அடிபட்டு வீங்கி இருந்தால், மஞ்சளை அரைத்துச் சுடு தண்ணீர் விட்டுக் குழப்பிப் பற்றுப் போடுவார்கள். சுக்கு, மிளகு, பூண்டு, பட்டை, சோம்பு, கசகசா போன்றவற்றை மருந்துச் சாமான் என்பார்கள். நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் இவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அள்ளிப் போட்டு பொட்டலம் கட்டிக் கொடுப்பார்கள்.

இவற்றை அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக் குழந்தை பெற்ற பெண்களுக்குக் கொடுப்பார்கள். புண் இருந்தால் ஆறும்; உடல் அலுக்கை தீரும் என்பதற்குக் கிராமப்புற மக்கள் காலங்காலமாகச் செய்யும் வைத்திய முறை. இதே நாட்டு மருந்துகளை அரைத்துக் கூவாத கோழிக் குஞ்சைச் சுத்தம் செய்து அறுத்து, நசுக்கிப் போட்டு, அடிபட்டவர்களுக்கு மருந்து இரசம் வைத்துக் கொடுப்பார்கள். பாரம் இழுத்தும் உழுதும் களைத்த காளை மாடுகளுக்கும் நாட்டு மருந்தை உரலில் போட்டு இடித்துக் கொடுப்பார்கள்.

நாட்டு மருந்தின் நன்மை மெதுவாகத் தெரியும். இக்கால ஆங்கில மருந்துகளைப் போல கண்டிப்பாகப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தா. கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கசாயம் குடிப்பது போல என்பார்கள். கண்டிப்பாக முற்றிய நோய்களுக்கு அலோபதி வைத்தியமே செய்ய வேண்டும்; நெருப்போடு விளையாடக் கூடாது.

tamil payitrumozhi kanavum nanavumஎன் மகனும் நாகதீபன் என்னும் மருத்துவரும் உடன் பயின்றவர்கள். ஒரு புத்தகத்தைக் கொடுத்து, மருத்துவர் நாகதீபனிடம் படிக்கச் சொன்னேன். ஒரு வாரத்தில் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். வியப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, கொடுத்த புத்தகத்தைத் திரும்பக் கொண்டு வந்து கொடுப்பது; இன்னொன்று, பணியில் - குறிப்பாக மருத்துவப் பணியில் இருப்பவர்களால் விரைவாகப் படிக்க நேரம் இருக்குமா? என்பது.

புத்தகம் படிக்க எப்படி இருந்தது எனக் கேட்டேன்; அசடு வழியவில்லை; புத்தகத்தைப் படித்துள்ளார் என்பது முகத்தெளிவு நன்றாகக் காட்டியது. மருத்துவர் நாகதீபன் இன்னொன்றையும் கூறினார். வியப்பாகவும் இருந்தது.

அவர் வைத்திருந்த மருத்துவமனைக்கு ஏதாவது ஒரு அல்லது பல நோய்ப்பற்றாளர்கள் வருவார்களாம். தமக்குரிய நோய்கள், அவற்றுக்கு நாட்டு மருந்து பயன்படுத்திய விதம் போன்றவற்றைக் கூறுவார்களாம். அவை இந்தக் காதில் போய்க் கொண்டிருக்குமாம்.

பொதுவாக, பெரும்பாலான இளம் மருத்துவர்களுக்கு மரபு வழியில் உற்பத்தியாகும் சைவ, அசைவ உணவுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை. அவர்கள் படித்தவை, வாழும் காலம் இப்படிப்பட்ட மன உணர்வை உண்டாக்கி இருக்கலாம். நோயை ஆளும் வர்க்கம் பசுமைப் புரட்சிவழி உருவாக்கிப் பரப்பிவிட்டது. ஒரு நோய்க்கு மருந்தைப் பயன்படுத்தினால் பல நோய்கள் உடம்புக்குள் உற்பத்தியாகின்றன. ஒரு புற்றுக்குள் பல வகைப் பாம்புகள் குடி இருப்பதுபோல ஒருவரின் உடம்புக்குள் பல நோய்கள் ஆட்சி செய்கின்றன.

‘வாழ்க்கை முறை மாறிவிட்டது. குடிக்கிறார்கள்; புகைக்கிறார்கள்; போதைப் பொருளை மெல்கின்றார்கள்’ என்று காரணம் கூறுவார்கள். இவையும் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே வேளையில் பலவகை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக் கொல்லிகளால் விளையும் தானியங்கள், காய், பழம், கீரைகளைப் பயன்படுத்துவதால்தான் பல நோய்கள் வருகின்றன. மருத்துவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

சுபாஷ் பலேக்கர், நம்மாழ்வார் போன்றவர்கள் மரபு சார்ந்த வேளாண்மையை ஊக்குவித்ததற்கான காரணம், மக்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். நாற்பது - நாற்பத்தைந்து நாட்களில் ஒரு கிலோ, ஒன்றரைக் கிலோ சமயத்தில் இரண்டு கிலோ கூட கறிக்கோழிகள் வளர்கின்றன; எப்படி வளர்கின்றன? இப்படி வளர்க்கப்படும் கோழிகள், மீன்களை உண்ணக் கூடாது எனப் பெரும்பாலான மருத்துவர்கள் தற்போது அறிவுரை வழங்குகின்றார்கள். தாய்ப் பாலிலேயே நஞ்சு கலந்திருப்பதாகக் கூறுகின்றார்கள்.

இவற்றுக்கும் தற்போது விளையும் உணவுப் பொருள்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. எல்லாம் வேதியல் பொருள்களாலேயே விளைகின்றன. எந்த மருத்துவரும் சமூக ஆர்வலர்களைப் போல பெரிய அளவில் பேசியதாகத் தெரியவில்லை, பேரளவுக்கு வேண்டுமானால் பேசி இருக்கலாம்.

