mayavaram sila ninaivugal“நான் டாக்டர் சொல்றேன். சாப்பிடு. ஒன்றும் ஆகாது. போகும்போது வைத்தீஸ்வரன் கோயில் அங்காரகனுக்கு ஒரு கும்பிடு போட்டுப் போ. அவன்தான் வைத்தியன். நான் வெறும் டாக்டர்”

இனம், மொழி, நிலம் ஆகிய தெளிவான அடையாளங்களுடன் எழுதப்படும் வரலாற்றை ஒரு பெரிய தொகைநூலாக எடுத்துக் கொண்டால், அந்த நூலில் மேற்சொன்ன அடையாளங்களை அழுத்தம் திருத்தமாக நிறுவும் அம்சங்களுக்கே முதன்மையான இடம் வழங்கப்பட்டிருக்கும்.

அதற்கான மனிதர்களையே அந்தத் தொகைநூல் மாமனிதர்களாக முன்வைக்கும் வாய்ப்பே அதிகம். அதுவே இயற்கை. ஆனால் அந்த அடையாளங்களைக் கடந்து ஒரு குறிக்கோளுக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்கள் எல்லா வட்டாரங்களிலும் வாழ்ந்திருப்பார்கள்.

ஒற்றை நோக்கத்துடன் உருவாக்கப்படும் பெருந்தொகைநூல்களில் பற்பல சமயங்களில் அத்தகு மாமனிதர்களைப் பற்றிய பதிவுகளுக்கு இடமின்றிப் போகலாம்.

அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பாதுகாக்கவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரிவிக்கவும் தனித்த வட்டார வரலாற்றை முன்வைக்கும் தொகைநூல்களை உருவாக்க வேண்டியிருக்கிறது.

இவ்விரண்டு தொகைநூல்களிலும் சேராமல் விடுபட்ட கிராம வரலாறுகள் வேறொரு தொகை நூல்களாக உருவாக்கப்படவேண்டும். இவ்விதமாக மூன்று தளங்களிலான வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி அறிந்துகொள்வதே ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளும் சிறந்த வழி.

இப்படி சொல்லிப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு மாபெரும் தொழில்நிறுவனத்தை உருவாக்க ஒரு தொழில்முனைவோர் அல்லும்பகலும் பாடுபடுகிறார் என வைத்துக்கொள்வோம்.

எண்ணற்ற சிரமங்களையும் தியாகங்களையும் தொடர்ந்து அவர் தன் கனவை நிகழ்த்திக் காட்டினால் நாடே அவரைத் திரும்பிப் பார்க்கும். அனைவருடைய பாராட்டுகளும் புகழ்மொழிகளும் அவர்மீது வந்து குவியும். அந்த மாநகரத்தைப்பற்றிய ஒரு பெருவரலாறு எழுதப்படும்போது அத்தகையோருக்கு அதில் நிச்சயமாக இடமிருக்கும்.

அதே நேரத்தில் ஒரு சின்னஞ்சிறு நகரத்தில் சாதாரண ஒரு கீற்றுக்கொட்டகைக்குள் ஒரு சின்ன உணவு விடுதியை ஒருவர் தொடங்கி நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம்.

சுவையையும் தரத்தையும் தக்கவைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர் மெல்ல மெல்ல வளர்ந்து உயர்வடைகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அடுத்த நகரத்தவர்கள் கூட அறியாமல் போகலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட நகரத்தைப் பற்றிய வரலாற்றில் அவருக்கும் அவருடைய கனவுக்கும் உழைப்புக்கும் நிச்சயமாக இடமிருக்கும்.

ஒரு கிராமத்தில் ஒரு கூடையில் பலகாரங்களைச் சுமந்துவந்து ஏரிக்கரையிலோ ஆலமரத்தின் நிழலிலோ அமர்ந்து தேடி வரும் கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைக் கொடுத்து பசியாற்றும் மூதாட்டியைப் பற்றி, அருகிலேயே இருக்கும் நகரமோ மாநகரமோ அறியாமல் போகலாம்.

ஆனால் அந்த மூதாட்டியின் சித்திரத்துக்கு அந்தக் கிராமத்தைப் பற்றிய வரலாற்றில் எப்போதும் இடமிருக்கும். இங்கு மூன்று விதமான வரலாறுகளுக்கும் தேவை இருக்கிறது.

சந்தியா நடராஜனின் மாயவரம் - சில நினைவுகளும் சில நிகழ்வுகளும் செறிவான ஒரு வட்டார வரலாற்று நூலாக வெளி வந்திருக்கிறது. அவர் பிறந்து வளர்ந்து நண்பர்களுடன் வலம்வந்த ஊர் மாயவரம். பிரிக்கப்படாத அந்தக் காலத்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சின்ன நகரமே மாயூரம் என்கிற மாயவரம்.

