‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ என்றொரு பொன்மொழி உண்டு. இது சங்கத்தின் வலிமையை உணர்த்துவதற்காகக் கூறப்பட்டது. சங்கத்தின் வலிமையை இன்றைய குழந்தை எழுத்தாளர்கள் உணரவில்லை போலும்! நடைபாதை வியாபாரிகளுக்குக் கூட சங்கம் இருக்கிறது. குழந்தை எழுத்தாளர்களுக்கு சங்கம் இல்லை.

முன்பு குழந்தை எழுத்தாளர்களுக்கு சங்கம் இருந்தது. 1950ஆம் ஆண்டு குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவால் துவக்கப்பட்டு 2000ஆம் ஆண்டில் இறுதி மூச்சை நிறுத்திய குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆண்டு கால சாதனைகளை நினைவு கூர்ந்தால் ஏன் வேண்டும் குழந்தை எழுத்தாளர் சங்கம்? என்பதை உணர முடியும் என்று நம்புகிறேன்.

அன்று குழந்தைக் கவிஞர் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை ஏன் உருவாக்கினார் என்பது ஒரு கதை.

குழந்தை எழுத்தாளர்கள் திரு.நெ.சி.தெய்வ சிகாமணியும் திரு. தங்கமணியும் சேர்ந்து ஒரு பிரச்சினையை குழந்தைக் கவிஞரிடம் கொண்டு வந்தார்கள். பதிப்பகங்களும் பத்திரிகைகளும் குழந்தை எழுத்தாளர்களுக்கு சரியாகப் பணம் தருவதில்லை. இந்தப் பிரச்சினையால் குழந்தை எழுத்தாளர்கள் வருவாய் இன்றி வாடுகிறார்கள். அவர்களின் வாட்டம் போக்க குழந்தை எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டினர்.

குழந்தை எழுத்தாளர்களின் நிலை உயருவதற் காகவே அன்று குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. எந்தப் பிரச்சினைத் தீர சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப் பிரச்சினை இன்னும் தொடர்கிறது என்பதே உண்மை.

1950இல் ஆரம்பிக்கப்பட்ட குழந்தை எழுத்தாளர் சங்கத்திற்கு முதலில் தலைவராக பதிப்பாளரும் குழந்தை எழுத்தாளருமான திரு.வை.கோவிந்தன் இருந்தார். குழந்தைக் கவிஞர் 1954இல் தான் தலை வரானார். அதன் பிறகு நெ.சி.தெய்வசிகாமணி, ஆர்.வி., கல்வி கோபாலகிருஷ்ணன், சௌந்தர், வெ.நல்லதம்பி என்று பலரும் தலைவராக செயல் பட வாய்ப்புடைய ஜனநாயக அமைப்பாக குழந்தை எழுத்தாளர் சங்கம் இருந்தது.

குழந்தை எழுத்தாளர் சங்கம் செய்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல, அதன் பணிகளை குழந்தை இலக்கியத்திற்குச் செய்தது, குழந்தை எழுத்தாளர் களுக்குச் செய்தது என்று பிரித்துக் கொள்ள முடியும்.

முடிவில் குழந்தை எழுத்தாளர்களுக்குச் செய்தவைகளைப் பார்ப்போம்.

குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல் ஆகிய துறைகளில் போட்டி நடத்தி பரிசுகளை வழங்கி கௌரவித்தது. முதல் பரிசாக தங்கப் பதக்கத் தையும் இரண்டாவது பரிசாக வெள்ளிப் பதக்கத் தையும் அளித்தது. இப்பதக்கங்களை பிரபல திரைப் பட நிறுவனமான ஏ.வி.எம் வழங்கியது.

போட்டிக்கு வந்திருந்த குழந்தை இலக்கிய படைப்புகள் நூல்களாக வெளிவர பதிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்யும் வேலையை சங்கம் செய்தது.

குழந்தைகள் தினவிழா நடத்தி அவ்விழாவில் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடவும் சங்கம் வழி வகுத்தது. குழந்தைகள் தின விழா வெளியீடாக ஆயிரக்கணக்கில் குழந்தை இலக்கிய நூல்கள் வெளிவந்தன.

1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியை சங்கம் நடத்தியது. 1976 முதல்தான் ‘பபாசி’ புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. அதற்கு முன்பே புத்தகக் காட்சியை (Book Fair) நடத்திய குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடு சிறப்பானது அல்லவா!

கு.எ. சங்கத்தின் இன்னொரு சிறப்பான செயலையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

அது அரிய செயலாகும். குழந்தை எழுத்தாளர்களின் புகைப்படக் காட்சியை சங்கம் நடத்தியது. பெரியோருக்கு எழுதும் எழுத்தாளர்களின் சங்கங்கள் கூட செய்யாத செயலாகும் இது.

