சதிகல் (இறந்த வீரனின் மனைவி தீப்பாய்ந்து இறந்தால் அந்தப் பெண்ணின் நினைவாக நடப்படும் கல்), கன்னடத்தில் தோள் கொடுத்தல் என்று கூறுகின்றனர். கேரளத்தில் புலைச்சிக் கல் அல்லது படைக் கல் என்றும் கூறப்படுகின்றது. இறந்துபட்ட கணவனோடு தீப்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வீரமகளிர்க்கு கற்கள் நடப்படுவது மரபு இதனை மஹாஸதி கல் அல்லது மாஸ்தி கல் என மருவியது என்று கல்வெட்டியல் என்ற நூலில் நாகசாமி கூறியுள்ளார். இவ்வகை கல் நடப்படுவதற்கு அடிப்படை வீரர்களின் மரணம். அவர்களின் நினைவாக நடுகற்கள் நடப் படுகின்றன. நடுகல், வீரகல் (மன்னனுக்காகவும், ஆநிரைகளை பாதுகாக்கவும், ஊரைப் பாதுகாக்கவும் பொருட்டு உயிர்நீத்த வீரனின் நினைவாக நடப்படும் கல்), கடவுளெழுதிய கல் (உருவமெழுதிய கல்), கவலையகல் (உருவமெழுதாத கல்) எனப் பல நிலைகளில் பேசப்படும் வரலாற்று ஆவணங்களின் பின்புலத்தில் சதிகல் பற்றியும் அதன் நம்பிக்கைகளைப் பற்றியும் இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.

சதிகல் பற்றி இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் சான்று பகிர்கின்றன. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, மணிமேகலை உள்ளிட்ட இலக்கண, இலக்கிய, காப்பிய நூல்கள் சான்று பகிர்கின்றன. ஐந்திணையில் பாலை நிலமக்கள் உழவுத்தொழில் செய்ய முடியாத சூழ்நிலையைப் பெற்றவர்களாக இருந்தனர். எனவே முல்லை மற்றும் மருதநில மக்களின் முக்கிய செல்வமாகக் கருதப்பட்ட கால்நடைகளைக் கொண்டு செல்லும் நிரைகவரும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். நிரை கவர்தலும், வழிப்பறியும் பாலை நிலமக்களின் தொழிலாக இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

வெட்சிப்போர் புரிந்து நிரைகளைக் கவர்ந்து வந்த பாலை நில வீரர்களுக்கு கல்நட்டு வழிபாடு செய்தனர். இவர்களிடமிருந்து தமது செல்வங்களான நிரைகளை பாதுகாக்க முல்லை மற்றும் மருதநில மக்கள் கரந்தைப் போர் புரிந்தனர். இப்போரில் இறந்தவர்களின் நினைவாகவும் நடுகற்கல் நடப்பட்டன. இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் தோன்றிய பின்னர் கல்லறையில் இறந்த உடலைப் பாதுகாக்கும் வழக்கம் பெரும்பாலும் குறைந்தது. இன்னும் சில சமூகத்தில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது.

சதிகற்கள் எதற்காக நடப்பட்டன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக சதிகற்கள் போரில் ஈடுபட்டு உயிர்நீத்த வீரனின் மனைவி அவனது இறப்பைத் தாங்க முடியாமல் தீப்பாய்ந்து இறந்து போகும் நிலையில் அவளின் நினைவாக நடப்படும் கல் சதிகல் எனப்படுகிறது. இறந்த வீரனையும் அவனது இறப்பின் துயரத்தால் இறந்த மனைவியையும் வழிபட்டால் அவர்களின் பலம் கிடைப்பதாக நம்பினர். இந்த வழக்கத்தைப் பழங்குடி மக்களிடத்தில் காணமுடிகிறது. இப்படிப்பட்ட வழக்கங்களின் ஊடாக நடுகற்களுக்கும் சதிகற்களுக்கும் உள்ள தொடர்பை நம்மால் அறிய முடிகிறது.

இறந்து போன மூதாதையர்களின் நினைவாகக் கல் நடப்படுவதும் அவற்றை வணங்கிவிட்டுச் சென்றால் செல்லும் காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தது. முன்னோரின் நினைவாக நடப்படும் கற்களில் ஆவி இருப்பதாக நம்பினர். அதோடு அந்த ஆவிகளுக்கு ஆக்கவும், அழிக்கவும் சக்தி இருப்பதாக நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் வெளிப்பாட்டால் தான் பலிகொடுக்கும் வழக்கம் தோன்றியது. பலிகொடுத்தால் ஆவிகள் மகிழ்ச்சி யடையும், அப்படி மகிழ்வித்தலினால் அவர்களின் பலம் தங்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பழங்குடி மக்களிடம் இன்றும் இருப்பதைக் காணமுடிகிறது.