நான் மருத்துவர் நாகதீபனிடம் கொடுத்த புத்தகத்தின் பெயர் ‘நோயின்றி வாழ உணவே மருந்து’. நூலாசிரியர்கள் மருத்துவர் சு. நரேந்திரன், மருத்துவர் ஃபிரடெரிக் ஜோசப். இந்தப் புத்தகத்தில் மருத்துவர்கள் இருவரும் மக்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த உணவுப் பொருள்களின் இயல்பை விரிவாக விளக்கி உள்ளார்கள். மருத்துவர்கள் குறிப்பிடுமாறு பழங்கள், காய்கறி, மசாலைப் பொருள் போன்றவற்றில் உள்ள சத்துக்கள், நன்மை செய்யும் வேதிப் பொருட்கள் போன்றவை பற்றி மக்களுக்குத் தெரியாது. ஆனால் காலங்காலமாகக் கிடைக்கும் எல்லாவற்றையும் மக்கள் பயன்படுத்தினார்கள்.

மக்கள் பயன்படுத்தும் பூமியில் விளைபவற்றில் அரளி விதையும் கார்த்திகைக் கிழங்கும் உயிரைக் கொல்லும் தன்மை உடையவை. அண்மையில் செங்காந்தள் எனப்படும் கார்த்திகைக் கிழங்கைத் தின்ற இருவரில் ஒருவர் உயிர் இழந்த செய்தி வெளிவந்திருந்தது (தினமணி, 12-11-2022, ப.4). வேறு இடங்களில் வேறு எதுவும் இருக்கலாம். பூமியில் விளையும் எல்லாம் புனிதமானவை. நாம்தான் அவற்றை நஞ்சாக்கிப் பயன்படுத்துகின்றோம்.

இதேபோன்று பேராசிரியர் - மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் எழுதிய நூல் ஒன்றை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தமிழ் பயிற்றுமொழி: கனவும் நனவும்’ (2022) என்பதே அந்நூல், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

நூலாசிரியர் மருத்துவர் சு.நரேந்திரன், வரலாற்று நிலையில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி இருக்கின்றார். எல்லாமே உடல் நலம் பேண ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வைக் கொடுக்கும். அவ்வாறே தமிழ் பயிற்று மொழி: கனவும் நனவும் என்னும் நூலும் தாய்மொழியின் இன்றியமையாமை பற்றிய ஒரு விழிப்புணர்வைக் கண்டிப்பாக நூலைப் படிப்பவர்களுக்குக் கொடுக்கும்.

தாய்மொழி தமிழ்

தெய்வ மொழி, சாதாரண மொழி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாமே கருத்தை வெளிப்படுத்தப் பயன்படும் ஓர் ஊடகமே. தெய்வ பாடையாகிய சமக்கிருதத்தை உச்சரித்தால் ஓர் அதிர்வலை இருக்கும் என்று காலங்காலமாகவே மிரட்டிக் கொண்டிருந்தார்கள். கரோனாத் தொற்று எல்லா மொழிகளும் எல்லா மதத் தெய்வங்களும் ஒன்றுதான் என்று காட்டிக் கொடுத்து விட்டது.

வழிபாட்டுத் தலங்கள் வழியாகவும் கரோனா பரவுகின்றது என்று மதவேறுபாடு இல்லாமல் இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும் வழிபாட்டுத் தலங்களையும் மூடி வைத்திருந்தார்கள். யார் மனதையும் புண்படுத்த இவ்வாறு கூறவில்லை; இயல்பான நிலை இதுதான். எந்தத் தெய்வத்தாலும் மக்களைக் கரோனா போன்ற தொற்றில் இருந்து காப்பாற்ற முடியாது. பல லெட்சம் பேரைக் கொன்று குவித்த அம்மைக்கு மருந்து கண்டுபிடித்தார்கள். மாரியம்மன் காப்பாற்றவில்லை. மருந்தாலும் விழிப்புணர்வாலும் மட்டுமே காப்பாற்ற முடியும்.

நம்முடைய தாய்மொழி தமிழ் காலங்காலமாகவே மக்களின் பயன்பாட்டில் இருந்த மொழி; மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த மொழி; சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பதிவு சங்க நூல்கள் என்றால் அவற்றை உரசிப் பார்க்கும் உரைகல்லாகப் பூம்புகார், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி போன்ற ஊர்ப்பகுதிகளில் கிடைத்த அகழாய்வுப் பொருள்கள் திகழ்கின்றன.

அகழாய்வில் தாழியும் பானை ஓடும் எலும்பும் தானே கிடைக்கின்றன. எந்த விதமான அறிவியல் சிந்தனையும் இல்லாமல் சிலர் எழுதுகின்றார்கள். வடமொழி இதிகாசங்கள் விளக்குவதைப் போல இந்திரலோகமும் சொர்க்கலோகமுமா கிடைக்கும்? மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் எச்சங்கள்தாமே கிடைக்கும்!

உரலும் மத்தளமும்

உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். சங்க காலத்தில் தொடங்கியது வடமொழித் தாக்குதல் - ஒரு பக்க இடி; ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சமக்கிருதத்தோடு இந்தியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இன்னொரு பக்கம் ஆங்கிலம் தாக்கத் தொடங்கியது. தமிழ், மத்தள நிலைக்கு உள்ளானது.

சமக்கிருதம், இந்தி என்னும் இரண்டும் ஆங்கில மொழியைப் போல தமிழுக்கு அந்நிய மொழிகளே; எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம்; கருத்து வேறுபாடு இல்லை; திணிக்கும்போதுதான் பிரச்சினைகள் தோன்றும். எதிர்த்துக் கொண்டிருக்கும் போதே ஒன்றிய அரசு இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கின்றது. தாய்மொழிக் கல்வியைப் பற்றியும் பேசுகின்றது.