இன்று குழந்தை எழுத்தாளர்கள் யார் இருக்கிறார்கள்? என்ன எழுதியிருக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அன்றே குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தை எழுத்தாளர்களின் விவரங்களை தெரியவில்லை. ஆனால் அன்றே குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தை எழுத்தாளர் களின் விவரங்களை ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ என்ற நூலாக 1961ஆம் ஆண்டில் வெளி யிட்டது. 1975 வெள்ளி விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? என்று இரண்டாவது நூலும் வெளியிடப்பட்டது. 1987 இல் ‘Who’s Who of Tamil writers for children’ என்று ஆங்கிலத்தில் வெளியிடப் பட்டது. 370 குழந்தை எழுத்தாளர்களின் விவரங்கள் அதிலிருந்தன.

குழந்தை எழுத்தாளர்கள் சிறப்பான படைப்புகள் தருவதற்கு அவர்களுக்கு நிச்சயமாக பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சிக்காக கு.எ.ச. குழந்தை இலக்கிய கருத்தரங்குகளை நடத்தியது. தி.ஜ.ர. நினைவு சொற்பொழிவுகள் மூலம் குழந்தை எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராய்ந்தது.

1959ஆம் ஆண்டு முதல் கு.எ.ச. குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்தியது. 1987ஆம் ஆண்டில் 8வது இலக்கிய மாநாட்டின்போது மூத்த குழந்தை எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, குழந்தை நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் பாராட்டப்பட்டன. பாராட்டப் பட்ட பதிப்பகங்களில் ஒன்றாக NCBH - யும் இருந்தது.

கு.எ. சங்கம் செய்த இன்னொரு மகத்தான பணி குழந்தை நூல் தொகை. குழந்தை இலக்கியத்தில் எத்தனை நூல்கள், என்னென்ன நூல்கள் வந்திருக் கின்றன என்பதைக் காட்டும் பட்டியல் அது. இத்தகைய பட்டியல்கள் இருந்ததின் காரணமாகவே குழந்தை இலக்கியம் பற்றி பரிசீலனைகள் நடந்தன. ‘நூலகத் தந்தை’ எஸ்.ஆர். ரங்கநாதன் தலைமையில் பெரியசாமி தூரன், அழ.வள்ளியப்பா, தம்பி சீனிவாசன், திருமதி. சாந்த லட்சுமி ஆகியோர் அடங்கிய குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் குழந்தை எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் ஆக்கப் பூர்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் வயது பிரிவுகளுக்கேற்ப எழுதப்பட வேண்டும், குழந்தைகளைக் கவரும் விதத்தில் நூல்கள் தயாரிக்கப்பட வேண்டுமென்று அன்றே வழிகாட்டப்பட்டது.

கு.எ.சங்கம் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் செய்த பணிகள் ஈடு இணையற்றது.

அன்று குழந்தை எழுத்தாளர்கள் குழந்தைகளைக் கொண்டாடினர். அவர்களோடு கூட்டுறவில் இருந்தனர். வாரந்தோறும் குழந்தைக் கவிஞர் தன் வீட்டில் குழந்தைகளுக்கு கதை சொல்லி வந்தார். வாண்டு மாமா, கூத்தபிரான், சௌந்தர் ஆகியோர் தங்கள் பகுதியில் சிறுவர் மன்றங்களை நடத்தினர். கண்ணன், கரும்பு, அணில், கோகுலம் போன்ற சிறுவர் பத்திரிகைகள் சிறுவர் மன்றங்களை நடத்தின. வானொலியும் தொலைக் காட்சியும் சிறுவர் நிகழ்ச்சிகளை நடத்தின.

கு.எ. சங்கம் குழந்தைகளுக்காக நாடகங்களை நடத்தியது. திரைப்படங்களையும் திரையிட்டது. கதை சொல்லுதல் நிகழ்ச்சிகளை நடத்த உறுதுணையாக இருந்தது.

இதன் காரணமாக குழந்தைகள் தாமாகவே சிறுவர் நூல்களையும் இதழ்களையும் வாங்கி படிக்கும் அளவிற்கு ஆர்வமுடன் இருந்தனர்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்தது என்று நாம் எண்ணிப் பார்க்கும் படியான அளவிற்கு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பணிகள் இருந்தன என்பதை மறுப்பவர்கள் இருக்க முடியாது.