நிர்வாக வசதிக்காக கடந்த ஆண்டில் மயிலாடுதுறை என தனி மாவட்டமாக உருமாறிவிட்டது. மாயவரம் பல மகத்தான மனிதர்களை இந்த மண்ணுக்கு அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலும் பங்காற்றிய அரிய மனிதர்கள் மாயவரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களைப்பற்றி தன் மனத்தில் தேங்கியிருந்த நினைவுகளையும் நண்பர்கள் வழியாகத் திரட்டியெடுத்த  நினைவுகளையும் அழகாகத் தொகுத்திருக்கிறார் நடராஜன்.

ஒவ்வொரு நினைவிலும் ஒவ்வொரு காட்சி அடங்கியிருக்கிறது. எல்லாமே வாழ்க்கையின் சிறுசிறு துண்டுகள். ஒரு கோட்டோவியம் போல மிகச்சில வரிகளின் ஊடாகவே அந்த மனிதர்களின் சாயலை உணர்த்திவிடுகிறார் நடராஜன்.

வெவ்வேறு காலகட்டத்தில் காவிரியின் போக்கில் நிகழும் வெவ்வேறு மாற்றங்களின் கோலங்களை தொகுதியின் முதல் கட்டுரையில் வழங்குகிறார் நடராஜன்.

 சில சமயங்களில் மணல்வெளியாகவும் சில சமயங்களில் புதுவெள்ளம் கரைபுரண்டோடும் வெளியாகவும் காணப்படும் காவிரியின் கரையில் அமைந்த அழகான சிறிய நகரம் மாயவரம். அங்கு பலவிதமான மனிதர்கள் தத்தம்  கனவுகளோடும் தேடலோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

 அவர்களைப் பற்றிய சித்திரங்களைத் தீட்டி நம் முன் காட்சிப்படுத்தியிருக்கிறார் நடராஜன். இத்தொகுதியைப் படித்து முடித்தபோது, பண்பாட்டு நிகழ்வுகளை அடையாளப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் ஓவியக்கண்காட்சியைப் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தைப் பெறமுடிகிறது.

மாயவரம் மணிக்கூண்டுக்கு அருகில் பட்டமங்கலத்தெருவில் இருக்கும் காளியாகுடி ஓட்டலைப் பற்றிய விவரணைகளின் ஊடே ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் ராமமூர்த்தி என்னும் டாக்டரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.

இடுப்பில் ஒரு நாலுமுழ வேட்டி. மேலே உடலை மறைக்க கைவைத்த பனியன். நெற்றியில் திருநீறு. வீட்டையே  மருத்துவமனையாக மாற்றிக்கொண்டவர் அவர். அல்லது மருத்துவமனையையே வீடாக நினைத்து வாழ்ந்து வருபவர்.

 காலையில் நோயாளியைப் பார்க்க உட்கார்ந்தால் இரவு வரைக்கும் நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார் அவர்.

 ஒரு நோயாளியிடம் இரண்டு ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணமாக வாங்கிக்கொள்கிறார் அவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவச்சேவை ஆற்றிவரும் மருத்துவரைப் பார்த்து உரையாடச் சென்ற நடராஜனை மருத்துவர் காளியாகுடி ஓட்டலிலிருந்து அல்வா வரவழைத்துக் கொடுத்து உண்ணச் சொல்கிறார்.

தன் நீரிழிவு நோயை உத்தேசித்து அந்த இனிப்பை அவர் மறுக்கும்போது “நான் டாக்டர் சொல்றேன். சாப்பிடு. ஒன்றும் ஆகாது. போகும்போது வைத்தீஸ்வரன் கோயில் அங்காரகனுக்கு ஒரு கும்பிடு போட்டுப் போ. அவன்தான் வைத்தியன். நான் வெறும் டாக்டர்” என்று பாசத்துடன் சொல்கிறார். ஒரு வரலாற்றுப் பாத்திரம் ஒரு புனைகதைப் பாத்திரத்தைப் போல பேசும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ராமமூர்த்தியைப் போலவே சேவையுணர்வு கொண்ட மற்றொருவர் ஆங்கிலோ இந்தியரான பெண்மருத்துவர் ரோட்ரிக்ஸ். நடராஜனை அவர் தாய் ஈன்றெடுத்த போது, பிரசவம் பார்க்க வந்தவர் அவர். அன்று ஆருத்ரா தரிசன நாள்.

