Ki Rajanarayananதமிழ்நாடு அரசு புதிய வரலாறு படைத்திருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இப்போதாவது தெரிந்ததே என்று நன்றி கூறவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பை அளித்தவர் 99 வயது பெரியவர் கி.ராஜநாராயணன். வாழும் போது மட்டுமல்ல, மறைந்த பிறகும் ஒரு சாதனை படைத்திருக்கிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரண்டு அரசுகளின் மரியாதையும் அவருக்குக் கிடைத்திருப்பது பெருமைக்குரியதாகும். கி.ரா. என்னும் கரிசல்மண் எழுத்தாளர் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் கடந்த

மே 17 நள்ளிரவில் காலமானார். மறுநாள் பிற்பகல் ஒரு மணியளவில் புதுவை அரசு சார்பில் காவல்துறையினரின் மரியாதை அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல் தமிழகக் காவல்துறையினரின் வாகனப் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் மறுநாள் தமிழக அரசின் மரியாதையுடன் நடைபெற்றது.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. பயின்ற இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அரசு சார்பில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும். அவரது நினைவைப் போற்றிடவும், படைப்பாளுமையை வெளிப்படுத்தவும் அவரது புகைப்படங்கள், படைப்புகள் அனைத்தையும் மாணவர்களும், பொதுமக்களும் அறிந்திட ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா.வுக்கு இடைச்செவலை அடுத்த கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்திருப்பது எழுத்தாளருக்கு உண்மையான அஞ்சலியாகும்.

எழுத்தாளர் கி.ரா.வின் மறைவு தமிழ் எழுத்துலகுக்குப் பேரிழப்பாகும். அவர் எழுத்தாளர் மட்டும் அல்லர். மனிதநேயர், மண்ணையும், மக்களையும் நேசித்தவர். கிராமத்துக்காகவும், திசை தெரியாத விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர். பெரும் போராட்டக்காரர்.

தாம் வாழ்ந்த கரிசல் மண்ணையும், அங்கு வாழ்ந்த மக்களையும் தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவர். அவரது எழுத்துகள் பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் பாலமாக அமைந்தன. எழுத்துலகில் நிலவி வந்த மேதாவித் தனத்தை உடைத்து நாட்டுப்புற இலக்கியங்களுக்கு ஓர் இடத்தை உருவாக்கித் தந்த மண்ணின் மைந்தர்.

கி.ராஜராநாயணனின் முதல் சிறுகதை 1958இல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. கதவு, வேட்டி, நாற்காலி, கன்னி, பேதை போன்ற சிறுகதைகள் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தன. அவரது முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்’ 1976இல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ 1991இல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு பெற்றது.

நாவல் வரிசையில் மூன்றாவதாக ‘அந்தமான் நாயக்கர்’ எழுதி வெளியிட்டார். மேலும் கிடை, பிஞ்சுகள் போன்ற குறு நாவல்களும் வெளிவந்தன. இதில் ‘கிடை’ என்னும் குறுநாவல் திரைவடிவம் பெற்று, ‘ஒருத்தி’ என்ற பெயரில் வெளிவந்தது.

அதற்கு முன்பே அவருடைய ‘கரண்ட்’ என்ற சிறுகதை அதே பெயரில் ஹரிஹரன் இயக்கத்தில் இந்தியில் வெளியாகியிருந்தது. அதில் ஓம்புரி நடித்திருந்தார். இவற்றையெல்லாம் அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

சினிமா என்னும் காட்சி ஊடகத்துக்கும், இலக்கியம் என்னும் எழுத்து ஊடகத்துக்கும் உள்ள வேற்றுமைகளை உணர்ந்துள்ள எழுத்தாளர்கள் குறைவு. கி.ரா. இதற்கு விதிவிலக்காக இருந்தார். திரைக்குத் தகுந்த சில திருத்தங்கள் செய்து கொள்ள இவர் ஒப்புக் கொண்டார் என்று திரை ஆவணப் பட இயக்குநர் அம்ஷன் குமார் கூறியுள்ளார்.

பல்வேறு தலைப்புகளில் சிறு சிறு நூல்களாக அவர் வெளியிட்ட நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற ஒரே நூலாக வெளியிடப்பட்டது. தனி மனிதராக கரிசல் வட்டாரச் சொற்களுக்கென ஓர் அகராதியைத் தொகுத்தளித்துள்ளார். இவையெல்லாம் தமிழுக்கு கி.ரா. அளித்த கொடைகள் என்றே கூறலாம்.

‘மழைக்காகத்தான் பள்ளிக் கூடத்தில் ஓதுங்கினேன். அப்போதும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கி.ரா. தன்னைப் பற்றி வெளிப்படையாகவும், நகைச்சுவையாகவும் குறிப்பிட்டார். அப்போதும் புதுவை பல்கலைக்கழகம் அவரை ‘சிறப்புப் பேராசிரியர்’ ஆக்கிப் பெருமை கொண்டது.