பொதுவாக சில சதிகற்களில் உருவமும் எழுத்துக் களும் இடம்பெற்றிருக்கும். சில கற்களில் உருவம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஐந்தாம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை சதிகற்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியர் உருவம் பெற்றிருந்த கல்லைப் பற்றி கூறுகிறார். எழுத்து இருந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை. பிற்கால இலக்கண நூலாசிரியரான புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார் எழுத்துக்கள் உடைய கற்களை கண்டிருக்கக் கூடும். இருப்பினும் தொல்காப்பியரைப் பின்பற்றி சடங்குகளைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.

சதிகற்கல் எப்படிப்பட்ட இடங்களில் நடப் பட்டன என்று பார்க்கும் போது சதிகற்களில் இறந்தவர்களின் கல்லறை மட்டுமல்லாது இறந்து விழுந்த இடம், இறந்தவர்களின் ஊர்களிலும் இறந்தவர் களின் மரபினர் வாழ்ந்த பகுதிகளிலும் காணமுடிகிறது. சதிகல்லை யார் நட்டது என்று பார்க்கும் போது போரில் இறந்து போன வீரனின் மனைவி அவனது இறப்பைத் தாங்கமுடியாமல் தீப்பாய்ந்து இறக்கும் போது குறிப்பிட்ட இனக்குழு மக்களோ, ஊர் மக்களோ அல்லது அவர்களின் உறவினரோ தீப்பாய்ந்து இறந்த பெண்ணின் நினைவாக நடப்படும் கல் சதிகல் எனப்பட்டது.

சதிகற்களின் அமைப்பு பார்க்கும் போது ஒரு கருங்கல்லில் வீரனின் உருவம் இருக்கும். தீப்பாய்ந்து இறந்த வீரனின் மனைவி உருவம் இருக்கும். அதே போன்று மூன்று பெண் உருவங்கள் ஒரு கல்லில் இடம்பெற்றிருக்கும். இரண்டு பெண்களின் உருவத்திற்கு நடுவில் இறந்த வீரனின் உருவம் சில கற்களில் இடம் பெற்றிருக்கும். சில கற்களின் பின்புறம் வீரனின் சிலையும் இருக்கும். இது போன்ற கற்களின் அருகே மூன்று பெண்கள் கைக்கூப்பி இருப்பது போன்று கல்லில் செதுக்கப்பட்டு இருக்கும். இதனை அப்சரப் பெண்கள் (வான் உலக மங்கையர்) என்றும் கூறுகின்றனர். இறந்தவர்களை வான மங்கையர் கைகூப்பி வீரர் உலகிற்கு அழைத்துச் செல்வர் என்ற நம்பிக்கையில் இவ்வகைக் கற்கள் நடப்பட்டுள்ளன.

தீப்பாய்ந்து இறப்பவர்களுக்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தீப்பாயக்கூடிய பெண் அவளாக விருப்பப்பட்டு தீப்பாய வேண்டும். வீரன் இறந்து போனவுடன் அவனது மனைவி தீப்பாய்ந்தால் அவர்களது இருவரது உருவமும் கல்லில் பொறிக்கப் பட்டு இருக்கும். இறந்துபட்டவன் வணங்கும் தெய்வத்தின் உருவம், எதற்காக இறந்து பட்டான் என்ற விவரம் கல்லில் செதுக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடியும். தீப்பாயும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று சில மரபுகளைப் பின்பற்றியுள்ளனர். சதிபுரியும் பெண் நோய்வாய்ப்பட்டவளாக இருக்கக் கூடாது. கணவன் இறந்தபிறகு இப்படி இறந்து விட்டானே என்ற வருத்தம் தீப்பாயும் பெண்ணிற்கு இருக்கக் கூடாது. அனைத்து சமூகத்திலும் தீப்பாயும் வழக்கம் இருந்துள்ளது.