பிரசவத்தை முடித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்த மருத்துவர் ரோட்ரிக்ஸ் தெருவில் முழு அலங்காரக் கோலத்துடன் செல்லும் நடராஜரைப் பார்க்க நேர்ந்தது. உடனே ஏதோ ஓர் உள்ளுணர்வு தூண்ட அறைக்குத் திரும்பி “நடராஜன் வந்துவிட்டார். குழந்தைக்கு அவர் பெயரையே சூட்டுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கர்த்தரைத் தவிர வேறொரு கடவுளின் திருவுருவைக் கூட காண விரும்பாத ஒரு சமூகத்திலிருந்து வந்தபோதும் தனது கைகளில் ஏந்திய ஒரு குழந்தைக்கு ஓர் இந்துக் கடவுளின் பெயரைச் சூட்டும்படி சொன்ன விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

எழுபதுகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில் மாயவரத்தில் தி.மு.க. கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டங்களைப் பற்றியும், அக்கூட்டங்களில் கருணாநிதி உரையாற்றும்போதே வளைகுடா நாட்டிலிருந்து ஒலிநாடாப் பெட்டிகளைக் கொண்டுவந்த இஸ்லாமிய நண்பர்கள் அவற்றில் அவருடைய உரையைப் பதிவு செய்துவைத்துக் கொள்வதைப் பற்றியும் அவர் புறப்பட்டுச் சென்றபிறகு ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் அந்த உரையை ஒலிக்கவைத்து அனைவரையும் கேட்கத் தூண்டிய அனுபவத்தைப் பற்றியும் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் நடராஜன்.

அந்த அனுபவக் குறிப்பில் அவர் சூரி ஐயர் என்பவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கருணாநிதி உரையாற்றிய கூட்டத்தை அவர்தான் தலைமையேற்று நடத்தியவர். அசலான தி.மு.க. தொண்டர். 

கையில் முரசொலி இல்லாமல் அவரைப் பார்ப்பது அரிது. அவரைப்போலவே எம்.ஜி.ஆர். கட்சியின் மீதும் பொதுவுடைமைக் கட்சியின் மீதும் பற்றுக்கொண்ட தொண்டர்களைப் பற்றிய குறிப்புகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. மாயவரம் மக்களின் அரசியல் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்புணர்வையும் அவை உணர்த்துகின்றன.

கட்சித்தலைவர்கள் மீது மக்கள் காட்டிய ஈடுபாட்டைத் தொடர்ந்து, கட்சிக்கூட்டங்களுக்காக கட்அவுட் எழுதிய ஓவியக்கலைஞர் பி.டி.ராஜன் என்பவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறார் நடராஜன்.

நாற்பது அடி உயர கட்அவுட்களை உயிர்ச்சித்திரமாக உருவாக்கும் ஆற்றல் நிறைந்தவர் அவர். ஒருமுறை அவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் அவர் பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து உண்பதுபோன்ற தோற்றத்தைக் கொண்ட கட்அவுட் ஒன்றை உருவாக்கினார்.

ஓவியத்தில் இலைமீது பரிமாறப்பட்ட உணவை உண்மையான உணவென நினைத்து காக்கைகள் பறந்துவந்து கொத்தியுண்ண முயற்சி செய்கின்றன. அந்த அளவுக்கு உயிரோட்டமாக தீட்டிக் காட்டிய ஓவியர் அவர்.

அவருடைய மறுபக்கமாக ராஜன் மாபெரும் காதலரென்றும் மூன்று பெண்களை மணந்துகொண்டவர் என்றும் ஒரு செய்தியையும் தருகிறார் நடராஜன். இன்று வாழும் அவருடைய வாரிசுகளைச் சந்தித்து சேகரித்த தகவல்கள் ராஜனைப் பற்றிய சித்திரத்துக்கு மெருகூட்டுகின்றன.

நடராஜன் சித்தரிப்பில் நாம் அறிய நேரும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு பெரிய நாவலில் இடம்பெறும் பாத்திரங்களைப்போலவே காட்சியளிக்கிறார்கள். அந்தப் பட்டியலில் மிகமுக்கியமானவர்கள் ராஜாபாதர், வரதாச்சாரி, ஜி.டி.கே.

ராஜாபாதர் வாழ்ந்துகெட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர். செல்வாக்கான குடும்பமென்றாலும் தந்தையால் ஏற்பட்ட இழப்பு தந்தை தேடிவைத்த சொத்துகளை விழுங்கிவிட்டது. வாழ வழி தேடி, உறவினர் ஒருவரின் உதவியைப் பெற்று மலேசியாவுக்குச் சென்றார் இளைஞரான ராஜாபாதர். 