மகத்தான காரியங்களை ஆற்றிய கு.எ. சங்கத்தின் மறைவு என்பது வருத்தத்திற்குரிய வரலாறாகும். அன்று சிறுபிள்ளை விளையாட்டாக சங்கத்தைக் கலைக்கும் முடிவை எடுத்தவர்கள் இன்று வருந்தாமல் இருக்க மாட்டார்கள்.

கு.எ. சங்கத்தின் இறுதி என்பது ஒரு நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சி இல்லைதான். திறமையான, தன்னலமற்ற நிர்வாகிகள் காலமானது மட்டும் காரணமல்ல. காலமாற்றம் என்பது முக்கிய காரணம்.

1990க்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் பெற்றோர், ஆசிரியர்களின் கண்ணோட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. இதன் விளைவாக குழந்தைகளின் கல்விச் சூழலில் பாதிப்புகள் ஏற்பட்டன. தாய்மொழி வழிக் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டது. பாடப் புத்தகங்களைத் தாண்டிய குழந்தைகளின் வாசிப்பு உலகம் சுருங்கியது. தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி குழந்தைகள் விரட்டப்பட்டனர். தொலைக் காட்சி, கணினி, கைப்பேசி, இணையத்தின் படை யெடுப்பு குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. உலகமயம், தாராளமயம், நுகர்வு மயம் மரபான கலை, இலக்கிய தேடல்கள், தேவைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது.

சமூக மாற்றத்தின் விளைவாக குழந்தை இலக்கியம் கவனிப்பாரற்றுப்போனது. ஏற்கனவே பலவீனத்துடன் இருந்த குழந்தை எழுத்தாளர் சங்கத்தால் இச்சரிவை இனங்கண்டு தடுத்து நிறுத்த முடியவில்லை. பொன்விழா கொண்டாடாமலே கு.எ. சங்கம் இறுதி மூச்சை நிறுத்தியதற்கு இது முக்கிய காரணம்.

குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் திரும்ப வேண்டும், குழந்தை எழுத்தாளர்கள் மதிப்பு பெற வேண்டும், குழந்தைகளின் கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல் உரம் பெறவேண்டும் என்று ஒரு விருப்பம் இப்போது தோன்றியுள்ளது. குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சி நிலையை கவலையுடன் நோக்குகிறவர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு கவலையுடன் நோக்குகிறவர்கள் இப்போது எழுதப்படும் குழந்தை இலக்கியத்தின் போதாமையை அந்தக் கால நிலைமையுடன் ஒப்பிட்டு இலுப்பைப்பூ வேண்டாம், ஆலை வெல்லம் வேண்டுமென்றும், தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு அண்டரண்டப் பட்சியின் சிறகுகள் வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.

இக்கூற்றுகள் வரவேற்கத் தக்கவையே. இங்கு தமிழ்வழிக் கல்வி தேய்ந்து வரும் சூழலில் தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு அண்டரண்டப் பட்சியின் சிறகுகள் முளைப்பதால் என்ன பிரயோசனம்? பொது புத்தகப் படிப்பை விலக்கும் கல்விமுறையை மாற்றாமல் தமிழ்க் குழந்தை இலக்கியம் ஆலை வெல்லமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் என்ன லாபம்?

இன்று தமிழ்க் குழந்தை இலக்கியம் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்கள் சாதாரணமானவை அல்ல. அதில் மொழி விடுதலைக்கான போராட்டத்தின் தேவை இருக்கிறது. குழந்தைகளை ஏற்றத் தாழ்வுடன் கூறுபோடும் கல்வி முறைக்கு எதிரான போராட்டத்தின் தேவை இருக்கிறது.

இன்று புதியவர்கள், இளைஞர்கள், குழந்தை இலக்கியம் படைக்க வருகிறார்கள். ஏற்கனவே படைத்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து ஒரு புதிய எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால், தங்கம் செய்யாததை சங்கம் செய்யும். முதலில் தமிழ்க் குழந்தை இலக்கியம் நல்ல விளைச்சலைப் பெற மண்ணை தயார்படுத்த வேண்டிய பெரும் பணி இருக்கிறது. பெரும் பணியை தனி மனிதர்களல்ல, அமைப்பே செய்யமுடியும்.

பழைய குழந்தை எழுத்தாளர் சங்கம் செய்த பணிகள் நம்முன் இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. மிகுந்த ஜனநாயகப் பண்புடன் அமைப்பு நடத்தப்பட வேண்டும் என்ற பாடமும் நம்முன் இருக்கிறது. சமூக அக்கறை, குறிக்கோளுடன் கூடிய செயல்பாடு, கூட்டு இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட புதிய குழந்தை எழுத்தாளர் சங்கமே தமிழ்க் குழந்தை இலக்கியத்தை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.