முதல் அம்பு:- (ஆ.இராசா)

ஆ.இராசா 2 G விசாரணையின்போது பிரதமரைப் பற்றி கூறிய வார்த்தைகள்:

 * நான் செய்தது அனைத்தையும் பிரதமர் அறிவார். நான் செய்தது தவறு என்றால், அதை தடுத்திருக்க வேண்டியதுதானே. 

 * "பிரதமருக்கு தெரியாது என்று அவர் சொல்லட்டும் பார்க்கலாம்."

மேலும் இராசாவிற்கும் பிரதமருக்கும் இடையே நிறைய கடிதப் பரிமாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அதில் 2007, நவம்பர்-2ல் ஒளிவு மறைவற்ற அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஏல முறையே சிறந்தது என்று மன்மோகன் இராசாவிற்கு பரிந்துரைத்து உள்ளார். ஆனால் 2008 -ஜன-3ம் நாள் இராசா தன் விருப்பத்திற்கு அலைகற்றை ஒதுக்கீட்டில் நடந்து கொண்டபோது, மௌன சாமியாராகவே பிரதமர் வேடிக்கை பார்த்திருக்கிறார்.

இரண்டாவது அம்பு:- (உச்ச நீதிமன்றம்)

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்ற, மக்களவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்ட விவகாரம். இந்தியப் பாராளுமன்றத்தைப் பார்த்து சந்தி சிரிக்கும் அளவிற்கு கையூட்டுப் பணத்தை அவையிலே கொட்டினார்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே இந்த குதிரை பேரம் குறித்த முழுத் தகவலும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் மூலம் அனுப்பப்பட்டதாகப் பின்னாட்களில் "விக்கி லீக்ஸ்" தெரிவித்தது. அமெரிக்காவிற்கு தெரிந்த இந்த குதிரை பேரம், நம் பிரதமருக்கு தெரியாமல் போனது, இந்த மூன்றாண்டுகள் ஆகியும் அது பற்றி பிரதமர் தெரிந்து கொள்ளாதது ஏன்? இது குறித்து முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யாதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேட்கின்றது.

மூன்றாவது அம்பு:- (தலைமை கணக்குத் தணிக்கையாளர்)

காமன்வெல்த் போட்டி முறைகேடுகளின் சூத்ரதாரியான சுரேஷ் கல்மாடி நியமனத்துக்கும், முறைகேடுகளை தட்டிகேட்க முடியாத சூழ்நிலைக்கும் பிரதமர் அலுவலகமே காரணம் என்று "தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்" அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

அறிக்கையினுள்:-

* அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் 'சுனில் தத்'தின் எதிர்ப்பையும் மீறி கல்மாடி நியமிக்கப்பட்டார் என்பதை 2004 - டிச- 6ல் எழுதப்பட்ட பிரதமர் அலுவலகக் கடிதம் உறுதிப்படுத்துகிறது.

* மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரான மணிசங்கர் அய்யரும், எஸ்.கே.அரோராவும் கல்மாடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிக்கை நீள்கிறது.

இன்னும் எத்தனை அம்புகள் குத்தினால் ஊமைச் சாமியாரின் மௌனம் களையும் என்பது "பிரதமர் மன்மோகன் சிங்"கிற்கே தெரியும்......

- இராவணப்பாண்டியன்

Pin It