poornachandran 450இயற்கையும் சங்கப் பாடலும்

தமிழில் ஒப்பிலக்கிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களுள் அருள்தந்தை தனிநாயக அடிகளார் முக்கியமானவர். அவர் பல மேலை நாட்டு இலக்கியங்களையும் வடமொழி இலக்கியங்களையும் சங்கப் பாடல்களோடு ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியத்தின் தனித் தன்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்’ (நியூ செஞ்சுரி வெளியீடு, 2014) என்ற தம் நூலில் ஒப்புநோக்கில் இயற்கைக் கவிதை என்ற இயலில் சமஸ்கிருத கவிதையுடனும், கிரேக்க இலத்தீன் கவிதைகளுடனும் ஆங்கிலக் கவிதைகளுடனும் தமிழ்க் கவிதைகளை ஒப்பிடுகிறார். பல மொழிக் கவிதைகளையும் ஒப்பிடும்போது அந்தக் கவிதை, பிறந்த நாட்டின் புவியியல் அமைப்பினை அடிப்படை நோக்காகக் கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார். சங்கக் கவிதையில் இயற்கை பற்றிய கருத்தாக்கமும் விளக்கமும் சமஸ்கிருத இயற்கைக் கவிதையிலிருந்து பெருமளவு வேறுபடுகின்றன என்று அவர் நம்புகிறார்.

சங்கக் கவிதையில் இயற்கை, மனித இயற்கை இவை இரண்டின் ஒருங்கிசைவு முற்றிலும் சாத்தியமாகியுள்ளது. தமிழ்க் கவிஞர்கள் மனிதனைப் பற்றித்தான் சிறப்பாக ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்கள் இயற்கை வாதிகளாகவும் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு இருந்தது. மனிதனைப் பற்றிய வகையில் இயற்கை முக்கியமானது. மானிடர்கள் வந்துபோகும் நாடக மேடைதான் இயற்கை. வாழ்க்கை நாடகத்தின் பின்னணியாகவும் சூழலாகவும் இயற்கை அமைந்தது. ஆனால் இயற்கை வெறும் பின்னணி அல்ல. பரிவுணர்ச்சியோடு சேர்ந்த பின்னணி அது. கவிதையில் முக்கிய கூறு மனித உணர்ச்சிகள், நடத்தை, ஒழுக்கம் இவைதான் முக்கியம். ஆனால் இயற்கை இந்த உரிப்பொருள்களை ஒன்றிசைவிலோ முரண்நிலையிலோ பெரிதுபடுத்திக் காட்டியது (தனிநாயக அடிகள், 2014, பக். 41-42).

விலங்குத் தொகுதிகள், பறவை, தாவரத் தொகுதிகள், மலர்கள், ஆறுகள், மலைகள் இவையாவும் இயற்கையின் பாற்பட்டவை. வான், முகில்கூட்டங்கள், நிலவு, சூரியன், விண்மீன்கள் இவையும் இயற்கையின் கூறாக விளங்குகின்றன. அந்தந்த நில அமைப்பிற்கேற்ப அவை கவிதையில் பின்னணியாக விளங்குகின்றன.

அபபிரம்சா பாடல்கள்

இனி, மேகம் குறித்து வரும் தமிழ்-அபபிரம்சா அகப் பாடல்கள் சிலவற்றைக் காணலாம். முதலில் அபபிரம்சா பாடல்கள்:

1) தலைவியைப் பிரிந்ததனால் நெஞ்சம் அறுபட்டது. வான்மீதில் மேகம் இடித்து முழங்குகிறது. பயணம் செல்லும் வழிப்போக்கருக்கு மழைக்கால இரவு பேரிடராக அமைகிறது.1

2) மேகங்கள் மலைகளைச் சுற்றிப் பொருந்தியுள்ளன (மலைகளை விழுங்குவதைப் போல அக்காட்சி விளங்குகிறது). இதனைக் கண்ணுற்ற வழிப்போக்கன் அழுதுகொண்டே விரைந்து செல்கிறான் (அவன் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறான்). பெரு மலையையே விழுங்க நினைக்கும் இம்மேகம் என் காதலியை விட்டுவைக்குமா என்ன?2

