art allocationவருணப் பாகுபாடும் அதிலிருந்து கிளைத்த சாதியமும் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தியச்சமூகத்தின் ஆட்சியாளராக, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதும், தங்கள் நாட்டின் நிர்வாக அமைப்பை இங்கு அறிமுகம் செய்தனர். இப்புதிய நிர்வாக அமைப்பில் சாதியப் படிநிலையில் மேலேயுள்ள சாதியினரே பணியாளர்களாக விளங்கி ஆதிக்கம் செலுத்தலாயினர்.

மன்னராட்சியில் இடம் மறுக்கப்பட்டோர் காலனியாட்சியிலும் அதே நிலைக்கு ஆளாயினர். இராணுவத்தைப் பொறுத்த அளவில் சற்று வேறுபாடான முறை நிலவியது. சில குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே கொண்ட படைப்பிரிவுகளை ஆங்கிலேயர் உருவாக்கினர். இவை அச்சமூகத்தினரின் பெயராலேயே அழைக்கப்பட்டன.

ஜாட் ரெஜிமெண்ட், சீக்கிய ரெஜிமெண்ட், மகர் ரெஜிமெண்ட், பறையர் ரெஜிமெண்ட் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட ரெஜிமெண்ட்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். மராத்திய மாநிலத்தில் தீண்டத்தகாத சாதியினராக ஒதுக்கி வைக்கப்பட்ட மஹர்கள் படைவீரர்களாக ஆங்கிலேயர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதானது அவர்களுக்கு சமூக உயர்நிலையை வழங்கியதாக அம்பேத்கர் கருதியுள்ளார்.

கிராமப்புறங்களில் குற்றேவல் செய்பவர்களாக இருந்த, தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டிருந்த மஹர்களும் சம்பர்களும் இராணுவப் பணியினால் பிற சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தும் சமூகங்களாக மாறிவிட்டன என்று அவர் அவதானித்தார்.

1927 மார்ச் 19 ஆவது நாளன்று மஹத் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரையில், இராணுவப் பணியின் விளைவாக இவ்விரு சாதியினரின் சமூக வாழ்வில் நிகழ்ந்த. மாற்றங்களாக அவர் குறிப்பிட்ட செய்திகளின் சுருக்கம் வருமாறு:

மராத்தியச் சிப்பாய்களும் பிற சாதியினரும் மஹர்களையும் சம்பர்களையும் தீண்டத்தகாதவர்கள் என்று கிராமப் புறங்களில் கருதினர். தமக்குக் கீழ்ப் படியாவிடில் தம்மை அவமதிப்பதாகக் கருதினர். இதே ஆதிக்க சாதியினர் இராணுவப் பணியில் சேர்ந்தவுடன் மஹர், சம்பர் வகுப்பைச் சேர்ந்த சுபேதார்களுக்கு, சல்யூட் அடித்தனர்.

தீண்டத்தகாத சாதியினரான மேலதிகாரிகள் தம்மைப் புண்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பினாலும் தம் தலையை உயர்த்திப் பார்ப்பதில்லை. இதற்குமுன் இத்தகைய தகுதி இவர்களுக்குக் கிடையாது. இவர்களில் 90% மக்கள் எழுத்தறிவு பெற்றுவிட்டனர். இதில் 50% மக்கள் உயர்கல்வி பெற்றவர்கள். இம்முன்னேற்றம் பெரும்பாலும் இராணுவப் பணியால் ஏற்பட்டது.

வருண எல்லைக்குள் வரவிடாமல் வருணம் அற்றவர்கள் என்ற பொருளில் அவர்ணர்கள் என்றழைக்கப்பட்ட மக்கள் பிரிவினரை இராணுவத்தில் சேர்த்துக்கொண்டதன் வாயிலாக வருணப்படி நிலையில் இரண்டாவதாக இடம் பெறும் ஷத்திரியராக ஆங்கிலேயர்கள் மாற்றிவிட்டனர்.

இது போன்ற முன்னேற்றம் ஏற்பட; வருவாய்த்துறை, காவல் துறை, நீதித்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை ஆகிய துறைகள் இடைநிலை சாதியினருக்கும் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த சாதியினருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் தொடக்கத்தில் துணை நிற்கவில்லை. இதற்குக் காரணம் இத்துறைகளில் இவர்கள் உரிய அளவில் இடம் பெறாமல் போனதுதான். இதுவே இட ஒதுக்கீடு என்பதன் அவசியத்தை, சிந்திக்கத் தூண்டியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு என்பது நீதிக்கட்சி என்ற கட்சியுடன். தொடர்புடையதாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையை ஆராய்வதே "இட ஒதுக்கீட்டின் மூல வரலாறு"’என்ற இந்நூலின் அடிப்படை நோக்கமாகும்.