ஒரே நாடு சரி; ஒரே மொழி, ஒரே இனம் எப்படிச் சாத்தியமாகும்? ஒருக்கால் இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டுவந்துவிட்டால் ஒரே மொழி, ஒரே இனம் எனக் கொண்டுவந்துவிடலாம் எனத் தொலைநோக்குடன் கனவு காண்கின்றார்களா என்பது தெரியவில்லை.

எப்படியோ! ஒருவரின் தாய்மொழியைப் பயிற்று மொழியாக ஆக்குவதற்கு எவ்வளவு சிக்கல்கள்? மொழியைத் திணிக்க நினைப்பவர்களை மட்டும் குறை கூற முடியாது; அந்நிய மொழியின்பால் மோகம் கொண்டிருப்பவர்களிடமும் குறை இருக்கின்றது; மோகப்பட்டவர்களை மட்டும் குறை கூற முடியாது; தாய்மொழிப் படிப்பு மட்டும் சோறு போடாது என்னும் சூழல் நிலவுவதால், மக்கள் ஆங்கிலத்தின்பால் மோகம் கொள்கின்றார்கள்.

ஆங்கிலம் படித்தால் மட்டும் எல்லோருக்கும் சோறு போட்டு விடுமா என்று கேட்பதிலும் நியாயம் இருக்கின்றது. வடமாநிலத்தவர் இந்தி போன்ற இந்தோ - ஆரிய மொழிகளைப் படித்துவிட்டுத் தமிழகத்தில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் படும்பாட்டை நினைக்கும்போது ஆங்கிலம் படிப்பது தேவலாம் போலத் தெரிகின்றது. ஆங்கிலம் பணிக்காகப் படிப்பதும் தற்காலிகமாகத்தான் இருக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வியே ஒருவரின் சிந்தனையைப் பெருக்கெடுக்க வைக்கும். மகாகவி, சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்த்திங்கு சேர்ப்பீர் (பார.கவி.21:11) எனக் கூறுவதைப் போன்று மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றைத் தாய்மொழியில் கொண்டு வரவேண்டும். அதற்கான ஆக்க பணியை மாநில அரசுதான் செய்ய வேண்டும்.

மக்கள் தாய்மொழியின் மீது பற்று வைக்கலாம்; ஆளும்வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் எந்த மொழியும் வளராது. மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் புகுந்த ஆரியர்கள் மன்னர்களிடம் தங்கள் மொழியின் தெய்வத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக வேள்விகள்வழி ஊட்டினார்கள். போர்தானே எல்லாக் காலத்து மன்னர்களுக்கும் குறிக்கோள். காக்காய் உட்கார ஏதாவது பனம் பழம் விழுந்திருக்கும்.

சங்க காலத்தில் ஊன்றிய ஆரியம், பல்லவர் காலத்தில் வளர்ந்து பிற்காலச் சோழர், பாண்டியர் காலங்களில் மரத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் கொடிபோலப் படர்ந்து பரவியது. தற்போது தமிழக, அண்டை மாநில ஆளுநர்கள் தமிழகம் ஆன்மிக பூமி என்கின்றார்கள். ஆதிகாலத்தில் இல்லை; பாதியில் - இடைக் காலத்தில் ஆக்கப்பட்டது.

மன்னர்கள் ஆலயங்களை - அவற்றையும் ஆற்றங்கரைப் பகுதிகளில் அமைத்துக் கொடுத்து நிலத்தையும் வேலிக்கணக்கில் வழங்கினார்கள். ஆன்மிகமும் தேவ பாடையாகிய வடமொழியும் முதன்மை பெற்றன. தமிழை வெறுத்ததில் விஜய நகரர், நாயக்கர், மராட்டியர்களும் போன்றோரும் குறைந்தவர்கள் இல்லை. தமிழ் தன்னுடைய பழமையால்தான் தாக்குப்பிடித்து வளர்ந்தது. தொல்காப்பியமும் சங்க நூல்களும் திருக்குறளும் தமிழ்த் தாயைத் தாங்கிப்பிடித்து விழுதுகளாக வேரோடி இருந்தன.

எவ்வளவு தடைகள் இன்றும் தொடர்கின்றன. அவற்றை எல்லாம் தம் மருத்துவப் பணியுடன் தமிழ், தமிழர்பால் கொண்டுள்ள அக்கறையால் மிகவும் முயன்று, மருத்துவர் சு.நரேந்திரன் தமிழ் பயிற்று மாழி: கனவும் நனவும் என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார்.

தாய்மொழி வளர்ப்பு

ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய் மொழியை வளர்ப்பதற்குப் பெரிய கம்ப சூத்திரம் எல்லாம் தேவையில்லை. தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் விட மறுத்து அடாவடித்தனம் செய்து வடிகால் ஆக்கினாலும் கன்னடக்காரர்களின் தாய்மொழிப் பற்றைப் பாராட்ட வேண்டும். அந்தந்த மாநில அல்லது நாட்டு மொழியைப் படி என்று எரிவதை இழுத்தாலே கொதிப்பது அடங்கிவிடும்.

மியான்மரில் பல விரும்பத்தகாத அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் பர்மிய மொழியைப் படி; இல்லை என்றால் மூட்டையைக் கட்டிக்கொள்’ என்று தாய்மொழிப் பற்றைக் காட்டுகின்றார்கள். நூலாசிரியர் சு.நரேந்திரனும் இந்தோனேசியா, இஸ்ரேல், மாலி , கினியா போன்ற நாடுகளில் தாய்மொழி பயிற்றுமொழி ஆக்கப்பட்டதை விளக்குகின்றார். (பக.26 - 28)

வடமொழி, கிரேக்கம், இலத்தின், ஈப்ரு மொழிகளை எல்லாம் தேவபாடை எனப் போற்றி ஆலயத்திற்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். மற்றவர்கள் படித்தாலோ கேட்டாலோ அம்மொழிகளின் வீரியம் குறைந்து விடுமாம். வடமொழியைப் பற்றி மட்டும் ஒன்றைத் தெளிவாகக் கூறமுடியும். பலரும் அம்மொழியைப் படித்தால் எழுதப்பட்டுள்ள மனித குலத்துக்கே எதிரான பிற்போக்குத்தனங்கள் முழுவதும் வெளியே தெரிந்துவிடும். எனவேதான் மறை மொழி என்றார்களோ?

