சிதம்பரத்தில் அறிஞர் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் “சாதி மறுப்பு - தீண்டாமை ஒழிப்பு” மாநாட்டை நடத்தியது. இதனையொட்டிச் சிறப்பு மலர் ஒன்றையும் வெளிக்கொணர்ந்தது. இந்திய நாட்டின் யதார்த்தமாக இருக்கும் சாதி அமைப்பு பற்றிய விவாதங்களை இடதுசாரிகள் முன் எப்போதையும் விட தீவிரமாக கவனப்படுத்துவது இப்போது நடக்கிறது.

caste_untouchables_272ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கிடந்த மக்களை இயக்கமாக்கிப் போராடச் செய்து உரிமைகள் பெற வைத்தது செங்கொடி இயக்கம். இப்போராட்டம் வர்க்கப் போராட்டமாக மட்டுமின்றி வர்ண ஒடுக்குதலுக்கு எதிராகவும் செயல்பட்டது என்பதை - சாதியும் வர்க்கமும் ஒன்றோடு ஒன்று ஊடுபாவி நிற்கிறது என்பதை கீழத் தஞ்சை அனுபவங்கள் உணர்த்தும்.

காலம் காலமாக அறிவுலகத்திலிருந்து தூர நிறுத்தப்பட்டவர்கள், வேதங்களை ஓதினால் நாக்கு துண்டாடப்பட்டவர்கள், காதால் கேட்டால் இரும்பைக் காய்ச்சிக் காதிலே ஊத்தப்பட்டவர்கள், பாரம்பரிய அறிவுசார் மரபைவிட்டுத் துரத்தப்பட்டவர்கள் ஆகிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அறிவுசார் - கருத்தியல் களங்கள் உண்டு என்பதையும் களப்போராட்டத்தோடு கருத்துப் போராட்டமும் பண்பாட்டுப் போராட்டமும் இணைந்து முன் எடுக்கப்படும் என்பதையும் இம்மாநாடும் இம்மலரும் உரத்துச் சொல்கின்றன.

சாதி பற்றிய அடிப்படைகளைச் சொல்லும் கட்டுரைகள் (அம்பேத்கர், டி.ராஜா, தா.பாண்டியன்) சாதியும் வர்க்கமும், சாதியொழிப்பு - தீண்டாமை யொழிப்பு பற்றிய கருத்தாக்கங்களை முன்வைக்கும் கட்டுரைகள் (ஆர்.நல்லகண்ணு, கோ.பழனிச்சாமி, சி.மகேந்திரன், தேவ.பேரின்பன்), தலித் மக்களின் வளர்ச்சி நிலை நோக்கிய கருத்தாக்கங்களை முன் வைக்கும் கட்டுரைகள் (இரா.கிறித்துதாசு காந்தி, வே.வசந்தி தேவி) பழங்குடி மக்கள் வாழ்வும் போராட்டமும் சார்ந்த கட்டுரைகள் (மு.வீரபாண்டியன், ஆ.சிவசுப்பிரமணியன், பக்தவச்சல பாரதி, மகாஸ்வேததேவி) சாதீய ஒழிப்பு குறித்த சித்தாந்த விவாதங்களை முன் வைக்கும் கட்டுரைகள் (எஸ்.வி.ராஜதுரை, ந.முத்துமோகன்), இன்றைய உலகமயச் சூழலில் உருவாகியுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சமூகச் சுரண்டலை ஆழப்படுத்தும் பொருளியல் சுரண்டல் குறித்த கட்டுரைகள் (மேதாபட்கர், அருந்ததிராய், ரமேஷ்) வரலாற்றுப் பின்புலத்தில் சாதிய, சமய நுண் அரசியலை, போராட்ட நகர்வுகளை முன்னிறுத்தும் கட்டுரைகள் (தொ.பரமசிவன், மே.து. ராசுக்குமார்) நடைமுறையில் அனுபவங்கள் வாயிலாக எழும் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகள் (சேவியர், அ.இராமமூர்த்தி, நா.பெரியசாமி, நீலம் அருள் செல்வி) என சாதி, வர்க்கம், தீண்டாமை, சாதி சமத்துவம், போராட்டங்கள் குறித்த பதிவுகளாக இம்மலர் அமைந் துள்ளது. இம்மலருக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைகள் பல. இம்மலருக்காக முன்பு எழுதப்பட்டவற்றில் தொகுக்கப்பட்டவை சில. மொத்தத்தில் சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு குறித்த எழுத்தாவணமாக இம்மலர் விளங்குகிறது.

“இந்தியாவில் ஜாதிகள் உள்ளன. தேசிய இனச் சிந்தனைக்கு எதிரானவை ஜாதிகள். முதலில் சமூக வாழ்வில் அவை பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஜாதிக்கும் ஜாதிக்கும் இடையே வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசிய இனக் கொள்கைக்கு விரோதமாக இருக்கின்றன. உண்மையிலேயே நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமென்றால் இந்தத் தடைக் கற்களையெல்லாம் கடந்து வ வேண்டும்” என்ற முதல் கட்டுரையில் அம்பேத்கரின் கருத்து தொடங்கி, சாதி மறுப்பு, தீண்டாமையொழிப்பு குறித்து ஏராளமான கருத்துகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. சாதி யொழிப்பின் முதற்படி தீண்டாமையொழிப்பு. அடுத்து சாதி சமத்துவம், சமூக சமத்துவம், ஜனநாயகப் பரிமாற்றம், மனித உறவுகளில் மேம்பாடு, இறுதி இலட்சியம் சாதியற்ற சமூகம், பொருளியல் நிலையிலும், பண்பாட்டு நிலை யிலும், மாற்றுக் கருத்தியலை வளர்த்தெடுக்க தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இம்முயற்சிகள் பலனளிக்கும். இம்மலரை உருவாக்க உழைத்திட்ட தோழர்கள் வெ.வீரசேனன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.

சாதி மறுப்பு - தீண்டாமை ஒழிப்பு

மாநாட்டுச் சிறப்பு மலர்,

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க வெளியீடு,

விலை : ரூ.50.00