Sympetrum flaveolumஅகப்பாடல்களில் வண்டிற்குத் தனிச் சிறப்புண்டு. வண்டின் வருணனையும், அவற்றின் தொழிற்பாடுகளும், வண்டுகளை விளித்துப் பாடுவது போன்ற மொழிநடையும் பழந்தமிழ்ப் பாடல்களில் ஏராளம். வண்டு என்ற சொல்லைக் குறிக்க ஞிமிறு, சுரும்பு, அறுகாற் பறவை, தும்பி போன்ற சொற்கள் வந்துள்ளன.

மதுகரம், அறுபதம் போன்ற சொற்கள் பிற்காலத்தில் வருகின்றன. தமிழ்ச் செய்யுள்களில் புறப்பாடல்களிலும், அகப்பாடல்களிலும் வண்டின் வருணனை வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. அகப்பாடல்களில் வண்டு தலைவனுக்கும் மலர்கள் தலைவிக்கும் குறியீடாக வருவதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வண்டினைக் குறித்த வருணனை சமஸ்கிருத, பிராகிருதப் பாடல்களிலும் வெகுவாகக் கையாளப்பட்டுள்ளது (காண்க; ஹார்ட், 1975, ஹெர்மன் டீகன், 2014). பிராகிருத மொழியில் மஹுமச்சியா, பமர (ப்ரமர), மகுஅரோ (மதுகரஹ) போன்ற சொற்கள் எனக்குத் தெரிந்தவை.

வண்டினைத் தலைவனுக்கும் மலரைத் தலைவிக்கும் குறியீடாக வைத்துப் பார்க்கும் இலக்கிய மரபு வடமொழியிலும் பெருவாரியாகக் காணமுடிகிறது. இதனை இந்திய இலக்கிய மரபாகவே கொள்ளலாம். இனி, இக்கட்டுரையில் வண்டினைக் குறித்து வரும் சில அபபிரம்சா பாடல்களும் சில சங்கப் பாடல்களும் ஒப்பிடப்படுகின்றன.

யானையின் மத்தகத்தில் வண்டுகள்

யானையின் தலைப்பகுதியில் இருக்கின்ற புள்ளிகளை மலர்கள் என்று நினைத்து வண்டுகள் மத்தத்தில் மொய்த்துக் கொண்டே இருக்கும். மதங் கொண்ட யானைகளின் தலையை வண்டுகள் மொய்க்கையில் சில யானையின் வாய்க்குள் சென்றுவிடும் என்ற செய்தி புறநானூற்றில் அறிந்து கொள்ள முடிகிறது.

வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய (புறம். 93)

வண்டுகள் யானையின் பெரிய கன்னத்திலுள்ள மதத்தே செல்லும் (அகம். 132:13) என்ற உண்மையைப் பல பாடல்களில் காணமுடியும் போலும். அபபிரம்சா பாடல் ஒன்றிலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

தாமரை மலர்களை நீத்து
வண்டின் கூட்டம்
யானையின் மதத்தை அடைய
விரும்பியதைப் போல
பெறற்கரிய ஒன்றை
அடைய விரும்புவோர்
இடைவெளி தூரத்தைக்
கருத்தில் கொள்ளார்1

அரிய சாதனைகளை நிகழ்த்த நினைப்பவர்கள் இடைவெளி தூரத்தையும் இன்னல்களையும் பொருட்படுத்தார். யானையின் மத்தகத்தில் வண்டுகள் மொய்ப்பதை வர்ணிக்கும் இலக்கியக் காட்சி இங்கே காணமுடிகிறது.

காந்தள் ஊதும் தும்பி: சங்கப் பாடல் காட்சி

காந்தள் மலர் குறிஞ்சித் திணைக்குரிய பூ என்பதால் குறிஞ்சிக் காந்தள் என்றே அறியப்படும். இது குருதிப்பூ எனவும், செங்காந்தள் எனவும் அலங்கு குலை காந்தள் எனவும் அடைகள் பெற்று வருகின்றது. காந்தள் பூவில் தேன் அதிகமாக இருக்கும் என்றும் காற்றிலே பூக்கள் அசையும்போது தேன் சிந்தும் என்றும் கலித்தொகை-4 பாடல் வரி குறிப்பிடுகின்றது.

வேலன் வெறியாடும் போது காந்தள் மலர் சூடுவான் என்பதும் பெண்கள் மடலேறும்போது காந்தள் மலர் சூடுவர் என்பதும் திணை இலக்கியத்தில் காந்தள் மலர் பெறும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கார் காலத்தில் இம்மலர் மலிந்து காணப்படும் (பரி. 14).