வழக்கொழிந்த மொழிக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதற்கு யூதர்களின் ஈப்ரு மொழி நல்ல சான்று. உலகம் முழுவதும் சிதறிக்கிடந்த யூதர்கள், இஸ்ரேலில் குடி ஏறினார்கள். வழக்கிழந்த அம்மொழியையும் வாழும் மொழி - பேச்சுமொழி ஆக்கிவிட்டார்கள். ஈப்ரு மொழியை மீட்டுருவாக்குவதற்கு மாற்றிலக்கண மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) செய்துள்ள பணி அளப்பரியது.

வடமொழிப் பற்றாளர்கள் அப்படியாவது சமக்கிருதத்தைப் புழங்கு மொழி ஆக்கினார்களா? என்றால் அதுவுமில்லை. கோடிக்கணக்கில் ஒன்றிய அரசு நிதியை அள்ளி அள்ளிக் கொடுக்கின்றது. மற்றைய தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளுக்குக் கிள்ளித் தான் கொடுக்கின்றது. வடமொழியாகிய சமக்கிருதத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு அதை வைத்துக்கொண்டு அரசியல்தான் செய்கின்றார்கள்.

தேவபாடை; இறைவனைச் சமக்கிருதத்தில் ஓதி வழிபட்டால் அதிர்வலையை உருவாகும் என்றெல்லாம் காலங்காலமாகக் காது குத்திக் கொண்டிருக்கின்றார்கள். குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த ஈப்ரு மொழிக்குப் புத்துயிர் கொடுத்தது போல வடமொழியை வளர்த்தார்கள் என்றால் பாராட்டலாம். உலக மொழிகளுக்குப் பொதுவான கோட்பாட்டைக் கொண்டுள்ள மொழியியல் (Linguistics) என்னும் துறை வளர்ச்சிக்கு வடமொழியில் தோன்றியுள்ள இலக்கணங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என மொழியியல் அறிஞர்கள் குறிப்பர்.

ஆரியரின் தொடர்பு, பின்னர் அந்நியரின் தொடர்பால் தமிழுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் கிடைத்த தீமைகள் நன்மையைவிட அதிகமே; மொழிக் கலப்புக்காக மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர் முதலாகப் பலர் குரல் கொடுத்துள்ளார்கள். தமிழ் பயிற்று மொழி ஆவதற்கும் எத்தனை முட்டுக் கட்டைகள். மருத்துவர் சு.நரேந்திரன் தமிழ் பயிற்று மொழி: கனவும் நனவும் என்னும் தம் நூலில் வரலாற்று அடிப்படையில் தெளிவாக விளக்கியுள்ளார். பாராட்டுவதோடு படித்தும் பார்க்க வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு மற்றவர்களைக் குறை கூறுவதைப் போல நாம் செய்த வரலாற்றுப் பிழைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நூலாசிரியர் காய்தலோடு அதே வேளையில் உவத்தல் இன்றி இந்நூலை எழுதி இருக்கின்றார். தமிழ் பயிற்று மொழி என்பதோடு நூல் தலைப்பை நிறுத்தாமல் கனவும் நனவும் என நீட்டும் போதே நூலாசிரியரின் உவத்தல் இன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

தாய்மொழி பயிற்றுமொழி

பொதுக் கல்வியில் தாய்மொழி வழிக் கல்வி கட்டாயம் என்று ஒரு நிலை இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒருமொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. விடுதலைக்கு முன்னே இங்கே நிலவிய, இந்த நிலை கைநழுவிப் போனது தமிழகத்துக்குப் பெருமையளிப்பதாக இல்லை. (ப.31) என நூலாசிரியர் குறிப்பிடுவதைப் படிக்கும்போது என்னைப் போன்றோருக்கு ஆறாம் வகுப்பில் இருந்து ABCD.. கற்று, இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தைப் படிக்கத் தொடங்கியது நினைவுக்கு வரும்.

நூலாசிரியர் மருத்துவர் சு.நரேந்திரன் தமிழ் பயிற்று மொழி: கனவும் நனவும் என்னும் நூலில் பக்கம் பக்கமாகத் தமிழ் மொழியாகிய நம் தாய்மொழிக்கு மட்டுமல்லாமல் மொழிப் பற்றில்லாமல் பிற மொழிகளின் மேல் மோகம் கொள்வோருக்கும் ஒருவர் மேல் இன்னொரு மொழியைத் திணிக்க நினைக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் அறிவுரை வழங்கி உள்ளார்.

ஒரு நாடு வெளி நாடுகளில் வேலை தேடுவதை அடிப்படைத் திட்டமாக வைத்துத் தனது கல்விக் கொள்கையையோ பொருளாதாரக் கொள்கையையோ வகுத்தால் அந்நாடு முன்னோற்றத்தின் முதல் படியில் கூட ஏற முடியாது. (ப.32) நூலாசிரியர் கூறுவது எவ்வளவு எதார்த்தமான உண்மை! தமிழ்வழிக் கல்விக்கு முதல் எதிரி தனியார் பள்ளிகளே! (உங்கள் நூலகம், 14:3, பக். 11-17) என நூலாசிரியர் அரசு வளர்த்துவிட்ட தனியார் கல்வி நிறுவனங்களைக் கடுமையாகச் சாடுவதில் எவ்வளவு உண்மை உள்ளது!

கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தால் மக்களுக்கு எவ்வளவு இன்னல் விளையும் என்பதை மக்களே உணரவில்லை; பின்னர் எப்படி ஆளும் வர்க்கம் உணரும்?