3) தலைவன் வேற்றுநாட்டில் பொருளீட்டச் சென்றுள்ளான். கார்காலம் வந்துவிட்டது. அவன் பின்வருமாறு கூறுகிறான்: தலைவிக்கு என் மீது அன்பிருக்குமானால் இந்நேரம் அவள் இறந்துவிட்டிருப்பாள். அவள் (மனையின்கண்) உயிரோடிருந்தால் (அதிலிருந்து) அவளுக்கு என் மீது அன்பில்லை என்பது திண்ணம். இரண்டு நிலையிலும் நானே என் துணையை இழந்தவனாகிறேன். அப்படி இருக்க, ஏ கொடிய மேகமே, ஏன் இன்னும் இடித்து முழங்குகிறாய்3

மேற்கண்ட மூன்று அபபிரம்சா பாடல்களும் தலைவன், வழிப்போக்கன் கூற்றாக வருகின்றன. மூன்று பாடல்களுமே பருவ வரவின் போது தலைவியைப் பிரிந்த துயரத்தை வெளிப்படுத்துகின்றன. தலைவி உயிருடன் இருப்பாளோ இறந்திருப்பாளோ என்ற எண்ணம் தலைவனுக்கு எழுகிறது. தலைவன் தலைவிக்கு மழைக்கால இரவு பேரிடராகும் என்பது வலியுறுத்தப்படுகிறது. மலையைச் சூழ்ந்துள்ள மேகம் இடித்துக் கொட்டுகிறது. இம்மேகம் என் காதலியை விட்டு வைக்குமா? என்றும், நீ ஏன் இடிக்கிறாய்? என்றும் மேகத்தைக் கேட்கிறான். இது கவிஞரின் கற்பனை. தலைவியின் நிலை குறித்தும், இடியைக் குறித்தும், மழைக்கால இரவு குறித்தும், மலையைக் குறித்தும் பெரிய விவரணை ஏதும் இல்லை. அபபிரம்சா பாடல்கள் எளிய உரிப்பொருளைக் கொண்டு விளங்குகின்றன. கருப்பொருள், முதற்பொருள் விவரங்கள் ஏதுமில்லை. சங்கப் பாடல்களில் மேகம் குறித்த விவரணை சற்று வித்தியாசமாக வருகின்றது.

சங்கப் பாடலில் மேக வருணனை

ஒரு குறுந்தொகைப் பாடல் (158) தலைவியின் கூற்றாக மேகத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்வருமாறு உள்ளது. “உயர்ந்த மலைப் பக்கத்தில் மேகம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள பாம்புகள் இறந்துபடும்படியாக அம்மேகங்கள் வேகமாக இடித்து முழங்குகின்றன. மேகம் நீராகிய கருப்பத்தை நிரம்ப கொண்டுள்ளது. அம்மேகத்தை நோக்கித் தலைவி கூறுகின்றாள்: ஏ, மேகமே! உனக்கு இரக்கமில்லையா? பெரிய இமய மலையையும் அசைக்கின்ற ஆற்றல் உடைய நீ! உன்னால் அலைக்கழிக்கப்படும் பெண்கள் துணைவரைப் பெற்றிலர். ஆதலால் கருணை காட்டத்தக்கவர். அவர்கள் துன்பப்படும்படி நீ பெய்து அலைத்தல் எதற்காக?” இப்பாடலில் உள்ள தொடர்கள் சுற்றிச் சுற்றிச் சங்கிலித் தொடர் போல மேகத்தையே மையப்படுத்தி வந்துள்ளன.