அப்போது மலேசியாவில் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் வேர் பிடித்த காலம். ராஜாபாதர் உணர்ச்சிவேகத்தில் அந்தப் படையில் இணைந்துகொண்டார். அங்கு அறிமுகமான கணபதி என்னும் தொழிற்சங்கவாதியின் தொடர்பால் பொதுவுடைமைச் சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டார்.

தொழிற்சங்கப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அதனால் மலேசிய அரசு 1948இல் அவரைக் கைதுசெய்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவைத்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.

பொதுவுடைமைக்காரர்கள் தலைமறைவாக வாழ்ந்த காலம். தலைமறைவாக வாழ்ந்தபடி இயக்கம் வளரப் பாடுபட்டார் ராஜாபாதர்.

ஒருமுறை ரயில்மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ரயில்வே ஊழியர்களின் மாதச்சம்பளம் தீவிர கம்யூனிஸ்டுகளால் கொள்ளையடிக்கப் பட்டது. அந்த வழக்கின் குற்றவாளிப்பட்டியலில் ராஜாபாதரின் பெயர் எப்படியோ சேர்ந்துவிட்டது. அதனால் மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனையை அனுபவித்தார் அவர். விடுதலைக்குப் பிறகு மணலி கந்தசாமியின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து இயக்கப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அவரே ராஜாபாதருக்குத் திருமணமும் செய்துவைத்தார். மிகக் குறுகிய காலமே அவர்களுடைய திருமண வாழ்க்கை நீடித்தது. அவர் துணைவியாரின் அகால மரணத்துக்குப் பிறகு இரு குழந்தைகளையும் அவரே வளர்த்து ஆளாக்கினார். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அவர் மூன்றுமுறை நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகப் பணியாற்றினார்.

கடந்த நூற்றாண்டில் காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இல்லாத நகரமே இந்தியாவில் இல்லை. மாயவரத்தில் அக்கொள்கைகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களில் ஒருவர் வரதாச்சாரியார். மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

காந்தியடிகளின் அழைப்பை ஏற்று அரசு வேலையைத் துறந்து மாயவரத்தில் பெரிய கண்ணாரத்தெருவில் தனிமருத்துவராக பணிபுரிந்து வந்தார். காந்தியடிகள் மாயவரத்துக்கு வருகை தந்தபோது வரதாச்சாரியாரே வரவேற்புரை நிகழ்த்தினார்.

காந்திய வழியில் வாழ்ந்து மக்களுக்குச் சேவையாற்றினார். காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு பூமிதான இயக்கத்துக்காக வினோபா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் கூடுவாஞ்சேரிக்கு அருகில் பெருமாட்டுநல்லூர் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலங்களை தானமாக வழங்கிவிட்டார்.

மாயவரத்தின் மாமனிதர்களில் ஒருவர் தொழிற்சங்கத்தலைவராக தொண்டாற்றி மக்களின் மனத்தில் இடம்பெற்ற ஜி.டி.கே. என்கிற ஜி.துரைக்கண்ணு. சைக்கிள் ரிக்.ஷா தொழிலாளர்கள் சங்கம், சலவைத் தொழிலாளர்கள் சங்கம் என பல்வேறு அமைப்புகளை உருவாக்கி தொழிலாளர்களை ஒருங்கிணைத்தவர் அவர்.

தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர். அவர் பங்கேற்ற பேச்சுவார்த்தை எதுவும் தோல்வியில் முடிந்ததே இல்லை. இயல்பாகவே அவருக்கிருந்த தலைமைக்குணம் அவருக்கு எப்போதும் வெற்றியையே ஈட்டித் தந்தது. தமிழ் மீதும் ஆங்கிலத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுகொண்டிருந்தார். திருக்குறளை தன் வழிகாட்டி நூலாகவே அவர் கருதினார்.

அவருடைய கைப்பையில் மு.வரதராசனார் எழுதிய உரையுடன் கூடிய கையடக்கப்பதிப்பான திருக்குறள் புத்தகம் எப்போதும் இருக்கும். அத்துடன் தன் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் ஒரு கத்தியும் இருக்கும்.

தற்செயல்களின் விளைவாகவே அவர் பொதுவாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கி, பிறகு அதிலேயே தொடர்ந்து இயங்கும்படி நேர்ந்தது. அவர் பத்துவயது சிறுவனாக இருந்த காலத்தில் ஏதோ ஒரு கோவில் திருவிழாவை முன்னிட்டு அவரே தயாரித்த ஒரு வெடி, அவர் எதிர்பார்க்காத நேரத்தில் வெடித்ததால் கை கருகிவிட்டது.