காந்தள் மலரில் வண்டு தேன் உண்ணும் காட்சியைச் சங்கப் பாவலர்கள் செறிவான உவமைக் கொண்டு விளக்கியுள்ளனர்.  “பல அரும்புகளை நீட்டி அசைகின்ற பூங்கொத்துடைய காந்தளின் அழகிய மலரின் நறிய தாதை ஊதும் தும்பி சூதாடு கருவியில் அழகிய மைபோற் றோன்றும் கரிய சென்னியையுடைய மலையுடை நாடன் தனியே வருதலை அஞ்சான்” (ந.சி.கந்தையா உரை)

அலங்குகுலைக் காந்தள்
அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி
கையாடு வட்டில் தோன்றும்
மையாடு சென்னிய மலைகிழவோனே (அகம். 108)

செங்காந்தள் மலரில் தேன் உண்ணும் வண்டு சூதாடு கருவியில் அமைந்த மைபோலத் தோன்றும் என்ற உவமை இங்கு வந்துள்ளது. செங்காந்தள் மலர் சூதாடு கருவிக்கும் வண்டு மைக்கும் உவமைப்படுத்தப் பட்டுள்ளது.

கரிய சென்னியையுடைய நாடனே என்று வருவதால் தலைவனும் வண்டின் குணத்தைப் பெற்றவனாகிறான் என்பது குறிப்பு. இதே பாடலில் செங்காந்தள் மலர் பாம்பின் அஞ்சத்தக்க தலை படம் விரித்ததைப் போல காணப்படுகிறது என்றும் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காந்தள் பூவையும் வண்டையும், பாம்பினையும் பாம்பு உமிழும் மணியையும் முறையே தொடர்புபடுத்தும் வகையில் குறுந்தொகைப் பாடல் ஒன்று உள்ளது. காந்தள் பூவின் நறிய மகரந்தத்தை உண்ட வண்டு பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலத் தோன்றுகிறது.

அலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங்
குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியிற்
றோன்றும் (குறுந். 239)

இங்கு காந்தள் பாம்பிற்கும் வண்டு பாம்பு உமிழும் மணிக்கும் உவமை அமைந்துள்ளது. பாம்பும் மணியும் அச்சத்தைத் தரும் தோற்றத்தைத் தந்தது போல தலைவன் - தலைவி நட்பும் அஞ்சுதற்கு உரியதாயிற்று என்பது குறிப்புப் பொருள்.

கலித்தொகையில் இன்னொரு காட்சி. காந்தள் மலரில் தேன் ஊதும் வண்டு தங்க மோதிரத்தின் மேல் பதித்த நீலக்கல் போலத் தோன்றுகிறதாம்.

தகையவர் கைச்செறித்த தாள்போல காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் (கலி. 7)

செங்காந்தள் மலருக்குப் பதிலாகப் பிடவு மலரில் மகரந்தத்தை உண்ட தும்பியைப் பொன்னை உரசிப் பார்க்கிற கல்லுக்கு ஒப்பிடப்படுவதை நற்றிணைப் (25) பாடலில் காணமுடிகிறது.

அவ்வளை வெரிநின் அரக்கீர்த் தன்ன
செவ்வரி இதழ சேண்நாறு பிடவின்
நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்

அழகிய வளையினது (வளை = சங்கு) முதுகில் (வெரிநின் செவ் அரக்கினால் வரிகளைத் தீட்டினால் போன்ற சிவந்த வரி பரந்த இதழ்களையுடைய பிடவின் பூவினையுடைய நறிய தாதினைப் படிந்துண்ட தும்பி பசுமை நிறம் பொருந்திய பொன்னுரைக்கப்பட்ட கல்லினது நிறத்தையடையும். இப்பாடலில் பிடவ மலரில் மகரந்தம் ஊதிய வண்டு பொன்னுக்கும் அதனை உரசிப் பார்க்கும் கல்லுக்கும் உவமைப்படுத்தப் பட்டுள்ளன.

சங்கப் பாடல்களில் மலர்-வண்டின் உறவு பின்வருமாறு உவமையின்வழி விளக்கப்பட்டுள்ளது.

1. காந்தள் - (சூதாடும்) வட்டில்
வண்டு - மை
2. காந்தள் - பாம்பு
வண்டு - பாம்பு உமிழ் மணி
3. காந்தள் - பொன் மோதிரம்
வண்டு - நீலக்கல்
4. பிடவம் - பொன்
வண்டு - உரைகல்

வண்ணம், வடிவம், குணம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வுவமைகள் அமைந்துள்ளன.