இவை இரண்டையும் கெடுப்பதற்கு முன்னர் மக்களின் பசியைப் போக்கப்போகிறோம் என்று பசுமைப் புரட்சியைக் கொண்டு மக்களின் உடல் நலம், மண்வளம் என எல்லாவற்றையும் கெடுத்து உலகத்துக்கு ஆணியாகிய வேளாண்மையைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். பல ஆண்டுகளாக இருந்த ஐயம் ஒன்றுக்கு மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களின் நூலைப் படித்தபோது, ஐயம் சரியானதே எனப்பட்டது. இத்தனை ஆண்டுகள் ஆங்கிலம் வழிப் படித்தவர்களில் எத்தனைபேர் தேசிய, சர்வதேசப் புகழ்வாய்ந்த நூல்களை, கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்? வெளி நாடுகளில் / மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஆங்கிலம் வழி கற்ற அவர்கள் எழுதியுள்ள ஆங்கில நூல்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே (ப.34).

நூலாசிரியர் அடிக்கடி குறிப்பிடும் மேட்டுக்குடி மக்கள் மெக்காலே கொண்டு வந்த ஆங்கிலக் கல்வியால் அப்போதும் பயன்பெற்றார்கள்; இப்போதும் பயன்பெறுகின்றார்; இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) போன்ற ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி விடுகின்றார்கள். தேசத் துரோகம் என்றொரு தொடர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றதே; இவர்களுக்குப் பொருந்தாதா? உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் மட்டும்தான் தேசத்துரோகிகளா? வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்குவது, வங்கியில் பணம் பெற்று மோசடி செய்வது, ஏழைகளுக்கு வரியை விதித்துப் பெரும் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி, மானியம் கொடுப்பது போன்றவை எல்லாம் தேசத் துரோகம் இல்லையா?

தாய்மொழியில் படிக்க வேண்டும். தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றோர் தமிழில் ஆழங்கால் பட்டவர்கள். வடமொழியை நன்கு அறிந்தவர்கள். தொல்காப்பியர் இருமொழியையும் ஒப்பிட்டு வேற்றுமையைக் கூறுவார். திருவள்ளுவர் வடமொழியில் எழுதப்பட்டுள்ள வர்க்க வேதம், பிற்போக்குத் தனங்களை எல்லாம் எடுத்துக்காட்டுவார்.

தமிழை ஒருவர் அறிந்தாலே போதும்; அவரின் எண்ணங்கள் எல்லாம் அருவியாகக் கொட்டும். சிறுகதை, புதினம் போற்றவற்றால் புகழ்பெற்ற ஜெயகாந்தன், நாட்டுப் புறவியலின் கரை கண்ட கி.ராஜநாராயணன் போன்றவர்கள் நம் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

எனவே, தாய்மொழியில் கலை - அறிவியலைப் படித்தால் சிந்தனைத் தெளிவு பிறக்கும். தனிப்பட்டவர்கள் எழுதலாம்; பேசலாம். ஆளும் அரசுதான் முன்னெடுக்க வேண்டும். தமிழ் மொழி பயிற்று மொழியாக இருக்கக் கூடாது என்று போராடியவர்களை எல்லாம் நூலாசிரியர் சு.நரேந்திரன் ஆங்காங்கே இனங்காட்டுகின்றார்.

தமிழ் பயிற்று மொழி வரலாறு

நூலாசிரியர் சு.நரேந்திரன் பொதுவாக அந்நியரின் வருகைக்குப் பிறகு கல்வி வளர்ச்சி அடைந்ததை முதலியலில் விரிவாக வரலாற்று நிலையில் விளக்குகின்றார். அவர்கள் மதத்தைப் பரப்பினார்கள்; ஆங்கிலம் போன்ற அந்நிய மொழியைப் புகுத்தினார்கள் என்று காலங்காலமாகக் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள்.

மக்களைப் படிக்கவே விடவில்லை; பெரும்பான்மை மக்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கினால் மதம் மாறாமல் என்ன செய்வார்கள்? அந்நியர், அவர்கள் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வந்தபோது படித்துப் பயன்பெற்றோர் யார்? இரண்டாம் உலகப் போரில் இட்லர் இந்தியாவைப் பிடிக்கப்போகும் சூழல் இருப்பதாக அறிந்து, ஆங்கிலேயேர் ஆட்சியில் ஆங்கிலம் படித்தவர்கள் ஜெர்மன் மொழியைக் கற்கத் தொடங்கினார்களாம்.

எட்டிப் போக வேண்டியதில்லை; திருவையாற்றில் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை வழி வேதபாடசாலை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ் வித்துவான் படிப்பைக் கொண்டு வர முயற்சி செய்தபோது மேற்படியார்கள் எதிர்க்கின்றார்கள்.

அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களைப் படித்துப் பார்த்தால், வடமொழி கற்கத் தொடங்கப்பட்டது என்று கூறவில்லை. கல்வி வளர்ச்சிக்கு என்றே இருந்துள்ளது. தமிழவேள் உமாமகேசுவரனார், பட்டுக்கோட்டை நாடிமுத்து போன்றோரின் முயற்சியால் தமிழ் வித்துவான் படிப்பு தொடங்கப்பட்டது.

நீச மொழியாகிய தமிழைக் கற்றுக்கொள்ளும் சூத்திரப்பிள்ளைகளோடு எங்கள் பிள்ளையைப் படிக்கவைக்க மாட்டோம் என்று பையன்களைப் பலர் அழைத்துக்கொண்டு போய்விட்டார்களாம். ஏரிமேல் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போன கதைதான்.