அதே போன்று மற்றவர்கள் யாரும் கட்டாயப் படுத்தி துன்புறுத்தி தீப்பாய்ந்து இறக்க வலியுறுத்தக் கூடாது. பதினாறு வயதிற்கு உட்பட்டவளாக சிறு பெண்ணாக தீப்பாயும் பெண் இருக்கக் கூடாது. அவளாக விரும்பித் தீப்பாய வேண்டும். கட்டாயப்படுத்தி துன்புறுத்தினால் அது கொலைக்கு சமமாகவும் அது அதர்மமாகவும் கருதப்பட்டது. கணவன் (வீரன்) இறந்து பத்து நாட்கள் முதல் பதிமூன்று நாட்கள் வரை தீப்பாயலாம். இவர்களை மங்கலப்பெண்களாகவே கருதுவர். வைசியப்பெண்கள் என்றால் பதினாறு நாட்கள். மற்றவர்களுக்கு இருபது நாட்கள். கணவன் இறந்து பத்து முதல் இருபது நாட்களுக்குள் இறக்கும் பெண்களை மங்கலப்பெண் என்றும் அதன் பின்னும் வாழக்கூடிய பெண்களை அமங்கலப்பெண் (விதவை) என்றும் அழைத்தனர்.

சதிகல் என்பதற்கு என்ன பொருள் வழங்கப் படுகிறது என்று பார்த்தால் கலைக்களஞ்சியம், அபிதான சிந்தாமணி, கிரியாவின் தற்கால தமிழ் அகராதி போன்றவற்றில் அதற்கான பொருள்களைப் பார்க்க முடிகிறது.

‘சதி என்பது கணவன் இறந்தால் மனைவியும் உடன் கட்டையேறுதல் என்ற பழக்கமாகும். சதி என்னும் சொல் கற்புடைய மனைவி என்றும் பொருள்படும். பண்டைக்காலத்தில் பெரும் பாலோர் உடன் கட்டையேறுதலை ஒரு சீரிய பழக்கமாகவும், சிலர் தற்கொலைக்குச் சமமாகவும் கருதிவந்துள்ளனர். (கலைக்களஞ்சியம், தொகுதி - 4)

Ôசதிகல் - (மாஸ்தி கல்) கணவருடனிறந்த வீரபத்தினிகளுக்கு நடுகல். இது மஹாஸதி கல் என்பது மாஸ்தி கல் என மருவியது.’ (அபிதான சிந்தாமணி -பக்.560)

Ôசதி : கணவனின் சிதையிலேயே மனைவியும் தன் உயிரைப்போக்கிக் கொள்ளும் பழங்கால வழக்கம். ’ (கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - பக்.532) என்று பொருள் தருகின்றது.

இனக்குழுச் சமூகத்தில் இருந்து காலம் காலமாக சதிகல் வழிபாடு தமிழகத்தில் இருந்து வருகிறது என்பதற்கு இதுபோன்றவை நமக்குப் பல தகவல்களை தருவதைக் காணமுடிகிறது. தாய்த் தெய்வ வழிபாடு முதன்மை பெற்று விளங்குவதையும் இவைகளின் மூலமாக அறிய முடிகிறது. கணவன் இறந்தவுடன் மனைவி தீப்பாய்ந்து இறத்தலைப் பற்றி இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுகின்றது.

‘நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச்

சொல்லிடை யிட்ட மாலைநிலை.’

(தொல்.புறத்திணை.சூ -24)

என்ற வரிகள் உறுதிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியமான புறநானூறில் தீப்பாய்ந்து இறந்ததற்கு சான்று உள்ளது. பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு தனது கணவன் இறந்த செய்தி அறிந்து தானும் தீப்பாய்ந்து இறந்ததைக் குறிப்பிடுகிறது.

Ôஉயவற் பெண்டிரே மல்லே மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்  டீமம்

நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற

வள்லித ழவிழ்ந்த தாமரை

நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.’ (புறம் -246)

என கைம்மை நோன்பு இருக்கும் பெண்களைப் போன்றவள் அல்ல நான் ஈமப்படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம்; எனது கணவன் இறந்து விட்டான் எனவே எனக்கு தீயானது தாமரைக்குளத்து நீர்போல இன்பம் தருவதாகும் எனக்கூறியவள் விரும்பி தீப்பாய்ந்ததை இவ்வரிகள் கூறுகின்றன.

இலக்கண நூலான புறப்பொருள் வெண்பா மாலையும் கணவன் இறந்தவுடன் மனைவியும் நெருப்பில் தீப்பாய்ந்து இறப்பதைப்பற்றி கூறுகிறது.

‘சோலை மயிலன்னாள் தன்கணவன் சொல்லியசொல்

மாலை நினையா மனங்கடைஇக் - காலைப்

புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்

அகையழல் ஈமத் தகத்து.’ (பு.வெ - 266)

கணவன் கூறியதை நினைத்துக்கொண்டு கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில் குதித்து, தன் உயிரை மாய்த்துக்கொள்வதைப் பற்றி சான்று உள்ளது.

