையில் அமைதியான சூழலுக்கு வழி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

- தஞ்சை வெங்கட்ராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It