எவ்வளவு பிற்போக்குத் தனமானவர்கள்! சனாதனம், குழந்தை மணம், கைம்பெண் மறுமண எதிர்ப்பு, உடன்கட்டை ஏறுதல் என்னும் பிற்போக்குத்தனம் கொண்டவர்களிடம் முற்போக்குத் தனத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? தமிழர் விளைய வைத்தவற்றை உண்டு, நெய்ததை உடுத்திக்கொண்டு தமிழ் மண்ணில் தமிழைக் கற்பிக்கக் கூடாது என்பவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே புரியவில்லை.

அவர்கள்தான் அப்படி என்றால், நம்மவர்களிலும் சிலர் அவர்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை. தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டபோது பலர் எதிர்த்துள்ளார்கள். வாலாக இருந்தால் ஆட்டித்தானே ஆகவேண்டும்! ஆரியம் சார்ந்தவர்கள் மகாகவி பாரதியார் உட்படப் பலர் எவ்வளவு முற்போக்குவாதிகளாக இருந்தாலும் அவர்களின் சனாதனக் கருத்துகள் எப்படியும் கொஞ்சம் வெளிப்படும். அவற்றுக்காகப் பாரதியார் மேல் கொண்டுள்ள பற்றுக் குறையாது. அதே வேளையில் இராஜாஜி முதலில் தமிழ் பயிற்று மொழி ஆவதை ஆதரித்துள்ளார். பின்னர் இந்தியைத் திணிக்க முயன்றுள்ளார்.

திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பயிற்று விக்கப்பட்ட தமிழ், அந்நியர் ஆட்சியில் பயிற்று மொழியாகவும் இருந்துள்ளது. விடுதலை பெற்ற பிறகு, 1956 இல் ஆட்சி மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்ட பிறகும் அந்தச் சட்டம் செத்ததாகவும் தெரியவில்லை; சிறந்ததாகவும் தெரியவில்லை. பிறந்த மண்ணில் அது ஒண்டுக் குடித்தனம் இருக்கின்றது. தமிழர் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு நூலாசிரியர் சு.நரேந்திரன் ஒரு நடைமுறையைக் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் சிங்கப்பூரில் 6 விழுக்காட்டிற்கும் குறைவு. தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்லர். குடியேறியவர்கள். அங்கு 9.5.56 அன்றே தமிழ் ஆட்சி மொழித் தகுதி பெற்றுவிட்டது (ப.239).

தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி எனத் திராவிட அரசுகள் ஆணைகளை வெளியிட்டாலும் அவை ஆமை வேகத்திலேயே நகர்வதை நூலாசிரியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகின்றார். தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி தொடர்பான ஆணைகள் ஆங்கிலத்திலேயே பிறப்பிக்கப்பட்டன என்பதையும் மறவாமல் குறிப்பிடுகின்றார். இவற்றில் முக்கியமான ஆணை ஒன்றை மிக்க மகிழ்ச்சியுடன் மருத்துவர் சு.நரேந்திரன் குறிப்பிடுகின்றார்.

எழுத்துச் சீர்திருத்தம்

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஓர் அருமையான அரசாணை பிறப்பிக்கப்பட்டது (1979). தந்தை பெரியார் குறிப்பிட்ட எழுத்துச் சீர்திருத்தம் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது (ப.243).

சனாதன விரும்பிகள் தந்தை பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் அவர் மீது கொண்டிருக்கும் வெறுப்பை இன்னும் விடவில்லை. அவர்கள் வெறுப்பதில்கூட பொருள் இருக்கின்றது. ஒட்டுமொத்த பொருளாதாரம், வேலை வாய்ப்பு என அனைத்தையும் அதாவது தொண்ணூற்று ஏழு விழுக்காட்டினர் உரிமைகளையும் இந்த மூன்று விழுக்காட்டினரே ஒரு குளத்து ஒரு வரால் மீன் போல ஒட்டுமொத்தமாக விழுங்கிக் கொண்டிருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தாலும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற இன்னும் பல முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் அவர்களின் ஏகபோக உரிமைகள் பறிபோயின. தந்தை பெரியாரின் சிலையோடு மல்லுக்கட்டுகிறார்கள். சூரியனைப் பார்த்துக் குரைக்கும் நாய் போலத்தான். வேறு எந்த உவமையைச் சொல்வது?

கொல்லைக்காரன் சும்மா இருந்தாலும் சீட்டை பொறுக்கிகள் சும்மா இருக்காது என்றொரு சொலவச் சொல் இருக்கின்றது. அவர்கள் தூக்கிப் போடும் பதவி, துட்டுக்காகச் சனாதனத்தை எதிர்க்க வேண்டிய சாதியினரே அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகின்றார்கள். பதவிக்காக அல்லது பசிக்காக எதை வேண்டுமானாலும் தின்னலாமா? இப்படி எழுதவே கை தயங்குகிறது; வேறு வழி இல்லை; சொல்லாமல் விடவும் மனமில்லை.

அந்நியர் இல்லாவிட்டால் இந்து இல்லை; இந்தியா இல்லை; தற்போது பேசப்படும் இந்துத்துவா இல்லை. நாலு குச்சியில் ஏழு கட்சிகள் என்பது போல இன்று பேசப்படும் அகண்ட பாரதம் ஐம்பத்தாறு தேசமாக இருந்தது. அந்நியரே சிறுகச்சிறுகச் சேமிப்பது போல ஒன்றுசேர்த்தார்கள்.

அந்நியர்கள் சுரண்டினார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தேனை எடுத்தவன் கையை நக்குவான். அவர்கள் கொண்டுபோனது கடுகளவு என்றால் நம்மவர்கள் வெளிநாட்டில் பதுக்குபவை, இந்நாட்டில் உலகப் பணக்காரர் ஆகிக் குவிப்பவை பனங்காய் அளவு. மிளகு அளவை எல்லாம் சொல்லி அவர்களைச் சிறுமைப்படுத்தக்கூடாது. நம்மவர் வெளிநாட்டில் பதுக்கிய கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லெட்சம் போடத்தானே ஒன்றிய அரசு பணமதிப்பு இழப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

பசுப் பாதுகாப்புச் சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள், நீட்தேர்வு, பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான பத்து விழுக்காடு போன்று இன்னும் பல சட்டங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவை இருக்கட்டும்.