காப்பிய நூலான மணிமேகலையும் தீப்பாய்தல் குறித்து சான்று பகர்கிறது. மணிமேகலையில் பத்தினிப் பெண்டிரை மூன்றுவகையாக பிரித்துப் பார்ப்பதை நினைவு கூறுவது பொருத்தமாக அமையும் என நினைக்கிறேன். கணவனுடன் தீயில் மூழ்கி இறப்பவர் ஒருவகை, தனியாக தீ மூட்டி அதில் பாய்ந்து இறப்பவர் இரண்டாம் வகை, கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ கைம்மை நோன்பு இருக்கும் பெண்கள் என மூவகை நிலைகளைக் காணமுடிகிறது.

‘காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி

ஊதுலைக்குருகி னுயிர்த்தகத் தடங்கா

தின்னுயி ரீவ ரீயா ராயின்

நன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்

நளியெரி புகாஅ ராயி னன்ப்ரோ

டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்.’

(மணி. 2: 41-46)

மேலும்,

‘காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்

போதல் செய்யா வுயிரோடு புலந்து

நளியிரும் பொய்கை யாடுநர் போல

முளியெரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த

பத்தினிப் பெண்டி ரல்லேம்.’ (மணிமேகலை - 18:11-15)

தீப்பாய்ந்து இறத்தலைப் பற்றிய குறிப்புக்களை மணிமேகலையில் காணமுடிகிறது. 

மூவேந்தர்கள், பல்லவர், விஜயநகரப் பேரரசு, நுலம்பர், கங்கர், போசலர்கள் என பல்வேறு கால கட்டத்தில் சதிகற்கள் கிடைக்கப்பெற்றாலும் எழுத்துக்கள் உள்ள கற்கள் பெருமளவில் இல்லை அப்படியே கிடைக்கப்பெறும் கற்களிலும் மிகச்சுருக்கமாகவே எழுத்துக்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் போல அமைந்திருக்கின்றன. எழுத்துக்கள் இடப்பெறாத சதிகற்கள் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா என பல்வேறு இடங்களில் காண முடிகிறது. குறிப்பாக தமிழகத்தில் திருவண்ணாமலை, தருமபுரி போன்ற மலையை ஒட்டியுள்ள இடங்களில் சதிகற்களைக் காணமுடிகிறது.

சோழர் காலத்தில் சதிகல் வழக்கம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக முதலாம் ராஜேந்திர சோழன் செய்யாறு வட்டத்தில் பிரம்ம தேசத்தில் இறந்தபோது அவனது மனைவியருள் ஒருவரான வீரமாதேவி தீப்பாய்ந்து இறந்துள்ளார். அதேபோன்று இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் இறந்துவிட்ட பின் அவனது மனைவி வானவன்மாதேவி உயிர்விட்டுள்ளார். இதனை திருக்கோயிலூர் கல்வெட்டும் ஆண்டிமலை சாசனமும் குறிப்பிடுகிறது. இறந்த இவர்கள் இருவருக்கும் இராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலில் ஐம்பொன் சிலை நிறுவியுள்ளான்.

செஞ்சியை ஆண்ட தேசிங்குராஜா கி.பி.18 ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்தான். ஆற்காடு நவாப்புடன் நிகழ்ந்த போரில் கி.பி.1713 கடலி என்ற இடத்தில் இறந்துவிட்டான். இதனை அறிந்த அவனது மனைவி தீப்பாய்ந்து இறந்துவிட்டாள். இதனை கதைப்பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.

Ôஅக்கினி குழியைச் சுற்றிவந்தாள் ராணியம்மாளும்

கண்கள் குளிர ராஜாவைப் பார்த்தாள்

                             ராணியம்மாளும்

ராஜாவுடனே தீயில் குளித்தாள்

                  ராணியம்மாளும்.’      (தே.க.பாடல்)

வீரனின் மனைவி வளையல்கள் அணிந்த கை களோடும் தலையில் உள்ள முடிகளை இடது புறத்தில் கொண்டைபோல போட்டுள்ளதையும் அதே போல கைகளில் இரு பெண்கள் வில் போன்ற ஆயுதம் தாங்கி நிற்பதையும் ஆண் இரு கைகளையும் கூப்பி நிற்பது போலவும் பெண் உருவம் வலதுகையைத் தூக்கிக் காட்டுவது போலவும் கற்சிற்பத்தில் காணமுடிகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்த வாசியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது நெடுங்குணம் ஊராட்சி. இந்த ஊருக்கு முன்பாகவே சதிகற்கள் வலது புறத்தில் உள்ளது. இறந்தவர்களை சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லும் போது அரிச்சந்திரன் என்ற ஒரு இடம் வரும். அந்த இடத்தில் இறந்த உடலை வைத்து சில சடங்குகளைச் செய்வர். சில இடங்களில் அரிச்சந்திரன் சிலையாக தடிவைத்து காவல் காப்பது போலவும் சில இடங்களில் வெறும் கற்களால் மட்டுமே வைத்து சில சடங்குகள் செய்யும் வழக்கத்தையும் காணமுடிகிறது.