மாமழை

கமஞ்சூழ் மாமழை

காலொடு வந்த மாமழை

கழறுகுரல் அளைஇ மாமழை

கடுவிசை உருமின் மாமழை

பாம்புபட இடிக்கும் மாமழை

நெடுவரை மருங்கின் மாமழை

இமயமும் துளக்கும் மாமழை

பேரிசை இமயம்

துணை இலர் பெண்டிர்

அளியர் பெண்டிர்

திணை குறிஞ்சித் திணை என்று இப்பாடல் அடையாளப்படுத்தப் பட்டிருப்பினும் இயற்கைப் புனைவும் மேகத்தைக் குறித்த படிமமும் செறிவாக உள்ளன. துணையின்றி பிரிந்து தனித்துள்ளனர் பெண்டிர். அவர் இரங்கத்தக்கவர் என்ற உரிப்பொருள் சிறந்து விளங்கும்படி இயற்கைப் பின்னணி காட்சியாகக் கண்முன் விரிகிறது. மேகம் இடிக்கிறது, மேகமே நீ ஏன் இடிக்கிறாய் என்று முடியும் அபபிரம்சா பாடல்களையும் இங்கு ஒப்பிட்டால் தமிழ்க் கவிதைகளின் செறிவு புலப்படும். அதுமட்டுமன்று ‘துணையிலர் பெண்டிர் அளியர் பெண்டிர்’ என்று இயற்கையின்பால் மென்மையாக அதன் கருணைக்கு ஏங்கும் தலைவியாகவும் பாடல் நமக்குத் தோன்றுகிறது.

மற்றொரு குறுந்தொகைத் தலைவி மேகம் இரக்கம் இல்லாமல் தன் இன்னுயிரைக் குறி வைப்பதாகத் தோழியிடம் முறையிடுகிறாள். தலைவன் பொருள் ஈட்டுவதற்காக நாட்டைக் கடந்து சென்றுவிட்டான். அவனைப் பிரிந்த துயரத்தில் கைவளைகள் நெகிழப் பெற்று படுக்கையில் கிடக்கின்றாள் தலைவி. நான் இரங்கத்தக்கவள் என்றுகூடக் கருதாமல் இந்த மேகம் இன்னும் மின்னி இடிக்கிறது என் உயிரைக் குறிவைத்து, என்று முறையிடுகிறாள்.

அன்னள் அளியள் என்னாது மாமழை

இன்னும் பெய்யும் முழங்கி

மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே                                                                            (குறுந். 216)

இன்னொரு குறுந்தொகைத் தலைவி தன் இன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பொருள் ஈட்டுவதற்காகச் சென்ற தலைவனைப் பற்றிக் கவலை கொள்கிறாள். தாம் மேற்கொண்ட வினை முடிக்காமல் அவர் மீள்வாரோ என்றும் வருந்துகிறாள்.

‘மழைக்காலம் மிக்க குளிர்ச்சியை உடையது. அக்காலத்தில் பிச்சுப் பூக்கள் சிவந்து பூத்துள்ளன. அவை அறிவற்றவை. பூப்பதற்குரிய பருவம் வருவதற்கு முன்னரே பூத்துவிட்டன. அது எனக்குத் தெரியும். அதனால் நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் தனியராகவிருக்கும் தலைவன் மேகக் கூட்டங்கள் இடிக்கும் ஓசையைக் கேட்டால் நடு இரவில் எந்நிலை எய்துவாரோ?’ என்று கவலைப்படுகிறாள்.

அருவி மாமலை தத்தக்

கருவி மாமழை சிலைதரும் குரலே (குறுந். 94)

பிரிவுத்துயர் வருத்த தன்னைப் பற்றியும், தலைவனைப் பற்றியும் கவலை கொள்கிற மனிதர்களை இயற்கைப் பின்னணியில் கவிஞர் கவினுற படைத்துக் காட்டுகிறார்.