மேலை நாட்டினரின் வருகை இந்தியாவை வளர்க்க இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களால் சனாதனவாதிகளுக்கும் நன்மை. சனாதனம், ஆன்மிகம் போன்றவற்றால் மறைக்கப்பட்டிருந்த பழந்தமிழர் - திராவிடர் தொடர்பு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டமை தமிழருக்கும் நன்மை. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழி பேசுவோருக்கும் நன்மைதான். ஆனால், அவர்கள் திராவிடமொழி பேசுவோர் தனிக் குடும்ப மொழியினர் என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தண்ணீர் படுத்தும் பாடு!

இடைக் காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் தமிழருக்கும் இருந்த தொடர்பை முற்றிலுமாக அறுத்துவிட்டன. கல்வி மறுக்கப்பட்டு, உழைப்பில் பூட்டப்பட்டவர்களால் அவற்றை எப்படி அறிய முடியும்?

அந்நியர் மதம் மாற்ற வந்தவர்கள் என்று அரசர்களின் ஆசியோடு மக்களை அடிமைச் சேற்றில் உழலவிட்டவர்களுக்குப் பேசத் தகுதி இல்லை. அவர்கள் கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவத்தைக் கொடுத்தார்கள். விழிப்புணர்வைக் கொடுத்தார்கள்.

திராவிடரும் ஆரியரும் வேறுவேறு இனத்தவர்; ஆரியர் இந்தோ - ஐரோப்பிய இனத்தவர் என்று கூறிய வில்லியம் ஜோன்ஸ் (1788) (Thomas R. Trautmann :53) என்பவருக்கு நன்றி கூற வேண்டும். திராவிட மொழிகளை இனங்கண்டு கூறிய எல்லிஸ் (1816) இராபர்ட் கால்டுவெல் மற்றும் பல திராவிட மொழியியல், தொல்லியல் அறிஞர்களுக்குத் தமிழர்கள் கடப்பாடுடையவர்கள். அகண்ட பாரதம் முழுவதற்கும் உரிமை உடையவர்கள் திராவிடர்களே என்று பறை சாற்றியவர்கள். சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று உலகுக்குப் பறை சாற்றியவர்கள்.

பேச்சுமொழி காலந்தோறும் பெரிய அளவில் மாற்றம் பெறுவதில்லை. பிற மொழிச் சொற்கள் கலக்கும். ஆனால் வரிவடிவம் காலந்தோறும் மாறும். தமிழிலுள்ள எகரமும் ஒகரமும் மெய்போலப் புள்ளி பெறும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார் (தொல்.எழுத்து.16). மற்றைய உயிர்க் குறில், நெடிலுக்கு முறையாக வரி வடிவம் அமைத்தவர் ஏன் இவற்றுக்கு மட்டும் புள்ளி வைத்துக் குறில் என்றார்கள் என்பது விளங்கவில்லை.

இவற்றுக்கு ஒழுங்காக வரி வடிவம் கொடுத்தவர் வீரமா முனிவர் (தொல். விள. 6) எ - ஏ, ஒ - ஓ என்னும் முறையில் தமிழ் உயிர், நெடிலை நிரல்பட வைத்தவர் மதம்பரப்ப வந்த வீரமா முனிவர்தான்.

நன்றாகப் பசுமையாக நினைவில் இருக்கிறது.

1950-களில் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது வேலை செய்கிறான் என்று எழுதாமல் வேலை செய்கிறான் என்று எழுதியமைக்காக ஆசிரியர் என்னை அடிக்கவில்லை; அந்த எழுத்துகளை மட்டும் அடித்துத் திருத்தினார். ‘இப்படி மற்றவர்கள் எழுதுவார்கள்; நாம் எழுதக்கூடாது’ என்றார். அப்போது புரியவில்லை. கல்லூரியில் படிக்கும்போதுதான் புரிந்தது.

தமிழ் எழுத்துகளில் குறிப்பாக உயிர்மெய்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. மெய்யோடு உயிர் சேரும்போது ஒரே அமைப்பாக இல்லாமல் வரி வடிவம் மாறுபட்டிருக்கும். மெய்யுடன் ஆ, ஐ சேரும்போது மாறுபட்ட முறையில் உள்ளவை மட்டும் சீர்திருத்தம் செய்யப்பட்டன.

தந்தை பெரியாரின் முற்போக்கான சிந்தனைகளை எல்லாம் எதிர்ப்பவர்கள் அரசு எழுத்துச் சீர்திருத்த ஆணையை வெளியிட்டதும் வாய்மூடி ஏற்றுக் கொண்டார்கள். அனைவரும் அர்ச்சகர் ஆனால் ஆலயத்தின் புனிதம் கெட்டுவிடும் எனப் பேசுபவர்கள் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தை பெரியார் கூறியபடி அரசு கொண்டு வரும்போது எதிர்க்கவில்லை. அடிமடியில் கை வைக்கும்போது மட்டும் அலறுவார்கள்.

நீட் தேர்வு

நூலாசிரியர் மருத்துவர் சு.நரேந்திரன் பயிற்றுமொழி, ஆட்சி மொழிச் சிக்கல்களை எல்லாம் தெளிவாக விளக்கிவிட்டுத் தொற்று நோய்போல ஆண்டுக்கு ஒரு முறை எதிர்கால மருத்துவக் கனவர்களைக் கொல்லும் நீட்தேர்வு பற்றியும் தெளிவாக விளக்குகின்றார்.