இடஒதுக்கீடு என்ற கொள்கை நீதிக்கட்சி உருவாக்கியதா? அல்லது பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கினாரா? என்ற விவாதத்தை இந்நூலில் தோழர் கௌதம சன்னா தொடங்கி வைத்து அதற்கு விடையும் கண்டுள்ளார். இம்முயற்சியில் யார் முதலில் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சியை அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவுக்குரிய இடஒதுக்கீட்டையே ஆய்வுப்பொருளாகக் கொண்டுள்ளார். இது இந்நூலின் சிறப்பாகும் .

இந்நூலின் உள்ளடக்கத்தை இரண்டு பகுதிகளாகப் பகுத்துக் கொள்ளலாம். முதற்பகுதி ஆங்கிலக் காலனியாட்சியில் இட ஒதுக்கீட்டின் தேவை குறித்தது. ஒன்றிற்கொன்று வேறுபாடான மொழி பேசுவோரும் பண்பாடு கொண்டோரும். வாழ்ந்த இந்திய உபகண்டத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா என்ற பெயரில் ஒரே நாடாக உருவாக்கியது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும்.

இதன் பின்னர் ஒரே ஆட்சியாளர்களாகத் தம்மை ஆங்கிலேயர்கள் நிலை நிறுத்திக்கொண்டனர். 1857 சிப்பாய் எழுச்சிக்குப்பின் இங்கிலாந்தின் ஓர் உறுப்பாக, அதற்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கும் நாடாக இந்தியா மாற்றப்பட்டு விட்டது. 1885இல் இந்தியத்தேசிய காங்கிரஸ் உருவான பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றோரும், பெருநிலக்கிழார்களும், அரசில் உயர்பதவி வகித்தோரும் ஆங்கில அரசிடம் தம் முன்னேற்றத்திற்காக மனுக் கொடுப்போராயினர்.

இது குறித்து இந்நூலாசிரியர், ‘சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளும் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற நோக்கமின்றி அரசினை அண்டி அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதே நல்லது என்பதை உணர்ந்து கொண்டன’என்கிறார்.

அத்துடன் இது ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் ‘கல்விகற்ற பார்ப்பன வியாபார வேளாண் உயர்குடிகளிடையே கடுமையான போட்டியும் இக்கட்டத்தில் தொடங்கியது என்பது இயற்கையானதே. இந்த வரலாற்றுச் சூழலில் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டிருந்த மக்கள் கேட்பாரற்று இருந்தனர்’ என்று சரியாகவே அவதானித்துள்ளார்.

இரண்டாவது பகுதி இட ஒதுக்கீட்டிற்கான அயோத்திதாசரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவரது எழுத்துச் சான்றுகளின் துணையுடன் வெளிப்படுத்துகின்றது. இதுவே இந்நூலின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. அத்துடன் அவரது தொலைநோக்கான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.

"அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு தொடர்பான வேண்டுகோளை 1891 ஆவது ஆண்டில் அயோத்தியதாசர் முன்வைத்துள்ளார். ஆனால் இட ஒதுக்கீடு என்ற கருத்தை சட்ட வடிவில் அன்றி ஆலோசனை வடிவில் 1888இல் முதலில் வழங்கியவர் டஃபிரின் பிரபு என்ற ஆங்கிலேயர்தான்.

படித்த பணம் படைத்த, உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடும் முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்பதே அவரது ஆலோசனையாக இருந்தது. இது நடைமுறைப்படுத்தப் பட்டதன் விளைவை, அரசு நிர்வாகத்தில் முதன்முறை இட ஒதுக்கீடு பெற்ற சமூகமாகப் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரே இருந்தனர். அரசுப்பணிகளில் மடமடவென அவர்கள் நிறைந்தார்கள். தவிர்க்க முடியாத சக்தியாக அவர்கள் அதில் தம்மை நிரப்பிக் கொண்டார்கள்" என்று வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி இது. இத்தகைய சூழலில்தான் 1890இல் சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை அயோத்திதாசர் உருவாக்கியிருந்தார். இவ்வமைப்பின் முதல் மாநாடு 1891 பிப்ரவரி முதல்நாளன்று நீலகிரியில் நடந்தது. இம்மாநாட்டில் பத்து கோரிக்கைகளை அயோத்திதாசர் முன்வைத்தார்.