இடித்து இடித்துப் பெய்க

பிரிவாற்றாமை காரணமாக மேகத்தைக் கடிந்துகொண்ட தலைவன், தலைவியுடன் ஒன்றுசேர்ந்த பின்னர் மேகத்தை வாழியோ பெருவான் என்று உளமாற வாழ்த்துவதைக் காணமுடிகிறது. மேகத்தை நொந்து கொண்டது தற்காலிகமானதுதான். மேகத்தின் பயன் சங்க கால தலைவனுக்குத் தெரியாதா என்ன? புதிய வாழ்க்கையின் தூதுவனாக மழை வருகிறது. மழைக்கு முன் இடியோசை, மழை முகில்களின் காட்சி, மழையின் வீழ்ச்சி, மென்மையான தூறல், பெருமழை போன்றவற்றை தங்கள் வளத்துக்கென மழையையே முற்றிலும் சார்ந்திருக்கும் ஓரின மக்கள் எவ்வித உற்சாகத்தோடும் இன்பத்தோடும் வருணிப்பர் (தனிநாயக அடிகள், 2014, ப. 12). வினை மேற்சென்ற தலைவன் வெற்றிகரமாக வினைமுடித்து வீடு திரும்பிவிட்டான். தம் காதல் தலைவியோடு மகிழ்ச்சியாகப் பொருந்திக் கிடக்கிறான். முன்பு செல்லமாகக் கடிந்து கொண்ட மேகத்தை நோக்கி, ‘பெரிய மேகமே, இருள் நீங்கும்படியாக மின்னுவாயாக; குளிர்ச்சியுண்டாகும்படி நீர்த்துளிகளைப் பெய்வாயாக; முரசைப் போல முழங்குவாயாக; பலமுறை இடித்து இடித்து ஓசை எழுப்புவாயாக; மழை பெய்து வாழ்வாயாக என்று வாழ்த்துகிறான்.

தாழ்இருள் துமிய மின்னித் தண்ணென

வீழ்உறை இனிய சிதறி ஊழின்

கடிப்புஇகு முரசின் முழங்கி இடித்துஇடித்துப்

பெய்க இனி வாழியோ பெருவான்     (குறுந். 270)

இயற்கையின் தேவையை உணர்ந்து அதனைப் போற்றி அணைத்துக் கொள்கிற பாங்கினை இப்பாடலில் காணமுடிகிறது. இன்னலாய் விளங்கிய இடியோசை இன்பமாய் மாறுவதைக் காண்கிறோம்.

முடிவுரை

தனிநாயக அடிகள் கூறுவதுபோல இயற்கையும் மனித இயற்கையும் ஒருங்கிணைந்து ஒத்திசைத்துச் செல்வதைச் சங்கப் பாடல்களில் காணமுடிகின்றது. இடியோசையைக் கேட்டு படமெடுத்தாடும் பாம்பும் இறந்துவிடும், நடுங்கும் என்ற கருத்து தமிழ்ப் பாடல்களில் அடிக்கடி வருகின்றது (குறுந்தொகை, 158, 391, நற்றிணை 129). குன்றின்கண் விளையாடும் மேகம் என்றும், வேகமாகச் செல்லும் மேகம் என்றும், கருவி மாமழை என்றும், இருள் கெடும்படியாக மின்னும் மேகம் என்றும் பலவாறு மேகம் சிறப்பிக்கப்படுகின்றது. பருவ வரவின்போது பிரிவாற்றாமையினால் மேகத்தை கடிந்து கொள்ளும் தலைவன் தலைவி ஒன்றுசேர்ந்த பின்னர் இடித்து இடித்துப் பெய்க என்றும், வாழியோ பெருவான் என்றும் மேகத்தை வாழ்த்துகின்றனர். அபபிரம்சா பாடல்களில் இத்தகைய இயற்கைப் பின்னணி காணக் கிடைக்கவில்லை.

அடிக்குறிப்புகள்

1) The heart is rent by (lit. cut) (separation from) fair beloved, and the clouds thunder in the sky. For the travelers (undertaking journey) on a rainy night (or during the rain) this is a great calamity.

2) The clouds are shrouding the mountains (seeing this) the travelers hurries up (lit. moves) crying. He is frightened: When it (the cloud) is so intent on swallowing up such (vast) mountains will it ever spare his beloved.

3) A lover away from his beloved in the monsoon says: if my beloved has love for me she must have been dead (on the advent of rainy season). If she is alive (evidently it shows). She has no love for me. (Thus) In both ways, my beloved is lost to me, Why then, O! vile cloud, are you (still) thundering.

துணை நூல்கள்

1) தனிநாயக அடிகள், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட்., அம்பத்தூர், சென்னை-98 (2014).

2) Apabhramsa of Hemachandra (Edited by Kantilal Baldevram Vyas) Text Book Society, Ahmedabad (1982).

3) குறுந்தொகை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17 (1997).

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்

தனிநாயக அடிகள்

தமிழில்: பேரா.க.பூரணச்சந்திரன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை விலை: ரூ.150/-