அய்யா பாவலரேறு மறைந்து கடந்த சூன் 11, 2011 ஆம் நாளோடு 16 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரின் கனவு இன்றும் நனவாகவில்லை. அவரின் ஆன்மா இன்னும் அமைதி கொள்ளவில்லை.

“கெஞ்சுவதில்லை பிறர்பால்!அவர்

செய்கேட்டினுக்கும்

அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும்

ஆளாமல்

துஞ்சுவதில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்

எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர் நின்றே!''

இது பாவலரேறு என்னும் புலவர் எழுதியப் பாடலல்ல. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் விடுதலைப் போராளியின் உயிர் மூச்சு. புலவனுக்கும் போராளிக்கும் வேறுபாடுண்டு. புலவன் எழுதுவான், போராளி வாழ்வான்.

தமிழகம் இதுவரை கண்டிராத புலவர்களிலிருந்து தமிழறிஞர்கள் என்ற வரையறுப்புகளிலிருந்து பாவலரேறு வேறுபட்டவர். இவருக்கு புலவர் அல்லது தமிழரின் அடையாளம் போதுமானதல்ல. தமிழ்த் தேசத்தின் விடுதலைப் போராளி என்ற அடையாளமே இவருக்கு பொருந்தக் கூடியது. அதுமட்டுமல்லாமல் தமிழ்த்தேசியத்தின் இயற்கையான தேசிய எழுச்சியின் வளர்ச்சியில் விளைந்தவர். தமிழ்த்தேசியத்தின் நேரடி தேசிய அடையாளம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய எழுச்சியும், வளர்ச்சியும் மூன்று வழித்தடங்களில் உருப்பெற்றது. அதில் ஒன்று இந்தியத்தை மறுத்து திராவிடத்தை முன்நிறுத்தி உருவான தமிழ்த்தேசிய உருவாக்கம். தந்தை பெரியாரால் முன்னெடுக்கப் பட்டது. "தமிழ்நாடு தமிழருக்கே' "இந்தி எதிர்ப்புப் போராட்டம்' ஆகஸ்டு 15 ஆம் நாளை துக்க நாளாக கடைப்பிடித்தது போன்றவைகள் தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஆதரவான செயல்பாடுகளாக இருந்தன.

இதற்கு அடுத்து இந்தியப் புரட்சியின்பால் பற்றுக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பொதுவுடைமை யாளர்களின் அரசியல் மாற்றத்தினால் உருவான தமிழ்த் தேசிய உருவாக்கம், குறிப்பாக தோழர் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் போன்ற முன்னோடிகள் முன்னெடுத்துச் சென்ற தமிழ்நாடு விடுதலைப் போராட்டம்.

இறுதியாக தமிழ் மொழியின் மீதும் இதனடிப் படையில் தமிழினத்தின் மீதும் பற்றுக் கொண்ட தமிழ்த்தேசிய ஆற்றல்கள். இவர்கள் பெரிய அளவில் எந்த அரசியல் பின்புலத்தையும் சாராதவர்கள். அதேநேரம் தமிழகத்தின் நேரடியான மொழி, இன உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள். இவர்கள் நேரடியான தேசிய சக்திகள். இப்படியான நேரடியான தேசிய சக்தியாக உருவானவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

மொழி இனம் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றால், தமிழ்நாடு விடுதலைதான் தீர்வு என்று எந்த வகையான சமரசமுமின்றி முன் வைத்தவர். அதற்காகப் போராடினார். தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராடக் கூடிய தனி அமைப்பு கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டவர். கடந்த காலங் களில் தமிழ் மொழி இன உரிமைப் பேசியவர்கள் யாரும் தமிழ்நாட்டு விடுதலையைப் பற்றி யாரும் வெளிப்படையாக வரயைறுத்து முன்வைக்கவில்லை. அதற்காகப் போராடவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியாரால் முன்வைத்த "தமிழ்நாடு தமிழருக்கே!' என்ற முழக்கம் கூட தமிழ்நாடு விடுதலைக்கான தெளிந்த முழக்கமாக இல்லை. தமிழ்நாடு விடுதலைக்கான ஒரு வழிகாட் டல் முழக்கமாகவே இருந்தது. அதும் எதிர்காலத்திற் கான முன்வைப்பாகத் தான் பார்க்க முடியும்.

அதேபோல் தோழர் தமிழரசன் புலவர் கலிய பெருமாள் போன்ற போராளிகள் தமிழ்நாடு விடுதலையை நோக்கி வராத சூழலில், அய்யா பாவலரேறு அவர்கள் தான். அவர் ஒருவர்தான் தமிழ்நாடு விடுதலையைப் பற்றி தமிழ்த் தேசத்தின் எதார்த்தச் சூழலிலிருந்து முன் வைத்தவர்.

அதுவும் எதிரியை மிகத் தெளிவாக வரையறுத்து நமது மொழி இந்தி ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், நமது இனம் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றால், தமிழ்த்தேசத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மீட்டெடுக்கப்பட வேண்டு மென்றால், நாம் இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும். தமிழ்நாடு இந்தியப் பேராதிக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெற வேண்டும். இந்தியாதான் நமது முதல் எதிரி. அதேபோல் இந்தியாவின் அதிகார வகுப்பு பார்ப்பனர் பனியா இந்தியத் தரகர்களை உள்ளிட்டப் பார்ப்பனிய வகுப்பினர் என்பதிலும் தெளிவாக இருந்தவர். தமிழ்த் தேசிய மக்களளை இந்தியன் என்ற பெயரால் இந்தியத் தேசியத்திலிருந்து அடக்க முயற்சிப்பது எவ்வளவு பெரிய மோசடியோ அதே அளவு மோசடியானதுதான் திராவிடத்திற்குள் அடக்க முயற்சிப்பதும் என்பதை தெளிவுறுத்தியவர்.

அவர் கொண்ட கொள்கையில் கொஞ்சமும் பின் வாங்காமல் அரசு அடக்கு முறைகளுக்கு அடிபணியாத வர். அச்சத்தை துறந்தார். ஒரு உண்மையான, நேர்மையான தேசியப் போராளி.

வாட்டுகின்ற வறுமைக்கும் என்

தமிழர் அடிமையில் வாடுதற்கும்

நீட்டுகின்ற வெடிகுழல்தான் தமிழகத்தில்

ஒரு முடிவை நிகழ்த்துமென்றால்

காட்டுங்கள் தமிழ்மறத்தை

கட்டறுக்கும் காளையரே தீட்டுங்கள்

நும் பெயரை முதல்பெயராய் பட்டயத்தில்!

என்று கருவி ஏந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார்.

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற தனித் தமிழ் இதழ்கள், மொழி, இன மீட்பையும், தமிழ்நாடு விடுதலைச் சிந்தனைகளை தமிழக மக்களிடத்தில் பரவலாக விதைத்தவர். இன்று தமிழ்த்தேசிய எழுச்சி ஒரு தெளிந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அய்யா பாவலரேறு அவர்களின் தேசியப் போராட்டமே அடிப்படையாகும்.

இப்பெரும் வரலாற்று நாயகரை நாம் முறையாகவும், சரியாகவும் கற்க வேண்டியிருக்கிறது. தமிழகம் ஒரு முழுமை பெற்ற தேசிய இனமாக வளர்ச்சி அடைந்ததற்கான அடையாளம் பாவலரேறு. ஆம். தமிழ்த்தேச விடுதலையை சொல்லித் தந்த தமிழ்த் தேசத்தனி தந்தையை கற்போம். தமிழ்த் தேச விடுதலையை முன்னெடுப்போம்.

Pin It