சாகுபடி செய்பவர்கள் பயிரைக் காக்கப் பூச்சி மருந்தை அடிக்கும்போது மயங்கி விழுந்து இறப்பது போல நீட் தேர்வை நினைத்து இறப்பவர்கள், எழுதிவிட்டு இறப்பவர், முடிவு வந்தவுடன் இறப்பவர் என்று ஆராய்ச்சி செய்யாமலேயே வகைப்படுத்தலாம்.

ஆரம்ப காலத்தில் ஆங்கில மருத்துவம் படிக்கவே சமக்கிருதம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று விதி இருந்ததாம். தமிழைப் படிக்கக்கூட அப்படி ஒரு நடைமுறை இருந்ததாம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் அவர்கள் முடிச்சுப் போடுவார்கள். தலையை ஆட்டுவதே மன்னர், மக்கள் வழக்கமாக இருந்துள்ளது. எத்தனை முறைதான் பெரியார்கள் தோன்றிக்கொண்டிருக்க முடியும்?

நீட் தேர்வைக் கள்ளிப்பால் கொடுப்பதோடு ஒப்பிடலாம். கள்ளிப்பால் கிடைக்காத நகர்ப்புறங்களில் பாலில் நெல்லைக் கலந்து கொடுப்பார்களாம். பெண் குழந்தை தேவையில்லை, அதிகம் என நினைக்கும்போது இப்படிக் கொலை செய்வார்கள். பெண், ஆண் வேறுபாடு இல்லாமல் நீட் தேர்வு என்னும் நஞ்சு ஊட்டப்படுகின்றது. மருத்துவப் படிப்பு கண்டிப்பாகத் தகுதியுடன் இருக்க வேண்டும்; எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை; அரசியல்வாதி, ஆளும் வர்க்கம் போல மருத்துவர்கள் நாட்டுப் பிரச்சினைகளோடு விளையாடுபவர்கள் இல்லை. உயிருக்குப் பாதுகாப்புக் கொடுப்பவர்கள். தகுதி வேண்டும். மருத்துவம் படிக்கத் தேவை இல்லாமல் ஆசைப்படுகின்றவர்கள் செத்தாலும் நாட்டுக்குக் கேடில்லை. பெற்றவயிற்றில் பிரண்டை அரிப்பாக மனம் வருந்தி மனநோயாளி ஆகிவிடுவார்கள். படிப்பு முடித்தவுடன் வெளிநாட்டுக்கும் போய் மருத்துவம் பார்க்க மருத்துவர் தேவை. பணம் படைத்தவர்கள், ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் மட்டும் மருத்துவர்கள் ஆக வேண்டும்.

ஆண்டுக்குப் பல லெட்சங்களைச் செலவு செய்து, ஓர் ஆண்டு மட்டுமில்லை தேர்ச்சி பெறும்வரை பல ஆண்டுகள் செலவு செய்து பிள்ளைகள் மருத்துவர் ஆக்கப்படுகின்றார்கள். இதன் விளைவாகத் தனியார் பயிற்சி மையங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. பழங்குடி, தமிழ்வழிக் கிராமப்புற மாணவர்கள் வாய்ப்புகளை இழந்தார்கள். இதன் காரணமாக மாணவி அனிதா போன்ற 19 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர் (ப.277)

மருத்துவரான நூலாசிரியர் சு.நரேந்திரன் அவர்களின் நொந்துபோன மனத்தின் வெளிப்பாடே இந்தக் கருத்து. தமிழ் வழியில் படித்த எத்தனை கிராமப்புற மாணவர்கள் மருத்துவராகக் காரணமாக இருந்திருப்பார்!

நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 165 பக்க அறிக்கையை அளித்துள்ளது. அதன் சாரத்தை நூலாசிரியர் கொடுத்துள்ளார். படிக்கும்போது இதயமே வெடித்து விடும்போல உள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா என ஒன்றிய அரசு எது ஆண்டாலும் அவை ஏழை மக்களுக்கு ஆனவை அல்ல என்பதை மட்டும் உணர முடிகின்றது. (பக்.275 - 281).

இப்படி நூலாசிரியர் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் தமிழ் பயிற்று மொழி: கனவும் நனவும் என்னும் பயிற்று மொழி, ஆட்சி மொழி நடைமுறை பற்றிய நூலைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். இந்தியாவின் படை பலம், ஆன்மிகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசப்படும் பெருமிதம் போல இன்னும் பேச வேண்டியவை உள்ளன. காலங்காலமாக வேளாண் மக்கள் சுரண்டப்படுகின்றார்கள். அவர்களைப் பற்றிப் பெருமிதம் பேசும் நிலைக்கு உயர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை பேசும்நாடு இந்தியா; ஆள்பவர்களே ஒற்றுமையைக் கிண்டிக்கிளறி வேற்றுமையைக் காட்டக் கூடாது.

இந்தியாவிலுள்ள எல்லாத் தாய்மொழிகளும் அவை பேசப்படும் மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுகள் நூலாக்கம், மொழிபெயர்ப்பு போன்ற கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும். தாய்மொழி உணர்வு மட்டும்போதாது. ஒன்றிய அரசும் பேசுவதோடு நிற்காமல் மாநிலத் தாய்மொழி வளர்ச்சிக்கு உதவவேண்டும். இந்தி தான் இந்தியாவின் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் எனத் திணிக்க நினைப்பது தேவையற்றது. மொழிமாற்றம் செய்ய எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.

தாய்மொழியில் எல்லாத் துறைகளிலும் படிக்க வசதிகள், தாய்மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இவற்றை எல்லாம் நூலாசிரியர் மருத்துவர் சு.நரேந்திரன் வரலாற்று முறையில் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

தமிழ் பயிற்றுமொழி (கனவும் நனவும்)

டாக்டர் சு.நரேந்திரன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

சென்னை - 50 | விலை: ரூ.340/-

- ச.சுபாஷ் சந்திரபோஸ், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர், இலக்கணவியல் ஆய்வாளர், எழுத்தாளர்.