தமிழில் புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள் கூட தொடக்கத்தில் எழுதிய சில படைப்புகளோடு எழுதுவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் கி.ரா. இறுதிக் காலம் வரை எழுதிக் கொண்டே இருந்தார். ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ என்னும் தொடர் அதுவரை அவரைப் படிக்காதவர்களையும் படிக்க வைத்தது.

இடதுசாரி இயக்கங்களுடன் அவருக்கு இருந்த தொடர்பும், தோழமையும் கி.ரா.வின் பார்வையை விரிவுபடுத்தியது. 1940-50வது காலகட்டத்தில் இவரும், இவரது ஊர் எழுத்தாளரான கு.அழகிரிசாமியுடன் இணைந்து கோவில்பட்டி வட்டாரத்தில் இடைச்செவல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சுதந்திர நாள் 1947 ஆகஸ்ட் 15 அன்று இடைச்செவல் கிராமத்தில் இரண்டு இடங்களில் கொண்டாடப்பட்டது. வடக்குத் தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோயிலில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் ஊர் மக்களுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. தெற்குத் தெருவில் உள்ள கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.

அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக கி.ராஜநாராயணன், அவரது இளைய சகோதரர்கள் பெரியாழ்வார், இராமானுஜம், சௌரிராஜன் மற்றும் வி.எஸ்.குருசாமி நாயக்கர், ஆர்.பாலகிருஷ்ணன், நடுத்தெரு இராமசாமி நாயக்கர், சி.கந்தசாமி நாயக்கர், க.சுப்பராயலு, வெ.இராமசாமி நாயக்கர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

நெல்லை சதி வழக்கில் கி.ரா. குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 1955-60 காலகட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் இடைச்செவல் கிராம மக்கள் பங்கேற்றதன் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டைச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

மூன்று மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு, கடைசி ஆட்களாக கி.ரா.வும், வி.எஸ்.குருசாமி நாயக்கரும் விடுதலையானார்கள். அவர்கள் விடுதலை பெற்று வரும்போது பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊர் எல்லை வரையில் கிராம மக்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

1971ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டப் போராட்டத்தின் போது இடைச்செவல் கிராமத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலின் போது கி.ரா.வுடன் வி.எஸ்.குருசாமி நாயக்கரும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் சாலை மறியல் போராட்டம் மிகச் சிறப்பாகவும், முழுமையாகவும் நடைபெற்றது.

மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் ‘கலை கலைக்காகவே’ என்று வாழ்ந்த எழுத்தாளர்கள் மத்தியில் இவர் வேறுபட்டவர். மக்கள் பிரச்சினைகளில் நேரடியாகப் பங்கு கொண்டவர்களால் சிறந்த இலக்கியங்களும் படைக்க முடியும் என்பதற்கு இவர் ஒருவரே போதும்.

“எழுத்தாளன் மிகுந்த ஆற்றல் உடையவன். மக்களுடன் சேர்ந்து போராடும் தோழன். அவனே அவர்களின் தலைவனும். ஆகவே அவன் தன்னை எப்போதும் சாதாரண மனிதனோடு ஒருங்கிணைந்தவனாகவே கருத வேண்டும்” என்றார் மாபெரும் அறிஞர் ராகுல்ஜி.

இது எழுத்தாளர் கி.ரா. அவர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். இறுதி வரையில் மக்களோடு மக்களாகவே இருந்தார். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணரவே தம் எழுத்தையும் பயன்படுத்தினார்.

“என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில் அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான்.

அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகின்ற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்து விட வேண்டும் என்பது என் தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்” என்று கி.ரா. கூறுகிறார்.

ஒரு மண்ணின் மைந்தனின் எழுத்துக்கான கொள்கை இது. இதனைச் சிறிதும் தடம் மாறாமல் இறுதி வரை கொண்டு போய்ச் சேர்த்துள்ளார். கரிசல் இலக்கியம் என்ற புதிய வடிவத்தை உருவாக்கி நிலைநிறுத்தியுள்ளார். தமிழ் எழுத்துலகில் இது அவருடைய சாதனையாக மதிப்பிடப்படுகிறது. அதுவே அவரது குறைபாடாகவும் பேசப்படுகிறது.

கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ‘இடைச்செவல்’ என்ற சின்ன கிராமத்தில் இரண்டு பேர் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றிருக்கின்றனர். கு.அழகிரிசாமி (அன்பளிப்பு, சிறுகதை 1970), கி.ராஜநாராயணன் (கோபல்ல கிராமத்து மக்கள், நாவல் 1991) இரண்டு பேரும் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற பெருமைக்கு உரியவர்கள்.

அவர் ஒரு வட்டாரத்துக்கான எழுத்தாளர் என்று அவரைச் சுருக்கிப் பார்க்கும் மேதாவிகளுக்கு ஒரு கேள்வி. எந்த எழுத்தாளர் ஒட்டுமொத்த நாட்டுக்குமான எழுத்தாளர் என்று கூறுங்கள், பார்க்கலாம்.

- உதயை மு.வீரையன்