நெடுங்குணத்தில் இருந்து சுமார் முன்னூறு மீட்டர் இடைவெளியில் சதிகல் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. அங்கு செல்வதற்காக வந்தவாசியில் உள்ள ஊடக நண்பர் வாசனோடு இருசக்கர வாகனத்தில் சென்றோம். மழையூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் நண்பர் செல்வராஜிடம் கற்கள் இருக்கும் இடத்தைக் கேட்டுக்கொண்டு நேரில் சென்று பார்த்தோம். சதிகற்களை காணமுடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்த கற்களில் சடங்குகள் நிகழ்த்தப்பட்டதற்கான அறிகுறிகளைக் காணமுடிந்தது. குறிப்பாக கற்களில் மஞ்சள் பூசப்பட்டு குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. அதனைப்பற்றிக் கேட்டால் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் வழிபாடு செய்வதை அரிய முடிந்தது.

நெடுங்குணத்தில் நான்கு சதிகற்கள் உள்ளன. ஒரே கல்லில் மூன்று பெண்கள் கைகூப்பி வணக்கம் செலுத்துவது போன்றும் இடதுபுறக் கொண்டையுடன் உள்ளன. இதனை இறந்துபட்ட வீரனையும் உடன் தீப்பாய்ந்த அவனது மனைவியையும் வான்வுலகம் அழைத்துச் செல்லும் அப்சரப் பெண்கள் என தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். இந்தக் கல் முட் புதருக்கு அருகே உள்ளது.

மற்றொரு கல்லில் இரண்டு பெண்கள் உள்ளனர். இவர்களுக்கும் இடதுபுற கொண்டை உள்ளது. இடது கைகளில் ஆயுதம் தாங்கி நிற்கின்றனர். வலது கரங்களை உயர்த்தி நிற்கிறார்கள். இது தீப்பாய்ந்து இறந்த இரண்டு பெண்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். அதன் அருகே இரண்டு உருவங்கள் கொண்ட கல் பாதியாக சிதைந்து காணப்படுவதால் அதனை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

இந்த கற்களுக்கு அருகே ஒரே கல்லில் ஆண் மற்றும் பெண் உருவம் கொண்ட கல்லைக் காண முடிகிறது, இரு உருவமும் இருவேறு நிலையில் உள்ளது. ஆண் உருவம் இரண்டு கைகளையும் வணங்கி நிற்பது போலவும் பெண் உருவம் இடது கையைக் கீழே தொங்கவிட்ட நிலையிலும் வலது கையை உயர்த்திப் பிடிப்பது போலவும் உள்ளன. ஆண் உருவத்திற்கு அருகே வரிசையாக துளைகள் உள்ளன. இந்தக் கல்லில் மஞ்சள் குங்குமம் வைத்து ஊர் மக்கள் செய்யும் சடங்குகளையும் தற்போது பார்க்க முடிந்தது.

இந்த சதிகற்களில் பெண்கள் கொண்டை வலது பக்கம் போட்டு இருப்பதால் நாயக்கர் காலத்தவையாக இருக்கும் என்று அறிய முடிகிறது. இறந்தவர்களை வழிபடும் வழக்கம் இன்றைக்கும் காணமுடிகிறது. இதனை மூத்தோர் வழிபாடு, தென்புலத்தார் வழிபாடு, குல தெய்வ வழிபாடு என்ற நிலைகளில் அதன் தொடர்ச்சியை காணமுடிகிறது. இது போன்று நமக்கும் கிடைக்கும் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொல்லியல் துறையினர் இது போன்ற கற்களையும் பாதுகாக்க வேண்டும். நான் பார்த்த சதிகற்களில் ஒன்று சிதைந்து போய்விட்டது. எனவே மீதம் இருக்கும் கற்களாவது பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இக்கட்டுரை வாயிலாக முன்வைக்கிறேன். 

சதிகல் பற்றிய முழுமையான பல்வேறு தகவல்களை எந்த நேரத்தில் கேட்டாலும் இன்முகத்தோடு எனக்கு எடுத்துரைத்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் களான முனைவர் இரா.நாகசாமி மற்றும் முனைவர் பத்மாவதி ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.