இவற்றுள் ஆறு கோரிக்கைகள் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மக்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டவை. இம்மக்கள் பிரிவினருக்கென்று பள்ளிகள் நிறுவுதல், கல்வி பயில்வோருக்கு உதவித்தொகை வழங்குதல், கற்றோருக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குதல், உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் என்பன இவற்றில் இடம் பெற்றிருந்தன.

சாதியப் படிநிலையில் மேலேயுள்ளோருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை கீழேயுள்ளோருக்கு வழங்க வேண்டும் என்ற இக்கோரிக்கையானது ஆங்கில உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைத் தலைகீழாக்கியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். நில உரிமையற்றிருந்த இம்மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற பொருளாதாரம் சார்ந்த கோரிக்கையை அயோத்திதாசர் முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய தொழில் நிதியக் கூட்டமைப்பு என்ற அமைப்பிற்கு 1908 இல் அவர் எழுதிய கடிதத்தை நம் பார்வைக்கு ஆசிரியர் கொண்டு வந்துள்ளார். இக்கடிதத்தில், விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, கல்வித் தகுதிக்கேற்ற வேலை வழங்கல், என்ற மூன்றையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மிண்டோ மார்லி சீர்திருத்தத்தை மையமாகக்கொண்டு 1909 இல் நடந்த விவாதங்கள் நம் கல்விப்புல வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. இந்துக்கள், இஸ்லாமியர் இரு சமயம் சார்ந்தோருக்கும் இடையிலான முரண்பாடாகவே இவை வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆனால், அயோத்திதாசரை முன் நிறுத்தி இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குப் பின்னால் உள்ள நுண் அரசியலை இந்நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய இந்திய அரசியலுக்கும் இது பொருந்தும். மார்லி முன்வைத்த சீர்திருத்தங்கள் பிராமண சமூகத்தின் நலனை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் பாதுகாப்பதாக அமைந்தமையால் காங்கிரஸ் அதை ஆதரித்தது.

தீண்டாமைக் கொடுமைக்குப் பெரும்பான்மையான மக்கள் பிரிவை ஆட்படுத்தியதுடன் பின்னர் அதையே காரணமாகக் காட்டி அவர்களை இந்துக் கோயில்களுக்குள் அனுமதிக்க மறுத்தது இந்துமதம். ஆங்கில ஆட்சியிலும் இது தொடர்ந்தது. சமய அடிப்படையிலான எண்ணிக்கை உயர்வு தேவை என்ற போது இந்து என்ற அடையாளத்திற்குள் இம்மக்கள் பிரிவை உட்படுத்தினர்.

இது இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு உதவியது. இது ஓர் எதிர்மறையான அடையாள அரசியல். இதன் வேறுவடிவம்தான் இன்றைய இந்து அரசியல். இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே இந்து அடையாள அரசியல் தொடங்கிவிட்டது.(கூடவே இஸ்லாமிய அடையாள அரசியலும்). பிராமணர் அல்லாதோர் இயக்கம் இதற்கு எதிராகத் தொடங்கப்பட்டாலும் அடிப்படையில் அது இவ்வியக்கத்தின் வேரைத் தொடவில்லை. பிராமணர் அல்லாதார் இயக்கம் என்ற பொத்தாம் பொதுவான அடையாளத்தை அது கொண்டிருந்தது.

இது குறித்த சில மதிப்பீடுகளை 1909 செப்டம்பர் 15இல் அயோத்திதாசர் தமது ஒரு பைசா தமிழன் இதழில் முன்வைத்துள்ளார். சைவம் வைணவம் வேதாந்தமென்பனவற்றை ஏற்றுக் கொண்ட பிராமணர் அல்லாதோர் பிராமணச் சார்புடையோரே என்பதை அவர் கருத்தாக வெளிப் படுத்தியுள்ளார். அத்துடன் பிராமணர் அல்லாதாராக யார் விளங்கமுடியும் என்பதற்கு, சில வரையறைகளையும் வகுத்துள்ளார். அதன்படி:

பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆதாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு (நான் பிராமின்ஸ்) என்று கூறுவது வீணேயாகும். காரணம் சாதியாசாரக்கிரியைகளிலும் பிராமணர்களென்போர் வர வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலின் இவ்விரண்டிற்குஞ் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் நான் பிராமின் ஆகார்கள்.

இக்கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி அவர் இது தொடர்பாக மேலும் கூறியவற்றை நூலாசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார் (பக்கம்:75-83). இதன் தொடர்ச்சியாக, நீதிக்கட்சியும் பார்ப்பனர்களை எதிர்த்ததே தவிரப் பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை.