மருந்திட்டும் குணமாகாத கையில் புரையோடிவிட்டதால் வெட்டி எடுக்கவேண்டியதாயிற்று. அவரை பம்பாய்க்கு அழைத்துச் சென்று படிக்கவைத்த அவருடைய தாய்மாமன் கொலாபாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத் தலைமையகத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

இளமை வேகத்தில் ஒரு வெள்ளைக்கார ராணுவ அதிகாரியின் மகளைக் காதலித்தார் அவர். அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் வேலையை இழந்து அவர் மாயவரத்துக்கே திரும்பவேண்டியதாயிற்று.

எதிர்பாராத விதமாக அந்த வெள்ளைக்காரப் பம்பாய்ப்பெண் தன்னிடமிருந்த முகவரியை வைத்துக்கொண்டு ரயிலேறி  மாயவரத்துக்கு வந்து சேர, வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அவரை ரயிலில் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவைத்துவிடுகிறார்கள்.

மருந்தாளுநருக்கான பயிற்சியை முடித்துவிட்டு ஒரு மருந்துக்கடையை நடத்தத் தொடங்கினார் துரைக்கண்ணு. இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பூம்புகார் தமிழ்ச்சங்கம் என்றொரு அமைப்பை நண்பர்கள் உதவியுடன் நடத்தினார்.

நிலையான வருமானத்துக்கு வழி ஏற்பட்ட பிறகு ஒரு புத்தகக்கடையையும் மாயவரத்தில் தொடங்கினார். பொதுவாழ்வில் அவர் மதிக்கத்தக்க ஆளுமையாக மலர்ந்த பிறகே மக்கள் அவரை ஜிடிகே என்று அழைக்கத் தொடங்கினர்.

மாயவரத்தில் வாழ்ந்த பல ஆளுமைகளைப்பற்றிய நினைவுகளை இத்தொகுதியில் பதிவு செய்திருக்கிறார் நடராஜன். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட நாராயணசாமி நாயுடு, பொதுவுடைமைத் தோழர் காத்தமுத்து போன்றோரின் சித்திரங்கள் அபூர்வமானவை.

ஒரு நகர வரலாற்றில் கட்டாயம் இடம்பெற வேண்டியவர்களைப் பற்றிய தகவல்கள் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு நகரத்தின் கதை. எண்ணற்ற மனிதர்களின் சித்திரங்களை இக்கதை வழியாக முன்வைக்கிறார் நடராஜன்.

ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. தனித்ததொரு  முகம் இருக்கிறது. மாயவரம் என்னும் நகரத்துக்கு அவர்கள் ஆற்றியிருக்கும் சேவைகள் மகத்தானவை. என்றென்றும் நன்றியுடன் நினைக்கத்தக்கவை.

மாயவரத்தில் சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் திராவிட இயக்கமும் வேரூன்றி இணைந்தே வளர்ந்திருக்கின்றன. இன்றளவும் உறுதியாக நிலைத்திருக்கின்றன.

இம்மூன்று இயக்கங்களின் சாயல்களையும் உள்வாங்கிக்கொண்ட மாயவரம் அவற்றையே தன் மூன்றுமுகங்களாக கட்டமைத்துக் கொண்டது. ஏதோ ஒரு விதத்தில் நகரத்தை வளர்த்தெடுக்கும் ஆக்கசக்திகளாகவே இம்மூன்றும் அமைந்துவிட்டன. 

அந்த ஆக்கசக்திகளுக்கு ஊற்றுக்கண்களாக விளங்கிய ஆளுமைகளின் தன்னலம் கருதாத மனமும், பிறந்த நகரத்தின் வளர்ச்சியின் மீது கொண்டிருந்த ஈடுபாடும் பாராட்டுக்குரியவை.

வேறுவேறு இயக்கத்தவர்கள் என்றபோதும் நகரத்தையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி உழைத்த இலட்சியவாதத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். இந்த மூன்றுமுகங்களும் இணைந்ததே மாயவரத்தின் பண்பாட்டு முகம்.

இந்த நூலில் மாயவரம் எப்படி வளர்ந்து மலர்ந்திருக்கிறது என்ற ஒரு வரலாற்றுத் தடத்தை போன நூற்றாண்டுக்கும் இந்த நூற்றாண்டுக்கும் இடையில் ஒரு கோட்டை இழுத்து தீட்டிக் காட்டியுள்ளார் நடராஜன்.

(மாயவரம் - சில நினைவுகளும் சில நிகழ்வுகளும். சந்தியா நடராஜன். சந்தியா பதிப்பகம். 53வது தெரு, ஒன்பதாவது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை 220)

- பாவண்ணன்