அபபிரம்சா பாடல் தரும் காட்சி

வண்டினை இந்திர நீலக்கல்லுக்கு ஒப்பிடும் காட்சி அபபிரம்ச பாடலிலும் வருகின்றது. இங்கே செங்காந்தள் மலருக்குப் பதிலாகச் செண்பகப் பூ வந்துள்ளது. பாடல்:

“செண்பக மலரின் நடுவில் ஒரு வண்டு புகுந்தது. அக்காட்சி தங்கத்தில் பதித்த இந்திர நீலக்கல்லைப் போல அழகாகத் தோன்றுகிறது.”2

இப்பாடலிலும் வண்டைத் தலைவனுக்கும் செண்பக மலரைத் தலைவிக்கும் நிகராக எடுத்துக்காட்டு உவமை போல சொல்லப் பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.

தலைவனும் தலைவியும் கலவியில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்புப் பொருளாகக் கொள்ளமுடிகிறது. இன்னொரு அபபிரம்சா பாடல் பொன்னையும் உரைகல்லையும் காட்சிப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

காதலன் கருப்பு நிறம்
காதலி
செண்பக மலரைப் போல
பொன்னிறம்
இருவரும் இணைந்திருக்கையில்
உரைகல்லில் தங்கக்கோடு
வரைந்ததைப் போல்
உள்ளது3

இப்பாடலில் தலைவனும் தலைவியும் இன்பம் நுகர்வது நேரடியாகச் சுட்டப்படுகிறது. சிலர் நிற வேறுபாட்டை (contrast) வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறுகின்றனர். செண்பக மலர் குறித்து தமிழ் இலக்கியங்களிலும் வருகின்றது.

பெருந்தண் சண்பகம் கலி. 15, திருமு. 1-2)
மணங்கமழ் சண்பகம் (பரி. 12-77)
வண்டு அறைஇய சண்பகநிரை (பரி. 11)
ஆதிரையான் அணிபெற மலர்ந்த
சண்பகம் (கலி. 15:20-21)

செண்பக மலர் வரும் நூல்களான பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகியவை பிற்காலச் சங்க நூல்களாகும். இறைவனுக்குச் சூட்டும் மலராக சண்பக மலர் கருதப்படுகின்றது (ஆதிரையான் - சிவபெருமான்).

வண்டினை உருவகமாக வைத்து அது மலரைப் பிரிந்து துயரப் படுவதாகவும் அதனை ஆற்றுவிக்கும் விதமாகவும் இரு பாடல்கள் காணப்படுகின்றன. நீ விரும்பும் மாலதி மலர் வெகுதூரம் சென்றுவிட்டது.

அந்தத் திசையை நோக்கி அரற்றாதே என்று ஒரு பாடல் வந்துள்ளது.4 கடம்ப மரம் தழைத்துப் பூத்துக் குலுங்கும் வரை வேப்ப மரத்தில் பொழுதைக் கழிப்பாயாக5 என்றும் வண்டை விளித்துக் கூறுவதாக மற்றொரு பாடல் காணப்படுகின்றது. இத்தகைய பாடல்கள் யாவும் பிறவும் ஒப்பிட்டு இன்புறத்தக்கன.

அடிக்குறிப்புகள்: Apabhramsa Grammar

1. swarms of bees deserting lotuses aspire to reach the (rutted) temples of elephants; those who insists on securing (only) what is most difficult, do not mind, vast distances (required to be covered in achieving it (P. 69)

2. Right in the centre of the champaka flower, O friend, a bee has set (lit entered); it looks lovely, like the Indraneela jewel set in gold (P. 143)

3. The lover has a dark complexion, (while) the beloved has a golden complexion of a champaka flower. (In the company of her lord) she appears like a streak of gold drawn on a touch stone (p. 50)

4. O! bee, do not buzz in this deserted place, and do not weep looking in that direction. (for) that Malathi, for whom you are pinning away (lit. dying with the anguish of separation) has left (p. 79).

5. O! bee, even on this Nimba tree please linger on for some days till (by the time the kadamba, with its rich foliage and extensive shade, blossoms up. (p. 90).

துணை நூல்கள்

1. Apabhramsa of Hemacandra (ed. K.B.Vyas), Prakrit Text Book Society, Ahmedabad, 1982.
2. Hala’s Sattasai (Translated by Peter Khoroche & Herman Tieken), Motilal Banarsidas, Delhi, 2014.
3. கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகைப் பாடல்கள், தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17.

- ஆ.கார்த்திகேயன்