சாதி மத ஆசாரங்களைக் கடுமையாகக் கடைப்பிடித்த தலைவர்கள்தான் அதில் நிறைந்திருந்தார்கள் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். (தமிழ்நாட்டில் இன்று பரவலாகக் காணப்படும் அய்யப்பசாமி வழிபாட்டை, தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து பரப்பியவர், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் சர்.பி.டி.ராசன் தான்).

பிராமணர் அல்லாதார் இயக்கத்தை நோக்கி அவர் எழுப்பிய அய்ந்து கேள்விகளும் ஆழமானவை.சாதி இந்துக்கள் என்று சிலரால் வகைப்படுத்தப்படும் இந்துக்களைக் குறிக்க "சாதிபேதமுள்ள இந்துக்கள்" என்ற சொல்லாட்சியை அயோத்திதாசர் பயன்படுத்தியுள்ளார். இது பொருள் பொதிந்த ஒன்று.

இவ்வரலாற்றுச் செய்திகளின் பின்புலத்தில் ‘இடஒதுக்கீடு என்ற கொள்கையின் மூலவேர்’எது? என்பதை ஆராயும் இந்நூலாசிரியர் இக் கொள்கை முன்வைக்கப்பட்ட காலத்தை,

முதற்கட்டம் (1890-1900)

இரண்டாவது கட்டம் (1905-1914)

என இரண்டாகப் பகுத்துக் கொண்டுள்ளார். இப்பகுப்பில் முதற்கட்டம் அயோத்திதாசரை மையமாகக்கொண்டது. இரண்டாவது கட்டம் பிராமணர் அல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி என்ற இரு இயக்கங்களை மையமாகக் கொண்டது. முதற்கட்டத்தில் இட ஒதுக்கீடு அயோத்திதாசரின் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டது.

இது யாசகம் சார்ந்ததல்ல. தன் சமூகத்திற்குரிய பங்கினை வெளிப்படுத்தும் தன்மையது. இரண்டாவது கட்டத்தில் இட ஒதுக்கீடு ஓர் இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டது. இடஒதுக்கீடு இன்மையால் பிராமணர் பெற்றிருந்த ஏற்றம் இருகட்டங்களிலும் முன்வைக்கப்பட்டது. இது ஒருவகையில் ஒற்றுமைக்கூறாக அமைந்துள்ளது.

வரலாற்றடிப்படையில், பிராமணிய எதிர்ப்பென்பது தமிழகத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிப்போனதின் விளைவாக இதைக் கொள்ளலாமோ? பிராமணர் அல்லாத பெரு நிலக்கிழார்கள், (பெரும்பாலும் வேளாளர்கள்), வணிகர்கள், தொழில் முனைவோர், உயர் அதிகார வர்க்கத்தினர், வழக்கறிஞர், மருத்துவர் என பிராமணர் அல்லாத மக்கள் பிரிவினரிடமிருந்து உருவானோர் இரண்டாவது கட்டத்தில் உருவான இட ஒதுக்கீடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற இரட்டை எதிர்மறையை (“Binary oppostion) இவ்வியக்கம் முன்வைத்தது. சூத்திரர் என்ற பொது அடையாளம் பிராமணர் அல்லாதாருக்கு வழங்கப்பட்டதால் பிராமணர் சூத்திரர் முரண்பாடாக மட்டுமே பார்க்கப்பட்டது.

இதன் விளைவாகத் தீண்டத்தகாதவர்கள் என்போர் இட ஒதுக்கீட்டுக்கான இவ்வியக்கத்தின் வேண்டுகோள்களில் "மற்றமை" (the other) ஆகிப் போனார்கள். இவ்உண்மையை அயோத்திதாசர் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுப்பிய அய்ந்து வினாக்களும் ஆழமானவை, முக்கியமானவை.

‘நீதிக்கட்சியின் விகிதாச்சார நடைமுறையை முழுமையாக ஆராய்வது நமது நோக்கமல்ல. மாறாக விகிதாச்சார உரிமை என்னும் கோட்பாடு அதனுடைய கொடையல்ல’ என்ற தம் கருத்தை, தக்க சான்றுகளுடன் இந்நூலின் ஆசிரியரான தோழர் கௌதம சன்னா நிறுவியுள்ளார். தோழருக்கு வாழ்த்துகள்.

(வெளிவர உள்ள ‘இட ஒதுக்கீட்டின் மூலவரலாறு’ எனும் நூலுக்கான முன்னுரை)

- ஆ.சிவசுப்பிரமணியன்